Advertisement

நடுவுல கொஞ்சம் காதலைக் காணோம்..

அத்தியாயம் 4 (அன்று)

அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வீடே நல்ல உறக்கத்தில் இருந்தது.. ஒன்பது மணிவாக்கில் தான் ஒவ்வொருவராக எழுந்தனர்.. காலை உணவு முடிந்த பின் தொல்காப்பியர் அருகில் இருந்த லைப்ரரிக்கு செல்வதாகக் கூறிச் சென்றார். தமிழ் அவள் பிரியத்திற்குரிய ராதுமாவுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்தாள்.. நேற்று தானே அவர் ஊரில் இருந்து வந்திருந்தார்.. அவர் ஊருக்கு சென்ற பதினைந்து நாளில் நடந்த நிகழ்வுகளை அவரோடு பேசிக் கொண்டிருந்தாள்.. அவரும் அவளிற்கு தலைக்கு எண்ணெய் வைத்துக் கொண்டே அவளுடன் பேசிக் கொண்டிருந்தார்..

“தலைல எண்ணெய் வைக்காம முடி எல்லாம் போச்சு.. ஏன் அம்மு இப்படி பண்ற?”

“ஆய்ல் வெச்சுட்டு காலேஜ் போனா மூஞ்சில எண்ணெய் வடியும் ராதுமா..”

“தளிர் வேலைக்கே அப்படி தான் போறா.. உனக்கென்ன?”

“அவ போவா.. அவளுக்கு அழக மெய்ன்டெயின் பண்ண தெரியலை ராதுமா..”

“ஆமா ஆமா.. சரி வீட்டுக்கு வந்ததும் வைக்க வேண்டியது தானே.. கட்டையா இருந்த முடி எலிவால் மாதிரி ஆகிடுச்சி.. இனி வாரத்துக்கு ரெண்டு தடவை தான் நீ தலைக்கு தண்ணி ஊத்தணும். டெய்லி தண்ணி ஊத்துன அடி விழும்” என்று கண்டித்தார்..

“நீங்க என்ன சொன்னாலும் அவ கேட்க மாட்டா அத்தை.. வீனா உங்களுக்கு தான் தொண்டத் தண்ணி வேஸ்ட் ஆகும்..” தீந்தளிர் சோபாவில் புத்தகம் படித்துக் கொண்டே அத்தையிடம் கூற

“நான் ராதுமா சொன்னா கேட்பேன்..” என்றாள் பெருமையாக

“கிழிப்ப.” என்று ராதிகாவும் தளிரும் ஒரு சேரக் கூறினர்..  

“ப்ச் தலைக்கு மசாஜ் செய்யும் போது பீஸ்புல்லா செய்யனும்.. இப்படி திட்டிக்கிட்டே செய்றதுக்கு மசாஜ் செய்யாமையே இருக்கலாம்..” என்றவள் திரும்பி இருவரையும் முறைத்தாள்.

“நீ ஆடாம ஒரு இடத்துல உட்கார் முதல்ல..” என்று அதட்டியவர் ஆயில் மசாஜ் செய்துவிட்டு தலையை ஜடை போட்டு விட்டார்..

“நாளைக்கு தண்ணி ஊத்திக்கோ.. சீயக்காய் போடு.. ஷாம்பூ போடாதே..”

“ம் ராதுமா..” என்றவள் அவர் மடியிலேயே படுத்தாள்

“எழுந்திரி அம்மு.. போய் குளி.. தூங்காதே..” என்று தளிர் அதட்ட

“உன் லெக்சரர் வேலைய சும்மா என்கிட்ட காட்டாதே..” என்றவள் ராதிகாவிடம்

“ராதுமா உங்க சமையல நான் ரொம்ப மிஸ் பண்ணேன்.. அப்பாக்கும் தளிருக்கும் உங்க அளவுக்கு செய்யத் தெரியலை.”

“இனிமே டெய்லி நான் செஞ்சு தரேன்டா. மதியத்துக்கு என்ன வேணும்ன்னு சொல்லு?”

“பெப்பர் சிக்கென்”

“சரிடா..” என்றார்..  

“இப்படி நல்லா செல்லம் கொடுங்க அத்தை.. அவ உருபடுவா..” என்று நொடித்தவாறே தீந்தளிர் அறைக்குச் சென்றாள்..

மதியம் தமிழ் கேட்ட உணவை சமைத்துக் கொடுத்தார் ராதிகா.. உண்டுவிட்டு சிறிது நேரம் அனைவரும் தூங்கினர்.. மாலை தொல்காப்பியரும் ராதிகாவும் பேசிக் கொண்டிருந்தனர்.

“நேத்து என்கூட வேலை பார்க்குற டீச்சர் ஒரு வரன் இருக்கு உங்க பொண்ணுக்கு பார்க்குறீங்களான்னு கேட்டார்.. நான் வீட்ல பேசிட்டு சொல்றேன்னு சொல்லிருக்கேன்..” என்றவர் சற்றுத் தயங்கி “பெரியவனுக்கு தளிர பார்க்கலாம்ன்னு நான் நினைச்சேன்.. உனக்கு விருப்பமா ராது?”

“எனக்கும் அதே ஆசை தான் ண்ணா.. வெற்றிக்கும் தமிழுக்கும் எப்பவும் முட்டிக்கும்.. அதுனால அதுங்களுக்கு கல்யாணம் செஞ்சி வைக்கிறது கொஞ்சம் கஷ்டம் தான்.. தளிருக்கும் பெரியவனுக்கும் ஒத்துப் போகும் நல்லா..”

“பெரியவன்கிட்டயும் தளிர்ட்டயும் ஒரு வார்த்தை கேட்டுட்டு முடிவு பண்ணுவோம்.”

“அதுவும் சரி தான் அண்ணா..” பெரியவர்கள் இருவரும் இப்படி முடிவெடுத்துவிட்டு மறுநாள் தங்கள் பிள்ளைகளிடம் இது பற்றி பேச வேண்டும் என்று நினைத்தனர்..

அன்று காலையில் முதல் வகுப்பை முடித்து அடுத்த வகுப்பு தனக்கு ப்ரீ என்பதால் தனது கேபினில் அமர்ந்து தனது phd படிப்பிற்கான வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள் தீந்தளிர்..

“தளிர் மேம்.. தேர்ட் ஹவர் உங்களுக்கு செகண்ட் இயர் ‘B sec”க்கு தானே. நான் இன்னும் சிலபஸ் முடிக்கலை.. உங்க பீரியட்ல கொஞ்சம் எடுத்துக்கட்டா” தளிருடன் பணிபுரியும் சக லக்சரர் கேட்க அவளால் மறுக்க முடியவில்லை.

“ம் ஓகே.. எடுத்துக்கோங்க..”

“எனக்கு அடுத்த ஹவர் பைனல் இயர்க்கு கிளாஸ் இருக்கு.. கொஞ்சம் அதை பார்த்துக்குரீங்களா?”

“சரி மேம்..”

“அசைன்மெண்ட் கொடுத்தேன்… அதை செய்யாதவங்கள செய்ய சொல்லுங்க.. நாளைக்கு செக் பண்ணுவேன்னு சொல்லிடுங்க..”

அவரிடம் சரி என்றவள் தனது வேலைகளை கவனிக்கச் சென்றாள்..

பைனல் இயர் கிளாசிற்கு வந்தவள் அவர்களிடம் அந்த மேம் கூறியதை சொல்லிவிட்டு மாணவர்களை மேற்ப்பார்வை பார்க்கும் வன்னம் கடைசி இருக்கையில் அமர்ந்து கொண்டாள்..

அவளின் புத்தகத்தில் ஒரு கண்ணும் மாணவர்களின் மேல் ஒரு கண்ணுமாக அமர்ந்திருந்தவள் ஒரு கட்டத்தில் தனது கையில் இருந்த புத்தகத்தில் மூழ்கிவிட, அப்பொழுது யாரு உள்ளே நுழைந்து எதுவோ பேசிக் கொண்டிருக்க அந்த சத்தத்தில் நிமிர்ந்தவள் அங்கே யாரோ ஒரு நெடியவன் முதல் பெஞ்சில் அமர்ந்திருந்த பெண்களிடம் என்னவோ கேட்டுக் கொண்டிருந்தான்..

ஒரு ஆசிரியர் இருக்கும் அறைக்கு அனுமதி இல்லாமல் நுழைந்தது மட்டும் இல்லாமல் பெண்களிடம் வேறு அவன் ஏதோ கேட்டுக் கொண்டிருக்க அதில் கடுப்பான தீந்தளிர்    

“excuse me sir.. என்ன வேணும் உங்களுக்கு?” என்றாள் குரலில் சற்று கோபத்துடன்.. அப்பொழுது தான் அங்கே ஆசிரியர் இருப்பதை கவனித்தவன்

“சாரி.. நீங்க இருக்கிறது எனக்குத் தெரியலை.. நான் ஸ்டாப்ஸ் யாரும் இல்லைன்னு நினைச்சுட்டேன்..” என்றான்.. பேசிக் கொண்டே இருவரும் மாணவர்களை விட்டு சற்றுத் தள்ளி வந்திருந்தனர்..

“அப்படியே நீங்க நினைச்சாலும், பாய்ஸ் கிட்ட எதாச்சும் கேட்க வேண்டியது தானே சார்.. பொண்ணுங்க கிட்ட எதுக்கு பேசுறீங்க?”

“மேடம்.. கிளாஸ்குள்ள என்ட்டர் ஆனதும் கேள்ஸ் தான் ப்ர்ஸ்ட் இருக்காங்க.. அதுனால தான் அவங்ககிட்ட பேசுனேன்..” இப்பொழுது அவனின் பேச்சிலும் சற்றுக் கோபம் இருந்தது.. ஏதோ பெண்களிடம் பேசுவதற்காக அலைபவனைப் போல் அவள் தன்னை நினைக்கிறாள் என்றதும், அவனிற்கும் கோபம் வந்தது..

அவனிற்கு பதிலளிக்கும் முன்பு, ஆசிரியர் ஒருவர் அங்கே வந்தார்.. வந்தவர்

“ஹே வருண்.. நீ எங்க இங்க?” என்று அவனின் கையைப் பிடித்துக் கொண்டார்..

“சார்..” என்றவனும் அவரின் கையைப் பிடித்துக் கொண்டவன்.

“hod வர சொல்லிருந்தாங்க சார்.. அதான் வந்தேன்..” என

“எப்படி இருக்க மேன்? எந்த காலேஜ்ல இப்போ வொர்க் பண்ற நீ?”

“பைன் சார்..” என்றவன் அவனின் கல்லூரியின் பெயரைக் கூறினான்..

இவர்கள் இருவரையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த தளிரிடம்

“நம்ம காலேஜோட ஓல்ட் ஸ்டூடென்ட்.. வருணன்.. ug இங்க தான் படிச்சான்.. கோல்ட் மெடலிஸ்ட்..” என்று அவனை அறிமுகம் செய்தார் அந்த ஆசிரியர்..

“ஓ..” என்றவள், வருணின் புறம் திரும்பி லேசாக சிரித்தாள்..

அறிமுகம் செய்யும் பொழுது மரியாதைக்காக சிரிப்பது போல் தான் சிரித்தாள்..

“hod யைப் பார்த்துட்டியா வருண்?” அவரும் வருணிடம் பேச, தளிருக்கு இப்பொழுது இங்கே நிற்பதா, போவதா என்று குழப்பமாக இருந்தது..

“யஸ் சார்.. பைனல் இயர் ஸ்டுடெண்ட்சை அசெம்பில் பண்ண சொல்லிருக்கேன்.. கொஞ்சம் வெயிட் பண்ணுன்னு சொன்னாங்க.. அதான் அப்படியே நம்ம டிபார்ட்மெண்ட்ட சுத்திப் பார்ப்போம்ன்னு வந்தேன்..” என்றவன் நிறுத்தி, தளிரைப் பார்த்துவிட்டு

“இந்த கிளாஸ க்ராஸ் பண்ணும் போது, ஸ்டாப் இல்லாத மாதிரி இருந்தது.. சரி இங்க தான் எல்லாரையும் அசெம்பிள் செஞ்சிருக்காங்க போலன்னு நினைச்சு உள்ள வந்துட்டேன்.. மேம் பின்னாடி நின்னுட்டு இருந்திருக்காங்க, நான் அதை கவனிக்கலை..” என்றான்..

“ஓல்ட் ஸ்டூடென்ட்சை வர சொல்லிருக்கேன் பைனல் இயர் பசங்களோட பேசன்னு hod சொன்னார்.. நீ வருவன்னு எக்ஸ்பெக்ட் பண்ணலை.. பைனல் இயர் ஒரு செக்சன் மட்டும், லேப்ல இருக்காங்க.. தேர்ட்டி மினிட்ஸ் ஆகும் அவங்க வர.. அதான் இன்னும் அசெம்பிள் பண்ணாம இருக்காங்க..” என்றார் அந்த ஆசிரியர்..

“ஓ.. ஓகே சார்.. நான் அப்போ, அப்படியே சுத்திகிட்டு இருக்கேன்..” என்றவன், தளிரின் புறம் திரும்பி ஒரு தலை அசைப்பைக் கொடுத்துவிட்டு, அந்த ஆசிரியருடன் சென்றான்..

                           *****************

வீட்டிற்கு வந்தும் அவனின் முகம் தளிரின் மனக்கண்னில் வந்துக் கொண்டே இருந்தது.. அதுவும் அவன் போகும் முன்பு தலை அசைத்துச் சென்றதில் அவனின் கண்கள் உரிமையாக அவளிடம் எதுவோ சொல்லியது.. அதைப் பற்றியே அவள் நினைத்துக் கொண்டிருந்தாள்.

“தளிர்.. தூக்கமா வருது.. நாளைக்கு இன்டெர்னல் வேற..” தமிழ் அவளிடம் புலம்பியதை அவள் காதில் வாங்கவே இல்லை.. தான் இங்கே கத்திக் கொண்டிருக்க, இவள் என்ன கனவுக் கண்டுக் கொண்டிருக்கிறாள் என்றக் கடுப்பில் தளிரின் கையைக் கிள்ளிவிட்டாள் தமிழ்..

“ஸ்” என்று அலறியவள், தங்கையைத் திரும்பி முறைத்தாள்..

“எருமை எதுக்கு கிள்ளின.. வலிக்குது..” கையைத் தேய்த்து விட்டுக் கொண்டே அவள் கூற,

“நானும் உன்னோட பேசிகிட்டே இருக்கேன்.. பதில் சொல்லாம கனவு கண்டுகிட்டு இருக்க.. அதான் கிள்ளுனேன்..”

“அதுக்காக இப்படியா? வலிக்குது..”

“வலிக்கட்டும் வலிக்கட்டும்.. அத்தானுக்கும் உனக்கும் பேசுவோமான்னு, அப்பா கேட்டதுல இருந்து நீ கனவு கண்டுக்கிட்டு தான் இருக்க.” என்றதும், தளிர் அதிர்ந்தாள்..

“என்ன பேசப் போறாங்க?” என்றாள் ஒன்றும் அறியாதவளாக..

இப்பொழுது அதிர்வது தமிழின் முறை ஆகிற்று..

“சாப்பிடும் போது தானே தளிர், அப்பா கேட்டாங்க.. ராதுமாக்கும் அப்பாக்கும் நீயும் அத்தானும் கல்யாணம் செய்யனும்னு ஆசை.. உன் முடிவென்னன்னு.. அப்போ அமைதியா இருந்தியே..” என்றாள்

“என்ன சொல்ற? அப்பா சாப்பிடும் போது என்னோட பேசுனாங்களா?” என்று மேலும் அதிர்ச்சியுற,

“அக்கா.. உனக்கென்னாச்சு.. அப்பாவும் பேசுனாங்க.. ராதுமாவும் பேசுனாங்க. நீ அமைதியா இருந்த.. அதை அவங்க சம்மதம்ன்னு எடுத்துகிட்டாங்க.. இப்போ நீ இப்படி கேட்குற?”

“நிஜமா அவங்க பேசுனதை நான் கவனிக்கவே இல்ல அம்மு.. காலேஜ்ல நடந்த ஒரு இன்சிடென்ட நினைச்சிட்டு இருந்தேன்.. இப்போ நீ சொல்லி தான் என்னோட அப்பாவும் அத்தையும் பேசிருக்காங்கன்னு எனக்குத் தெரியுது..” என்றதும், சிறிது நேரம் இருவரும் அமைதியாக இருந்தனர்..

“சரி இப்போ சொல்லு.. உனக்கு இந்த மேரேஜ்ல சம்மதமா?” தமிழ் கேட்க, தளிருக்கு வார்த்தையே வரவில்லை.

“இப்படி அமைதியாவே இருந்தா என்ன அர்த்தம் தளிர்? நீ அப்பவும் இப்படி இருந்ததுனால தான் சம்மதம்ன்னு நாங்க நினைச்சோம்.. பிடிச்சிருக்கா பிடிக்கலையா? வாயைத் திறந்து சொல்லு?”

“நான் அவங்கள அப்படி நினைச்சுப் பார்த்ததே இல்லை.. மோர்ஓவர் நான் மேரேஜ் பத்தியும் நினைச்சுப் பார்க்கலை..” என்றாள் மெதுவாக..

“ப்ச்.. என்ன பேசுற?” என்றாள் புரியாமல்

“இப்போதைக்கு மேரேஜ் பத்தி பேசாதிங்க..”

“பின்ன எப்போ பேசுவாங்க? அல்ரெடி உனக்கு இருபத்திநாலு வயசாகிடுச்சு..” தமிழ் முறைத்துக் கொண்டே கூற, தளிருக்கு லேசாக உதட்டில் சிரிப்பு வந்தது..

“இப்போ எதுக்கு சிரிக்கிற?” முறைத்துக் கொண்டே கேட்டாள் தமிழ்..

“இந்த படத்துல, கதைல எல்லாம் அம்மா கேரெக்டர் இப்படி தானே பேசுவாங்க.. அந்த மாதிரி இருக்கு நீ பேசுறது.. அதான் சிரிச்சேன்..”

“நம்ம அம்மா இருந்திருந்தா இந்நேரம் உனக்கு கல்யாணம் ஆகி ஒரு பிள்ளை இருந்திருக்கும்..”

“ம் அப்புறம்?” தளிர் சிரிக்க

“சிரிக்காத அக்கா. அத்தானை நீ கல்யாணம் செஞ்சுகிட்டா, லைப் லாங் நம்ம ஒன்னாவே இருக்கலாம்.. நான் ரொம்ப ஆசையா இருந்தேன்.. சரி உனக்கு அதுல இஷ்டம் இல்லைன்னா, வேற மாப்பிள்ளை அப்பாவைப் பார்க்கச் சொல்லுவோம்..”

“அம்மு.. நான் முதல்ல phd முடிக்கணும்.. அதுக்கு அப்பறம் இதைப் பத்தி பேசுவோம்..”

“நீ phd முடிக்க இன்னும் அஞ்சு வருஷம் ஆகும்.. அதுவரைக்கும் நான் வெயிட் எல்லாம் பண்ண முடியாது. இப்பவே எனக்கு இருபது வயசாகிடுச்சு..”

“அடிப்பாவி.. உனக்கு அதுக்குள்ள கல்யாண ஆசை வந்துடுச்சா?”

“ஆமா..” என்றவள் “எனக்கு கல்யாண வயசு தான் வந்துருச்சுடி..” என்று பாடினாள்.

“பேசாம அப்பாகிட்ட சொல்லி உனக்கும் அத்தானுக்கும் மேரேஜ் செஞ்சிட சொல்லுவோமா?” என்றதும் தமிழ் வேகமாக

“எனக்கு ஓகே பா..” என்றாள்

“இரு அப்பாட்ட சொல்லுறேன்..” என்றவள் “அப்பா” என்று வாயைத் திறக்கும்முன் அக்காவின் வாயை மூடினாள் தீந்தமிழ்..

“அக்கா.. முதல்ல நீ அப்பா பேசும் போது உன் கவனத்தை எங்க வெச்சிட்டு இருந்தன்னு சொல்லு..”

“அதான் சொன்னேன்ல அம்மு.. காலேஜ்ல நடந்த ஒரு இன்சிடென்ட்ட நினைச்சிட்டு இருந்தேன்னு..” என்றாள் மெதுவாக..

“அது தான் என்னன்னு கேக்குறேன்..” என்றதும் அனைத்தையும் கூறினாள் தளிர்..

“இதுல என்ன இருக்கு.. இதையே ஏன் நீ நினைச்சிட்டு இருந்த?” புரியாமல் கேட்டாள் தமிழ்..

“அது எனக்கும் தெரியலை.. என்னமோ அவர் பார்த்த பார்வை ஏதோ சொல்லுச்சு.. என்னன்னு தான் புரியலை.. அண்ட் நான் அவரைத் தப்பா வேற நினைச்சி கோபமா பேசிட்டேன். அதுவும் ஒரு மாதிரி உருத்திடுச்சு.. லெக்சரரை ஏதோ ரோட் சைட் ரோமியோ மாதிரி ட்ரீட் பண்ணிட்டேன்..” என்றாள் வருத்தத்துடன்..

“எனக்கு நீ பண்ணது தப்புன்னு தோணவே இல்லை.. உள்ளே நுழைஞ்சதும் பொண்ணுங்களோட பேசிருக்கார்.. உனக்கு அது தப்பா பட்டுருக்கு அவர்கிட்ட அதைக் கேட்டிருக்க.. நீ கோபமா கூட அவரைத் திட்டலையே.. நீ ஏன் இதுக்கு பீல் பண்றன்னு எனக்குப் புரியலை..”

தமிழிற்கு இது பெரிய விஷயமாக தெரியவில்லை.. பள்ளியிலும் சரி, கல்லூரியிலும் சரி மாதத்திற்கு ஒருவருடன் சண்டைப் போடுபவளுக்கு தளிரின் கோபம், கோபமாகவே தெரியவில்லை..

மாணவர்களிடம் கூட கோபம் காட்டாத தளிருக்கு, முதல் பார்வையிலேயே அவனிடம் கோபத்தைக் காட்டிவிட்டது வருத்தமாக இருந்தது..

‘சாரி கூட சொல்லாம விட்டுட்டோமே..’ என்று அவள் நினைத்துக் கொண்டிருந்தாள்.. இதை விட அதிகமாக பின்னாளில் அவனிடம் தான் வாங்கிக் கட்டிக் கொள்ளப் போவதை அறியாமல்.

Advertisement