Advertisement

இலக்கணம் – 10
மகளின் கல்யாண விஷயத்தில் மனம் நிறைந்திருக்க எல்லாவற்றையும் தானே பார்த்து பார்த்து செய்து கொண்டிருந்தார் இளமாறன். லலிதாவும் கூட கணவனைக் கிண்டல் செய்தார்.
“மகளுக்கு கல்யாணம்னு வந்தா எல்லா அப்பாக்களுக்கும் பத்து வயசு கூடின போல முதுமையும் கவலையும் வந்து ஒட்டிக் கொள்ளும்…. உங்களுக்கு என்ன பத்து வயசு குறைஞ்சாப் போல சந்தோஷமா எல்லாத்தையும் பண்ணிட்டு இருக்கீங்க…..” என்று கேட்டே விட்டார்.
“அவங்களுக்கு எல்லாம் பணக் கவலையும், மகள் நம்மை விட்டு வேற வீட்டுக்குப் போறாளேங்கிற மனக் கவலையுமா இருக்கும்…. அதான் முதுமை வந்து ஒட்டிக்குது….. எனக்கு அப்படி இல்லையே…. கடவுள் புண்ணியத்துல நமக்கு பணத்துக்கும் பிரச்சனை இல்லை….. நம்ம பொண்ணு கல்யாணம் முடிஞ்சும் நம்மளோடவே இருக்கப் போறா…. அப்புறம் எனக்கு சந்தோஷத்துல வயசு குறையத்தானே செய்யும்….” என்று கேட்டவரைக் கண்டு சிரிக்கவும் செய்தார். வீட்டில் நடந்ததை நினைத்து உதட்டில் புன்னகை மலர சந்தோஷத்துடன் குவாரியை நோக்கி காரை ஓட்டிக் கொண்டிருந்தார் இளமாறன்.
“இன்னைக்கு ஞாயித்துக் கிழமையா இருந்தும் கணக்கு வழக்கு பார்க்கணும்னு சொல்லிட்டு மாப்பிள்ளை குவாரிக்கு வந்துட்டாரே….. கொஞ்சம் கூட அலுப்பே இல்லாம எப்படி தான் எல்லா வேலையும் இழுத்துப் போட்டு செய்யறாரோ….. எல்லாருக்கும் லீவா இருந்தாலும் இவர் மட்டும் லீவு எடுத்துக்கறதே இல்லை….. எப்பவும் வேலை வேலைதான்….. இளாவுக்கு இவரை விட நல்ல மாப்பிள்ளை எங்கே தேடினாலும் கிடைக்காது…… அவளுக்கும் அத்தான் மேல எவ்ளோ பிரியம்…..” யோசித்தவரின் மனம் நெகிழ்ந்தது.
“கல்யாணம் முடிஞ்சு கொஞ்ச நாள் இதை எல்லாம் மறந்துட்டு ரெண்டு பேரையும் ஜாலியா எங்காவது வெளிநாட்டுக்கு போயிட்டு வர சொல்லி அனுப்பி வைக்கணும்…. பாவம்…. சின்ன வயசுல இருந்து எந்த சுகத்தையும் அனுபவிக்கவே இல்லை… இனியாவது சந்தோஷமா இருக்கட்டும்….. எல்லாப் பொறுப்பையும் இவரே தலைல தாங்கிட்டு இருந்தா எப்போதான் வாழ்க்கையை அனுபவிக்கறது….. ரெண்டு பேருக்கும் கல்யாணம் முடிஞ்ச கையோட ஹனிமூனுக்கு வெளிநாட்டுக்கு அனுப்ப ஏற்பாடு பண்ணனும்…..”
மனம் அதன் பாட்டில் யோசித்துக் கொண்டிருக்க, கைகள் அதன் பாட்டில் பழகிய பாதையில் வண்டியை செலுத்திக் கொண்டிருந்தன. குவாரிக்கு முன்னில் லோடு வண்டிகள் காலியாய் நிறுத்தப் பட்டிருக்க காரை சற்றுத் தள்ளி இருந்த மரத்தின் நிழலில் நிறுத்திக் கொண்டார். மதிய நேரமாதலால் வெயிலின் உக்கிரத்துக்கு பயந்து அந்தப் பிரதேசமே யாருமின்றி வெறிச்சோடிக் கிடந்தது.
அன்று விடுமுறையாதலால் பணியாளர்களும் இல்லை…. செக்யூரிட்டியும் உடல்நிலை சரியில்லாத குழந்தையைப் பார்த்துவிட்டு இரவுக்குள் வந்து விடுவதாகக் கூறி சென்றிருந்தான். உச்சியில் உக்கிரமாய் அனலைத் துப்பிக் கொண்டிருந்த சூரியனின் வெளிச்சத்தில் கண்கள் கூச கல்யாணப் பத்திரிகை வைத்திருந்த சிறிய பாகினால் தலைக்கு மறைத்துக் கொண்டு குவாரியை நோக்கி நடந்தார் இளமாறன்.
கீழே பணியாளர்கள் தங்குவதற்காய் ஒரு பெரிய விசாலமான அறை இருக்க மேலே சின்னதாய் இவர்கள் ரெஸ்ட் எடுத்துக் கொள்ளவென ஒரு அறை இருந்தது. கீழே வேலை இல்லாத நேரத்தில் இளமாறனும், சத்யாவும் அந்த அறையில் சென்று ஓய்வெடுத்துக் கொள்வார்கள்.
கீழே யாருமின்றி வெறிச்சோடிக் கிடக்க மேலே திறந்திருந்த ஜன்னல் சத்யா அங்கே இருப்பதை உணர்த்தியது. வெயிலில் சிறிது நடப்பதற்குள்ளேயே சோர்ந்து போனவர் தொண்டை உலர மெதுவாய் மாடிப்படி ஏறினார். அறைக்குள் சத்யா யாரிடமோ பேசிக் கொண்டிருக்கும் சத்தம் திறந்திருந்த ஜன்னல் வழியாய் வெளியே கேட்க அதில் கருவாச்சி…. என்ற பெயர் அடிபடவும், சட்டென்று திகைத்தவர் அப்படியே நின்றார்.
“சத்யா யாரைக் கருவாச்சி…. என்று சொல்லுகிறான்….. இலக்கியாவை அப்படி சொல்ல மாட்டானே….” என யோசித்துக் கொண்டே அறைக்கு வெளியே நின்று அவர்கள் பேசுவதை கவனிக்கத் தொடங்கியவர் முகம் அதிர்ச்சிக்கு மாற நரம்புகள் புடைத்துக் கொண்டு வியர்வை அரும்பு விடத் தொடங்கியது.
“ஹஹா… பின்ன என்னடா…. இந்தக் கருவாச்சி மேல உள்ள காதல்ல தான் இந்தக் கல்யாணத்துக்கு சம்மதிச்சேன்னு நினைச்சியா…. நெவர்…. எல்லாம் இந்த சொத்துக்காக தான்……” என்ற சத்யாவின் இதழ்களில் அலட்சியப் புன்னகை ஒன்று ஒட்டிக் கொண்டிருக்க எதிரில் இருந்த அவனது நண்பன் திகைப்புடன் அவன் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தான்.
“ஓ…. அதானே பார்த்தேன்….. உன் நிறத்துக்கும் அழகுக்கும் நிறைய பொண்ணுங்க போட்டி போட்டுட்டு வரும்போது இப்படி ஒரு கறுப்பான பொண்ணைக் கட்டிக்க எப்படிடா சம்மதிச்சான்னு நினைச்சேன்…. இதுதான் மேட்டரா…..” என்று கேட்டவன் ஒரு அசட்டுச் சிரிப்பை உதிர்த்தான்.
“ம்ம்… கோடிக்கணக்கான சொத்துக்கு அவதான் ஒரே வாரிசு…. நியாயப்படி இந்த சொத்துல என் அம்மாவுக்கும் பாதிப் பங்கு இருக்கு…. அது எதுவும் கொடுக்காம என் தாத்தா எல்லா சொத்தையும் மாமா பேருக்கே எழுதி வச்சிட்டார்….. அவரும் தந்தை சொல்லே வேதம்னு என் அம்மாவுக்கு எதையுமே கொடுக்கலை…. என்னை எடுத்து வளர்த்தாங்க…. அவ்ளோ தான்….. சின்ன வயசுல என் அப்பா எனக்குள்ளே பத்த வச்சுப் போட்ட நெருப்பு…… வளர வளர கொழுந்து விட்டு எரியத் தொடங்குச்சு……”
“நியாயமா எனக்குக் கிடைக்க வேண்டிய சொத்தை இவளைக் கல்யாணம் பண்ணி நியாயமாவே என் பேருக்கு மாத்திக்க நினைச்சேன்…. அதுக்காக தான் அந்தக் கருவாச்சிய சகிச்சுகிட்டு அவளைக் கைக்குள்ள போட்டுக்கறதுக்கு வேண்டி கொஞ்சிகிட்டு அவளுக்கு ஆதரவா பேசிகிட்டு வேஷம் போட்டுக்கிட்டு இருந்தேன்….. கல்யாணம் முடிஞ்சு சொத்து மட்டும் என் கைக்கு வரட்டும்….. அப்புறம் அவளை டம்மியா வீட்டுல உக்கார வச்சுட்டு என்னோட சுயரூபத்தைக் காட்டுறேன்…… என் அம்மாவுக்கு எதையும் கொடுக்காம ஏமாத்தின என் மாமாவைக் கதற வைக்கிறேன்…..” என்றவனின் சிரிப்பில் இப்போது ஒரு குள்ளநரியின் சூரத்தனம்.
“ஓ… சூப்பர் ஐடியா மச்சான்….. சொத்துக்கு சொத்து….. ஜாலிக்கு ஜாலி…. பழிக்குப் பழி….. நல்லாவே யோசிச்சிருக்கே……” பாராட்டினான் உடனிருந்த மற்றொரு சொறிநாய்.
கேட்ட குரலையும் சொல்லிய வார்த்தைகளின் கனத்தையும் தாங்கிக் கொள்ள முடியாமல் அவரது இதயம் வேகமாய்த் துடிக்க அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் சட்டென்று இரத்தக் குழாய்கள் வேலை நிறுத்தம் செய்ய நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சரிந்தார்.
வெளியே ஏதோ ஓசை கேட்டு திகைத்த சத்யாவும், அவனது நண்பனும் ஓடி வர, இளமாறன் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு விழுந்து கிடப்பதைக் கண்டவன், அதிர்ந்து யோசனையுடன் அவரைத் தூக்க வந்தான். அவன் கையை அவர் தட்டி விடவும், தான் பேசியதைக் கேட்டுவிட்டாரோ என்று ஆராய்ச்சிப் பார்வை பார்க்க நெஞ்சைப் பிடித்துக் கொண்டே வலியோடு அவனை முறைத்தார் அவனது மாமா.
“பெருசு முறைக்குறதைப் பார்த்தா நாம பேசினதெல்லாம் கேட்டுட்ட போல இருக்கே மச்சான்…..” என்று அந்த நண்பன் கேட்க, யோசனையுடன் அவருக்கு அருகில் வந்து மீண்டும் தூக்க முயன்றான் சத்யா.
“ச்சீ…. எ…. என்னைத் தொடாதே….. நீயெல்லாம் ஒரு மனுஷனா….. கூடப் பிறந்தவ பைய..னாச்சே….. யாருமில்லாம அ..அனாதையா நிக்குறயேன்னு சொந்தப் பிள்ளை போல பார்த்துப் பார்த்து வ…ளர்த்ததுக்கு நல்ல பரிசு கொடுத்துட்டே….. ஆ…” என்று இதயத்தைப் பிசையும் வலியில் முகத்தை சுழித்தவர், “ந… நல்லவன் மாதிரி நடிச்சு எ…. எங்களை ஏமாத்திட்டேள்ள….. உ…. உன்னை….” பேச முடியாமல் திணறிக் கொண்டே பேசியவர், மெல்ல கைப்பிடியைப் பிடித்து எழுந்து கொள்ள முயன்று அப்படியே வலி தாங்க முடியாமல் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சரிந்தார். 
“ஓ…. அப்ப நாங்க பேசின எல்லாத்தையுமே கேட்டுட்டிங்களா… என்னைப் பத்தின உண்மை எல்லாம் தெரிஞ்சு போச்சா……” என்றான் சத்யா அவரை சுற்றி வந்து கொண்டே.
“கே…..கேட்டேன்டா…. உ….ன்னோட குள்ளநரி வேஷம் கலைஞ்சு போச்சு… இ… இனி இந்தக் கல்யாணம் நடக்காது….. முதல்ல அதை நிறுத்தறேன்…..” என்றவர் வேதனை தாங்காமல் முகத்தை சுளித்துக் கொண்டே பெரிய மூச்சுகளாய் இழுத்து விட்டுக் கொண்டு எழுந்து கொள்ள முயலவும் அவரைப் பிடித்து அமர்த்தி அப்படியே உக்கார வைத்தான் சத்யா.
“அச்சோ…. நீங்க நெஞ்சு வலியில துடிக்கும்போது உங்களுக்கு எதுக்கு அந்த சிரமம் மாமா…. அதெல்லாம் நாங்க பார்த்துக்கறோம்…. நீங்க முதல்ல ட்ரீட்மென்ட் எடுத்துக்கங்க…… டேய் அவரை தூக்குடா….” என்றதும் இருவருமாய் அவரைப் பிடித்து ரூமுக்குள் தூக்கிச் சென்றனர்.
“டேய்… என்னை விடுங்கடா…… நான் போறேன்….” என்று திமிறியவரை உள்ளே சென்று கிடத்தினர்.
“என்னடா மச்சான்…. இந்தாளு நாம பேசினதெல்லாம் கேட்டுடுச்சே… இப்போ என்ன பண்ணறது….” என்றான் சத்யாவின் நண்பன்.
“என்ன பண்ணறது….. இன்னும் நான் என் வேஷத்தைக் கொஞ்ச நாளைக்கு தொடர்ந்து தான் ஆகணும்….. அதனால இவரோட ஆட்டத்தைக் குளோஸ் பண்ணிடலாம்……” என்றவனை நோக்கி சம்மதமாய் தலையாட்டினான் மற்றவன்.
“அ… அடப் பாவி….. என்னை வி…டுங்கடா…… கல்யாணத்துக்கு உன் பேர்ல பா…தி சொத்தை எழுத வைக்க நி..னைச்ச எனக்கு இப்படி துரோகம் பண்ண…றியே……” வலியோடு புலம்பினார் இளமாறன்.
“ஓ… எனக்கு நியாயமா கிடைக்க வேண்டியதை தானமா கொடுக்க நினைக்கறிங்க… அதுவும் பாதி….. சாரி மாமா…… நான் முழுசாவே எடுத்துக்கறேன்….. என் அப்பாவுக்கு நான் ஒரு வாக்கு கொடுத்திருக்கேன்…. என் அம்மாவுக்கு நியாயமா கிடைக்க வேண்டிய சொத்தை தாத்தா கொடுக்காம இருந்தார்…. அவருக்கு நீங்களும் சப்போர்ட்டா நின்னு எங்களைக் கஷ்டப் பட விட்டீங்க…… உங்க சொத்து எல்லாத்துலயும் என் அம்மா பேரும் எழுதியிருக்கு….. என் அப்பாவைக் காதலிச்ச காரணத்துக்காக அவங்க கஷ்டப்படும்போது உதவாம வேடிக்கை பார்த்துட்டு இருந்திங்க…. அதுக்கு நான் கொடுக்கற தண்டனையை நீங்க ஏத்துகிட்டு தான் ஆகணும்….. உங்களுக்கு என்னைப் பத்தின உண்மை தெரிஞ்ச பின்னால இது எல்லாம் நல்லபடியா நடக்க விட மாட்டிங்க…. அதனால நீங்க செத்துப் போயிருங்க….” என்றான் கூலாக.
அடுத்த நாள் காலையில் தினசரியைப் புரட்டிக் கொண்டிருந்தான் விக்ரம்.
தொழிலதிபர் இளமாறன் விபத்தில் மரணம்….. என்று கொட்டை எழுத்தில் வந்திருந்த செய்தியைக் கண்டு அதிர்ந்த விக்ரம், வேகமாய் கீழே இருந்த செய்தியைப் படித்தான்.
மதிய வேளையில் குவாரிக்கு சென்று கொண்டிருந்த தொழிலதிபர் இளமாறனின் கார் பிரேக் பிடிக்காமல் கருங்கல் குவாரியில் விழுந்ததில்  அந்த இடத்திலேயே அவர் மரணமடைந்தார்…… என்ற செய்தியுடன்  இளமாறனின் புகைப்படமும் வந்திருக்க அவனது மனம் பதறியது.
“ஐயோ…… என்ன இது…. இவர் இளாவின் அப்பாவாச்சே…..  நல்ல மனுஷனுக்கு இப்படி ஒரு மரணமா…. கல்யாண வேலை எல்லாம் நடந்திட்டு இருக்கும்போது இப்படி ஒரு அசம்பாவிதம் நடந்திருக்கே…… இலக்கியா எப்படித் துடிச்சுப் போயிருப்பாளோ…….” என புலம்பிக் கொண்டே எழுந்து நண்பனைத் தேடிச் சென்றான்.
“டேய் வினோ…..” படுத்திருந்தவனைத் தட்டி எழுப்பியவன், “டேய்…. எந்திரிடா…. கிளம்பலாம்…….” என்று அவசரப்படுத்தியவனைப் புரியாமல் பார்த்தான் வினோத்.
“என்னடா…. காலைல எங்கே கிளம்பலாம்னு சொல்லறே…..” குழப்பத்துடன் கேட்டவன் நண்பனின் முகத்தில் தெரிந்த வேதனையில் சட்டென்று எழுந்து அமர்ந்தான்.
“என்னடா….. என்னாச்சு….. ஏன் ஒரு மாதிரி இருக்கே…… என்ன பிரச்சனைடா……” வரிசையாய் கேட்டவனை வேதனையுடன் பார்த்தவன், “வினோ…. நம்ம இலக்கியாவோட அப்பா…. கார் விபத்துல இறந்துட்டாராம் டா….. இப்போதான் பேப்பர்ல நியூஸ் பார்த்தேன்…….” என்றான் கலங்கிய கண்களுடன்.
“அய்யோ… என்னடா சொல்லறே….. நம்ம இலக்கியாவோட அப்பாவா……” நம்ப முடியாமல் கேட்டவனிடம் தினசரியை நீட்டினான் விக்ரம். அதில் அவசரமாய்ப் பார்வையைப் பதித்த வினோத் வேதனையுடன் நிமிர்ந்தான்.
“என்னடா…. இப்படி ஆகிடுச்சு…… நேத்து மதியம்னு போட்டிருக்காங்க…… நமக்கு யாரும் சொல்லவே இல்லையே……” யோசித்துக் கொண்டே எழுந்தவன்,
“சரி….. நீ சீக்கிரம் கிளம்பு…… நான் அம்மாகிட்டே சொல்லிட்டு வர்றேன்…..” என்று அன்னையைத் தேடிச் சென்றான்.
அவனது தந்தை கப்பலில் பணிபுரிந்ததால் காடாறு மாதம்…. நாடாடு மாதம் கதை தான்….. அண்ணனும் அன்னையும் மட்டுமே வீட்டில். அண்ணனுக்கு பெண் பார்த்துக் கொண்டிருந்தனர். தோட்டத்தில் முருங்கை இலை பறித்துக் கொண்டிருந்த அன்னையிடம் சென்றவன் விவரத்தைக் கூறிவிட்டு வேகமாய் வந்து புறப்பட்டான்.
அதற்குள் வினோத்தின் அன்னை இருவருக்கும் காபியுடன் வர, குடித்துவிட்டுக் கிளம்பினர். இருவரும் இலக்கியாவின் வீட்டை அடைவதற்குள் இளமாறனின் இறுதி சடங்குகளைத் தொடங்கி இருந்தனர். 
லலிதா அழுது அழுது மயக்கத்தில் இருக்க கதறி அழுது கொண்டிருந்த இலக்கியாவைக் காண முடியாமல் இதயத்தில் கண்ணீர் வழிய நின்று கொண்டிருந்தான் விக்ரம். திமிறிக் கொண்டு தந்தையின் உடல் அருகே ஓடியவளைப் பிடித்து வைக்க கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தனர்.
வீணா அவளை சமாதானப் படுத்த முயன்று தோற்று, சேர்ந்து அழுது கொண்டிருந்தாள். பாட்டி ஒருபுறம், “வாழ்ந்து முடிச்ச என்னைக் கொண்டு போகாம என் புள்ளியை எதுக்கு எடுத்துகிட்டியே…. உனக்குக் கண்ணே இல்லியா….” என்று கடவுளிடம் புலம்பிக் கொண்டே மயங்கிக் கிடந்தார்.
விக்ரமைக் கண்டதும் அவனிடம் ஓடி வந்தாள் இலக்கியா.
“விக்ரம்…. என் அப்பா ரொம்ப நல்லவர்…. இந்த மாதிரி மனுஷனைப் பார்க்க முடியாதுன்னு சொல்லுவியே… இனி யாராலும் பார்க்க முடியாத இடத்துக்குப் போயிட்டார் பார்த்தியா….. அய்யோ…. அப்பா….. நீங்க இல்லாம நாங்க எப்படி இருப்போம் பா……. வந்திருங்கப்பா….. எங்களுக்கு நீங்க வேணும்ப்பா……” வாய்விட்டுக் கதறியவளை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு ஆறுதல் படுத்தத் துடித்த மனதைக் கட்டுப் படுத்திக் கொண்டு கல்லாய் நின்றிருந்தான் விக்ரம்.
“இலக்கியா….. கொஞ்சம் அமைதியா இரும்மா…. அம்மாவையும் பாட்டியையும் நீதானே சமாதானப் படுத்தணும்….. இப்படி அழுதுட்டு இருந்தா அவங்களை யார் சமாதானம் பண்ணுவா…..” என்று அவளை ஆறுதல் படுத்த ஒவ்வொருத்தரும் கூறிய வார்த்தைகள் ஒன்றும் அவள் காதை அடைந்ததாய்த் தெரியவில்லை.
இறுதிச் சடங்குகள் முடிந்து உடலை எடுத்துக் கொண்டு மயானத்துக்குப் புறப்படும் வேளையில் எழுந்த அழுகைக் குரலில் அந்தப் பிரதேசமே கலங்கியது.
நல்லவொரு மனிதனின் இறப்புக்காய் அனைவரின் மனமும் கலங்கி கண்ணீர் சிந்தியது.
கலங்கிய முகத்துடன் எதுவும் பேசாமல் அமைதியாய் நின்று மற்றவர்கள் சொல்லியபடி இறுதி சடங்குகளை செய்து முடித்த சத்யாவை அழைத்துக் கொண்டு மயானத்துக்குக் கிளம்பினர்.
இலக்கியா தலை விரி கோலமாய் நின்று அழுது கதற, லலிதா நெஞ்சில் அடித்துக் கொண்டு கதறினார்.
அவரைப் பிடித்து வைக்க முடியாமல் சேர்ந்து கதறிக் கொண்டிருந்த உறவுக்காரப் பெண்கள்.
“ஐயோ…. என் புள்ளைக்கு முதல்ல என்னை எரிச்சிருக்கலாமே…..”  என்று கதறிக் கொண்டிருந்தார் பர்வதம் பாட்டி.
தன்னையறியாமல் பழைய நினைவுகளில் கலங்கிய கண்களைத் துடைத்துக் கொள்ளக் கூடத் தோணாமல் நின்று கொண்டிருந்த நண்பனின் தோளில் ஆதரவாய் கையை வைத்தான் வினோத்.
கல்யாணக் கனவுகளில் மூழ்கியிருந்த வீடு கல்லறை நிஜத்தில் கேள்விக் குறியாய் மாறி கலங்கிக் கொண்டிருந்தது.
இறப்பு
இறந்தவனுக்கு நிஜமாகவும்
இருப்பவனுக்கு ஒத்திகையாகவும்
இறத்தலை உணர்த்திச் செல்கிறது…….
மனதுள் எழுந்த ஆயிரம்
வினாக்களுக்கு விடை தெரியாமலே
விடை பெற்றது உடலைவிட்டு உயிர்…..
துரோகங்களுக்கு நடுவே விட்டுச்
செல்கிறேன் என் ஜீவ நதிகளை…..
வற்றுமோ…. வறளுமோ….
வளம் கொண்டு பாயுமோ…..
அவரவர் விதிபோல…….
கருவறையின் சுகத்தை
கல்லறைகள் தருவதில்லை……
கடக்க முடியாமல்
கடந்து போன கடமைகளில்
கல்லறை கனக்கிறது……

Advertisement