சிறிது நேரம் யோசித்தவன், “கஷ்ட்டமா தான் இருக்கும் மா… அதோட இத்தனை நாள் நினைச்சிட்டு இருந்த மாதிரி இல்லைன்னு தெரியும் போது, உடனே அதை ஏத்துக்க முடியாது தான…. ஆமாம் இப்போ எதுக்கு இதைக் கேட்கிறீங்க?. நீங்க ஆதிரா கிட்ட சொல்லப்போறீங்களா என்ன?” என்றதும், யுகேந்திரன் காரணம் காரியங்களோடு விளக்க….

“எங்களை மட்டும் சொல்வீங்க இல்லைப்பா… இஷ்ட்டம் இல்லாம மத்தவங்களுக்காக எந்த விஷயமும் செய்யாதன்னு, இப்போ நீங்க மட்டும் என்ன பண்றீங்க?”

“உங்களுக்கே இஷ்டம் இல்லாத ஒரு விஷயத்தை மத்தவங்களுக்காக ஏன் செய்யனும்?”

“நாம ஏன் மத்தவங்களுக்காக ஆதிராவோட சந்தோஷத்தையும் நிம்மதியையும் கெடுக்கணும்.”

“யாரோ சொல்றதை விட நாமலே சொன்னா பக்குவமா அவ மனசு நோகாம எடுத்துச் சொல்வோம் தானே….”

“நீங்க எப்படிச் சொன்னாலும், அது அவளுக்கு ஹர்ட் ஆகும்பா. ஏன்னா நீங்க சொல்லப்போற விஷயம் அப்படி?”
“சரி டா நீ சொல்ற மாதிரியே வச்சுப்போம். ஆனா வேற யாராவது சொன்னா?”

“நீங்க ஏன் அதை ஒத்துக்கிறீங்க? இல்லைன்னு சொல்லுங்க. வக்கீல் தானே நீங்க. பொய் சொல்ல மாட்டீங்களா… அதுவும் ஒரு நல்ல விசயத்துக்கு. அவ நம்மைத் தான் நம்புவா… யாரோ பொறாமையில சொல்றாங்கன்னு சொல்லிட்டு போவீங்களா….” என ஆதி சொல்ல… அந்த நிலையிலும் அவன் பேச்சு வீட்டினருக்குச் சிரிப்பை வரவழைத்தது.

“டேய் என்னை விட… உங்க அம்மாவை விட… நீதான் டா வக்கீலுக்குப் பொருத்தமான ஆள்.” என்றான் யுகேந்திரன்.

“உங்க ஆபீஸ்க்கு என்னை ஆபீஸ் பாய் ஆக்க பார்க்கிறீங்களா? அதெல்லாம் நடக்காது.”

“நான் என்ன ஆகாப்போறேன்னு எனக்கே இன்னும் தெரியலை….” ஆதி சொல்ல…

“நீ ஸ்கூல் பைனல்ல இருக்க… இன்னுமா முடிவு பண்ணலை.” என்றாள் நக்ஷத்ரா.

“அதுக்கு என்ன இப்ப அவசரம்.” என்றவன், “ஆதிராகிட்ட யாரும் எதுவும் பேச வேண்டாம். அவ எதுனாலும் என்கிட்டே சொல்லுவா… எனக்கு அவளை எப்படி ஹான்டில் பண்றதுன்னு தெரியும்.” எனச் சொல்லிவிட்டுச் சென்றான்.

“எப்படிப் பெரிய மனுஷன் மாதிரி பேசுறான்.” எனக் கிரிஜா பேரனை நினைத்து வியக்க…

“பசங்க தான் நம்மைப் பேச்சை கேட்கனும்னு இல்லை. நாமளும் பசங்க பேச்சை கேட்கலாம்.” என்றான் யுகேந்திரன். அதைக் கேட்ட பிறகே நக்ஷத்ரா நிம்மதியுற்றாள்.

ஆதிராவை பள்ளி வாகனத்தில் இருந்து அழைத்து வர யூகேந்திரனே சென்றான். அப்பாவை பார்த்ததும் துள்ளிக்கொண்டு வந்த ஆதிரா, அவள் தந்தையிடம் கதை அளந்து கொண்டு வந்தவள், வீட்டிற்கு வந்து அம்மாவின் முகத்தைப் பார்த்ததும் பதறிப்போனாள்.

\
“என்ன மா ஆச்சு ஏன் கண்ணெல்லாம் வீங்கி இருக்கு. நீங்க அழுந்தீங்களா என்ன?”

“ஆமாம் அழறாங்க.” என நக்ஷத்ரா சொல்ல…

“உங்க அம்மா தான் மத்தவங்களை அழ வைப்பா…. அவளை எல்லாம் யாரும் அழ வைக்க முடியாது.” என்றான் யுகேந்திரன்.

“சரியா சொன்னீங்கப்பா… இப்போ எல்லாம் பொண்ணுங்க தான் ஆம்பிளைங்களை டார்ச்சர் பண்றாங்க.”

“அப்படித்தான் டா டார்ச்சர் பண்ணுவோம். காலம் காலமா எங்களை என்ன பாடுபடுத்தினீங்க. படிச்ச மாப்பிள்ளை கிடைக்காதுன்னு எத்தனை பொண்ணுங்களை மேல படிக்க விடாம பண்ணீங்க. போன தலைமுறை வர பொண்ணுங்க அவங்களுக்காக எதாவது செஞ்சிருப்பாங்களா… ஏன் சாப்பாடு கூட வீட்ல கடைசியா தான் சாப்பிடுவாங்க. இப்போ எங்க காலம், நாங்க அப்படித்தான் ஆடுவோம்.” என நக்ஷத்ரா நிமிர்வாகச் சொல்ல….

“அது என்னவோ வாஸ்தவம் தான்.” என்றார் கிரிஜாவும்.

“உண்மை தான் இல்லைன்னு சொல்லலை…. ஆனா கொஞ்சம் பார்த்து பண்ணுங்க மா….நீங்க போடுற கண்டிஷன்ஸ் பார்த்து கல்யாணம்னாலே பசங்க எல்லாம் தெறிச்சு ஓடுறாங்க.” என்றான் யுகேந்திரன் கேலியாக.

““யோசிக்கிறோம்.” என்றாள்.

“அம்மா நிஜமா உங்களுக்கு ஒன்னும் இல்லையா?” என ஆதிரா கேட்க…

“எனக்கு ஒன்னும் இல்லை. தலைவலி தான் இப்போ பரவாயில்லை.”

“நாம எதுக்கும் ஹாஸ்பிடல் போயிட்டு வந்திடலாமா?”

“தலைவலிக்கு எல்லாமா ஹாஸ்பிடல் போவாங்க. நாளைக்கும் விடலைனா போகலாம்.”

“நீங்க என்ன ஹாஸ்பிடல் போகக் கூட இவ்வளவு யோசிக்கிறீங்க? நான் வேணா டாக்டர் ஆகிடவா… அப்போ உங்களுக்கு வீட்ல இருந்தே ட்ரீட்மெண்ட் பார்ப்பேன்.”

“போன வாரம் தான் வக்கீல் ஆகப்போறேன்னு சொன்ன.” என ஆதித்யா ஞாபகப்படுத்த….

“அது போன வாரம். இது இந்த வாரம். இல்லை ஆதிரா…” என யுகேந்திரனும் கேலி செய்ய….

“போங்கப்பா… எங்க மிஸ் தான் சொன்னாங்க, எல்லாராலையும் டாக்டர் ஆக முடியாது. நீ நல்லா படிக்கிற டாக்டருக்கு படின்னு.”

“யார் என்ன வேணா சொல்லட்டும் டா… உனக்கு என்ன ஆகணும்னு ஆசைன்னு நீதான் முடிவு பண்ணனும். நானும் உங்க அம்மாவும் எங்களோட கனவுக்காக வக்கீலுக்குப் படிச்சோம். எதுவும் நமக்குப் பிடிச்சுச் செஞ்சாத்தான் மனசுக்கு நிறைவா இருக்கும். அது மட்டும் எப்பவும் ஞாபகம் வச்சுக்கோ.”
“எனக்கு எதுவுமே பிடிக்க மாட்டேங்குதே…. நான் என்ன செய்யுறது?” என ஆதித்யா யோசிக்க….

“ம்ம் நேரத்துக்குச் சாப்பாடு, காசுன்னு எல்லாமே கிடைக்கிறதுனால இருக்குமோ…. இதெல்லாம் நிறுத்துனா தானா எதிலாவது பிடிப்பு வரும்.” என யுகேந்திரன் சொன்னதும்,

“சும்மா சொன்னேன். உடனே ஆரம்பிக்காதீங்க. நான் பிஸ்னஸ் மேனேஜ்மென்ட் முடிச்சு, கொஞ்ச நாள் வேலைக்குப் போயிட்டு அப்புறம் நானே சொந்தமா பிஸ்னஸ் ஆரம்பிச்சு பெரிய தொழில் அதிபரா ஆகிறேனா இல்லையான்னு பாருங்க அப்போ என்னோட கம்பெனி கேஸ் எல்லாம் உங்க ரெண்டு பேருக்கே தரேன்.” என ஆதித்யா பந்தா பண்ண…

“எடு அந்த விளக்கமாற, கொஞ்சம் விட்டா பேசிட்டே போவியா…. உங்க அப்பாவோட ஒரு நாள் பீஸ் எவ்வளவு தெரியுமா…. நான் எத்தனை கேஸ் பார்க்க முடியாம விடுறேன்னு தெரியுமா? இதுல இவர் எங்களுக்குக் கேஸ் கொடுப்பாராம்.” என நக்ஷத்ரா ஆதித்யாவை அடிக்கத் தேட….

“இந்தாங்கம்மா நீங்க கஷ்ட்டபடாதீங்க.” என வீடு கூட்டும் விளக்கமாரை ஆதிரா கொண்டு வந்து கொடுக்க….

“யூ டூ ஆதிரா, வெரி பேட்.” என்றான்.

“நீ என்ன வேணா படி, ஆனா ஹஷ்டல்ல போய்ப் படி.” என யுகேந்திரன் சொன்னதற்கு,

“ஏங்க உங்களுக்கு இவனைப் பத்தி தெரியாதா? அங்க போன பிறகு சாப்பாடு சரி இல்லை… நீங்க வாங்கன்னு என்னைக் கூப்பிடுவான்.” என்றாள் நக்ஷத்ரா.

“ஆமாம்பா அப்படித்தான் பண்ணுவான்.” என்றாள் ஆதிராவும்.

“பரவாயில்லை என்னைப் பத்தி நல்லா தெரிஞ்சு வச்சிருக்கீங்க.”

“ஆமாம் இதெல்லாம் ரொம்பப் பெருமையான விஷயம் தான்.” என முறைத்த தந்தையைத் தங்கைக்கு அவன் ஜாடை காட்ட….
“அப்பா உங்களை டென்ஷன் பண்ணனும்னு வேணும்னே பண்றான் பா.” என்றாள் ஆதிரா.

பிள்ளைகள் இருவரோடும் வழக்கடித்ததில் நேரம் போனதே தெரியவில்லை… இரவு உணவிற்கு நேரம் ஆகி இருக்க….இரவு உணவு முடித்த பிறகே அன்று அவரவர் வேலைகளைப் பார்க்க துவங்கினர்.

அன்றைக்குப் பிறகு அந்த விஷயத்தைப் பற்றி அவர்கள் யாரும் பேசவே இல்லை. நாட்கள் செல்ல… ஆதித்யா நல்ல மதிப்பெண்கள் எடுத்து தேர்வாகி இருக்க… அவனே பெங்களூரில் இருக்கும் கல்லூரியில் இளங்கலையோடு முதுகலைப்பட்டமும் சேர்ந்து படிக்கும், நான்கு வருட படிப்பில் சேர்வதாகச் சொன்னான்.

“இவன் ஹாஸ்டல்ல போய் எல்லாம் இருந்துக்குவானா?” என நக்ஷத்ரா கவலைக்கொள்ள….

“அவனால இருக்க முடியலைனா… நான் போய் இருந்து பார்த்துக்கிறேன்.” எனக் கிரிஜா சொன்ன பிறகே நக்ஷத்ரா நிம்மதியானாள். ஆனால் அவனாக விருப்பட்டுச் சேர்ந்ததாலோ என்னவோ, ஆதித்யா சமாளித்துக் கொண்டான். உடன் அவனுடன் பள்ளியில் படித்த நண்பர்கள் இருந்த காரணமாகவும் இருக்கலாம். மாதம் ஒருமுறை வார இறுதியில் வீட்டிற்கு வந்துவிட்டு செல்வான்.

நஷத்ராவுக்குத் தான் ஆதியை நினைத்துக் கவலையாக இருக்கும். ஆனால் இங்கு ஆதிராவையும் விட்டு செல்ல முடியாமல் இருந்தாள்.
ஒன்பதாவது படிக்கும் போது தான் ஆதிரா பெரிய மனுஷி ஆகி இருக்க… அப்போது யுகேந்திரன் டெல்லியில் இருந்தவன், விஷயம் கேள்விப்பட்டு மகளுக்கு உடனே ஒரு நகை செட்டுடன் வர…. ஆதிரா விருப்பபடியே வீட்டிலேயே சின்ன விசேஷமாகச் செய்தனர்.

ஆதிரா பதினோராம் வகுப்பு படிக்கும் போதே நீட் தேர்வுக்கும் தயாராகிக் கொண்டிருந்தாள்.

சில நாட்களாக ஆதிரா யாரோடும் கலகலப்பாகப் பேசுவது இல்லை. எதாவது கேட்டாலும் எரிந்து விழுந்தாள். அவள் வீட்டில் யாரோடும் சரியாகப் பேசுவது இல்லை. காரணம் கேட்டாலும் படிப்பை காட்டி ஒதுங்கி சென்றாள்.

“உனக்குப் படிக்கக் கஷ்ட்டமா இருந்தா…. டாக்டருக்கு தான் படிக்கணும்னு இல்லை. வேற கூட எடுத்துப் படிக்கலாம். நீ உன்னைப் போட்டு ரொம்ப வருத்திகாத.” என நக்ஷத்ரா சொன்னதற்கும் ஆதிரா பதில் சொல்லவில்லை.

யுகேந்திரனும் அப்போது ஊரில் இல்லை. நக்ஷத்ரா அவளுக்குத் தெரிந்த மனநல மருத்துவரிடம் ஆலோசனை கேட்க….
“இப்போ படிக்கிற பசங்களுக்கு நிறைய ஸ்ட்ரெஸ் இருக்கும். அதோட அவளோட மந்த்லி சைக்கிள் நேரத்துக்கு முன்னும் பின்னும் கூட மூட் ஸ்விங்ஸ் இருக்கும். நல்ல சத்தான சாப்பாடு கொடுங்க. ரொம்பப் படிச்சிட்டே இருக்காம கொஞ்சம் வெளியேவும் போயிட்டு வாங்க. கொஞ்ச நாள் பார்க்கலாம், அப்படியும் இப்படியே இருந்தா…. வேற யோசிக்கலாம்.” என்றார்.

அந்த வாரம் வந்த மகனிடம் நக்ஷத்ரா இதைச் சொல்ல…. தங்கையை அவளுக்குத் தெரியாமல் நோட்டம் விட்டான்.
பள்ளிக்கு செல்ல மிகவும் விருப்பட்டுச் செல்வாள் ஆதிரா. ஆனால் இப்போது மிகவும் எரிச்சல் பட்டாள். பள்ளியில் இருந்து திரும்பி வரும் போதும் கோபத்துடன் தான் வருவாள். அந்த எரிச்சலை வீட்டிலும் காட்டினாள். அவளுக்குப் பள்ளியில் தான் எதோ பிரச்சனை என்று புரிந்தது.

“உனக்கு ஸ்கூல்ல எதாவது பிரச்சனையா ஆதிரா.” என ஆதி கேட்க….

முதலில் வெகுவாகத் தயங்கியவள், “அங்க ஒரு லூசு பையன் இருக்கான். எப்பவும் என்னையே பார்த்திட்டு, நான் எங்க போனாலும் என் பின்னாடியே சுத்திட்டு இருக்கான்., ரொம்ப டார்ச்சரா இருக்கு. என்னால படிக்கவே முடியலை. நான் டாக்டர் ஆக முடியாதா.” என்று அவள் பயந்து போய்த் தான் சொன்னாள்.