Advertisement

இலக்கணம் – 12
காலை நேரமாதலால் அந்த பெரிய மாலில் கூட்டம் சற்று சுமாராகவே இருந்தது. இலக்கியாவும், வீணாவும் பிளவுஸ் தைப்பதற்கு அளவு கொடுத்துவிட்டு மாலுக்கு வந்திருந்தனர். வீணா விக்ரமை அலைபேசியில் அழைக்க அவன் அங்கிருந்த காபி ஷாப் ஒன்றில் இருப்பதாகக் கூறி அங்கு வரச் சொன்னான். இலக்கியாவை இழுத்துக் கொண்டு அங்கே சென்றாள் வீணா.
“ஏய்…. என்னடி இது…. வெளியே வந்தா கொஞ்சம் நார்மலா இருப்பேன்னு நினைச்சு கூட்டிட்டு வந்தா இப்பவும் மூஞ்சத் தூக்கி வச்சுட்டே வர்றே….. இன்னும் சில நாள்ல கல்யாணத்தை வச்சுக்கிட்டு அதுக்கான உற்சாகமே இல்லாம இருக்கியே…..” என்றாள் நடந்து கொண்டே வீணா.
“எப்படி வீணா…. நான் நார்மலா இருக்க முடியும்…. என்னைப் பார்த்து பார்த்து வளர்த்த அப்பா….. திடீர்னு ஒரு நாள் இனிமே பார்க்கவே முடியாத இடத்துக்குப் போயிட்டார்…… இதை எப்படி சாதாரணமா எடுத்துக்க முடியும்….. கல்யாணம் அப்பா முடிவு பண்ணினதுங்கிற ஒரே காரணத்துக்காக தான் இப்போ வச்சுக்க ஒத்துகிட்டேன்….. ஆனா அதெல்லாம் யோசிச்சு சந்தோஷப் படுற மனநிலைல நான் இல்லை…..” என்றாள் சோர்வுடன்.
“ம்ம்… புரியுதுடி….. உனக்கு எப்படி ஆறுதல் சொல்லுறதுன்னு எனக்கும் புரியலை…. பட் இதையே யோசிக்காம அடுத்ததைப் பத்தி யோசிச்சு தானே ஆகணும்….” என்றவள், “வா….. அதோ அந்த காபி ஷாப்ல தான் இருக்காங்க போலருக்கு……” என்றாள் விக்ரமைக் கண்டுவிட்டு. வெளியே இருந்து பார்த்தால் உள்ளே இருப்பவர்களைக் காணும்படி கண்ணாடிச் சுவரால் கட்டப்பட்ட காபி ஷாப்…. அந்த நேரத்திலும் அங்கங்கு ஜோடியாய் ரகசியம் பேசிக் கொண்டிருந்தனர் சில காதல் ஜோடிகள். இவர்களைக் கண்டதும் வினோத் கைகாட்ட அவர்களது மேசை நோக்கி நடந்தனர்.
“ஹாய் அண்ணாஸ்……” உற்சாகத்துடன் அழைத்துக் கொண்டே வீணா முன்னில் நடக்க விக்ரம் ஆவலோடு திரும்பினான். அமைதியாய் சோர்வுடன் வந்து கொண்டிருந்த இலக்கியாவின் கண்ணில் சோகம் அப்பியிருந்தது. இந்த சில நாட்களில் சோர்ந்து மெலிந்திருந்தாள். எப்போதும் கலகலவென்று உற்சாகத்துடன் இருப்பவளை சோகமான முகத்துடன் சோர்வாய்க் கண்டதும் வருத்தத்துடன் பார்த்திருந்தான் விக்ரம். நண்பனின் பார்வையில் தெரிந்த மாறுதல்கள் வினோத்துக்கும் புரிய ஆறுதலாய் அவன் கையில் தட்டினான்.
“வாங்க வீணா……… உக்காரு இலக்கியா…..” நாற்காலியை நீக்கிக் கொடுத்தவன் அவர்களுக்கும் காபி ஆர்டர் செய்தான்.
“எப்படி இருக்கே…. இலக்கியா…. ரொம்ப சோர்ந்து போயிட்ட மாதிரி இருக்கு……. அம்மா, பாட்டி எப்படி இருக்காங்க…..” அக்கறையுடன் விசாரித்தான் விக்ரம்.
மனதுக்குள் உறங்கிக் கிடந்த ஆசைகள் மெதுவாய் அவள் அருகாமையில் உணர்ந்து கொள்ளத் தொடங்கின. 
“ம்ம்….. இருக்கோம் விக்ரம்….. நீங்க எப்போ ஊருல இருந்து வந்திங்க……”
“நாங்க வந்து ரெண்டு நாளாச்சு மா…. உன்னைப் பார்க்க வீட்டுக்கு வரலாம்னு நினைச்சோம்… வீணா தான் எங்காவது வெளியே சந்திக்கலாம்…. இலக்கியா வீட்டுலயே அடைஞ்சு கிடக்குறான்னு சொன்னா….. அதான் இங்கே வர சொன்னோம்……” என்றவன் மேலே என்ன பேசுவதென்று தெரியாமல் அமைதியாக இலக்கியாவும் எதுவும் பேசாமல் இருந்தாள். அவர்கள் மௌனமாய் இருப்பதைக் கண்ட வீணா பேசத் தொடங்கினாள்.
“அப்புறம் அண்ணாஸ்….. உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா…. நம்ம இலக்கியாவுக்கு முன்ன முடிவு பண்ணின அதே தேதில கல்யாணம் வச்சுக்க முடிவு பண்ணிட்டாங்க….. உறவுக்காரங்களை மட்டும் அழைச்சு சிம்பிளா பண்ண தீர்மானிச்சிருக்காங்க……” என்றாள் வீணா வரவழைத்துக் கொண்ட உற்சாகத்துடன்.
வினோத் விக்ரமின் முகத்தைப் பார்க்க அவன் முகம் குழம்பியிருந்தது. தந்தை இறந்ததால் இலக்கியாவின் கல்யாணம் நின்று போயிருக்குமே…….. அந்த வருத்தமும் சேர்ந்திருக்கும்… எப்படி ஆறுதலாய் பேசுவது என்று தான் விக்ரம் நினைத்திருந்தான்….. இப்போது அதே நாளில் கல்யாணம் என்றதும் குழம்பினான்.
“எப்படி வீணா…… அங்கிள் இறந்து ஒரு வருஷத்துக்கு எந்த விசேஷமும் பண்ணக் கூடாதே…. பிறகு எப்படி….” என்றான் வினோத்.
“அப்பா இவ கல்யாணத்தை ரொம்ப ஆசையா எதிர்பார்த்திட்டு இருந்தார்…… அவர் முடிவு பண்ணின கல்யாணம் நின்னு போனா அவருக்கு மனசாந்தி கிடைக்காதுன்னு அதே நாள்ல நடத்த தீர்மானம் பண்ணிட்டங்கண்ணா…..” என்றாள் வீணா.
“ஓ…….” என்றான் அவன் யோசனையாக.
“சரி…. அதை விடுங்க விக்ரம்…. நீங்க வெளிநாட்டுல வேலைக்கு டிரை பண்ணிட்டு இருக்கறதா சொன்னிங்களாம்… ஏன்… இங்கே ஏதும் சரியாகலையா…” அக்கறையுடன் கேட்ட இலக்கியாவை அன்போடு பார்த்தான் விக்ரம்.
“ப்ச்… இங்கே இருக்கப் பிடிக்கலை இளா… வெளிநாட்டுல ஜாப் டிரை பண்ணிட்டு இருக்கேன்… கிடைச்சா போயிடலாம்னு பார்க்கறேன்…” என்றான் அவன்.
“ஏன்… இங்கே நல்ல வேலை ஏதும் இல்லியா… நம்ம கம்பெனி எதுலயாவது உங்க ரெண்டு பேருக்கும் பொருத்தமான வேலை தர சொல்லி அத்தான் கிட்டே சொல்லறேன்… எங்களோடவே இருந்திடுங்க விக்ரம்…” என்றவளை நோக்கி சிநேகமாய் சிரித்தான்.
“உன்னை விட்டுத் தொலை தூரம்
செல்ல நினைக்கும் என்னை
அருகிலேயே வைத்துக் கொள்ள
நினைக்கிறாயே பெண்ணே…….
தொலைத்த இதயம் உன்னிடம்
துடிக்கக் கண்டு சும்மா
இருக்குமா நெஞ்சம்……”
மனதுக்குள் வலியுடன் நினைத்துக் கொண்டான்.
“இல்லை இளா…… அது சரியா வராது…. பார்ப்போம்….. கொஞ்ச நாள் போகட்டும்…..” என்றவன்,
“உனக்கு இப்போ இந்தக் கல்யாணத்துல வருத்தம் எதுவும் இல்லியே……” என்றான் தயக்கத்துடன்.
“அவளுக்கு என்ன வருத்தம் விக்கிண்ணா….. காத்திருந்து காத்திருந்து இப்போ தான் அத்தான் கை பிடிக்கப் போறா…. கிடைச்ச சான்ஸை வேண்டாம்னா சொல்லப் போறா….” என சமயம் பார்த்து வீணா வாரவும், அவள் தலையிலேயே தட்டினாள் இலக்கியா.
“ஏய்…. வீணாப் போனவளே…… எப்படா டைம் கிடைக்கும்…. என்னை ஓட்டலாம்னு பார்த்து காத்துட்டு இருந்தியா…..” என்றதும் ஆண்கள் இருவரும் சிரித்தனர். அவள் அப்படிப் பேசியதும் தான விக்ரம் சற்று சமாதானமாய் உணர்ந்தான். அவள் அத்தானைப் பற்றி பேசியதுமே அவள் சந்தோஷமாய் பேசியதும் இந்தக் கல்யாணம் முடிந்து அவளது அத்தானின் அருகாமையில் அவள் சீக்கிரமே நார்மலாகி விடுவாள் என்று அவனுக்கு தோன்றியது.
“ஏய்….. நான் என்ன சும்மாவா சொல்லறேன்…. நீ தான் சரியான அத்தான் பைத்தியமாச்சே…. அதான் சொன்னேன்….” என்றாள் அவள்.
“ஓ…. உனக்கு உன் அத்தானை அவ்ளோ பிடிக்குமா இளா……” என்றான் விக்ரம். அதைக் கேட்டதும் அவள் கண்ணில் ஒரு மலர்ச்சி தோன்றியது.
“ம்ம்….. இந்த உலகத்துல என் அப்பாவுக்குப் பிறகு எனக்கு ரொம்பப் பிடிச்சது என் அத்தான் தான்…… என் அத்தான் எத்தனை அன்பானவர் தெரியுமா…… அவருக்கு என் மேல ரொம்பப் பிரியம்…… இது வரை ஒரு வார்த்தையால கூட என்னை வேதனைப் படுத்தினது இல்லை….. ஹி இஸ் எ ஜெம்…..” என்றவளின் கண்ணில் ஒரு மின்னல் தோன்றி மறைந்தது. அதைக் கேட்டதும் மனதில் சிறு ஏமாற்றம் பரவியதை உணர்ந்தான் விக்ரம்.
அந்த நேரத்தில் காபி ஷாப்பை நண்பனுடன் கடந்த சத்யாவின் கண்கள் உள்ளே நண்பர்களுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்த இலக்கியாவின் மீது விழ, ஒரு நிமிடம் நின்று கவனித்தவன் ஆச்சர்யத்துடன் புருவத்தைத் தூக்கி மெல்லக் கடந்தான்.
“அப்பா இறந்த துக்கத்துல வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடப்பான்னு நினைச்சா இங்கே பசங்களோட உக்கார்ந்து அரட்டை அடிச்சிட்டு இருக்கா….. இவளோட யாரையும் நெருங்க விடாம இருக்கறது தானே நமக்கு நல்லது….. அதும் அந்தப் பையனோட பார்வைல ஏதோ ஒரு ஏக்கம் கலந்த தவிப்பு தெரியுதே…..” யோசனையுடன் நடந்தான். இது எதுவும் தெரியாமல் வீணா இலக்கியாவைக் கிண்டல் பண்ணிக் கொண்டிருந்தாள்.
“அச்சச்சோ… போச்சுடா…. இவ அத்தான் புராணத்தைத் தொடங்கினா நிறுத்த மாட்டாளே…… இன்னைக்கு நம்ம காது பஞ்சர் ஆகப் போகுது….” என்ற தோழியை முறைத்தவள்,
“சரி விக்ரம்….. அவ சொல்லுறது உண்மைதான்….. அத்தானைப் பத்தி பேசத் தொடங்கினா நான் நிறுத்த மாட்டேன்….. நீங்க இனி இங்கே தான் இருப்பிங்களா…. வினோத் வீட்டுக்குப் போயிடுவீங்களா….. நீங்க என்ன பண்ணப் போறீங்க வினோ…. உங்க நண்பரோடவே வெளிநாட்டு வேலைக்கு டிரை பண்ணறீங்களா….” என்றாள்.
“நான் எப்பவும் அவனோட தான் இருப்பேன் இளா… அது இங்கயோ… இல்லை, வேற எங்கயோ ஆனாலும்…. அவனை விட்டுப் போக மாட்டேன்….” என்றவனைப் பெருமையுடன் பார்த்தாள்.
“உங்க நட்பைப் பார்த்தா எனக்கு ரொம்பப் பெருமையா இருக்கு வினோ…. யூ ஆர் சோ கிரேட்…..” என்றாள் மனதார.
“ஹஹா…. எத்தனயோ வருஷ நட்பு மா….. அப்படில்லாம் விட்டுட்டுப் போயிட மாட்டேன்……” என்று விக்ரமை தோளோடு அணைத்துக் கொண்டவனை மனம் நெகிழப் பார்த்தான் விக்ரம். இலக்கியாவும் வீணாவும் காபியை குடித்துக் கொண்டே அவர்கள் இருவரையும் சந்தோஷத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.
“சரி பிரண்ட்ஸ்….. எதுவா இருந்தாலும் என் கல்யாணத்துக்கு நீங்க கண்டிப்பா வரணும்….. நான் கூப்பிடற பிரண்ட்ஸ் நீங்க மட்டும் தான்…… சரி நாங்க கிளம்பறோம்…. நீங்க……” என்றாள்.
“நாங்க கொஞ்ச நேரம் கழிச்சு கிளம்பறோம்…… நீங்க பத்திரமா போங்க….” என்றான் விக்ரம். இனி இவளை எப்போது காணப் போகிறோம்…. என்று மனதுக்குள் தோன்ற தன்னையே கடிந்து கொண்டு அவளுக்கு விடை கொடுத்தான். வீணாவும் சொல்லிக் கொண்டு விடை பெற்றாள்.
“டேய் விக்ரம்…. இலக்கியா ரொம்ப சோர்ந்து போயிட்டால்ல…. பாவம் அப்பாவோட இழப்பை யாரால தான் தாங்கிக்க முடியும்….. கல்யாணம் முடிஞ்சு அவ அத்தானோட அன்பும் ஆதரவும் தான் அவளை பழைய போல மாத்தணும்…..” என்றான் விக்ரம்.
“ம்ம்…. அதெல்லாம் சரி….. உன்னால எப்படிடா இப்படி இருக்க முடியுது…… மனசுக்குப் பிடிச்ச பொண்ணு வேறோருத்தரைக் கல்யாணம் பண்ணிக்கப் போறா…. அவனைப் பத்தி புகழ்ந்து பேசறா…… இதெல்லாம் கேட்டும் உன்னால எப்படி சாதாரணமா பீல் பண்ணாம இருக்க முடியுது…..” என்றான் வினோத் ஆச்சர்யமாக.
“ம்ம்…… எனக்கு அவ மேல வந்த அன்பு என்னோடவே போகட்டும் டா…. அதை நினைச்சு நீ பீல் பண்ணாதே….. அவ அத்தானைப் பத்தி பேசும்போது முகத்துல எவ்ளோ சந்தோஷம் பார்த்தியா….. அந்த அன்பு ஜெயிக்கட்டும் டா…. எனக்கு அது போதும்…. அவ சந்தோஷமா இருந்தா அதான் எனக்கு சந்தோஷம்….” என்றவன் அதைக் கேட்டுக் கொண்டு உள்ளே வந்த வீணாவைக் கண்டதும் அதிர்ந்தான்.
“வீ…… வீணா….. அது வந்து….. இளா எங்கேம்மா…..” என்று தயங்கியவனைக் கண்டவள், “அவ கீழே நிக்கறா…. அண்ணா……. நீங்க இளாவை விரும்பினீங்களா……” என்றாள் அதிர்ச்சியுடன்.
“ம்ம்… அதெல்லாம் முடிஞ்சு போன கதை மா… எனக்கு அவ மேல ஒரு விருப்பம் இருந்துச்சு…… எப்போ அவ அத்தானோட கல்யாணம் முடிவாச்சோ அப்பவே எல்லாம் துடைச்சு போட்டுட்டேன்…. இது எதையும் இளாகிட்டே சொல்லிடாதே….” என்றான் தயக்கத்துடன்.
“ம்ம்ம்…. சரிண்ணா….. நீங்க வருத்தப் படாதிங்க…. சேலைக் கவரை இங்க வச்சிட்டுப் போயிட்டேன்….. அதை எடுக்கத்தான் வந்தேன்….” என்றவள், கீழிருந்த கவரை எடுத்துக் கொண்டு நடந்தாள். அவள் மனதில் ஒரு குழப்ப ரேகை நெளிந்து கொண்டிருந்தது. 
“நல்லவேளை…. இளாவிடம் இவர் விருப்பத்தைக் கூறாமல் இருந்தார்…. இல்லாவிட்டால் அவளுக்கு அத்தான் மேல் காதல் மூத்துக் கிடந்ததில் இவர் நட்பைக் கூட வேண்டாமென்று ஒதுக்கி இருப்பாளே……” யோசித்துக் கொண்டே கீழே காத்திருந்த இலக்கியாவை நோக்கி நடந்தாள்.
என்னடா வினோ…. வீணா கேட்டுட்டாளே…. இலக்கியா கிட்டே சொல்லிடுவாளோ…. என்றான் விக்ரம். “அதெல்லாம் சொல்ல மாட்டா டா…. எல்லாரையும் புரிஞ்சு நடந்துக்கிற பொண்ணு…… அதை யோசிச்சு நீ பீல் பண்ணாதே…..” என்றான். அப்போது எதிரில் இருந்த ஒரு பையனின் மீது விக்ரமின் பார்வை படிய அவன் கண்கள் கோபத்தில் சிவந்தது.
இரண்டு சின்னப் பெண்கள் பள்ளி சீருடையில் இருக்க உடனிருந்த இரு பையன்களும் கல்லூரி மாணவர்களாய் இருக்க வேண்டும்….. அவர்களின் பேச்சும் பார்வையும் சரியில்லாமல் இருக்கவே கவனித்தான். பெண்கள் இருவரும் எதோ கிசுகிசுப்பாய் பேசிக் கொண்டிருக்க மாணவர்கள் தங்களுக்குள் கண்சாடை காட்டிக் கொண்டனர். ஒருத்தன் எழுவது போல மேசையை சற்று இளக்கிவிட மேசை மீதிருந்த காபி ஒரு பெண்ணின் உடை மீது தெறித்தது. சாரி சொல்லி அவர்களை வாஷ் ரூமிற்கு அனுப்பி வைத்தவன் அங்கிருந்த இரண்டு காபிக் கோப்பையில் எதோ மாத்திரையைப் போட்டு கலக்கினான். படிக்க பள்ளி சென்ற குழந்தைகளுக்காய் பெற்றவர்கள் வீட்டில் காத்திருக்க தங்கள் சுதந்திரம் எதுவென்று புரியாமல் தவறாக உபயோகிக்கும் அவர்கள் மீது அவனுக்குக் கோபமாய் வந்தது. ஆத்திரத்துடன் எழுந்தவனின் பார்வை சென்ற திசையில் பார்த்த வினோத் அதிர்ந்தான்.
விண்ணில் பறக்க சிறகுகள்
தேடும் பெண்ணே…… அதற்குத்
தகுதியான நோக்கம் உன்னிடமுள்ளதா……
பெண்மை நெருப்பு போன்றது…..
அதனைப் புரிந்து கொள்ளாமல்
வெளியேறினால் அதுவே உன்னை எரித்துவிடும்….
எதில் சுதந்திரம் தேடுகிறாய் நீ……
ஆணைப் போல எங்கும் எந்நேரமும்
சுற்றித் திரிந்து அலைந்து நடக்கவா……
அடக்கம் அமைதி பண்பு பரிவு பொறுமை
இவற்றை துறப்பதல்ல சுதந்திரம்……
இதை கம்பீரமாகவும் மிடுக்குடனும்
செய்து தீர்ப்பதே சுதந்திரம்…..
வாழ வைக்கவே சுதந்திரம்….
உனை வீழ வைக்க அல்ல……

Advertisement