Advertisement

இலக்கணம் – 16
குழந்தை சங்கவி கட்டிலில் நல்ல உறக்கத்தில் இருக்க, அவளுக்கு  அருகில் அமர்ந்திருந்த விக்ரம், சத்யாவைப் பற்றி சொன்ன விஷயங்களை அதிர்ச்சியுடன் கேட்டுக் கொண்டிருந்தான் வினோத். இறுதி செமஸ்டர் முடிந்ததும் கல்லூரி ஹாஸ்டலை காலி செய்ய வேண்டி வந்ததால் இருவரும் ஒரு அபார்ட்மெண்டில் வாடகைக்கு தங்கி இருந்தனர்.
வினோத் ஒவ்வொரு அலுவலகமாய் இன்டர்வியூவிற்கு சென்று கொண்டிருக்க, விக்ரம் வெளிநாடு செல்லும் யோசனையைக் கைவிட்டு சப் இன்ஸ்பெக்டர் வேலைக்கான எழுத்துத் தேர்வை எழுதி வெற்றி பெற்று, அடுத்து உடல் சோதனை தேர்வுக்காய் காத்திருந்தான். அது சம்மந்தமாய் சில விவரங்களை அறியவே நண்பன் முருகனைக் காண சென்றிருந்தான். திரும்பி வரும் வழியில் நடந்த விஷயங்களை அவன் சொல்ல கேட்டுக் கொண்டிருந்த வினோத்தின் விழிகள் அதிர்ச்சியில் விரிந்தன. எதுவுமறியாமல் உறங்கும் குழந்தையை பரிதாபமாய் பார்த்தான்.
கல்யாண மண்டபத்துக்குள் நுழைந்த நண்பன் அதிர்ச்சியோடு மேடையைப் பார்த்து நின்று விட்டதைக் கண்டவன், இலக்கியாவை வேறொருவனுடன் மணக்கோலத்தில் கண்ட அதிர்ச்சியில் தான் அப்படி நின்றிருப்பதாய் நினைத்து யாரும் காண்பதற்கு முன் அவனைத் தனியே அழைத்துச் செல்ல அதற்குள் விக்ரமைப் பார்த்து மேடையில் இருந்து கையசைத்தாள் வீணா. இலக்கியாவும் இவர்களை நோக்கிப் புன்னகைக்க அப்போதும் அதிர்ச்சியுடன் ஸ்தம்பித்து அப்படியே நின்ற நண்பனை அதிசயமாய் பார்த்த வினோத், அவர்களுக்கு கையசைத்துவிட்டு இவனைத் தள்ளிக் கொண்டு வாசலுக்கு வந்தான்.
“டேய்…. என்னடா ஆச்சு…. எதுக்கு இப்படி தலைல இடி விழுந்த போல அதிர்ச்சியோட நின்னு பார்த்துட்டு இருக்கே….. இலக்கியா அவளுக்குப் பிடிச்சவனைக் கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா இருக்கட்டும்னு சொல்லி எங்கிருந்தாலும் வாழ்கன்னு பாட்டெல்லாம் பாடினே…. இப்போ என்ன ஆச்சு…. நீ இப்படி அதிர்ச்சியோடு நிக்கறதை யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க……” என்றான் கிசுகிசுப்புடன் அவனை முறைத்துக் கொண்டே.
ஒன்றும் சொல்லாமல் எங்கோ வெறித்துக் கொண்டே நண்பனைப் பார்த்த விக்ரம், “வினோ…. கிளம்புடா….. உன்கிட்டே கொஞ்சம் பேசணும்…..” என்றான் சீரியஸாக.
அவனது முகமும் பேச்சும் புதுவிதமாய் இருக்க விஷயம் எதோ சீரியஸ் போலிருக்கிறது என நினைத்த வினோத்தும், “சரி டா…… இரு…. அவங்க கிட்டே சொல்லிட்டு வந்திடறேன்…..” என்று மண்டபத்துக்குள் நுழையப் போக,
“ஒண்ணும் வேண்டாம் வா…..” இழுத்துக் கொண்டு நடந்தான்.
“என்னடா… என்ன பிரச்சனை… ஏன் ஒரு மாதிரி இருக்கே…..” கேட்டுக் கொண்டே நடந்த வினோத், கடுமையான யோசனை முகத்துடன் இருந்த விக்ரமை ஒன்றும் புரியாமல் பார்த்தான். 
“வினோ….. உன்கிட்டே ஒரு முக்கியமான விஷயத்தைப் பத்தி சொல்லணும்…. இங்கே அதைப் பத்தி பேச வேண்டாம்…… வீட்டுக்குப் போயிடலாம்…..” என்றவன் அமைதியாகி விட, அதற்கு மேல் எதுவும் கேட்காமல் “என்ன பிரச்சனை… எதற்கு இவன் இப்படியெல்லாம் பேசுகிறான்….” என மனதுக்குள் யோசித்துக் கொண்டே விக்ரம் வந்த காரில் ஏறிய வினோத், பின் சீட்டில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தையை கண்டு நண்பனை புரியாத பார்வை பார்க்க,
அவனிடம் கண்ணை மூடி தலையசைத்தவன் “பிறகு பேசிக் கொள்ளலாம்……” என்று காட்டிய ஜாடையைப் புரிந்து கொண்டு அபார்ட்மென்ட் வரை அவ்வப்போது நண்பனைப் பார்ப்பதும், விஷயத்தைக் கேட்கத் துடித்த மனதை அடக்கிக் கொண்டு அமைதியாவதுமாய் வந்தான். இலக்கியாவின் கல்யாணத்துக்கு கூட நிற்காமல் வந்ததில் இருந்தே விஷயம் எதோ வில்லங்கமாய் இருக்குமோ என யோசிக்கத் தொடங்கியிருந்தான். காரை அனுப்பிவிட்டு குழந்தையை எடுத்துக் கொண்டு விக்ரம் உள்ளே நுழையும் வரை அமைதியாய் இருந்த வினோத், “என்னடா… என்ன ஆச்சுன்னு இப்பவாவது சொல்லித் தொலை…. என்னமோ பாறாங்கல்லை முழுங்கிட்டு வந்தவன் மாதிரி இவ்ளோ சீரியஸா மூஞ்சை வச்சிருக்கே…..” என்று பொரிந்தான்.
குழந்தையைக் கட்டிலில் கிடத்திவிட்டு அருகில் அமர்ந்தவன் வினோதிடம் எல்லா விஷயங்களையும் சொல்லி முடித்தான்.
“டேய்…. என்னடா இவ்ளோ அதிர்ச்சியான விஷயத்தை சொல்லறே… இதெல்லாம் இலக்கியா கிட்டே சொல்லாமத் திரும்புறது துரோகம் இல்லியா….. அவன் எப்படிப்பட்டவன்னு எடுத்து சொல்லி அந்த அயோக்கியனை ஒரு வழி பண்ணிடலாம்…..” என்றவன், விக்ரம் அமைதியாய் யோசிப்பதைப் பார்த்து அதிசயித்தான்.
“டேய்… எங்கே அநியாயம் நடந்தாலும் பொறுத்துக்க முடியாமப் பொங்குற உன்னால எப்படிடா இப்படி அமைதியா இருக்க முடியுது…… எப்படியாவது இந்த கல்யாணத்தை நிறுத்தி இருக்க வேண்டாமா…..” பதட்டத்துடன் கேட்டான் வினோத்.
“டேய்…. நானும் எத்தனயோ வழியில் முயற்சி செய்து பார்த்தேன்….. இலக்கியாவோட கழுத்துல அவன் கட்டுற தாலி ஏறணும்னு எழுதி இருக்கும்போது என்ன பண்ண முடியும்….. என் முயற்சி எதுவுமே நடக்கலை……” விரக்தியாய் கூறினான் விக்ரம்.
“அதுக்காக….. தாலி ஏறிட்டா அவனைப் பத்தி சொல்லாம அப்படியே திரும்ப வந்திடனுமா என்ன…. உனக்கு தெரிஞ்ச உண்மையை அவகிட்டே சொல்லாம மறைக்குறது எவ்ளோ பெரிய தப்பு தெரியுமா…. நாளைக்கு அவளையும் அந்தப் பொறுக்கி ஏதாவது செய்ய முயற்சி செய்தா……” கேள்வியோடு நிறுத்தியவனை குழப்பமாய் பார்த்தான் விக்ரம்.
“டேய் வினோ….. நீ சொல்லுறது எனக்குப் புரியுது…… ஆனா அந்த கல்யாண மண்டப சூழ்நிலைல நான் என்ன பண்ண முடியும்…. சத்யாவைப் பத்தி நான் சொன்னாலும் அவன் மேல உசுரையே வச்சிருக்குற, அவனையே உலகமா நினைக்குற இலக்கியா நான் சொல்லுறதை நம்புவாளா…… அவன் மேல கண்மூடித்தனமான நம்பிக்கை வச்சிருக்காளே…… கல்யாணமான சந்தோஷத்தில் இருக்கறவ இதைக் கேட்டா கலங்கிப் போயிட மாட்டாளா………” அவன் வார்த்தையில் ஒரு வலி தெரிந்தது.
“அவ நீ சொல்லுறதை நம்புவாளா இல்லியான்னு நீ சொன்னா தானே தெரியும்…… உன்கிட்டே தான் ஆதாரம் இருக்கே…. பின்னே எப்படி நம்பாம இருப்பா……” என்றான் வினோத்.
“ஹூம்…. கொஞ்சம் முன்னாடி நான் வந்து சொல்லி, ஒருவேளை அவள் நம்பியிருந்து கல்யாணத்தை நிறுத்தியிருந்தா ஒரு அர்த்தம் இருக்கு…… இப்ப அவன் கட்டின தாலி அவள் கழுத்துல ஏறின பின்னால அவ புருஷனைப் பத்தி நான் சொன்னா அவள் நம்புவாளா…. நம்பினாலும் அவளோட வாழ்க்கை…… அப்பாவை இழந்த துக்கத்தில் இருந்தே அவ இன்னும் மீளலை….. அதுக்குள்ளே அடுத்த அதிர்ச்சியைத் தாங்க அவளால முடியுமா….. அவ அம்மாவும், பாட்டியும் பொண்ணு வாழ்க்கை இப்படி ஆகிறுச்சேன்னு துடிச்சுப் போயிட மாட்டாங்களா……” என்றவன் சற்று நிறுத்தினான். வினோத் அவன் பேசுவதை உள்வாங்கிக் கொண்டு யோசித்துக் கொண்டிருந்தான்.
“இலக்கியாவோட உண்மையான அன்புக்கு சத்யா செய்த துரோகம் தெரிஞ்சா துடிச்சுப் போயிட மாட்டாளா……. சப்போஸ் நான் சொன்னதை அவ நம்பலைன்னா அவளோட எனக்குள்ள நட்பு கூட முறிஞ்சு போயிடாதா……. அதுக்குப் பிறகு சத்யாவைப் பத்தி அவகிட்டே சொல்லுற சந்தர்ப்பமே அமையாமப் போயிடுச்சுன்னா….. அதான் இப்ப நான் எதுவும் சொல்லலை…..” என்றான்.
“ஹூம்… நீ சொல்லுறதும் ஒருவிதத்தில் சரிதான்…. ஆனா இந்த விஷயத்தை இப்படியே விடக் கூடாது…. சத்யா பத்தின எல்லா விஷயங்களையும் ஆதாரத்தோட இலக்கியா கிட்டே சொல்லியே ஆகணும்….. சரி இந்தக் குழந்தையோட அம்மா எங்கே…… எப்படி இருக்காங்க…..” என்றான் வினோத்.
“அவங்க இப்பவும் மயக்கமா தான் இருக்காங்க…… கொஞ்ச நேரத்துல நானும் ஹாஸ்பிடல் கிளம்பணும்….” என்றான் விக்ரம்.
“அவங்க உயிருக்கு எதுவும் ஆபத்தில்லையே….. அவங்க நல்லபடியா பிழைச்சு எழுந்துட்டாப் போதும்…. சத்யாவுக்கு எதிரா பலமான ஆதாரம் அவங்க தான்…. அவங்க உயிரோட இருக்குற விஷயம் சத்யாவுக்குத் தெரிஞ்சுட்டா ஆபத்து….. அதுனால கவனமாப் பார்த்துக்கணும்…..” என்றான் வினோத்.
“ம்ம்….. நானும் நினைச்சேன் டா….. அவங்க கண் முழிச்சுட்டா வேற பிரைவேட் ஹாஸ்பிடலுக்கு மாத்திடலாம்னு போலிஸ் கிட்டே சொல்லப் போறேன்….” என்றான் விக்ரம் யோசனையுடன். “சரி…. இந்த சின்னக் குழந்தையை நீ எப்படிப் பார்த்துக்குவே…. ஏதாவது ஆஸ்ரமத்தில் விடலாமே……” என்றான் வினோத்.
“ம்ம்… ஏனோ மனசு வரலை டா…. என்னைப் பார்த்ததுல இருந்து நல்லா ஒட்டிகிச்சு….. என்கிட்டே அழுகாம இருந்துக்குறா….. எனக்கும் யார் பொறுப்பிலும் விடத் தோணலை……” உறங்கும் குழந்தையின் கள்ளமில்லா முகத்தை நோக்கிக் கொண்டே விக்ரம் கூற யோசனையுடன் பார்த்தான் வினோத்.
சாந்தி முகூர்த்தத்திற்காய் அறையில் புறப்பட்டுக் கொண்டிருந்த மகளிடம் வந்தார் லலிதா. மனதில் பார்த்துக் காத்து நின்றவனே மாங்கல்யம் தந்து மணாளனாய் ஆனதில் மனதுக்குள் தந்தை இறந்த நினைவுகளையும் மீறி ஒரு நிம்மதி வந்திருந்தது அவளுக்கு. இனி எதற்கும் தன் துயரங்களை எண்ணங்களை பகிர்ந்து கொள்ள உரிமையோடு தன் அத்தான் இருக்கிறான் என்ற எண்ணம் அவள் மனதுக்கு ஆதரவாய் இருந்தது.
தன் கல்யாணத்திற்கு தந்தை இல்லாத வருத்தமே தவிர கல்யாணம் நடந்ததில் வருத்தம் இல்லை.
தந்தையின் இழப்பின் வலியை மறப்பதற்கான வழியாய் அன்போடு தாங்கிக் கொள்ள அவள் அத்தான் இருப்பான் என்ற நம்பிக்கையே அதற்குக் காரணம். யோசனையுடன் அமர்ந்திருந்தவளின் தலையைப் பின்னலிட்டு பூச்சூடி விட்டார் அந்த உறவுப் பெண்மணி.
“முடிஞ்சுதா ராணி…… நான் பாலை சுண்டக் காய்ச்சி வச்சிருக்கேன்… கொஞ்சம் ஆத்திட்டு சொம்புல ஊத்தி வச்சிடு…..” என்று அவரை வெளியே அனுப்பி விட்டு மகளுக்கு அருகில் வந்து நின்றார்.
“இளாம்மா என்னடா யோசிக்கறே….. இனி உன் வாழ்க்கைல எல்லாமே உன் புருஷன் தான்….. எல்லாருக்கும் பிடிச்ச வாழ்க்கை அமையறதில்லை…… நீ பாக்கியசாலி….. ரெண்டு பேரும் மனசொத்து சந்தோஷமா வாழணும்…. உங்க கல்யாணத்தை ஊரே மெச்சுற மாதிரி நடத்தணும்னு ஆசைப்பட்ட அப்பாவுக்கு உங்க சந்தோஷமான வாழ்க்கை தான் சாந்தியைக் கொடுக்கணும்….” என்றவர் கண் கலங்க மகளின் தலையில் தடவிக் கொடுத்தார்.
“அம்மா….. அப்பா இல்லாம எங்க கல்யாணம் தான் அவசரமா நடந்திருச்சு……. இந்த சாந்தி முகூர்த்தத்துக்கு இப்ப என்னம்மா அவசரம்….. கொஞ்ச நாள் கழிச்சு ஏற்பாடு பண்ணி இருக்கலாமே….” என்றாள் அவள் வருத்தத்துடன்.
“எந்த விஷயமும் உடனுக்குடன் நடக்கறது தான் நல்லதுடா….. எதுக்கு தள்ளிப் போடணும்….. இன்னைக்கு நாள் ரொம்ப நல்லாருக்குன்னு ஜோசியர் சொல்லிருக்கார்…… நீ எதையாவது நினைச்சு மனசைக் குழப்பிக்காம மாப்பிள்ளைக்குப் பிடிச்ச மாதிரி பக்குவமா நடந்துக்க….. தெளிஞ்ச மனசோட உன் புருஷனை மட்டும் மனசுல நினைச்சுட்டு போ…… இனி இந்தக் குடும்பத்துக்கு எல்லாமே அவர்தான்….. பாட்டிகிட்டே ஆசிர்வாதம் வாங்கிக்க…..” என்றார்.
“ம்ம்…. சரிம்மா…..” என்றவள் ராணி சொம்புடன் அவளை அழைத்து செல்ல வரவும் ஹாலில் இருந்த பாட்டியிடம் சென்று நமஸ்கரித்துக் கொண்டாள்.
“என் கண்ணே…… எப்படி எல்லாமோ ஆர்ப்பாட்டமும் சந்தோஷமுமா நடந்திருக்க வேண்டிய கல்யாணம் இப்படி முடிஞ்சு போயிருச்சு…… என் மகன் ஆசைப் பட்ட மாதிரி என் பேரனோட சந்தோஷமா குடும்பம் நடத்தணும் கண்ணு….. அதைப் பார்த்து நிம்மதியா இந்தக் கிழவி கண்ணை மூடணும்…… அதுக்கு வேண்டி தான் என் மகன் போன பின்னாடியும் இந்தக் கிழவி உசுரை விடாம பிடிச்சு வச்சிருக்கேன்…… சீக்கிரமா ஒரு குழந்தையைப் பெத்து என் கையில கொடுத்திரு கருவாச்சி….. குழந்தை என்னை மாதிரி சிவப்பா இருக்கணும்…. சொல்லிட்டேன்…..” என்று வருத்ததோடு தொடங்கி சிரித்துக் கொண்டே அவள் கன்னத்தை வழித்து திருஷ்டி கழித்தார்.
தன் மனநிலையை சரியாக்க வேண்டி தனது சோகத்தைக் கூட மறைத்துக் கொண்டு அவளை அவர் சீண்டுவதை உணர்ந்து கொண்டவள் அவரைக் கட்டிக் கொண்டாள்.
“பாட்டி…… உன்னை மாதிரி சிவப்பா ஒண்ணு…. உன் புருஷனை மாதிரி கறுப்பா ஒண்ணு பெத்துத் தரேன்…. சரியா……” என்று பதில் சொல்லி அவரைத் திணற வைத்துவிட்டு சிரிப்புடன் ராணியோடு நடக்கவும் அந்த வயதான மனது கவலை மறந்து லேசானது. ராணி அறைக்கு முன்னில் அவளை விட்டுவிட்டு சொம்பைக் கொடுத்துவிட்டு திரும்ப தயக்கத்துடன் அத்தானின் அறைக்குள் நுழைந்தாள் இலக்கியா.
இதற்கு முன்னாலும் எத்தனையோ முறை அவனது அறைக்குள் வந்திருக்கிறாள் தான்…. அவன் உடுத்திய சட்டையைப் போட்டுக் கொண்டு அவனது மணத்தை முகர்ந்து சிலிர்த்திருக்கிறாள்….. அவன் படுத்த கட்டில் விரியை ஆசையோடு தடவிக் கொடுத்திருக்கிறாள்…… அவனுக்கு அருகில் நின்று நிலைக் கண்ணாடியில் தன்னை ரசித்திருக்கிறாள்……. அந்த அறையின் ஒவ்வொரு இடத்திலும் நாணத்தோடு அவனைக் கற்பனை செய்து நாணத்துடன் சிரித்திருக்கிறாள் தான்…. இருந்தாலும் இன்று ஏனோ ஒரு தயக்கமாய் இருந்தது.
அவள் உள்ளே நுழைந்ததும் கட்டிலில் அமர்ந்திருந்த சத்யா அவளை நோக்கிப் புன்னகைக்க, “இனி இந்தப் புன்னகை மன்னனின் புன்னகையை எத்தனை வேண்டுமானாலும் அருகில் இருந்து ரசிக்கலாமே…..” என நினைத்துக் கொண்டே சிறு புன்னகையுடன் அவன் அருகில் வந்து தயங்கி நின்றாள். “உக்காரு டார்லிங்…..” என்றவன் கட்டிலைக் காட்ட அவள் கூச்சத்துடன் அமர்ந்து கொண்டு பால் சொம்பை நீட்டினாள்.
“ம்ம்….. இதென்ன சம்பிரதாயமா…… சரி குடு….” என்றவன் அதை வாங்கி முழுமையாய் குடித்துவிட்டுக் கொடுக்க காலி சொம்பைக் கண்டவுடன் அவன் பாதி வைப்பான் என்று எதிர்பார்த்தவளுக்கு சற்று ஏமாற்றமாகவே இருந்தது.
“ஓ…… முழுசா குடிச்சுட்டேன்னு பார்க்கறியா டார்லிங்…… உனக்கு தான் பால் பிடிக்காதே….. எதுக்கு உன்னை குடிக்க சொல்லி கஷ்டப் படுத்தணும்னு தான் நானே புல்லா குடிச்சுட்டேன்…… சரி…. உனக்கு ரொம்ப டயர்டா இருக்கும்னு நினைக்கறேன்…. நீ தூங்கு….. என்னதான் மாமா ஆசைப்பட்டார்னு நமக்கு கல்யாணம் பண்ணி வச்சுட்டாலும், அவரோட இழப்பு உன் மனசுல தீராத ரணமா வலிச்சுட்டே தான் இருக்குன்னு எனக்குத் தெரியும்…… அந்த காயம் மாறட்டும்…. அதுக்குப் பிறகு நாம நம்ம வாழ்க்கையை சந்தோஷமா தொடங்கலாம்….. நீ ரெஸ்ட் எடு….” என்று சொல்லிவிட்டு லைட்டை அணைத்துவிட்டு கட்டிலின் ஒரு பக்கத்தில் படுத்துக் கொண்டான்.
அவனிடம் தன் மனதிலுள்ள வருத்தங்களை எல்லாம் பேசி ஆறுதல் தேட நினைத்தவள் அவன் செய்கையில் என்ன செய்வதென்று புரியாமல் திகைத்து வேறு வழியில்லாமல் கட்டிலின் மறுபக்கத்தில் படுத்துக் கொண்டாள். அவன் சொன்ன வார்த்தைகள் மீண்டும் மனதில் ஒலிக்க,
“என் அத்தான் எத்தனை நல்லவர்….. இப்பக் கூட என் சந்தோசம் தான் முக்கியம்னு யோசிக்கிறாரே…..” சந்தோஷமாய் நினைத்துக் கொண்டே நிம்மதியாய் உறங்கத் தொடங்கினாள் இலக்கியா.
“ச்ச்சே…. இந்தக் கருவாச்சியை எல்லாம் மனுஷன் தொடுவானா…… இவளைக் கல்யாணம் பண்ணினது பத்தாம சாந்தி முகூர்த்தம் ஒரு கேடு…… இதைக் கொஞ்ச நாள் கழிச்சு வைச்சுத் தொலையாம இப்பவே வச்சிருக்கு அந்தக் கிழவி….. கரிக்கட்டைக்கு சேலை கட்டி விட்ட மாதிரி இருந்துட்டு உலக அழகி அளவுக்கு பேச்சுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை…..” என நினைக்கும்போதே அவன் மனது வேறொன்று யோசித்தது.
“லைட்டை அணைச்சுட்டா எல்லாப் பொண்ணுங்களும் கறுப்பா தானே தெரிவாங்க….. இவ தோல் கறுப்புன்னாலும் உடம்பை சும்மா கும்முன்னு தானே வச்சிருக்கா…… கண்ணை மூடிட்டு பிரிச்சு மேஞ்சுடலாமா……” மனதுக்குள் ஒரு ஆர்வக் குரல் கேட்க அவளைத் திரும்பிப் பார்த்தான்.
அவள் உறங்கிவிட்டது புரிய, “அடடா…. அவசரப் பட்டு நல்லவன் வேஷம் போட்டு அவளைத் தூங்க சொல்லிட்டேனே…. சரி இன்னொரு நாளைக்கு பார்த்துக்கலாம்….” என நினைத்துக் கொண்டவன் உறங்கத் தொடங்கினான்.
அன்பிலே நச்சு கலந்தால்
அமிர்தமும் விஷமாகும்…..
நெஞ்சிலே வஞ்சமிருந்தால்
தாலியும் சுமையாகும்……
வேலியாக வந்த தாலி
வேடமிட்ட கருங்காலி…..
பலிகிடாவாய் மாறுமோ
பாவையவள் வாழ்க்கையும்….

Advertisement