Advertisement

ஆதவனை அனுப்பிவிட்டு இருவரும் வீட்டுக்கு வர…. ஆதிரா முகம் சரியே இல்லை. எப்போது வேண்டுமானாலும் அவள் அழுவது போல இருக்க…. நக்ஷத்ரா அதை யுகேந்திரனுக்கு ஜாடையாகக் காட்ட….

“குட்டி நாம குளிப்போமா?” என யுகேந்திரன் அழைக்க…. ஆதிரா சோபாவில் சென்று படுத்துக் கொண்டு ஒரே அழுகை.

என்ன இவ இப்படி அழுகிறாள் என நக்ஷத்ரா பயந்தே போனாள்.

“அண்ணன் மதியம் வந்திடுவான். அப்பா அம்மா இருக்கோம் தான…. அழக் கூடாது.” என்ற யுகேந்திரன் மகளைத் தூக்கிக் கொண்டு பால்கனி சென்றான்.

அங்கிருந்து பக்கத்து வீட்டுப் பால்கனியில் இருந்த கிளியை காட்ட…. ஆதிராவும் அழுகையை நிறுத்த…. நக்ஷத்ரா அங்கேயே உணவு எடுத்து வந்து ஊட்டிவிட்டாள்.

இவர்களும் காலை உணவை உண்டுமுடிக்க…. சமையல் செய்யும் பெண்மணி வனஜா வந்துவிட்டார். அவர் விடுமுறை எடுத்துக் கொண்டு ஊருக்குச் சென்றிருந்தார்.

அவர் அப்போது தான் ஆதிராவை பார்க்கிறார். பாப்பா வந்தாச்சா என்று கேட்க…. ஆதிரா அவரையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

“இவங்க அண்ணாவையும் உன்னையும் பார்த்துக்கிற ஆண்டி.” என்ற நக்ஷத்ரா, “அக்கா இவளை குளிக்க வச்சிடுங்க.” என்றதும், அவர் ஆதிரவை குளிக்க வைத்து அழைத்து வந்தார்.

அவர் மதிய சமையலை பார்த்துக் கொண்டதால்….நக்ஷத்ரா ஆதிராவோடு இருந்தாள். ஆதிராவும் விளையாட்டுச் சாமான்களை வைத்து விளையாடிக் கொண்டிருந்தாள். யுகேந்திரன் அலுவல் அறையில் உட்கார்ந்து வேலை பார்க்க…. ஆதிரா அந்த அறையைச் சென்றும் அடிக்கடி எட்டி பார்த்துக்கொள்வாள்.

வணஜாவே சென்று ஆதவனை அழைத்து வந்தார். ஆதவன் உள்ளே தான் வந்திருப்பான். அவனைப் பார்த்ததும் ஆதிரா குஷியில் கத்திக் கொண்டு அவனிடம் சென்றவள், அவனைக் கட்டிக்கொள்ள…. அந்தச் சத்தம் கேட்டு யுகேந்திரனும் வெளியே வந்துவிட்டான்.

கணவனைக் கவனித்த நக்ஷத்ரா, “இவ்வளவு நேரம் சத்தம் வந்துச்சா…. இப்போ அவங்க அண்ணனை பார்த்ததும் சத்தத்தைப் பார்த்தீங்களா….” என, யுகேந்திரன் சிரித்தபடி பார்த்துக் கொண்டிருந்தான்.

ஆதவன் இப்படியொரு வரவேற்பை எதிர்பார்த்து இருக்கவில்லை. அவனுக்குச் சற்று நேரம் என்ன செய்வது என்றே புரியாத நிலை.ஆனால் மகிழ்ச்சியாகத் தான் உணர்ந்தான்.

ஆதவன் வந்த பிறகு ஆதிரா அவன் பின்னேயே சுற்றிக் கொண்டு இருந்தாள்.

நக்ஷத்ரா இருவருக்கும் உணவு எடுத்து வந்தவள், ஆதவனிடம் அவனையே உண்ண சொல்லி தட்டை கொடுக்க…. நானே உண்கிறேன் என ஆதிராவும் அவளது தட்டை கேட்க…..நக்ஷத்ராவும் கொடுத்து விட்டாள்.

கால்கள் இரண்டையும் விரித்து வைத்து, அதற்கு நடுவே தட்டை வைத்து ஆதிரா உணவை எடுத்து உண்ண ஆரம்பித்தாள்.

அவள் சிந்தி சிதறி சாப்பிட…. நக்ஷத்ராவும் நடு நடுவே உணவை எடுத்து ஊட்டி விட்டாள். ஆதிரா உண்டு முடித்ததும், நக்ஷத்ரா யுகேந்திரனை சாப்பிட அழைக்க…. ஆதவன் இன்னமும் உண்டு கொண்டிருந்தான். ஆதவனையும் அழைத்து வந்து உணவு மேஜையில் உட்கார வைத்த யுகேந்திரன், “இங்க உட்கார்ந்து சாப்பிடு, அப்போதான் சீக்கிரம் சாப்பிடுவ.” என்றான்.

அவனோடு உணவு மேஜையில் உட்கார்ந்து யுகேந்திரனும் நக்ஷ்த்ராவும் உணவு உண்டனர். “நாங்க சாப்பிட்டு முடிக்கிறதுகுள்ள நீயும் சாப்பிட்டு முடிக்கணும்.” நக்ஷத்ரா ஆதவனைப் பார்த்து சொல்ல…. அவன் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டான்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஆதிரா சென்று ஆதவனின் தட்டில் இருந்த உணவை எடுத்து அவனுக்கு ஊட்டிவிட…. யார் ஊட்டி விட்டாலும் சரிப்பா என்றிருந்தவன், தங்கையிடம் இருந்து உணவை வாங்கிக்கொள்ள….

“எப்படி இருக்கான் பாருங்க.” என்றாள் நக்ஷத்ரா.

சிறிது நேரம் ஊட்டிய ஆதிராவுக்கும் பொறுமை போய்விட…. அவள் கையில இருந்த உணவை உதற…

“இப்போ தெரியுதா… அவனுக்கு ஊட்டுறது எவ்வளவு கஷ்ட்டம்னு.” என்றாள் நக்ஷத்ரா. வனஜா அவளை அழைத்துச் சென்று கைகழுவி விட்டார்.

அக்கா நீங்களும் சாப்பிடுங்க நக்ஷத்ரா சொல்ல… தனக்குத் தட்டில் உணவு பரிமாறியவர், ஹாலுக்கு எடுத்து சென்று, அங்கே உட்கார்ந்து உண்டார்.

இவர்கள் சாப்பிட்டு முடிக்கும் போது ஆதவனும் உண்டு முடித்து விட்டான். அவன் எப்போது சாப்பிட்டு முடிப்பான் விளையாடலாம் எனக் காத்துக்கொண்டிருந்த ஆதிரா, அண்ணன் வந்ததும் அவனை அழைத்துக் கொண்டு விளையாட சென்றாள்.

மாலை வணஜாவே இருவரையும் பார்க் அழைத்துச் சென்று அங்கே விளையாட வைத்து அழைத்து வந்தார். அந்த வாரம் அப்படியே செல்ல…. ஆஷரமத்தில் இருந்து வந்து பார்த்துவிட்டு சென்றிருந்தனர்.

திங்கள்கிழமை யுகேந்திரன் ஆதவனைப் பள்ளி வாகனத்தில் ஏற்றிவிடச் சென்றிருந்தான். நேரமாகிவிட்டதால் ஆதிராவை அழைத்துச் செல்லவில்லை. கதவை அவன் சாற்றிவிட்டு தான் சென்றான். ஆனால் சரியாகச் சாற்றபடாத கதவு திறந்துகொள்ள…. ஹாலில் இருந்த ஆதிரா வெளியே துள்ளிக்கொண்டு ஓட….. சோபாவில் உட்கார்ந்திருந்த நக்ஷத்ரா பதட்டத்தில், ஆதிரா எனக் கத்தியவள், தன்னை மறந்து எழுந்து நடக்க முயல….

காலில் காலணியும் இல்லாமல்… எதையும் பிடித்துகொள்ளாமலும் எப்படி நடப்பாள்? தடுமாறி கீழே விழ சென்றவள், தன்னைச் சமாளித்துக் கொண்டு நின்று, சோபாவின் அருகே இருந்த தனது ஊன்றுகோலை எடுத்துக் கொண்டு வெளியே செல்ல…. நல்லவேளை ஆதிரா மாடிப்படியில் இறங்காமல் நின்று பார்த்துக் கொண்டு தான் இருந்தாள்.

இறங்கி தான் இருப்பாள், ஆனால் நக்ஷத்ரா கத்திய கத்தில் தேங்கி நின்றாள். அவளை அழைத்துக் கொண்டு உள்ளே வந்த நக்ஷத்ரா கதவை சாற்றி விட்டு, ஹாலில் இருந்த திவானில் சென்று உட்கார்ந்தவளுக்குக் காலில் அப்படியொரு வலி… அவள் தனது காலை தேய்த்துவிட…… ஆதிரா அவளையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.

அப்போது கதவை திறந்து கொண்டு உள்ளே யுகேந்திரன் வர….

“கதவை ஒழுங்கா சாத்திட்டு போக மாட்டீங்களா யுகி.?” என்றாள்.

“என்ன ஆச்சு?” என்றவன், அப்போதுதான் மனைவியின் முகத்தைப் பார்த்துவிட்டு அவளிடம் பதற்றமாகச் செல்ல… நக்ஷத்ரா எதுவும் சொல்வதாக இல்லை. அவள் வலியில் இருந்தாள்.

யுகேந்திரன் அவளது காலை மெதுவாகப் பிடித்துவிட…. அதற்குள் ஆதிரா, “அப்பா, அம்மா கால்ல ஊ…” என்றாள்.

இதுவரை அவளாக அப்பா அம்மா என்று சொன்னது இல்லை. அப்பா சொல்லு அம்மா சொல்லு என்றாள் சொல்லுவாள். ஆதவனை மட்டும் தான் அவளாக அண்ணா என்று அழைப்பாள். இன்றுதான் அவளாக அப்பா அம்மா என்று சொல்லி இருக்கிறாள்.

அந்த நிலையிலும் யுகேந்திரனும் நக்ஷத்ராவும் அதைக் கவனிக்கவே செய்தனர்.

“கதவு திறந்து இருந்ததும் இவபாட்டுக்கு வெளியே ஓடிட்டா…. படியில இறங்கிறேன்னு உருடுண்டுவாளோன்னு பயத்துல ….காலை மறந்து எழுந்து போயிட்டேன். லிப்ட் வேற இருக்கு. அதுக்குள்ள போய்த் தனியா மாட்டினாலும் பயந்து இருப்பா…. நல்லவேளை வெளியே நின்னுட்டு தான் இருந்தா…”.

“இந்த மாதிரி நேரத்துல கூடச் சட்டுன்னு எழுந்து போக முடியாத காலை வச்சிட்டு நானும் என்ன செய்யுறது?” என்றவளின் விழிகள் கண்ணீரை சிந்த….

“ஹே… ஏன் இப்படியெல்லாம் பேசுற. நான் கொஞ்சம் கவனமா இருந்திருக்கணும். எல்லாம் என்னால தான்.” என்ற யுகேந்திரன் ஆதிராவை பார்த்து,

“பாப்பா தனியா வெளியே போகக் கூடாது சரியா….” என்றான்.

யுகேந்திரன் வெந்நீர் எடுத்து வந்து, அதில் துணியை நனைத்து மனைவிக்கு ஒத்தடம் கொடுக்க…. திவானில் ஏறிய அதிரா, நக்ஷத்ராவின் வயிற்றின் மீது தலை வைத்து படுத்துக் கொண்டாள். தன்னால் தான் இப்படி ஆனது என அவளுக்குப் புரிந்து தான் இருந்தது.

அன்று யுகேந்திரன் வீட்டிலேயே இருந்து விட்டான். அவன் சென்று உணவு எடுத்து வர… அதன் பிறகு தான் மூவரும் காலை உணவை உண்டனர். வனஜா வந்ததும், யுகேந்திரன் அலுவல் அறைக்குச் சென்றுவிட…. அவர் சமையலை பார்த்துக்கொள்ள…. நக்ஷத்ராவும் ஓய்வாகப் படுத்திருந்தாள். ஆதிரா அவளுடனே இருந்தாள்.

அன்றைக்குப் பிறகு தான் ஆதிரா அப்பா அம்மா என்று நெருங்கி வர ஆரம்பித்தாள்.

அம்மாவுக்குக் காலில் எதோ பிரச்சனை என ஆதவனுக்கும் தெரியும். வெளியே எங்காவது சென்றால்…. அவன் அம்மாவின் ஸ்டிக்கை தான் முதலில் எடுத்து வருவான். இப்போது அதைப் பார்த்து ஆதிராவும், வெளியே செல்லும் சமயங்களில் அந்த ஸ்டிக்கை தான் இழுத்து வருவாள்.

ஆதிரா கோர்ட் செல்லும் நாட்களில் கூட வனஜாவிடம் தான் ஆதிராவை பார்த்துகொள்ள சொல்லிவிட்டு சென்று வருவாள். 

ஒருநாள் அவளை அழைத்த அவளின் அம்மா ரேகா, “உன் பெண்ணை என்னை நம்பி விட மாட்டியா? அவளை நாங்க நல்லா பார்த்துக்க மாட்டோம்னு நினைக்கிறியா?” என்று கேட்டே விட….

“அப்படியெல்லாம் இல்லை மா…. ஆதிரா இருக்கணுமே… அதுதான் யோசிக்கிறேன்.” என்றாள்.

ஆதவனோடு சேர்த்து ஆதிராவையும் சில முறை அவள் அம்மா வீட்டுக்கு அனுப்ப…. வனஜாவும் உடன் இருந்து பார்த்துக்கொள்ள…. ஆதிராவுக்கு தாத்தா பாட்டியின் வீடும் பழக்கமானது.நக்ஷத்ரா அதன் பிறகே அவளது வேலையிலும் முழு கவனம் செலூத்த ஆரம்பித்தாள். 

மூன்று மாதங்கள் சென்ற நிலையில் ஆதிராவை பார்க்கும் போது, அவள் முன்பு இருந்ததற்கும் இப்போது இருப்பதற்கும் வித்தியாசம் நன்றாகவே தெரிந்தது. 

 

Advertisement