இடம் மாறும் மனங்கள்!

23

வீடு வந்தார் சிவகுமார்.. மனையாள் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார். அதை நோட்டமிட்டபடி மனைவியின் அருகே அமர்ந்தார்.

விஜயாவிற்கு கணவன் மனது நோகாமல் பெண்ணின் திருமணம் நடக்க வேண்டும்.. அவர் மனது வெளிநாட்டு வாழ்க்கையை ஒத்துக் கொள்ளவில்லை.. அதை சமாதானம் செய்து நல்லபடியாக திருமணத்தினை முடித்திடலாம் என பெரும்பாடு படுகிறார்.. ஆனால், இந்த பெண் வர்ஷினிக்கு எங்கே புரிகிறது. ஜாதகம் பார்க்காதே என்கிறாள்.. என எண்ணிக் கொண்டே இவ்வளவு நேரம் அமர்ந்திருந்தார்.

சிவகுமார் “என்ன யோசனை” என்றார்.

மனையாள் “எல்லாம் உங்களை பற்றிதான், வர்ஷினி என்ன சொன்னால்” என்றார்.

யோசனையாக “எப்போதும் போல்தான்.. சரி, சாப்பிட்டு கிளம்பலாம்” என்றார்.

விஜயா உணவு எடுத்து பரிமாறினார்.. இருவரும் உண்டு கிளம்பினர்.

கமலவர்ஷினி சர்வேஷ்வரனின் ஜாதகம் பாந்தமாகவே பொருந்தியிருந்தது. சிவகுமார் தம்பதிக்கு அதில் நிம்மதி. மேலும் சிவகுமாரின்  பயங்களை எல்லாம் தகர்த்தெறிந்தார் ஜோதிடர்.. ‘ஆயுள் கெட்டி.. நன்றாக வாழ்வார்கள்’ என நல்ல வாக்குதான் சொன்னார். ஆனால், வெளிநாட்டு வாழக்கையில்தான் இவர்களுக்கு லாபம் என சின்ன கணக்குகளையும் சொன்னார்.. மகளை  அருகிலேயே வைத்துக் கொள்ள வேண்டும் என என எண்ணியிருந்த சிவகுமார்க்குதான் வருத்தம். விஜயாவிற்கு ஆனந்தம்தான்.. இந்த வாக்கில். 

விஜயா, வரும் வழியில் கணவர் ஏதாவது வேண்டாம் என்றிடுவாரோ என பல சமாதானங்கள் சொல்லிக் கொண்டே வந்தார் “மது மாதிரிதான்.. வருஷம் ஒருதரம் வந்து பார்த்திட்டு போக போகிறாள்.. அதெல்லாம் வர்ஷினி பழகிக்கொள்வாள். மதுவிற்குதான் வேலையிருந்தது.. நாம் போய் செய்ய முடியாத சூழல்.. இப்போதுதான் நீங்க ரிட்டர்யட் ஆகிட்டீங்களே.. நாம கூட போய் பார்த்துவிட்டு வரலாம்.. இப்போது எல்லாம் அவ்வளவு கட்டுப்பாடுகள் இல்லையாம்.. மது சொல்லிக் கொண்டிருப்பாள்” என பல சமாதான மொழிகள் கணவனிடம்.

சிவகுமார் வாய்திறந்து “விடு டி, நான் எதுமே பேசவில்லையே” என அதட்டும் வரை.. ஓயவில்லை விஜயா.

அன்னைகளுக்கு பெண் வெளிநாட்டில் இருப்பது அவ்வளவு ஆனந்தம் போல.. வீடு வந்தும் விஜயா கணவனின் முகம் பார்த்துக் கொண்டுதானிருந்தார்.

சிவகுமார் “என்ன வேண்டும் உனக்கு” என்றார்.

“நம்ம பொண்ணு.. ஆசைப்பட்ட வாழ்க்கை.. நீங்க இப்படி யோசனையான முகத்தோடு இருந்தால் நான் என்ன நினைப்பது..” என்றார்.

“நீ சொல்றது போலதான்.. அவள் ஆசைப்பட்ட வாழ்க்கை.. அது அவளுக்கு நல்லதாகவும் இருக்கு. நான் மாறிக் கொள்கிறேன்.. சீக்கிரமாக பேசி முடிவு செய்துக்கலாம். போதுமா.. இப்போதாவது சோறு போடுவியா எனக்கு” என்றார்.

விஜயா புன்னகையோடு “அப்பா.. இந்த வார்த்தையை வாங்குவதற்குள்..” என்றார் சலித்துக் கொண்டே..

“போடி போ.. பசிக்குது..” என்றார் புன்னகையோடு.

மாலை நேரம்..  

முத்துநாயகி அழைத்தார் விஜயாவிற்கு. 

விஜயாவிற்கு சந்தோஷம்தான்.. ஆனாலும் யோசனை.. ‘நாங்க ஜாதகம் பார்த்தது தெரிந்திருக்குமோ.. சரியாக கூப்பிடுறாங்க.. என்னவாக இருக்கும்’ என யோசனை.

கணவரிடம் “என்னங்க.. சர்வேஷ் அம்மா கூப்பிடுறாங்க” என்றார்.

சிவகுமார் அலட்டிக் கொள்ளாமல் “பேசு” என்றார்.

“ஜாதகம் பார்த்தது தெரிந்திருக்குமோ.. நாம் இப்போது என்ன சொல்லுவது” என்றார்.

“அடி ஏய்.. முதலில் பேசு.. அதெப்படி தெரியும் அவங்களுக்கு.. நீ முதலில் பேசு.. நீயாக எதாவது எண்ணிக் கொண்டு” என்றார் அதட்டலாக.

விஜயா தானே திரும்ப அழைத்தார்.. ஷேம லாபம் எல்லாம் விசாரித்த பிறகு.. முத்து நாயகியாக “இல்ல, சர்வேஷ் இப்போதுதான் கூப்பிட்டான்..” என அவஸ்த்தையாக சொன்னார்.

விஜயாவிற்கு பதட்டமாகியது “சரி ங்க” என்றார்.. இன்னமும் உறவுமுறை இயல்பாக வரவில்லை அவர்களின் பேச்சில்.

“இந்தியா வருகிறானாம்.. அதாவது நேரில் உங்களிடம் பேசுவதற்கு. வர்ஷினி வருத்தப்பட்டிருப்பாள் போல.. அவளிடம் சொல்லாமல் இவன் கிளம்புகிறான்.. அண்ணனை நேரில் பார்த்து பேச..” என்றார்.. சரியாக சொல்லிட வேண்டுமே என எண்ணி பதட்டமாகவே விஷயத்தினை சொல்லிவிட்டார் முத்துநாயகி.

விஜயா “எதுக்கு இப்போது, அவர்தான் ஜாதகம் பார்த்துவிட்டு பேசிக் கொள்ளலாம் என்றாரே.. அதற்கு எதற்கு அவசரம்” என்றார்.

முத்து பதறிவிட்டார் “இல்ல இல்ல.. எங்களுக்கு எந்த அவசரமும் இல்ல.. அவன் வர்ஷினிக்காக பார்த்து வருகிறான்.. அவனுக்கும் அவசரம் இல்லை.. பிள்ளைகள் இருவருக்கும் அவசரம் இல்லைதான்.. ஆனால், தூரமாக இருப்பதால்.. இவருக்கும் நடுவில் எதோ வருத்தம் போல.. என்ன சொல்வதென தெரியவில்லை. ” என்றார், சிவகுமார் நேற்றே சரியாக பேசவில்லை தங்களிடம். இதில், இப்படி சர்வேஷ் வருவது அவர்களுக்கு அழுத்தத்தை கொடுக்கும் என உணர்ந்திருந்தார் முத்து.

விஜயா, எழுந்து வாசல் வந்தார்.. கணவன் காதில் விழுந்தால் ஏதாவது பிரச்சனையாகிட போகிறது என எழுந்து வந்தார்  “இல்லைங்க அண்ணி, எதோ நாம அவசரமாக எல்லாம் செய்வதாக தோன்றும்.. அவரும் இப்போதுதான் மனது இறங்கியிருக்கிறார்.. எனக்கு என்ன சொல்வதென தெரியவில்லை” என்றார்.

“எனக்கு புரிகிறது அண்ணி, உங்களிடம் ஒரு வார்த்தை சொல்லி வைத்தேன்.. அண்ணனிடம் சொல்லுங்க.. இந்த பசங்க இந்தகாலத்தில் என்ன நினைக்கிறார்கள் என தெரிவதில்லை” என்றார்.

இருவரும் ஒன்றும் செய்ய முடியாத பெருமூச்சு ஒன்றினை இழுத்துவிட்டு, அழைப்பினை துண்டித்தனர்.

விஜயா வந்து அமரவும்.. அவரின் கணவர் என்னவென கேள்வியாக பார்த்தார். விஜயா ஒன்றுவிடாமல் சொல்லிவிட்டார்.. எதையும் மறைக்கவில்லை.

சிவகுமார்க்கு முதலில் அதிர்ச்சி “என்ன கிளம்பி வருகிறாரா.. அதற்கு என்ன அவசரம்” என்றார்.

பின் தானே “வரட்டும் விடு, போனில் பேசலாம் என இருந்தேன்.. நேரில் வரட்டும்.. பேசிவிடலாம்.. பிள்ளைகளுக்கு அவசரம்தான் எதிலும்.. என்னமோ போ..” என்றார்.

இது அவர்களால் யூகிக்க முடிந்திட்ட விஷயமல்ல.. இருவீட்டு பெரியவர்களும்.. கொஞ்சம் அதிர்ந்துதான் இருக்கின்றனர், எதற்கு வீண் செலவு.. எதற்கு அலைச்சல்.. எதற்கு அவசரம்.. என ஆயிரம் எதற்குதான் அவர்கள் மனதில். ஆனால், எதற்கும் பதில் சொல்ல இளையவர்கள் தயாராகயில்லை போல.

விஜயா தன் பெரியமகளுக்கு நேரம் காலம் பார்க்காமல் அழைத்து விஷயத்தினை சொல்லி, பேசிக் கொண்டிருந்தார். 

மது ஆச்சர்யமாக “ம்.. சர்வேஷ் ரொம்ப பாஸ்ட்டாக இருக்கார்ம்மா.. அத்தோட நிறைய லவ் போலவே.. ம்.. வர்ஷினிக்கு தெரியாமல் சர்ப்ரைஸ்சாக வருகிறார்.. ம்.. சூப்பர்” என்றாள்.

அன்னை “நீ வேற ஏன்டி” என்றார்.

மது “உன் பெண்ணுகிட்ட ஏதும் சொல்லிடாத.. அவர் வந்து பேசிக் கொள்ளட்டும்” என்றாள்.

விஜயா “என்ன சர்ப்ரைஸ் டி இது.. உங்க அத்தைக்கு தெரிந்தாலே.. பெரிய பேச்சு வரும்.. என்ன செய்வதென எங்களுக்கு புரியவில்லை.. நீ இப்போதான்..” என்றார் சலிப்பாக.

மது “உங்களுக்குத்தான்ம்மா இதெல்லாம்.. சமாளிங்க.. என்ன இப்போது. அவளுக்கு இதெல்லாம் லவ் ம்மா.. லவ்.. என்ஜாய் பண்ணட்டுமே.. போங்க.. மாப்பிள்ளைக்கு ஏதாவது ஸ்வீட் செய்ங்க” என்றாள்.

விஜயா தன் பெரிய மகளிடம் காலையில் ஜாதகம் பார்த்து வந்தது பற்றி சொல்லினார். இருவரும் பேசி முடித்து.. வைத்தனர்.

வர்ஷினிக்கு, காலையில் நடந்ததை சர்வேஷ்ஷிடம் பகிர மனது துடித்துக் கொண்டிருந்தது. ‘அப்பா உன்னோடு ஈவினிங் பேசுவார்’ என அவனிடம் சொல்ல வேண்டும்.. என எண்ணிக் கொண்டே வேலையை தொடர்ந்தாள்.

மதியமாக செய்தி அனுப்பினாள்.. மீண்டும் அழைத்தாள் எல்லாம் வீண். சர்வேஷ்க்கு லைன் போகவில்லை. கொஞ்சம் பதற ஆரம்பித்து மனது. 

பெண்ணவள் ராக்கிக்கு அழைத்துவிட்டாள் அலுவலகத்திலிருந்து கிளம்பும் முன். 

ராக்கி ‘இல்ல ட்ரைனிங் போயிருக்கான். அதாவது இவன் கொடுக்க போயிருக்கான்.. திடீர் ஏற்பாடு அதனால், உன்னிடம் சொல்ல முடியலைன்னு நினைக்கிறேன்’ என கூறினான்.

வர்ஷினிக்கு மனது சமாதானம் ஆனது. 

இரவு வீடு வந்தாள்.. வீடே பரபரப்பாக இருந்தது. விஜயா அடுப்பில் வைத்து எதையோ கிளறிக் கொண்டிருந்தார்.. நெய் மணம் வீடு முழுவதும் வியாபித்தது. எதோ நல்ல செய்தி என பெருபாலும் இந்தவாசனையை கொண்ட வீடுகள் சொல்லிவிடும் எல்லோருக்கும். 

அப்படித்தான் வர்ஷினிக்கு, இந்த வீட்டின் சூழலும் எதோ நல்ல செய்தி என அறிவுறுத்தியது.

அன்னை, பெண்ணை பார்த்து புன்னகைத்து “வா, முகம் அலம்பி வா.. சாப்பாத்தி இருக்கு சாப்பிடு” என்றார்.

வர்ஷினி, எட்டி பார்த்தாள் வாணலியை.. “இதென்ன ஸ்பெஷல்.. என்ன ஹாப்பி மூட்.. ஜாதகம் பார்த்து.. அப்பா ஓகே சொல்லிட்டாரா” என்றாள்.. புன்னகையும் கோவமும் கலந்த முகபாவத்தில்.

“என்ன டி இப்படி சொல்ற, ஜாதகம் பொருத்தம் நல்லா இருக்கு.. உன் அப்பாக்கு அத்தனை திருப்தி. முகம் அலம்பி.. சாமி கும்பிட்டு.. வந்து சாப்பிடு.. அப்பா வந்திடுவார்.. அவரிடம் பேசு..” என சந்தோஷத்தில்.. அவளுக்கான வேலைகளை அடுக்கிக் கொண்டே போனார்.

ஆனால், வர்ஷினியின் முகம் வாடி போகிற்று.. என்னமோ காலையில் அப்பாவோடு பேசி சென்றது நல்லதாக இருந்தது.. அந்த நிகழ்வின் நினைவில் பெண் இருந்ததால்.. தந்தை, சர்வேஷ்ஷிடம் பேசிவிட்டு ஜாதகம் பார்ப்பார்.. என இவளாக எண்ணிக் கொண்டால். அதில்லாமல், சர்வேஷ், வேறு இன்னமும் பேசாததால் அதுவும் ஒரு வருத்தம். ஏதும் அன்னையிடம் பேசாமல், தன்னறைக்கு சென்றுவிட்டாள்.

சிவகுமார் வெளியில் சென்றிருந்தார்.. மகள் வரும் நேரம் அறிந்து வீடு வந்தார்.

விஜயா “வர்ஷினி வர்ஷினி” என அவளின் அறை வாசலில் நின்று அழைத்தார்.

“ம்மா.. காலையில் பேசிக்கலாம்.. எனக்கு தூக்கம் வருது” என கதவு திறக்காமல் சொல்லிவிட்டாள்.

தந்தை “விடு, அவளுக்கு நான் ஜாதகம் பார்த்துதான் சர்வேஷ்ஷினை ஒத்துக் கொண்டேன் என எண்ணுக்கிறாள்.. என்ன செய்ய முடியும்.. காலையில் பதில் சொல்லிவிட்டேன்.. சரியாகிடுவா.. காலையில் பேசலாம்” என்றார்.

விஜயா “என்னமோ போங்க” என்றார் சலிப்பாக. 

மறுநாள் 

வர்ஷினி காலையில் நேரமாக அலுவலகம் கிளம்பிவிட்டாள். 

விஜயாவிற்கு சர்வேஷ் வருவது தெரியும் என்பதால் “உடம்பு முடியவில்லை என்றால் லீவ் போட்டுக்கோ வர்ஷி” என்றார் அக்கறையாக.

மகளோ “எனக்கு வேலையிருக்கு” என்றவள் நேரமாகவே கிளம்பிவிட்டாள்.