Advertisement

இளங்காற்றே எங்கே போகிறாய்

அத்தியாயம் 15

யுகேந்திரன் உறங்கிவிட…. எப்போது ஆதிரா எழுந்து அழுவாளோ என்ற பயத்தில் நக்ஷத்ரா தான் உறங்குவதும் விழிப்பதுமாக இருந்தாள். ஆனால் ஆதிரா நடுவில் எழுந்துகொள்ளவே இல்லை.

காலையில் முதலில் ஆதிரா உறக்கத்தில் இருந்து விழித்தவள், அருகில் படுத்திருந்த ஆதவனைப் பார்த்ததும், ஹே எனக் குரல் கொடுக்க…. அந்தச் சத்தம் கேட்டுத்தான் யுகேந்திரனும் நக்ஷத்ராவும் எழுந்தனர்.

“ஹே குட்டி எழுந்துடீங்களா?” என யுகேந்திரன் கேட்க….

அவனைப் பார்த்து சிரிப்போமா வேண்டாமா என்பது போல ஆதிரா யோசிக்க….. அதற்குள் நக்ஷத்ரா அவளைத் தன் பக்கம் திருப்ப… நக்ஷத்ராவை பார்த்ததும் அவள் அழத் தொடங்க….

“ஒ… உங்க அண்ணனை, அப்பாவை பார்த்து எல்லாம் சிரிப்பு வருது. என்னைப் பார்த்து மட்டும் அழுக வருதா….” என்றவள், அவளும் அழத் தொடங்க….. ஆதிரா அழுகையை நிறுத்திவிட்டு அவளையே பார்க்க….

“உங்க அம்மா ரவுடிக்கு எல்லாம் ரவுடி.” என்ற யுகேந்திரன் மகளைத் தூக்கிக் கொண்டு ஓய்வறைக்குச் சென்றான்.

அவளைப் பாத்ரூம் போக வைத்து, அவனே எல்லாம் செய்ய…. குழாயை பார்த்ததும் ஆதிரா உடையைக் கழட்டிவிட்டுக் குளிக்கத் தயாராக….

“இப்பவே குளிக்கனுமா பாப்பாவுக்கு.” என்றவன், அவளைக் குளிக்க வைத்து வெளியில் விட…. நக்ஷத்ரா அவளுக்கு உடம்பு துடைத்து, உடைகளை எடுத்து போட்டு விட்டாள்.

ஆதவன் இன்னும் உறக்கத்தில் இருக்க… கட்டிலில் உட்கார்ந்திருந்த நக்ஷத்ரா ஆதிராவையும் தூக்கி கட்டிலில் உட்கார வைத்து, அண்ணனை எழுப்பு என்று சொல்ல….. ஆதிரா அண்ணா அண்ணா என ஆதவனைத் தட்டி எழுப்ப….ஆதவன் சோம்பலாகக் கண் திறந்தவன், அருகில் இருந்த ஆதிராவை பார்த்ததும் முகம் மலர்ந்தான்.

“ஹாய்….” என்றபடி அவன் எழுந்து உட்கார….. குளியல் அறையில் இருந்து வந்த யுகேந்திரன், “பாப்பா எழுந்ததும் குளிச்சிட்டா…. நீயும் வா உன்னைக் குளிக்க வைக்கிறேன்.” என அழைக்க….

“இன்னைக்கு லீவ் தான… நான் அப்புறம் குளிச்சுக்கிறேன்.” என்றான் ஆதவன்.

யுகேந்திரனிடம் பிள்ளைகள் இருவரையும் விட்டு நக்ஷத்ரா சமையல் அறை சென்றவள், இருவருக்கும் குடிக்கப் பால் எடுத்துக் கொண்டு வர….. ஆதவன் அதன் பிறகு தான் எழுந்து பல் துலக்கவே சென்றான். அவன் வருவதற்குள் ஆதிரா பால் குடித்தே முடித்து விட்டாள்.

அண்ணனும் தங்கையும் ஹாலில் பந்து வைத்து விளையாட…. பெற்றோர் இருவரும் உட்கார்ந்து பார்த்துக் கொண்டு இருந்தனர். ஆதிராவுக்குப் பந்து விளையாடுவதில் விருப்பம் போய்விட…. வீட்டில் என்ன இருக்கிறது என்று ஆராய்ந்து கொண்டிருந்தாள்.

ஹால் மேஜையில் இருந்த பிஸ்கட் பேக்கட்டை எடுத்து சென்று ஆதவனிடம் கொடுத்துப் பிரித்துத் தர சொன்னாள்.

அவன் பிரித்துக் கொடுக்க…. அதிலிருந்து ஒன்றை கையில் எடுத்தவள், அதைக் கடித்தபடி வீட்டை சுற்றிப் பார்ப்பதை தொடர்ந்தாள்.

சமையல் அறை சென்று பார்த்துவிட்டு வந்தவள், பொதுவாக இருந்த குளியல் அறையின் கதவை திறந்து பார்க்க…. இவ என்ன பண்றா?” என ஆதவன் கேட்க…

“அவ ஹோம் டூர் பண்றா …” நக்ஷத்ரா சொல்ல…

“இப்போ தான மேடம் வீட்டுக்கு வந்திருக்காங்க. அதுதான் வீட்டை சுத்தி பார்க்கிறாங்க.” என்றான் யுகேந்திரன்.

“தருணுக்கு எல்லாம் தங்கச்சி பாப்பா குட்டியா தான வந்தது. இவ பாப்பாவா இருக்கும் போது எங்க இருந்தா?” என்று ஆதவன் விவரமாகக் கேட்க….

“அம்மாவுக்கு உங்க ரெண்டு பேரையும் பார்க்கிறது கஷ்ட்டம் இல்லையா… அதுதான் ஒரு இடத்தில இருந்தா….” என்ற யுகேந்திரன், “நீ இப்போ பெரிசாகிட்ட இல்ல…. நீ பார்த்துப்ப தான…” என்றதும்,

“நான் பார்த்துகிறேன்.” என்றவன், “இவளையும் ஸ்கூல் கூட்டிட்டு போகட்டா?” என்றான்.

“அது அடுத்த வருஷம். இப்போ பாப்பா ரொம்பக் குட்டி…. இன்னும் கொஞ்சம் பெரிசாகட்டும்.”

ஆதவனைக் குளிக்க அனுப்பிவிட்டு, நக்ஷத்ரா இருவருக்கும் காலை உணவு தயார் செய்தாள். தோசை ஊற்றி எடுத்து வந்தவள், ஆதவனிடம் ஒரு தட்டை கொடுத்துவிட்டு, அவளே ஆதிராவுக்கு ஊட்ட….

“எனக்கும் ஊட்டி விடுங்க.” என்றான் ஆதவன்.

“ஊட்டி விட்டா நீ வேகமா சாப்பிடுவியா? அப்பவும் ஒரு மணி நேரம் ஆக்குவ…. அதுக்கு நீயே சாப்பிடு. அடுத்த வருஷத்துல இருந்து ஸ்கூல் முழு நாளும் இருக்கும், சாப்பாடு எடுத்திட்டு போய் நீயே தான் சாப்பிடனும்.” என்ற மனைவியிடம், “சரிமா இப்போ ரெண்டு பேருக்கும் கொடு. மதியம் அவனே சாப்பிடுவான்.” என்றான் யுகேந்திரன்.

நக்ஷத்ரா இருவருக்கும் நெய் தோசையைச் சட்னியில் தொட்டு ஊட்ட…. ஆதிரா உணவை வாங்கிக் கொண்டு வீட்டை வளம் வர…. அவள் காலில் அணிந்திருந்த கொலுசு ஜல் ஜல் என்ற சத்தத்தில் வீட்டை நிறைக்க…யுகேந்திரனுக்கும் நக்ஷத்ராவுக்கும் வீடு இன்னும் அழகானது போல இருந்தது.

ஆதிரா கால் மணி நேரத்தில் உண்டு முடித்துவிட…. ஆதவன் கால்வாசி தோசையைக் கூடக் காலி செய்யவில்லை. அவன் எப்போதுமே மெதுவாகத்தான் உண்பான்.

நக்ஷத்ரா மதியத்திற்குச் சமைத்துக் கொண்டிருக்க… யுகேந்திரனும் அவளோடு இருந்தான். அப்போது சமையல் அறைக்கு வந்த ஆதிரா ஆப்பிள் பழத்தை பார்த்து கேட்க…. யுகேந்திரன் அவளுக்கு நறுக்கி கொடுக்க…. அதைக் கடித்தபடி வெளியே சென்று விட்டாள்.

“எதாவது கொரிச்சிட்டே இருக்காளே…. அங்க ஆஷ்ரமத்துல ஒழுங்கா சாப்பிட்டிருப்பாளா….” என்றாள் நக்ஷத்ரா கவலையாக.

“அதெல்லாம் கொடுத்திருப்பாங்க….நீ முன்னாடி இருந்ததை எல்லாம் யோசிக்காத. இனிமே நாம நல்லா பார்த்துக்கலாம்.” என்றான் யுகேந்திரன்.

சிறிது நேரம் சென்று சமையலை முடித்துவிட்டு நக்ஷத்ரா ஹாலுக்கு வர…. யுகேந்திரன் அவனது மடிகணினியில் வேலை பார்த்துக் கொண்டிருக்க…. ஆதவன் டிவி பார்த்துக் கொண்டிருந்தான். தரையில் இருந்த பாயில், ஆத்திர குப்புற படுத்திருந்தாள்.

“என்ன குட்டி கீழ படுத்துட்டீங்க. பசிக்குதா? சாப்பிடுறியா?” என நக்ஷத்ரா கேட்க…. ஆதிரா கண்களை மூடிக் கொண்டாள்.

“தூக்கம் வருதோ என்னவோ…. விடு தூங்கி எழுந்து சாப்பிடட்டும்.” என்றான் யுகேந்திரன்.

உறங்கி எழுந்த பிறகும் ஆதிரா தெளிவில்லாமல் இருக்க…. மதிய உணவும் அவள் சரியாக உண்ணவில்லை.

குழந்தை எதையும் மனதில் வைத்து வருந்துகிறாளோ என்று நினைத்தவர்கள், மதிய உணவு உண்டு பிள்ளைகளை அழைத்துக் கொண்டு வெளியே சென்றனர்.

மாலில் சிறு பிள்ளைகளுக்கான விளையாடும் இடத்தில் விளையாட விட…. ஆதவனோடு சேர்ந்து ஆதிராவும் குஷியாகி விட்டாள்.

மாலை வரை விளையாடினார்கள். பிறகு அங்கிருந்த கடைகளில் இருவருக்கும் உடைகள் வாங்கிவிட்டு, இரவு உணவையும் அங்கேயே உண்டனர்.

தக்காளி சூப்பை ஆதிரா விரும்பி உண்ண…. நடுநடுவே மற்ற உணவையும் நக்ஷத்ரா ஊட்டி விட…. ஆதவனும் மெதுவாக என்றாலும் அவனே உண்டான். இரவு உணவை அங்கேயே முடித்துக் கொண்டு வீடு வர….. வரும் வழியிலேயே ஆதிரா உறங்கி விட்டாள்.

மறுநாள் நக்ஷத்ராவின் அம்மா வீட்டிற்குச் சென்றனர். அன்று பொழுது அகே சென்றுவிட, இரவு தான் வீடு திரும்பினர்.

ஞாயிற்றுக்கிழமை காலையே நேத்ராவின் அப்பா வந்திருந்தார். யுகேந்திரன் குழந்தையைத் தத்து எடுத்திருப்பது அவருக்கும் தெரிந்திருக்க, இந்த முறை நேரடியாகக் கிரிஜாவை பார்த்தே கேட்டார்.

“நீங்க உங்க பையனுக்குச் சொல்ல மாட்டீங்களா சம்பந்தி. முன்னாடி கல்யாணமும் அவர் இஷ்ட்டத்துக்குப் பண்றார். இப்போ யாருன்னு தெரியாத குழந்தையைத் தத்து எடுத்திருக்கார். அதுவும் அவருக்குக் குழந்தை இல்லைனாலும் பரவாயில்லை.” என அவர் சொல்லிக் கொண்டே செல்ல….

“உங்களுக்கு என்னப்பா வந்தது.” என்றாள் நேத்ரா கடுப்பாக.

“அவங்களால வளர்க்க முடியும்னு தோணினதுனால தான் தத்து எடுத்திருக்காங்க. இதுல நான் சொல்ல என்ன இருக்கு.”

“என் பையன் அவன் இஷ்ட்டத்துக்குப் படிச்சான், கல்யாணமும் பண்ணான் தான். ஆனா இப்போ அதுனால என்ன குறைஞ்சு போயிட்டான்.?

“என் பையன் ஒழுங்கா இல்லாம தறுதலையா இருந்தா தான் நான் கவலைப்படனும். அவன் இன்னைக்குப் பிரபல வக்கீல். அவன் பொண்டாட்டியும் ஒன்னும் குறையா இல்ல…. அதோட குடும்பம் குழந்தைகள்ன்னு நல்லாத்தான் இருக்கான்.”

“எல்லாரையும் போல அவனும் இருந்திருக்கலாம் தான். ஆனா இப்போ அவனைப் பார்த்து யாராவது யோசிப்பாங்க தான….” என்றார் கிரிஜாவும் மகனை விட்டுக் கொடுக்காமல்.

உங்களுக்கு இது தேவையா என்பது போல நேத்ரா அவளின் அப்பாவை பார்க்க…..

“எதோ சொல்லனும்னு தோனுச்சு.” என்றவர் விடைபெற்று சென்றார்.

நேத்ராவின் அப்பாவிடம் அப்படிப் பேசி விட்டாலும், கிரிஜாவுக்கு மனம் சரியில்லாமல் தான் இருந்தது. அன்று பார்த்து யுகேந்திரன் குடும்பத்துடன் வந்திருக்க…. அவருக்குச் சகஜமாக இருக்க முடியவில்லை.

“என்ன மா ஒருமாதிரி இருக்கீங்க?” யுகேந்திரன் தனிமையில் அவன் அம்மாவிடம் கேட்டே விட….

“நீ ஏன் டா மத்தவங்களைப் போல இல்லை. கேட்கிறவங்களுக்குப் பதில் சொல்லி முடியலை.” என்றார் சலிப்பாக.

“இதுதான் உங்களுக்குப் பிரச்சனையா?”

“எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை.”

“அப்புறம் என்ன? மத்தவங்க பேசுறதை எல்லாம் நீங்க ஏன் காதுல வாங்குறீங்க. யாருக்காவது எதாவது கேட்கனும்னா என்னைக் கேட்க சொல்லுங்க.”

“இனிமே அப்படியே சொல்றேன்.” என்றார் சிரிப்புடன்.

“இப்படியே இருங்க இதுதான் நல்லா இருக்கு.”

“ம்ம்…. எங்க உன் தம்பி ஒரு வருஷம் வெளிநாடு போறானாம். கூட நேத்ராவும் மீனாவும் போயிடுவாங்க. ஒரு வருஷத்துல வருவானா… இல்லை அங்கேயே இருந்திடுவானோ…. அவனுக்குத்தான் வெளிச்சம்.” என்றார்.

“அவன் போயிட்டு வரட்டும். நீங்க இங்க தனியா இருக்க வேண்டாம். ஒன்னு எங்களோட வந்து இருங்க. இல்லைனா நாங்க கூட இங்க வந்து இருக்கோம்.”

“மேல் வீட்ல தான் ஆள் இருக்காங்களே நான் தனியா இருந்துப்பேன்.”

“அந்தக் கதை எல்லாம் வேண்டாம். நாங்க இருக்கும் போது… நீங்க ஏன் மா தனியா இருக்கணும்.”

“எனக்கு வீட்டை விட்டுட்டு வர மனசு இல்லை. உனக்கு ஆபீஸ், ஆதவனுக்கு ஸ்கூல் எல்லாம் இங்க இருந்து தூரம். அதுதான் யோசிக்கிறேன்.”

“வார நாள்ல அங்க வந்து இருங்க. வாரக் கடைசியில இங்க வரலாம்.”

“சரி, உன் தம்பி கிளம்பட்டும் அப்புறம் வரேன்.”

மாலை வரை அங்கிருந்துவிட்டு, மறுநாள் ஆதவனுக்குப் பள்ளி இருப்பதால் நேரமே வீட்டுக்கு வந்துவிட்டனர்.

மறுநாள் காலை ஆதவனை எழுப்பிப் பள்ளிக்கு கிளப்ப… அப்போதே ஆதிராவும் எழுந்து விட்டவள், அண்ணன் எங்கையோ கிளம்புகிறானே என்று அவனையே பார்த்துக் கொண்டிருக்க….

“அண்ணா ஸ்கூலுக்குப் போறான். மதியம் வந்திடுவான்.” என்றாள் நக்ஷத்ரா.

யுகேந்திரன் சென்று மகனை பள்ளி பேருந்தில் ஏற்றிவிட்டு வர சென்றவன், ஆதிராவையும் தன்னோடு தூக்கிக் கொண்டு சென்றான்.

Advertisement