Advertisement

அத்தியாயம் 6

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி இது மட்டும் தான் கடந்த ஒரு மாதமாக அஜயின் வாழ்கையில் நடந்துக் கொண்டிருக்கிறது… மருத்துவர் மீனா நேற்று  கூறியதையே அவனால் ஜீரணிக்க முடியவில்லை.. அதற்குள் இன்று மிக பெரிய விஷயத்தை கூறி அவனை கலங்கடித்துவிட்டார்..

வீட்டிற்கு வந்ததில்இருந்து தன்னிடம் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கும் மனைவியிடம் அவனால் பதில் சொல்ல முடியவில்லை..

“அஜய் சொல்லுங்க எனக்கு என்னாச்சு? நான் பைத்தியம் ஆகிட்டேனா? நம்ம குழந்தையும் என்னை மாதிரி பைத்தியம் ஆகிடுவாளா?” அவன் தோளில் சாய்ந்து அழும் மனைவியை சமாதனப்படுத்தும் வழி அறியாது அவனின் கண்களும் கலங்கின

“சொல்லு அஜய். நான் ஏன் இப்படி நடந்துக்குறேன்.. எனக்கு நீங்க வேணும்.. நீ இல்லாம என்னால இருக்க முடியாது அஜய்.” அவன் தோளில் இருந்து நிமிர்ந்து அவன் சட்டையை பிடித்துக் கொண்டு கேட்டாள்

“நான் உன்னோடவே தான் இருக்கேன்டா அனு… உனக்கு ஒண்ணுமில்ல.. கொஞ்ச நேரம் தூங்கு.”

“டாக்டர் என்ன சொன்னாங்க? அதை ஏன் என்கிட்டே சொல்ல மாட்டேங்கிறீங்க? அப்போ பெருசா என்னமோ நடந்திருக்கு தானே.”

“இல்லடா நீ நல்லா இருக்க.. உன் வேலையில வந்த ஸ்ட்ரெஸ் தான். நீ ரெஸ்ட் எடுத்தாலே சரி ஆகிடும்.”

“நிஜமா?” என்று அவன் முகம் பார்க்க

“நிஜமா தான்.. நம்ம பொண்ணு வந்து உன்னை தொல்லை செய்யுறதை நீ பார்க்க தான் போற.” என்றவன்அவள் தலை கோத சிறிது நேரத்தில் உறங்கிவிட்டாள்… அவளை நேராக படுக்க வைத்துவிட்டு வெளியே வந்தவனை வீட்டினர் சூழ்ந்து கொள்ள இவர்களிடம் எப்படி அந்த உண்மையை சொல்வது என்று அவனிற்கு கஷ்டமாக இருந்தது…

“அஜய் டாக்டர் என்ன சொன்னாங்க?” அனைவரும் இதே கேள்வியை திரும்ப திரும்ப அவனிடம் கேட்க எப்படியும் இவர்களிடம் சொல்லி தானே ஆகவேண்டும் என்று காலையில் மருத்துவமனையில் நடந்ததை கூறினான்..

நேற்று போல் இன்றும் மருத்துவமனையின் உள்ளே செல்லும் முன் அஜயின் கையை பிடித்துக் கொண்டவள்

“நீங்களும் என்னோட வாங்க.” என்றாள்

“உள்ள போ அனு” என்று அஜய் கூற அதை அவள் கேட்காமல் திரும்ப திரும்ப இதையே சொல்ல மீனாவும் அவனை உள்ளே வர அனுமதித்தார்… ஹிப்னாடைஸ் செய்து ஒவ்வொரு கேள்வியாக மீனா கேட்க அனு பதிலளித்து கொண்டிருந்தாள்.. அவளின் எல்லா பதிலிலும் அஜய் இல்லாமல் இல்லை.. அவளின் சகலமும் அஜய் தான்.. அஜய்க்கே இது ஆச்சர்யமாக இருந்தது.. அவள் தன்னை இவ்வளவு விரும்புகிறாளா என்று…

“உங்க கணவரை இவ்வளவு பிடிச்சுருக்கு அப்பறம் ஏன் நீங்க அவர்கிட்ட சில நாளா கோபப்படுறீங்க?” மீனா மெதுவாக கேள்வியை கேட்க

“எனக்கு அஜயை ரொம்ப பிடிக்கும்.. ஆனா அவர் என்னை தொட்டா என்னால அதை அக்செப்ட் பண்ணவே முடியல.. இருந்தாலும் என்னோட அஜய்னு மனசுக்குள்ள சொல்லிகிட்டே அவரோட தொடுகையை சகிச்சுப்பேன்.”

அவன் தொடுகையை சகித்துக் கொள்வேன் என்று அனுக்ரஹா கூறியதும் அஜய்க்கு மிகவும் வேதனையாக இருந்தது.. அதே வேதனையுடனே அவன் அவர்களின் உரையாடலை பார்த்துக் கொண்டிருந்தான்..

“ஏன் அப்படி?”

“தெரியல அவர் என்னை தொடும் போது எல்லாம் எனக்கு ஏதோ ஒரு உருவம் முன்னாடி வந்து பயமுறுத்தும்… கண்ணை மூடினாலும் அந்த உருவம் போகாது.. அதையே நினைச்சு நினைச்சு என்னால என்னால அஜயை…” என்று முடிக்காமல் நிறுத்தியவளுக்கு ஏசி அறையிலும் வியர்த்து வடிந்தது..

“ஓகே ஓகே ரிலாக்ஸ்.. நைட் மட்டும் தான் உங்களுக்கு அந்த உருவம் வருமா?”

“எனக்கே தெரியல… ஆனா அஜய் என்னை தொட்டால் அது என் கண் முன்னாடி தெரியும்.”

“நார்மலா அவர் உங்களை டச் பண்ணாக் கூடவா?”

“இல்ல.. நாங்க உடலளவுல இணையிற அப்போ” ஒவ்வொரு வார்த்தைக்கும் இடைவேளி விட்டு கூறினாள்..

“ஓ…” என்றவர “இதை பத்தி நீங்க உங்க ஹஸ்பண்ட்ட சொன்னீங்களா?” என்றார்

“எனக்கு அது அப்பறம் நியாபகத்துக்கு வராது.. வரும் போது அவர்கிட்ட என்னால சொல்ல முடியல.”

“ஏன்?”

“ஒரு மனைவியா கணவனோட தேவையை நிறைவேத்துறது என்னோட கடமை இல்லையா? என்னன்னு தெரியாத என்னோட இல்யூஷன்காக அவர எப்படி என்னால கஷ்டப்படுத்த முடியும்.. நான் இதை சொன்னா அஜய்க்கு கஷ்டமா இருக்கும்.”

“மனைவியோட கடமை ஹஸ்பண்டை உடலளவில் சந்தோசப்படுத்துறது மட்டும்னு உங்களுக்கு யார் சொன்னது?” என்றவர் பின் அவளிடம் வேறு சில கேள்விகளை கேட்க விரும்பி அவளது வயதை குறைத்துக் கொண்டே அடுத்தடுத்த கேள்விகளை கேட்டார்..

“எட்டு வயசுல என்ன செஞ்சுட்டு இருந்தீங்க?”

“அப்.. அப்போ… அங்க… அந்த அங்கிள்…” என்று ஏதோ சொல்லவந்தவளின் கண்கள் கலங்கியது கை கால்கள் வேறு லேசாக நடுங்க மீனா அஜய் இருவரும் அவளது நடவடிக்கையை விசித்திரமாக பார்த்துக் கொண்டிருந்த வேளையில் மயங்கினாள்… அஜய் வேகமாக அவளை நெருங்கி கீழே விழ இருந்தவளை பிடித்துக் கொண்டான்…

“அனு… அனு…” என்று அவள் கன்னத்தை தட்ட மீனா நர்சை அழைத்து அவளிற்கு முதலுதவி செய்து கொண்டிருந்தார்…

“மிஸ்டர் அஜய் கொஞ்சம் வெளிய இருங்க.”

“மேம் அனு…” என்று அவன் தயங்க

“ப்ளீஸ் போங்க…” என மனமே இல்லாமல் வெளியே சென்றவனிற்கு அனு சொன்ன விஷயமே மனதில் ஓடிக் கொண்டிருந்தது…

இரண்டு மணி நேரம் சென்ற பின்பு வெளியே வந்த மீனாவை பதட்டத்துடன் எதிர் கொண்டான் அஜய்…

“உக்காருங்க அஜய்.”

“மேம்..” என்று அவன் ஏதோ கூறவர

“வெயிட் அஜய்… அனு நல்ல இருக்காங்க… ஹிப்னாடைஸ் செய்யும் போது சிலருக்கு மயக்கம் வரும்.” அவன் இதை தான் கேட்பான் என்று உணர்ந்தவர் அவனிற்கு முன்பே பதிலை அளித்திருந்தார்.

“அவ என்னமோ சொல்ல வந்தாளே அங்கிள் அப்படினு…”

“ம்… சொல்லுறேன்.. முதல நீங்க கொஞ்சம் பொறுமையா இருக்கணும்.” என்றவர் மெதுவாக பேச ஆரம்பித்தார்..

“அனுக்ரஹாக்கு எட்டு  வயசிருக்கும் போது அவங்கள ஒருத்தர் பாலியல் தொந்தரவு கொடுத்துருக்காங்க”

“என்ன?” என்றவனை கண்டு கொள்ளாமல்

“நேத்தே நான் சந்தேகப் பட்டேன்.. இப்படி இருக்கும்னு… அதனால தான் அவங்களால் உங்களோட தொடுகைய சகிச்சுக முடியல.”

“மேம் என்ன சொல்றீங்க எனக்கு புரியலை? அவ இதை பத்தி எங்க யார்கிட்டையும் சொன்னதில்லை.. அப்படி இருக்காது.”

“அவங்களுக்கே அது தெரியதப்போ மத்தவங்க கிட்ட எப்படி சொல்லுவாங்க?”

“அவளுக்கு தெரியாதா?”

“ம் ஆமா.. அந்த வயசுல அவங்களுக்கு அது என்னனு புரியலை.. அப்பா வயசு உள்ள ஒருத்தர் அதுவும் பக்கத்து வீட்டு அங்கிள்ன்னு இவங்க போகிருக்காங்க அங்க தான் இப்படி ஆகிருக்கு.. அது என்னனு அந்த வயசுல புரியாம அதை பத்தி வீட்டுலையும் சொல்லாம இருந்திருக்காங்க.. நடுவுல அதை மறந்தும் போய்ட்டாங்க… உங்க திருமணத்திற்கு அப்பறம் உங்களோட தொடுகை ஒவ்வொன்னும் அவங்களுக்கு எதையோ நியாபக படித்துருக்கு..

அதை தான் அப்போ சொன்னாங்க.. உங்களோட தாம்பத்தியம் கொஞ்சம் கொஞ்சமா அவங்களுக்கு அதை நினைவுபடுத்திருக்கு.. பட் என்னனு புரியலை.. அந்த உருவம் வர வர உங்களோட தொடுகைய சகிக்க முடியாம இருந்திருக்காங்க.. ஆனாலும்நான் லவ் பண்ணி கல்யாணம் செஞ்சுருக்கேன்.. அவரோட சந்தோசமா வாழணும்.. அம்மா அஜய நல்லா பார்த்துக்க சொல்லிருகாங்கனு ஒவ்வொரு முறையும் மனசுல சொல்லிக்கிட்டே தான் அதுல இணைஞ்சிருக்காங்க…

நைட் அப்படி நினைக்கிறவங்கபகல்ல உங்க முன்னாடி அதை காட்டிக்காம சாதாரணமா இருந்துட்டு நீங்க இல்லாதப்ப இதையே யோசிச்சுட்டு இருந்திருக்காங்க… ஏதோ உருவம் வந்ததுனு அது என்ன என்னனு யோசிச்சு யோசிச்சு அதுக்கான விடை கிடைக்காததால கோபம் வந்து உங்களோட சண்டை போட்டு டிப்ரெஷன்ல இப்படி ஆகிட்டாங்க.

உங்க கல்யாணத்துக்கு முன்னமே அவங்களுக்கு இப்படி ஆகிருக்கு அப்போவாது இதை யார்கிட்டயாவது சொல்லிருக்கலாம்.. டிவில ரேப் சீன்ஸ் பார்த்தா கை கால் எல்லாம் நடுங்கும்னு சொன்னாங்க.. ஒரு நாள் அந்த கோபத்தை கூட உங்ககிட்ட காமிச்சுட்டாங்க.. நீங்களும் அவங்கள பத்தி சரியா தெரிஞ்சுக்காம உங்க லைப்ப ஸ்டார்ட் பண்டீங்க… வீட்ல போர் அடிக்குதுனு வெளியே போய்ருக்காங்க அப்போ அங்க ஒருத்தர் சின்ன பொண்ணுகிட்ட தப்பா நடந்துக்க ட்ரை பண்ணிருக்கார்..  அதை பார்த்ததும் என்னமோ தோணிருக்கு அது என்னனு புரியாம யோசிச்சு யோசிச்சு உங்களோட பேசுறது அவாய்ட் செஞ்சுருக்காங்க.. நமக்கு நிஜத்துல நடந்த விஷயம் சில சமயம் மறந்துடும்.. அதே மாதிரி வேற ஒன்னை பார்க்கும் போது இப்படி தானே நடந்ததுனு நினைப்போம்ல அப்படி தான்… அனு அந்த உருவத்த நியாபகத்துக்கு கொண்டு வர முயற்சி  செஞ்சுட்டு இருந்த சமயம் இப்படி நடந்ததும் எல்லாம் அவங்கள இப்படி ஆக்கிடுச்சு.”

“இப்.. இப்போ. அனுக்கு எல்லாம் தெரிஞ்சுடுச்சா மேம்?”

“இல்ல.. தெரியாது.” சிறிது நேர அமைதிக்கு பிறகு ஏதோ கேட்க வந்தவன் கேட்காமல் அமைதியாக இருக்க

“என்ன அஜய்? சொல்லுங்க.”

“அது..” என்று தயங்கியவன் பின்பு மெதுவாக  “நைட் மட்டும் தான் அவ அப்படி ஆகுறாளா? மார்னிங் என்னோட ரொம்ப நார்மலா இருக்காளே. ஈவன் நாங்க வெளிய போனா என் கையை பிடிச்சுட்டு அவ விடவே மாட்டா? அப்போ அவளுக்கு அப்படி பீல் ஆகலையா? இல்ல எனக்காக மறைச்சுட்டாளா?”

“உங்க தாம்பத்தியம் மட்டும் தான் அனுவுக்கு அந்த விஷயத்தை நியாபகப் படுத்திருக்கு.. உங்க அருகாமை இல்ல.”

“ஏன் குழந்தைய வேண்டாம்னு சொன்னா?”

“தன்னோட பிஹேவியர் சேன்ஜ் ஆகிறது அவங்களுக்கே தெரிஞ்சிருக்கு.. உங்கள வேற ஒரு நாள் ரொம்ப திட்டிருக்காங்க… என்னமோ நாம பைத்தியம் மாதிரி நடந்துக்குறோம்னு அவங்களா நினைச்சு நெட்ல சேர்ச் செய்திருக்காங்க.. அம்பானி வேற ப்ரீயா நெட் கொடுத்துட்டார்.. சும்மாவா இருப்பாங்க… அதுல இவங்களுக்கு இருக்க  சிம்டம்ஸை போட்டுபார்க்க மெண்டலி டிப்ரேஸ் மனநலம் குன்றியவர்களுக்கு இப்படி வரும்னு இருந்துருக்கு.. அது அவங்க மனசுல ஆழமா பதிஞ்சிடுச்சு.. நாம ஒரு பைத்தியம் நம்ம குழந்தையும் பைத்தியம் ஆகிடும்னு இந்த குழந்தையே வேண்டாம்னு சொல்லிருக்காங்க…”

“நான் அவளோட இல்லாம  இருந்தா அனு பழைய படி ஆகிடுவா இல்ல?”

மீனா கூறிய விஷயம் அவனை இவ்வாறு யோசிக்க வைத்தது.. தன்னால் தான் அவனின் அனு இப்படிஆகிவிட்டாள்… நான் இல்லாமல் இருந்தால் எல்லாம் சரி ஆகிவிடும் என்று நினைத்தான்.. அதை அப்படியே அவரிடம் கேட்க

“சில்லியா இருக்கு உங்க யோசனை.. இப்போ அவங்களுக்கு தேவையே உங்களோட அருகாமை தான்.”

“நான் கிட்ட போனாலே அவளுக்கு அந்த உருவம் நியாபகம் வருதுனு சொல்லுறா.. நீங்கநான் கூட இருக்கனும்னு சொல்றீங்க.”

“காலம் முழுக்க அப்போ அவங்களை விட்டு விலகி இருக்கலாம்னு முடிவு செஞ்சுட்டீங்களா?” அஜயை தீர்க்கமாக பார்த்துக் கொண்டே அவர் கேட்க

“அனுவோட நிம்மதி எனக்கு ரொம்ப முக்கியம்.. அவளுக்காக நான் விலகி இருப்பேன்.” அவன் கூறியதை கேட்டதும் மெலிதாக சிரித்தவர்

“லுக் மிஸ்டர் அஜய்.. எவ்ரி ப்ராப்ளம் ஹஸ் அ சொல்யூஷன்… ஒரு பிரச்சனை வந்தா அதை சரி செய்யாம அதை விட்டு ஓட நினைக்கிறது முட்டாள்தனம்.. அனுவோட பிரச்சனை பெருசு தான் நான் இல்லைனு சொல்லல.. ஆனா இப்போ இந்தியால நூத்துல பத்துகுழந்தைகளுக்கு இப்படி நடக்குது…அதுல சிலபேரோட  பிரச்சனை வெளிய வந்துடுது. மீடியாக்கு பயந்துபல பெற்றோர் இதை வெளிய தெரியாம மறைக்குறாங்க.. அனுவ மாதிரி சில குழந்தைகளுக்கு தனக்கு என்ன நடந்துனே தெரியாம அதை அப்படியே விட்டுறாங்க… பெத்தவங்களையும் இதுல நம்மால குறை சொல்ல முடியாது… செக்ஸ் பத்தி ஒரு பொண்ணுக்கு வயசுக்கு வந்த பின்னாடிதான் சொல்லிக் கொடுக்குறாங்க.. அதுக்கு முன்ன இதை பத்தி எதுவும் தெரியாம இருக்கதால சில குழந்தைகள் இதை வீட்டுல சொல்லாம விட்டுடுறாங்க.. இதை பத்தின அறிவு இல்லாதது தான் முதல் காரணம்… அந்த வயசுபொண்ணுங்களுக்கு இதை சொன்னாலும் புரியாது.. அட்லீஸ்ட் குட் டச் பேட் டச்பத்தி கண்டிப்பா நாம சொல்லிக் கொடுத்திருக்கணும்… சில பேருக்கு தன்னை அவங்க ஏதோ செய்றாங்கனு புரியும் ஆனா அதை வந்து வீட்டுல சொல்ல பயமா இருக்கும்.. சொன்னா நம்மளை அடிப்பாங்களா வெளிய விட மாட்டாங்களானு.. இப்படி பட்ட குழந்தைகளும் இருக்க தான் செய்றாங்க.. இப்போ அனுக்கு அந்த விஷயம் நிழல் வடிமா நியாபகம் இருக்கு.. முழுசா தெரியலை…

பன்னிரண்டு வயசு பொண்ணு ட்ரீட்மெண்ட் எடுத்துகிட்டு இப்போ சந்தோசமா காலேஜ் படிச்சுட்டு இருக்கா.. அனுக்கு என்ன???  கவுன்சிலிங் மூலமா இதை சரி பண்ணிடலாம்.. அஜய் இருக்கதால தான் அனுக்கு இப்படி ஆகுதுனு நீங்க மனசுல பதிய வைக்காதிங்க… காலம்பூராவும் அவ உங்களோட தான் வாழணும்.. பழைய விஷயத்தை மறக்க வைக்கிறது உங்களோட கையில தான் இருக்கு. நீங்க என்னடானா இப்படி சொல்றீங்க? உங்க அருகாமை அவங்கள இப்படி ஆக்கலை நீங்க அதை நல்லா புரிஞ்சுக்கோங்க.” மேலும் அவர் சிறிது நேரம் விளக்க புரிந்துக் கொண்டவன்

“நெக்ஸ்ட் எப்போ வரணும் டாக்டர்?”

“ஒன் வீக் ரெஸ்ட் எடுக்கட்டும்.. வீக்கா இருக்காங்க.. நெக்ஸ்ட் வெட்நெஸ்டே கூப்ட்டு வாங்க.”

மருத்தவமனையில் நடந்த நிகழ்வுகளை அவன் கூறி முடிக்க ஜானகி பெரும் குரல் எடுத்து அழத் தொடங்கினார்… மூர்த்தி ஸ்வேதா ஷ்யாம் என்று எல்லோரின் கண்களும் கலங்கி இருந்தது…

“என்னால தான் என் பொண்ணுக்கு இப்படி ஆகிடுச்சு… ஒரு அம்மாவா என் பொண்ணுக்கு என்ன ஆச்சுனு கவனிக்காம இப்படி அவளை ஆக்கிட்டேன்.” என்று முகத்தில் அறைந்து கொண்டு ஜானகி அழ ஷ்யாம் அஜய் இருவரும் அவரை தடுத்தனர்…

“அம்மா பொறுமையா இருங்க.” ஷ்யாம் கூற

“இல்ல ஷ்யாம்.. அந்த வயசுல அப்படி ஆகும்னு நான் நினைக்கலையே இப்போ அனு பைத்தியம் பிடிச்ச மாதிரி ஆகிட்டா… இதுக்கு நான் தான் காரணம்…”

அழுது கொண்டிருந்த அவரை ஷ்யாம் ஸ்வேதா இருவரும் சமாதனம் செய்து உறங்க வைத்தனர்.. மூர்த்தியோ கண்களில் வழிந்த நீரோடு சோபாவில் அமர்ந்து விட்டார்.. அவர் அருகில் சென்ற அஜய்

“மாமா.” என அவனை அணைத்துக் கொண்டவர் உடைந்து அழ

“நீங்களும் இப்படி அழுதா அத்தைக்கு யார் தைரியம் சொல்லுவா.. அழாதிங்க மாமா.”

“என்னை மன்னிச்சுடு அஜய்.. உண்மை என்னன்னு தெரியாம உன்ன நான் ரொம்ப பேசிட்டேன்.”

“நீங்க என்னை திட்டாம யார் திட்டப் போறா? விடுங்க” என்றவன் அவரை அழைத்து சென்று அவரது அறையில் படுக்க வைத்துவிட்டு வந்தான்..

வெளியே ஸ்வேதா அழுது கொண்டிருக்க அவனிற்கு ஒவ்வொருவரின் அழுகையை நிறுத்துவதற்குள் போதும் போதும் என்றானது..

இங்கே எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு அறைக்கு திரும்பினாள் அங்கே அவன் மனைவி அழுத விழிகளுடன் அவனை எதிர் கொண்டாள்..

“என்னடா தூங்கலையா? வா” என்றுஅவள் கையை தொட

“நான் கெட்டுப் போனவளா அஜய்?” என்றாள் அழுகையுடன்

அவள் கேள்வியே தாங்கள் பேசியதை இவள் கேட்டுவிட்டாள் என்று அஜய்க்கு புரிய அவள் அருகில் நெருங்கி வந்தவன்

“இல்லடா…”

அவன் கையை தட்டிவிட்டவள் “பொய் சொல்றீங்க… நீங்க பேசினதை நான் கேட்டேன்.”

“அனு… அது இல்ல.” என்று அவளை அணைத்துக் கொண்டவன்

“இப்போ தூங்குடா காலையில பேசலாம்.” என்றான்

“நான் இப்போ பைத்தியம் ஆகிட்டேனா?”

“லூசு அப்படி எல்லாம் இல்ல.”

“பாரு நீங்களே இப்போ என்னை லூசுன்னு சொல்றீங்க..” என்றவள் மேலும் அழ

“அனு நான் சும்மா சொன்னேன்டா.. அழாத.”

“இல்ல நான் லூசாகிட்டேன்.. உங்களுக்கு ஏத்தவ நான் இல்ல. என்னை விட்டுட்டு போங்க…” என்று அவனை அடித்தவள் அவன் மீதே சாய்ந்து கொண்டாள்..

அம்மா என்று மட்டுமே அழைக்

காத்திருக்கும் பச்சிளம் குழந்தைகளுக்கு

எப்படித் தெரியும் நீங்கள் ஆண்கள் என்று?

பரந்து மாதங்களே ஆன சிசுவை கூடச் சிதைத்து

கள்ளிக் காட்டிலும் முள் புதர்களிலும் வீசுகிறார்கள்

வண்ண வண்ணப் பூக்களைபுதிதாய் பறந்த புன்னகையோடு

பள்ளிக்குச் செல்லும் அறியாச் சிறுமிகளை அழித்து

தண்டவாளத்தில் வீசி எறியும்..

எதிர் காலத்தில் பல சாதனைகள்

தன் வசமாக்க துடிக்கும்

எண்ணத்தோடு கல்லூரிக்குச் செல்லும்

இளம் பெண்களைக் காதல் என்ற சொல்லில்

லட்சியக் கனவுகளை மறக்க செய்து அவளை

கட்டில் வரை கொண்டு சென்று கசக்கி எரியும்…

பல கஷ்டங்களையும் தாண்டி

இரவும் பகலும் உறங்காமல் படித்துக்

கடைசி வருடத்தில் கடைசி நிமிடத்தில்

வாங்கும் கையெழுத்துக்காகக் கற்பையே

விலையாகக் கேட்கும் ஆசிரியர்கள்..

இந்தக் காமுகர்கள் தான் பெண்ணியம்

காப்பது கடமையையும்

சொல்லிக் கொள்கிறார்கள்..

ஒவ்வொரு ஆண் மகனும்

பெண்ணைத் தனக்கு இணையாகத் தாரமாகவும்

தலைக் கோதும் தாயாகவும்

சண்டையிடும் சகோதரியாகவும்

தோள் சாயும் தோழியாகவும்

பார்த்தாலே போதும்

பெண்ணியம் காக்கப்படும்

இன்று மட்டும் அல்ல.. என்றும்….

 

Advertisement