Advertisement

இலக்கணம் – 11
இளமாறனின் புகைப்படத்திற்கு மாலை போட்டு, முன்னில் அமைதியாய் தீபம் ஒன்று எரிந்து கொண்டிருக்க, ஊதுபத்தியின் புகையில் அந்த வீட்டின் சந்தோஷமும் புதைந்து போயிருந்தது. ஐந்தாவது நாள் காரியமாய் இளமாறனின் அஸ்தியைக் கரைத்துவிட்டு வந்திருந்தனர்.
கன்னத்தில் கண்ணீரின் அடையாளம். கண்கள் அழுதழுது வீங்கி இருக்க சோகமே வடிவாய் அமர்ந்திருந்தாள் இலக்கியா. எந்த நேரமும் அழுது புலம்பி கணவனின் நினைவில் மயங்கி சரியும் அன்னையின் வேதனையைத் துடைக்க முடியாமல் சோர்ந்திருந்தாள். பாட்டியின் கேள்விகளுக்கும் புலம்பல்களுக்கும் உடன் சேர்ந்து அழுவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை.
சத்யா தான் அவ்வப்போது அவர்களை மிரட்டி நேரத்துக்கு எதையாவது உண்ண வைத்தான். மாமன் இறந்த வேதனையில் துவண்டு போகாமல் எல்லாக் காரியத்தையும் அவனே முன்னின்று மகனாய் பார்த்துக் கொண்டதில் உறவினர்களுக்கும் அவன் மீது நல்ல அபிப்ராயம் தோன்றியது.
வீடே அமைதியாய் இருக்க சத்யா மட்டும் உறவினர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான். லலிதாவும் பாட்டியும் உறவுப் பெண்களுடன் ஹாலில் அமர்ந்திருந்தனர். இலக்கியா தந்தையின் புகைப்படத்தைப் பார்த்துக் கொண்டே கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தாள்.
அவளது பெரியம்மா ஒருவர் அவளிடம் வந்து அமர்ந்தார்.
“இப்படியே அழுதுட்டு இருந்தா எப்படி இலக்கியா…. நீதானே உன் அம்மாவுக்கும் பாட்டிக்கும் ஆறுதலா இருக்கணும்…… எழுந்திரும்மா…. அழுதுட்டே இருந்தா நடந்த எதுவும் மாறிடப் போகுதா என்ன……” என்றார்.
அதைக் கேட்டதும் மீண்டும் அவள் கண்ணில் கண்ணீர் உற்பத்தியாகத் தொடங்கியது.
“இங்க பாருடாம்மா….. சும்மா அழுது அழுது உடம்பைக் கெடுத்துக்காதே,….. நீ கொஞ்சம் தெம்பா இருந்தா தான் பாட்டியையும் அம்மாவையும் பார்த்துக்க முடியும்….. அவங்க உன்னைப் பார்த்து இன்னும் நொறுங்கிப் போயிடக் கூடாதுடா…. அவங்களுக்காகவாவது கொஞ்சம் தைரியமா இரு……” அக்கறையாய் கூறினார்.
அதற்குள் அத்தை உறவு முறையில் இருந்த ஒரு பெண்மணியும் அவருடன் சேர்ந்து அனுதாபத்துடன் பேசத் தொடங்க அமைதியாய் அமர்ந்திருந்தாள் இலக்கியா.
“ஹூம்….. கல்யாணக் களையோட மங்களகரமா இருக்க வேண்டிய வீடு….. யாரு கண்ணு பட்டுச்சோ இப்படி ஆகிப் போச்சு….. அண்ணனுக்கு பொண்ணு கல்யாணத்தை எல்லாரும் மெச்சற மாதிரி அமோகமா நடத்திப் பார்க்கனும்னு ரொம்ப ஆசையா இருந்தார்…… என்ன பண்ணுறது….. விதி யாரை விட்டது….. எது நடக்கணுமோ அதானே நடக்கும்…..” என்றார் அங்கலாய்த்துக் கொண்டே.
இந்த ஐந்து நாட்களும் தந்தையின் நினைவு மட்டுமே மனதை ஆக்கிரமித்திருக்க கல்யாணத்தைப் பற்றிய நினைவுகளை தற்காலிகமாய் மறந்திருந்தவள் அவர் கூறியதும் குழம்பினாள்.
“என் கல்யாணத்தைப் பார்க்க தந்தையே இல்லை….. இப்போது இந்தப் பேச்சு மிகவும் முக்கியமா……” அவள் மனது யோசித்துக் கொண்டிருக்க அவளது பெரியப்பா அவர்கள் பேசுவதைக் கேட்டு அங்கு வந்தார்.
“கல்யாணத்துக்கான வேலை எல்லாம் தொடங்கின பின்னால இப்படி ஆகிப் போச்சே… இனி பத்திரிகை கொடுக்க வேண்டியது மட்டும் தான் பாக்கி….. இளமாறன் மக கல்யாணத்தை சீக்கிரம் நடத்திப் பார்க்கனும்னு ரொம்ப ஆசையா இருந்தான்…. அவன் ஆசை இப்படி நிராசையா போயிருச்சே…..” என்றார் அவர். “ஆஹா…… பெருசு நாம சொன்னது போலவே சந்தர்ப்பம் பார்த்து கல்யாணப் பேச்சை கொழுத்திப் போட்டிருச்சே…. வெரி குட்…..” மனதுக்குள் அவரைப் பாராட்டிக் கொண்டான் சத்யா.
அதைக் கேட்டதும் விருட்டென்று நிமிர்ந்த பர்வதம், “என் பையன் ஆசை நடக்கணும்…. அப்பத்தான் அவன் ஆத்மா சாந்தியடையும்….. அவன் ஆசைப்பட்ட மாதிரி அதே தேதியில் அவன் மக கல்யாணம் நடக்கட்டும்….” என்றார்.
அதைக் கேட்டதும் லலிதாவும், இலக்கியாவும் அதிர்ச்சியுடன் அவரைப் பார்த்தனர்.
                       
“எ…. என்ன சொல்லறிங்க அத்தை….. உங்க மகன் நம்மை விட்டுப் போன ஈரம் கூடக் காயலை….. அதுக்குள்ளே பொண்ணுக்கு கல்யாணமா…… இது நம்ம வழக்கம் இல்லையே……” என்றார் லலிதா.
“இது என் மகன் ஆசையா முடிவு பண்ணின கல்யாணம்…. அவன் ரொம்ப எதிர்பார்த்திருந்த கல்யாணம்….. இது நின்னு போனா அவன் ஆன்மா ரொம்ப வேதனைப்படும்….. அதனால இது நடந்தே ஆகணும்…. அதும் இல்லாம துக்கம் நடந்த வீட்ல ஒரு நல்ல காரியம் நடக்கறதும் நல்லது தான்……. ஊரு வழக்கத்தைப் பார்த்திட்டு இருந்தா என் மகன் ஆத்மா சாந்தியடைய வேண்டாமா……. அவன் ஆசையை நாம நடத்துவோம்….. இந்தக் கல்யாணம் அதே நாள்ல நடக்கட்டும்…..” என்றார் அவர் முடிவாக.
“ஆமா…… அம்மா சொல்லுறதும் சரிதான்…… ஆசையா தம்பி முடிவு பண்ணின கல்யாணத்தை அதே நாள்ல அவன் விருப்பப்படி நடத்திட வேண்டியது தான்…. லலிதா, யோசிச்சுப் பாரும்மா…. உனக்கும் இதான் சரின்னு புரியும்….” என்றவர், “நீங்க என்ன நினைக்கறிங்க…..” என்று மற்ற உறவினர்களிடமும் கேட்க, அவர்களும் ஆமோதித்து தலையாட்டினர்.
சத்யா அமைதியாய் இருக்க அவனிடம் வந்த பாட்டி, “நீ என்னடா தம்பி  நினைக்கறே…. உன் மாமன் ஆசைப்பட்ட போல இதை நடத்திடலாம் தானே….. உனக்கு ஒண்ணும் மறுப்பு இல்லையே……” என்றார்.
அமைதியாய் அழுது கொண்டிருந்த இலக்கியாவைப் பார்த்த சத்யா, “பாட்டி….. மாமாவை இழந்த துக்கத்தில் இருந்தே நாம இன்னும் வெளியே வரலை…… இந்த மனநிலைல இலக்கியா எப்படி கல்யாணத்துக்கு தயாராவா… அவளோட விருப்பத்தையும் பார்க்கணும்ல…” என்றவனைப் பெருமையுடன் பார்த்தார் அவன் பாட்டி.
“ம்ம்… இந்த நிலமைலயும் உன் மாமன் மகளைப் பத்தி யோசிக்கறியே….. நீயே அவளுக்கு பெரிய ஆறுதல் தானப்பா……. உன் விருப்பத்தை சொல்லு…. அவகிட்டே நான் பேசறேன்….” என்றார் நெகிழ்ச்சியுடன்.
“என் மாமாவோட விருப்பத்தை நிறைவேத்தி வைக்கிறதை விட எனக்குப் பெருசா என்ன விருப்பம் இருந்திடப் போகுது பாட்டி….. பெரியவங்க எது முடிவு பண்ணினாலும் எனக்கு ஓகே தான்…..” என்றான் கண்கலங்க.
அவன் தோளில் தட்டிக் கொடுத்த பெரியப்பா, “நல்ல முடிவுதான் சத்யா….. இனி தம்பியோட தொழிலோட குடும்பத்தையும் பார்த்துக்க வேண்டிய பொறுப்பு உனக்கு இருக்கு… அதை உரிமையோட செய்யலாமே….. இலக்கியா…. நீ என்னம்மா நினைக்கறே… உனக்கு இப்பவே கல்யாணம் வச்சுக்கறதுக்கு சம்மதம் தானே…” என்றதும் அவள் கண்கள் மீண்டும் அருவியாய் பொழியத் தொடங்கின.
அப்பாவின் புகைப்படத்தைப் பார்த்து அழத் தொடங்கியவளை கண்டு மற்ற பெண்களின் கண்களும் கலங்கின. மகளின் அருகே வந்த லலிதா அவளை அணைத்துக் கொண்டு கண்ணீர் விட்டார்.
“இளாம்மா…… உன்னோட கல்யாணம் அப்பாவோட பெரிய கனவுடா… அவர் எத்தனை சந்தோஷத்தோட ஆசையா கல்யாண வேலை எல்லாம் செய்துட்டு இருந்தார் தெரியுமா… அப்பாவோட ஆசைக்காக அதே நாள்ல கல்யாணம் நடக்கட்டும் டா… அப்பாவோட ஆசிர்வாதம் உனக்கு எப்பவும் கூட இருக்கும்…” ஆறுதல் கூறினார் லலிதா.
தன் நெஞ்சில் சாய்ந்து அழுது கொண்டிருந்தவளின் முகத்தை நிமிர்த்தியவர், “என்னடா… உனக்கும் ஓகே தானே…” என்றார். அவள் கண்ணீருடன் சம்மதமாய் தலையசைக்க சத்யாவின் இதழில் ஒரு வேட்டைக்காரனின் சிரிப்பு மின்னி மறைந்தது.
அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று சொந்தங்கள் ஆலோசித்து முடிவு செய்ய இலக்கியாவும் லலிதாவும் பார்வையாளராய் அமர்ந்திருந்தனர்.
பதினாறாம் நாள் காரியத்துக்கு சொந்தங்களை எல்லாம் அழைத்து அப்படியே கல்யாண விஷயத்தையும் சொல்லிவிட முடிவு செய்தனர். மண்டபத்திற்கு முன்னமே பணம் கொடுத்திருந்ததால் அப்படியே இருக்கட்டும் என்று விட்டனர். சொந்தங்களை மட்டும் அழைத்து சிம்பிளாய் கல்யாணத்தை முடித்துவிடலாம்… என்று முடிவு செய்தனர்.
பெரியவர்கள் கிளம்பியதும் இலக்கியாவிடம் பேசுவதற்காய் அவளது அறைக்கு வந்தான் சத்யா. ஜன்னல் வழியாய் எங்கோ வெறித்துக் கொண்டு தந்தையின் நினைவில் அமர்ந்திருந்தவள், சத்யா வருவதைக் கண்டதும் திரும்பினாள். தந்தை இறந்தது முதல் அவனை தனிமையில் காணாதவள் இன்று கண்டதும் தாயைக் கண்ட குழந்தையாய் தேம்பத் தொடங்கினாள்.
“அத்தான்……” விசும்பத் தொடங்கியவளின் அருகில் வந்தவன், “அழாதே இளா…. மாமா மாதிரி நல்ல மனுஷனுக்கு இந்த மாதிரி வந்திருக்கக் கூடாது தான்….. என்ன பண்ணுறது…. இந்தக் கடவுளுக்குத்தான் கண்ணில்லையே…… நடந்தது நடந்திருச்சு…. நீ இதையே நினைச்சு அழுதிட்டு இருக்காம அம்மா பாட்டிக்கு கொஞ்சம் ஆறுதலா இரு……”
“எப்படி அத்தான்… அப்பா இல்லாம அம்மாவை எப்படி சமாதானப் படுத்துவேன்… எப்பவும் புன்னகை முகமா மங்களகரமா இருக்குற அம்மா முகத்தை பொட்டில்லாம எப்படிப் பார்ப்பேன்… என்னால முடியலை அத்தான்…” என்று அழத் தொடங்கியவள் அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.
“ச்சே… கருவாச்சி… இல்லன்னாலே பார்க்குற மாதிரி இருக்க மாட்டா… இப்போ இப்படி அழுதழுது மூஞ்சியை இன்னும் கேவலமாப் பண்ணி வச்சிருக்காளே…” என்று நினைத்துக் கொண்டே முகத்தை சுளித்தவன் அவள் காணாமல் திரும்பிக் கொண்டான்.
“சரி… அழுதது போதும்டா… உடம்புக்கு முடியாமப் போயிடப் போகுது… இந்தப் பெரியவங்க வேற இப்பவே கல்யாணத்தை வைக்க முடிவு பண்ணிட்டாங்க… நீ இப்படியே மாமாவை நினைச்சு அழுதுட்டு இருந்தா எப்படி சரியா வரும்… உனக்கு இதில் சம்மதமா… இல்ல, கொஞ்ச நாள் தள்ளி வச்சுக்கலாமா…” என்றான் அந்த பசுத்தோல் போர்த்திய புலி.
“இல்ல அத்தான்… அப்பா ஆசைப்பட்ட மாதிரி அதே தேதில நம்ம கல்யாணம் நடக்கட்டும்…” என்றாள் அவள்.
“ம்ம்… அப்ப நீயும் அதுக்குத் தயாராகணும்… எப்பவும் இப்படி அழுதிட்டு இருக்கக் கூடாது சரியா…” என்று அவள் கன்னத்தில் தட்டவும், அவள் சிறு நாணத்தோடு தலையாட்டினாள்.
“ம்ம்… ஓகே டார்லிங்… நீ ரெஸ்ட் எடு… எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு… கிளம்பறேன்…” என்றவன் விடை பெற்றான்.
“ச்சே…. அந்தக் கறுப்பு கன்னத்தைத் தொட்ட கையை முதல்ல டெட்டால் போட்டுதான் கழுகணும்…. சரியான அழுமூஞ்சி….. ஆளையும் அவளையும் பாரு…… சொத்துக்காக இவளை எல்லாம் சகிச்சுக்க வேண்டி இருக்கு…..” என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டே நகர்ந்தான் சத்யா.
அதற்குப் பிறகு இலக்கியா அழுவதைக் குறைத்துக் கொண்டாலும் தந்தையின் நினைவுகளில் இருந்து இன்னும் மீண்டு வரவில்லை. பல கனவுகளிலும் கற்பனைகளிலும் சந்தோஷமாய் கழிந்திருக்க வேண்டிய தருணங்கள். கணவனின் ஆசைக்காகவும், மகளுக்கு நடக்கப் போகும் நல்ல விஷயத்திற்காகவும் தன் சோகத்தை ஒதுக்கி வைத்து நடமாடத் தொடங்கினார் லலிதா.
பழைய கலகலப்பு எதுவும் இல்லாமல் அறைக்குள்ளேயே ஒதுங்கிக் கொண்டு தந்தையின் நினைவில் கலங்கும் மகளை தேற்றுவதற்காய் தன்னை திடப்படுத்திக் கொண்டார். மகள் எப்போதும் சோகமாய் அமர்ந்திருப்பதைக் கண்ட லலிதா வீணாவிடம் அடிக்கடி வீட்டுக்கு வந்து இலக்கியாவுடன் பேசிக் கொண்டிருக்குமாறு கூறினார். அன்று வீணா இலக்கியாவைக் காண வீட்டுக்கு வந்திருந்தாள்.
எப்போதும் உற்சாகத்தோடு தன்னை கலாய்த்துக் கொண்டு முகத்தில் சிரிப்பு மட்டுமே நிரந்தரமாய் குடியிருக்கும் தன் தோழியின் முகத்தில் சிரிப்பின் சுவடு கூட இல்லாமல் தொலைந்து போயிருந்தது. எல்லாப் பெண் பிள்ளைகளையும் போல இலக்கியாவுக்கும் அம்மாவைவிட அப்பாவோடு தான் அதிகப் பிரியம்.
மகளுக்கு எது சந்தோஷமென்று அவளை விட அதிகம் யோசிக்கும் தந்தை…. எதிலும் சிறப்பானதை மட்டுமே தனக்குத் தர வேண்டுமென்று நினைக்கும் தந்தை…… ஒரே மகளாக இருந்தாலும் செல்லம் கொடுத்து கெடுத்து வைக்காமல், நல்லது கெட்டது சொல்லிப் பழக்கித் தந்த தந்தை….. அன்பை மட்டுமே அவளிடம் கொட்டிக் கொடுத்த தந்தை… மனைவியிடம் கணவன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு உதாரணமாய் அன்னையின் உணர்வுகளை மதித்து நடந்த தந்தை… கண் முன்னே அவள் கண்ட ரியல் ஹீரோ அவளது தந்தை தான்… அவர் இப்போது தங்களோடு இல்லை என்பதை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. சோர்ந்து மெலிந்து தன் முன்னில் நின்று கொண்டிருந்த இலக்கியாவைக் காண வீணாவுக்கு வருத்தமாக இருந்தது.
“என்னடி… இப்படி ரூமுக்குள்ளேயே அடைஞ்சு கிடக்கறே… நீ இப்படியே இருந்தா அம்மாவும் பாட்டியும் எத்தனை வருத்தப் பாடுவாங்கன்னு யோசிக்க மாட்டியா… அதுவும் கல்யாணம் வேற அதே நாள்ல நடத்த முடிவு பண்ணிட்டாங்களாம்… எல்லாம் அம்மா சொன்னாங்க… நான் போன் பண்ணினா கூட நீ எடுத்துப் பேச மாட்டேங்கறே… அதான் அம்மாகிட்டே பேசினேன்… இப்படியே இருந்தா எப்படிடி… சரி… இதென்ன வேஷம்…. மொதல்ல குளிச்சிட்டு வா…” என்றாள் வீணா.
“ப்ச்… போடி… எனக்கு மனசு சரியில்லை… அப்புறம் குளிக்கறேன்…” என்று அமர்ந்திருந்தவளை முறைத்தாள் வீணா.
“ஏய்… நீ இப்போ குளிச்சு கிளம்பப் போறியா இல்லியா…” அதட்டினாள். குழப்பமாய் பார்த்த இலக்கியா, “எங்கே கிளம்பனும்… நான் எங்கயும் வரலை…” என்றாள்.
“அம்மாதான் உன்னை கூட்டிட்டு போக சொன்னாங்க… உன் சேலைக்கு பிளவுஸ் எல்லாம் தைக்கக் கொடுக்கணுமாம்… போயிட்டு வர சொன்னாங்க… ஓவரா பண்ணாம இப்போ கிளம்பப் போறியா இல்லியா…” என்று சிடுசிடுத்த தோழியை பரிதாபமாய் பார்த்தாள் இலக்கியா.
“ஏய்…. எதுக்குடி என்னை இப்படி வற்புறுத்தறே… எனக்கு எங்கயும் வர்றதுக்கே பிடிக்கலை…” என்றவளை முறைத்தவள்,
“விக்ரம் அண்ணாவும், வினோத் அண்ணாவும் உன்னோட பேசணும்னு சொன்னாங்க… அவங்களோட பேசினா உனக்கும் கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கும்… வாடி, மாலுக்குப் போயிட்டு உன் பிளவுஸ் அளவும் கொடுத்திட்டு வரலாம்…” என்று பிடிவாதம் பிடித்தவளை முறைத்தவள்,
“வீணாப் போனவ… அடங்க மாட்டா… பிடிச்ச பிடிவாதம் தான்…” என்று கூறவும் அவளைக் கட்டிக் கொண்டு கன்னத்தில் முத்தமிட்டாள் வீணா.
“அய்யே… அழுதழுது கன்னமெல்லாம் உப்பு பாக்டரி ஆயிருச்சு போலருக்கு… உப்புக் கரிக்குது… எத்தனை நாளாச்சு… நீ என்னை இப்படிக் கொஞ்சி… சரி… போயி குளிச்சிட்டு வா… கிளம்பலாம்…” என்று அவசரப் படுத்தினாள். அவள் தலையாட்டிவிட்டு குளிக்க சென்றதும் லலிதாவிடம் வந்து பேசிக் கொண்டிருந்தாள். பக்கத்தில் எங்கோ சென்றிருந்த பாட்டி அப்போது திரும்பி வரவும் வீணாவைக் கண்டு முகம் மலர்ந்தார்.
“வாடிம்மா… உன் பிரண்டைப் பார்த்தியா… எப்பப் பார்த்தாலும் அழுதுகிட்டு அந்த ரூமுக்குள்ளேயே கிடக்குறா… நாங்க என்ன சமாதானம் சொன்னாலும் நீங்கல்லாம் அப்பப்போ வந்து பார்த்துகிட்டா தானே அவளுக்கும் ஆறுதலா இருக்கும்…” என்றார் பர்வதம். அப்போது பேத்தி குளித்து புறப்பட்டு வரவும் திகைப்புடன் பார்த்தவர், “அட… என் கருவாச்சி எங்கே கிளம்பிட்டா…” என்றார் ஆச்சர்யத்துடன். தான் சொன்னதற்கு அவள் ஏதாவது திருப்பி சொல்லுவாளோ என்று எதிர்பார்த்து தான் கருவாச்சி என்றார்.
அவளோ, “நான் வீணாவோட வெளியே போயிட்டு வரேன் பாட்டி…” என்று சாதாரணமாய் சொல்லிவிட்டு, “கிளம்பலாம்டி…” என்றாள் தோழியிடம்.
“ம்ம்… உன்னோட பிளவுஸ் எல்லாம் அம்மா எடுத்து வச்சுட்டாங்க… கிளம்பலாம்…” என்றதும் அன்னையிடமும் சொல்லிவிட்டுக் கிளம்பினர்.
கருவில் சுமந்தது அன்னையென்றால்
எனைத் தோளில் சுமந்தது தந்தையன்றோ…..
திட்டி வளர்த்தது அன்னையென்றால்
எனைத் தட்டி வளர்த்தது தந்தையன்றோ……
நான் கேட்டதெல்லாம் கொடுத்திடத்தான்
கடவுள் அப்பாவை அனுப்பினாரோ….
என் விரல் பிடித்து நடக்க வைத்தாய்…..
கால் நோகாமல் தூக்கிக் கொண்டாய்…..
என் முகம் சிறிது சோர்ந்தாலும்
இதயத்தில் வலித்திட்டாய்……..
             
எனைச் சுற்றி
எத்தனை பேர் இருந்தாலும்
என் அப்பாவைப் போல் யாரிருக்க முடியும்….
என் வாழ்க்கையில் நான் கண்ட
முதல் நாயகன் என் தந்தை……

Advertisement