அவள் மற்றவர்களோடு பேசிக் கொண்டே இருந்தாள்.  பள்ளி தோழர்கள் எல்லோருக்கும் வர்ஷினியின் மேல்தான் பார்வை. வர்ஷினிதான் எல்லோரையும் ஈர்த்தாள். ஜீன்.. ஷர்ட் குர்த்தி.. காதுகளில் பெரிய சந்திரபிம்ப தோடுகள் முத்துக்களோடு.. அவள் பேச பேச அசைய.. அவள் பேச்சை கவனிப்பதா.. அவளின் தோடுகளை பார்ப்பதா.. அவளை பார்ப்பதா.. என பசங்க எல்லோருக்கும் அலாதி குழப்பமாக.. அவளிடம் மட்டுமே பேச்சு பார்வை எல்லாம். எல்லோரும் வர்ஷினியிடம் நட்பு பாராட்டினர்.. வர்ஷினியும்.. எல்லோரோடும் சகஜமாக இருந்தாள். 

உணவுகள் ஆர்டர் செய்தனர்.. நண்பர்கள் நால்வர் அவள் அருகில் அமர்ந்துக் கொண்டு.. இது சாப்பிடு.. எப்படி இருக்கு.. என ஏதேதோ பேசிக் கொண்டே இருந்தனர். உமர் சர்வேஷ் ஷர்மி என இவர்கள்தான் அவளை கண்காணித்தனர்.

மீரா சர்வேஷ் அருகில் அமர்ந்திருந்தாள்.. ஆனால், அவனின் கவனம் எல்லாம் வர்ஷினி மேல்தான் இருந்தது. 

ராக்கிக்கு பெரிதாக பர்த்டே பாடல் பாடி.. கேக் கட் செய்து.. அதையும் உண்டு.. ஒருவழியாக்கிதான் அங்கிருந்து கிளம்பினர், தோழர்படை.

மீரா, சர்வேஷ்ஷோடுதான் வீடு செல்லுவேன் என அடமாக நிற்க.. வேறு வழியில்லாமல்.. வர்ஷினி சர்வேஷ்ஷிடம் கண்களால் விடைபெற்று கிளம்பினாள்.. ஷர்மியோடு ஸ்கூட்டியில்.

மீராவின் மனது நெருடத் தொடங்கியது. சர்வேஷ்ஷிடம் தன் மனதை சொல்லியிருக்க வேண்டுமோ என எண்ணம் அதிகமாகியது அடுத்தடுத்து வந்த நாட்களில்.

மீரா, பள்ளியில் சர்வேஷ்ஷிடம் அதிகமாக பேசத் தொடங்கினாள். சர்வேஷ், மீராவோடான நட்பினை தொடர்ந்தான். அவனுக்கு அதில் எந்த பிரச்சனையும் இருந்ததில்லை. ஆனால், மீராவினால், முன்போல.. சர்வேஷ்வோடு.. இயல்பாக இருக்க முடியவில்லை.. அவனின் நடவடிக்கைகள் மாறியதாக தானே உணர்ந்துக் கொண்டாள்.

அடுத்து எக்ஸாம்.. என நாட்கள் வளர்ந்தது.

எல்லோரும் நீ படிக்கலை நான் படிக்கவில்லை என பேச்சுதான் பலமாக இருக்க.. அரையிறுதி பரிட்சை தொடங்கியது வர்ஷினிக்கு. 

சர்வேஷ் அண்ட் நண்பர்கள் மீரா என அவர்களுக்கு எல்லாம்  முன்பே எக்ஸாம் முடிந்துவிட்டது. இப்போது ரிவிஷன் தொடங்கிவிட்டது. 

வர்ஷினி தன் வகுப்பு தோழிகளோடுதான் இருந்தாள். டியூஷன் நேரம் மாறிற்று.. பனிரெண்டாம் வகுப்பிற்கு. சிலபல நாட்களில்.. எல்லோரும் பார்த்துக்கொள்வதே அரிதானது.

ஒருநாள்.. ஷர்மி தன் அடுத்த வகுப்பு தோழிகள் இருவரோடு வந்தாள்.. வர்ஷினி தங்கள் இருவரின் டிபன் பாக்ஸ் எடுத்துக் கொண்டு லஞ்ச் ஹால் வந்துக் கொண்டிருந்தாள். எல்லோரும் உண்ணத் தொடங்கினர்.

ஒருத்தி “ஹேய்.. மீராக்காவை பார்த்தியா.. லிப்ஸ்டிக் எடுத்து வந்திருந்தாங்க.. அத்தோடு.. கிரீட்டிங் கார்ட்ஸ்.. ம்..” என்றாள் ரகசியக் குரலில் புன்னகையோடு.

ஷர்மி “என்ன கார்ட்ஸ்சா..” என்றாள்.

“உஷ்.. சர்வேஷ் ண்ணாக்குதான். அதான் ரெண்டுபேரும் கிளோஸ்ன்னு.. ஸ்கூல்க்கே தெரியுமே.. அவங்களுக்காதான் இருக்கும்” என்றாள்.

மற்றொருத்தி “டீச்சர்ஸ் எல்லோருக்கும் தெரியுமே..” என்றாள் இன்னமும் ரகசியமான குரலில்.

ஷர்மி.. வர்ஷினியின் முகத்தை பார்த்தாள்.

வர்ஷினிக்கு, சட்டென கேட்கவும் ஒருமாதிரிதான் இருந்தது.. மீண்டும் எல்லாவற்றையும் இழந்த துக்கம்தான் தொண்டையை அடைத்தது. ஆனாலும், இது தவறுதான் என மனசாட்சி சொல்ல.. வந்த கண்ணீரை தனக்குள் வைத்துக் கொண்டு.. உணவினை விழுங்கினாள். சின்ன மனம்.. பெரும் இழப்பினை விழுங்கிச் செரிக்கக் கற்றுக் கொண்டது.

இவர்கள் பேசிக் கொண்டது போலவே.. மீரா லஞ்ச் முடித்து.. சர்வேஷ் வகுப்பிற்கு சென்று அவனின் பாகில் தன் கார்ட்ஸ் வைத்து.. ஒரு சாக்லேட் வைத்துவிட்டு, தன் வகுப்பிற்கு வந்துவிட்டாள்.

மீரா, சற்று தன்னை சுதாரித்துக் கொண்டு.. சர்வேஷ் வகுப்பின் வெளியே நிற்க.. அவனிடம் வந்தவள்.. “சர்வேஷ், உன் பேகில்.. ஒன்னு இருக்கு.. தனியா பாரு” என சொல்லிவிட்டு.. தன் வகுப்பிற்கு வந்துவிட்டாள்.

சர்வேஷ் எதோ பிரச்சனை.. மீண்டும் அவளின் அண்ணன் வந்துவிட்டானா.. என சிந்தனையோடுதான் இருந்தான். அதற்குத்தக்க.. அவள் எப்போதும் நின்று.. என்ன சாப்பிட்ட, டெஸ்ட் எப்படி எழுதன என விசாரிப்பவள் ஒன்றும் கேட்க்காமல் செல்லவும்.. எதோ என சந்தேகம் அதிகமாகியது. 

வகுப்புகள் தொடங்கியது.. தன் பேக் பார்த்த்தான்.. சாக்லெட்.. கார்டின் கவர் என எல்லாம் கண்களில் பட.. அமைதியாக அமர்ந்தான். நெற்றி வேர்த்தது.. எதோ இறுக்கம் உடலெல்லாம் பரவியது.. தன் யூனிப்பாம் டை.. அதனை லேசாக தளர்த்தினான்.. துர்க்காக்கு தெரிந்தது.. எனக்குதான் துர்க்கா பூஜை.. என மனதில் சொல்லிக் கொண்டான். அப்படியே பெரிய நோட் வைத்து மறைத்தான், அதன் சாக்லெட்.. கார்ட்ஸ்’சினை. எதுவுமே நடக்காதது போல.. வகுப்பில் தேர்வெழுத தொடங்கினான்.

மீரா காத்திருந்தாள். 

மாலையில் சர்வேஷ், தனியாக.. ஓரிடத்தில் நின்று படித்தான்.. அப்படியே பாக் உள்ளே எதையோ தேடுவது போல.. நண்பர்களிடம் காட்டிக் கொண்டு.. படித்தான். 

மீரா, ‘மேரா ஷர்வா..’ என தொடங்கி கவிதையாக சிலவரிகள்.. அதை தொடர்ந்து.. I LOVE YOU.. என இதயவடிவில்.. பிங்க் நிற பேனாவினால் எழுதியிருந்தாள்.

இவனுக்கோ மனது இதில் லயிக்கிறது.. கண்சிமிட்டும் பிங்க் வண்ண இதயம்.. இழுக்கிறது. அழகான பெண்.. தனக்காக எழுதியிருக்கிறாள்.. சின்ன கர்வபுன்னகை அவனையறியாமலே உதடுகளில் முந்தி நின்றது.. காலரினை தூக்கிவிட்டுக் கொண்டு.. எல்லோரிடமும் அவளின் இந்த ப்ரோபோசலை காட்டி.. சீன் போடத்தான் ஆசை.. ஆனால், மறுநிமிடம் அந்த கர்வ புன்னகை உதட்டில் உறைந்து.. மருண்ட விழிகள்.. சமிஞ்சை பார்வைகள்.. பார்த்தவளின் முகம் நினைவில் வந்தது.

இதெல்லாம் ஒரு பக்கம் என்றால்.. தன் அக்கா துர்க்காவின் முறைத்த முகம்..  எல்லா பக்கமும் அவனின் முன் நின்றது. பல யோசனைகள்.. திண்டாடி போனான் இந்த இளையவன்.

மீரா தூரமாக தோழிகளோடு நிற்கிறாள்..

சர்வேஷ் தலையை கோதிக் கொண்டே நிற்கிறான்..

நேரம் கடக்கிறது.

நண்பர்கள் எதோ சரியில்லை என எண்ணி அருகே வந்தனர். சர்வேஷ் “நான் அத்தையை பார்க்க.. டெலிபோன் ஆபீஸ் போறேன்.. வர சொன்னாங்க.. கெமிஸ்ட்ரி சர் கிட்ட சொல்லிடுங்க.. இன்னிக்கு நான் ஸ்பெஷல் கிளாஸ் வரலை..” என  நண்பர்களிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினான்.

மீராவின் அருகே வந்து.. “மெயின் கேட் வந்திடு” என சொல்லிவிட்டு சென்றான்.

என்னமோ யாருக்கும் தெரியாது என அவன் சொல்ல.. மீராவின் தோழிகள் எல்லாம், மீராவை கலாட்டா செய்து.. அனுப்பினர்.

சர்வேஷ் மீரா இருவரும் சைக்கிளோடு நடந்தனர். பள்ளி விட்டு.. நேரம் கடந்திருந்தது. ஆங்காங்கே பள்ளி சீருடையில் சிலர்.. மற்றபடி.. தெருவே காலியாகத்தான் இருந்தது.

சர்வேஷ்.. ஏதும் பேசாமல் நடந்தான். மீரா, புன்னகையை மறைத்துக் கொண்டு.. மனதில் குதூகலத்தோடு.. அவனை அடிக்கடி பார்த்துக் கொண்டே நடந்தாள்.

பிங்க் வண்ணம் கொண்ட காகிதபூ மரம்.. ஒரு வீட்டின் முன், மதில் சுவர் முழுவதும்.. அந்த பிங்க் பூ படந்திருக்க.. எதோ பந்தல் போட்டது போல அந்த இடம் முழுவதும் நிழல். இருவரும் நின்றனர். 

சர்வா “மீரா, அது…” என  எப்படி சொல்லுவது என தெரியாமல் இழுத்தான்.

மீரா “முன்னாடியே.. சொல்லனும்ன்னு” என அவளும் நடு நடுவே சொல்ல.

சர்வேஷ் “மீரா, இது இப்போ வேண்டாமே.. நாம பிரெண்ட்ஸ்” என சொல்லி அவள் கொடுத்த கார்ட்ஸ் எடுத்து கொடுத்தான்.

சட்டென மீரா வாங்கவில்லை.. கண்ணீர் வழிய நின்றுக் கொண்டிருந்தாள்.

சர்வேஷ் “எனக்கு.. நீ.. ப்ரென்ட்தான் நீ.. ம்..” என்றான்.

அவள் பேக்கில் தானே இதனை வைத்தான்.. “நான் யாரிடமும் சொல்லமாட்டேன்.. சாரி” என்றான் தலையை கோதிக் கொண்டு. 

மீரா எதோ சொல்ல வந்தாள்.. அப்போது, ஷர்மி வர்ஷினி இருவரும்.. சைக்கிளில் இவர்களை கடந்தனர். 

மீராவிற்கு, அதன்பின்.. ஏதும் பேச தோன்றவில்லை.. அவன் எதிரில் நிற்க பிடிக்காமல் வேகமாக சைக்கிளை தள்ளிக் கொண்டு நடந்தாள்.

அதன்பிறகு மீரா சர்வேஷ் கண்களில் படவில்லை.