Advertisement

நடுவுல கொஞ்சம் காதலைக் காணோம்..

அத்தியாயம் 1

நீ முத்தம் ஒன்று கொடுத்தால் முத்தமிழ்

நீ வெட்கப்பட்டு சிரித்தாள் செந்தமிழ்

நீ பேசிய வார்த்தைகள் பைந்தமிழ்

ஊ வாஹு ஊ வாஹு ஊ வாஹு வாஹு

என்ற பாட்டைப் போட்டு விட்டு அதனுடன் சேர்ந்து பாடிக் கொண்டிருந்தான் வீர வெற்றிவேல்… அவன் பாடல் என்கிற பெயரில் கத்திய கத்தலில் தனது அறையில் தூங்கிக் கொண்டிருந்த தீந்தமிழ் கடுப்புடன் எழுந்து வெளியே வர அவளைப் பார்த்த வெற்றி,

செங்காந்தல் இதழ் என்பதில் நான்

கண்டேன் நீ என் தமிழ்

மின்காந்த பேச்சில் மொத்தமாய் நான்

கேட்டேன் இசைத் தமிழ்

நீ கொஞ்சும் நாடகத் தமிழ்

நீ கொஞ்சும் மன்மதத் தமிழ்

நீ தமிழ் என் தமிழ்

T… A… M… I… L…  தமிழ்….

என்று பாடலின் வரிகளை தனக்கு தக்க மாற்றிக் கொண்டு அவனின் தீந்தமிழ் முன் கையை ஆட்டிக் கொண்டே பாட அதில் மேலும் கடுப்பானவள் அருகில் இருந்த புக்கை எடுத்து அவன் கையிலே போட்டாள்..

“நீ எல்லாம் ஒரு குடும்பப் பொண்ணாடி கட்டுனப் புருஷன அடிக்குற? என்ன வளர்த்திருக்கார் உன் அப்பா?” என்று கேட்டு அவளை மேலும் மேலும் கடுப்பேத்த

“உன் அம்மா உன்னை வளர்த்ததை விட என்னை எங்கப்பா நல்லா தான் வளர்த்திருக்கார். ஹான் அப்புறம் என்ன சொன்ன கட்டுனப் புருஷனா? நீயா? நமக்கு நடந்ததுக்குப் பேரு கல்யாணமா? என் விருப்பம் இல்லாம நீயா என் கழுத்துல தாலியைக் கட்டுவ அதை ஏத்துகிட்டு உன்னோட நான் குடும்பம் நடத்தனுமா?” என்று கத்த

‘ஐயோ தெரியாம வாயக் கொடுத்துட்டியேடா வெற்றி… இனி ஒரு வாரம் இதையே சொல்லுவாளே. சமாளி சமாளி’ என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டவன் அவள் புறம் திரும்ப அவனை முறைத்துக் கொண்டே வாய்க்கு வந்த கெட்ட வார்த்தைகள் அனைத்தையும் கூறியவள் குளியல் அறைக்குச் சென்றாள்…

‘ச்சீ பொண்ணா இவ? பசங்கள விடக் கெட்ட வார்த்தை சரளமா பேசுறா? மாமாவ பொண்ணப் பெத்துக்க சொன்னா பொறுக்கியப் பெத்து விட்டு அதை என் தலையில வேற கட்டிட்டாரே’ என்று முனங்கிக் கொண்டே நியூஸ் பேப்பரைப் படித்துக் கொண்டிருந்தான்…

தன்னை சுத்தப் படுத்திக் கொண்டு குக்கரில் சாதத்தையும் உருளைக்கிழங்கையும் வைத்து விட்டு ப்ரிட்ஜில் இருந்த மாவை எடுத்து வைத்தவள் கல்லூரிக்கு தேவையானதை கவனிக்கச் சென்றாள்… சிறிது நேரத்தில் லெமன் சாதமும் உருளைக் கிழங்கு வறுவலும் செய்து அதை பாக்சில் வைத்துவிட்டு குளித்து கல்லூரிக்குத் தயார் ஆனாள்…

சமையல் அறையில் இருந்து வந்த வாசனை வெற்றியின் மூக்கைத் துளைத்தெடுக்க ‘படுபாவி வேணும்னே என்னை உசுப்பேத்த எனக்குப் பிடிச்சத செஞ்சிட்டு என் கண்ணுல கூட காட்டாம அவளே சாப்பிடுவாளே. பேசாம அவ குளிச்சிட்டு வரதுக்குள்ள நமக்கு கொஞ்சம் எடுத்து வெச்சிக்குவோமா?’ என்று யோசித்தவன் அவள் அறையை எட்டிப் பார்த்து தமிழ் குளியல் அறையில் இருக்கிறாள் என்பதை உறுதிப் படுத்திக் கொண்டு அடுக்களைக்குள் சென்றுப் பார்க்க ஒரு பருக்கைக் கூட இல்லாமல் அனைத்தையும் அவள் டப்பாவில் அடைத்து வைத்திருந்தாள்.

‘அடி சோத்து மூட்டை எல்லா சாப்பாட்டையும் எடுத்து வெச்சிக்கிட்டியே கொஞ்சம் எனக்கு வெச்சா என்ன?’ திட்டிக் கொண்டே அதில் இருந்த கொஞ்சம் உணவை அவன் எடுத்து தனது பாக்சில் வைத்து விட்டு திரும்ப, அங்கே கையைக் கட்டிக் அவனை முறைத்த வண்ணம் நின்றுக் கொண்டிருந்தாள் தீந்தமிழ்…

“நீயெல்லாம் டாக்டர்னு வெளியே சொல்லிராதே… திருட்டுப்பயலே. சொந்த வீட்டுலையே திருடுற வெட்கமா இல்ல?”

“நீயா கொடுத்தா நான் ஏன் திருட போறேன்?” என்று அவனும் பதில் கூற

“உனக்கு வேணும்னா நீ தான் செஞ்சிக்கணும்.. நான் எல்லாம் செஞ்சி கொடுக்க முடியாது.. காலைல பாட்டப் போட்டு ஆட்டம் போட முடியுது சமைக்க முடியாதோ? மரியாதையா திருடுன சாப்பாட்ட இருந்த இடத்தில வெச்சுடு.”  அவள் கத்தலில்

அவளை மனதில் அர்ச்சனை செய்துக் கொண்டே எடுத்ததை எடுத்த இடத்தில் வைத்து விட்டு மருத்துவமனைக்குச் செல்லத் தயாரானான்.

அவன் சென்றதும் அவனைப் பார்த்துக் கொண்டிருந்த தமிழுக்கு கஷ்டமாக இருந்தது..

‘பாவம் நாம ரொம்ப தான் அவன படுத்துறோமோ? பசிக்கு சாப்பாடு கூட போடாம இருக்கிறது எவ்வளவு பெரிய தப்பு.’ என்று ஒரு நிமிடம் யோசித்தவள் பின் ‘எல்லாம் இவனால தானே. இவனும் இவன் அண்ணாவும் தானே தளிர் இப்போ கஷ்டப்படக் காரணம். அது மட்டுமா  என் அப்பாவோட என்னை பேசவிடாம செஞ்சிட்டான், அனுபவிக்கட்டும்.’ என்றவள் தோசையை ஊற்றி வெற்றிக்கு பிடித்தவகையில் காரச் சட்னி அரைத்து வேண்டும் என்றே ஹாலில் அமர்ந்து அவனைப் பார்க்க வைத்து உண்டு முடித்து தனது பையை எடுத்துக் கொண்டு கல்லூரிக்குப் புறப்பட்டாள்..

‘ராட்சசி ராட்சசி.. மிச்சம் இருக்குற சட்னிய தூக்கி குப்பைல கூட போடுவா எனக்குக் கொடுக்க மாட்டா. எல்லாம் உன் நேரம்டா வெற்றி.. அடுத்த தெருவுல அம்மா இருந்தும் அங்க போய் என்னை சாப்பிட விடாம செஞ்சிட்டாளே.. எல்லாம் உன்னால தான்டி தமிழு……’ என்று அவளை போலவே தன்னுடைய தவறைப் புறம் தள்ளிவிட்டு தமிழின் தவறைச் சொல்லிக் கொண்டே மருத்துவமனைக்குச் சென்றான்…

                               ********************

காலையில் எழுந்ததும் வேகமாக கணவனுக்குப் பிடித்த வகையில் உணவை செய்துவிட்டு காபியைக் கலந்து கொண்டு அறைக்குச் சென்றாள் தீந்தளிர்.. அவளின் கணவன் வருணன் அறையில் இல்லை.. குளியல் அறையில் இருந்து சத்தம் வர கையில் இருந்த கப்பை அருகில் இருந்த மேஜையில் வைத்துவிட்டு அவன் கபோர்டில் இருந்து உடையை எடுத்து வைத்து விட்டுக் காத்திருந்தாள்…

சிறிது நேரத்தில் இடுப்பில் துண்டுடன் வந்த வருணன் மனைவியை கண்டுக் கொள்ளாமல் அவள் எடுத்த உடைகளைத் தவிர்த்து விட்டு வேறு உடையை அணிந்து கொண்டு தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த மகளின் நெற்றியில் முத்தம் ஒன்றை வைத்துவிட்டு அங்கே ஒருத்தி இருப்பதையேக் கண்டு கொள்ளாமல் கீழே சென்றான்..

வேகமாக அவன் பின்னால் ஓடி வந்தவளை அவன் கண்டு கொள்ளவே இல்லை.. டைனிங் டேபிளைத் தாண்டி அவன் சென்றுக் கொண்டே இருந்தான்.. இது வழக்கமாக நடக்கும் நிகழ்வு தான் என்றாலும் தினமும் கணவனின் நிராகரிப்பு தளிரின் கண்களில் கண்ணீரை உற்பத்திச் செய்தது..

ஆறு மாதம் முன்புவரை இருவரும் ஒருவரின் அன்பில் மற்றவர் இன்பமாகவே வாழ்ந்தனர்..

அந்த நாட்கள் அவள் வாழ்கையில் மறக்கவே முடியாதவை.. அப்பொழுது எல்லாம் அவள் எடுத்துக் கொடுக்கும் உடையை அணிவதும் அவள் கொடுக்கும் உணவை அவளை சீண்டிக் கொண்டே உண்பதுமாய் இருப்பான்.. இப்பொழுது எல்லாம் அவள் செய்யும் உணவை அவன் தொடுவதே இல்லை..

‘நான் அப்படி என்ன செஞ்சேன்.. என்னை எப்படி மொத்தமா வெறுத்துட்டார்’ கண்ணீர் கண்களை மறைக்கப், போகும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

“என்னமா தளிர் காலேஜ்க்கு கிளம்பலையா? இன்னைக்கு கைடைப் பார்க்கனும்னு சொன்னியே?” பின்னால் இருந்து கேட்ட மாமனாரின் அழைப்பில் கண்களைத் துடைத்துக் கொண்டு திரும்பியவள்

“இதோ கிளம்பிட்டேன் மாமா.” என்றாள்

“குட்டி முழிச்சிடாளா?”

“இல்ல மாமா.. தூங்கிட்டு தான் இருக்கா.. எழுந்ததும் பொன்னி அக்காவ இட்லி கொடுக்க சொல்லிருக்கேன்.”

“ம் சரிமா.”

“நான் வரேன் மாமா..” அவரை பார்க்காமல் கீழே குனிந்து கொண்டே பதில் அளித்து விட்டு தனது பையை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள்.

கல்லூரிக்கு சென்றவள் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு அவளின் கைடை(guide) சந்தித்து அவரிடம் அந்த வாரத்திற்கான ரிப்போர்ட்டை கொடுத்துவிட்டு  அவரிடம் வேறு சில தகவல்களை பெற்றுக் கொண்டு வெளியே வரும்போது மணி ஒன்றாகி இருந்தது… காலையில் உண்ணாதது அவளிற்கு தலைவலியை கொடுக்க கேன்டீன் சென்று ஜூஸ் ஆர்டர் செய்து குடித்துக் கொண்டிருந்தாள்.. அப்பொழுது அவள் கைப்பேசி அடிக்க எடுத்துப் பார்த்தவள் சலிப்புடனே

‘இன்னைக்கு என்ன பஞ்சாயத்தோ? என் பிரச்சனையே என்னால சமாளிக்க முடியல. இதுல இவன் வேற.’ என்று புலம்பிக் கொண்டே அதை அட்டென்ட் செய்தாள்.. அவள் ஹலோ என்று சொல்லும் முன்பே வெற்றி அந்த புறம்

“தளிர் இன்னைக்கு உன் தங்கச்சி.” என்று ஆரம்பித்து காலையில் தமிழ் வெற்றியை புத்தகத்தை வைத்து அடித்ததில் இருந்து, அவனைப் பார்க்க வைத்து அவள் உண்ட காரச்சட்னி வரை அனைத்தையும் கூறியவன்

“என்னைப் பார்க்க வெச்சு பார்க்க வெச்சு அவ தின்னுறா… இதுக்கு எல்லாம் சேர்த்து பின்னாடி அல்சர் வந்து வயிற்று வலியில கஷ்டப்படுவா பாரு.” என்று வெற்றி கூற  

“டேய் உனக்கு பேஷன்ட் வரலைன்னு என் தங்கச்சிக்கு வியாதி வரவெச்சு ட்ரீட்மென்ட்னு சொல்லி சம்பாதிக்க பார்க்குறியா?”

“ஆமா உன் தொங்கச்சி காசு கொடுத்துட்டாலும்.” அவன் அலுத்துக் கொள்ள

“சும்மா பேச்சுக்கு கூட அவளுக்கு அப்படி ஆகணும் இப்படி ஆகணும்னு சொல்லாதே வெற்றி. அவ பாவம்..” என்று அவள் ஏதோ கூற வர

“அவ பாவம் அம்மா இல்லாம வளர்ந்த பொண்ணு.. சேட்டை செய்வாளே தவிர ரொம்ப நல்ல பொண்ணு. நீ செஞ்ச தப்புனால தான் அவ உன்ன இப்படி படுத்துறா. கொஞ்ச நாள் பொருத்து போ… ப்லா ப்லா தானே….” என்றான் வெற்றி

“இந்த வாய் தான் உனக்கு எதிரியே.. கொஞ்சம் அடக்கி வாசி.”

“வாசிச்சிடுவோம்…”

“சரி நான் காலேஜ்ல இருக்கேன்.. வீட்டுக்கு போயிட்டு கூப்பிடுறேன்”  என்றவள் அழைப்பை துண்டித்தாள்.. மனதில் தன் வாழ்க்கை தான் சரியாக இல்லை தங்கையாவது வெற்றியுடன் சந்தோசமாக வாழ வேண்டும். அதற்கு தன்னால் முயன்றதை செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தாள்..

மதிய உணவை வீட்டிற்கு வந்தவுடன் முடித்துக் கொண்டு மகள் ஆருத்யாவுடன் அய்கியமாகினாள்.. மாலை தங்கை கல்லூரியில் இருந்து வரும் நேரத்தில் அவளைக் காண அங்கே செல்ல பூட்டிய வீடே அவளை வரவேற்றது.. தங்கையின் எண்ணிற்கு தொடர்பு கொண்டவள்

“ஹலோ தமிழ் எங்க இருக்க?” என்று வினவ,

“வெளியே இருக்கேன் தளிர். சொல்லு” என்றாள் தமிழ்..

“காலேஜ் இன்னும் முடியலையா?”

“இல்ல நான் ப்ராஜெக்ட் விஷயமா வெளிய வந்தேன்.”

“ஓ நான் உன்னை பார்க்கலாம்னு வீட்டுக்கு வந்தேன். வீடு பூட்டி இருந்தது அதான் உனக்கு கால் பண்ணேன்.”

“நீ அங்க வந்திருக்கியா? முன்னமே சொல்லிருக்கலாம்ல. நான் வர கொஞ்சம் லேட் ஆகுமே தளிர்.” என்றாள் தயக்கத்துடன்

“சரி வீகென்ட் வந்து பார்க்குறேன். இப்போ அப்பாவ பார்த்துட்டு போறேன்.”

“ம் அவர பார்த்துட்டு வந்து எப்படி இருக்கார்ன்னு சொல்லு.”

“பக்கத்து தெருவுல இருக்கவர பார்க்க உன்னால போக முடியாதா? நான் பார்த்துட்டு வந்து சொல்லனுமா?”

“அவர் தானே என்னை தனியா அனுப்பினார். சோ நான் போக மாட்டேன் பேச மாட்டேன். அவரா வந்து பார்க்கட்டும் பேசட்டும்.” வீம்பாக கூற

“என்னமோ பண்ணு.” என்றுவிட்டு தந்தை தொல்காப்பியரை காணச் சென்றாள்

“வாடா தளிர்.. எப்படி இருக்க? மாப்பிள்ளை, பாப்பா எல்லாரும் எப்படி இருக்காங்க..”

“எல்லாரும் நல்ல இருக்கோம் ப்பா.. நீங்க எப்படி இருக்கீங்க? அத்தை எங்க?”

“நான் நல்லா இருக்கேன்டா தளிர்.. அத்தை கடைக்கு போய்ருக்கா. இரு உனக்கு காபி போட்டுட்டு வரேன்.”

இருவரும் காபியை குடித்துக் கொண்டே பேசினர்.

“ஆருவ கூடிட்டு வந்திருக்கலாம்ல தளிர்.” என்று தொல்காப்பியர் கூற

“இல்லப்பா.. தமிழ பார்க்கலாம்ன்னு வந்தேன். அவ இன்னும் வரலை. அப்படியே உங்களையும் பார்த்துட்டு போகலாம்ன்னு இங்க வந்துட்டேன். இன்னொரு நாள் உங்க பேத்திய தூக்கிட்டு வரேன்.” என்றவள் இருவரின் கப்புகளையும் கழுவிவிட்டு தந்தையுடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தாள்

“நீங்க தமிழ் கிட்ட பேசுனீங்களா? நீங்க ரெண்டு பேரும் அவங்களோட போய் இருந்தா தான் என்ன?” என

“நாங்க இருந்தா அவ வெற்றிய கண்டுக்கவே மாட்டா தளிர்.. கொஞ்ச நாள் தனியா இருக்கட்டும் அவளும் அவன புரிஞ்சிப்பா.”

“இதையே தான்பா நாலு மாசமா சொல்லிக்கிட்டு இருக்கோம்.. பெருசா எந்த மாற்றமும் வந்த மாதிரி தெரியல.. காலேஜூக்கும் போயிட்டு வீட்டையும் அவ பார்த்துக்கணும் இதுக்கு இடைல அவ எப்படி படிப்பா? அதை பார்க்க மாற்றீங்க? அவங்க ரெண்டு பேருக்கும் இது கல்யாணம் பண்ற வயசா? படிக்க வேண்டிய வயசுல தான் படிக்க முடியும். இப்போ அவ கவனம் படிப்புல தான் இருக்கணும்.. final இயர் வேற.” என்று கூற

“புரியுதுமா.. இருந்தாலும் ஒன்றரை வருஷமா ரெண்டு பேரும் தனியா இருந்துட்டாங்க.. கொஞ்ச நாள் போகட்டுமே. அத்தையும் இதை தான் சொல்லுறாள்.”

“சரி அப்பப்ப அவள போய் பார்த்தாதான் என்ன? நீங்க பேசாம அவ உங்களோட பேச மாட்டாளாம்.” தங்கை கூறியதை தளிர் கூறினாள்

“எனக்கு மட்டும் தமிழைப் பார்க்கனும்னு ஆசை இல்லையா என்ன? பக்கத்துலையே பொண்ண வெச்சிகிட்டு முகத்த கூட பார்க்க முடியலைன்னு வருத்தமா தான் இருக்கு. இப்போ நான் போய் பார்த்தா, அவ எங்களோட வரேன்னு சொன்னா என்னால மறுக்க முடியாதுமா. அதான் போகல.”

“போங்கப்பா நீங்க ஒரு லூசு, அவ ஒரு லூசு. வெற்றி தான் பாவம் அவ கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கிறான். தினமும் புலம்புறான்.”

“அவன் தானே அவசரப்பட்டு இப்படி பண்ணான். அனுபவிக்கட்டும்.”

“ம்க்கும் உங்க சின்ன பொண்ணு மாதிரியே பேசுங்க. சரி நான் கிளம்புறேன். ஆரு இந்நேரம் எழுந்திருப்பா.” என்றவள் தந்தையிடம் விடைப் பெற்று வெளியே வர அங்கே அவளின் அத்தை ராதிகா உள்ளே நுழைந்தார்.

“என்னடா தளிர். எப்போ வந்த அதுக்குள்ள கிளம்பிட்ட? உள்ள வா.” என்று கூறினார்.

“நான் அப்பவே வந்துட்டேன் அத்தை. இவ்வளவு நேரமாவா கடைல இருந்தீங்க.”

“வரவழியில காமாட்சிய பார்த்தேன் கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்துட்டேன். அதான் லேட் ஆகிடுச்சு. நீ வா.”

“இல்லத்தை. பாப்பா முழிச்சிருப்பா சனிக்கிழமை வரேன்.”

“சாப்ட்டுட்டு போடி.”

“அப்பா காபி கொடுத்துட்டார் அத்தை. சனிக்கிழமை வரும் போது சாப்டுறேன்.” என்றவள் வேகமாக வீட்டிற்கு சென்றாள். அவள் எதிர்பார்த்ததை போலவே அவளது கணவன் வீட்டில் இவள் மேல் கோபமாக இருந்தான்.

குழந்தை எழுந்து அழுது கொண்டிருக்க அவன் சமாதானம் படித்துக் கொண்டிருந்தான். இவள் உள்ளே நுழைந்ததும்

“நல்லா ஊர் சுத்து. பச்ச பிள்ளைய வீட்டில விட்டுட்டு போயிருக்கோம்னு அறிவு இருக்கா உனக்கு? குழந்தை இங்க அழுதுட்டு இருக்கு நீ ஹாயா உங்க அப்பா வீட்டுக்கு போயிட்டு என்ஜாய் பண்ணிட்டு வந்திருக்க இல்ல.” என்று கத்தினான்.

“வருண் சும்மா இரு. அதான் மருமக வந்துட்டால. ஆருவ அவகிட்ட கொடு.” என்று மகனிடம் கூறிய வருணின் தந்தை தளிரிடம் திரும்பி

“நீ குட்டிய பாருமா. இவனுக்கு வேற வேலை இல்ல. சும்மா கத்திட்டே இருப்பான்.” என

“ஆமா நான் கத்தீட்டே இருக்கேன். இப்படி என்ன கத்த வைக்கிறது உங்க மருமக தானே. அதெல்லாம் உங்களுக்கு தெரியாது. என்னை மட்டும் குத்தம் சொல்ல வந்துடுவார்.” என்று மேலும் கத்திவிட்டு அறைக்கு சென்றான்.

அதுவரையிலும் குழந்தை அழுது கொண்டே இருக்க தளிரின் கண்களும் லேசாக கலங்கி இருந்தது.

“தளிர் ஆருவ பாருமா. அவளைச் சமாதனப்படுத்து.” என்ற மாமனாரின் சொல்லுக்கு

“ம்” என்றவள் குழந்தையை தூக்கிக்கொண்டு அறைக்கு சென்றவள் பசியாற்றிவிட்டு மடியிலே வைத்துக் கொண்டிருந்தாள். குழந்தை பசி ஆறும் வரை பொறுத்துக் கொண்டிருந்த வருண் வேகமாக அவள் அருகில் வந்து ஆருத்யாவை தூக்கிக் கொண்டான். அவன் வேகமாக இழுத்ததில் ஆருவின் கொலுசு தளிரின் புடவையில் சிக்கிக் கொள்ள அதை தளிர் எடுப்பதற்கு முன் வெடுக்கென்று எடுத்துவிட்டு அவளைக் கண்டு கொள்ளாமல் குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்தான்.

தந்தையும் மகளும் விளையாடுவதை பார்த்த தீந்தளிருக்கு தானும் அவர்களுடன் சேர்ந்து விளையாட வேண்டும் போல் இருந்தது. எங்கே கணவன் அவளை அவன் அருகில் அனுமதித்தால் தானே. அவள் அருகில் வரவேண்டும் என்பதற்காக அவன் சொல்வதை அவளால் செய்யவும் முடியவில்லை.

“அவருக்காக தானே வேலைய விட்டேன். இதுக்கு மேல என்னால எதுவும் செய்ய முடியாது.” என்று மனதினுள் நினைத்தவள் உடையை மாற்றிவிட்டு இரவு உணவை தாயரிக்க சென்றாள்

                            ******************************

லன்டனில்….

“ஜெனிமா சீக்கிரம் வாமா.” என்று கதிர் கத்த

“ஜெனிமா..” மழலை மாறாத குரலில் அவ்வீட்டின் குட்டி தேவதையும் சேர்ந்து கத்தினாள்

“ஜெனி”

“ஐயோ வரேன்… ஏன் இப்படி அப்பாவும் பொண்ணும் என் பேர ஏலம் போடுறீங்க..” என்றவாறே கைப்பையை எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள் ஜெனி.

“ஏலத்துலயா உன்னையா? ஓசில கொடுத்தா கூட ஒரு பய வாங்க மாட்டான்..” என்று கதிர் மனைவியை வார அவனின் முதுகில் செல்லமாக அடித்தவள்

“நேரமாச்சு சர்ச்க்கு போகனும் வாங்க.” என்றாள்

“நீ மேக் அப் செய்ய ரெண்டு மணி நேரம் எடுத்துக்கிட்டு இப்போ நேரமாச்சுன்னு சொல்லுறியா?” என்று கூறி மீண்டும் மனைவியிடத்தில் அடிகளை வாங்கிக் கொண்டு சர்ச்க்கு சென்றவர்கள் இரவு உணவையும் வெளியேவே முடித்துக் கொண்டு வரும் பொழுது அவர்களின் மகள் தூங்கியிருந்தாள்..

மகளிற்கு உடையை மாற்றிவிட்டு தானும் உடையை மாற்றி வந்த ஜெனி கணவனின் வாடிய முகத்தைப் பார்த்து அவன் அருகில் சென்றாள்.

“என்னாச்சு கதிர்?” என

“ஒன்னுமில்லடா.. கொஞ்சம் டயர்ட்.” என்றான் முயன்று வரவழைத்த சிரிப்போடு

“பொய் சொல்லாதே. அத்தைக்கு போன் செஞ்சிருப்ப அவங்க பேசிருக்க மாட்டாங்க.. அதானே.” எனவும் அவன் பதில் கூறாமல் இருந்தான்

“எல்லாம் என்னால தானே. நான் உன்னைப் பார்க்காம இருந்திருந்தா நீ உன் குடும்பத்தோட சந்தோசமா இருந்திருப்பல?” என்றவளின் கண்கள் கலங்க

“ஜெனி.” என்றவன் மனைவியை தோளோடு அணைத்துக் கொண்டு

“எல்லாம் சீக்கிரமே சரி ஆகிடும். நான் இப்போ சந்தோசமா இல்லைன்னு யாரு சொன்னா.. நீ என்னோட இருக்குறது தான் எனக்கு சந்தோஷம். நீ இனிமே சும்மா சும்மா உன்னால தான்னு வருத்தப் படக் கூடாது.”

“ம்..”

“வா தூங்கலாம்..” மனைவியின் நெற்றியில் முத்தம் வைத்தவன் அவளை அணைத்தவாறு கண்களை மூடினான்.. கணவனின் அன்பில் வழக்கம் போல் நெகிழ்ந்தவள் கணவனின் குடும்பத்துடன் சேரும் நாளிற்காக ஏங்கிக் கொண்டிருந்தாள்…  

 

Advertisement