எப்போதுமே முடிவுகள் எடுக்கிறோம் எனும்போது பதற்றம் இருக்கத்தானே செய்யும். அதிலும் தன் வாரிசுகளின் முடிவுகளை எடுக்கும் போது.. அந்த பதற்றத்திற்கு பெரிய பங்குண்டு. இப்போதும் அப்படிதான்.. மனையாள் உணவு உண்ண அழைத்தும் வராமல் யோசனையில் இருந்தார் சிவகுமார்.
விஜயா, கணவருக்கு உண்பதற்கு எடுத்து வந்தார். சிவகுமார் ஏதும் சொல்லாமல் உண்ணத் தொடங்கினார்.
விஜயா “முதலில் அவர்கள் வரட்டும்ங்க.. என்ன ஏது.. என பேசலாம். ஏதும் அவசரப்பட்டு முடிவு செய்ய வேண்டாமே” என்றார்.
சிவகுமாரும் “வேற என்ன செய்ய முடியும்.. வருகிறார்கள் பேசிதானே ஆகணும். எனக்கும் அவள் நன்றாக இருக்க வேண்டும் எனதான் எண்ணம்” என்றார்.
மனையாளும் அமைதியாகினர்.
சிவகுமார் “அக்காகிட்ட பேசியிருக்கேன்.. கிளம்பி வர சொல்லியிருக்கேன். பார்ப்போம்” என்றார்.
விஜயாவிற்கு இப்போதுதான் மூச்சு நேரானது.. “நானும் பேசுகிறேன் அண்ணியிடம்” என்றார்.
“ம்.. மாப்பிள்ளை தர்ஷன்.. யாரிடமும் இப்போது ஏதும் சொல்லாத” என்றார்.
“நான் ஏன் சொல்றேன்.. பேசி பார்ப்போம் முதலில் அவர்களிடம்.. அப்புறம் முடிவு நீங்க சொல்றதுதானே” என்றார் கணவரிடம்.
அதன்பின் ‘ஏதாவது வேண்டுமா’ என்றார் சிவகுமார்.. நால்வர் வருகிறார்களே அதனால்.. சிற்றுண்டி ஏற்பாடுகள் பற்றி பேச தொடங்கினர் தம்பதிகள்.
சற்று நேரத்தில் சிவகுமாரின் அக்கா மாமா இருவரும் வந்தனர்.
விஜயாதான் டாக்ஸி புக் செய்திருந்தார். அண்ணியிடம் அழைத்து பேசியிருந்தார். அப்போதே அவரின் அண்ணியும் ‘டாக்ஸி புக் செய்திடு’ என்றுவிட்டார்.. ம்.. வேலை அவர்களுடையதாகிற்றே.
சிவகுமார் தன் அறையில் இருக்க.. விஜயா சென்று அழைத்து வந்தார். வந்த பெரியவர்கள் ஆசுவாசமாகி பேசத் தொடங்கினர்.
சிவகுமாரின் அக்கா “என்னடா பேசனும்.. சொல்லு.. உன் பெண்ணு பிடிச்சிருக்கு சொல்றா.. நீ உன் யோசனையில் இருக்க.. இப்போது என்னான்னு பேசறது. முடிவுக்கு வா..” என்றார் திட்டவட்டமான குரலில்.
சிவகுமார் “எனக்கு இதில் உடன்பாடில்லை க்கா.. ஆனால்” என்றார்.
வர்ஷினி சற்று உறங்கி எழுந்து இப்போதுதான் வெளியே வந்தாள். அத்தையை பார்த்ததும் “வாங்க அத்தை” என்றாள். பேச்சு அவளிடம் சென்றது இப்போது.
அத்தையும் “வாடியம்மா.. எத்தனை கல்யாணம் பார்த்திருக்கேன்.. எத்தனை பேருக்கு எடுத்து செய்திருக்கேன்.. உனக்குதாண்டி இவ்வளவு ஆர்பாட்டம் நடக்குது.. எல்லாம் புதுசா இருக்குடி ம்மா..” என்றார்.
வர்ஷினி தந்தையை பார்த்தாள். அவரும் பெண்ணை பார்த்தார்.. என்ன பேச முடியும்.
பின் அக்காவே சுதாரித்து “என்ன நடக்குது.. பொண்ணு கேட்டு வர சொல்லியிருக்கியாம்” என்றார்.
“ஆமான்னு தைரியமாக சொல்லேன்.. உனக்கே நம்பிக்கையில்லையா” என்றார்.. அவளின் பக்கம் பேசி திடீரென.
வர்ஷினிக்கு அதிர்ச்சி.. “பொண்ணு கேட்டு எல்லாம் வரசொல்லலை.. முதலில் அப்பாவை பார்த்து பேசனுமேன்னு சர்வேஷ் சொன்னாங்க. சர்வேஷ் அப்பாகிட்ட பேசுகிறேன்னு சொன்னாங்க.. அப்பாதான் பேச..வில்லை. அதான் பெரியவங்க பேசட்டும்ன்னு” என, நிதானமாக சொன்னாள்.
அத்தை தனக்குள் கணக்கு போட்டுக் கொண்டார்.. ‘ம்.. பரவாயில்லை.. ரெண்டுபேரும் பெரியவர்கள் பேச்சுக்கு மதிப்பு கொடுக்கிறாங்களே.. அவங்க வீட்டு ஆட்களும், தம்பிக்கு விருப்பமில்லை என தெரிந்ததும்.. சமாதானம் பேச வருகிறார்கள்.. நல்ல குடும்பமாகதான் இருக்கும்..’ என எண்ணிக் கொண்டார்.
சிவகுமார் அதன்பின் ஏதும் பேசவில்லை.. மதிய உணவு முடிந்து உண்டு பெரியவர்கள் உறங்கி எழுந்தனர்.
விஜயா பஜ்ஜி போடுவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்துக் கொண்டிருந்தார். இனிப்பு வெளியில் வாங்கிக் கொண்டனர்.
அத்தை வர்ஷினியிடம் “புடவை கட்டிக் கொள்வதுதானே” என்றார்.
அத்தையும் விடாமல் “அவன் என்ன சொல்ல போறான்.. இனிமேலா நிற்க போகிறீர்கள்.. எல்லாம் நல்லதாக நடக்கும்” என்றார்.
வர்ஷினிக்கு முகம் வாடித்தான் போனது. என்ன செய்ய அத்தை மதியம் தனக்கு சாதகமாக பேசும் போது சரியாக இருந்தது.. இப்போது பேசும் போது.. வலிக்கிறது. என்ன செய்ய.. அத்தை இப்போது தம்பியின் கோணத்திலிருந்து யோசிக்கிறார். ஆக, சட்டென பேசிவிட்டார்.
வர்ஷினி நகர்ந்து சென்றாள்.
விஜயாதான் வேண்டுதலானான வேண்டுதலோடு கிட்செனில் நின்றுக் கொண்டார்.
சிவகுமார் “வர்ஷினி, கிளம்பிட்டாங்களா” என்றார்.
“ம்.. ப்பா.. கிளம்பிட்டாங்க, ராகுகாலத்திற்கு முன் வரணும்ன்னு” என்றாள்.
கேட்டுக் கொண்ட தந்தை, கிளம்பிவிட்டார் வெளியே. பெண்கள் ‘என்னடா இது’ என பார்த்திருந்தனர். எப்படி வெளியே செல்பவனை தடுப்பது என அக்கா நின்றார்.. “என்ன விஜயா.. கிளம்பிட்டான்” என்றார்.
“வந்திடுவார் அண்ணி.. மளிகை கடைக்குத்தான் போவார்.. வந்திடுவார்..” என்றார் சமாதானமாக.. தாக்கும் சேர்த்து சொல்லிக் கொண்டார்.
எதிர்பார்த்திருந்த நேரத்திற்கு.. சர்வேஷ் வீட்டிலிருந்து நால்வரும் வந்து சேர்ந்தனர்.
சிவகுமாரின் அக்கா மாமாதான் முன்னின்று வரவேற்றனர் சிவகுமார் இன்னமும் வந்திருக்கவில்லை.
விஜயா கணவனுக்கு போனில் அழைத்து சொன்னார்.
அதற்குள் சிவகுமாரின் அக்கா.. “எங்க இருக்கீங்க” என பேசத் தொடங்கினார்.. இப்போது இருக்குமிடம் பற்றி பேசினர்.
அக்கா “என் தம்பிதான் தூரமாக இருந்தான்.. இப்போது அவனும் இங்கே வந்துட்டான்.. இன்னொரு தம்பி இவளின் சின்ன வயதில் இறந்துட்டான்..” என்றார், குரலில் எதோ பேதத்தோடு.
சர்வேஷ்ஷின் அன்னையும் புரிந்துக் கொண்டு “ம்.. வர்ஷினி பற்றி சர்வேஷ் சொல்லியிருக்கான்.. எங்களுக்கு தெரியும்” என்றார்.
துர்கா “எங்க அப்பா பெயர் சபாபதி, எங்களுக்கும் சென்னைதான்.. அதனால்” என தொடங்க.
அத்தை “சபாபதி.. ம், எந்த ஊர்.. உங்க அம்மா பேர் என்ன” என முத்துநாயகியை பார்த்தார்.. மீண்டும் எதோ தேடும் எண்ணத்தோடு.
துர்கா “அம்மா பேர், முத்துநாயகி.. நான் பனிரெண்டாம் வகுப்பு வரை.. இங்கேதான் படித்தேன்.. ப்சென்ட்நகரில்.. அப்புறம்.. திருச்சி போயிட்டோம்” என்றார்.
அத்தை “பெசன்ட் நகரில் எங்க..” என்றார் விவரமாக..
தெருவின் பெயர் சொன்னாள் துர்க்கா.. அத்தை நெற்றி சுருக்கி “ஏது.. மூன்றாவது வீடு.. முத்து இல்லம்.. அதுவா” என்றார்.
முத்துநாயகி “அ.. அதான்.. அப்போதே விற்றுவிட்டோம்.. அண்ணன் குமாரவேல்தான் ஏற்பாடு செய்தாங்க.. அவர் இல்ல விற்கும் போது..” என்றார் பழைய கதையை நினைவு கூர்ந்து.
அத்தை “அட.. சபாபதி, நாங்க.. வீடு வாங்கினது.. க்கும்.. எங்களை ஞாபகம் இல்ல.. இவர் என் கணவர்.. குணசேகர். நீங்க வீட்டினை இவருக்குதான் விற்றீங்க.. நாங்கதான் வாங்கியிருக்கோம்.. வேலுதம்பி இவரோட பிரென்ட்.. எங்களுக்கு நல்லா தெரியுமே.. இப்போதுதான் அவங்க பொண்ணுக்கு குழந்தை பிறந்திருந்ததுன்னு பார்க்க போனோம்” என்றார்.. புன்னகையும் அதிர்ச்சியுமாக.
முத்துநாயகி துர்க்கா லக்ஷ்மி மூவரும் என்ன சொல்லுவதென தெரியவில்லை.. உறைந்து நின்றனர்.
அக்கா “விஜயா..” என அழைத்து விவரம் சொன்னார்.. விஜயாவிற்கும் என்ன பேசுவதென தெரியவில்லை.
சசிவகுமார் வந்தார்.. எல்லோரையும் முறையாக வரவேற்றார்.
சிவகுமார் “நல்லா இருக்கோம்.. காபி சாப்ட்டீங்களா” என விசாரித்தார், பேச்சினை இயல்பாக முயன்றனர் பெரியவர்கள்.
இப்போது அக்கா “தம்பி.. நாம வாங்கியிருக்க வீடு இவர்களோடது டா..” என கூறி விவரம் சொன்னார் புன்னகையோடு.
துர்கா இயல்பு நிலைக்கு வந்தாள் “எங்களுக்கும் ரொம்ப சந்தோஷ்ம்ங்க.. நீங்க எல்லோரும் எப்படி இருக்கீங்க” என்றாள்.
சிவகுமாரின் அக்கா “என்ன ம்மா.. இப்படி கேட்டுட்ட.. நல்லா இருக்கோம்மா.. எனக்கு கூட சங்கடம்.. எப்படி கடனில் இருக்கும் வீட்டினை வாங்குவது என.. ஆனால், வேல் தம்பி.. ‘நீங்க பண்ற உதவி இதுன்னு’ சொல்லித்தான் எங்களை சம்மதிக்க வைத்தார்.. அங்க வந்தபின் நல்லா இருக்கோம் ம்மா..” என்றார்.
சபாபதி குடும்பத்தாருக்கு சந்தோஷம்தான். வீடு பற்றி நியாபாகம் கூட இல்லை இவர்களுக்கு. ஆனால், எதோ நல்வாய்ப்பாக.. தெரிந்தவர்கள் எனும் போது, நல்லவர்களிடம் வீடு சேர்ந்திருக்கிறது என ஒரு நிறைவு அவ்வளவுதான்.
மனது குளிர்ந்தது எனலாம்.. தெரியாதவர்கள் இல்லை.. என இரு குடும்பமும் நிம்மதியாகினர்.
சிவகுமாரின் மாமா “நீங்க இப்போது சொந்த வீடு வாங்கி இருப்பதை கேட்க்க சந்தோஷமா இருக்கும்மா.. பிள்ளைகள் எல்லாம் நல்லா இருக்காங்களா..” என்றார்.
லக்ஷ்மி, தங்களின் வேலை குழந்தை குடும்பம் என சொல்லிக் கொண்டிருந்தாள்.