இடம் மாறும் மனங்கள்!

20

சர்வேஷ் வீட்டிலிருந்து.. அவனின் அன்னை இரண்டு அக்காக்கள்.. லக்ஷ்மியின் கணவர் கார்த்திக்.. என நால்வரும் வர்ஷினியின் வீட்டிற்கு இன்று வர இருக்கிறார்கள்.

வர்ஷினியிடம் நேற்று இரவுதான் சொல்லியிருந்தான் சர்வேஷ். வர்ஷினிக்கு ஏன் என்னிடம் முன்பே சொல்லவில்லை என கோவம். அத்தோடு, ‘நான் பார்த்துக் கொள்ளுகிறேன் என சொன்னேனே.. அப்பா ஏதாவது அவர்களை சொல்லிவிட்டால் என்ன செய்வாய்’ என சர்வேஷ்ஷிடம் வாதாடதான் செய்தாள் பெண்.

சர்வேஷ் “இதை அப்படியே விட முடியுமா வர்ஷி” என்றான்.

பதிலில்லை அவளிடம்.

அவனே “இங்கபாரு, உங்க அப்பாக்கு இருப்பது மூடநம்பிக்கை..” என முடிக்கக்கூட இல்லை வர்ஷினி “சர்வா, ப்ளீஸ்.. அப்பா என் வாழ்க்கையில் நடந்தை எண்ணி பயப்படுகிறார்.. அதை இப்படி எல்லாம் சொல்லாதே” என்றாள்.

“உண்மை டி இது” என்றான்.

“சரி நான் வைக்கிறேன்.. நீ என்னமோ பண்ணு” என கூறி அழைப்பினை துண்டித்தாள்.

சர்வேஷ் பதறிபோனான்.. மீண்டும் அழைத்தான் எடுக்கவில்லை. என்ன செய்வது இப்படி சொல்லக் கூடாது எனதான் எண்ணியிருந்தான், ஆனாலும் சட்டென வாய்தவறி வார்த்தை வந்துவிட்டது. தன் சொல்லுக்கு வருந்தினான், பொறுமையாக இருந்தான்.. சற்று நேரம்.

இருபது நிமிடம் சென்று அழைத்தான்.. அப்போதுதான் வர்ஷினி அழைப்பினை ஏற்றாள்.

சர்வேஷ் “நம்ம லைப் வர்ஷி” என்றான், கெஞ்சும் குரலில்.

பெண்ணவளுக்கும் கண்கள் கலங்கியது.. ஏதேதோ பிரளயம் போல உணர்வு.. நிதானமாக “உங்க வீட்டிலிருந்து இப்போவே வரணுமா சர்வா.. அப்பாவின் கோவம் போகவில்லையே, அவர்களை ஏதாவது பேசிவிட போகிறார்” என்றாள்.

“வேற என்ன செய்யலாம்” என்றான், அழுத்தமான குரலில்.

வர்ஷினி “நான் கொஞ்சநாள் அப்ரோடில் வேலை செய்யலாம்ன்னு யோசிக்கிறேன். ஏதாவது அரபியன் கன்ட்ரியில் வேலை தேடலாம்ன்னு நினைக்கிறேன்.. அதை செய்யலாம்.. கல்யாண பேச்சினை கொஞ்சநாள் தள்ளி போடுவோம்” என்றாள்.

“எதுக்கு டி” என்றான்.

“அப்பாவை விட்டு கொஞ்சநாள் தள்ளி இருக்கலாம்ன்னு நினைக்கிறேன். எனக்கு ஏதும் ஆகாதுன்னு அவரிடம் என்னால் சொல்ல முடியவில்லை. அதனால், கொஞ்சநாள் தள்ளி இருக்க போறேன்” என்றாள்.

“கஷ்ட்டம் டா.. என்னால், உன்னை தனியாக விட முடியாது. இதில் உன் அப்பா போலதான் நானும். வேண்டுமென்றால் என் ஆபீசில் ஏதாவது வேலை இருக்கா என பார்க்கிறேன்.. என்கூட வந்திடு” என்றான், தனக்கு சாதகமாக யோசித்து..

“ரணகளத்திலும் உனக்கு ஒரு குதூகலம் கேட்க்குது.. நீ தனியா.. நான் தனியாதான் இருக்கணும் சொல்லிட்டேன்.. வேற வேற கன்ட்ரியாகத்தான்  இருப்போம்.. அப்படி நான் போவதாக இருந்தால்..” என்றாள்.

“உன் அப்பா இதுக்கு ஒத்துக்கமாட்டார்.. நானும்தான். சேர்ந்தே கஷ்ட்டபடலாம்.. சேர்ந்தே சந்தோஷமா இருக்கலாம்.. தனியா நீ எங்கும் போக வேண்டாம்” என்றான்.

“சர்வா.. கொஞ்சநாள் நான் வெளிநாட்டில் இருந்து அப்பாகிட்ட எனக்கு ஒன்னும் ஆகாதுன்னு காட்டனும்” என்றாள்.

அமைதியானான் சர்வா.

வர்ஷினி “இதில் கஷ்ட்டம் என எதுவுமில்ல சர்வா.. அப்பா என்னை மட்டுமே நினைக்கிறார்.. என்னோட கடந்த காலத்தில் நடந்தவைகளுக்கு அவர் மட்டுமே காரணம்.. என நினைத்து ரொம்ப கஷ்ட்டபடுகிறார். அதான் இப்படி யோசிக்கிறேன்” என்றாள்.

சர்வேஷ் விரக்த்தியாக  “அப்பாவையும் பெண்ணையும் ரொம்ப கஷ்ட்டபடுத்தரானோ” என்றான், தன்னால் ஏதும் பேச முடியவில்லையே.. அவருக்கு புரியவைக்க முடியவில்லையே.. அத்தோடு.. இப்படி இவள் யோசிக்கும் அளவுக்கு வைத்துவிட்டோமே.. என யோசனை அவனுக்கு.

“சர்வா.. என் அப்பாவை நான்தானே கன்வீன்ஸ் பண்ணனும்.” என்றாள்.

“அப்படி எல்லாம் இல்ல.. அதான் அம்மா அக்கா நாளைக்கு பேசுவதற்கு வருகிறார்களே.. பார்ப்போம்.. உன்ன அப்பா என்ன சொல்லுகிறார் என..” என்றான்.

பெண்ணவளுக்கு நம்பிக்கையே இல்லை.. “ம்”என்றாள்.

சர்வா “பேசி பார்ப்போம்.. நீ ஏதும் அதற்குமுன் யோசிக்காத.” என்றான்.

இன்னமும் அவளிடம் நம்பிக்கை என்பதே வரவில்லை. சர்வேஷ் அவளிடம் வேறுபேசினான்.. சற்று நேரம் என்ன  சாப்பிட்ட.. என்ன க்ளைமெட்.. என போரிங் டாக் முடித்து அழைப்பினை துண்டித்தனர் இருவரும்.

மறுநாள் காலையில் நேரமாக எழுந்துக் கொண்டாள் பெண். விடுமுறை தினம் என்பதால் அலுவலக வேலையில்லை.  ‘சர்வேஷ், வீட்டிலிருந்து வருவதை அம்மாவிடம் சொல்லுவதா வேண்டாமா..’ என எண்ணம். அப்பா என்ன பேசுவார்.. என்ன நடக்கும் என முழு யோசனை.

வர்ஷினி குளித்து வெளியே வந்தாள். 

விஜயா சிவகுமார் இருவரும் அப்போதுதான் கல்யாணமாலை நிகழ்ச்சியை டிவியில் பார்த்துக் கொண்டே, காபி பருகிக் கொண்டிருந்தனர்.

வர்ஷினி வருவதை பார்த்து விஜயா “என்ன டா அதிசயம் இது.. இவ்வளவு சீக்கிரம் எழுந்திட்ட” என்றார்.

வர்ஷினி புன்னகையோடு அமர்ந்தாள்.

சிவகுமார் டிவியில் கவனமாகவே இருந்தார்.

வர்ஷினி தந்தையை பார்ப்பது.. அன்னையிடம் பேசுவது என இருந்தாள்.

விஜயா எழுந்து பெண்ணுக்கு காபி கலந்துக் கொண்டு வந்து அமர்ந்தார்.

வர்ஷினி காபியை குடித்துக் கொண்டே தந்தையைதான் பார்த்திருந்தாள்.

தந்தை “என்ன விஷயம்” என்றார்.

“ப்பா, அது.. அம்மா.. சர்வேஷ் வீட்டிலிருந்து இன்று உங்ககிட்ட பேசுவதற்கு வருகிறார்கள் ப்பா” என்றாள் கீழே பார்த்துக் கொண்டு சட்டென சொல்லிவிட்டாள் பெண்..

சிவகுமார் மனையாளை பார்த்தார்.. விஜயா “என்னடி இது.. அதெல்லாம் எதற்கு” என கணவரின் முறைப்பினை உணர்ந்து, மகளை ஏசினார்.

“அதில்லம்மா.. அவங்க வந்து பேசனுமில்ல” என்றாள்.

“அப்பாதான்..” என.. விஜயா எதோ தொடங்க.

மகள் பொங்கிவிட்டாள் “அப்போ நானும் அதே பிடிவாதத்தோடு இருக்கிறேன் ம்மா. அப்பா, முன்பு நடந்தவற்றுக்கு நீங்கதான் காரணம் அப்படின்னா.. சம்பத் அப்பா இறந்ததுக்கு நான்தானே காரணம்.. அவங்க என்னை கூட்டிட்டு போகாதவரை நன்றாகதானே இருந்தாங்க.. அப்போ எல்லாவற்றுக்கும் காரணம் நான்தானே அப்பா” என்றாள்.

சிவகுமார் நிமிர்ந்து அமர்ந்தார்.. மகளின் பேச்சில். ‘இதென்ன நான் ஒன்று சொன்னால் இவள் வேறு சொல்லுகிறாளே’ என.

அன்னை பதறினார்.. “என்னடி இது பேச்சு” என்றார்.

மகளோ “அம்மா, நடக்கும் எல்லாவற்றுக்கும் நாம பொறுப்பேற்றுக் கொண்டால் எப்படிம்மா வாழ்றது. சம்பத் அப்பா இறந்தது எனக்கும் கவலை.. அதன்பிறகு நீங்கதான் அம்மா அப்பான்னு புரியும் போதும் எனக்கு அதுவும் கவலை.. பயம்.. இப்போது திருமணம் எனும் போதும் என்னுடைய பிள்ளைபருவத்தின் நிழல் தொடருகிறது அப்போதும் பிரச்சனை.. இப்போதும் பிரச்சனை. ஆக, என்னால்தானே பிரச்சனை. அப்போது என்மீதுதானே நீங்கள் கோவப்படனும்.. இப்படி சம்பந்தமே இல்லாமல்.. வெளிநாடு போனால்.. எனக்கு ஏதாவது நடந்திடும் என்றால் எப்படி ப்பா..” என்றாள்.

தந்தைக்கு கோவம் வர “எப்படி பேசுகிறாள் பாரு.. இவ நல்லதுக்குதானே சொல்றோம். ஜோதிடரும் வெளிநாடு வேண்டாம் எனத்தானே சொல்றாங்க. காரணம் இல்லாமல் சொல்லலையே.” என்றார் மனையாளிடம்.

விஜயா “இருங்க.. அவ சொல்றதும் சரிதானேங்க.. அவ சின்ன வயதில் ஜோதிடம் பார்த்தது.. அப்போது இருந்த சூழலில் எல்லாம் சரிதானோ என தோன்றியது.. அதுவே உங்கள் மனதில் பதிந்துவிட்டது. இப்போது கொஞ்சம் யோசிக்கலாமே. அவள் விரும்புகிறாள்.. சில வருடங்களில் இந்தியா வந்திடுவேன் என்கிறாள்.. நிதானமாக பேசலாமே” என்றார்.

சிவகுமார் விருட்டென வெளியே கிளம்பிவிட்டார்.

இந்த சென்னை வந்த நாளிலிருந்து.. ஒரு நட்பினை பற்றிக் கொண்டிருக்கிறார்.. ஒரு மளிகை கடை முதலாளி அவர். அங்கேதான் பெரும்பாலும் அமர்ந்திருப்பார். இவர் வயதினை ஒத்தவர்தான் அதன் முதலாளி. அதனால் பேசி பழகி.. அங்கேயே நட்பு பாராட்டிக் கொண்டார். தன் நண்பர் அவசரமாக வெளியே சென்றால் இவர் கடையை பார்த்துக் கொள்வார். அங்கே இருவர் வேலை பார்க்கிறார்கள். இப்போது அங்கேதான் சென்றார் சிவகுமார்.