Advertisement

 

அத்தியாயம் 2

இரண்டு நாட்கள் கோபமாக இருந்த அனுவிற்கும் அவனின் நியாயம் சற்று புரியத்தான் செய்தது…

ஜானகியும் அஜயின் தந்தை சுந்தரமும் பக்கத்துப் பக்கத்து வீட்டில் இருந்ததால் சிறு வயது முதலே அண்ணன் தங்கை என்று பாசத்துடன் இருந்து வந்தனர்… திருமணம் ஆன பின்பும் அவர்களின் பாசம் அதே போல் தான் இருந்தது… பிள்ளைகளும் அத்தை மாமா என்றே அழைத்து வந்தனர்… அஜயின் பெற்றோர் இறந்ததும் ஜானகி பிள்ளைகளை தங்களுடன் வைத்துக் கொள்ள பிரியப்பட்டார்.. அஜயின் பாட்டி தான் பார்த்துக் கொள்வதாக கூறவே விசேஷ தினங்களுக்கு மட்டும் அத்தையின் வீட்டிற்கு வந்து போகவென்று இருந்தனர்.

மூர்த்தியின் தாய்க்கு அவர்கள் வீட்டிற்கு வருவது பிடிக்காது… இதில் தங்கள் பேரப்பிள்ளைகளை இவர்களுக்கு மணமுடிக்க வேண்டும் என்று மருமகள் கூறியது அவரின் ஆத்திரத்தை கிளப்பியது.. அஜய் கல்லூரி படித்துக் கொண்டிருந்த சமயம் பண்டிகைக்கு சென்றிருந்த போது அவர்களை அனாதைகள் என்றும் தங்கள் பணத்திற்காக வருவதாகவும் அவர் கூற அதன் பின் அஜய் அங்கே செல்வதே இல்லை… தாய் பேசியதற்கு மூர்த்தியும் ஜானகியும் பல முறை மன்னிப்பை வேண்டியும் அவன் அங்கு செல்வதை குறைத்துக் கொண்டான்..

அவன் மும்பை சென்றதும் ஸ்வேதாவை தங்கள் வீட்டிற்கு வருமாறு கூறியும் அஜய் வேண்டாம் என்று மறுத்துவிட்டு ஹாஸ்டலில் தங்கையை தங்கிக் கொள்ள சொன்னான்…

இதை நினைத்துப் பார்த்த அனுக்ரஹாவிற்கு தன்னவன் செயல் நியாயமானதாக தான் இருந்தது…

அவன் அங்கே இருந்த இரண்டு நாட்களும் இருவரும் பேசிக் கொள்ளவே இல்லை… மும்பைக்கு செல்லும் முன்பு அவள் மேல் கோபம் இருந்தும் சொல்லிவிட்டு போக வந்தான் அஜய்..

“வா அஜய்” என்று மூர்த்தி வரவேற்க

“நான் ஊருக்கு கிளம்பிட்டேன் மாமா… இதுலகொஞ்சம் பணம் இருக்கு… கல்யாண செலவுக்கு வச்சுக்கோங்க..” என்று மாமாவிடம் கொடுத்தவன் அத்தையிடம்

“நீங்களும் அனுவும் ஸ்வேதா கூட போய் அவளுக்கு தேவையான நகை வாங்க கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க.. கல்யாணத்துக்கு ஒரு வாரம் முன்னாடி தான் என்னால வர முடியும்… ஸ்வேதாகிட்ட பணம் கொடுத்துருக்கேன்..” என்று கூற

“ம் சரி.. சாப்பிட வா..”

“இல்லத்தை.. சாப்பிட்டு தான் வந்தேன்.. அனு வீட்ல இல்லையா?” என்றவனின் பார்வை ஹாலில் அவளை தேடியது…

“ரூம்ல தான் இருக்கா…”

“நான் போய் பார்க்குறேன்..” என்றவன் அவளின் அறைக்குச் சென்றான்..

அவன் உள்ளே வந்ததும் முகத்தை வேறு புறம் திருப்பிக் கொண்டாள்..

“அனு ஊருக்கு கிளம்புறேன்..” என்றான்.. அவள் பதில் ஏதும் சொல்லாமல் இருக்கவும்

“சாரிடா அனு… கோபத்துல அப்படி பேசிட்டேன்.. ஆயிரம் தான் கோபமா இருந்தாலும் நான் அப்படி சொல்லிருக்க கூடாது தான்…”

அதற்கும் அவள் பதில் சொல்லாமல் இருக்கவும்

“ஏதாவது பேசுடி…”

“…”

“சாரி… கோபத்துல சொல்லிட்டேன்..”

“….”

“என் செல்லம்ல சாரி ப்ளீஸ்டா..”

“கல்யாணம் ஆனதும் இந்த வார்த்தையை நீங்க திரும்ப சொல்ல மாட்டீங்கனு என்ன நிச்சயம் அஜய்? உங்க மனசுல நான் இருந்திருந்தா அந்த வார்த்தையை நீங்க சொல்லிருப்பீங்களா?” என்றவள் அழ

“என் மனசுல உன்னை தவிர யாரும் இல்லைடா… கோபத்துல பேசுன வார்த்தைக்கு எல்லாம் அர்த்தம் கண்டுபிடிக்காதே… சாரி.. இனி இப்படி சொல்ல மாட்டேன்..”

அவள் அழுகை குறையாமல் இருக்கவும் அவளை அணைத்துக் கொண்டவன்

“என் வாழ்க்கை முழுக்க வர போறது நீ தான்டி… என் கோபத்தை உன்கிட்ட காட்டாம வேற யார்கிட்ட காட்ட முடியும்.. இந்த ஒரு தடவை என்னை மன்னிச்சுடு…”

“ம்…”

“என்னை பார்க்காம பேசாம மெலிஞ்சுருப்பனு நினைச்சேன்.. ஆனா லட்டு நீ இன்னும் பப்ளி ஆகிட்டடி.. நல்ல சாப்பாடோ…”

“ஏ.ஜே அடிவாங்க போற…”

“நோ கோபம் லட்டு…”

“லட்டு சொல்லாதே…”

“சொல்லுவேன் லட்டு லட்டு லட்டு.. நல்லா வீட்ல எங்க லட்டு இருக்குன்னு பார்த்துப் பார்த்து திருடி சாப்பிடுவ…”

“அது சின்ன வயசுல.. நீங்க எல்லாரும் கிண்டல் செஞ்சு இப்ப நான் லட்டுவே சாப்பிடுறதில்லை தெரியுமா?” அவள் அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு சொல்ல.. அவள் கன்னத்தை கிள்ளிக் கொண்டே

“முன்னாடி சாப்பிட்டதுக்கே உன் சீக்ஸ் லட்டு மாதிரி வீங்கி இருக்கு.. இதுக்கு மேல சாப்பிட்டா எனக்கு தான் கஷ்டம்…”

“போடா…” என்று அவன் கையை தட்டி விட்டவள் அவனை முறைக்க

“ரெண்டுநாளா உன்னை ரொம்ப மிஸ் பண்ணேன்..”

“நானும் தான்..மிஸ் யூ ஏஜே.”

“மீ டூ அனு…”என்றவன் அவளை இடையோடு சேர்த்து அணைத்துக் கொள்ள அவன் கையை தட்டி விட்டாள் அனு..

“சொந்தகாரன் நான் தானே தொட்டுப்பார்க்கக் கூடாதா?” என்று பாட அவள் சிரித்துக் கொண்டே “இல்லை” என்று தலை ஆட்டினாள்

“இந்த நாட்டில் தீண்டாமை தான் இன்னும் உள்ளதா?” அவன் மீண்டும் பாட

“மாமனை அள்ளி நான் தாவணி போட்டுக்க மாலையும் சூடவில்லை…” அவள் எசப்பாட்டு பாடினாள்

“கிள்ளவாஅள்ளவா? சொல்லடி செய்யலாம்?” கண் அடித்துக் கொண்டே அவள் பக்கம் அவன் நெருங்க

“போக போக மாமனுக்கு புத்தி மாறுது..” என்று எதிர் பாட்டு பாடியவாறு அவன் நெஞ்சில் கை வைத்து தள்ளி விட

“அடியே ரொம்ப காயவிடுற என்னை.. இதுக்கு எல்லாம் சேர்த்து அனுபவிப்ப.”

“அதை அப்போ பார்த்துக்கலாம்.. நீங்க முதல்ல கிளம்புங்க….”

“வெச்சுக்குறேன்டி உன்னை…” என்றவன் கீழே சென்று அத்தையிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு சென்றான்…

திருமண ஏற்பாடுகள் மும்மரமாக நடந்து கொண்டிருந்தது… அவ்வப்போது அஜய் அனுவிடம் போனில் பேசிக் கொள்வான்… திருமணத்திற்கு இரண்டு வாரம் முன்பு அஜய் மும்பையில் இருந்து வந்திருந்தான்…

ஸ்வேதா ஷ்யாமின் திருமணமும் நல்ல முறையில் முடிந்தது.. இன்னும் ஒன்றரை மாதத்தில் அடுத்த திருமணம் என்பதால் ஜானகி மூர்த்தி இருவரும் பிசியாக இருந்தனர்…

அன்று  அஜய் அனுவிற்கு அழைத்தான்…

“ஹலோ ஏஜே…” என்றுஆரம்பித்தவள் அவனை பேசவே விடவில்லை…

அவனிடம் இருந்து வெறும் “ம்” மட்டுமே பதிலாக வந்தது..

“என்ன நான் பேசிட்டே இருக்கேன்… ம் கொட்டிட்டு இருக்கிங்க?”

“உன்னோட கொஞ்சம் பேசணும் அனு…”

“அதை தானே நாம செஞ்சுட்டு இருக்கோம்…”

“அனு பீ சீரியஸ்…”

“ம் சொல்லுங்க..”

“எனக்கு டிரான்ஸ்பர் கிடைக்க  இன்னும் கொஞ்ச நாள் ஆகும்.. நம்ம கல்யாணம் முடிஞ்சு ஒரு மாசத்துக்கு மேல ஆகும்னு நினைக்குறேன்…”

“ஓ…”

“நீ என்ன முடிவெடுக்குற? ஒரு மாசம் அங்க அம்மா வீட்டுல இருக்கியா?”

“….”

“அனு…”

“ம்…”

“எதாச்சும் பேசு…”

“என்னை இங்க விட்டுட்டு நீங்க மட்டும் தனியா இருக்கப் போறீங்களா?”

“இல்லை உன் வேலை… அதான்” என்று அவன் திணற

“ஒரு மாசம் லீவ் சொல்லிக்குறேன்… என்னையும் மும்பைக்கு கூட்டிட்டு போங்க.. நீங்க இங்க வரும் போது நானும் வரேன்…”

“ம்…”

“அப்பா அம்மாகிட்ட சொல்லிட்டீங்களா?”

“இல்ல இனிமே தான் சொல்லணும்…”

“சரி அவங்களோட பேசுங்க..”

“சாரி அனு…”

“நீங்க ஏன் சாரி சொல்லுறீங்க? ஒரு மாசம் தானே.. பரவாயில்லை…”

“தேங்க்ஸ் அனு…”

ஜானகியும் ராம மூர்த்தியும் இதைக் கேட்டு பெரிதாக எதுவும் கூறவில்லை… ஒரு மாதம் தானே என்று எண்ணினார்.. ஆனால் அந்த ஒரு மாதத்தில் தன் பெண்ணின் வாழ்க்கையே ஸ்தம்பித்து போகும் என்று தெரிந்திருந்தால் அனுப்பி இருக்க மாட்டார்கள்…

                        ******************************

இரவு உணவை முடித்துவிட்டு ஹாலில் டிவி பார்த்துக் கொண்டிருந்தாள் அனு.. போனில் மெசேஜ் டோன் கேட்கவே அதை எடுத்து பார்த்தாள்… சிறிது நேரம் போனை நோண்டிக் கொண்டிருந்தவளுக்கு ஏனோ அவ்வளவு கோபம் வந்தது.. கை கால்கள் லேசாக நடுங்க ஆரம்பிக்க சோபாவில் இருந்து எழுந்தவள் மேஜையின் மேல் இருந்த பொருளைத் தட்டிவிட்டு வேகமாக அறைக்குச் சென்றாள்..

“என்னாச்சு அனுக்கு? ஏன் இப்படி போறா?” அருகே அமர்ந்திருந்த மனைவியிடம் மூர்த்தி கேட்க

“உங்க பொண்ணுக்கு வேற வேலை என்ன? அஜய் கூட ஏதாவது சண்டை போட்டிருப்பா.. அதான்…”

“அஜயும் கொஞ்சம் பொறுமையா போகலாம்.. இவ தான் சின்ன பொண்ணு.” மகளிற்கு ஆதரவாக மூர்த்தி பேச

“ஆமா சின்ன பொண்ணு… மடியில தூக்கி வச்சு கொஞ்சுங்க.” என்றுநொடித்துக் கொண்டு சென்றார் ஜானகி..

அறைக்கு வந்த அனு கட்டிலில் படுத்துக் கொண்டாள்… சிறிது நேரத்தில் அவள் போன் அடிக்க அதை அவள் எடுக்கவில்லை.. மேலும் இரண்டு முறை அடிக்க எரிச்சலுடன்அதை எடுத்து சைலண்டில் போட்டாள்…

மறுநாள் தனது அறையில் துணிகளை அடுக்கிக் கொண்டிருந்தாள் அனுக்ரஹா…அங்கே வந்த ஸ்வேதா

“என்ன அனு அதுக்குள்ள பேக்கிங்… இன்னும் பதினெஞ்சு நாள் இருக்கு… நீ மும்பை போக…”

“போர் அடிச்சது.. அதான்… வேலைக்கும் லீவ் சொல்லியாச்சு… சும்மா இருந்தா உன் மாமியார் அதை செய் இதை செய்னு சொல்லிட்டே இருக்காங்க…. அவங்ககிட்ட இருந்து எஸ்கேப் ஆக தான்..”

“கேடிடி நீ…”

“சும்மா பேசாம ஹெல்ப் பண்ணு…”

“ஆளை விடு.. அத்தைக்கு ஹெல்ப் பண்ணும்னு தான் நானும் வேலைக்கு போகாம இருக்கேன்… என்னடா ரொம்ப நேரமா உன்னை காணோமேனு பார்க்க வந்தா என்னை வேலை வாங்குற..”

“உங்க சொத்தைக்கு மட்டும் உதவி செய் எனக்கு செஞ்சிராதே.. அப்படியே ஓடீரு..”

“என் புருஷன் இங்க இருக்கப்ப நான் ஏன் ஓடனும்…”

“நானும் என் புருஷன்கூட பேச போறேன்.. நீ கிளம்பு…” என்று மொபைலை எடுத்து அஜய்க்கு அழைத்தாள்..

“சீக்கிரம் பேசிட்டு சாப்பிட வந்துரு…” என்று கூறிவிட்டு ஸ்வேதா வெளியே சென்றாள்..

அங்கே அஜய் போனை எடுத்ததும்

“என்னசார் எப்பவுமே பிசியா தான் இருப்பீங்களா?”

“நான் கால் பண்ணா நீ எடுக்குறியா? நேத்து நைட் அத்தனை தடவை கால் பண்றேன்.. மெசேஜ்பண்றேன் எதுக்கும் ரிப்ளை இல்ல…” கோபமாக பேச…

“..”

“உன்னை ஏதாவது சொன்னா மட்டும் அப்படியே அமைதி ஆகிடு…”

“சாரி.. என் மேல உள்ள கோபத்துல தான் நான் கூப்பிட்ட போது நீங்க எடுக்கலையா?”

“ரைட்ல இருந்தேன்… இப்ப தான் ப்ரீ ஆனேன்… சொல்லு..” அவள் குரலில் இருந்த வருத்தத்தை உணர்ந்தவன் தன்மையாக பேசினான்…

“சும்மா தான் கூப்பிட்டேன்..”

“ம்…”

“என்னைக்கு கிளம்புறிங்க?” என்றாள் ஆர்வமாக

“ஒரு வாரம் முன்னாடி தான்.”

“ம்…” என்றவளின் குரலில் லேசான சோகம் இருந்தது…

“என்ன சுருதி இறங்குது…”

“அதெல்லாம் ஒண்ணுமில்லை..”

“அப்ப சரி..”

“முஹுர்த்த புடவை எடுக்கக்கூட நீங்க வரலை.. சரி சீக்கிரம் ஊருக்கு வருவீங்கனு பார்த்தா அதுவும் இல்ல…” என்று அவள் அங்கலாய்க்க

“எனக்கு அப்போ முக்கியமான கேஸ் இருந்தது அனு…”

“உங்களுக்கு எப்போ தான் கேஸ் இருக்காது..” அலுத்துக் கொண்டாள்…

“சண்டை போடுற மூட்ல இருக்கியா?”

“நான் பேசுனாலே உங்களுக்கு சண்டை போடுற மாதிரி தான் இருக்கு…” என்று கோபித்துக் கொள்ள

“முடியலடி லட்டு… விட்டுரு.. ரொமாண்டிக்கா பேசு..”

“பார்டா அலெக்ஸ் பாண்டியனுக்குரொமாண்ஸ் எல்லாம் வருமா?”

“வரும் வரும்…” என்று அவன் ஏதோ சொல்ல

“சீ என்ன அஜய் இது அடிவாங்க போறீங்க…” என்றவளின் காது மடல் சிவந்தது.

“ஹாஹா… சரிநான் வீட்டுக்கு போனதும் கூப்பிடுறேன்…” என்று வைத்தான்….

நாட்கள் அதன் போக்கில் செல்ல திருமணத்திற்கு இன்னும் நான்கு நாட்கள் தான் இருந்தது.. ஒரு வாரத்திற்கு முன்பே வந்துவிடுவேன் என்று கூறிய அஜய் முக்கியமான கேஸ் ஒன்று வந்ததால் இன்று புறப்படுவதாக கூறி இருந்தான்.. அதில் அனைவருக்கும் சிறிது வருத்தமே என்றால் அனுவிற்கு கொலை வெறியே வந்தது அவன் மீது.. ஸ்வேதாவிடம் அவனை திட்டிக் கொண்டிருந்தாள்….

“அனு நான் அவனுக்கு சப்போர்ட் பண்றேன்னு நினைக்காதே.. அவன் வேலை அப்படி… நீ மட்டும் தான் இனி அவனுக்கு எல்லாமே.. நீயும் இப்படி அவனை புரிஞ்சுக்கலைனா அவனும் என்ன செய்வான்…”

“உங்க அண்ணாவை ஒண்ணும் சொல்ல முடியலை.. உடனே வக்காலத்துக்கு வந்துடுற…” அனு நொடித்துக் கொள்ள

“வக்காலத்தும் இல்ல ஒண்ணும் இல்ல… இப்படிஅவனுக்குஅடிக்கடி வேலை வரத்தான் செய்யும்.. அவனோட வேலையே அவனுக்கு ரொம்ப டென்ஷன் கொடுக்கும்.. நீயும் கல்யாணத்துக்கு அப்பறம் இப்படி அவனோட சண்டைப் போட்டா உங்க வாழ்க்கைக்கு தான் கஷ்டம்..அஜய் மட்டும் எனக்கு முக்கியமில்ல.. நீயும் தான்.. அவனுக்கான வாழ்க்கையை அவன் வாழவே இல்ல.. இனிமேலாது அப்படி இல்லாம இருக்கணும்னு தான் சொல்ல வர்றேன்.” என்று நீண்ட விளக்கம் கொடுக்க

“அம்மா தாயே.. உன் பாசமலர் கண்ணுல இருந்து ஒரு சொட்டு கண்ணீர் கூட வராம பார்த்துக்குறேன்.. போதுமா…”

“உன்னை..” என்று அவள் தலையணை எடுத்து அடிக்க.. இருவரும் மாற்றி மாற்றி அடித்துக் கொண்டிருந்தனர்… அப்பொழுது அங்கே வந்த ஜானகி

“என்ன இது ரெண்டு பேருக்கும் அறிவே இல்லையா? சின்ன பசங்களா நீங்க? ஸ்வேதா ஷ்யாம் வந்துட்டான்.. அவனைகவனிக்காம இவளோட சேர்ந்துட்டு விளையாடிட்டு இருக்கியா… கீழ போ…” என்றுமருமகளை விரட்டியவர் மகள் அருகில் வந்து அமர்ந்து

“என்ன அனு கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல உனக்கு.. இன்னும் நாலு நாள்ல குடும்பத் தலைவி ஆகப் போற..” என்று வசைபாடிக் கொண்டிருக்க அனுவின் காதில் இருந்து ரத்தம் வராத குறை தான்…

“அஜய் அம்மா அப்பா இல்லாத பையன்.. நீ தான் அவனை இனிமே நல்லா பார்த்துக்கணும்… கோபப்பட்டா பதிலுக்கு சண்டை போடாம பொறுமையா பேசு.. அவனை கஷ்டப்படுத்தாதே…”

“அம்மா.. நீங்களுமா.. இப்ப தான் உங்க மருமகள் ஒரு லாரி அட்வைஸ் செஞ்சா.. இப்ப நீங்களா.. முடியல.. அழுதிடுவேன்…”

“இதோ இதை தான் சொன்னேன்.. பெரியவங்கசொன்னா சரின்னு கேளு.. நீங்க  சென்னையிலயே இருந்திருந்தா உன்னை அப்போ அப்போ வந்து பார்த்து இப்படி செய்யாதே அப்படி செய்யதேனு சொல்லுவேன்.. கல்யாணம் முடிஞ்சதும் மும்பை போறீங்க.. தனியா நீ எப்படி சமாளிக்கப் போறேனு எனக்கு இங்க பக்கு பக்குனு இருக்கு.. அதுக்காக சொன்னா கிண்டல் பண்ணு நல்லா…”

“ஒரு மாசம் தானே.. அப்பறம் இங்க வந்திடுவோம்..” என்றவள் அன்னையின் மடியில் படுக்க

“அந்த ஒரு மாசம் தான் அவன் மனசு கோனாம நடந்துக்கோனு சொல்லுறேன்…” என்று தலை கோதினார்..

இந்த வார்த்தை தான் தன் மகளை தங்களிடம் இருந்து பிறக்கப் போகிறது என்பதை அவர் அப்பொழுது அறியவில்லை…

“ம் சரி…”

“வா வந்து சாப்பிடு…”

“இன்னும் கொஞ்ச நேரம்… ப்ளீஸ்… உங்க மடியில படுத்து ரொம்ப நாள் ஆச்சு…”

“அனுமா நீ சமாளிச்சுடுவியானு எனக்கு பயமா இருக்குடா… பாஷை தெரியாத ஊருக்கு நீங்க ரெண்டு பேரும் போகப் போறிங்க.. அஜய் உன்னை பார்த்துப்பான்… எங்களை விட்டு நீ வெளிய எங்கேயும் போனதே இல்ல.. ஒரு மாசம் உன்னை பார்க்காம எப்படி இருக்கப் போறேனோ?” என்றவரின் கண்கள் கலங்க…

தாயின் கண்ணீரை கண்டவள்அவரின் மடியில் இருந்து எழுந்து அவரை அணைத்துக் கொண்டாள்…

“ம்மா.. ஜஸ்ட் முப்பது நாள்.. அப்பறம்உங்களைப் பார்க்க ஓடி வந்திடுவேன்.. நீங்க எதுக்கு அழறிங்கனு எனக்கு தெரிஞ்சிடுச்சு… நான் கிளம்பீட்டா உங்களுக்கு திட்டுறதுக்கு ஆள் இருக்காது.. போர் அடிக்கும் அது தானே… எனக்கு போன் பண்ணித் திட்டுங்க..”

“கொழுப்புடி உனக்கு…” என்று மகளை செல்லமாக அடித்தவர் “அஜய்கிட்ட சொல்லி நாலு போடு போட சொல்லுறேன்…”

“சொல்லுங்க.. இதுக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன்…”

“சரிசாப்பிட வா..” என்று அவர் கீழே சென்றார்…

திருமணம் நல்ல முறையில் முடிந்துமணமக்களை வீட்டிற்கு அழைத்து வந்தனர்… மாலை மங்கி இரவும் வந்தது.. அனுவை அலங்கரித்து அறைக்கு அனுப்பிவைத்தனர்… அஜய் கட்டிலில் அமர்ந்திருக்க அவன் அருகில் சென்று அமர்ந்தாள்..

“ஏன்டி உள்ள வந்ததும் மாப்பிள்ளை கால்ல விழுகணும்னு உங்க அம்மா சொல்லி தரலையா?” அவன் அவளை சீண்ட

“தோடா.. ஏன் பொண்ணுங்க தான் விழணுமா நீங்க விழுங்க..”

“ஐயோ பெமினிசம் பேசாதே..”

“உண்மைய சொன்னா பெமினிசம்னு சொல்லுங்க…”

“சரி சரி… காலம் பூரா சண்டை தான் போட போறோம்… இன்னைக்கே ஸ்டார்ட் பண்ணனுமா?”

“ஆமா அஜய்… செம டயர்ட்… குட் நைட்…” என்று கூறிவிட்டு படுக்கப் போனவளை இழுத்து அணைத்துக் கொண்டான்

“என்ன பண்ற ஏஜே விடு..” என்று அவன் கையை தட்டிவிட

“விடவா? கடிச்சு வெச்சிடுவேன்டி உன்னை..” என்றவன் அவள் இதழ்களை சிறை செய்தவன் மேலும் முன்னேறினான்….

மறுநாள் அஜயின் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று முடிவு செய்திருந்ததால் காலை உணவை முடித்துக் கொண்டு அனைவரும் அங்கே சென்றார்கள்…

மணமக்களை ஆழம் சுற்றி உள்ளே அழைத்து சென்றனர்… பூஜை அறையில் இருந்த அஜயின் பெற்றோர்களின் புகைப்படத்தை வணங்கினர்.. ஆண்கள் பேசிக் கொண்டிருக்க பெண்கள் மூவரும் மதிய சமையலை செய்து கொண்டிருந்தனர்…

“எப்போ மும்பை போறீங்கடா?” என்று ஷ்யாம் கேட்க

“இன்னும் டிக்கெட் போடலைடா.. டேட் அனு கிட்ட கேட்கணும்…”

“பாரேன்குடும்பஸ்தான் ஆன ஒரே நாள்ல அவகிட்ட கேட்கனும்னு சொல்லுற..”

“ஏன் நீ என் தங்கச்சி சொல்றதை கேட்குறதில்லையா? ஸ்வேதாவ அனுகிட்ட டியூஷன் போக சொல்லுறேன்…”

“அய்யா சாமி.. என் பொண்டாட்டி நல்லா இருக்கா.. அனு கூட சேர்ந்துஅவளும் கெட்டு குட்டி சுவரா போகவா…”

சமையல் அறையில் இருந்து இதை கேட்ட அனு வேகமாக வந்து தன் அண்ணனை அடிக்க

“அம்மா வலிக்குது விடுடி.. லட்டு தின்னு தின்னு மாடு மாதிரி ஆகிட்ட…” என்று கூறி மேலும் சில அடிகளை பெற்றுக் கொண்டான்… இப்படியே சந்தோசமாக மாலை வரை இருந்தார்கள்… இன்று தங்கள் வீட்டிலே தங்கிக் கொள்கிறோம் என்று அஜய் கூறியதால் இரவு உணவை முடித்துக் கொண்டு நால்வரும் வீடு திரும்பினர்..

 

Advertisement