Advertisement

உன்இதழினில் நான் சிரிப்பேன்…

இதழ் 1

காலை நேரப் பரபரப்பில் அந்த வீட்டில் அனைவரும் இருந்தனர்.. அந்த வீட்டின் மூத்த தலைமுறையைச் சேர்ந்த சீதாராமன் தோட்டத்தில் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தார்.. அவரின் இரு மகன்கள் மற்றும் இரு பேரன்கள் அலுவலகத்திற்கு தயாராகிக் கொண்டிருக்க அவரின் பேத்தி கல்லூரிக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தாள்..

அவ்வீட்டின் மருமகள்கள் இருவரும் அடுக்களைக்கும் ஹாலிற்கும் மாற்றி மாற்றி நடந்துக் கொண்டிருந்தனர்..

“அக்கா இந்த சட்னி பத்துமா? கம்மியா இருக்க மாதிரி இல்ல?” இரண்டாம் மருமகளான வேதவல்லி முதல் மருமகள் தேவியிடம் கேட்டாள்.

“நேத்து நைட் செஞ்ச வெங்காயச்சட்னி கொஞ்சம் இருக்கு.. டைனிங் டேபிள்ல வெச்சுட்டேன்.. சாம்பார் வேற இருக்குல்ல.. இது போதும்..”

“சரிங்கக்கா..” என்றவர் ஒவ்வொரு பாத்திரமாக எடுத்து வைத்தார்..

“தேவி..” என்று குரல் கொடுத்துக் கொண்டே வந்தார், தேவியின் மணாளனும் அந்த வீட்டின் மூத்த மகனுமான சந்திரோதயன்.

“வந்துட்டேன்ங்க..” டம்பிளர் தட்டுடன் வந்த தேவி கணவருக்குக் காலை உணவைப் பரிமாறினார்..

“தம்பி எங்க?” அவர் கேட்டுக் கொண்டிருக்கும் போதே

“வந்துட்டேன் மதனி..” என்றவாறே டைனிங் டேபிளில் அமர்ந்தார் சீதாராமனின் இரண்டாவது மகன் சூர்யோதயன்.

அவருக்கும் தேவி பரிமாற, வேதவல்லி அடுக்களையுள் வேலையாக இருந்தார்.

“இன்னைக்கு நம்ம அன்னாச்சி கடைக்கு சரக்கு அனுப்பனும்.. குடோனுக்குப் போனதும் முதல்ல அதை அனுப்பிடுவோம்..” சந்திரன் தம்பியிடம் கூற, சூர்யா பதில் கூறுமுன்  

“சாப்பிடும் போது உங்க வேலையைப் பத்தி பேசாதிங்கன்னு எத்தனை தடவை சொல்லிருக்கேன்.. கார்ல போறவழில பேசிக்கோங்களேன்..” கணவரை கடிந்துக்கொண்டார் தேவி..

“நான் இல்ல மதனி..” வேகமாக பதிலளித்தார் சூர்யா.

“சித்தப்பா கிரேட் எஸ்கேப்…” சிரித்துக் கொண்டே, சித்தப்பாவின் அருகில் வந்து அமர்ந்தான்.. சந்திரன் தேவியின் மூத்த மகன் மகிழன்பன்..

அவன் கிண்டலில் மூவரும் சிரிக்க, அடுக்களையுள் இருந்த வேதாவோ,

“நான் இங்கே நெருப்புல வெந்து தோச சுட்டுகிட்டு இருக்கேன்.. இவங்க நல்லா சிரிச்சு பேசிகிட்டு இருக்காங்க.. நேரம்.. என் புருஷனுக்கு என் கையால பரிமாறக் கூட விடாம அவங்க பரிமாறிக்கிட்டு இருக்காங்க..” நொடித்துக் கொண்டே தோசைகளைச் சுட்டு எடுத்து வந்தார் வேதா..

அதற்குள் பெரியவர்கள் இருவரும் உணவை முடித்துவிட்டு, மனைவிகளிடம் சொல்லிக் கொண்டு புறப்பட்டனர்..

“இன்னும் இதுங்க ரெண்டும் என்ன பண்ணுதுங்க.. மணி ஆகிடுச்சு. அப்புறம் லேட் ஆகிடுச்சுன்னு சாப்பிடாம போகுங்க.” என்ற வேதா

“இனியன்.. வதனி”என்று குரல் கொடுத்தார்..

“வந்துட்டேன் வந்துட்டேன்..” கத்திக் கொண்டே வந்தார்கள் தேவியின் இரண்டாவது மகன் மகிழினியனும், வேதாவின் ஒரே மகள் மகிழ்வதனியும். நேரமானதால் வதனி வேகமாகத் தோசையை வாயினுள் திணித்தாள்.

“மெதுவா சாப்பிடு.. விக்கிக்கப் போகுது..”

“லேட் ஆகிடுச்சு தேவிமா..” ஒரு தோசையுடன் எழுந்த வதனி தேவியிடம் கூற,

“அறைஞ்சிடுவேன்.. ஒழுங்கா மூணு தோசையை சாப்பிட்டு போ. எப்பப்பாரு லேட்டா எழுந்துக்க வேண்டியது.. காலைல ஒரு இட்லி ஒரு தோசைன்னு சாப்பிட வேண்டியது.. மீதி இருக்க தோசையை உன் தலையில தேய்க்கவா?” மகளை அதட்டினார் வேதா.

“வேதா.. பிள்ளையைத் திட்டாதே..” என்ற தேவி, தட்டில் இன்னுமொரு தோசையை வைத்து

“இனியனை கொண்டு வந்து காலேஜ்ல விட சொல்லுறேன்.. பஸ் போனா பரவாயில்லை..”  என்றார்

“ம்மா எனக்கு வேலை இருக்கு.. அல்ரெடி லேட் ஆகிடுச்சு.. இதுல இவளை விட்டுட்டு நான் பேங்க்கு போனா இன்னும் லேட் ஆகும்..” வேகமாக மறுத்தான் இனியன்..

“பாருங்க தேவிமா.. இந்த அண்ணன் எப்பவும் இப்படி தான்..” வதனி முகத்தைத் தூக்கிக் கொண்டாள்.

“நான் விடுறேன்டா.. நீ மெதுவா சாப்பிட்டு வா..” மகிழன்பன் தங்கையைப் பார்த்து கூறிவிட்டு, தம்பியிடம்

“செக்கை மாத்த மணி அண்ணனை அனுப்புறேன்.. மாத்திக் கொடுத்துவிடுடா..” என்றான்

பின் மூவரும் அவரவர் பைகளை எடுத்துக் கொண்டு இரு அன்னைகளிடமும் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டனர்..

சீதாராமன்.. ரிடையர்ட் ஹெட்மாஸ்டர்.. அவர்கள் இருக்கும் கிராமத்தில் முதன் முதலில் பட்டம் பெற்று ஆசிரியராக தேர்வாகியவர் இவர் தான்.. அவர்கள் ஊரில் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே பள்ளி இருந்தது.. மேலே படிக்க வேண்டுமென்றால் அவர்கள் ஊரிலிருந்து ஆறு மைல் தள்ளிப் படிக்க வேண்டும்.. பஸ் வசதி அவ்வளவாக இல்லாத காலக் கட்டத்திலும், சைக்கிலிலும், சில நாள் நடந்தும் என்று தனது படிப்பை முடித்து, தன் ஊரிற்கே ஆசிரியராக வந்தார்.. அவரின் முயற்சியால் தான் பன்னிரெண்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளி அவ்வூரில் உருவானது..

கல்லூரி இப்பொழுது பத்து வருடங்களாக அங்கே உள்ளது.. அவரின் தர்மபத்தினி வாசுகி ஐந்து வருடங்களுக்கு முன்பு இறந்திருந்தார்.. அவரின் மூத்த மகன் சந்திரோதயன்..அவருக்கு தனது தங்கையின் மகள் தேவியை மணமுடித்து வைத்தார் சீதாராமன்.. இரண்டாவது மகன் சூர்யோதயன்.. தூரத்து சொந்ததில் அவருக்கு வேதவல்லியை மணமுடித்தனர்.. அண்ணன் தம்பி இருவரும் சேர்ந்து சர்க்கரை ஆலை ஒன்றை நடத்தி வருகின்றனர்..

சந்திரோதயன் தேவிக்கு இரண்டு மகன்கள்.. மூத்தவன் மகழன்பன்.. MBA முடித்துவிட்டு, தந்தை மற்றும் சித்தப்பாவுடன் சேர்ந்து சர்க்கரை ஆலையையும், கம்ப்யூட்டர் இன்ஸ்டிடியூட் ஒன்றையும் நடத்தி வருகிறான்..

இரண்டாவது மகன் மகிழினியன்.. M.com முடித்துவிட்டு கூட்டுறவு வங்கியில் ஆபிசராகப் பணிபுரிகிறான்..சூர்யோதயன் வேதவல்லிக்கு ஒரே மகள்.. மகிழ்வதனி.. B.sc இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறாள்..

                           **********

“இதுங்க கிளம்புறதுகுள்ள சப்பா…” வேதா பெருமூச்சு விட, தேவி சிரித்தார்..

சீதாராமன் அப்பொழுது தான் வீட்டிற்குள் நுழைந்தார்.. காலையில் எழுந்ததும் காபியைக் குடித்துவிட்டு, தோட்டத்திற்குச் சென்றால் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிவிட்டு, சிறிது நேரம் நடந்துவிட்டு அவர் உள்ளே வர ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் ஆகிவிடும்.. மாமனார் வந்ததும் அவருக்கும் காலை உணவை கொடுத்தவர்கள் அவர் உண்டப்பின், தாங்களும் உண்டுவிட்டு, பாத்திரங்களை கழுவுவதற்காக கொல்லைப்புறத்தில் போட்டனர்..

“மதியம் என்னக்கா செய்யுறது முள்ளங்கி வாங்குனது அப்படியே இருக்கு.. முள்ளங்கி சாம்பார் செஞ்சுடுவோமா?”

“வதனிக்கு பிடிக்காதுல தேவி.. பிள்ள சுத்தமா சாப்பிடாது..”

“தினமும் எதாச்சும் ஒன்னைப் பிடிக்கலை வேண்டாம்ன்னு தான் சொல்லுறா.. இவளுக்காக பார்த்தா, மத்தவங்க எதையுமே சாப்பிட முடியாது..”

“சரி முள்ளங்கிய தனியா வேகப்போட்டு சாம்பார்ல சேத்துப்போம்.அவளுக்கு பருப்புக் கடைஞ்சு கொடுத்துடுவோம்..”

“ஒரு ஆளுக்கு ஏன்கா தனியா செஞ்சுகிட்டு..” வேதா சொன்னதற்கு தேவிப் பதிலேதும் சொல்லாமல் சிரித்து மட்டும் வைத்தார்..

எப்பொழுதும் தேவி அப்படி தான்.. வதனிக்கு மட்டும் அவரிடம் எப்பொழுதுமே சிறப்பு சலுகை இருக்கும்.. தேவிக்கு திருமணம் ஆகி முதல் வருடமே பெண் குழந்தை பிறந்து நான்கு நாட்களில் இறந்துவிட்டது.. அதன்பின் தான் மகிழன்பன், மகிழினியன் பிறந்தனர்.. இரண்டு குழந்தைகள் போதும் என்று சந்திரனும் தேவியும் முடிவு செய்தப் பின்பும், தேவிக்கு பெண் குழந்தை இல்லையே என்கிற ஏக்கம் இருந்துக் கொண்டே இருக்கும்..

அதுவும் கைக்கு வந்த முதல் பெண் குழந்தை, தன்னை விட்டுச் சென்றது அவருக்கு மிகவும் வருத்தம்..வேதவல்லி மாசமாக இருந்த பொழுது, பெண் பிறக்க வேண்டும் என்று தேவி வேண்டிக் கொண்டே இருந்தார்.. அதே போல் மகிழ்வதனி பிறந்தாள்.. வதனி தன் சொந்தப் பெண்ணாக தான் தேவி எப்பொழுதும் நினைப்பார்.. தனது இரு மகன்களை விடவும் அவருக்கு வதனியைத் தான் ரொம்பப் பிடிக்கும்.. அந்த வீட்டிலுள்ள அனைவருக்குமே வதனிச் செல்லம் தான்.. பின்னே அந்த வீட்டின் ஒரே பெண் வாரிசு..

அவள் கேட்டு இல்லை என்று அந்த வீட்டில் யாருமே கூற மாட்டார்கள்.. வேதாவைத் தவிர.. குடும்பமே செல்லம் கொடுக்கும் போது ஒரு ஆளாவது கண்டித்தால் நல்லது தானே..

தேவிக்கு எப்படி பெண் பிள்ளைகள் மேல் ஆசையோ! அதே போல் வேதாவிற்கு ஆண் பிள்ளையின் மீது ஆசை.. வாரிசு என்றால் ஆண் தான்.. சொத்தில் பங்கு ஆண்களுக்கு தானே சேரும்.. கடைசி காலத்தில் தங்களைப் பார்த்துக் கொள்ளப் போவது ஆண் பிள்ளைகள் தானே, என்கிற பழைய சிந்தனை உடையவர்.

தேவிக்கு இரண்டு மகன்கள், தனக்கு ஒரு மகனாவது பிறந்தால் தான் இந்த சொத்தில் தங்களுக்கும் பங்கு கிடைக்கும்.. இல்லையென்றால் அனைத்தும் தேவியின் வாரிசுகளுக்கே சென்றுவிடுமே என்கிற உயர்ந்த உள்ளம் கொண்டு, வதனி வயிற்றில் இருந்தப் பொழுதெல்லாம் தேவி பெண் பிள்ளை வேண்டுமென்று வேண்டினால், இவர் ஆண்ப் பிள்ளை வேண்டுமென்று வேண்டுவார்..

தேவி வேறு அடிக்கடி பொண்ணு தான் வேதா அழகு.. பொண்ணு இல்லையேன்னு எவ்வளவு வருத்தமா இருக்கு தெரியுமா? உனக்கு பிறக்கப் போற பொண்ணை எப்படி எல்லாம் அழகுப் படுத்திப் பார்க்கனும்னு ஆசையா இருக்கேன்.. நீ பையன் வேணும்னு சொல்லுற.. இதோ இவனுங்க ரெண்டு பேர்ல ஒருத்தன நீ வெச்சுக்கோ.. உன் பொண்ண எனக்கு கொடுத்துடு என்பார்..

அப்பொழுதெல்லாம் வேதாவிற்கு தோன்றுவது, பையன் இருக்கான்னு ஆணவம்.. அதான் இப்படி பேசுறாங்க. எல்லா சொத்தையும் அவங்க பசங்களுக்கே கொடுக்கணும்.. அதுக்கு நான் பொண்ணைப் பெத்துக்கனுமா? தேவி மேல் இந்த எண்ணம் தான் வேதாவிற்கு.

தேவி எண்ணியப்படியே வதனி பிறந்துவிட, அவருக்கு அளவிட முடியா ஆனந்தம்.. தேவிக்கோ இவங்க வாய் வெச்சு தான் பொண்ணு பிறந்திடுச்சு.. அடுத்தக் குழந்தை சீக்கிரம் பையனா பெத்துக்கணும் என்று நினைத்தார்..

அவரின் நேரமோ என்னவோ, இரண்டாவது குழந்தை அவருக்கு அமையவே இல்லை. கணவரை நச்சரித்து மருத்துவமனையும் சென்று பார்த்து வந்தார்.. எந்தப் பிரச்சனையும் இல்லை.. இருந்தும் இன்னொரு குழந்தைக்கு வழியில்லாமல் போனது.. அதுவே அவருக்கு தேவி மேல் பொறாமையை அதிகரித்தது..

அவர் சாதரணமாக ஏதாவது செய்தால் கூட, ‘ரெண்டும் பையன்.. அதான் இப்படி ஆடுறாங்க..’ என்று நினைப்பார்..

ஆனால் இதை எதையும் தேவியிடம் நேரடியாக அவர் சொன்னதில்லை.. கணவரிடமோ அல்லது தனக்குத் தானேவோ தான் பேசிக் கொள்வார்.. வெளியே பார்ப்பவர்களுக்கு “சுந்தரத்தோட ரெண்டு மருமகளுகளுக்குள்ள எம்புட்டு ஒற்றுமை.. அதுங்கள மாதிரி இருக்கணும்.” என்று எண்ணும் அளவிற்கு நடந்துக் கொள்வார்..

தேவிக்குமே, வேதா தன்னைப் பற்றி இப்படி நினைக்கிறாள் என்றெல்லாம் தெரியாது.. ஆண் குழந்தை மீது அவளிற்கு ஆசை என்பது மட்டுமே அவரறிந்தது.. தன் மீது இத்தனை வன்மம் தனது ஓரகத்திக்கு என்று தெரியும் போது அவரின் நிலை?  

மதியச் சமையலை முடித்துவிட்டு இனியனுக்கு ஒரு கேரியரிலும், மற்ற மூவருக்கும் ஒரு கேரியரிலும் வேலையாள் மூலம் உணவை கொடுத்தார்கள்.. வதனி கல்லூரி மதியம் ஒன்றுடன் முடிந்துவிடும். வீட்டிற்கு ஒன்றரைக்குள் வந்துவிடுவாள். மாமனாருக்குப் பன்னிரெண்டரை மணி போல் மதிய உணவைக் கொடுத்துவிட்டு, வதனி வந்ததும் மூவரும் சேர்ந்து உணவை உண்ணுவார்கள்..

மாலை நான்கு மணிப்போல் பெரியவர்கள் இருவரும் வீட்டிற்கு வந்துவிடுவார்.. மகிழன்பன் தனது கம்ப்யூட்டர் சென்டருக்கு சென்றுவிட்டு ஆறு ஆறரை போல் வருவான்.. இனியன் ஐந்தரைக்கு வருவான். அதன்பின் இரவு உணவு, ஆண்கள் தொழில்பற்றி பேசிக் கொண்டிருப்பார்கள், பெண்கள் வீட்டு வேலைகளை செய்துக் கொண்டிருப்பார்கள்.. இது தான் அவர்கள் வீட்டின் வாடிக்கை..

அன்றும் இரவு உணவை முடித்துவிட்டு, ஆண்கள் அனைவரும் பேசிக் கொண்டிருக்க, வதனியும் அவர்களுடன் இருந்தாள்.

“சூர்யா.. வதனிக்கு வரன் பார்ப்போமா? ரெண்டு மூணு பேர் நல்ல இடம் சொல்லுறாங்க.. நீயும் வேதாவும் என்ன சொல்லுறீங்க?” சீதாராமன், மகனிடம் கேட்க, தந்தையை முந்திக் கொண்டு

“தாத்தாநான் இன்னும் ugயே முடிக்கல.. ug முடிச்சுpg பண்ணனும்.. அப்புறம் ஒரு ரெண்டு வருஷம் வேலைப் பாத்துட்டு கல்யாணம் செஞ்சுக்குறேன்..” என்றாள்

“இன்னும் நாலு வருஷமா? அதுக்குள்ளஅன்புக்கு முப்பத்திரெண்டு ஆகிடுமே?” தாத்தா கவலையாக இழுக்க

“ஏன் எனக்கு செஞ்சுட்டு தான் அண்ணனுக்கு செய்யனுமா? அண்ணனுக்கு முதல்ல முடிங்க தாத்தா..”

“வீட்டுல பொண்ண வெச்சுகிட்டு எப்படிமா பையனுக்கு கல்யாணம் செய்றது..”

இவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த சூர்யா

“அன்புக்கு முதல்ல பண்ணுவோம் ப்பா.. வதனி விட எட்டு வயசு மூத்தவன்.. இன்னும் ரெண்டு வருஷம் கழிச்சு வதனிக்குப் பண்ணுவோம்..” என

“அப்பா நாலு வருஷம் டைம் கேட்டா, ரெண்டு வருஷத்துக்கு ஓகே சொல்லுறீங்க?” வதனி தந்தையை முறைக்க

“உன்னையே பாத்துக்கிட்டு இருக்க முடியுமா வதனி? வீட்டுல ரெண்டு பசங்க இருக்காங்க.. பெரியவனுக்கு இருபத்தெட்டு, சின்னவனுக்கு இருபத்தி ஆறு.. இன்னும் ரெண்டு வருஷம் கழிச்சு அவனுக்கு பண்ண வேண்டாமா? நீ நாலு வருஷம் டைம் கேக்குற? நீ ஆசைப்பட்டப்படி மேல்படிப்பு படி.. வேலைக்கு போறதப் பத்தி அப்புறம் யோசிப்போம்..” முடிவாக சூர்யா மகளிடம் கூறிவிட, தந்தையை முறைத்துக் கொண்டே தேவியிடம் புகார் வாசிக்க சென்றாள் வதனி.

“என்னப்பா யோசனை? நம்ம அன்புக்குப் பொண்ணு பார்ப்போம்.. அவனுக்கும் வயசாகுதுல..”

“சித்தப்பா.. எனக்கு என்னமோ ஐம்பது வயசு ஆனா ரேன்ஜ்ல பேசுறீங்க?”

“இது தான்டா கல்யாணத்துக்கு சரியான வயசு.. இதுக்கு மேலையும் லேட் பண்ண வேண்டாம்..” மகிழன்பனிடம் கூறியவர் அண்ணனிடம் “என்னண்ணே நீயும் எதுவும் சொல்ல மாட்டுற?” என்றார்

“அப்பா சொல்லுற முடிவு தான்..”

“அன்புக்குப் பார்ப்போம் சந்திரா.. தரகர் கிட்ட சொல்லிடு நாளைக்கு..” என்றவர் பேரனிடம் “உனக்கு ஓகே தானேப்பா?” என

“உங்க இஷ்டம் தான் தாத்தா..”

“வதனி இங்க பாரு.. அண்ணனா மாதிரி இருக்கக் கத்துக்க.. என்ன சொன்னாலும் உங்க இஷ்டம்ன்னு சொல்லுறான்.. நீ எங்களை எதிர்த்து எதிர்த்துப் பேசுற..”

“தம்பி விடுங்க.. சின்னப்பொண்ணு தானே.. படிக்கணும்ன்னு ஆசைப்படுறதுல என்ன தப்பிருக்கு..” பெறாத மகளுக்காக தேவி மைத்துனனிடம் ஆதரவாகப் பேசினார்..

“நீங்க, அண்ணன், அன்பு மூணு பேரும் அவளுக்கு ரொம்ப செல்லம் கொடுக்குறீங்க அண்ணி..” என்றதும், லேசாக சிரித்து விட்டு அவ்விடம் விட்டு சென்றார் தேவி..

Advertisement