இடம் மாறும் மனங்கள்!

6

‘என் வாழ்க்கையில் எப்போ யார் வருவாங்க.. எப்போ காணாமல் போவாங்க.. எப்போது அன்பு காட்டுவாங்க.. எதுவரை இருப்பார்கள்.. என தெரியவில்லையே.. ஏன் எனக்கு எதுவும் நிலைக்கவில்லை’ என அழுகை அந்த இரவில் வர்ஷினிக்கு. 

கமலவர்ஷினி, ஹைராபாத்’தில்தான் பிறந்தாள்.. சிவகுமார் விஜயா தம்பதியின் மூன்றாவது பிள்ளை. சிவகுமாரின் அண்ணன் சம்பத்குமார்.. ஆஸ்ட்ரேலியாவில் இருந்தார். அவருக்கு குழந்தையில்லை. 

கரு உண்டானது முதல்.. எந்த குழந்தையாக இருந்தாலும்.. சம்பத்குமாருக்கு தத்துக் கொடுத்திடலாம் என முடிவு செய்திருந்தனர் சிவகுமார் தம்பதி. சம்பத் தம்பதியும்.. தம்பியின் குழந்தையை ஏற்க.. காத்திருந்தனர்.

அப்படியே வர்ஷினி பிறந்ததும்.. ஒருமாதத்தில் எல்லா ஏற்பாடுகளையும் செய்துக் கொண்டு.. வர்ஷினியோடு சம்பத்குமார் தம்பதி தங்கள் இருப்பிடம் சென்றனர். 

பெண்ணை போற்றி வளர்த்தனர். பத்திரமாக பார்த்துக் கொண்டனர். இரண்டு வருடத்திற்கு ஒருமுறை.. இந்தியா வந்தனர். வர்ஷினிக்குதான், இந்த மண்ணும் மக்களும் புதிதாக இருந்தனர் அப்போதெல்லாம். எப்போதும் தன் அகிலா அன்னையை விட்டு நகராமல்தான் இருந்தாள்.

சிவகுமார் விஜயா இருவருக்கும் கொஞ்சம் சங்கடமாகத்தான் இருந்தது.. ஆனால், பெண் நன்றாக இருக்கிறாள் என்பதால்.. வருடங்கள் கடக்க கடக்க இருவரும் தங்களை தாங்களே ஆறுதல்படுத்திக் கொண்டனர்.

ஆனால், எதுவும் நிலையில்லையே.. அன்று போன் வந்தது எம்பசியிளிருந்து.. ஒரு விபத்தில் சம்பத்குமார் தம்பதி உயிரிழந்துவிட்டனர் என.. சிவக்குமார் எண்ணுக்கு. வர்ஷினி சேஃப் எனவும் சொல்லினர். 

அதன்பின் தெரிந்தவர்களிடம் விசாரித்து.. வர்ஷினி பற்றி கேட்டுத் தெரிந்துக் கொண்டனர். சிவகுமாருக்கு ஒன்றும் புரியவில்லை.. சிலநாட்கள். இரண்டுவாரம் சென்று ஆஸ்ட்ரேலியா கிளம்பி சென்றார். தன் அண்ணன் அண்ணியின் உடலை தகனம் செய்தார். வர்ஷினியை இந்தியா அழைத்து வந்தார் சட்டபடி. இதெல்லாம் ஒருமாதத்திற்கு மேல் நடந்தது.

வர்ஷினி, இந்தியா வந்தாள். திரண்ட உடல்வாகு.. நல்ல உயரம்.. வெள்ளிநிலாவின் நிறம்.. மிரண்டவிழிகள்.. சோகசித்திரமாக  மீண்டும் தன் உறவை தேடி வருகிறாள். ஆனால், அவளின் மனமெல்லாம் கடந்தக் காலத்திலேதான் இருக்கிறது. அன்னை தந்தையை மறக்க முடியவில்லை.. யாரிடமும் அழுகையை காட்டவும் தெரியவில்லை. 

அங்கே அகிலா அன்னையின் பிடியை அவள் விட்டதேயில்லை.. சட்டென ஒருநாளில் அவளின் உலகம் இடிந்து விழுந்திருந்தது. அவளின் பயமான நாட்கள் தொடங்கியது. 

இப்போது தெரிந்தது எல்லாம் சித்தப்பாதான். அஹ.. வர்ஷினி விமானத்தில் துளி கூட கண்மூடவில்லை. என்னமோ அவளிடம் ஒதுக்கம். ம்.. பெற்ற தந்தை.. மகளின் தலையை கோதிவிட.. வர்ஷினி அனிச்சையாய் அரண்டு போனாள். சிவகுமார் இன்று.. இந்த நொடி.. பிள்ளையை தத்தம் கொடுத்து.. தான், தவறு செய்துவிட்டதாக உணர்ந்தார்.

இரண்டாம் விமானம் ஏறினர்.. அப்போது சிவக்குமார், மகளும் தெரிந்துக் கொள்ளட்டும் என எண்ணி.. பாதுகாத்து வைத்திருந்த.. அவளின் பிறப்பு சான்றிதழ்.. அதன்பின் தன் அண்ணன் அவளை மகளாக ஏற்றுக் கொண்டது.. என எல்லா அடங்கிய கோப்பினை மகளிடம் கொடுத்துவிட்டு கண் மூடிக் கொண்டார்.. உறங்குவது போல.

பதினான்கு வயது பெண்.. மெல்ல அந்த கோப்புகளை திறந்து பார்க்கிறாள். அவளின் ரகசியம் எல்லாம் சத்தமில்லாமல்.. அவளின் முன் அவிழ்கிறது. வர்ஷினிக்கு அழுகை.. ‘என்னை பெற்றவர் இவர்கள் தானா’ என தோன்றுகிறது.. ஆனால், ‘எதற்கு என்னை.. இங்கே அனுப்பி வைத்தார்கள்..’ என கேள்வி எழுகிறது. முன்பே வாடி இருக்கும் பெண்.. இப்போது குழம்பினாள். 

வீடு வந்தனர்.

வர்ஷினியை அவளின் அன்னை.. இறுக்கமாக கட்டிக் கொண்டு அழுதார். பெண்ணால், அவரோடு ஒன்றமுடியவில்லை.. என்ன நடக்கிறது என யோசனைதான் அவளுக்கு. மிரண்டு போனாள்.. எல்லோரையும் மிரட்ஷியோடுதான் பார்த்தாள்.

மதுவர்ஷினி அப்போது கல்லூரி முதல் வருடத்தில் இருந்தாள்.. சட்டென வர்ஷினியை தங்கையாக ஏற்க முடியவில்லை அவளால். சின்னவளின் அருகிலேயே செல்லவில்லை மது. அடுத்து தர்ஷன், அவனுக்கு இதெல்லாம் கண்டுக் கொள்ளத் தோன்றவில்லை.. வர்ஷினியை ஏறிட்டு பார்த்துவிட்டு சென்றுவிட்டான்.. அவ்வளவுதான்.

தனி அறையில் இருந்தவள்.. தன்னிடமே பேசாத அக்காவோடு அறையில் தங்கினாள். வெளிநாட்டு வாழ்க்கையில் வளர்ந்தவள்.. சட்டென ஒன்ற முடியாமல் தவித்தாள்.. தன்னை பெற்றவர்கள் இவர்கள்தான் என தெரிந்தாலும்.. அவர்களிடம் நெருங்க முடியவில்லை.. கூச்சமாக இருந்தது. 

அங்கே ஏதாவது விருந்து.. விழா.. என்றால்தான் மனிதர்கள் நிறைய இருப்பர்.. இங்கே மனிதர்களால் நிரம்பி இருந்தது.. அந்த சின்ன வீடு.. வர்ஷினிக்கு மூச்சு முட்டியது. 

தட்பவெட்பம் ஒத்துக் கொள்ளவில்லை.. பெண்ணுக்கு. சிவகுமார்.. இவர்கள் வரும் போது வாடகைக்கு எடுக்கும் ஏர்கூலலர்.. எடுத்து வந்து வைத்தார். வர்ஷினியின் விருப்பம் அறிந்து.. ஏதேதோ சமைத்துக் கொடுத்தார் விஜயா. ஆனாலும் வர்ஷினி அறையிலிருந்து வெளியே வரவில்லை. தனக்குள் முடங்கிக் கொண்டாள்.

பள்ளியில் சேர்க்க ஏற்பாடு செய்தனர். அதன் விளைவாக வர்ஷினி வெளியே வர.. பக்கத்துவீட்டு ஷர்மியை அறிமுகம் செய்து வைத்தனர் பெற்றோர்.

ஷர்மி தோழியாகினாள்.. அப்படிதான் உமர் பழகினான். அவளின் ஆங்கிலம் பார்த்து வியந்து போகினர் இருவரும். இவர்கள் ஹிந்தி பேச.. இவள் ஆங்கிலம் அவர்களுக்கு சொல்லிக் கொடுக்க என வர்ஷினி கொஞ்சம் இயல்பாகினாள். ஆனால், வீட்டினுள்.. அவளால் அப்படி இயல்பாக இருக்க முடியவில்லை. அவளோடு, அக்காவும் அண்ணனும் சரியாக பேசவில்லை. வர்ஷினி, மது வருகின்ற நேரம் உணர்ந்து.. ஷர்மி வீடு வந்திடுவாள்.. அவள் உண்டு உறங்கும் நேரம் உணர்ந்துதான் வீடு செல்லுவாள், தங்கை.

சிவகுமார்தான், பக்கத்து வீட்டிற்கும்.. தன் வீட்டிற்கும் நடையாக நடப்பார்.. பெண்ணினை உண்பதற்கு அழைத்து. விஜயாவிற்கும் கவலையாக இருக்கும். ஆனால், ஷர்மியின் வீட்டில் நன்றாக பார்த்துக் கொண்டனர் வர்ஷினியை. நட்பும் வளர்ந்தது.

பள்ளியில் சேர்ந்தாள் வர்ஷினி. சேர்ந்த புதிதில்.. வகுப்பில் யாரும் அவளோடு பேசுவதற்கு ஆர்வம் காட்டவில்லை.. வர்ஷினிக்கு தெலுங்கு புரியவில்லை.. அவளின் மேல்நாட்டு ஆங்கிலம் அதிகம் பிள்ளைகளுக்கு புரியவில்லை. 

ஷர்மி வேறு வகுப்பு. ஆனாலும் வந்திடுவாள்.. நேரம் கிடைக்கும் போதெல்லாம் தோழியை பார்க்க. உமரும்.. வர்ஷினியை வந்து அடிக்கடி பார்த்துக் கொள்வான்.

அப்படிதான் உமரின் தோழர்கள் வர்ஷினிக்கு பழக்கமாகினர். இதில் நெருக்கமாகியது சர்வேஷ்தான். அவனுக்கு இவளின் ஒதுக்கம் பிடிக்கும்.. எதார்த்தமாக நான் பேசினால்.. எல்லோரும் தூரே சென்றிடுவார்கள்.. அதிலும் பெண்கள் என்றால்.. ஒன்று தள்ளி போகிடுவர்.. இல்லை பின்னாலேயே வந்திடுவார்.. என எண்ணம் அவனுக்கு. 

ஆனால், வர்ஷினி அப்படி இருக்கவில்லை.. மிரண்ட விழிகள்.. வெண்ணிலாவின் நிறம்.. எது பேசினாலும் இரண்டு நிமிடம் அவளிற்கு புரியாத பாவம்.. அத்தோடு.. நான் நெருங்கி அமர்ந்தால்.. என்னை எதுவும் சொல்லமாட்டாள்.. என அந்த வயதில் அவனுக்கு.. அவளின் ஒதுக்கமும் அமைதியும்.. எதோ ஈசி கேர்ள் என்ற எண்ணத்தைத்தான் கொடுத்திருந்தாள். அதனால், ஒரிருமாதத்தில் எதற்கும் வர்ஷி.. ஏஞ்சல்.. என பேசி.. பேசி.. அவளோடு நட்பினை வளர்த்துக் கொண்டான்.

வர்ஷினிக்கு, அவனின் ஆங்கிலம் கலந்த தமிழ்.. கேட்பதற்கே ஆசையாக இருக்கும்.. நிறைய சிரிக்க முடிந்தது. அதனால், கள்ளமில்லாமல் பழகினாள்.

ம்.. அதெப்படி முடியும் என ஒருநாள் வந்தது. 

சர்வேஷ்.. மாலை பள்ளி விட்டதும்.. அவசரமாக வந்தான் வர்ஷினி வகுப்பிற்கு. ஷர்மியும் அங்கே வந்துவிட்டாள்.. தோழியோடு வீடு செல்ல.

சர்வேஷ் வர்ஷினியை பார்த்து “வர்ஷி.. கம் அவுட்.. ஜல்தி” என பரபரப்பாக கைகாட்டினான்.

ஷர்மி “என்ன அண்ணா, இங்க இருக்கீங்க.. இன்னிக்கு ஸ்பெஷல் கிளாஸ் இல்லையா” என்றாள்.

சர்வேஷ் “ஏன், இருக்கே..” என அவளை ஒரு பார்வையில் முறைத்துவிட்டு.. மீண்டும்.. வர்ஷினியை பார்த்தான்.

ஷர்மி தோழியின் கைபிடிக்க.. சர்வேஷ் “ஷர்மி ம்மா.. நீ கேட் கிட்ட வெயிட் பண்ணு.. நான், ஒரு பத்து நிமிஷம்.. இவகிட்ட பேசிட்டு கூட்டிட்டு வரேன்” என சொல்லிக் கொண்டே வர்ஷினியின் கைபிடித்து இழுத்து சென்றான்.

வர்ஷினிக்கு பொறுமையாக பேசினாள்.. தெலுங்கும் தமிழும் புரியும்.. ஆனால், இந்த அவசரகதியில்.. வார்த்தைகள் புரியவில்லை. வர்ஷினி ஷர்மியை பார்த்துக் கொண்டே அவனோடு செல்ல.. ஷர்மி எதார்த்தமாக கையசைத்துவிட்டு.. திரும்பி நடந்தாள்.