Advertisement

நடுவுல கொஞ்சம் காதலைக் காணோம்..

அத்தியாயம் 2

காலைப் பொழுது அழகாக புலர்ந்தது… அலாரத்தின் சத்தத்தில் தூக்கம் கலைந்த தீந்தளிர் அதை  அணைத்துவிட்டு காலைக் கடன்களை முடித்துவிட்டு சமையல் அறைக்குச் சென்றாள்.. அங்கே அவளின் தந்தை தொல்காப்பியர் காபி கலந்துக் கொண்டு இருந்தார்…

“என்னப்பா அதுக்குள்ள எழுந்துட்டீங்களா?”

“ஆமாமா இன்னைக்கு எக்ஸாம் இருக்குல்ல.. அதான் சீக்கிரம் ஸ்கூல் போகணும்..” என்றவர் மகளின் கையில் ஒரு காபி கைப்பை கொடுத்தார்..

“ஐயோ ஆமா.. நேத்தே சொன்னீங்க நான் தான் மறந்துட்டேன்.. சீக்கிரம் சமையல் செஞ்சிடுறேன்ப்பா..”

“இருக்கட்டும்டா நானே செஞ்சிடுறேன். என்னமா டிபன் செய்ய? அத்தை நாளைக்கு வந்துருவா.. இன்னைக்கு ஒரு நாள் அப்பா சமையலை அட்ஜஸ்ட் பண்ணிக்கோ….”

“இட்லி மாவு இருக்குப்பா..நான் செஞ்சிக்குறேன்…” காபியை குடித்துக் கொண்டே கூறினாள்.

“சரி மதிய சமையலுக்கு காய் நறுக்கி வெச்சிடுறேன்…”

“தமிழ் நேத்தே மெனு சொல்லிட்டா…. டொமேடோ ரைஸ், உருளைக்கிழங்கு வருவல்ன்னு….”

“இன்னும் மேடம் எழுந்துக்கலையா?” என்றார் சிரிப்புடன்.

“இல்லப்பா நைட் ரொம்ப நேரம் படிச்சிட்டு இருந்தா… அதான் நானும் எழுப்பல….”

“சரிமா உருளைக்கிழங்கு வறுவல் நான் செஞ்சிடுறேன்… அம்முக்கு  நான் செஞ்சா தான் பிடிக்கும்….”

“நீங்களே செய்ங்க.. முதல காபிய குடிங்க…” என்று அவர் கையில் குடிக்காமல் வைத்திருந்த கோப்பையை காட்டி தளிர் கூற அவரும் சிரித்துக் கொண்டே குடித்தார்..

இது அவர்கள் வீட்டில் வாடிக்கையாக நடக்கும் நிகழ்வு… தமிழின் தாயார் இறந்த பிறகு தொல்காப்பியரே எல்லா வேலைகளையும் செய்வார்.. தளிரும்  பெரியவள் ஆனதும் அவருக்கு உதவி செய்ய ஆரம்பித்தாள்… அக்காவை பின்பற்றி தமிழும் தந்தைக்கு உதவி செய்ய ஆரம்பித்தாள்..

தீந்தளிர்… தொல்காப்பியர் சுந்தரியின் மூத்த மகள்… தந்தை தான் அவளது ரோல் மாடல்.. தந்தை தொல்காப்பியர் கணித ஆசிரியர்… அவரை பின் பற்றி இவளும், M.E முடித்துவிட்டு பிரபல கல்லூரி ஒன்றில் லெக்சரர் ஆக பணி புரிகிறாள்…. phd முடிக்க வேண்டும் என்பது இவளது நீண்ட நாள் கனவு.. வேலைப் பார்த்துக் கொண்டே phd யும் படித்துக் கொண்டிருக்கிறாள்…

தீந்தமிழ்… தொல்காப்பியரின் இரண்டாவது மகள்… journalism இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறாள்.. தமிழ் பிறந்து இரண்டு வருடத்திலேயே அவர்களின் தாய் சுந்தரி உடல்நலக்குறைவால் இறந்து போனார்… அப்பொழுது தளிர்க்கு வயது ஆறு… அப்பொழுதே அவள் தமிழை தன் மகளாக எண்ண ஆரம்பித்து விட்டாள்.. தொல்காப்பியரும் மற்றொரு திருமணம் செய்ய மறுத்துவிட்டார்..

தமிழைத் தொல்காப்பியரின் தங்கை தான் வளர்ப்பதாகக் கேட்ட போது கூட தளிர்  தன் தங்கையை அவரிடம் கொடுக்க மறுத்து விட்டாள்… பின் அவரும் தன் கணவரிடம் பேசி அண்ணன் இருக்கும் ஊருக்கே மாற்றல் வாங்கிக் கொண்டு, தொல்காப்பியரின் வீட்டின் அருகே ஒரு வீட்டில் வாடகைக்கு இருந்து தளிர் தமிழ் இருவரையும் பார்த்துக் கொண்டார்…

சமையல் வேலையை தந்தை மகள் இருவரும் முடித்து காலை உணவை உண்டப் பின்பும் தமிழ் எழுந்து வரவில்லை..

“சரிமா நான் கிளம்புறேன்.. தமிழ் எழுந்ததும் அவள சாப்பிட வெச்சிடு.. லேட் ஆகிடுச்சுன்னு சாப்டாம ஓடிட போறா.” சின்ன மகளை பற்றி நன்கு அறிந்திருந்த காரணத்தினால் தொல்காப்பியர் இவ்வாறு கூறினார்..

“ம் சரிப்பா..”

தந்தை சென்ற சிறிது நேரத்தில் தனது கல்லூரிக்கு தேவையானவற்றை எடுத்துவைத்துவிட்டு குளித்து முடித்து தங்கையை எழுப்பினாள் தளிர்..

“அம்மு எழுந்திரு.. லேட் ஆகிடுச்சு..”

“ம்..” என்று முனங்கியவள் தூக்கத்தை தொடர

“மணி எட்டாக போகுது.. ஒன்பது  மணி காலேஜ்க்கு இன்னும் தூங்கிட்டு இருந்தா என்ன அர்த்தம்.. எழுந்திரு..” என்று கத்தவும் வேகமாக எழுந்த தமிழ்

“எட்டு மணி வரைக்கும் என்னை எழுப்பாம என்ன செஞ்சிட்டு இருந்த.. இன்னைக்கு எனக்கு டிபேட் இருக்கு.. உன்னால தான் லேட்” என்று அக்காவை திட்டிக் கொண்டே வேகமாக குளியல் அறைக்குச் சென்றாள்..

“ஆமாடி.. ஐயோ பாவமேன்னு எழுப்புனேன் பாரு என்ன சொல்லணும்.. அலாரம் வெச்சுட்டு தூங்க வேண்டியது தானே..” என்று தளிரும் கத்திக் கொண்டே இருவருக்கும் தேவையானவற்றை எடுத்து வைத்தாள்..

பத்து நிமிடத்தில் குளித்து தலையை ட்ரையரில் காய வைத்துக் கொண்டே

“தளிர் காபி தாயேன் ப்ளீஸ்” என்று கத்தினாள் தமிழ்.

“பிரேக் பாஸ்ட் முடிச்சிட்டு காபி குடி.”

“மதியம் பார்த்துக்கலாம். இப்போ காபி போதும்.” என்று மீண்டும் அவள் கத்த சமையல் அறையில் இருந்து கையில் தட்டுடன் வந்த தளிர் அவள் தலையில் ஒரு கொட்டு வைத்துவிட்டு ஊட்ட ஆரம்பித்தாள்..

“ஹா வலிக்குதுடி..” என்று தலையைத் தேய்த்துக் கொண்டே அக்காவை தமிழ் முறைக்க

“உனக்கு பலமுறை சொல்லிட்டேன்.. சும்மா சும்மா ட்ரையர் போடாதே முடி கொட்டும்ன்னு சொன்னா கேக்கவே மாட்டியா?”

“மணி ஆகிடுச்சி.. தலைக் காயலைன்னு ப்ரீ ஹேர்ல போனாத் திட்டுவன்னு தான் டிரையர் போடுறேன்.”

“அதுக்கு சீக்கிரம் எழுந்திருக்கணும்..” என்று திட்டிக் கொண்டே காலை உணவை  ஊட்டி முடித்திருந்தாள்.

“அப்பா சாப்டாங்களா தளிர்?”

“அப்பா இந்நேரம் ஸ்கூலுக்கே போகிருப்பார்..”

“என்னது.. என்கிட்டே சொல்லாம கிளம்பிட்டாங்களா?”

“half yearly எக்ஸாம் இன்னைக்கு ஸ்டார்ட் ஆகுதுல.”

“ப்ச்..” என்று அலுத்துக் கொண்டே தமிழ் தந்தைக்கு அழைக்க அவரின் போன் ஸ்விட்ச் ஆப் என்று வந்தது…

“தளிர் அப்பா போன் ஆப் செஞ்சு வெச்சிருக்காங்க..”

“லூசு.. அப்பா தினமும் செய்றது தானே.”

“இன்னைக்கு டிபேட் இருக்கு.. அப்பா ஆல் தி பெஸ்ட் சொல்லாம எனக்கு ஒரு மாதிரி இருக்கும்..” என்றாள் சோகமாக

“ஆமா நீயா? நானால? பேச போற.. ஓவரா சீன் போடாம கிளம்பு..”

“இன்னைக்கு மட்டும் நான் ஒழுங்கா பேசல அதுக்கு காரணம் நீயும் அப்பாவும் தான்..”

“உன்கிட்ட பேசி ஒருத்தரால ஜெயிக்க முடியுமா?” தளிர் புகழ்வது போல் தங்கையை நக்கல் செய்ய..

“வஞ்சப்புகழ்ச்சி.. வந்து வெச்சுக்குறேன் உன்னை..” என்றவள் தளிரின் ஸ்கூட்டியில் பஸ் ஸ்டாப்பில் இறங்கிக் கொண்டாள்..

“ஆல் தி பெஸ்ட்.. நல்லா பேசிட்டு வாங்க பேச்சாளரே..” என்று தங்கையை வாழ்த்தி அனுப்பிவிட்டு தனது கல்லூரிக்கு சென்றாள் தீந்தளிர்..

மாலை தொல்காப்பியர் சீக்கிரமே வீடு திரும்பியிருக்க மகள்கள் வருவதற்குள் மாலை டிபனை செய்து கொண்டிருந்தார்.. ஐந்தரை மணிக்கு வந்த தீந்தளிர் தந்தையுடன் அமர்ந்து டீயை குடித்து கொண்டிருந்தாள்..

“என்னமா இன்னும் அம்மு வரலை.. நமக்கு முன்னாடி வீட்டுக்கு வந்துடுவா? என்னாச்சு?”

“இன்னைக்கு அவளுக்கு டிபேட் இருக்குன்னு சொன்னாப்பா. அதுனால லேட் ஆகுமா இருக்கும்.. வந்துடுவா.. அவ தான் ஊரையே வித்துட்டு வந்துடுவாளே..”

“அது என்னமோ உண்மை தான்மா. நீ வர லேட் ஆனா தான் நான் பயப்படனும். உன் தங்கச்சியைப் பார்த்து ஊரே பயப்படும்..” என்று தொல்காப்பியர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே கோபமாக உள்ளே நுழைந்த தீந்தமிழ் தந்தையை முறைத்துவிட்டு தனது அறைக்குச் சென்று பேக்கை விட்டெறிந்தாள்.. அவள் எரிந்ததில் பையின் உள்ளே இருந்த பாக்ஸ் வெளியே தெறித்தது..

“ஏன் இவ்வளவு கோபம்.. நான் சொன்னது கேட்டுட்டு தான் இப்படி தூக்கிப் போடுறாளா?” தொல்காப்பியர் பெரிய மகளிடம் மெதுவாக கேட்டார்.

“இல்லப்பா.. காலேஜ்ல ஏதாவது ப்ராப்ளமா இருக்கும்..” என்றவள் கீழே கிடந்த பாக்சை எடுத்துவிட்டு நிமிற உள்ளிருந்து வேறு எதுவோ கீழே விழும் சப்தம் கேட்டது..

“தளிர் நீ என்னனு போய்ப் பாரு.. ரூம்ல இருக்க ஒவ்வொரு பொருளாத் தூக்கிப் போடுறா..”

“ஏன் என் மேல எதையாவது தூக்கிப் போடவா.. போங்கப்பா..” என்று தளிர் கூற

“என்னைப் பார்த்தா உங்க ரெண்டு பேருக்கும் எப்படி தெரியுது? பைத்தியம் மாதிரியா?” என்று கத்திக் கொண்டே அக்காவை அடிக்க வந்தாள் தீந்தமிழ்..

“ஹே லூசு என்னாச்சு? ஏன் இப்படி கத்துற?” தளிர் தங்கையை அதட்ட

“நான் லூசா?அவனும் என்னை பைத்தியம் சொன்னான்.. வீட்டுக்கு வந்தா நீங்களும் அதையே சொல்லுறீங்க..” என்று மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க கத்த

“யாரு என்ன சொன்னா? நீ முதல்ல உட்காரு..” என்று அவளை சோபாவில் அமர வைக்க தொல்காப்பியர் மகளிற்கு தண்ணி எடுத்து வந்து கொடுத்தார்..

“அவன் தான்..”

“அவன் தான் அவன் தான்னா? யாரு? ஒழுங்கா சொல்லு தமிழ்..” தளிர் தங்கையை அதட்ட

“நீ கூட அவனால என்னை திட்டுற..” என்ற தமிழின் கண்களில் கண்ணீர் வந்தது

“அம்மு என்னடா எதுக்கு அழற.. அக்கா எங்க உன்னை திட்டுனா? நீ ஒழுங்கா பதில் சொல்லலைன்னு தானே கேக்குறா..” தொல்காப்பியர் மகளின் தலையை வருடிக் கொண்டே கூற

“போங்க உங்களுக்கு அவ தான் செல்லம்.. நான் இல்ல..” என்று தந்தையின் கையை தட்டிவிட்டவள் தளிரின் தோளில் சாய்ந்துக் கொண்டாள்..

இளைய மகளின் செய்கையில் தந்தைக்கு சிரிப்பே வந்தது.. தளிருக்கு ஆதரவாக இவர் கூறினார் என்று தந்தையை திட்டியவள், தளிரின் தோளிலே சாய்ந்துக் கொண்டு ஆறுதல் தேட மகள்கள் ஒருவர் மேல் ஒருவர் வைத்திருக்கும் பாசம் அவருக்கு சந்தோஷமாக இருந்தது.. அவர் சிரிப்பதை பார்த்த தளிர் உதட்டசைவில்  ‘சிரிக்காதிங்க பார்த்தா இன்னும் கத்தப் போறா..’ என்று கூற அதற்குள் அதைப் பார்த்த தமிழ்

“எதுக்கு சிரிக்கிறீங்க… எல்லாம் உங்களால தான். காலைல எனக்கு ஆல் தி பெஸ்ட் சொல்லாம வேலைக்கு போய்ட்டிங்க.. கால் பண்ணாலும் எடுக்கல.. அதுனால தான் இன்னைக்கு அவன் எல்லாம் என்னைப் பேசுற மாதிரி ஆகிடுச்சி.. இதுக்காக உங்கள நான் மன்னிக்கவே மாட்டேன்.”

“அம்மு.. நான் என்ன பண்ணேன்… நீ காலைல எழுந்துக்காம இருந்துட்டு..” என்று அவர் ஏதோ கூறவர

“அப்போ நான் தூங்கு மூஞ்சியா? அப்படி தானே சொல்லவரீங்க?”

“அடடா கொஞ்சம் சும்மா இருங்க ரெண்டு பேரும்.. நீ போய் ட்ரெஸ் சேன்ஜ் செய்துட்டு வா…” தளிர் தங்கையை உள்ளே அனுப்ப முயல

“முடியாது.. அவன் என்னை எப்படி எல்லாம் பேசுனான் தெரியுமா?”

“சொன்னா தானே தெரியும். முதல்ல அந்த அவன் யாரு.. எப்பவும் திட்டுவியே உன் சீனியர் அவனா?”

“அவன் தான்.. அவனே தான்.. இன்னைக்கும் டிபேட்ல ரொம்ப பேசிட்டான்.. நான் என்ன சொன்னாலும் அப்போஸ் பண்ணணும்னே பேசுனான் தெரியுமா.. அதுல வேலிட் பாய்ண்ட் கூட இல்ல.. இரிடேடிங் இடியட்.. அவன பார்த்தாலே எரிச்சலா வருது.. கல்லக் கொண்டு மண்டைய உடைக்கணும்..”

“சரி விடு.. இந்த இயரோட நீயும் காலேஜ் விட்டு போகிடுவ.. அவனும் போயிருவான்.. கொஞ்ச நாள் தானே அட்ஜஸ்ட் செய்துக்கோடா..” தளிர் தங்கையின் கையைப் பிடித்துக் கொண்டு ஆறுதல் கூறினாள்.

“அதெல்லாம் கூட பரவாயில்லை தளிர்.. நான் பஸ்க்காக நின்னுட்டு இருக்கேன்.. என்னைப் பார்த்துட்டே சொல்றான் சரியான பைத்தியம்னு.. எவ்வளவு திமிர் இருக்கணும் அவனுக்கு.. நான் அங்கேயே அவன அடிச்சிருப்பேன்.. பூரணி இழுத்துட்டு வந்துட்டா..”

“அம்மு.. விட்டா அப்பாவ ப்ரின்சி கிட்ட நிக்க வெச்சிடுவ போல.. உன் கோபத்தை கண்ட்ரோல் பண்ணு.. அவன் உன்னை தான் சொன்னான்னு நீயா நினைச்சுக்காதே.. மே பீ அவன் வேற யாரையாவது சொல்லிட்டு இருக்கப்ப உன்னை திரும்பி பார்த்திருக்கலாம்..”

“அவனுக்கு எதுக்கு சப்போர்ட் பண்ற?”

“ராமா.. ஆரம்பிக்காதே.. போ பிரெஷ் ஆகு..” என்று தங்கையை விரட்டியவள் இரவு உணவை தந்தையுடன் செய்துக் கொண்டிருந்தாள்.. சிறிது நேரத்தில் வந்த தமிழும் அவர்களுக்கு உதவி செய்ய பேச்சும் சிரிப்புமாக பொழுது போக  மாலையில் இருந்த கோபம் முற்றிலும் மறைந்திருந்தது தமிழுக்கு..

“ராதுமா எங்க இருக்காங்கப்பா? போன் பண்ணவே இல்ல..” தமிழ் தந்தையிடம் கேட்க

“காலைல பிளைட்ல சென்னை வந்துட்டா.. சென்னைல அவங்க நாத்தனார் இருக்காங்கள.. ரொம்ப நாள் ஆச்சு பார்த்துன்னு, அப்படியே பார்த்துட்டு நைட் பாண்டியன்ல வரா.. நாளைக்கு உனக்கு லீவ் தானே?”

“ம் ஆமாப்பா.. நீங்க ரெண்டு பேரும் இல்லாம போர் அடிக்கும்.” என்றாள் வருத்தமாக.

“அதான் உன் ராதுமா வராங்களே.. அப்புறம் என்ன?” என்று தளிர் கேட்க

“நான் அவங்களோட பேசவே மாட்டேன்.. பையனப் பார்க்கப் போனதும் என்னை மறந்துட்டாங்க.. என்கிட்ட பேசவே இல்லை.. நாளைக்கு முழுக்க அவங்களோட நான் பேச மாட்டேன்..”

“அத்தை வந்து உனக்கு பிடிச்ச சாப்பாட செஞ்சா போதும்.. ராதுமான்னு அவங்கள கட்டிப்ப..” உன்னைப் பற்றி எனக்கு தெரியாதா என்ற ரீதியில் தளிர் பேச

“இந்தத் தடவை அவங்க எனக்கு எவ்வளவு ஐஸ் வெச்சாலும் நான் பேசவே மாட்டேன்..”

“நாளைக்கு நாங்க பார்க்க தானே போறோம்..” என்று தொல்காப்பியரும் தளிரும் ஒரு சேரக் கூற

“பாருங்கப் பாருங்க..” என்றவள் உணவை முடித்துக் கொண்டு தூங்கச் சென்றாள்..

மறுநாள் தந்தையும் அக்காவும் பள்ளிக் கல்லூரிக்கு கிளம்பியவர்கள், இவளை எழுப்பி கதவைப் பூட்டிக் கொள்ளச் சொல்ல

“ராதுமா இன்னும் வரலையா?” என்றாள் தூக்கக் கலக்கத்திலும்.

“ட்ரைன் லேட்.. இப்போ தான் கொடை ரோடு வந்திருக்காங்க.. நம்ம வீட்டுக்கு வர ஒரு மணி நேரம் ஆகும்..” தளிர் பதில் கூறினாள்

“சரி..” என்றவள் கண்ணை மூடினாள்.

“அம்மு எழுந்திரு.. டோர் லாக் செஞ்சுக்கோ. ப்ரேக்பாஸ்ட் ஹாட் பாக்ஸ்ல இருக்கு.. மதியத்துக்கு சாதம் வெச்சுக்கோ.. அத்தை இன்னைக்கு தான் வராங்க.. அவங்கள வேலை செய்ய விடாதே.. ரெஸ்ட் எடுக்கட்டும்..”

“ஓகே” என்றவள் அவர்கள் சென்றப்பின் தூக்கம் கலைந்து விட காலைக் கடன்களை முடித்துவிட்டு காபிக் கோப்பையோடு பால்கனி ஊஞ்சலில் அமர்ந்து பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தாள்.. எவ்வளவு நேரம் சென்றதோ காலிங் பெல்லின் ஓசையில் அங்கிருந்து எழுந்த தமிழ்

“ராதுமாவா தான் இருக்கும்.. வந்துட்டாங்க போல..” என்று உற்சாகமாக கதவைத் திறக்க அங்கே அவளைப் போலவே உற்சாகமாக நின்றுக் கொண்டிருந்தார் ராதிகா.. அவர் உள்ளே வந்ததும் அவரை கட்டிக் கொண்ட தமிழ்

“ராதுமா.. எப்படி இருக்கீங்க?” என

“நான் நல்லா இருக்கேன்டா அம்மு.. நீ எப்படி இருக்க?” என்று கேட்க சட்டேன்று அவரிடம் இருந்து விலகியவள்

“உங்க பையனப் பார்க்கப் போனதும் என்னை மறந்துட்டீங்க தானே. இப்போ எதுக்கு கட்டிப் பிடிச்சு நல்லா இருக்கியான்னு கேக்குறீங்க.. போங்க போய் உங்க அருந்தவப் புதல்வனையே கொஞ்சுங்க..” என்று முறுக்கிக் கொண்டாள்.

“அடடா..” என்றவர் தமிழை செல்லமாக கையில் அடித்துவிட்டு உள்ளே சென்றார்..  

“ராதுமா நான் நிஜமா உங்க மேல கோபமா தான் இருக்கேன்..” அவர் பின்னோடு சென்று கூறினாள்.

“அப்படியா சரி அம்மு.. இருந்துக்கோ..”

“இந்த வீட்ல என்னை யாரும் மதிக்கவே மாற்றீங்க..” என்று கோபித்துக் கொண்டாள்.

இது எப்பொதும் நடக்கும் நிகழ்வு தான்.. ராதிகா தனது மகனைப் பார்க்க ஊருக்குச் சென்றுவிட்டு வரும் போது எல்லாம் தீந்தமிழ் இவ்வாறு தான் கோபமாக இருப்பதாக கூறி காமெடி செய்வாள்.. அதனால் அதை அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் குளிக்கச் சென்றார்.

அவர் சென்ற சிறுது நேரத்தில் அவரின் போன் அடிக்க அதில் தெரிந்த பெயரைப் பார்த்ததும் எடுக்காமல் இருந்தாள்.. மீண்டும் அழைப்பு வரவே குளியல் அறையில் இருந்து ராதிகா

“அம்மு போன் அடிக்குது பாரு.. எடுத்து பேசு..” என்று கூற அப்பொழுதும் அவள் அதை எடுக்கவில்லை.. மூன்றாவது முறை அடிக்க எரிச்சலாக அதை எடுத்தவள்

“ராதுமா குளிக்குறாங்க.. கொஞ்ச நேரம் கழிச்சி கூப்பிடுங்க..” எதிர்முனையில் இருப்பவரை ஹலோ கூட சொல்லவிடாது இவளே பேசிவிட்டு வைத்துவிட்டாள். குளித்துவிட்டு வந்த ராதிகா

“அம்மு யார்டா பேசுனது?” என்று கேட்க, அவரை முறைத்துவிட்டு போனாள்.

‘யார்னு கேட்டா முறைக்குறா?’ என்றவர் மொபைலில் அழைத்தவர் பெயரைப் பார்க்க ‘இதுங்க தொல்லை தாங்க முடியலை.’ என்று சிரித்தவாரே அங்கிருந்து சென்றார்.

மாலை தொல்காப்பியரும் தீந்தளிரும் வீட்டிற்கு வந்தபின் ஐவரும் அமர்ந்து டெல்லியில் இருந்து ராதிகா வாங்கி வந்திருந்தப் பொருட்களை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தனர்..

“இந்த குர்தி சூப்பரா இருக்கு.. தேங்க் யூ ராதுமா.. என் டேஸ்ட் உங்களுக்கு தான் கரெக்ட்டா தெரியுது.” தனக்கென்று ராதிகா வாங்கி வந்திருந்த உடையைப் பார்த்து தமிழ் சந்தோஷமாகக் கூறினாள்.

“ட்ரெஸ் செலெக்ஷன் செஞ்சது நான் இல்ல.. உனதருமை எதிரி தான்..” சிரித்துக் கொண்டே ராதிகா கூறினார்..

“என்ன?”

“ஆமா.. வெற்றி தான் இந்த கலர் தமிழ்க்கு நல்லா இருக்கும்ன்னு வாங்கிக் கொடுத்தான்..”

“எனக்கொன்னும் வேண்டாம்..” கையில் இருந்த உடையை ராதிகாவிடம் கொடுத்தவள் அங்கிருந்து எழப் பார்க்க

“தமிழ் இது என்னப் பழக்கம் உனக்காக ஒருத்தன் வாங்கிக் கொடுத்திருக்கான்.. அதை வேண்டாம்ன்னு சொல்லுற?” தளிர் தங்கையை அதட்ட  

“அவன் யாரு எனக்கு வாங்கிக் கொடுக்க?” கோபமாக கத்தியவளை  

“தமிழ்” என்ற தொல்காப்பியரின் அழைப்பு ஒரு நிமிடம் அமைதிப் படுத்தியது.. மறுநிமிடம்  

“நீங்க யார் என்ன சொன்னாலும் நான் இந்த ட்ரெஸ்ஸ போட்டுக்க மாட்டேன்.. அவனோட பேசவும் மாட்டேன்..” என்றவள் அங்கிருந்து சென்றாள்..

    

Advertisement