வர்ஷினி இனிப்பு காரம் எடுத்து வந்தாள்.. லக்ஷ்மி, எழுந்து சென்றாள்.. உதவுவதற்காக.

சிவகுமாரின் அக்கா சாந்தி “அதான் எங்கோ பார்த்தமாதிரி இருக்குன்னு நினைச்சேன்.. அதுசரி, குமராவேல் பெண்ணு கல்யாணத்தில் பார்த்திருப்பேன்” என்றார்.

மீண்டும் முத்துநாயகியின் குடும்பம் அமைதியானது.

சாந்தி “ம்.. அவங்க பொண்ணுக்குதான் நிச்சயமான மாப்பிள்ளையோட கல்யாணம் ஆகலையே” என இழுத்தார்.

லக்ஷ்மி “அதான்.. நிக்கவைச்சி கழுத்தருத்துட்டாங்களே” என்றாள், சட்டென கோவமாக.

சாந்திக்கும் அவரின் கணவர்.. சிவகுமார் விஜயா என எல்லோருக்கும் அதிர்ச்சி இந்த பேச்சில்.

துர்கா “லக்ஷ்மி, என்ன பேச்சிது.. பெரியவங்ககிட்ட” என அதட்டிவிட்டு.. “அது.. என் தம்பிக்குத்தான்.. கல்யாணம் செய்து கொடுப்பதாக இருந்தது” என்றாள்.

சாந்தி அயர்ந்து போனார்.. “எனக்கு தெரியலைம்மா.. தெரியாமல் கேட்டுவிட்டேன்..” என்றார்.

அதை தொடர்ந்து சிவகுமாருக்கு இப்போதுதான் புரிந்தது.. ‘ஓ அவனுக்கு முன்பே திருமணம் நிச்சயமாகி நின்றிருந்ததே.. அதை பற்றிய பேச்சுதான் இது’ என..

இப்போது அமைதி எல்லோரிடமும்.. யாரும் வைத்த சிற்றுண்டியை உண்ணவில்லை. விஜயாவும் வர்ஷினியும் கையை பிசைந்தனர் ‘என்ன செய்வது’ என தெரியாமல்.

முத்துநாயகி “அது சர்வேஷ்க்கு இஷ்ட்டமில்லைங்க.. நாங்கதான் அப்போது.. வற்புறுத்தி ஒத்துக் கொள்ள வைத்தோம். என் தம்பி வந்து கேட்க்கவும் என்னால் மறுக்க முடியவில்லை, அதான். ஆனால், ப்ரியா பிரச்சனை அப்போது தெரியாதுங்க.. என் தம்பியும் என்னிடம் சொல்லவில்லை. எங்களுக்குத்தான் சங்கடமா போச்சு.. இப்போதுதான் என் மகன் கல்யாணத்திற்கு ஒத்துக் கொண்டிருக்கிறான். அந்த அவமானத்திலிருந்து அவனால் வெளியே வரவே முடியலைங்க.. அதான் வெளிநாடு போயிட்டான்.” என்றார் நீண்ட விளக்கமாக.. தன் முத்தியால் கண்களை துடைத்துக் கொண்டு.

சாந்தியின் கணவர் “வர்ஷினி, தண்ணீர் கொடு” என்றார்.

முத்துநாயகி வர்ஷினியின் முகத்தை பார்த்துக் கொண்டே தண்ணீர் பருகினார். வர்ஷினி புன்னகை முகமாகவே இருந்தால்.. ‘எனக்கு எல்லாம் தெரியும்’ என்ற பாவம்.. ‘அதில் நான் பாதிக்கவில்லை..’ என்ற பாவம் போல அந்த புன்னகை.

முத்துநாயகி புன்னகைக்க முயன்றார்.. வரவில்லை அந்த புன்னகை. 

கார்த்திக் “நடந்ததெல்லாம் உங்க எல்லோருக்கும் தெரியும்ன்னு நினைக்கிறேன்.. பழைய விஷயங்கள் வேண்டாமே..” என்றார்.

சாந்தி கணவர் “சரிதான்.. பேச வேண்டாம். முதலில் வீட்டினை பார்த்து வாங்க எல்லோரும்.. மேலே போங்க.. வர்ஷினி, துர்கா லக்ஷ்மி இருவரையும் கூட்டி போம்மா” என்றார்.

கொஞ்சம் கலைந்தனர் எல்லோரும்.. முத்து கிட்சென் வந்து பார்த்தார்.. விஜயா எதோ சொல்லிக் கொண்டிருந்தார்.

பெண்கள் மூவரும் மேலே சென்றனர்.

சாந்தி, அவரின் கணவர்.. சிவகுமார்.. கார்த்திக் என நால்வரும் ஹாலில் இருந்தனர்.. சாந்தி “தம்பிக்கு தெரியும் ப்பா.. எங்களுக்கு தெரியாது.. அதான் கேட்டுவிட்டோம். மற்றபடி எங்களுக்கு அதில் எந்த குறையுமில்ல.. என்ன குமார்.. சரிதானே” என்றார்.

சிவகுமார் மனையாளை தேடினார் கண்களால்.. விஜயாவும் பேச்சு குரல் கேட்டு.. வந்தார். முத்துநாயகியும் அமர்ந்தார்.

விஜயா “பிள்ளைகள் மனசு ஒத்து இருக்குல்ல.. வேறு என்ன வேண்டும். நீங்க என்ன ப்ரியப்படுறீங்க.. ஜாதகம் பார்க்க.. செய்ய” என்றார்.

கார்த்திக் “இல்ல.. எங்களுக்கு அப்படி எண்ணமில்ல.. நீங்க எப்படி விருப்பபடுறீங்க..” என்றார்.

விஜயா, தன் அண்ணியை பார்த்தார்.. சாந்தி, தன் தம்பியை பார்த்தார். சாந்தியின் கணவர் தன் மனையாளை கூட்டி சென்றார் தனியாக. சாந்தி தன் தம்பியை அழைத்தார்.. அப்போதே. மூவரும் ரகசியம் பேச சென்றனர்.

இங்கே கார்த்திக் முத்துநாயகி.. விஜயா மூவரும் இருந்தனர். முத்து “வர்ஷினி அப்பா ஏதும் பேசவில்லை.. இன்னமும் தயக்கமாக இருக்காறாரா” என்றார்.

விஜயா “அவருக்கு சர்வேஷ் தம்பிமேல எந்த பிரச்சனையும் இல்லைங்க.. வெளிநாடுதான் பிரச்சனை. கொஞ்சம் யோசிக்கிறார்.. வர்ஷினி சொல்லியிருப்பாளே” என்றார்.

“என் பையனும் சொன்னான்ங்க.. அவன் விரும்பிதான் சென்றான்.. இப்போது அங்கே நன்றாக இருக்கான். அங்கே எந்த பிரச்சனையும் இல்லைங்க.. நீங்க நம்பி அனுப்பலாம். பையன் நல்லா பார்த்துப்பான். அத்தோட.. சர்வேஷ் பொறுமையாக பேசுங்கம்மா.. வர்ஷினி அங்கே சிறுவயதில் தனியாக இருந்ததுதான் அவருக்கு ஒருமாதிரி பயமுறுத்துகிறதுன்னு சொல்லி அனுப்பினான். தமிழ் மக்கள் நிறையப்பேர் இருப்பாங்க.. நம்ம ராக்கேஷ் குடும்பமாக அங்கேதான் இருக்காங்க.. வர்ஷினி அப்பாவிடம் சொல்லுங்க” என்றார்.

விஜயாவிற்கும் எல்லாம் புரிகிறது.. ஆனால், கணவரை இதுவரை சமாதானப்படுத்த முடியவில்லை அவரால்.. “நீங்க இவ்வளவு சொல்லனுமா.. அவருக்கும் எல்லாமே தெரியும். இருங்க பேசிக்கலாம்.. இவ்வளவு தூரம் அவர் ஒத்துக் கொண்டார். அதனால் கண்டிப்பாக திருமணத்திற்கும் ஒத்துக் கொள்வார். அவரின் மனதில் சின்ன மாற்றம் வரணும்.. நீங்க தவறாக எடுக்காதீங்க.. அவங்க பொண்ணும்.. அக்காவும் பேசி சரி பண்ணுவாங்க” என்றார் லேசான புன்னகையான குரலில்.

இப்போது வர்ஷினி துர்கா லக்ஷ்மி மூவரும் வந்தனர்.

பெரியவர்களும் பேசி முடித்து வந்தனர்.

இப்போது சாந்தியின் கணவர் “எங்களுக்கு பொருத்தம் பார்க்கமட்டும் பையனோட ஜாதகம் வேண்டும்.” என்றார்.

முத்துநாயகி புன்னகையோடு “இருக்குங்க.. மாப்பிள்ளை, போனில் இருக்குல்ல.. அவங்க நம்பருக்கு அனுப்புங்க..” என்றார் பரபரப்பாக.

சிவகுமார் ஏதும் சொல்லவில்லை. வர்ஷினிதான் தன் அப்பாவின் எண் சொன்னாள்.. கார்த்திக்கிடம். அவரும் உடனடியாக ஜாதகம் அனுப்பினார்.

இப்போதுதான் சிற்றுண்டி உண்ணச் சொல்லி.. சாந்தி சொன்னார். எல்லோரும் டேபிளில் இருந்த சிற்றுண்டி எடுத்துக் கொண்டனர். பேச்சு குழந்தைகள் பற்றியும் சர்வேஷ் குணம் பற்றியும் பொதுவாக சென்றது.

அந்த நேரத்தில் சர்வேஷ் கார்த்திக் எண்ணுக்கு அழைத்தான்.. வீடியோ கால் அது. கார்த்திக் என்ன செய்வது என விழித்தார். பின்னர் செய்தி சர்வேஷ்ஷிடமிருந்து “மாமா.. அட்டென் பண்ணுங்க.. என் மாமனாரிடம் பேசணும் நான்.. இதைவிட்டா சான்ஸ் இல்லை” எனஎ அனுப்பி வைத்தான்.

மறுமுறை அழைத்தான். கார்த்திக் புன்னகையோடு எல்லோரிடமும் “சர்வேஷ்தான் கூப்பிடுகிறான்” என சொல்லி அழைப்பினை ஏற்றார்.

கார்த்திக் “வந்திட்டோம் ப்பா.. வர்ஷினி வீட்டிற்கு. இரு.. அவங்க அத்தைகிட்ட பேசு” என சொல்லி.. சாந்தி அத்தையிடம் போனினை நீட்டினான்.

எல்லோருக்கும் சின்ன டென்ஷன்.

சாந்தி அத்தை பதறவேயில்லை.. போனினை வாங்கிக் கொண்டார்.. கண்ணாடியை சரி செய்துக் கொண்டே பேசத் தொடங்கினார்.

சர்வேஷ் “அத்தை, வணக்கம்.. எப்படி இருக்கீங்க” என்றான்.

சாந்தி அத்தையின் முகத்தில் மலர்ந்த புன்னகை “நல்லா இருக்கேன் தம்பி.. நீங்க எப்படி இருக்கீங்க. அங்கே ராத்திரியா பகலா” என்றார்.

“ராத்திரிதான்.. என்னை ஞாபகம் இல்லையா” என்றான்.

“பார்த்திருக்கேன்.. சட்டென புரியலை.. ஞாபகம் இருக்கு” என்றார்.

“அங்கிள் அறுபதாம் கல்யாணத்தில் கையில் கட்டோடு வந்தேனே” என்றான்.

“அஹ.. ஞாபகம் வந்திடுச்சி பா.. இப்போது கை பரவாயில்லையா” என்றார்.

“பாருங்க.. சூப்பரா இருக்கேன்..” என சொல்லி கைகளை உதறினான்.. “என் அம்மா என்ன சொல்றாங்க” என்றான்.

சாந்தி அத்தை சிரித்தார் “அங்கே இருந்துக் கொண்டு.. இங்கே எல்லா வேலையையும் வாங்குறீங்க..” என்றார்.

“என்ன செய்வது.. அங்கே இருக்கும் போது.. உங்க வர்ஷினியே என்னை ஒத்துக் கொள்ளவில்லை.. லேட். அதான் இப்படி.” என்றான்.

எல்லோரும் கேட்டுக் கொண்டுதானிருந்தனர்.. சாந்தி அத்தை “எல்லோரும் இங்கதான் இருக்காங்க.. என் தம்பியும் கேட்டுக்கிட்டுதான் இருக்கான்” என்றார்.

“இருக்கட்டும் அத்தை.. வர்ஷினி என்னை அவ்வளவு சீக்கிரம் ஒத்துக் கொள்ளவில்லை. அதான் அவங்க அப்பாவும் பிடிவாதமாக இருக்கார் போல.. இப்போவாது ஏதாவது நல்ல வார்த்தை சொல்லுங்க அத்தை” என்றான்.

அத்தை “நான் உங்களுக்கு அத்தையில்லை.. பெரியம்மா.” என்றார். பின் “என்ன நல்ல வார்த்தை சொல்லுவது. இப்போதானே ஆரம்பித்திருக்கிறோம்.. ஜாதகம் பார்ப்போம்” என்றார்.

“பெரியம்மா..” என்றான். 

துர்க்கா “நான் பேசுகிறேன்” என சொல்லி போனினை வாங்கிக் கொண்டாள். “என்ன டா.. பேசற.. பொறுமையா இருடா.. அங்கிருந்துகிட்டு உனக்கு ஒன்னும் புரியலை” என்றாள்.

சர்வேஷ் தன் வாயில் விரல்வைத்து “ஷ்.. ம்.. ஷ்” என்றான் சைகையில்.

துர்கா “அப்புறம் பேசுகிறோம்.. வை” என சொல்லி அழைப்பினை துண்டித்தார்.

எல்லோர் முகத்திலும் சின்ன புன்னகை. இயல்பான மணமகனின் குணம் என எண்ணிக் கொண்டனர்.

சர்வேஷ் வீட்டார் கிளம்பினர்.

சாந்தி “எங்க வீட்டுக்கு வாங்க எல்லோரும்” என ஒரு அழைப்பு விடுத்தார்.

சபாபதி வீட்டார் அதை முழுமனதோடு ஏற்றனர்.

கார்த்திக், சிவகுமாரிடம் “நீங்க பொறுமையாக யோசித்து.. முழு மனதோடு சம்மதித்தால் மட்டுமே.. அடுத்தகட்டம் பேசுவோம். நீங்க பொறுமையாக யோசிங்க அங்கிள்” என்றார்.. விடைபெறும் போது.

சிவகுமாரும் கார்த்திக் கைபற்றி குலுக்கி.. “எனக்கு குடும்பம் பிடித்திருக்கு. உங்க பெண்கள் பற்றி விஜயா சொன்னாள்.. ரொம்ப சந்தோஷம்.. அப்பா இல்லாமல் தம்பியை நல்லமுறையில் வளர்த்திருக்கீங்க.. மூன்று பெண்களும்.” என சொல்லி தன் கையினை விடுவித்துக் கொண்டவர் “என் மனதில்தான் சின்ன நெருடல்.. அது தீரத்தான் நானும் முயல்கிறேன்” என்றார் நிதானமாக.

முத்துநாயகி “இருக்கட்டும் அண்ணா, நீங்க மனசுவிட்டு இவ்வளவு சொன்னதே பெரிது. உங்கள் மனம் சமாதானம் ஆகும்வரை.. காத்திருப்பார்கள் பிள்ளைகள். நீங்க ஜாதகம் பாருங்க.. நாலுபேரிடம் விசாரிங்க.. உங்க பையம் மாப்பிள்ளையிடம் பேசுங்க.. கண்டிப்பா எனக்கு நம்பிக்கை இருக்குங்க அண்ணா.. நல்லதே நடக்கும்” என்றார்.

விஜயா இப்போதுதான் மலர்ந்து புன்னகைத்தார்.

வர்ஷினி  பெண்களுக்கு தாம்பூலம் கொடுத்தாள். எல்லோரும் பெற்றுக் கொண்டு விடைபெற்று கிளம்பினர்.