Advertisement

இலக்கணம் – 17
நாட்கள் அதன் பாட்டில் நகரத் தொடங்கி இருந்தது. லலிதாவும் பாட்டியும் அவ்வப்போது இளமாறனின் நினைவில் கலங்குகையில் அவர்களை இலக்கியா தான் சமாதானப் படுத்துவாள். சத்யாவோ வீட்டில் இருப்பதே இல்லை…. எப்போதும் வேலை, அலுவலகம் என்று வெளியே தான் சுற்றிக் கொண்டிருப்பான். அன்றும் காலையில் நேரமாய் புறப்பட்டுக் கொண்டிருந்தவனின் பின்னில் வந்து நின்றாள் இலக்கியா.
“அத்தான்…… சாப்பிட எடுத்து வச்சிருக்கேன்….. வாங்க…..” என்றவளிடம், “இல்ல டார்லிங்….. எனக்கு ஒரு முக்கியமான கஸ்டமரை பார்க்கணும்…. ஒரு அக்ரிமெண்ட் ரெடி பண்ணனும்….. நான் வெளியே சாப்பிட்டுக்கறேன்…. நீ இந்த பேப்பர்ஸ்ல மட்டும் கையெழுத்துப் போட்டுடு……” என்று அவன் சில பேப்பர்களை எடுத்து நீட்ட, “அதெல்லாம் பண்ணறேன் அத்தான்…. நீங்க இப்படி வேலை வேலைன்னுன்னு அலைஞ்சுட்டு உங்க உடம்புக்கு ஏதாவது வந்துட்டா நாங்க என்ன பண்ணுவோம்……” கலங்கினாள்.
“சனியன் பிடிச்சவ…. நல்ல காரியத்துக்குக் கிளம்பும்போது அழுது வடிஞ்சிட்டு இருக்காளே….” என மனசுக்குள் நினைத்துக் கொண்டே, “என்ன பண்ணுறது டார்லிங்…….. மாமா இல்லாததால அவர் தொடங்கி வச்ச தொழில் எதுவும் நொடிஞ்சு போயிடக் கூடாதே…… இந்த வளர்ச்சி ஒவ்வொண்ணும் அவரோட உழைப்பு……. அதை வீணாக விட்டுடக் கூடாதுல்ல…… இதுல இன்னும் வளர்ச்சியைக் கொண்டுவரத் தான் நான் பாடுபடறேன்…..” என்றவனைப் பெருமையுடன் பார்த்தாள் இலக்கியா.
“என் அப்பாவுக்கு மகன் இல்லாத குறையைத் தீர்க்கத்தான் இவரை இந்த வீட்டுக்கு தெய்வம் கொண்டு வந்ததோ…. அவர் விட்டுச் சென்ற கடமைகளை எத்தனை பொறுப்பாய் காப்பாற்ற நினைக்கிறான்…..” மனதுக்குள் கணவனை மெச்சிக் கொண்டாள்.
“உங்களை நினைச்சா எனக்கு ரொம்பப் பெருமையா இருக்கு அத்தான்…… அப்பாவுக்கு வாரிசா ஆம்பளைப் பிள்ளை இல்லாத குறையை நீங்க தீர்த்து வச்சுட்டிங்க…. இதெல்லாம் பார்த்தா அப்பா எத்தனை சந்தோஷப் பட்டிருப்பார்……” வருத்தத்துடன் கூறியவளை சிரித்துக் கொண்டே பார்த்தாலும் மனதுக்குள், “என்னை விட்டுடு சத்யா….” சாகும் தருவாயில் கைகூப்பிக் கெஞ்சிய மாமனின் முகம் நினைவு வர சட்டென்று மாறிய முகத்தைத் திருப்பிக் கொண்டான்.
“அடிப்பாவி….. அந்தாளை மண்ணோட மண்ணாப் போக வச்சுதானே இதெல்லாத்துக்கும் நான் வாரிசானேன்….. அவர் இருந்தா சந்தோஷப் படுவாராம்….. இந்த கருங்கொரங்கு பாராட்டுப் பத்திரம் வேற வாசிக்குது….” என மனதுக்குள் நினைத்துக் கொண்டே,
“நான் என் கடமையைத் தானே செய்யறேன் டார்லிங்…. இந்த குடும்பமும் நீயும் என் பொறுப்பு இல்லியா……. உங்களை எந்தக் குறையும் இல்லாம நல்லபடியா பார்த்துக்கறது தான் என் லட்சியமே…..  அதுக்காக எவ்ளோ வேணும்னாலும் உழைக்க தயாரா இருக்கேன்….” என்று சிரித்தவனை நெகிழ்வுடன் பார்த்தாள் இலக்கியா.
“சரி….. உழைக்கறது எல்லாம் இருக்கட்டும்….. முதல்ல சாப்பிட்டுப் போங்க…..” என்று அவள் அதையே கூற, “சரி… நான் சாப்பிடறேன்…. நீ செக்லயும் இந்தப் பேப்பர்ல நான் மார்க் பண்ணி இருக்குற இடத்துலயும் சைன் பண்ணி வச்சிடு……” என்று ஹாலுக்கு சென்றவனுக்கு சாப்பிட எடுத்து வைத்தவள், அவன் முடிக்கும் வரை அங்கேயே நின்று கை கழுகப் போனதும் சைன் பண்ண சென்றாள்.
கல்யாணமாகி பத்து நாள் வரை இப்படியே செல்ல சத்யாவின் நடவடிக்கையில் மெல்ல மாற்றம் வரத் தொடங்கியது. வீட்டுக்கு வருவதை வெகுவாய் குறைத்துக் கொள்ளத் தொடங்கினான். எப்போது கேட்டாலும் குவாரியில் வேலை இருக்கிறது……. பிசினஸ் டீல் பேசுவதற்காக வெளியூர் செல்கிறேன்…… என பொய் சொல்லிக் கொண்டு அவனது இஷ்டத்துக்கு சுற்றி நடக்கத் தொடங்கினான்…. தன் லீலைகள் வீட்டுக்குத் தெரியாமல் பார்த்து கொண்டான்.
வினோதினியைப் பற்றி ரகசியமாய் விசாரிக்க லாரியில் அடிபட்டு மருத்துவமனையில் இருந்தவள், மனநிலை பாதிக்கப்பட்டு மனநல காப்பகத்தில் இருப்பதாகத் தெரிந்து கொண்டான். குழந்தையும் அநாதை ஆசிரமத்தில் இருப்பதாக விசாரித்தவர்கள் கூறவும் நிம்மதியடைந்தவன் அதற்குமேல் அதைப் பற்றித் தெரிந்து கொள்ள முயற்சிக்கவில்லை. அவன் இந்த விஷயத்தைப் பற்றி விசாரித்து யாருக்கும் சந்தேகம் வரக் கூடாதென்று கவனமாக இருந்தான்.
இலக்கியாவை தந்தையின் மறைவுக்கு ஆறுதல் படுத்துவது போல அவர் நினைவுகளைத் தூண்டிவிட்டு வேறு எதையும் யோசிக்க விடாமல் பார்த்துக் கொண்டான். அக்கவுண்டில் இருந்து அவ்வப்போது பணத்தை எடுத்ததில் அவனது அக்கவுண்ட் நிறையத் தொடங்கியது. சொத்தின் பவர் எழுதி வாங்குவதற்காய் இலக்கியா ஒரு வார்த்தை சொல்லும் சந்தர்ப்பத்திற்காய் காத்திருந்தான்.
வீட்டின் பழைய கலகலப்பு தொலைந்திருக்க பாட்டி எப்போதும் அறைக்குள்ளேயே அடைந்து கிடந்தார். அன்பான கணவனை இழந்த துக்கத்தை அத்தனை எளிதாய் எடுத்துக் கொள்ள லலிதாவாலும் முடியவில்லை. மகளை கவனிக்க மருமகன் இருந்ததால் கணவனின் நினைவுகளை அசைபோடுவதில் சமாதானம் கண்டு ஒதுங்கிக் கொண்டார் லலிதா.
சத்யா வேலை விஷயமாய் வெளியூர் போயிருக்க இரவு உணவு முடிந்து அவரவர் அறைகளில் அவரவருக்கான நினைவுகளில் இருந்தனர் பெண்கள் மூவரும்.
தந்தையின் மறைவுக்குப் பிறகு அன்னை மெலிந்து தளர்ந்து ஆளே மாறிப் போனதைப் பற்றி யோசித்துக் கொண்டே ஜன்னலுக்கருகில் நின்று வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள் இலக்கியா. நட்சத்திரங்கள் அவளை நோக்கி கண் சிமிட்டுவது போலத் தோன்ற தந்தையின் நினைவு வந்தது.
சின்ன வயதில் புதிது புதிதாய் தோன்றும் சந்தேகங்களை அவரிடம் தான் கேட்டுப் புரிந்து கொள்வாள்….. அப்படி ஒரு நாள் கேட்டது தான் இந்தக் கேள்வி.
“அப்பா……. இந்த வானம் ஒண்ணு……… நிலாவும் ஒண்ணு……….. சூரியனும் கூட ஒண்ணுதான் இருக்கு… ஆனா இந்த நட்சத்திரங்கள் மட்டும் ஏன் இத்தனை இருக்கு……..” என்று கேட்டாள்.
சில நேரம் குழந்தைகளுக்கு எப்படி பதில் சொல்லிப் புரிய வைப்பது என்று தெரியாமல் எதோ ஒரு விளக்கம் கூறி தப்பித்துக் கொள்பவர்கள் உண்டு…. அப்படிதான் அவரும் மனதில் தோன்றிய எதோ ஒரு காரணத்தை அவளுக்கு விளக்கமாய் கூறி இருந்தார்.
“இளா செல்லம்…. நம் வீடுதான் வானம்….. சூரியனே தந்தை….. நிலவு தான் அன்னை…. அழகாய் கண் சிமிட்டும் நட்சத்திரங்கள் தான் குழந்தைகள்……” வேடிக்கையாய் அவர் கூறி சிரித்தது நினைவுக்கு வந்து கண்களைக் கசிய வைத்தது.
“அப்படின்னா இத்தனை நட்சத்திரம் இருக்கேப்பா….. எனக்கு தம்பி தங்கச்சிங்க எல்லாம் எங்கே….” என்று பெரியதனமாய் கேட்ட சின்ன மனுஷியைக் கண்டு புன்னகைத்தவர், “உனக்கு எத்தனை தம்பி தங்கை வேணும்னாலும் எனக்கு ஓகே தான்…. பெத்துக் குடுக்க  உன் அம்மா தயாரான்னு கேட்டுப் பாருடா……” என்று மனைவியைக் காதலுடன் நோக்க அவர் சிணுங்கிக் கொண்டே, “என்னங்க நீங்க… கொஞ்சம் கூட விவஸ்தை இல்லாம குழந்தைகிட்ட இப்படிலாம் பேசிட்டு…..” என்று நாணத்துடன் அதட்டியது நினைவுக்கு வர, அன்னைக்கு அவரது பிரிவு எத்தனை வேதனையைக் கொடுக்கும் என வருத்தத்துடன் நினைத்துக் கொண்டாள். “அவர்களைப் போலவே அன்னியோன்யமாய் நானும் அத்தானும் இருக்க வேண்டும்….. அத்தானைப் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்…..” யோசித்தவளுக்கு வெட்கமாய் வந்தது.
“பாவம் என் அத்தான்…… நான் எப்போதும் அப்பாவையே நினைத்துக் கொண்டு இருப்பதால் என்னைத் தொந்தரவு செய்யாமல் ஒதுங்கி இருக்கிறார்…….. கல்யாணமாகி என்னைக் கட்டிக் கொண்டு கொஞ்ச நேரமில்லாமல் தொழிலையே கட்டிக் கொண்டு கிடக்கிறார்…… அவருக்காகவாவது இந்த துயரத்தில் இருந்து நான் தேறித்தான் ஆக வேண்டும்……” நினைத்துக் கொண்டவளுக்கு சட்டென்று நட்புக்களின் நினைவு வந்தது.
கல்யாணம் முடிந்து இரண்டுமுறை மட்டுமே வீணாவுடன் பேசியிருந்தாள். கல்யாணத்துக்குப் பிறகு விக்ரமுக்கு இரண்டு முறை அலைபேசியில் முயற்சித்தும் அவனைக் கிடைக்கவே இல்லை…. வினோத்தை அழைத்து விக்ரமைப் பற்றிக் கேட்க அவன் போலீஸ் வேலைக்கு முயற்சித்துக் கொண்டிருப்பதால் எங்கோ வெளியூர் சென்றிருப்பதாகக் கூறி இருந்தான். கல்யாணத்துக்கு வந்து விஷ் கூடப் பண்ணாமல் போனது ஏன் என்ற இவளது கேள்விக்கும் அவனிடம் ஏதோ மழுப்பலான பதிலே வந்தது. எதுவும் புரியாமல் குழப்பத்துடன் யோசித்துக் கொண்டே வீணாவின் எண்ணுக்கு டயல் செய்த இலக்கியா, “இந்த வீணாப் போனவளுக்கும் ஒரு போன் பண்ணக் கூட நேரமில்லையா…….” கடுப்புடன் நினைத்துக் கொண்டே அழைத்தாள்.
“ஹலோ…… என்னடி புதுப் பெண்ணே…… அதிசயமா என் நினைவு வந்திருக்கு…. சரி…. நாம கூப்பிட்டு டிஸ்டர்ப் பண வேண்டாம்னு நானே அமைதியா இருந்தா நீ  இந்த நேரத்துல உன் அத்தானைக் கொஞ்சிட்டு, அத்தானின் முத்தங்கள்…. அத்தனையும் முத்துக்கள்னு பாட்டுப் பாடிட்டு இருக்காம எனக்கு கால் பண்ணறே…..” ஆச்சர்யமாய் கேட்டாள் வீணா.
“ஹூம்….. ஓவரா பேசினா மூஞ்சிலயே குத்துவேன்….. எங்கடி தொலைஞ்சே….. நாலு நாளா போனே பண்ணலை…….  நான் கூப்பிட்ட போதும் ஸ்விட்ச் ஆப் வந்துச்சு……”
“அதை ஏன் கேக்கறே……. நீ உனக்கு சின்ன வயசுல இருந்து நல்லாப் பழக்கமான உன் அத்தானைக் கல்யாணம் கட்டிக்கிட்டு மாமியார், நாத்தனார் தொந்தரவு இல்லாம பிறந்த வீட்டுலயே அழகா செட்டில் ஆகிட்டே…. என் நிலமை அப்படியா……” இழுத்தாள் வீணா.
“ஏய்…. வீணாப் போனவளே…. இப்ப என்ன ஆச்சு…. எதுக்கு இந்தப் புலம்பல்….. அவ்ளோ பிஸி ஆகிட்டியா நீ…….”
“ப்ச்….. இல்லடி………….. எனக்கு வீட்டுல மாப்பிள்ள பார்க்கப் போறாங்களாம்….. அதுனால எல்லா சமையலும், வீட்டு வேலையும் தெரிஞ்சு வச்சுக்கனுமாம்….. இல்லன்னா பொண்ணை வளர்த்து வச்சிருக்க லட்சணத்தைப் பாருன்னு என் அம்மாவைத் திட்டுவாங்களாம்….. இப்படில்லாம் சொல்லி என்னை வேலை பழக பாட்டி வீட்டுக்கு அனுப்பிட்டாங்கடி….. என் பாட்டியைப் பத்தி தான் உனக்கு நல்லாத் தெரியுமே…. ஒரு வேலையை முடிச்சிட்டு நிக்க விடாது…. அதுக்குள்ளே அடுத்த வேலையை சொல்லிடும்…..”
“ஹூம்… நான் மொபைல் நோண்டுறதைப் பார்த்தா அவ்ளோதான்….. காளியாகிடும்….. நாலு நாளா வேலை செஞ்சு பெண்டு கழண்டு போயிருச்சுடி…… இன்னைக்கு தான் அம்மாவைப் பார்க்கணும் போல இருக்குன்னு கெஞ்சிக் கூத்தாடி நம்ம வீட்டுக்கு வந்தேன்…. ஹப்பா…. முடியலை சாமி….. என் பாட்டிக்கு மருமகளா வந்த என் அத்தையைக் கையெடுத்து கும்பிடணும்….. அவங்களுக்குப் பிறந்தவன் எனக்கு சின்னப் பையனா போயிட்டான்…. இல்லன்னா அவனையே கரக்ட் பண்ணி நானும் செட்டில் ஆகிருப்பேன்……” மூச்சு விடாமல் அவள் பேசி முடிக்கவும் வெகுநாட்களுக்குப் பிறகு கலகலவென்று சிரித்தாள் இலக்கியா.
“அடிப்பாவி…. வேலை பழகறதுக்கு தான் இத்தனை பில்டப்பா….. அதுக்குன்னு ஒரு போன் பண்ணக் கூடவா உனக்கு நேரம் கிடைக்கலை…… சரி…. நாளைக்கு நாம எங்காவது வெளியே போவோமா……” என்றாள் இலக்கியா.
“ஓ….. சூப்பரா போலாமே…. நீ காலைல பத்து மணிக்கு மாலுக்கு வந்திடு…… எனக்கு கொஞ்சம் ஷாப்பிங் பண்ண வேண்டி இருக்கு…. நானும் அங்கே வந்திடறேன்….. அப்படியே அங்கே ஒரு சுத்து சுத்திட்டு வரலாம்…..” என்றாள் வீணா சந்தோஷத்துடன்.
“ம்ம்….. சரிடி…. உன்கிட்டே கொஞ்சம் பேசணும்….. அதுக்கு தான் வெளியே போலாம்னு சொன்னேன்…..” என்றாள் இலக்கியா. “ம்ம்….. நாளைக்கு புல்லா வேணும்னாலும் பேசுவோமே…. லஞ்ச், ஐஸ்க்ரீம், அப்பப்ப கொஞ்சம் ஸ்நேக்ஸ் மட்டும் உன் செலவுல வாங்கிக் கொடுத்திடு…. பேசிட்டே இருக்க நான் ரெடி…..” என்றாள்.
“ஹூக்கும்….. உன்னை என்ன பேச்சுப் போட்டில பேச சொல்லியா கூப்பிட்டேன்…. மூஞ்சப் பாரு…. தின்னிப் பண்டாரம்…. வந்து தொலை…. வாங்கித் தரேன்…. சரி நாளைக்குப் பார்ப்போம்டி…” என்றவள் போனை வைக்கும்போது மனது கொஞ்சம் ரிலாக்சாக இருந்தது. வெகு நாட்களுக்குப் பிறகு தோழியுடன் சாதாரணமாய் பேசியதை உணர்ந்தாள்.
“இதே போல அத்தானுடனும் சாதாரணமாய் பேச வேண்டும்….. அவர் கூட இப்படிப் பேசி எவ்ளோ நாளாச்சு….. கல்யாணத்துக்கு முன்னாடி அவர் பின்னாடியே சுத்தி வருவேன்…. இப்ப அவர் என்னோட உரிமை ஆன பின்னால கண்டுக்காமலே இருந்துட்டேன்….. பாட்டியும், அம்மாவும் நாங்க சந்தோஷமா இருக்கணும்னு தானே ஆசைப்படுவாங்க….. நாளைக்கு அவர் வெளியூர்ல இருந்து வரும்போது நல்லா கவனிச்சுட வேண்டியது தான்….” என்று தனக்குள்ளேயே கூறிக் கொண்டாலும் நாணத்தில் முகம் சிவந்தது.
“அச்சோ…. என் அழகு அத்தானே…. இப்பவே உங்களைப் பார்த்து கட்டிக்கணும் போல இருக்கே……” அவள் மனது பரபரத்தது.
அவனது அழகான குறும்பு முகம் கண்ணுக்குள் நெளிய முகம் ஆசையில் சிவந்தது.
“அத்தான்….. கல்யாணத்துக்கு முன்னால என்னெல்லாம் ஆசைப் பட்டிருக்கேன் தெரியுமா….. உங்க சந்தன நிறத்துக்கு எடுப்பா அழகா இருக்குற அந்த கட்டி மீசையை அப்படியே செல்லமாக் கடிச்சு வைக்கனும்….. உங்க நெஞ்சுல சாஞ்சுகிட்டு உலக கதை எல்லாத்தையும் ஒண்ணு விடாமப் பேசணும்…… அழகா அலையலையா நிக்குற உங்க முடியைக் கலைச்சு விளையாடணும்…. அப்புறம்…. அப்புறம்……” என்றவளுக்கு அதை யோசிக்கையில் சிரிப்பாய் வந்தது.
“என்னை டார்லிங்… டார்லிங்னு அழகா கொஞ்சுற உதட்டுல அழுத்தமா ஒரு முத்தம் குடுக்கணும்…. ஹஹா……..” என யோசித்தவளுக்கு நினைவுகளே சுகமாய் இருந்தது.
வெகு நேரம் கணவனைப் பற்றிய நினைவுகளில் உறங்காமல் இருந்தவள், அடுத்த நாள் அவள் இப்படியெல்லாம் செய்தால் அவன் எப்படி ரியாக்ட் பண்ணுவான்….. அந்த உணர்வுகள் எப்படி இருக்கும்…. என்ற எதிர்பார்ப்பிலும் ஆர்வத்திலுமாய் யோசித்துக் கொண்டே அவனைக் காண்பதற்காய் அலைபாய்ந்த மனதுடன் உறங்கிப் போனாள்.
அடுத்த நாள் உற்சாகத்துடன் கணவனுக்கு அழைத்து வீணாவுடன் ஷாப்பிங் செல்வதாய் கூறியவள் அவனுக்கு சர்ப்ரைஸாக ஏதாவது பரிசு வாங்கவும் மனதுள் நினைத்துக் கொண்டாள். வீட்டில் காரை மறுத்துவிட்டு ஸ்கூட்டியிலேயே கிளம்பினாள். மாலுக்கு சென்று பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு வீணாவுக்கு அழைக்க அவள் அப்போது தான் பஸ்ஸில் வந்து கொண்டிருப்பதாகக் கூறினாள்.
தோழிக்காய் அங்கேயே காத்திருந்தவள், மாலுக்குள் போவோர் வருபவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டு ஸ்கூட்டியிலேயே அமர்ந்திருந்தாள். வெகு நாட்களுக்குப் பிறகு வெளியே வந்தது மனதுக்கு ஒரு புத்துணர்ச்சியைக் கொடுத்தது.
கிரவுண்ட் புளோரில் குழந்தைகளுக்கான துணிக்கடை ஒன்றில் இருந்து ஒரு கையில் துணிப்பையுடனும் மறுகையில் ஒரு குழந்தையுமாய் வெளியே வந்த விக்ரமைக் கண்டவள் கையில் திகைப்புடன் நோக்கினாள்.
“இது யார் குழந்தை…… விக்ரம் ஏன் எடுத்து வருகிறான்…. ஒரு வேளை தெரிஞ்சவுங்க குழந்தையை எடுத்து வைத்திருக்கிறானா…… உறவென்றும் அவனுக்கு யாருமில்லையே….. குழந்தை அவனோடு வெகு நாள் பழகியது போல ஒட்டிக் கொண்டு சிரித்துக் கொண்டு வருகிறதே….” மனதுக்குள்ளேயே நினைத்துக் கொண்டிருந்தவள் அவன் அடுத்த கடையை நோக்கி நகரவும், அவனிடம் ஓடினாள்.
“ஹாய் விக்ரம்….. எப்படி இருக்கீங்க….. இது யார் குழந்தை….. ரொம்ப கியூட்டா அழகா இருக்கே…..” சிரித்த முகத்துடன் கேட்டுக் கொண்டே அவனை நெருங்கி வந்த முன்னாள் காதலியைக் கண்டு திகைப்பது இப்போது அவனது முறையானது.
நாம் அன்பு வைத்தவர்களின்
உதாசீனம் போலக் கொடுமையான
ஆயுதம் வேறொன்றுமில்லை……
மௌனமாய் மனதை அறுக்கும்……
மனதுக்குள் உயிரை உருக்கும்……
உலகையே வெறுக்க வைக்கும்…..
உணவும் தான் இறங்க மறுக்கும்……
மனம் திறந்து பேசிவிட்டால்
நொடியில் எல்லாம் மறைந்துவிடும்…….
மலை போல தோன்றிய துயரம்
மணலாகக் கரைந்து விடும்……
வாழ்க்கையே மிகவும் அழகாய்
வர்ணமயமாய் மாறிவிடும்……
அன்பென்னும் மாயைக்கு
அகிலமே மண்டியிடும்……

Advertisement