Advertisement

காதல் செய்வேன் கட்டளைப்படி…

காதல் 9

அகல்யாவின் கை விரலில் கவின் மோதிரத்தை போட வெட்கத்துடனும் சந்தோஷத்துடனும் கையை நீட்டிக் கொண்டிருந்தாள் அகல்யா..

ஆம்.. இன்று இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம்.. அன்று அகல்யாவை ஹாஸ்டலில் சந்தித்தப் பின்பு, கவினுடைய எந்த அழைப்பையும் அவள் ஏற்கவில்லை.. காய்ச்சலும் விடாது அடித்துக் கொண்டிருக்க, அகல்யாவின் தாய் மதுரையில் இருந்து வந்து மகளை தன்னுடன் ஊருக்கு அழைத்துச் சென்றார்..

ஒரு வாரம் சென்ற பின்பே அவளிற்கு காய்ச்சல் விட்டது.. பத்து நாட்கள் விடுமுறைக்குப் பின் அன்று அவள் அலுவலகம் சென்ற போதும் சரி அதற்கு பிறகு கவின் அவளிடம் பலமுறை பேச வந்த போதும் சரி, அவனின் முகத்தைக் கூட அவள் நிமிர்ந்து பார்க்கவில்லை..

குகாவின் மூலம் தூது விட்டுப் பார்த்தான். அதற்கும் பயனில்லாமல் போகவே, வீட்டில் தங்கள் காதலைப் பற்றி மெதுவாக தாயிடம் கூறினான்.. மகனின் காதல் கவினின் தாய்க்கு அதிர்ச்சியாக இருந்தது.. அவன் நினைத்தது போல் அவர் அவனை கேள்வி எதுவும் கேட்கவில்லை..

யோசித்துவிட்டு சொல்வதாக கூறியவர், இரண்டு தினங்கள் சென்ற பின்,

“தங்கச்சிக்கு முடிச்சிட்டு, அந்த பொண்ணு வீட்ல பேசுவோமா?” என

கவின், அகல்யாவின் வீட்டு சூழ்நிலையை சொன்னான்..

“சும்மா ரெண்டு பேர் வீட்டுலையும் சொல்லி மட்டும் வெச்சிப்போம் மா.. தங்கச்சிக்கு முடிக்காம நான் செய்ய மாட்டேன்..” அவன் உறுதியான பதிலில், அவருக்கும் மறுப்பு சொல்ல முடியவில்லை..

எங்கே முடியாது என்று கூறினால், காதலித்த பெண்ணோடு தனியாக சென்றுவிடுவானோ, அவன் அப்படி சென்றுவிட்டால் பெண்ணை எப்படி கரை சேர்ப்பது என்கிற பயமும் அவரை சரி என்று சொல்ல வைத்தது..

இந்த விஷயத்தை அகல்யாவிடம் கூறியவன் அவள் பதிலை எதிர்பார்த்து காத்திருக்க, அவள் ஒன்றும் கூறாமல் சென்று விட்டாள்..

மறுபடியும் அவன் குகாவின் மூலம் தூது போக வேண்டியதாக இருந்தது..

“எங்க வீட்டுல பேசி இப்போ நான் ஓகே வாங்கிட்டேன்.. உங்க ப்ரெண்ட் இப்படி பண்றா? நீங்களாச்சும் அவகிட்ட சொல்லக் கூடாதா?”என

குகா பேசி பேசி அகல்யாவை சமாதானம் செய்து, அவள் வீட்டில் விஷயத்தை சொல்ல வைத்தாள்.. அகல்யாவின் தாய்க்கு தான் பெருத்த அதிர்ச்சி, தன் மகள் காதலிக்கிறாளா? அதை அவரால் நம்பவே முடியவில்லை..

போனில் அகல்யா விவரம் கூறியதும் திட்ட ஆரம்பித்தவர் நிச்சயம் முடியும் வரையிலுமே அடிக்கடி குத்தி காட்டிக் கொண்டே இருந்தார்..

கவின் அவன் தாயுடனும், பெரியவர்கள் இருவருடனும் வந்து அகல்யாவை பெண் கேட்டான்.. தங்கையின் திருமணம் முடிந்த உடனே தங்களின் திருமணத்தை முடிக்கலாம் என்று அவன் கூற, அகல்யாவின் அம்மா, முன்னமே கணவரிடம் இதைப் பற்றி பேசியிருந்தார்..

அகல்யாவும், கவினின் வீட்டுச் சூழ்நிலையைப் பற்றி முன்பே கூறியிருந்ததால், “நிச்சயம் மட்டுமாச்சும் இப்போ வெச்சுக்கலாம்ன்னு கேட்டுப் பார்ப்போம்”

அதன் படியே அகல்யாவின் தந்தைக் கேட்க, பெரிதாக இல்லாமல் இருவீட்டினர் மட்டுமே சூழ  நிச்சயம் வைத்திருந்தனர்..

தலை தீபாவளிக்கு என்று மாறனும் குகாவும் மதுரைக்கு வந்திருந்தனர்.. தீபாவளி முடிந்த இரண்டு நாளில் நிச்சயம்.. நிச்சயத்தை சிம்பிளாக வைத்திருந்ததால் குகாவின் வீட்டினருக்கு அழைப்பில்லை.. திருமணத்திற்கு முன்தினம் பெரிதாக நிச்சயம் செய்து கொள்ளலாம் என்றுவிட்டனர்..  அன்று மாலை தோழியை சந்திக்க அவள் வீட்டிற்கு சென்றாள் குகா..

“ஹாய் அத்தை.. ஹாய் மச்சான்..” என்று குரல் கொடுத்துக் கொண்டே அவர்கள் அருகில் சென்று அமர்ந்தாள் குகா..

“வாடிமா வா.. இப்போ தான் புது பொண்ணுக்கு நாங்களெல்லாம் கண்ணுக்கு தெரியுறோமா? வந்து இரண்டு நாள் ஆச்சு.. இன்னைக்கு தான் இங்க வர்ற?” என்று அகல்யாவின் தாய் குகாவுடன் சண்டைக்கு வர,

“மகளுக்கு நிச்சயம் வெச்சவுங்க, எங்களை கூப்பிட்டீங்களா? நியாயப்படி இந்த வீட்டு வாசலை நான் மிதிக்கக் கூடாது.. ஏதோ என் மச்சானோட அம்மாவா போயிட்டீங்கன்னு பார்க்க வந்தா ரொம்ப பேசுறீங்களே?”

“சும்மாவே வாய் எட்டூருக்கு நீளும்.. இப்போ கல்யாணம் ஆனதும் ரொம்ப பேசுற நீ..” என்றவர் அவளிற்கு குடிக்க கொடுக்க சமையல் அறைக்குச் சென்றார்..

“எங்க உங்க வீட்டு புதுப் பொண்ணு.. கண்ணுலையே காணோம்..” அகல்யாவின் தம்பியிடம் கேட்க

“கழுத கெட்டா குட்டிச் சுவர்.. போன் பேசிக்கிட்டு இருக்கா..” என்றான்..

“பாருடா.. அவ ரூம்ல தான் இருக்காளா?” என்று கேட்டுவிட்டு, அகல்யாவின் அறைக்குச் சென்றாள்..

பல நாட்களுக்குப் பின்பு இன்று தான் அவள் கவினுடன் பேசுகிறாள்.. இருவருக்கும் பேச நிறையவே விஷயங்கள் இருந்தது.. கோபத்தில் இருந்தவளை மலை இறக்குவதற்குள் கவினிற்கு போதும் போதும் என்றானது..

இரு வீட்டிலும் பேசி சம்மதம் வாங்கிய பின்பு இவளிடம் பேசினால்

“எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லை.. நிறுத்துங்க..” என்றாள்

“அகல்.. விளையாடாத.. நம்ம வீட்டுல பேசி ஓகே வாங்குறதுகுள்ள போதும் போதும்னு ஆகிடுச்சி.. இப்போ இப்படி பேசுற?”

“நான் உங்களை பேச சொல்லலை..” முகத்தை தூக்கிக்கொண்டு அவள் கூற

“ரிவன்ஜா.. ப்ளீஸ் மா.. விட்டு்டு..”

“செல்பிஷ், ஜெல்லிபிஷ்ன்னு என்னலாம் பேசுனீங்க.. இப்போ எந்த முகத்தை வெச்சிக்கிட்டு பேசுறீங்க.. போங்க..” என்றவளின் கண்களில் கண்ணீர்..

“சாரிமா.. எல்லாமே கோபத்துல சொன்னது.. மனசுல இருந்து எதுவும் சொல்லலை..” காலில் விழாத குறையாக கெஞ்சிய பின்பே, போனால் போகிறதென்று அவனை மன்னித்தாள்.

அறைக்குள் நுழைந்த குகா,  

“ஹே போதும் போதும்.. அப்புறமா உன் ஆள்கிட்ட பேசிக்க.. வெளியே வா..” என

“அஞ்சு நிமிஷம் டி.. வந்துடுறேன்..ப்ளீஸ்” என்று கெஞ்சினாள் அகல்யா..

“அஞ்சு நிமிஷத்துல வரலை.. போனை தூக்கிப் போட்டு உடைச்சிடுவேன்..” என்று மிரட்டி விட்டு, ஹாலில் சென்று அமர்ந்தாள்..

மூவரும் பேசிக் கொண்டே நொறுக்கு தீனிகளை தின்று கொண்டிருந்தனர்..

“நான் அன்னைக்கே சொன்னேன் நியாபகம் இருக்கா டார்லிங்.. இவ ரொம்ப மேக் அப் போடுறா, யாரையாச்சும் சென்னைல கரெக்ட் செஞ்சிருப்பான்னு.. பார்த்தியா அது உண்மை ஆகிடுச்சி..” அகல்யாவின் தம்பி கூற

“நீ யாருடா cid ஷங்கர் ஆச்சே..” குகாவும் அவனிற்கு ஒத்து ஊத, அந்த நேரம் சரியாக அகல்யாவும் அவர்கள் அருகில் வந்தாள்.

“மேக் அப் போட்டா, லவ் பண்றாங்கன்னு அர்த்தமா? நீ தான் லூசு மாதிரி பேசுற, இவளும் உன்னோடு சேர்ந்துகிட்டு பேசுறா..” என்று இருவரின் முதுகிலும் லேசாக அடித்தாள்.

“உண்மையை தான் சொல்லுறேன்.. நீயும் சரி, ரோஹிணி அக்காவும் சரி மேக் அப் ரொம்ப தானே போடுவீங்க.. கரெக்டா ரெண்டு பேருக்குமே லவ் மேரேஜ்.. என் பட்டுவைப் பாரு மேக் அப்பே போட மாட்டா, அதான் அவ அரேன்ஜ்ட் மேரேஜ் செஞ்சிருக்கா..” என்று அவன் புது விளக்கம் கொடுக்க, அகல்யா

“போடாங்க.. எதாச்சும் சொல்லிட போறேன். சென்னை வந்து பாரு எல்லாம் எப்படி மேக் அப் போடுதுங்கன்னு, நான் பவுடர் லிப் க்லாஸ் போடுறதை மேக் அப்புன்னு சொல்றியா? நானும் பார்க்க தானே போறேன்.. உனக்கு வரவ எப்படி பேய் மாதிரி மூஞ்சில எல்லாத்தையும் அள்ளி அப்புறான்னு..” என்றாள்..

“ஆமா.. அவ எந்த ஊர்ல இருக்காளோ..” என்று புலம்பியவன் “ஏன்டி, லவ் பண்ணது தான் பண்ண, என் வயசுக்கு ஏத்த பொண்ணு இருக்கிற வீட்டுப் பையனை லவ் பண்ணிருக்கலாம்ல.. ஒரே கல்லுல ரெண்டு மாங்காய் அடிச்சிருக்கலாம்.. எல்லாம் போச்சு..” அவன் வருத்தப்பட

“அமுக்குனி மாதிரி இருந்துட்டு உங்க அக்காவே இம்புட்டு வேலை செய்யும் போது, நீ இதுக்கும் மேலையே செய்வ..”  மகளுக்கும் மகனிற்கும் சேர்த்தே அவர் கொட்டு வைக்க..

“ப்ச் விடுங்கத்தை.. இன்னும் அவளை திட்டிகிட்டே இருக்கீங்க.. அதான் எல்லாம் நல்ல படியா முடிஞ்சிதுல.. கவினும் நல்ல பையனா தானே இருக்கார்..” குகா சப்போர்ட்டுக்கு வர

“உன்னைத் தான்டி முதல வெளுக்கணும்.. உன்னை நம்பி தானே அவளை உன்னோட சென்னைக்கு அனுப்பினேன்.. அவ காதலிக்கிற வரை நீ வேடிக்கை பார்த்துட்டு இருந்தியாக்கும்..”

“ஆத்தா என்னை விடுங்க.. உங்க மகளை எனக்கு யாருன்னே தெரியாது..” அவள் அலற,

“ஆமா ஆமா உனக்கு தெரியாது..” என்றவர்

“நாளைக்கு மதியம் மறந்திடாம மாப்பிள்ளையை கூட்டிட்டு இங்க விருந்துக்கு வந்துரு.” என்றார்..

“சாப்பாடுன்னு சொன்னாலே இவ வந்துடுவா மா..” அகல்யா கூற, குகாவும் அவளும் சண்டைப் போட்டு கொண்டிருந்தனர்..

இருவரும் இப்படியே பேசிக் கொண்டிருக்க,

“அழுது ஆர்பாட்டம் செஞ்சு, கவினோட சண்டை போட்டு, காரியத்தை சாதிச்சிட்ட.. கேடி டி நீ..”

“இந்த ஆம்பிளைங்களே இப்படி தான்.. நம்ம கெஞ்சுனா காதுலையே வாங்க மாட்டாங்க.. சரி தான் போங்கடான்னு நம்ம விலகி போயிட்டோம்.. நம்ம பின்னாடி கெஞ்சிட்டு திரிவாங்க.. இதெல்லாம் ட்ரிக் கத்துக்க பின்னாடி யூஸ் ஆகும்..” அகல்யா கூற,

“ச்சீ.. இதெல்லாம் தப்பு.. நம்ம சொல்றது சரியா இருந்தா அவங்களே அக்சப்ட் செஞ்சுப்பாங்க.. அதுக்காக இந்த மாதிரி ட்ரிக்ஸ் எல்லாம் யூஸ் பண்ணக் கூடாது..” என்று அறிவுரை பொழிய

“நீ உன் சொற்பொழிவை நிறுத்துரியா? நானும் தான் கவின் கிட்ட என்னோட பாயின்ட்ட சொன்னேன்.. அவர் அப்போ எல்லாம் என்கூட எப்படி சண்டை போட்டார்.. நான் திரும்ப சண்டை போட்டதும் தான், என்னோட நிலைமையை அவர் புரிஞ்சிக்கிட்டார்.. நானும் சண்டை போடாம அவர் சொல்லுறதுக்கெல்லாம் மண்டையை ஆட்டிக் கிட்டு இருந்தா இன்னைக்கு எங்க என்கேஜ்மெண்ட் நடந்தே இருக்காது..” என்றதும் குகாவும் அதை ஒத்துக் கொண்டாள்..

சிறிது நேரம் தோழியுடன் பேசிவிட்டு அவள் வீட்டிற்கு வர, சீதா மட்டும் சமையலறையில் இருந்தார்.. மற்றவர்களை வீட்டில் காணவில்லை.. தாயின் அருகே சென்றவள்

“எங்கமா எல்லாரும்.. ஆளையே காணோம்.. நீங்க மட்டும் தான் இருக்கீங்க..” என

“நீ உன் ப்ரெண்டைப் பார்க்க போறேன்னு மாப்பிள்ளையை தனியா விட்டுட்டு போயிட்ட.. பாவம் உங்க அப்பாவோட ரம்பத்துல மாட்டிகிட்டு முழிச்சிட்டு இருந்தார்.. அப்புறம் தம்பி வந்ததும் அவனோட வெளியே கிளம்பிட்டார்..”

“நான் அவரை அகல்யா வீட்டுக்கு கூப்பிட்டேன் மா.. அவர் தான் மாமா கூட பேசவே இல்லை.. பேசிட்டு இருக்கேன்.. நீ போன்னு சொன்னார்.. அதனால் தான் போனேன்.. அதுவுமில்லாம, நம்ம அப்பாவை விட உங்க மாப்பிள்ளை பெரிய ரம்பம்.. அப்பா தான் இவர் போட்ட மொக்கைல பயந்து ஓடிருப்பார்..” என்றாள் சிரித்துக் கொண்டே.

“வாய் தான் உனக்கு..” என்றவர் “இந்தா இதையெல்லாம் நறுக்கு.. சப்பாத்தி மாவை பெசஞ்சிட்டு வரேன்” என்று அவளிடம் கத்தியையும் காயையும் அவர் கொடுக்க

“வீட்டுக்கு வந்த பொண்ணுகிட்ட இப்படி வேலை வாங்குறீங்களே..” என்று புலம்பியவாறே காயை நறுக்கினாள்..

“அங்க எல்லா வேலையும் ஒழுங்கா பாக்குறியா? நாங்க இன்னும் சென்னை வந்து நீ குடும்பம் நடத்துற லட்சணத்தைப் பார்க்கலை.. பார்த்தா தான் தெரியும்”

“ஏன் பேச மாட்டீங்க.. எல்லா வேலையும் செஞ்சிட்டு நான் ஆபிசுக்கும் போயிட்டு வரேன்.. என்னைப் பார்த்தா உங்களுக்கு எப்படி தான் இருக்குமோ..”

பேசிக் கொண்டே சப்பாத்தி குருமா இரண்டையும் செய்து முடித்திருந்தனர்..

“எங்கமா போனாங்க.. இன்னும் வரலை..” மணியை பார்த்துவிட்டு குகா கேட்க

“தெரியலை.. தம்பி வந்ததும்  வெளியே போவோமான்னு மாப்பிள்ளையை கேட்டான்.. அவரும் கூட போனார்.. எங்கன்னு சொல்லலை.. சரி அவங்க வரட்டும்.. உனக்கு நம்ம கடைல இருந்து சுடிதார், ஸ்கர்ட் எல்லாம் எடுத்து வெச்சேன்.. பேக்ல இருக்கு.. அதெல்லாம் வந்து பாரு.. பிடிக்காட்டி வேற எடுக்கணும்..” என்றவர் மகளை அறைக்கு அழைத்துச் சென்று காட்டினார்..

“ஏன்மா இவ்வளவு ட்ரெஸ்ஸை எடுத்து வெச்சிருக்கீங்க.. அப்பா தீபாவளிக்கு வாங்குன சரக்குல பாதியை எனக்கு எடுத்து வெச்சிட்டீங்களா?”

“அப்போ பாதியை எடுத்துடவா?” சீதா கேட்க

“அதெல்லாம் முடியாது.. கொடுத்தது கொடுத்தது தான்.. திருப்பித் தரப் பட மாட்டாது..” என்றாள் சிரித்துக் கொண்டே

“மாப்பிள்ளையோடதையும் இதுலையே வெச்சிடுரியா? இடம் இருக்கு தானே..” என

“அவருக்கு எதுக்குமா சட்டை எடுத்து வெச்சிருக்கீங்க.. நான் இந்த வீட்டுப் பொண்ணு, எனக்கு கொடுக்கலாம்.. அவருக்கு எதுக்கு கொடுக்குறீங்க.. அப்புறம் அவர் இனிமே துணி கடைப் பக்கமே போகாம மாமனார் கடைலயே ஓசியா எடுத்துக்கலாம்னு நினைச்சிப்பார்..”

“நீ இந்த வீட்டுப் பொண்ணுனா, உன் புருஷன் இந்த வீட்டு மாப்பிள்ளைடி.. உன்னை விட இனிமே அவர் தான் எங்களுக்கு ரொம்ப முக்கியம்..”

“என்னை விட அவர் முக்கியமா போயிட்டாரா? பார்த்துக்குறேன் உங்களை..” என்றவள் கணவனிற்கு கொடுத்த உடைகளையும் அதே பெட்டியில் அடுக்கினாள்..

சிறிது நேரத்தில் ஆண்கள் மூவரும் வந்ததும், உணவை முடித்துக் கொண்டு தங்கள் அறைக்குச் சென்றனர்..

மறுநாள் இரவு ட்ரைனில் மாறன் குகா இருவரும் புறப்பட, புதிதாக இன்னொரு பெட்டியை மனைவி தூக்கிக்கொண்டு வருவதைப் பார்த்த மாறன்

“நம்ம ஒரு ட்ராலி தானே கொண்டு வந்தோம்.. இப்போ என்ன புதுசா இன்னொண்ண தூக்கிட்டு வர..” என

அவள் விவரம் கூறவும், மாமனாரிடம் “எதுக்கு மாமா இதெல்லாம்..” என்றான்

“இருக்கட்டும் மாப்பிள்ளை.. உங்க ரெண்டு பேருக்கும் செய்யாம நாங்க யாருக்கு செய்யப் போறோம்..” சீதாவை போலே ராஜனும் கூற, மாறன் எதுவும் கூறாமல் லேசாக சிரித்தான்..

பின் இருவரும் சென்னை வந்ததும் அவர்கள் இயல்பு வாழ்க்கை திரும்பியது.. அவரவர் வேலைகளில் இருவரும் பிசியாக இருந்தனர்.. அன்று காலை இருவரும் பரபரப்பாக வேலைக்கு கிளம்பிக் கொண்டிருந்தனர்..

“குகா.. என் பைலை எடுத்தியா?” தனது அலுவலக அறையில் வைத்திருந்த பைலைக் காணாமல் மாறன் உள்ளிருந்து குரல் கொடுக்க

“எந்த பைல்.. உங்க ரூம் புல்லா பைல் தான் இருக்கு..” என்றவாறே சமையல் அறையில் இருந்து மாறனின் அலுவலக அறைக்குள் வந்தாள் குகா..

“நீ எந்த கேசை டிராப் பண்ண சொன்னியோ அந்த கேஸ் பைல்.” அவளை முறைத்துக் கொண்டே கூறினான்..

“நான் உங்க ரூம் பக்கம் கூட வரலை.. நல்லா தேடுங்க..” என்றவள் “என்ன கலர்ன்னு சொல்லுங்க நானும் தேடுறேன்..” என

“உன்னை எல்லாம் நம்பி கலரை சொல்ல முடியாது.. கண்டுபிடிக்கிற மாதிரி அந்த பைலை எடுத்துட்டு அதுல இருக்க முக்கியமான பேப்பர்ஸ தூக்கிப் போட்டுடுவ”

“உன் புத்தி உன்னை மாதிரியே தான் இருக்கும்.. நீயே தேடிக்கோ..” என்றவள் உணவை தயார் செய்யச் சென்றாள்.

பத்து நிமிடமாக தேடி ஒரு வழியாக அந்த கோப்பை கண்டுப்பிடித்து எடுத்திருந்தான் மாறன்.. இவன் குளிக்க பாத்ரூமிற்கு செல்ல அங்கே குகா குளித்துக் கொண்டிருந்தாள்.

“ஹே யாரைக் கேட்டு நீ உள்ள போன? இப்போ உனக்கு என்ன அவசரம்? எனக்கு லேட் ஆகுதுடி.. நான் கோர்ட்டுக்கு கிளம்பின பிறகு நீ போக வேண்டியது தானே..” இவன் கத்த

“வந்துட்டேன்.. கத்தாதிங்க ..” என்று கணவனை முறைத்தவள்

“உங்க  ரூம் ப்ரீயா தானே இருக்கு.. அங்க குளிக்க வேண்டியது தானே.. எனக்கும் தானே ஆபிசுக்கு லேட் ஆகுது.. சும்மா சும்மா இப்போ எல்லாம் நீ சண்டை போடுற..” திட்டிக் கொண்டே கண்ணாடி முன் அமர்ந்து தலை வாரினாள்.

“ஆமா எனக்கு வேண்டுதல் உன்னை திட்டணும்னு. போடி..” என்றவன் பாத்ரூமினுள் சென்றான்.

“வர வர இவன் ரொம்ப பண்றான்.. இடியட்..”

அவன் ரெடி ஆகி வந்ததும் தோசையை அவனின் தட்டில் வைத்தாள்..

“உனக்கு?” அவன் அவளை கேள்வியாக ஏறிட

“பசிக்கலை.. ஆபிஸ்ல பார்த்துக்கிறேன்..”

“அதெப்படி பசிக்காம போகும். காலைல இருந்து வேலை செஞ்சிட்டு இருக்க.. ஒரு தோசை ஆச்சும் சாப்பிடு..” என்றவன் அவன் தட்டில் இருந்து அவளிற்கு ஊட்டி விட்டான்.. இரண்டு வாய் வாங்கியவள்

“போதும்.. எனக்கு ஸ்டொமக் அப்சட்டா இருக்கு.. வாமிடிங் சென்சேஷன் வேற..” எனவும்

“பீரியட்ஸ் டேட்டா?” என்றான்

“ஆமா.. பட் இன்னும் வரலை.. நீங்க சாப்பிடுங்க..” என்றவள் இருவருக்கும் லஞ்ச் பேக் செய்தாள்.

ப்ரேக்பாஸ்ட்டை முடித்தவன் குட்டி பாட்டிலில் தயிர் வெந்தயம் போட்டு மனைவியின் கையில் கொடுத்தான்..

“மறக்காம குடி.. ரொம்ப முடியலைனா கால் பண்ணு.. லாஸ்ட் டைம் மாதிரி மயங்கிடாதே..”

போன முறை மாதவிலக்கின் பொழுது ஆபிசிலேயே உடம்பு முடியாமல் மயங்கி விழுந்திருந்தாள்..  பின்பு அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மாறனுக்கு தகவல் கொடுத்து என்று அனைவரையும் பயத்தில் ஆழ்த்தியிருந்தாள்.. அதை தான் இப்பொழுது மாறன் குறிப்பிட்டான்.

“அக்கறைக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல..” அவள் முணுமுணுக்க

“வேற எதுல குறைஞ்சிட்டாங்களாம்?” குகாவை தன் புறம் இழுத்து கேட்க

“எல்லாமே குறைஞ்சிடுச்சு..”என்றாள் அவன் முகத்தைப் பார்க்காமல்

“என் முகத்தைப் பார்த்து சொல்லு..” என்றவன் அவள் முகத்தை தன் புறம் திருப்ப

“போயா..” என்றவள் அவன் மீது சாய்ந்து கொண்டாள். அவளை அணைத்தவாறே

“என் பொண்டாட்டிய தனியா விட்டுட்டு எங்கயும் போக மாட்டேன்..” என்றான்.

“போதும் போதும். கிளம்புங்க.. அப்புறம் என்னால தான் லேட் ஆச்சுன்னு சொல்லுவீங்க.” என்றவள் அவனை விட்டு விலகினாள்.

“ஆமாடி பேசி பேசியே என் டைம வேஸ்ட் செஞ்சிட்ட..” என்றதும் அவனை அடித்தவள்

“இனிமே பொண்டாட்டி, போண்டா டீன்னு வா.. அப்போ இருக்குடா உனக்கு..” என்றாள்.

“நான் எல்லாம் வர மாட்டேன்பா..” என்றவன் மனைவியிடம் விடைபெற்று கிளம்பினான்..

                            ******************

“குகா.. ஒரு வேலை கொடுத்தா ஒழுங்கா செய்யுங்க.. முடியலையா வீட்ல உட்கார்ந்து புருஷனை கவனிச்சிக்கோங்க.. சும்மா வந்து எங்க உயிரை வாங்க வேண்டியது.. இதோட ரெண்டு தடவை திருத்த சொல்லிட்டேன்.. கெட் அவுட்..” மேலதிகாரியிடம் நன்றாக திட்டு வாங்கிவிட்டு கண்களின் ஓரம் துளிர்த்த நீருடன் தனது இடத்திற்கு வந்த குகாவிற்கு வேலை ஓடவே இல்லை..

எந்த இடத்தில் தவறு செய்தோம் என்று அவளால் கண்டுப் பிடிக்கவே முடியவில்லை.. இரண்டு முறை முயற்சி செய்தும் எரர் காட்டிக் கொண்டே இருந்தது.. தலைவலி மண்டையைப் பிளக்க, காலையில் உண்ணாதது வேறு வயிற்றில் வலியைக் கொடுத்தது..

இன்னும் சிறிது நேரத்தில் இதை செய்து கொடுக்காமல் விட்டால் tl லிடம் அதிகம் பேச்சு வாங்க வேண்டி இருக்கும்.. அதற்காகவே முயன்று சிஸ்டமை பார்த்துக் கொண்டிருந்தாள்.

“மார்னிங்கே அந்த லூசு சொன்னான்.. மயங்கிடாதேன்னு.. தலைவேற ரொம்ப சுத்துது.. இப்போ நான் faint ஆனேன்.. மாசம் மாசம் இந்த பொண்ணுக்கு இதே வேலைன்னு ஆபிசே நினைச்சிடும்.. குகா கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணு..” என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டவளிற்கு வாந்தி வரும் போல் இருந்தது.. ரெஸ்ட்ரூமில் மயங்கி விடுவோமோ என்கிற பயத்தில் அகல்யாவிற்கு அழைத்தாள்.

“அகல் ரெஸ்ட்ரூமுக்கு வாயேன்.” என்று சொல்லிவிட்டு வேகமாக ரெஸ்ட்ரூமிற்கு சென்றவள் வயிற்றைப் பிடித்துக் கொண்டு வாந்தி எடுத்தாள்..

நிற்க முடியாமல் கால்கள் தள்ளாட, தரையில் அமர்ந்துவிட்டாள்.. ஐந்து நிமிடத்திற்கு பிறகே அகல்யா அங்கே வர குகா தரையில் அமர்ந்து சுவற்றில் சாய்ந்திருப்பதை பார்த்துவிட்டு பதறிக் கொண்டு

“குகா.. என்னாச்சு.. பிரியட்ஸா?” அவளின் தலையை நிமிர்த்திக் கேட்க “இல்லை” என்று தலையை ஆட்டியவள் மீண்டும் சுவற்றில் சாய்ந்து கொண்டாள்

“அப்புறம் என்னாச்சு? உடம்பு சரியில்லையா? எழுந்திரி..” என்றவள் அவளைத் தூக்கிப் பிடித்தாள்.

“பீவர் கூட இல்லையேடி.. உடம்புக்கு என்ன?” அகல்யாவின் கேள்விக்கு அவளால் பதில் சொல்ல முடியவில்லை.. நிற்க முடியாமல் நின்றவளை அகல்யாவாலும் தாங்க முடியவில்லை..

“இருடி. என்னால உன்னைப் பிடிக்க முடியலை.. யாரையாச்சும் கூப்பிட்டு வரேன்..” என்று அவள் செல்லப் போக, அவள் கையைப் பிடித்தவள்

“நான் கன்சீவா இருக்கேன்னு நினைக்கிறேன்..” என்றாள்.

“என்ன?” என்று ஒரு நிமிடம் அதிர்ந்தவள், பின் சந்தோசமாக தோழியை அணைத்துக் கொண்டாள்.

“கங்க்ராட்ஸ்டி செல்லம்..” என்று வாழ்த்த

“கன்பார்மா தெரியலை.. பிரியட்ஸ் டைம்லயும் எனக்கு இப்படி தான் ஆகும்.. பட் பத்து நாள் தள்ளிப் போயிருக்கு.. டவுட்டா இருக்கு..” மெல்ல மெல்ல அவள் கூற

“அப்போ வா.. ஹாஸ்பிடல் போய் செக் செஞ்சிட்டு வருவோம்..”

“கோடிங் முடிக்கணும்.. என் tl கிட்ட இப்போ தான் திட்டு வாங்கிட்டு வந்தேன்.”

“சீக்கிரம் முடிச்சிட்டு பெர்மிசன் போடு..”

“ம்” என்றவளை, அழைத்துக் கொண்டு ஜூசை குடிக்க வைத்து அவள் இருக்கைக்கு அனுப்பி வைத்தாள்.

அந்த எரரை கிளியர் செய்யவே குகாவிற்கு மாலை வரை நேரம் சரியாக இருந்தது.. தலைவலியோடு எப்படியோ அதை சரி செய்தவள், மீண்டும் ஜூசை மட்டும் குடித்துவிட்டு அகல்யாவுடன் வெளியே வந்தாள்.

“எந்த ஹாஸ்பிடல் போகலாம்?” அகல்யா கேட்க

“இல்லை வேண்டாம்.. இன்னும் ரெண்டு நாள் பார்க்கலாம்.. ஒருவேளை நெகட்டிவா எதாச்சும் சொல்லிட்டாங்கன்னா என்னால தாங்க முடியாது..”

“போகுறதுக்கு முன்னாடியே நெகட்டிவா பேசாதே..” என்று அவளைக் கடிந்தவள்

“அட்லீஸ்ட் பிரெக்னன்சி கிட் வாங்கி செக் பண்ணு.” என்றதும் அதை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு சென்றாள்..

                             ****************

அடுத்த இரண்டு நாள் அவளிற்கு விடுமுறை.. மாறன் கேஸ் விஷயமாக அலைந்து கொண்டிருந்ததால் மனைவியின் உடல்நிலை அவனிற்கு சரியாக தெரியவில்லை.

ஞாயிறு அன்று வெளியே சென்றவன் மாலை ஆகியும் வரவில்லை.. அன்று காலையில் இருந்தே குகாவிற்கு உமட்டல் அதிகமாக இருந்தது.. துணைக்கு ஆள் இல்லாமல் வாந்தி எடுப்பதும் தலை சுற்றிக் கீழேயே அமர்ந்து கொள்வதுமாக இருந்தாள்.. இரண்டு நாள் சென்றதும் பரிசோதிப்போம் என்று கிட்டை வைத்திருந்தாள். அதை வைத்து பரிசோதிக்க அவள் கர்ப்பமாக இருப்பது உறுதியானது.. கண்களில் ஆனந்த கண்ணீர் வழிய கணவனுக்காக காத்திருந்தாள்.

மாறன் வந்து கதவைத் தட்ட, சோர்ந்து போய் மெதுவாக நடந்து வந்தவள் கதவைத் திறந்துவிட்டு அவன் மேலேயே மயங்கினாள்..

“ஹே குகா..” என்று அவளைத் தாங்கிப் பிடித்தவன் அவள் கன்னம் தட்டி எழுப்ப, அவளிடம் லேசாக அசைவிருந்தது. கைத்தாங்கலாக கொண்டு வந்து சோபாவில் அமரவைத்தவன் தண்ணீரைக் கொண்டு வந்து அவள் முகத்தில் தெளித்தான்.

“தண்ணி குடி..”

“முடியலைன்னா கால் பண்ணுன்னு எத்தனை தடவை சொல்லிருக்கேன்.. அறிவே இருக்காது உனக்கு.. மாசம் மாசம் இப்படி மயங்கி விழற..”

“நான் நல்லா தான் இருக்கேன்..”

“கிழிச்ச.. இதுக்கு ட்ரீட்மெண்ட் எடுப்போம்ன்னு சொன்னாலும் கேட்க மாட்டேங்கிற..”

“அதெல்லாம் ஒரு வருஷத்துக்கு பின்னாடி எடுத்துக்கலாம்..”

“அதுவரைக்கும் இப்படியே கஷ்டப்படப் போறியா?” அவன் முறைக்க,

“ரொம்ப திட்டுற.. என் பையன் வந்து உன்னை மொத்துனா தான் சரிபடுவ.” என்றவள், அவன் கையை எடுத்து தனது வயிற்றில் வைத்து “நம்ம அம்மா அப்பா ஆகப் போறோம்” என்றாள்..

“ஹே..” என்றவன் அவளை இழுத்து அணைத்துக் கொண்டான்..

“எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு குகா.. எப்போ கன்பார்ம் பண்ண?” என்றதும் இரண்டு நாட்கள் முன்பு நடந்தது அனைத்தையும் சொன்னாள்..

“உனக்கு முன்னமே டவுட் இருந்ததா? என்கிட்ட நீ சொல்லவே இல்ல..” ஒற்றை புருவத்தை உயர்த்தி அவன் முறைத்த வண்ணம் கேட்டான்..

“சும்மா முறைச்சிகிட்டே இருக்காதே.. ஒருவேளை பேபி இல்லாம இருந்தா உன்கிட்ட சொல்லி உன்னோட ஆசையும் தூண்டி விட்ட மாதிரி ஆகிடும்னு தான் சொல்லலை..”

அவன் அமைதியாக அவளை பார்த்தவாறே இருக்க “யோவ் வக்கீலு நீ ரொம்ப பண்ற.. அப்பா ஆகப்போறேன்னு சொல்லுறேன்.. ஒரு கிஸ் இல்ல ஒரு ஹக் இல்ல.. எத்தனை தமிழ் படம் பார்த்திருக்க, பொண்டாட்டி கர்ப்பமா இருக்கான்னு சொன்னதும் புருஷன் அவளைத் தூக்கி சுத்துவான்.. நீ சுத்த தான் செய்யலை அட்லீஸ்ட் கிஸ் ஆச்சும் கொடுக்கலாம்ல.”

“ரெண்டு நாளா என்கிட்ட இருந்து மறைச்சதுக்கு இது தான் தண்டனை.. நோ கிஸ் நோ ஹக்..” என்றவன் சோபாவில் இருந்து எழ

“யோவ்.. உன்னைப் போய் கல்யாணம் செஞ்சிகிட்டேன் பாரு.. எனக்கு இது தேவை தான்..” என்றவள் “ரூமுக்காச்சும் தூக்கிட்டு போ.” என்று கைகளை விரித்து அவனை அழைக்க

“உன்னை எல்லாம் தூக்க முடியாது.. என் பேபியை மட்டும் தான் இனி தூக்குவேன்..” என்றவன் உள்ளே சென்று உடை மாற்றிவிட்டு வந்தான்.. அவன் வரும்வரையும் அதே இடத்தில் அமர்ந்திருந்தாள் குகா..

“என்ன உட்கார்ந்திருக்க.. காபி போடு போ.”

“பத்து நிமிஷம் முன்னாடி மயங்கி விழுந்தவளை வேலை வாங்குற.. கொடுமைக்காரா.. நான் எங்க அம்மா வீட்டுக்கு போறேன்.. இங்க தனியா கிடந்து சாவு..” கூறிக் கொண்டே எழுந்தவளை கைகளில் ஏந்திக் கொண்டான்.

“இப்போ எதுக்குடா தூக்குன? உன் பேபியை மட்டும் தானே தூக்குவேன் சொன்ன..”

“என் பேபியைத் தான் தூக்கிருக்கேன்.” அவன் தன்னைத் தான் சொல்கிறான் என்கிற நினைப்பில்

“சோ ஸ்வீட்டா புருஷா.” என்று அவன் கழுத்தில் தன் கைகளை கட்டிக் கொண்டாள்.

“உன்னை சொல்லலை.. உள்ள இருக்க என் பேபியை சொன்னேன்..” அவள் வயிற்றில் கைவைத்து சொல்ல, கழுத்தைக் கட்டியிருந்த கையினால் அவனை நெறித்தாள்.

“கொலைகாரி.. கொலைகாரி..” என்றவன் தங்கள் அறைக்கு அழைத்துச் சென்று அவள் கேட்ட முத்தத்தை மட்டும் அல்லாமல் தன்னையே கொடுத்தான்..

இருவீட்டிற்கும் விஷயத்தை சொல்ல பெரியவர்களுக்கு  சந்தோஷம் தாங்க முடியவில்லை.. சித்ரா இரண்டு நாளில் மருமகளைப் பார்க்க வருவதாக கூறினார்..

மறுநாள் காலை தூக்கத்தில் இருந்து எழுந்து கொள்ள மனமில்லாமல் படுத்திருந்தாள் குகா.. ப்ரஷ் செய்ததும் காபி குடிக்க வேண்டும் என்று தோன்றும்.. குடித்து சில நிமிடத்தில் அது வெளியே வந்துவிடும் என்பதால் எழுந்துகொள்ளவே அவளிற்கு பிடிக்கவில்லை..  எப்பொழுதுமே சமையலில் மாறன் குகாவிற்கு உதவி செய்வான் என்பதால் காய்களை வெட்டி வைத்தவன் மனைவியை எழுப்பினான்..

“டயர்டா இருக்குங்க..” என்றவள் அப்படியே படுத்திருக்க

“நான் சமைச்சிடுறேன்.. ஆபிஸ் போறியா இல்ல லீவ் போடுறியா?”

“ஐயோ வேலை இருக்கு.. கண்டிப்பா போகணும்..”

“சரி நீ கொஞ்ச நேரம் தூங்கு.. நான் குக் பண்ணிட்டு உன்னை எழுப்புறேன்..” என்றவன் காலை மதியம் இருவேளைக்குமான உணவினை செய்ய ஆரம்பித்தான்..

தினமும் ஒன்பது மணிக்கு வீட்டில் இருந்து குகா கிளம்புவாள்.. எட்டு மணி போல் மனைவியை எழுப்பியவன், அவள் புறப்பட்டு வந்ததும் இட்லியை அவளுக்கு கொடுத்தான்..

“ஈவ்னிங் கேப்ல வா.. ஸ்கூட்டி வேண்டாம். இப்போ நான் ட்ராப் பண்றேன்.” என்றவன் அவளை அலுவலகத்தில் இறக்கி விட்டான்.

 

 

Advertisement