Advertisement

இலக்கணம் – 1
கறுப்பு சிலையொன்று
கால் கொண்டு நடந்ததோ….
கறுப்பான தோலுக்குள்
குருதி நிறம் சிவப்பன்றோ…..
கள்ளமில்லா சிரிப்புக்குள்ளே
கலந்திருக்கும் வெள்ளையன்பு….
கறுப்பென்றும் சாபமல்ல….
கடவுளுக்கும் அதே நிறம்….
கலங்காதே கண்மணியே…..
கருணை உந்தன் குணமானால்
கறுப்பு வெறும் நிறம் மட்டுமே….
அவசர அவசரமாய் கல்லூரிக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தாள் இலக்கியா.
“அம்மா….. என்னோட கண்மையைப் பார்த்திங்களா…. இங்கே காணோம்…..” மேசை வலிப்பில் தேடிக் கொண்டே குரல் கொடுத்தாள்.
“எனக்குத் தெரியலைம்மா…. அங்கே தான் இருக்கும் பாரு….” என்றார் அடுக்களையில் இருந்து அவளது அன்னை லலிதா.
“ஹூக்கும்….. கருவாச்சிக்கு கண்ணுக்கு மை போடாம தான்….. கண்மையைக் காணோம்னா உன் உடம்புல தொட்டு கண்ணுக்குப் போட்டுக்க வேண்டியது தான….. தேடணுமா என்ன…..” என்றார் அவளது பாட்டி பர்வதம்.
“என்ன கிழவி சொன்னே……” கோபத்துடன் முறைத்தாள் பேத்தி.
“முட்டைக் கண்ணால முறைக்குறதைப் பாரு…….. நீ முறைச்சா, நான் பயந்துருவேனா……… நான் அப்படிதாண்டி சொல்லுவேன்…… கறுப்பி…… உன் கறுப்பை தொட்டு ஊருக்கே கண் மை போட்டுக்கலாம்….. பெருசா முறைக்க வந்துட்டா…..” கேட்டுவிட்டு தலையைத் திருப்பி மீண்டும் டிவி பிரேக்கிங் நியூஸில் கண்ணைப் பதித்தார் பர்வதம்.
அவரை எரித்துவிடுவது போல கண்ணகியாய் மாறி முறைத்துக் கொண்டிருந்தாள் இலக்கியா. வேகமாய் சென்று ரிமோட்டை எடுத்து சானலை மாற்றியவள் சன்லைபில் அந்த பாட்டைக் கேட்டதும் வைத்தாள்.
“கண்ணா…… கருமை நிறக் கண்ணா…….
உன்னை காணாத கண்ணில்லையே……
உன்னை மறுப்பாரில்லை…..
கண்டு வெறுப்பாரில்லை….
என்னைக் கண்டாலும் பொறுப்பாரில்லை…….”
விஜயகுமாரி கண்ணீருடன் கண்ணனுக்கு முன்னில் நின்று உருகி பாடிக் கொண்டிருக்க அதைக் கண்டதும் அவள் இதழ்களில் ஒரு புன்முறுவல் பூத்தது. பாட்டி பர்வதம், பேத்தி இலக்கியாவை கேலியுடன் பார்க்க அவருக்கு முன்னில் வந்து நின்றாள் இலக்கியா.
“ஏய் வெள்ளக்கிழவி என்ன இளக்காரமா பாக்குறே…. நீ கருவாச்சின்னு சொன்னதும் அந்தக் காலத்து விஜயகுமாரி மாதிரி கண்ணன்கிட்டே போயி அழுது புலம்பிட்டு இருப்பேன்னு நினைச்சியா…. நான் இந்தக் காலப் பொண்ணாக்கும்…. கறுப்பு தான் எனக்கு பிடிச்ச கலருன்னு பாடிகிட்டு போயிட்டே இருப்பேன்…… ரொம்ப தான் பண்ணாதே…..” என்று கூற, அடுக்களையில் இருந்து குரல் கொடுத்தார் அவளது அன்னை லலிதா.
“ஏய்…. இலக்கியா….. பாட்டியோட எதுக்குடி வம்பு பண்ணிட்டு இருக்கே….. காலேஜ்க்கு டைம் ஆச்சு…. சாப்பிட வா……”
“ஹூக்கும்…… என்ன தான் சிலிர்த்துகிட்டாலும் குயிலு மயிலாக முடியுமா…… பெருசா பேச வந்துட்டா….. கருவாச்சி…….” என்று பர்வதமும் விடாமல் பேசினார்.
“வேண்டாம் கெழவி….. நான் குயிலாவே இருந்துட்டு போறேன்….. உனக்கு என்ன போச்சு…… நீயும்தான் வெண் குஷ்டம் வந்த போல வெளுவெளுன்னு இருக்கே…… நான் ஏதாவது சொன்னேனா….. அம்மா சொல்லுற போல நான் ஒரு கருப்பு ஐஸ்வர்யா ராயாக்கும்…..” என்று அவள் பதிலுக்கு பேச அங்கே வந்தான் அவளது அத்தை மகன் சத்யன்.
அவனைக் கண்டதும் இலக்கியாவின் முகம் சட்டென்று கனிந்தது.
“வாங்க அத்தான்…… சாப்பிட எடுத்து வைக்கட்டுமா…..” குயிலாய் கூவியவளைக் கண்டு அழகாய் சிரித்தான் சத்யன்.
கருகருவென்று தலையை நிறைத்திருந்த முடியை அளவாய் வெட்டி ஸ்டைலாய் ஒதுக்கி இருந்தான். நல்ல சந்தன நிறத்தில் பளிச்சென்று இருந்தவனின் நெற்றியில் சின்னதாய் ஒரு சந்தனப் பொட்டு அலங்கரிக்க, அளவான கட்டி மீசையும், எடுப்பான மூக்கும் அழகனாய் காட்டியது. அவனது நிறத்துக்கு பாந்தமான உடையில் கண்ணை நிறைத்தான்.
“நீ சாப்பிட்டியா இளா…… காலேஜ்க்கு டைம் ஆச்சே…. இங்கே பாட்டியோட என்ன பட்டிமன்றம் நடத்திகிட்டு இருக்கே……” கேட்டுக் கொண்டே டைனிங் டேபிளின் முன்பு அமர்ந்தான் அவன்.
அவனது கேள்விக்கு மீண்டும் பாட்டியை முறைத்தவள், “நீங்களே கேளுங்க அத்தான்….. இந்தக் கிழவிக்கு வரவர வாய்க்கொழுப்பு ரொம்ப அதிகமாப் போயிருச்சு…..” என்றவள்,
“நான் கண்மையைக் காணோம்னு தேடிட்டு இருக்கேன்….. இது என்ன சொல்லுச்சு தெரியுமா…..” என்று பாட்டியைப் பார்க்க, அவர் “ஹூக்கும்…… கருவாச்சிக்கு கண் மை ஒண்ணு தான் குறைச்சல்…..” என்று முகத்தைத் திருப்பிக் கொண்டார். “என்ன சொல்லுச்சு……..” என்றான் சத்யா இருவரையும் பார்த்துக் கொண்டே.
“உனக்கு கண்ணுக்கு தனியா கண்மை எல்லாம் எதுக்கு….. உன் உடம்புல இருக்குற கறுப்பை எடுத்து கண்ணுக்குப் போட்டுக்க வேண்டியது தான…… உன் கறுப்பை ஊருக்கே கண்மையாப் போட்டாலும் தீராதுன்னு சொல்லுது…..” என்றவளின் கண்கள் லேசாய் கலங்குவது போலத் தோன்ற அவன் பாட்டியை முறைத்தான்.
“ஏன் பாட்டி….. உனக்கு இவ்ளோ வயசாகியும் சின்னப் பொண்ணு கிட்டே எப்படிப் பேசணும்னே தெரியாதா….. இப்படியா அவளோட கறுப்பைக் கிண்டலடிக்குறது…… யாருமே நான் இப்படி தான் பிறக்கணும்னு நினைச்சு பிறக்கறதில்லை….. கடவுள் எது கொடுக்கிறானோ அதை சந்தோஷமா ஏத்துக்க வேண்டியது தான்…… இனிமே இப்படில்லாம் சொல்லாதே….. அவ மனசு எத்தனை வருத்தப்படும்…..” என்றான் இலக்கியாவுக்கு ஆதரவாக.
“அடப் போடா… சும்மா, அந்தக் கறுப்பிக்கு வக்காலத்து வாங்கிட்டு…. நீ என்ன அவளுக்கு சம்பளமில்லாத வக்கீலா….. எப்பப் பார்த்தாலும் வாதாடறதுக்கு வந்திடறே…… நான் என்ன இல்லாததையா சொன்னேன்…… அவ கருவாச்சி தானே…. நீ பாரு…. எத்தனை அழகா வெள்ளையா என்னைப் போலவே இருக்கே….. நம்ம குடும்பத்துல யாராவது கறுப்பா இருக்காங்களா…. எனக்கென்னவோ இவ பிறந்ததும் ஆசுபத்திரியில புள்ளைய மாத்திக் கொடுத்துட்டாங்களோன்னு சந்தேகமாவே இருக்கு…..” என்று அவர் கூறியதும் இலக்கியாவின் கண்ணில் கண்ணீர் நிறைந்துவிட, அங்கே வந்தார் லலிதா.
“அத்தை….. என்ன இது….. எதோ விளையாட்டாப் பேசறீங்கன்னு பார்த்தா இப்படில்லாம் சொல்லிட்டு இருக்கீங்க…. பாருங்க அவ சங்கடப் படுறா…..” என்றார் மாமியாரிடம்.
“பாட்டி…. நீ இப்படில்லாம் பேசறது எனக்கு கொஞ்சம் கூடப் பிடிக்கலை….. இனிமே இந்த மாதிரிப் பேசாதிங்க…….” என்று சத்யா கடிந்து கொள்ள அவனுக்குப் பின்னில் நின்று பாட்டிக்கு பழிப்புக் காட்டினாள் இலக்கியா.
“இளா…. நீ வந்து சாப்பிடுடா…. இந்தப் பாட்டிக்கு வேற வேலை இல்லை… யாரையாவது வம்பிழுத்து கிட்டே இருக்கணும்….” என்றவன் டிபன் சாப்பிடத் தொடங்கினான்.
“ஹூக்கும்…. இவதானே சொன்னா….. நான் இந்தக் காலத்துப் பொண்ணு….. கருப்பு தான் எனக்குப் பிடிச்ச கலருன்னு சொல்லிட்டுப் போயிட்டே இருப்பேன்னு….. பொறவு இப்ப என்ன….. ஆளாளுக்கு என்கிட்டப் பாயுறிங்க….” என்றவர், “ஏய் கழுத…… பாட்டி சும்மா தான உன்னை சீண்டினேன்….. இதுக்குப் போயி கண்ணக் கசக்கிட்டு நிக்குற…… நீ அப்படியே உன் தாத்தா ஜாடை புள்ள……. அதான் உன்னைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு சீண்டிகிட்டே இருக்கணும்னு தோணுது……” என்று வருத்தத்துடன் முடித்தார் பர்வதம்.
“அம்மாடி…. அப்ப என் தாத்தாவை என்ன பாடு படுத்தினியோ….. அதான் அவர் போயி சேர்ந்துட்டார்….” என்று கவுண்ட்டர் கொடுத்தாள் இலக்கியா.
“ஹஹா…. ஏன் பாட்டி…. அதுக்காக இப்படில்லாம் தான் பேசுவிங்களா…..” என்று கேட்ட சத்யா, “அத்தை….. மாமா குவாரிக்கு கிளம்பிட்டாரா……..” என்றான்.
“ம்ம்…. காலைல நேரமாவே கிளம்பிட்டார் தம்பி…..” என்றார் லலிதா.
“ஓ… சரி…. இளா….. நான் உன் காலேஜ் பக்கம் தான் ஒரு வேலையா போறேன்….. சீக்கிரம் சாப்பிட்டு என்னோட வர்றதுன்னா வா…. டிராப் பண்ணிடறேன்…..” என்று அவளிடம் சொல்லவும் அவள் முகம் சட்டென்று மலர்ந்தது. அவளைக் கல்லூரியில் விட்டு, கூட்டி வர தனியாய் ஒரு டிரைவரும் காரும் தந்தை ஏற்பாடு செய்திருந்தாலும் அவளுக்கு அத்தானுடன் புல்லட்டில் செல்வதில் கொள்ளைப் பிரியம். “ஹே…. ஜாலி….. நான் அத்தானோட புல்லட்ல போகப் போறேன்……” குதித்தவள், நான் அஞ்சே நிமிஷத்துல வந்திடறேன்…..” என்று அவசரமாய் தட்டை வைத்து சாப்பிடத் தொடங்கினாள்.
அழகான களையான முகம்….. எடுப்பான கண்களும் மூக்கும் சிறிய உதடுகளுமாய், அளவான உடல்வாகுடன் லட்சணமாய் இருந்தாலும் கறுப்பாய் இருந்தாள். கழுத்தில் மெலிதாய் ஒரு செயினும் காதில் சிறு வைரத் தோடும் மட்டுமே…… எல்லோரும் அவளை கருவாச்சி…. கறுப்பி…. கருப்பட்டி….. என்றெல்லாம் அழைத்து கேலி செய்ததில் அவளது கலரை மட்டும் மிகவும் வெறுத்தாள். அழகும், நிறமும், கம்பீரமுமாய் இருந்த அத்தான் சத்யா மீது அவளுக்கு அத்தனை பிரமிப்பு….. அவனுடைய நிறத்தையும் தோற்றத்தையும் ஆசையோடு தழுவும் விழிகள், தன்னுடன் ஒப்பிட்டு ஏமாற்றத்துடன் திரும்பும்.
மற்றவர்கள் எத்தனையோ பேர் அவளது நிறத்தை கேலி செய்தாலும் சத்யன் இதுவரை அப்படி அழைத்து அவளை வேதனைப் படுத்தியதே இல்லை….. அதனாலேயே அவளுக்கு அவனை மிகவும் பிடிக்கும்….. அன்பாக மட்டுமே பேசுவான். “ஹூம்….. அத்தானோட புல்லட்ல போறம்னு அவளுக்கு என்னவொரு சந்தோஷம் பாரு….. இப்பவும் சின்னப் புள்ளையாவே இருக்கா……” சொல்லிக் கொண்டே பர்வதம் எழுந்து அறைக்கு செல்ல, லலிதா “இன்னும் ஒரு இட்லி வச்சுக்க தம்பி…… இந்த வயசுல நல்லா சாப்பிடணும்ல…..” சொல்லிக் கொண்டே அவன் தட்டில் இட்லியை வைத்து சட்னியை ஊற்ற, அவருடைய முகத்தையே பரிவுடன் பார்த்தான் சத்யா.
“என்ன தம்பி…. அப்படிப் பாக்குறிங்க…….” என்றார் லலிதா.
“அத்தை….. நீங்க என்னை இப்படிப் பார்த்துப் பார்த்து கவனிச்சுக்கிறதால தான், எனக்கு அப்பா அம்மா நினைவு கூட வரதில்லை…… அவங்களோட இழப்பு கூட பெருசா தெரியாம இருக்குறதுக்கு உங்க எல்லோரோட அன்பும் தான் காரணம்…..” என்றவனின் கண்கள் கலங்கியது.
“அச்சோ…. என்ன அத்தான்….. இதுக்குப் போயி கண்கலங்கிட்டு….. ம்மா…. நீ சும்மா இருக்க மாட்டியா…..” என்று அன்னையிடம் பாய்ந்தாள் மகள். “அடிப்பாவி…. நான் என்ன பண்ணினேன்….. இட்லி வச்சது ஒரு குத்தமா….. அதுக்கு ரெண்டு பேரும் இவ்வளவு ரியாக்சன் குடுக்கறிங்க……” என்று அலுத்துக் கொண்டவர்,
“உன் அத்தானை நான் அழுக வைக்கலை தாயி…. ரெண்டு பேரும் சாப்பிட்டு கிளம்புங்க…..” என்றார் சிரிப்புடன். அதைக் கேட்டு அவர்கள் முகத்திலும் புன்னகை பூக்க, சந்தோஷத்துடன் கிளம்பினர். தடதடவென்று ஒலித்த புல்லட்டில் அத்தானின் தோளில் கை வைத்து ஸ்டைலாய் அமர்ந்திருந்தாள் இலக்கியா.
அன்னையிடம் விடை பெற்று கல்லூரியை நோக்கி தடதடக்கத் தொடங்கியது அந்த இரும்புக் குதிரை. லலிதாவின் மனதில் சில எண்ணங்கள் துளிர் விடத் தொடங்க, இலக்கியாவின் மனதிலோ இதமாய் அந்தப் பாடல் ஓடிக் கொண்டிருந்தது.
“பார்த்த முதல் நாளே….
உன்னைப் பார்த்த முதல் நாளே……
காட்சி பிழை போலே….
உணர்ந்தேன் காட்சி பிழை போலே…..
ஒரு அலையாய் வந்து எனை அடித்தாய்….
கடலாய் மாறிப் பின் எனை இழுத்தாய்….
என் பதாகை தாங்கிய உன் முகம்
உன் முகம் என்றும் மறையாதே……”
முகத்தில் மந்தகாசமாய் ஒரு புன்னகை நிறைந்திருக்க, ஏதேதோ எண்ணங்கள் மாறி மாறிப் பொங்கிக் கொண்டு மனதை லேசாக்கி மிதக்க வைத்தன. அத்தானுக்குப் பின்னில் ஜோடியாய் அந்த புல்லட்டில் அமர்ந்திருக்கையில் மிகவும் பெருமிதமாய் உணர்ந்தாள். அவளது கற்பனையில் விரிந்த பாடல் முடிவதற்குள் அவர்களைப் பற்றிய அறிமுகத்தை பார்த்து விடுவோம்…..
இளமாறன், லலிதா தம்பதியரின் ஒரே செல்ல மகள் தான் இலக்கியா. பெரும் செல்வந்தரான அவருக்கு நிறைய மணல் குவாரி, செங்கல் சூளை, சொந்தமாய் லாரிகள் மேலும் பலப் பல சொத்துகள் இருந்தன. அவை அனைத்துக்கும் இலக்கியா ஒருத்தி மட்டுமே வாரிசு. கலகலவென்று வெளியே காட்டிக் கொண்டாலும் அந்த கருப்பு நிறம் அவளுக்கு மிகவும் வருத்தமாய் இருந்தது. இறுதி ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவி.
இளமாறனின் தங்கை யமுனா சாதாரண வேலையில் இருந்த சரவணனை காதலித்து மணமுடித்து வீட்டுக்கு வர, அதிர்ந்து போன இளமாறனின் தந்தை அவர்களை வீட்டுக்குள் சேர்க்க மறுத்து, தான் சம்பாதித்த சொத்து முழுவதையும் அவரது மகன் இளமாறனின் பேரிலேயே எழுதி வைத்துவிட்டார். இதில் அவரது மனைவி பர்வதத்துக்கு சம்மதமில்லா விட்டாலும் கணவனை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியவில்லை. சகல வசதிகளுடன் செல்வச் செழிப்பில் வாழ்ந்த மகள் மாத சம்பளத்தில் குடும்பம் நடத்த முடியாமல் திணறுவதைக் கண்டு கணவனுக்கும் மகனுக்கும் தெரியாமல் உதவி வந்தார் பர்வதம்.
பணக்கார வீட்டுப் பெண்ணைக் காதலித்து கல்யாணம் செய்தால் சொத்து கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த சரவணனுக்கு அது பெரும் ஏமாற்றமாய் இருக்க மனைவியோடு எப்போதும் சண்டை போட்டுக் கொண்டே இருப்பான்…… மகளது செய்கையில் தளர்ந்து போயிருந்த கணவரின் இதயம் சீக்கிரமே துடிப்பதை நிறுத்திக் கொள்ள தங்கைக்கு உதவி செய்யுமாறு மகன் இளமாறனை தொந்தரவு செய்யத் தொடங்கினார் பர்வதம். பணமாக அன்னையிடம் கொடுத்து உதவினாலும் தந்தையின் மறைவுக்குக் காரணமாயிருந்த தங்கை யமுனாவை மன்னித்து ஏற்றுக் கொள்ள அவருக்கு விருப்பமில்லை.
சத்யாவுக்கு பத்து வயது இருக்கும்போது, இரு பேருந்துகள் மோதிக் கொண்ட விபத்தில் சரவணன் அந்த இடத்திலேயே சுவாசத்தை நிறுத்திக் கொள்ள, கடைசி சுவாசத்துக்காய் போராடிக் கொண்டிருந்தார் யமுனா. சத்யா பள்ளிக்கு சென்றிருந்ததால் பிழைத்துக் கொண்டான். மனது கேட்காமல் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த தங்கையைக் காண வந்த அண்ணன் இளமாறனிடம் மகனை ஒப்படைத்துவிட்டு கண்ணை மூடிக் கொண்டார் யமுனா.
தங்கை மகனுடன் வீட்டுக்கு வந்த இளமாறன் அவனது தேவைகளை எல்லாம் நிறைவேற்றி நன்றாகப் படிக்க வைத்து பார்த்துக் கொண்டார். முதலில் அவனிடம் அதிகம் ஒட்டாமல் இருந்தவர், தான் எந்த ஒரு விஷயத்தையும் சொல்லாமலே புரிந்து கொண்டு, ஓடிச் சென்று செய்யும் சிறுவனை மெதுவாய் நேசிக்கத் தொடங்கினார். லலிதா பொதுவாகவே குழந்தைகளிடம் மிகுந்த அன்பு காட்டுபவர். அந்த வீட்டுப் பிள்ளையாகவே சத்யாவை வளர்க்கத் தொடங்கினார். சத்யாவின் கலரும் அழகும் இலக்கியாவை பிரம்மிக்க வைக்கும்…. வைத்த கண் வாங்காமல் அவனைப் பார்க்கும்போது அவன் மெதுவாய் சிரிக்கையில் உருகிப் போவாள் ஐந்து வயது இலக்கியா.
“என் பேரனைப் பார்த்துப் பார்த்து உருக்கிடாதே….. அதுனால எல்லாம் உன் கலர் மாறிடாது…” என்று பாட்டி கேலி செய்யும் போதெல்லாம் தனக்கு ஆதரவாகப் பேசும் அத்தானின் மீது அவளுக்கு மிகுந்த பிரியம்….. அது வளர்ந்து காதலாய் மாறி அவளை அவனது அடிமையாக்கி இருந்தது.
“இளா…. இறங்குடா…… என்ன யோசிச்சிட்டு இருக்கே…..” கல்லூரிக்கு முன்னில் புல்லட்டை நிறுத்திய சத்யா இரண்டாம் முறையும் கூறவும் தான் அந்த மிதத்தல் நிலையில் இருந்து நிகழ்வுக்கு வந்தாள் இலக்கியா.
“ஹா…. அதுக்குள்ளே காலேஜ் வந்திடுச்சா…… ஓகே அத்தான்…. பை…. நீங்க கிளம்புங்க…..” என்றவள் கையசைத்து கண்ணிலிருந்து அவன் மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்துவிட்டு கல்லூரிக்குள் நுழைந்தாள். உள்ளே நுழைந்ததும் கண்ட காட்சியில் அதிர்ந்து நின்றாள். 
அவளது சீனியர் மாணவன் ஒருவன் ஜூனியர் மாணவனை அடித்துத் துவைத்துக் கொண்டிருந்தான். அந்தப் பையனுக்கு உதடு கிழிந்து வாயிலிருந்து ரத்தமாய் வழிய, தலை எல்லாம் கலைந்து உடை கிழிந்து இருந்தது.
அவனது தலை முடியை கொத்தாய்ப் பிடித்துக் கொண்டு வயிற்றில் மிதித்தவனைப் பிடித்து விலக்கிய அவனது நண்பன், “டேய் விக்ரம்…. போதும் விடுடா….. செத்துடப் போறான்…..” என்றான்.
அவனை விட்ட விக்ரம், “மவனே…. கொன்னுடுவேன்…. ஜாக்கிரதை….” என்று விரலைக் காட்டி மிரட்டிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

Advertisement