Advertisement

இலக்கணம் – 2
புல்லட்டை செங்கல் சூளை அலுவலகத்தின் முன்னில் நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தான் சத்யா. அவனைக் கண்டதும் பரிச்சயமாய் சிரித்தார் கணக்கர் குமரேசன்.
“வாங்க தம்பி……. மாமா உள்ளே தான் இருக்கார்…… நீங்க வந்ததும் வர சொன்னார்…..” என்று தகவலையும் கொடுத்தார். அவரிடம் தலையசைத்து விட்டு அங்கிருந்த சிறிய அறைக்கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான்.
மேசைக்குப் பின்னில் வாட்டசாட்டமாய் நல்ல நிறத்துடன் கம்பீரமாய் அமர்ந்திருந்தார் இளமாறன். மூக்குக் கண்ணாடி வழியே மேசையில் இருந்த பேப்பரில் கண்ணைப் பதித்திருந்தவர், சத்யாவைக் கண்டதும் நிமிர்ந்தார்.
“வா சத்யா…… போன விஷயம் என்னாச்சு…… நாம கேட்ட விலைக்கு மணல் குவாரியை தர்றதுக்கு அந்த கனகு ஒத்துகிட்டாரா….. ரொம்ப பிடிவாதமா இருந்தாரே……..”
அவருக்கு எதிரில் இருந்த நாற்காலியில் அமர்ந்தவன், “அதெப்படி மாமா….. ஒரு விஷயம் நீங்க என்கிட்டே சொல்லிட்டா அதை நடத்தாம விட்டிருவேனா…… அவர் ஒத்துகிட்டார் மாமா……” என்றான் புன்னகையுடன்.
“ம்ம்…. நீ கெட்டிக்காரப் பிள்ளைப்பா….. என்ன பண்ணினே…… அந்த புரோக்கருக்கு அமவுண்ட் ஏதாவது கொடுத்து சரி பண்ணிட்டியா……”
“இல்லை மாமா….. கனகு முதல்ல பிடிவாதமா தான் இருந்தாரு…… நாங்க பேசிட்டு இருக்கும்போது அவர் பையன் வந்தான்……. அவனுக்கு மெடிக்கல் காலேஜ்ல சீட் கிடைச்சிருக்குறதாகவும் அதுக்கு உடனே ஒரு பெரிய தொகை கட்டணும்னும் சொன்னான்…… இவர் இப்போ நிதிநிலமைல கொஞ்சம் கஷ்டப்பட்டுட்டு தான் இருக்கார்….. அதான் அந்த குவாரியைக் கூட விக்கற முடிவுக்கு வந்திருக்கார்…… காலேஜ் பிரின்சிபல் மாமாவுக்கு தெரிஞ்சவர் தான்…. அவர்கிட்டே சொல்லி தொகையைக் குறைக்க சொல்லறேன்னு சொன்னேன்….. அந்த தொகையை நாம முன்பணமா கொடுக்கறதாவும் சொன்னேன்….. சரின்னு அதே விலைக்கு சம்மதிச்சுட்டார்…….” மென்மையாய் புன்னகைத்தான் சத்யன்.
“ம்ம்…. எந்த நேரத்துல எதைப் பண்ணி காரியத்தை சாதிக்கணும்னு நல்லாவே புரிஞ்சு வச்சிருக்கே…… அந்தப் பையனோட படிப்புக்கு நாம சின்னதா உதவி செய்த போலவும் ஆச்சு…..”
“ம்ம்….. எல்லாம் நீங்க சொல்லி கொடுத்தது தான் மாமா…. வியாபாரத்துல கருணையும், கருணைல வியாபாரமும் கூடாதுன்னு நீங்க சின்ன வயசுல சொல்லிக் கொடுத்தது இப்பவும் எனக்கு நினைவிருக்கு…….” என்றவனை பெருமையுடன் நோக்கி சிரித்தார் இளமாறன்.
“ம்ம்….. நல்லவொரு பிசினஸ் மேனா வரதுக்கான எல்லாத் தகுதியும் உனக்கு வந்திருச்சு……” என்றவரிடம்,
“எனக்கு அதெல்லாம் வேண்டாம் மாமா…. எப்பவும் உங்களோட நிழல்ல உங்களுக்கு துணையா இருந்தாலே போதும்….. இந்த வாழ்க்கை….. இந்த தகுதி…. எல்லாமே உங்களால வந்தது தானே….. உங்களைத் தாண்டி நான் எதுக்குமே ஆசைப்படலை மாமா……” என்றான் அவன் நிதானமாக.
தங்கை மகனின் வார்த்தையில் நெகிழ்ந்தவர், “சரி…. எந்த காலேஜ் சத்யா…… நம்ம தனபால் பிரின்சிபாலா இருக்காரே….. அதுவா…….” என்றார்.
“ஆமாம்…. மாமா….. நீங்க அவர்கிட்டே பேசிடுங்க…….” என்றவன், “சரி மாமா…… குவாரி வாங்குறது சம்மந்தமா கொஞ்சம் பத்திரம் எல்லாம் ரெடி பண்ண வேண்டி இருக்கு…… நான் கிளம்பறேன்…..” என்று எழுந்தான்.
“ம்ம்…. சரி சத்யா….. நீ அந்த வேலையைப் பாரு…… நானும் குவாரிக்குக் கிளம்பறேன்……” என அவர் கூறவும் சத்யாவின் புல்லட், டுட்டுட்டுட்….. என கம்பீரமாய் சத்தத்தை எழுப்பிக் கொண்டு கிளம்பியது.
அவனை நெகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தவரின் கண்ணில் பல வருடங்களுக்கு முந்திய பழைய நிகழ்வொன்று நினைவுக்கு வந்தது.
சத்யாவுக்கு அப்போது பனிரெண்டு வயதிருக்கும். அவன் முன் வாசலில் இலக்கியாவுடன் விளையாடிக் கொண்டிருக்க, இளமாறன் மனைவி லலிதாவுடன் ஹாலில் எதோ பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு பெண்மணி காய்கறி, கீரைக் கூடையுடன் வீட்டுக்கு முன்னில் வந்து நின்று “கீரை, காய் வேணுமா தாயி……” என்று கூவிக் கொண்டிருந்தார். அதைக் கேட்ட லலிதா முன் வாசலுக்கு வர, அவருடனே இளமாறனும் வெளியே வந்தார்.
தினமும் இளமாறனுக்கு உணவில் கீரை அவசியமாய் வேண்டும். எப்போதும் வருகிற கீரைக்காரம்மா அன்று வராததால் தானே கடைக்கு சென்று வாங்கி வர இருந்த லலிதா, புதிய கீரைக்காரியின் குரல் கேட்டு வாசலுக்கு வந்தார்.
பசுமையாய் இருந்த கீரைக் கட்டைப் பார்த்தவர், மூன்று கட்டு கீரைகளை எடுத்துக் கொண்டு விலை கேட்க, அந்தப் பெண்மணி பதினைந்து ரூபாய் என்றார்.
“எப்போதும் வருகிற கீரைகாரம்மா பத்து ரூபாய்க்கு மூணு கட்டு தருவாங்களே…. நீங்க என்ன பதினஞ்சு சொல்லறீங்க….” என்றார் லலிதா.
“எனக்கு விலை கட்டாது தாயி….. ரெண்டு ரூபா குறைச்சு பதிமூணுக்கு எடுத்துக்கங்க……” என்றார் அந்தப் பெண்மணி. உடனே இளமாறன், “பத்து ரூபாக்கு கொடுத்தா வாங்கு லலி….. இல்லன்னா வேண்டாம்….” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று விட்டார்.
லலிதாவும், “பத்து ரூபாக்கு கொடுத்தா கொடு….. இல்லன்னா வேண்டாம்…..” என்று எழுந்திருக்கவும், “சரிம்மா எடுத்துக்கங்க…..” என்று கீரைக் கட்டுகளை அவர் கையில் கொடுக்க அவரும் பணத்தைக் கொடுத்து வாங்கிக் கொண்டார்.
“கொஞ்சம் தண்ணி குடுங்க தாயி……” என்றவரின் சோர்ந்த முகத்தைக் கண்ட லலிதா, “பசிக்குதா……. ஏதாவது சாப்பிட்டியா….” என்றார் கனிவுடன்.
“காலைல நேரமா சந்தைல இருந்து கிளம்பி வந்தது தாயி…. வியாபாரத்தை முடிச்சிட்டுப் போயி தான் எதுனா சாப்பிடனும்….. தாகமா இருக்கு…. கொஞ்சம் தண்ணி குடுங்க…….” என்றார் அந்தம்மா.
“ம்ம்….” என்று உள்ளே வந்த லலிதாவிடம், “லலி….. அந்த இட்லியை எடுத்துக் குடு….. பாவம்…. சாப்பிட்டுப் போகட்டும்….” என்றார் இளமாறன்.
“சரிங்க…..” என்று புன்னகையுடன் உள்ளே சென்ற லலிதாவும் ஐந்து இட்லியைத் தட்டில் வைத்து அதற்குண்டான சாம்பார் சட்னியுடன் வந்தார்.
கீரைக்காரம்மாவிடம் சாப்பிட சொல்லி தட்டை நீட்ட,  சந்தோஷத்துடன் வாங்கி சாப்பிட்டுவிட்டு நன்றி கூறிச் சென்றார் அவர். இவை அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்த சத்யன், மெதுவாய் அத்தையிடம் வந்து சந்தேகத்தைக் கேட்டான்.
“அத்தை……. மாமாவும், நீங்களும் அந்த அம்மாவுக்கு மூணு ரூபாய் கீரைக் கட்டுல சேர்த்துக் குடுக்கலை….. ஆனா அஞ்சு இட்லிக்கு அதுக்கு மேலே பணம் ஆகும்ல…… அப்புறம் எதுக்கு அப்படிப் பேசினிங்க…..” என்றான்.
அவன் கேள்வி கேட்டதை கவனித்துக் கொண்டிருந்த இளமாறன் அவனை அருகில் அழைத்தார்.
“சத்யா……. நாம வியாபாரத்துல படிக்க வேண்டிய முக்கியமான பாடம் இதுதான்…… வியாபாரத்துல கருணை காட்டக் கூடாது…… கருணைல வியாபாரம் பார்க்க கூடாது……. ரெண்டையும் ரெண்டா தான் பார்க்கணும்….. கீரைக்கட்டை பேரம் பேசி வாங்கினது வியாபாரம்…… அந்தம்மா பசிக்குதுன்னு சொன்னதும் இட்லியைக் கொடுத்தது கருணை…… நான் சொல்லுற அர்த்தம் உனக்குப் புரியுதா….” என்றார்.
அவர் சொல்லுவதை கவனமாய் கேட்டுக் கொண்டு தலையை பலமாய் ஆட்டி, “புரிஞ்சது மாமா…….” என்ற அந்தப் பிஞ்சு மனதில் அந்த விஷயம் ஆழமாய் பதிந்து விட்டிருந்தது. 
அதை நினைத்துக் கொண்டிருந்தவர், “எப்போதோ நான் சொன்ன ஒரு வார்த்தையை இப்போதும் பின்பற்றுகிறானே….. எந்த விஷயத்தையும் கண்ணும் கருத்துமா கவனிச்சு செய்யறான்……. மனசுல நினைக்கறதுக்குள்ளே அந்த விஷயத்தை முடிச்சிட்டு வந்து நிக்கறான்….. அருமையான பிள்ளை…. தங்கச்சி இருந்திருந்தா மகனைப் பாரத்து ரொம்பப் பெருமைப்பட்டிருப்பா…. ஹூம்…..” என ஒரு பெருமூச்சை வெளியேற்றிக் கொண்டே மணல் குவாரிக்குக் கிளம்பினார்.
“ஏய் இளா….. கேண்டீன் போயிட்டு வரலாம் வாடி…. பசிக்குது…”. என முகத்தை சுருக்கி வயிற்றில் கை வைத்து அபிநயம் பிடித்த தோழி வீணாவைக் கண்டு சிரித்த இலக்கியா, “என்னது….. இப்பதான் ஒரு கிளாஸ் முடிஞ்சது…… அதுக்குள்ளே பசியா….. உன் வயித்துக்குள்ளே அண்டா ஏதாவது வச்சிருக்கியா என்ன……” எனக் கிண்டலடிக்க அவள் முகத்தை சுளித்தாள்.
“ஏய்…. ரொம்ப தான் ஓட்டாதடி…. காலைல கிளம்பறதுக்கு டைம் ஆச்சுன்னு சாப்பிடாம வந்துட்டேன்….. அதான் பசிக்குது…..”
“ஓ…… அதான் குடல் கருகுற வாசம் வருதா…… சரிசரி… வா….. ஏதாவது உள்ளே தள்ளி ஆப் பண்ணிட்டு வருவோம்……” என்று எழுந்தவள் வீணாவுடன் நடந்தாள்.
இருவரும் சிரித்துக் கொண்டே காண்டீனுக்கு வந்து ரெண்டு வடை, காபி சொல்லிவிட்டு அமர்ந்தனர். அந்த நேரத்திலும் சில மாணவர்கள் வகுப்புக்கு செல்லாமல் மேசையை சூழ்ந்து அமர்ந்து கலகலத்துக் கொண்டிருந்தனர். தோழியுடன் பேசிக் கொண்டே எதிரில் பார்வையைப் பதித்தவள், இரண்டு மேசை தள்ளி நண்பர்களுடன் அமர்ந்து அவர்களைப் பார்த்துக் கொண்டே டீ குடித்துக் கொண்டிருந்த விக்ரமைக் கண்டதும் வெறுப்புடன் முகம் சுளித்தாள்.
“ச்சே….. பொண்ணுகளையே பார்க்காத போல இப்படி வெறிச்சுப் பார்த்துட்டு இருக்கான்….. பொறுக்கி…. இவனை எல்லாம் பொறுக்கித்தனம் பண்ணறதுக்குன்னே வீட்டில பெத்து விட்டிருப்பாங்க போலிருக்கு….. எதுக்குதான் காலேஜுக்கு வந்து நல்ல பசங்களையும் கெடுக்கிறானோ…..” என்று அவள் முணுமுணுத்தது வீணாவின் காதில் விழ,
“ஏய்…. நீ யாரைடி சொல்லறே…..” என்று கேட்டுக் கொண்டே அவள் திரும்பிப் பார்த்தாள். “விக்ரம் அண்ணாவையா சொல்லறே…..” என்று கேட்ட தோழியை முறைத்தவள், “என்ன அண்ணா…. நொன்னான்னு உரிமை கொஞ்சிட்டு இருக்கே…… எனக்கு அவனைப் பார்த்தாலே எரிச்சலா இருக்கு……” என்றாள் இலக்கியா.
“ஏன் இளா அப்படி சொல்லறே……” என்று வீணா கேட்டுக் கொண்டிருக்கும்போதே வடை வரவும், “அந்த கேடியோட பேச்சு நமக்கு எதுக்கு…. நீ வடை சாப்பிடு…..” என்றவள், அமைதியாய் சாப்பிடத் தொடங்கினாள்.
சட்டென்று அவர்களுக்குப் பின்னால் ஏதோ சத்தம் கேட்கவும் திரும்பினாள். விக்ரம் தான் கண்கள் சிவக்க ஒரு மாணவனின் சட்டையைக் கொத்தாகப் பற்றிக் கொண்டு நின்றிருந்தான்.
அவனது கன்னத்தில் ஆல்ரெடி விக்ரமின் கைரேகை பதிந்திருக்க, அதை ஒரு கையால் நீவிக் கொண்டே, “அண்ணா…. ப்ளீஸ் ணா……. என்னை விட்டிருங்கண்ணா…… நீங்க சொல்லற மாதிரியே நடந்துக்கறேன்……” என்று கெஞ்சிக் கொண்டிருந்தான் ஜூனியரான மாணவன் ஒருவன்.
அங்கிருந்த மாணவர்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்த்தாலும் ஒருவரும் அவர்களை நெருங்கவில்லை. கெஞ்சியவனை எச்சரித்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தான் விக்ரம். அதைக் கண்டதும் இலக்கியாவின் நெஞ்சம் துடித்தது.
“என்னவொரு அராஜகம்……. இவன் சொல்லுவது போல தான் எல்லாரும் நடந்து கொள்ள வேண்டுமா…. ஏய்… வீணா…. எழுந்து வா…. இப்பவே போயி பிரின்சிபால் கிட்டே கம்ப்ளைன்ட் கொடுத்துட்டு வரலாம்…… எல்லாரும் இங்கே படிக்க வந்தா, இவன் ரவுடித்தனம் பண்ணறதுக்குன்னே வருவான் போலருக்கு…..” என்று பொங்கியவளைப் பிடித்து வைத்து சமாளிப்பது வீணாவுக்கு பெரும் வேலையாகப் போனது. ஒரு வடை மட்டும் வாய்க்குள் சென்றிருக்க இன்னொரு வடையை, “வடை போச்சே……” பீலிங்குடன் ஒரு பார்வை பார்த்துவிட்டு தோழியை இழுத்துக் கொண்டு வகுப்புக்கு நடந்தாள்.
“ஏய்… என்னை எதுக்குடி இப்படி இழுத்துட்டுப் போறே…. யாருமே எதுவும் சொல்லாம கண்டுக்காமப் போகுறதால தான் அந்த விக்ரம்க்கு திமிர் ஜாஸ்தியாகிடுச்சு…… நாம போயி கம்ப்ளெயின்ட் கொடுப்போம் வா…..” என்றாள் இலக்கியா.
“வேண்டாம் இளா…. நமக்கு எதுக்கு வம்பு….. அவங்க சீனியர்…. அதும் இல்லாம என்ன பிரச்சனைக்கு அடிச்சுகிட்டாங்கன்னே தெரியலை….. நம்மளும் எல்லாரயும் போல கண்டும் காணாமப் போயிடுவோம்……” என்றவள் அவள் கையை விடாமல் இழுத்துச் சென்றாள்.
“என்ன காரணம் வேணும்னாலும் இருந்துட்டுப் போகட்டும்…. தண்டனை கொடுக்க இவன் யாரு….. இவன் என்ன நம்ம காலேஜ் தாதாவா…… பெருசா பிலிம் காட்டிட்டு இருக்கான்……. சீனியர்னா கொம்பா முளைச்சிருக்கு…..” பொருமினாள் இலக்கியா.
“அடி என் கறுப்புத் தங்கமே…… போதும் பொங்கினது….. கொஞ்சம் அடங்கு…… சீக்கிரம் மேம் வரதுக்குள்ளே கிளாஸ்க்கு போகலாம்…. இல்லன்னா வெளியே நிக்க வச்சிரும்……” என்றதும் அவளும் வேகமாய் வகுப்பறைக்கு விரைந்தாள். நல்லவேளையாய் அதற்குள் வகுப்புக்கு மேம் வராமலிருக்க நிம்மதிப் பெருமூச்சுடன் வகுப்புக்குள் நுழைந்தனர்..
அங்கு முன்னில் சிறு குரூப்பாய் நின்று கொண்டிருந்த மாணவர்களில் ஒருவன், “டேய்….. என்னடா…. கருப்பு நிலா இந்த நேரத்துல எங்கயோ உலா போயிட்டு வர்ற போலருக்கு…… ஏதாவது கிரீம் வாங்கப் போயிருக்குமோ…….” என்றான் வேண்டுமென்றே. அதைக் கேட்டதும் அவளுக்கு சுர்ரென்று கோபம் தலைக்கேற விக்ரமின் மேலுள்ள கோபத்தையும் சேர்த்து அவனிடம் காட்டினாள்.
“டேய்…. கறுப்புன்னா உனக்கு அவ்ளோ இளக்காரமா……. அது ஒரு நிறம்….. அவ்ளோ தான்….. சிவப்பானவங்க தான் அழகுன்னு எந்த இலக்கியமும், அறிவியலும் சொல்லலை….. ஆனா, கறுப்பு தான் ஆரோக்கியம்னு ஆய்வுகள் சொல்லுது……. அதை முதல்ல புரிஞ்சுக்க….. மத்தவங்க நிறத்தைப் பழிக்கற உன் மனசு தான் இருண்டு கறுப்பாக் கிடக்கு…… அதை முதல்ல நல்லா கழுவு…….” என்று சொல்லிக் கொண்டே வகுப்புக்குள் நுழைந்தவளை அந்த மாணவன் அதிசமாய்ப் பார்க்க வீணா திகைப்புடன் தோழியைத் தொடர்ந்தாள்.
தனது இருக்கையில் சென்று அமர்ந்தும் இலக்கியாவின் மனது அடங்கவில்லை….. கொதித்துக் கிடந்தது.
எப்போதும் யாராவது கிண்டல் செய்தால் அமைதியாய் நகர்ந்து விடும் இலக்கியா, இன்று இப்படியெல்லாம் பேசியதைக் கேட்டு வீணாவும் திகைத்துப் போய் விட்டாள். தோழியை சமாதானிப்பதற்காய் அவள் தோளில் கை வைத்தாள்.
“இளா….. என்ன இது….. எதுக்கு இத்தனை கோபம்…… நீ இப்படி இருக்க மாட்டியே….. என்ன ஆச்சு உனக்கு….. கறுப்பா இருந்தாலும் நீ எத்தனை லட்சணமா அழகா இருக்கே….. அது உனக்கே தெரியும் தானே….. அப்புறம் எதுக்கு இப்படில்லாம் கண்டவனுக்கு நின்னு பதில் சொல்லிட்டு இருக்கே……” என்று பொறுமையாய் கூறினாள் வீணா.
ஒரு நிமிடம் அவள் சொல்வதைக் கேட்டு அமைதியாய் இருந்த இலக்கியா,
“இல்லடி….. அவன் எப்பவும் என்னைப் பார்க்கும் போதெல்லாம் இப்படிதான் இளக்காரமா பேசிட்டு இருக்கான்…… கறுப்பு என்ன அவமானச் சின்னமா…… எல்லாரும் நக்கலும் இளக்காரமாய்ப் பார்க்க…… கறுப்பாய்ப் பிறந்தது என் தப்பா….. எதோ நான் வேண்டி வரமிருந்து வாங்கிட்டு  வந்தது போல இப்படி எல்லோரிடமும் ஒரு எகத்தாளப் பார்வை…… இனி யாராவது என் நிறத்தைப் பற்றி கேலி செய்யட்டும்…… அவங்களுக்கு இருக்கு….” என்று கறுப்பு முகத்தில் அனல் தெறிக்கக் கூறினாள் தோழியிடம்.
தாரின் நிறம் மாற்ற….
தடவாத கிரீமும் இல்லை…..
பளபளவென்று சிவப்பாக்க
போடாத சோப்பும் இல்லை…..
கறுப்பு ஒட்டிக் கொள்ளுமோ என்று
ஒதுங்கிக் கொண்ட உறவினர்கள்….
அன்னையே எனக்காய் நீ குங்குமப் பூ
உண்ணவில்லையா…….
கோவித்து கண் சிவக்க நான் கேட்க –
நீயோ புன்னகைத்து கட்டியணைத்து
கூறினாய் என் காதில்……
நான் மாநிறம் தானென்று….. 
வாய் கூசாமல் நீ சொன்ன
பொய்யை கேட்டு நாள் பொழுதும்
முகம் பார்க்க நின்றிருந்தேன்….
கண்ணாடியில் தெரியும் முகம்
தான் மாநிறம் என்றெண்ணி………..
கறுப்பு என் நிறத்தில் அல்ல…..
பார்ப்பவரின் மனதில் தான்…..
என்று புரிந்து கொள்ளாமலே…….

Advertisement