Advertisement

இலக்கணம் – 15
சூரியன் மெல்ல கிழக்கில் உதிப்பதற்கான ஆயத்தப் பணியில் இருக்க, அந்த பெரிய கல்யாண மண்டபம் மேளதாளம் எதுவுமில்லாததால் கலகலப்பு எதுவுமின்றி அமைதியாய் இருந்தது. காலையில் ஆறு முதல் ஏழு மணிக்குள் முகூர்த்த நேரம் ஆதலால் சொந்த பந்தங்களும், நட்புகளும் வரத் தொடங்கி இருந்தனர்.
அய்யர் மந்திரங்களை உச்சரித்துக் கொண்டிருக்க கல்யாண மாப்பிள்ளை சத்யா கம்பீரமாய் மணமேடையில் அமர்ந்திருந்தான். தான் நினைத்தபடியே எல்லாம் சரியாக நடந்து கொண்டிருக்கும் ஆனந்தம் அவன் முகத்தில்.
இலக்கியா, தந்தையின் நினைவில் வருத்தத்துடன் மணமேடையில் அமர்ந்திருக்க வீணா அவளுக்கு அருகில் நின்று ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தாள். லலிதாவும் பாட்டியும் அமைதியாய் முன் வரிசையில் ஒரு ஓரத்தில் அமர்ந்திருக்க சொந்தங்களே அனைத்து வேலைகளையும் கவனித்துக் கொண்டனர்.
கல்யாணத்திற்கான உற்சாகம் எதுவுமின்றி சோர்ந்து அமர்ந்திருந்த மகளை கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தார் லலிதா.
மண்டபத்துக்குள் தனியே நுழைந்த வினோத்தைக் கண்ட வீணா அவனிடம் சென்று விக்ரம் ஏன் வரவில்லை என்று விசாரித்துக் கொண்டிருந்தாள். அவன் ஒரு வேலையாய் வெளியூர் சென்றிருப்பதால் முகூர்த்த நேரத்திற்கு இங்கே வந்துவிடுவதாய் கூறினான் வினோத்.
“ம்ம்…. விக்ரம் அண்ணாவுக்கு வருத்தம் ஒண்ணும் இல்லையே….. வந்திருவார் தானே….. இலக்கியா அப்பவே நீங்க ரெண்டு பேரும் இன்னும் வரலியான்னு கேட்டுட்டு இருந்தா……” என்றாள் வீணா.
“அதெல்லாம் இல்லைம்மா…. அவன் கண்டிப்பா வந்திருவான்….. போன இடத்துல வர முடியாம மாட்டிகிட்டான்….. இலக்கியா நல்லபடியா சந்தோஷமா இருக்கணும்னு நம்மளை விடவும் அவன் ரொம்பவே ஆசைப்படறான்….. வந்திருவான்….” என்றான் வினோத்.
அதற்குள் யாரோ மேடையில் இருந்து வீணாவைக் கைகாட்டி அழைக்கவே அங்கே சென்றாள்.
“ச்சே…. இந்த விக்ரம் ஏன் இப்படிப் பண்றான்….. அவன் மொபைலுக்கு கூப்பிட்டா ஸ்விட்ச் ஆப்னு வருது….. இலக்கியா கல்யாணத்தை விட அப்படி என்ன, அந்தப் பொண்ணு முக்கியமாப் போயிருச்சு…. எதையாவது சொல்லி கிளம்பி வராம இன்னும் அங்கயே உக்கார்ந்துட்டு இருக்கானோ…. இன்னுமா அந்தப் பொண்ணோட சொந்தக்காரங்க வராம இருப்பாங்க…..” கடுப்புடன் யோசித்துக் கொண்டே மீண்டும் நண்பனின் அலைபேசிக்கு அழைத்து நோக்க அது மீண்டும் ரெக்கார்டு செய்யப்பட்ட அதே தகவலையே கூறியது.
“ச்சே…..” எரிச்சலுடன் கட் செய்தவன், ஏதோ ஒரு புதிய எண்ணில் இருந்து மிஸ்டு கால் இருப்பதைக் கண்டான்.
“இது யார் நம்பர்….. புதுசா இருக்கே…… சரி…… அழைத்துப் பார்ப்போம்…..” குழப்பத்துடன் யோசித்துக் கொண்டே அந்த எண்ணிற்கு அழைத்துப் பார்க்க, அது பிஸி….. என்றது.
“அதுக்குள்ள பிஸின்னு வருது…. சரி……. யாரா இருந்தாலும் தேவைன்னா மறுபடி கூப்பிடுவாங்க…. இன்னொரு டைம் விக்ரமை அழைத்துப் பார்க்கலாம்…..” என நினைத்தவன் அவனுக்கு அழைக்க அது அப்போதும் அணைத்து வைக்கப் பட்டிருந்ததாய் கூறியது. டென்ஷனுடன் அலைபேசியை பாக்கெட்டில் வைத்துக் கொண்டான் வினோத். அதற்குள் மாங்கல்யத்தை அட்சதைத் தட்டில் வைத்து அய்யர் வீணாவிடம் நீட்ட அதை வாங்கிக் கொண்டு அனைவரிடமும் வந்தாள் அவள்.
வினோதிடமும் வந்தவள், “என்ன அண்ணா… இன்னும் விக்ரம் அண்ணா வரலை போலருக்கு….” என்றாள் கிசுகிசுப்புடன்.
“ம்ம்….. வந்திருவேன்னு சொன்னான் மா…. வருவான்….” என்றான் வினோத் தவிப்புடன் வாசலைப் பார்த்துக் கொண்டே. அவன் மனதும் விக்ரமின் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தது.
“ம்ம்… எனக்கு என்னமோ இளா கல்யாணத்தைப் பார்க்க மனசு வருத்தப்பட்டு தான் அண்ணா வரலியோன்னு தோணுது…. என்னதான் வெளியே சாதாரணமா காமிச்சுகிட்டாலும் மனசுக்குள்ளே வருத்தம் இருக்கத்தானே செய்யும்….. எதுக்கும் நீங்க போன் பண்ணிப் பாருங்க……” என்ற வீணா, அங்கிருந்து நகரவும், “ஒருவேளை அப்படியும் இருக்குமோ…….” என யோசிக்கத் தொடங்கினான் வினோத்.
கல்யாண மண்டபத்தை நோக்கி விரைந்து கொண்டிருந்த டாக்ஸியில் பதட்டத்துடன் அமர்ந்திருந்தான் விக்ரம். அதிகாலைக் குளிர் ஏற்றி விடப்பட்டிருந்த கண்ணாடியையும் மீறி உள்ளே வந்து சுகமாய் சிலிர்க்க வைக்க குழந்தை சங்கவியை தன் ஜெர்கினுக்குள் நெஞ்சோடு சேர்த்துப் பிடித்திருந்தான்.
அவளும் ஏதோ நிம்மதியான இடத்துக்கு வந்துவிட்டது போல சுகமாய் அவனைக் கட்டிக் கொண்டு உறங்கிக் கொண்டிருந்தாள். விக்ரமின் மனது பதட்டமாய் யோசித்துக் கொண்டிருந்தது.
“கடவுளே…. எப்படியாவது இலக்கியாவின் கல்யாணத்தைத் தடுக்க வேண்டுமே….. முகூர்த்த நேரத்திற்கு முன்னால் அங்கு சென்று விட்டால் போதும்….. அய்யோ…. எத்தனை பெரிய துரோகம்….. முன்னமே ஒரு பெண்ணுடன் வாழ்ந்து ஒரு குழந்தையும், கொடுத்துவிட்டு ஒன்றும் தெரியாத அப்பாவியாய் மாமன் மகளைக் கல்யாணம் முடிக்கப் போகிறானே…. இவனுக்கு என்னவொரு நெஞ்சழுத்தம்….. இந்த துரோகத்தை இலக்கியா எப்படித் தாங்கிக் கொள்ளப் போகிறாள்….. அத்தானின் மீது அளவில்லா அன்பையும், நம்பிக்கையையும் வைத்திருப்பவளாயிற்றே…… நான் சொல்லும் விஷயத்தை நம்புவாளா…..” குழப்பத்துடன் யோசித்தான்.
“பாவம் இலக்கியா…. இத்தனை வருடமாய் கூட இருந்தும் அவனது நடிப்பைப் புரிந்து கொள்ளாமல் அந்த அயோக்கியனை எத்தனை விரும்பினாள்……. தந்தைக்கு அடுத்தபடியாய் அவனை நேசிப்பதாய் சொன்னாளே….. இந்த விஷயம் தெரிந்தால் மனமுடைந்து விடுவாளோ…… தந்தையின் இழப்பில் இருந்து இன்னுமே விடுபடாமல் இருப்பவளை அடுத்த அதிர்ச்சியும் கொடுத்து வேதனையில் தள்ளப் போகிறோமே…… இந்த விஷயத்தை அறிந்தால் அந்தக் குடும்பமே கதிகலங்கிப் போய் விடுமே…. இதை சொல்லாமல் இருக்கவும் முடியாதே….. அவள் வாழ்க்கை-யோடல்லவா அந்தக் கயவன் விளையாடுகிறான்……” என யோசித்தவன்,  கைகடிகாரத்தில் சமயம் பார்த்து திடுக்கிட்டான்.
“அய்யோ…. முகூர்த்த நேரம் வேறு நெருங்கிக் கொண்டே இருக்கிறது….. அவளுடைய அலைபேசிக்கு அழைத்தால் யாரும் எடுக்கவும் இல்லை….. வினோதிடம் சொல்லலாம் என்றால் அவன் நம்பர் பிஸி…. என்னுடைய மொபைல் வேறு சார்ஜ் இல்லாமல் அணைந்து கிடக்கிறது…. என்னதான் செய்வது…… அண்ணா…. இன்னும் கொஞ்சம் ஸ்பீடா போங்களேன்….” என்றான். “சரி தம்பி….” என்ற டிரைவர் இன்னும் வேகமாய் வண்டியை ஓட்ட விக்ரமின் மனதில் ஹாஸ்பிடலில் நடந்த விஷயங்கள் நிழலாடத் தொடங்கின.
நினைவில்லாமல் கிடந்த வினோதினிக்கு மெல்ல நினைவு திரும்ப, “ச… சத்யா…… என்னை ஏமாத்திடாதிங்க…… ச.. சங்கவி.. குட்டிமா…..” என்று புலம்ப அதைக் கேட்ட விக்ரம் உடனே நர்ஸை அழைக்க சென்றான். ஏதேதோ குழறலாய் புரியாமல் பேசிக் கொண்டிருந்தவள் மீண்டும் ஆழ்ந்த மயக்கத்திற்குப் போய்விட, என்ன செய்வதென்று புரியாமல் திகைத்து நின்றான் விக்ரம்.
அப்போது பாக்கெட்டில் இருந்த அலைபேசி அலறவும், புதிய ரிங் டோனில் திகைத்தவன், அது வினோதினியின் அலைபேசியாயிற்றே.. இத்தனை நேரம் மறந்து போனோமே… என்று நினைத்து வேகமாய் எடுத்துப் பார்த்தான். பழைய பேசிக் மாடல் போன் அது….. நெட்வொர்க் சர்வீஸ் கால் வந்திருந்தது….. “இதில் கான்டாக்ட் லிஸ்டில் இவளுக்குத் தெரிந்த யாராவது இருப்பார்களே……” என நினைத்தவன் அதை நோண்ட அதில் ஒன்றிரண்டு புகைப்படங்கள் இருப்பதைக் கண்டவன் அதிர்ந்தான். வினோதினியும், குழந்தையும் ஒரு போட்டோவிலும், குழந்தை மட்டும் ஒரு போட்டோவும், சத்யாவுடன் இருவரும் நின்று கொண்டு ஒரு போட்டோவுமாய் அவனைக் கண்டு சிரிக்க அவனது கண்கள் அதிர்ச்சிக்குப் போயின.
சத்யாவின் எண்ணை ஹஸ்பண்டு என்று பதிந்து வைத்திருந்தாள் வினோதினி.இறுதியில் அழைப்பு வந்த எண்ணுக்குத் திருப்பி அழைக்கவும், எதிர்புறத்தில் எடுத்தவன், “சொல்லு வினோதினிக்கா….” என்றான்.
அவனிடம் விவரத்தைக் கூறி இந்த எண்ணின் சொந்தக்காரியைத் தெரியுமா என விசாரிக்கவும் அதிர்ச்சியுடன் அவளைப் பற்றிய விவரங்களைக் கூறியவன், “அந்த சத்யா சார் தான் இப்படிப் பண்ணிருப்பார்னு நினைக்கறேன்…. பாவி… கடைசில அக்காவைக் கொன்னுட்டானா…..” என்று கேவத் தொடங்கினான் அந்தப் பையன்.
அதற்கு மேல் பொறுக்க முடியாதவன், அவளுடைய சொந்த பந்தங்களை விசாரிக்க வினோதினி ஒரு அநாதை என்று அறிந்தான். தனக்கு ஒரு முக்கியமான வேலை இருப்பதாய்க் கூறி அவனை ஆஸ்பத்திரிக்கு வந்து குழந்தையைப் பார்த்துக் கொள்ள முடியுமா எனக் கேட்கவும், அவன் ஒரு வேலை விஷயமாய் காண்டிராக்டருடன் ஆந்திராவுக்கு சென்று கொண்டிருப்பதாய் வருத்தத்துடன் கூறினான். தான் பார்த்துக் கொள்வதாய் கூறிவிட்டு கட் செய்தவன், என்ன செய்வதென்று யோசித்தான்.
அந்த நம்பரில் இருந்து சத்யாவை அழைத்துப் பார்க்க நினைத்து முயற்சி செய்ய ப்ளீஸ் செக் யுவர் அக்கவுண்ட் பாலன்ஸ் என்றது.. அடுத்து என்ன செய்வது என்று யோசிக்கும் போது தான் வினோதினியின் காவலுக்கு ஒரு பெண் போலீஸ் வந்திருந்தார்.
சத்யாவைப் பற்றி அறிந்த கசப்பான உண்மைகள் அவனுக்கு அதிர்ச்சியைக் கொடுக்க இப்போது அவனைப் பற்றி போலீஸில் தெரிவித்தால் இலக்கியாவுக்குப் பிரச்சனை ஆகுமோ என நினைத்து விநோதியினின் பர்ஸை அவரிடம் கொடுத்தவன் மொபைலை ஆப் பண்ணி பாக்கெட்டில் மறைத்து விட்டான். குழந்தையை போலீஸ் பாதுகாப்பில் விட்டுச் செல்லலாம் என்றாலும் மனமில்லாமல் தான் அழைத்துப் போவதாகக் கூறியவன், தனது முகவரி விவரங்களைக் கொடுத்து போலீஸ் நண்பன் முருகனின் கியாரண்டியுடன் அடுத்த நாள் வந்து விடுவதாகக் கூறிவிட்டு வந்திருந்தான்.
மாறி மாறி யோசித்துக் கொண்டிருந்தவன், “அண்ணே….. உங்க மொபைலைக் கொஞ்சம் கொடுங்க…… மறுபடியும் கூப்பிட்டுப் பார்த்திடறேன்……” என்றான் பொறுக்க மாட்டாமல் டிரைவரிடம்.
“என்ன தம்பி நீங்க….. எத்தனை தடவை தான் கூப்பிட்டுப் பார்ப்பிங்க….. யாரைக் கூப்பிட்டாலும் எடுக்க மாட்டேங்குறாங்க…..” என்று சலித்துக் கொண்டே அவர் மொபைலைக் கொடுத்தார்.
“முக்கியமான விஷயம்….. அதனால தான்……..” என்றவன் மீண்டும் இலக்கியாவின் எண்ணுக்கு அழைக்க முயற்சி செய்ய யாரோ எடுத்தார்கள்.
“ஹலோ…. யார் பேசறீங்க…..”
“ஹ…. ஹலோ…. இலக்கியா இருக்காங்களா… நான் அவங்க பிரண்டு பேசறேன்…. கொஞ்சம் கொடுக்க முடியுமா…..” பரபரத்தான் விக்ரம்.
“அவங்களுக்கு இன்னைக்கு கல்யாணங்க…. மணமேடைல உக்கார்ந்துட்டு இருக்காங்க….. இப்ப கொடுக்க முடியாது….” என்றார் அந்தப் பெண்மணி.
“இ… இல்ல….. அப்படி சொல்லாதிங்க…. ரொம்ப முக்கியமான விஷயங்க…. கொஞ்சம் போனை அவங்ககிட்டே கொடுங்க ப்ளீஸ்……” என்றான் அவன் அவசரமாய். அதற்குள் அங்கு யாரோ அந்தப் பெண்மணியை அழைத்திருக்க வேண்டும். “இருங்கக்கா… வரேன்…..” என்றவர், “இப்ப இலக்கியா கிட்டே பேசமுடியாது… நீங்க அப்புறம் கூப்பிடுங்க…..” என்று வைத்து விட்டார்.
“ச்ச்சே…. என்ன இது…. கிடைத்த ஒரு வாய்ப்பும் மிஸ் ஆகி விட்டதே….” என புலம்பிக் கொண்டே மறுபடி யாரை அழைக்கலாம் என நினைத்தவன், வினோதை அழைத்துப் பார்க்க அவன் இவனது எண்ணுக்கு முயற்சித்துக் கொண்டிருந்ததால் அது பிஸி என்றது.
டென்ஷனில் தலையே வெடித்து விடும் போலிருந்தது. வீணாவுக்கு அழைத்துப் பார்க்க நினைத்தவன் அவளுக்கு அழைத்தான். அவளது எண்ணோ முழுதும் அடித்து ஓய்ந்தது. அவள்தான் எல்லாருக்கும் அட்சதை கொடுக்க சென்றிருந்தாளே…….
அதற்குள் வேறு ஏதோ எண்ணில் இருந்து அந்த டிரைவருக்கு அழைப்பு வரவும் மொபைலை அவரிடம் நீட்டினான். அவர் பேசிக் கொண்டே வண்டியை சற்று மெதுவாக்கவும், இவனுக்கு பதட்டமாய் இருந்தது.
“அச்சோ…. இவர் வேற இந்த நேரத்துல பேசிட்டு….” என நினைத்தவன், “அண்ணா…. கொஞ்சம் சீக்கிரம் போங்களேன்…… அப்புறம் பேசிக்கலாம்…..” என்றான் தவிப்புடன்.
“ம்ம்…. சரி தம்பி……” என்றவர், கட் பண்ணுவதற்காய் அலைபேசியின் பட்டனை அழுத்தமாய் அமர்த்திவிட அது ஆப் ஆகிப் போனது தெரியாமல் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு வண்டி ஓட்டுவதில் கவனமானார்.
மிஸ்டு காலுக்கு மீண்டும் வினோத் அழைத்துப் பார்க்கும்போது அதுவும் அணைத்து வைக்கப் பட்டிருப்பதாய் கூற, “இதென்னடா வம்பாப் போச்சு…. எந்த நம்பருக்கு கூப்பிட்டாலும் சுவிட்ச் ஆப்னு சொல்லுது….” என யோசித்துக் கொண்டே அவன் கட் பண்ணி விட்டான்.
அப்போது சங்கவி சிணுங்கிக் கொண்டே கண் விழித்து அழத்தொடங்க, பசியில் அழும் குழந்தையை அப்படியே விட முடியாமல் கலங்கியவன், “அண்ணே…. ஏதாவது டீக்கடை கிட்ட நிறுத்துங்க….. குழந்தைக்கு பால் வாங்கிக்கலாம்….” என்றான்.
வழியில் ஒரு டீக்கடையில் நிறுத்தி பேப்பர் கப்பில் பாலை வாங்கிக் கொண்டு ஏறிக் கொண்டான். கொஞ்ச கொஞ்சமாய் ஊதி ஆற வைத்து குழந்தைக்கு நீட்ட அது சின்ன உதடுகளில் உறிஞ்சிக் கொண்டு அவனைப் பார்த்து சிரித்தது.
“அய்யோ என் செல்லமே…. உனக்கு எப்படி இப்படி ஒரு அரக்கன் தந்தையாக வந்தானோ…… உன் சிரிப்பைப் பார்த்தும் கூடவா அவன்  மனம் மாறவில்லை…..” நினைத்துக் கொண்டே அந்தப் பாலைக் கொடுக்க குழந்தையின் வாயில் பாதியும் கழுத்து, உடையில் மீதியுமாய் கொடுத்து முடித்தான்.
நனைந்த உடையைக் கழற்றி முந்தின நாள் இரவு குழந்தைக்கு வாங்கிய உடையில் மற்றொன்றை எடுத்து மாட்டி விட்டவன், தோளில் இட்டு தட்டிக் கொடுக்க, சுகமான காற்றில் அது மீண்டும் உறங்கிவிட்டது. அலுங்காமல் இருக்கையில் படுக்க வைத்தவன், டைம் பார்க்க அதிர்ந்தான்.
“அண்ணே… கொஞ்சம் சீக்கிரம் போங்கண்ணே…..” என்றான் ஏழு மணியை நெருங்கிக் கொண்டிருந்த கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டே. சிறிது நேரத்தில் டாக்ஸி மண்டபத்தை நெருங்கிதும் அவனது பதட்டம் கூடியது. எங்கே எப்படித் தொடங்குவது என்று தெரியாவிட்டாலும் பேசித்தானே ஆகவேண்டும்…..
டாக்ஸியை நிறுத்தும் போதே டிரைவரிடம், “அண்ணே… குழந்தை கார்லயே இருக்கட்டும்…. நீங்க கொஞ்சம் வெயிட் பண்ணுங்க…. வந்திடறேன்….” என்றவன் அவசரமாய் மண்டபத்துக்குள் நுழைய கல்யாணம் முடிந்து மணமக்கள் புகைப்படத்துக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ந்தவனின் கண்கள் தெறித்து விழுந்து விடும் போலத் தோன்றியது.
சத்யா மாலையுடன் உற்சாகமாய் நிற்க வரவழைத்த சிரிப்புடன் அருகில் நின்று கேமராவை வெறித்துக் கொண்டிருந்தாள் இலக்கியா. அதிர்ச்சியுடன் நின்ற நண்பனைக் கண்டு புரியாமல் அருகில் வந்தான் வினோத்.
இமையே… இமையே……
இமைக்க மறந்தாயே…….
இதயம் வலிக்க துடித்து பறந்தாயே……
காவலனாய் நான் வருமுன்
கயவனோடு கரம் கோர்த்தாயே…….
ஆயிரம் கற்பனைகளுடன்
மணவாழ்வில் அடியெடுத்து வைத்தாய்….
ஆய்ந்தடிக்கும் நிதர்சனத்தில்
கற்பனையும் கலைந்திடுமோ…..
மெல்லியலாளே….. நீ எப்படித்
தாங்கிக் கொள்வாய் இதயமற்ற
உன் வல்லினமானவனை…….

Advertisement