Advertisement

நடுவுல கொஞ்சம் காதலைக் காணோம்..

அத்தியாயம் 3

இன்று…

தீயே தீயே ராத்தீயே

இனிதீயே தீண்ட தீண்ட தீர்ன்தீயே

தீயே தீயே ராத்தீயே

இருதீயே தீர தீர சேர்ந்தாயே

அடி ராங்கனி ராங்கனி ராங்கனி

என்னை ரூம்மில் ஓரபோடு

இனி காமினி காமினி காமினி

என்று வழக்கம் போல் பாட்டைப் போட்டு தமிழை வெறுப்பேற்றிக் கொண்டிருந்தான் வெற்றி. தீயே தீயே என்று அவளைப் பார்த்துக் கொண்டே வேறு அவன் பாட அவள் அவனை முடிந்த மட்டும் தன் கண்கள் என்னும் தீயால் பொசுக்கிக் கொண்டிருந்தாள்..

அதற்கும் அவன் அசராமல் அடுத்த பாட்டைப் போட அடுப்படியில் இருந்த இஞ்சி பூண்டு இடிக்கும் சிறு கல்லை எடுத்துக் கொண்டு அவனை அடிக்கவே வந்துவிட்டாள்.

“ஹே கொலைகாரி என்னடி பண்ற?” அவன் அலறி விலகினான்.

“எதுக்குடா பாட்டை போட்டு என்னை வம்பிழுக்குற?” கோபத்துடன் அவள் கேட்க

“நான் சும்மா போட்டேன். உன்னை எங்க நான் வம்பிழுத்தேன்…” கூலாக பதில் கூறினான்.

“அப்புறம் எதுக்குடா என்னை பார்த்துட்டே தீயே தீயேன்னு பாடுன?”

“நான் எங்க உன்னை பார்த்தேன்… எதார்த்தமா பாடிக்கிட்டே திரும்பும் போது நீ என் கண்ணுல பட்டுருப்ப. அதுக்காக உன்னை பார்த்து பாடுனது ஆகிடுமா?” அவன் விடாது பதில் கூறினான்..

“உனக்கு வேற பாட்டே கிடைக்கலையா? எப்பப்பாரு தமிழ்னு வர மாதிரி பாட்ட போடுறது. இப்போ தீயேன்னு போடுற.. இதெல்லாம் என்னை வெருப்பேத்த தான் நீ செய்யுறேன்னு எனக்கு தெரியாதுன்னு நினைக்குரியா?”

“என்ன நீ என்னவோ புதுசா சொல்லுற?” என்று ஒரு நிமிடம் யோசிப்பதை போல் நடித்தவன் பின் “ஓ…. உன் பேர் தீந்தமிழ் இல்ல.. அதை நான் மறந்துட்டேன் பாரு.. நான் சும்மா எதார்த்தமா போடுறேன். அது உனக்கு ஏத்த மாதிரி அமைஞ்சிருக்கு. அதுக்கு நான் என்ன பண்ண முடியும்.” என்றான் அசால்ட்டாக

“போடா வெட்டிப்பயலே” என்று திட்டிவிட்டு அறைக்குச் சென்று படித்துக் கொண்டிருந்தாள்

‘வெட்டியா? அடியே புருஷனுக்கு கொஞ்சம் கூட மரியாதை  கொடுக்க மாற்ற. வெற்றி உனக்கு இதெல்லாம் தேவையாடா.’ என்று சலித்துக் கொண்டே அடுத்த பாட்டைப் போட்டான்..

தீப் பிடிக்க தீப் பிடிக்க

முத்தம் கொடுடி என்

திமிர் எல்லாம் அடங்காது

கொஞ்சம் கடிடி..

என்று போடக் கடுப்பானவள் வெளியே வந்து அவனை அருகில் இருந்த தலையணையை வைத்து அடித்தாள்..

“லூசு அடிக்காதடி.. பைத்தியமே விடுடி.. எருமை” என்று அவன் அவளை வித விதமாக திட்ட அவளின் அடிகள் கூடிக் கொண்டே போனது.

“உன் முகரகட்டைக்கு முத்தம் ஒரு கேடா? நானும் போனா போகுதுன்னு ஒவ்வொரு தடவையும் விடுறேன். நீ ரொம்ப ஓவரா போற.”

“உனக்கென்னடி நான் பாடுவேன் ஆடுவேன் ஏன் ஒரு பொண்ண கூடிட்டு வந்து கிஸ் கூட கொடுப்பேன்”

“அடுத்தவங்கள டிஸ்டர்ப் பண்ணாம நீ என்ன வேணும்னாலும் செய்..” என்றாள் கடுப்புடன்.

“நீ அடுத்தவங்க இல்லை.. என் பொண்டாட்டி.” என்றான் மந்தகாச சிரிப்புடன்

“இன்னொரு தடவ பொண்டாட்டி கிண்டாட்டின்னு சொன்ன கெட்ட கோபம் வரும் எனக்கு.”

“கோபத்துல, கெட்ட போபம் நல்ல கோபம்னு ரெண்டு இருக்கா?”  

“டேய்…” என்றவள் தலையனை பிய்யும் வரை அவனை அடித்துக் கொண்டே இருந்தாள்.. அதில் இருந்து வந்த பஞ்சு அவள் முகத்தில் பட்டு தும்மல் வர அவனை அடிப்பதை நிறுத்தியவள் விடாது தும்மிக் கொண்டே இருந்தாள்…

“ஹாஹா இதான் நல்லவங்களை அடிக்கக் கூடாதுன்னு சொல்லுறது.. கடவுள் இருக்கான் குமாரு.. உடனே உனக்கு தண்டனை கொடுத்துட்டார் பார்த்தியா?”

“ஹட்ச்.. டேய்.. ஹட்ச்.. கொன்னுடுவேன்..” என்று வார்த்தைக்கு வார்த்தை தும்மிக் கொண்டே கூற அவன் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தான்..

“உன் தும்மல நான் இப்போ நிறுத்துறேன் பார்..” என்றவன் அவள் அருகில் வந்து அவள் முகத்தை ஏந்தினான். தமிழ் அவனை பயத்துடன் பார்க்க

“ஒரே ஒரு உம்மா கொடுத்தா உன் தும்மல் எனக்குள்ள போய்டும்.. உனக்கும் சரி ஆகிடும்.. மே ஐ…” என்றவன் அவள் உதட்டருகில் நெருங்க.. அவன் பார்வையில் சிறிது மயங்கி இருந்தவள் காலிங் பெல் ஒலியில் சுயவுணர்வு வந்து அவனை தள்ளிவிட்டாள்…

“ஹே..” என்று அவள் கையைப் பிடிக்க வந்தவனை முறைத்துவிட்டு வேகமாக சென்று கதவை திறந்தாள்.

“எவ்வளவு நேரம் தமிழ் பெல் அடிக்கிறது? என்ன செஞ்சிட்டு இருந்த?” என்ற கேள்வியோடு உள்ளே நுழைந்தாள் தீந்தளிர்.

“அது.. வந்து.. நான்..” தமிழ் திணற.. அதற்குள் தன்னை நிலைப்படுத்தி இருந்த வெற்றி தளிரை ‘வா’ என்று அழைத்துவிட்டு மனைவி கூற வேண்டிய பதிலை அவனே கூறினான்.

“இல்ல தளிர்.. தமிழ் படிச்சிட்டு இருந்தா. நான் ரெஸ்ட் ரூம்ல இருந்தேன்.. அதான் லேட் ஆகிடுச்சு.”

அவனை வெட்டும் பார்வை ஒன்று பார்த்தவள் தளிரின் கைகளில் இருந்த ஆருத்யாவை

“ஆரு குட்டிச் சித்திகிட்ட வாங்க. இந்த ட்ரெஸ்ல குட்டி அழகா இருக்கீங்களே.” என்று தூக்கிக் கொண்டாள்

“வருண் அண்ணா எப்படி இருக்காங்க, அவங்கள கூடிட்டே வர மாட்டுற?” என்று வெற்றி குறைப்பட தமிழ் அவனை வெட்டவா குத்தவா என்பது போல் பார்த்துக் கொண்டிருந்தாள்..

வெற்றி அவ்வாறு கேட்டதும் தங்கள் வீட்டில் காலையில் நடந்த நிகழ்வு தளிரின் நினைவிற்கு வந்தது.

“குட்டிமா ஏன்டா அழறீங்க.. குளிச்சாச்சு.. அவ்வளவு தான்.. அழாதிங்க..” ஆருத்யாவை  குளிக்க வைத்துவிட்டு துவட்டிக் கொண்டிருந்தவாரே சமாதானப்படுத்திக் கொண்டிருந்தாள் தீந்தளிர்.

குழந்தையின் அழுகையில் பக்கத்து அறையில் இருந்து வெளியே வந்த வருண் மனைவியை முடிந்த மட்டும் முறைத்தவன், அவளிடம் இருந்து மகளை வேகமாக வாங்கினான்.. பிடிங்கினான் என்று சொல்வது தான் சரியாக இருக்கும்.

“வருண் பார்த்து..” அவன் வாங்கிய வேகத்தில் குழந்தையின் அழுகை மேலும் கூடியது.

“அறிவிருக்கா உனக்கு. காலைலேயே இப்படி குழந்தை தலைக்கு தண்ணிய ஊத்திவிட்டுருக்க. மதியம் போல குளிக்க வெச்சா என்ன? எப்படி அழறா பாரு.” என்று வருண் கத்த

‘மதியம் தண்ணி ஊத்துனா மட்டும் அழ மாட்டாளா?’ என்று மனதில் நினைத்த தளிர் கணவனிடம்

“எல்லா குழந்தையுமே தலைக்கு ஊத்தும் போது அழ தான் செய்யும்.” என்று கூறினாள்.

“ஓ அப்படி எத்தனப் பேர நீங்க வளர்த்திருகீங்க?” அவன் இடக்காக கேள்வி கேட்க

“வருண் ப்ளீஸ் ஆரு அழறா.. நம்ம சண்டைய அப்புறம் வெச்சுப்போம். சாம்பிராணி போடணும். ஜலதோஷம் பிடிச்சுட போகுது.” எனவும் ஆருவை தளிரிடம் கொடுத்துவிட்டு அருகில் நின்றுக் கொண்டு அவள் செய்வதை பார்த்துக் கொண்டிருந்தான். நடு நடுவே தளிரை திட்டவும் அவன் மறக்கவில்லை.

ஒருவழியாக சாம்பிராணி போட்டு வேறு உடை மாற்றி கணவனிடம் குழந்தையை கொடுத்தவள் அவனை தயக்கமாக ஏரிட்டாள். அவள் பார்வை உணர்ந்தவன் ‘என்ன’ என்பது போல் அவளை நிமிர்ந்து பார்க்க

“அப்பா உங்களையும் ஆருவையும் பார்க்கணும்னு சொன்னாங்க. இன்னைக்கு உங்களுக்கு காலேஜ் லீவ் தானே போவோமா?” என்றாள் மெதுவாக

“ஓ இதுக்கு தான் நீ வேக வேகமா எல்லாம் செஞ்சிட்டு இருந்தியா?” என கத்தியவன்

“நான் வரல” என்றான்

“என் மேல இருக்கக் கோபத்த அப்பா மேல ஏன் காட்டுறீங்க?”

“உன் மேல இருக்க கோபத்த மாமா கிட்டக் காட்டிட கூடாதுன்னு தான் நான் வராம இருக்கேன்.” என்றவன் ஆருத்யாவுடன் கீழே சென்றான்.

அந்த நேரத்திலும் தன் தந்தையை ‘உன் அப்பா’ என்று அழைக்காமல் ‘மாமா’ என்று அவன் அழைத்தது சற்று ஆறுதலாக இருந்தது.

ஒரு காலத்தில் தான் கேட்டவுடன் எல்லாம் செய்த கணவனா இவன் என்று தீந்தளிர் ஆச்சர்யப்படும் அளவுக்கு நடந்து கொண்டிருந்தான் வருண். தந்தை வேறு மருமகனை பார்க்கவே முடிவதில்லை என்று வருத்தப்படுகிறார். அவர் வரும்பொழுதும் வருணும் வீட்டில் இருப்பதில்லை..

இவனும் அங்கே செல்வதில்லை.. குழந்தையை மட்டுமாவது தன்னுடன் அனுப்ப மாட்டானா என்று வருந்தியவள் கீழே சென்று மீண்டும் அவனிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள்.

“வருண் ப்ளீஸ் அப்பா பாப்பாவ பார்த்து ரொம்ப நாள் ஆச்சு.. சீக்கிரம் நான் போயிட்டு வந்துடுறேன்..” எனக் கேட்டாள்.. அவன் பதில் சொல்லவே இல்லை. மருமகள் மகனிடம் கெஞ்சுவதை பார்த்துக் கொண்டிருந்த வருணின் தந்தை  

“வருண் என்ன தளிர் பேசிக்கிட்டே இருக்கா? பதிலே சொல்லாம இருக்க? ஆரு அந்த வீட்டு பேத்தியும் கூட தான். அவங்க பார்க்கணும்னு நினைக்குறதுல தப்பு என்ன இருக்கு?”

“எங்க இருந்தாலும் உங்க மருமகளுக்கு சப்போர்ட் பண்ண கரெக்டா வந்துடுங்க.” தந்தையிடம் கத்தியவன் ஆருவை தளிரிடம் கொடுத்துவிட்டு

“குழந்தை பத்திரம்” என்றான்.

‘என் பொண்ண எனக்குப் பாத்துக்கத் தெரியாதா?’ என்று வாய் வரை வந்த வார்த்தையை முயன்று அடக்கியவள் ‘ம்’ என்று மட்டும் கூறினாள்.

தீந்தமிழின் உலுக்கலில் தன்னிலை அடைந்தவள் வெற்றியிடம்

“அவருக்கு கொஞ்சம் வேலை இருக்கு.” என்று கூறிவிட்டு தங்கையுடன் பேசிக் கொண்டிருந்தாள். வெற்றி அவர்களுக்கு தனிமைக் கொடுக்க எண்ணி வெளியே சென்றுவிட சகோதரிகள் இருவரின் பேச்சு நீண்டு கொண்டே இருந்தது.

“வெற்றியப் பார்த்தா உனக்கு பாவமா இல்லையா தமிழ்? ஏன் இப்படி அவன கஷ்டப்படுத்துற?” தளிர் கேட்க

“அவன் பாவமா? அப்போ நான்? அவனால தான் யூ.ஜில எனக்கு கோல்ட் மெடல் மிஸ் ஆச்சு. அப்பா, ராதுமா ரெண்டு பேரும் என்னோட பேசாம இருக்காங்க. நீயும் மாமாவும் இப்போ சண்டை போட்டுட்டு இருக்கீங்க. இப்படி நம்ம வீட்ல நடக்குற பிரச்சனை எல்லாத்துக்கும் அவன் தான் காரணம். அவனுக்கு நீ பாவம் பாக்குற?” தமிழ் கோபமாக கூறினாள்

“பைத்தியம் மாதிரி பேசாதே. நானும் வருணும் சண்ட போட்டதுக்கு வெற்றி எப்படி காரணம் ஆவான். எங்களுக்குள்ள நடந்த சண்டைய உன்கிட்ட நான் சொல்லிட்டேன். அப்படி இருந்தும் எல்லாத்துக்கும் வெற்றி தான் காரணம்னு நீ சொல்றது பைத்தியக்காரத்தனமா இருக்கு.”

“ஆமா நான் பைத்தியம் தான். இதோ இப்போ உன்னை கூட எனக்கு எதிரா திருப்பிட்டான் பாரேன். சரியான சாடிஸ்ட் அவன்.”

“தமிழ்.” என்று தளிர் ஏதோ கூறவற

“ப்ளீஸ் தளிர் அவனப் பத்தி பேசாதே. என் செல்லத்தோட டைம் ஸ்பென்ட் செஞ்சே ரொம்ப நாள் ஆச்சு. நீ போய் சமையல கவனி. நானும் என் பொண்ணும் விளையாடப் போறோம்.” என்றவள் ஆருத்யாவுடன் ஐக்கியமானாள்..

அக்காவும் தங்கையும் வளவளத்துக் கொண்டே சமையலை முடித்திருந்தனர். இவர்கள் சமையலை முடிக்கும் தருவாயில் வெற்றி வந்துவிட மூவரும் ஒன்றாக அமர்ந்து உண்டுக் கொண்டிருந்தனர்.

“தளிர் சமையல் சூப்பர். டெய்லி வந்து எனக்கு செஞ்சு கொடுத்துட்டு போயேன்.” வெற்றி உணவை வாயில் வைத்துக் கொண்டே கூற, தளிர் பதில் சொல்லும் முன் தமிழ்,  

“என் அக்காவ பார்த்தா உனக்கு சமையல்காரி மாதிரி இருக்கா? வாய்கிழிய பேச தெரியுது சாப்பாடு செஞ்சு சாப்பிடத் தெரியாதோ?” என்றாள்

“தமிழ் என்ன இது. அமைதியா இரு. அவன் என்னோட தானே பேசிட்டு இருக்கான்.” தளிர் தங்கையை கடிந்தாள்.

“என்னமோ பண்ணு” என்று அவள் அமைதியாகி விட வெற்றியை தளிர் பாவமாகப் பார்க்க அவனோ அதை  கண்டுக் கொள்ளாமல் உண்பதிலே கவனமாக இருந்தான்.

“டேய் சுரணை கெட்டவனே அவ இவ்வளவு திட்டுறா நீ சாப்பாடும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம்னு எழுந்து போயிருப்பேன்னு பார்த்தா வெட்கமே இல்லாம சாப்டுட்டு இருக்க” வெற்றியிடம் மெதுவாக தளிர் கேட்க

“எனக்கே ஆடிக்கு ஒரு நாள் அமாவாசைக்கு ஒரு நாள் தான் நல்ல சாப்பாடு கிடைக்குது. ரோஷப்பட்டு இதை இழக்க நான் தயார இல்லை.”

வெற்றி சாதாரணமாக கூற அதைக் கேட்ட தளிருக்கு தான் மிகவும் கஷ்டமாக இருந்தது. தங்கையின் மேல் கோபமும் வந்தது. அவன் உண்ணும் வேகமே பல நாட்களாக சரியாக அவன் உண்பதில்லை என்பதை தளிருக்கு உணர்த்தியது. வெற்றி உண்டு முடித்து ஆருவோடு இருக்க தளிர் மறுபடியும் தங்கையிடம் பேச ஆரம்பித்தாள்

“ப்ராஜெக்ட் வேலைலாம் எப்படி போகுது தமிழ்?”

“ம் நல்லா போகுது.”

“தமிழ் நான் சொல்லுறத கேளு. நீ வெற்றியோட பேசக் கூட வேண்டாம். ஆனா இப்படி அவன பட்டினிப் போடாதே. ‘தனி ஒருவனுக்கு உணவில்லை என்றால் ஜகத்தினை அழித்திடுவோம்னு’ பாரதியார் சொல்லிருக்கார்.. ஆனா நீ என்ன செய்ற? அத்தையும் அவன அங்க வரக் கூடாதுன்னு சொல்லிட்டாங்க. அப்போ அவன் என்ன தான் செய்வான். உன் கோபத்த எதுல வேணும்னாலும் காட்டு சாப்பாட்டு விஷயத்துல காட்டாதே.” என்றவள் பாத்திரங்களை எடுத்து வைத்தாள்.

சிறிது நேரத்தில் தீந்தளிர் தந்தையைப் பார்க்கப் போவதாக கூறிவிட்டு சென்றுவிட்டாள்… தளிர்க் கூறியதையே நினைத்துக் கொண்டிருந்த தமிழுக்கும் அவள் கூறியதின் நியாயம் புரிந்தது.

‘பாவம் வெற்றி. சின்ன வயசுல இருந்தே அவன் பசி தாங்க மாட்டான். நான் அவன ரொம்பப் படுத்துறேன். இனி இப்படி இருக்கக் கூடாது.’ என்று முடிவெடுத்தாள்.. இரவு வரைக் கூட அந்த முடிவு நிலைக்கப் போவதில்லை என்பதை அவள் அறியவில்லை.

                              ********************

“வருண் என்ன ஆளே ஒரு மாதிரி இருக்க?” ஜெனி கேட்க  

“எனக்கென்ன நான் நல்லா தான் இருக்கேன். வீடியோ கால்ல பேசுறோம் அதான் உனக்கு அப்படி தெரியுது.” என்றான் வருண்

“ப்ச் பொய் சொல்லாதே. ஒழுங்கா சொல்லு”

“என்னைக் கேள்விக் கேக்குறத நிறுத்து. நீங்க எல்லாரும் எப்படி இருக்கீங்க?”

“ம் நல்லா இருக்கோம்”

“அவன் எங்க?”

“பேசமாட்டானம் உன்னோட.”

“என்னவாம் அவனுக்கு?”

“நீ அவன் மாமா பொண்ணக் கஷ்டப்படுத்துரியாம்”

“ஆமா ஆமா படுத்துறாங்க. அந்த நாய்க்கு என்னை விட அவ முக்கியமாகிட்டாளா?” வருண் கோபமாக கேட்க,

“டேய் என்ன என் முன்னாடியே என் புருஷன நாய்னு சொல்லுற. கொன்னுடுவேன்.”

“எனக்கு முதல்ல ப்ரெண்ட், அப்புறம் தான் உனக்கு புருஷன். அதை நியாபகம் வெச்சுக்கோங்க மேடம். அவன கூப்பிடு.”

“நான் அப்பவே கூப்டுட்டேன். நீ பேசுன்னு சொல்லிட்டார்.”

“ஓ.. இனி எப்பவும் அவன் என்னோட பேச வேண்டாம்ன்னு சொல்லிடு.. பாய்”

“ஹே ஹே வருண்” என்று மறுமுனையில் கத்திக் கொண்டிருப்பதை கேட்காமல் அழைப்பை துண்டித்தான் வருண்.

“என்ன வெச்சிட்டானா?” கதிர் அவளிடம் கேட்க

“ஏன் நீ அவனோட பேசுனா தான் என்ன?”

“நமக்கு நெருக்கமானவங்களோட நிராகரிப்பு எவ்வளவு வலிக்கும்னு அவனுக்கும் தெரியட்டும். தளிருக்கும் இப்படி தானே வலிச்சிருக்கும்னு அவனுக்கு புரியும்.”

“தளிரோட அவன் சீக்கிரம் பேசிடுவான். நீ பீல் பண்ணாதே.”

“ம்” என்றவன் அமைதியாக இருக்க கணவனின் அமைதி அவளுக்கும் வருத்தத்தை கொடுத்தது.. வழமை போல் கணவன் குடும்பத்துடன் சேர வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொண்டாள்.

 

                   

Advertisement