Advertisement

காதல் செய்வேன் கட்டளைப்படி..

காதல் 3

“எனக்கு என்னமோ இந்த இடம் ரொம்பப் பிடிச்சுருக்குங்க.. ஒரே பையன் வேற.. சென்னைல இருக்கார்.. குகாக்கும் கல்யாணத்துக்கு அப்பறம்

வேலைக்குப் போக வசதியா இருக்கும்.. அவரோட அக்கா டெல்லில டாக்டரா இருக்காங்களாம் ” சீதா ராஜனிடம் கூற, அவர் அமைதியாகவே இருந்தார்..

“என்னங்க உங்களுக்கு இதுல விருப்பம் இல்லையா? ரோகிணி அம்மா அவ்வளவு தூரம் சொல்றாங்க நல்ல இடமா தான் இருக்கும்.. ஜாதகம் வாங்குவோமே..” மீண்டும் சீதா வற்புறுத்த

“சரி வாங்குவோம்.. நானும் தெரிஞ்சவங்கக் கிட்ட மாப்பிள்ளையோட குடும்பத்தைப் பத்தி விசாரிக்கிறேன்..”

“உங்களுக்குச் சம்மதம் தானே.. ரொம்ப யோசிச்சிங்க.. அதான் கேக்குறேன்.” அவர் தயங்கிக் கொண்டே கேட்க

“ரோகிணியோட கல்யாணத்துலப் பார்த்துட்டு திடீர்னு கேக்குறாங்கன்னு சொன்னதும் யார் என்னன்னு தெரியாம எப்படி முடிவெடுக்கிறதுன்னு தான்யோசிச்சேன்.. வேற ஒண்ணுமில்லை..”

அதன்பின் பெண் மாப்பிள்ளை இருவர் வீட்டிலுமே தனித் தனியாக ஜோசியரிடம் சென்று பார்த்துவிட்டுப் பொருத்தம் இருந்த பின்பு இரு குடும்பத்தைப்பற்றியும் விசாரித்து, திருப்தியாக இருக்கவே

போட்டோவை இரு குடும்பங்களும் பரிமாறிக் கொண்டனர்.. இதற்கே ஒரு மாதம் சென்றது..

“பையன் பார்க்க நல்லா இருக்கார்.. குகாக்கு பொருத்தமா இருப்பார்..” மாறனின் புகைப்படத்தைப் பார்த்ததும் சீதாவின் பதில் இவ்வாறு இருந்தது..

“குகாக்கு அனுப்பிவிடு.. அவ பிடிச்சுருக்குன்னு சொன்னா தான் அடுத்த முடிவை எடுக்கணும்.. நீ அவளை வற்புறுத்தக் கூடாது..” ராஜன் மனைவியிடம் கூற,

“என்னமோ நான் சொல்லுறதை தான் உங்க பொண்ணு கேட்கிற மாதிரி பேசக் கூடாது.. அவ விருப்பம் தான் எப்பவுமே.. அதுக்கு நம்ம ரெண்டு பேரும்பூம் பூம் மாடு மாதிரி தலையாட்டிகிட்டு இருக்கோம்.. இருந்தும் உங்களுக்கு ரொம்பதான் ஏத்தம்..” முணுமுணுத்தவாறே மகனிடம் போட்டோவை கொடுத்து மகளிற்கு அனுப்பச் சொன்னார்..

“நீங்க அவகிட்ட பேசிடுங்க.. நான் சொன்னா எதாச்சும் சொல்லுவா..” கூறியவர் மகளிற்கு அழைத்து லவுட் ஸ்பீக்கரில் போட்டுவிட்டுக் கணவனிடம் போனைக் கொடுத்தார்.

“எப்படிமா இருக்க?”

“நல்லா இருக்கேன் ப்பா.. நீங்க எப்படி இருக்கீங்க?”

“நல்லா இருக்கேன்டா.. சாப்டியா? வேலை எல்லாம் எப்படிப் போகுது?”

“ம் ஆச்சு ப்பா.. அது போகுது.. நீங்க எல்லாரும் என்ன பண்றீங்க?”

“ஹான் சும்மா தான்மாபேசிகிட்டு இருக்கோம்..” என்றவர் சற்று நேரம் பொதுவாகப் பேசிக் கொண்டிருந்தார்.. பின்பு “தம்பி உனக்கு ஒரு போட்டோஅனுப்பிருக்கான் பார்த்துட்டு பிடிச்சிருக்கான்னு சொல்லுமா..” என

“என்ன போட்டோபா?” என்றவள்ஹெட்போன் போட்டிருந்ததால் நெட்டை ஆன் செய்து கொண்டே கேட்டாள்..

“உனக்குப் பாத்திருக்க மாப்பிள்ளைமா..” என்றவர் பையனை பற்றிய விபரத்தைக் கூறினார்.. அவள் பதில் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்க

“என்னமா உனக்கு விருப்பம் இல்லையா? பையனை பிடிக்கலையா?” இவர் கேட்க, சீதா வேகமாக “அவ பதில் சொல்லுறதுக்கு முன்ன நீங்களே எதுக்குப்பிடிக்கலையான்னு கேக்குறீங்க?” கணவனைத் திட்டியவர் குகாவிடம்

“நல்லா யோசிச்சுட்டு முடிவெடு.. மாப்பிள்ளை சென்னைல்ல தான் இருக்கார்.. நேர்ல பார்க்க முடியுமான்னு கேட்டாராம், உனக்கு அவரோட பேசிட்டு முடிவெடுக்கலாம்ன்னு தோணுச்சுனா நீ எப்போ ப்ரீயா இருப்பன்னு சொல்லு.. பையன் வீட்ல பேசிட்டு நாங்க சொல்லுறோம்..” குகா அப்பொழுதும்அமைதியாக இருக்க

“என்ன எதாச்சும் பதில் சொல்லு?” சீதா கேட்க

“யோசிச்சுட்டு சொல்லுறேன் மா..” என்றவள் அழைப்பைத் துண்டித்தாள்..

போனை வைத்தவள் யோசனையில் இருக்க அகல்யாவும்ரோகிணியும் என்னவென்று கேட்க அனைத்தையும் கூறினாள்.. ரோகிணியின் கணவர் வேலைவிஷயமாக ஒரு வாரம் வெளி ஊர் சென்றிருப்பதால் வீட்டில் தனியாக இருப்பதற்குப் பதில் தோழிகளுடன் முன்பு தான் தங்கி இருந்த ஹாஸ்டலில்இருந்து கொள்வதாகக் கணவனிடம் கூறிவிட்டு இங்கே வந்திருந்தாள்.

“ஹே செமடி.. நல்ல விஷயம் தானே.. நம்ம கேங்ல அடுத்தக் குடும்ப இஸ்திரி ரெடி ஆகப் போறாங்க..”அகல்யா கிண்டல் செய்தாள்.

“சந்தோசமான விஷயம் தானே.. இந்த விஷயம் எனக்கு முன்னமே தெரியும்.. எதுவும் முடிவாக முன்ன உன்கிட்ட சொல்ல வேண்டாம்ன்னு தான்விட்டுட்டேன்.. அம்மா என்கிட்ட கேட்டுட்டு தான் உங்க அம்மா கிட்ட பேசுனாங்க..சாரிடி..” –‘ரோகிணி’

“நீ என்னடி பண்ணுவ லூசு இதுக்கு ஏன் சாரி சொல்லுற..”

“அப்பறம் என்னடி ஏன் மூஞ்சியை இப்படி வெச்சிருக்க?” அகல்யா கேட்க “பயமா இருக்குடி..”

“மேரேஜ்ல இன்டிரெஸ்ட் இல்லாத மாதிரியே பில்டப் கொடுக்குற.. எப்படா கல்யாணம் செஞ்சு வைப்பாங்கன்னு தானே அடிக்கடி சொல்லுவ.. இப்போ என்னடி?” அகல்யா சிரிப்புடன் கூறினாள்.

“அது பேசும் போது நல்லா தான் இருக்கு.. நிஜமாவே கல்யாணம் குடும்பம்ன்னு சொன்னா ஒரு மாதிரி இருக்கு.. கொஞ்சம் பயமா, டென்ஷனா இப்படி என்னவோ போல..”முகத்தை ஒரு மாதிரி வைத்துக் கொண்டு குகா கூற

“ஆஹான்.. குகாக்கு கூட வெட்கம் எல்லாம் வரும் போலையே.”

“நீ மூடு.. உன்கிட்ட போய்ச் சொன்னேன் பாரு என்னைச் சொல்லணும்.. உனக்கும்இப்படி ஒரு நாள் வரும்.. அன்னைக்கு என்கிட்ட தான்டிமவளே நீ வந்தாகணும்..”

“நாங்க எல்லாம் வேற லெவல்..” அகல்யா கூற

“தெரியும் தெரியும் உங்க லெவல்..”

“என்ன?” அகல்யா புரியாமல் விழிக்க

“ரொம்ப நடிக்க வேண்டாம்.. எனக்கு எல்லா விஷயமும் தெரியும்..”

“குகா..”

“நீயா சொல்லுவ சொல்லுவன்னு நானும் பார்க்கிறேன்.. நீ வாயவே திறக்க மாட்டுற.. ஒரு மாசமா என்கிட்ட இருந்து மறைக்கிற இல்லை.. இட்ஸ் ஓகே.. உன் பெர்சனல்..” என்றவள் அங்கிருந்து நகர

“என்னாச்சுடி?” ரோகிணி அகல்யாவிடம் கேட்டாள்..

“அது..” என்றவள் தயங்க, சரியாக அவளின் அலைப்பேசி அடித்தது.. கவின் தான் அழைத்தான்..

“போனை எடுடி..” ரோகிணி கூற

“இல்ல அப்பறம் பேசுறேன்..” என்றாள்.. மீண்டும் போன் அடிக்கவே ரோகிணி குழப்பமான முகத்துடனே அகல்யாவின் கையில் இருந்த அலைபேசியை வாங்கினாள்.. கை தெரியாமல் டச் ஆனதில் கால் கட்டாகி இருந்தது.. யார் அழைத்தார் என்று பார்ப்பதற்காக அவள் போனை ஓபன் செய்யப் பார்க்க அதில் புதிதாகப் பாஸ்வர்ட் போடப்பட்டிருந்தது..

“பாஸ்வார்ட் போட்டுருக்க.. என்ன புதுசா? இதுக்கு முன்ன நீ பாஸ்வர்ட் போட்டதில்லையே?”

“இதுக்கு முன்ன அவ சிங்கிள்.. இப்போ மிங்கிள் ஆகிட்டாளே சோ எல்லா ஆப்பும் லாக்ல தான் இருக்கும்..” குகா நக்கலாகக் கூற, ரோகிணிக்கு மேலும்மேலும் குழப்பமாக இருந்தது..

“என்ன குகா சொல்லுற? நம்ம அகல் மிங்கிள் ஆகிட்டாளா? யூ மீன் அவ லவ் பண்ணுறான்னு சொல்லுறியா?” என்றாள் அதிர்ச்சி விலகாமல்.

“நம்ம அகலா? யாரு அவங்களா? அது போன மாசம்.. இப்போ அவங்க வேற ஒருத்தரோட அகல்..” என்ற குகாவின் வார்த்தையில் குத்தல் அதிகமாகவே இருந்தது..

“என்னடி சொல்ற? எனக்கு ஒண்ணுமே புரியலை.. குழப்பமா இருக்கு.. எது சொல்றதா இருந்தாலும் தெளிவா சொல்லு..” நேரடியாக விஷயத்திற்கு வரமால் குகா சுற்றி வளைத்துப் பேசியதில் ரோகிணிக்குக் கடுப்பே வந்துவிட்டது.. அதை அவள் வார்த்தைகளிலும் காட்டினாள்.

“நான் சொல்ல என்ன இருக்கு? எதுவா இருந்தாலும் இனி அந்த மேடம் தான் சொல்லணும்.” என்று அகல்யாவைக் கைக்காட்டிவிட்டு மெத்தையில் தலையணையைச் சாய்வாக வைத்துக் கொண்டு கையில் புத்தகத்துடன் அமர்ந்துவிட்டாள்.

நடப்பது எதுவும் புரியாமல் இருவரையும் ஒருமுறை திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்த ரோகிணியும் அகல்யாவிடம் எதுவும் கேட்காது அவளின் மெத்தையில் சென்று அமர்ந்து கொண்டாள்.. அகல்யாவோ குனிந்த தலையை நிமிர்த்தாமல் வலது கையால் இடது கை விரலின் நகத்தைப் பிய்த்துக்கொண்டிருந்தாள்..

என்னவென்று அவர்களிடம் சொல்வது.. இவ்வளவு நாள் ஏன் மறைத்தாய் என்று கேட்டால் அப்பொழுது இந்த முகத்தை எங்கே வைத்துக் கொள்வது. ரோகிணியைச் சில வருடமாகத் தான் தெரியும்.. குகாவைப் பள்ளி முதலே தெரியும்.. இருவரும் கிட்டத்தட்ட பத்து வருடங்களாகத் தோழிகள். ug முடித்து pg entrance எழுதி ஒரே கல்லூரியை தேர்ந்தெடுத்து, விடுதியிலும் ஒரே அறை தான் வேண்டும் என்று ஹாஸ்டலிற்கு வந்த முதல் நாளே வார்டனுடன் வாக்குவாதம் செய்து ஒரே அறையை வாங்கினர்..மூன்று பேர் தங்கும் அறை இவர்களுக்குக் கொடுக்கப்பட்டது.. மூன்றாவது நபராக வந்தவள் தான் ரோகிணி..

அவளின் ug தோழிகள் வேறு கல்லூரிக்கு சென்றதால் இவள் தனியாக இங்கே வந்திருந்தாள்.. மூவர் இருக்கும் இடத்தில் ரோகிணியுடன் பேசாமல் எவ்வாறு இருப்பது? பொதுவான பேச்சுக்கள், கல்லூரிக்குச் செல்லும் போது அவளையும் உடன் அழைத்துச் செல்வது, உணவு உண்ண டைனிங் ஹாலிற்குச் செல்லும் போதும் தங்களுடனே அவளை வைத்துக் கொண்டனர்.. அப்படியே அவர்களின் நட்பு இறுகியது.. இப்பொழுது மூவரும் நெருங்கிய தோழிகள் ஆகினர்.. வேலையுமே இருவருக்கும் ஒரே கம்பெனியில் கிடைத்தது..

ரோகிணியின் மேல் இருவருக்கும் அன்பு அதிகமாக இருந்தாலும், அகல்யா குகாவிற்குமான பாண்டிங் மிகவும் இறுக்கமானது.. இருக்காதா பின்னே பத்து வருட நட்பு..

எத்தனை வருட நட்பாக இருந்தாலும் காதல் என்ற ஒன்று வந்தவுடன் நண்பர்களுக்குள் சற்று விரிசல் வந்துவிடுகிறது. அதே தான் இங்கும் நடந்தது..

பத்து நிமிடத்திற்கும் மேலாக அந்த அறையில் பேன் ஓடும் சத்தம் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது. உள்ளே குற்ற உணர்வு இருந்த போதிலும், தோழிகளிடம் தனது நிலையைச் சொல்ல வேண்டும் என்று எண்ணியவள், மெதுவாக கட்டிலில் இருந்து இறங்கி குகாவின் அருகில் சென்றாள்..

அவள் தனது அருகில் வந்ததை உணர்ந்தாலும் புத்தகத்தில் இருந்து பார்வையை விளக்கவில்லை குகா..

“குகா” என்றாள் மெல்ல

“ம்” என்றவள் அவளை நிமிர்ந்து பார்க்கவில்லை..

“குகா..” என்றாள் மீண்டும்

“சொல்லு கேட்டுட்டு தான் இருக்கேன்..”

“சாரி..”

“எதுக்கு?” புத்தகத்தில் இருந்து கண்ணை எடுத்தவள் அகல்யாவிடம் கேட்க அவள் கலங்கிய கண்களில் இருந்து இரண்டு சொட்டுக் கண்ணீர் கன்னம்  நனைத்தது..

“ப்ச் இப்போ எதுக்கு அழற?” அதட்டலாக வெளி வந்தன குகாவின் வார்த்தைகள்.. சற்று தள்ளி இருந்து இவர்களின் சம்பாஷணையைப் பார்த்துக்கொண்டிருந்த ரோகிணியும் அகல்யாவின் கண்ணீரை கண்டதும் அவர்கள் அருகில் வந்தாள்.

“இப்படிப் பண்ணாதே குகா.. கஷ்டமா இருக்கு..” பேச பேச கண்ணீர் வந்து கொண்டே இருந்தது..

“எதுக்கு அழுகுறன்னு கேட்டா? இன்னும் அழுகுற.. என்ன உன் பிரச்சனை?” குகாவின் வார்த்தையில் சூடு கூடிக் கொண்டே இருந்தது.. அது அகல்யாவின் கண்ணீரை மேலும் கூட்டியது.. அதைப் பார்க்க ரோகிணிக்கு கஷ்டமாக இருக்க

“குகா.. அவளே அழறா.. நீ ஏன் இன்னும் திட்டுற.. விடு..” என்றாள்

“நான் என்ன பண்ணேன்.. இப்போ எதுக்கு அவளுக்குச் சப்போர்ட்டா என்கிட்டப் பேசிக்கிட்டு இருக்க… நான் பாட்டுக்கு புக் தானே படிச்சுட்டு இருக்கேன்.. அவளா வந்து சாரி சொல்லுறா, அழுகுறா.. அதுக்கு நான் பொறுப்பாக முடியுமா?” என்றதும் அகல்யாவின் இடம் இருந்து பெரிய கேவல் ஒன்று வெளிப்பட்டது..

“உப்.. இவ அழுது முடிச்சதும் என்னைக் கூப்பிடு.. நான் வெளிய போறேன்..” என்று எழப்போனவளை தடுத்து நிறுத்தினாள் அகல்யா..

“என்னைக் கொஞ்சம் பேச விடு..” ஒரு கையால் குகாவை பிடித்தவள் மறுகையால் கண்ணீரைத் துடைத்துக் கொண்டிருந்தாள்.

“சரி பேசு.” என்றவள் தோழியின் கையை விலக்காமலே கட்டிலில் அமர்ந்தவள் அகல்யாவையும் அமர வைத்தாள்.

“நீயும் உட்காருடி உனக்கு வேற தனியா சொல்லனுமா?” ரோகிணியிடம் கூற

“என்னை எதுக்குத் திட்டுற எருமை.. இருக்கு உனக்கு..” திட்டிக் கொண்டே அவளும் அமர்ந்தாள்.. சிறிது நேரம் ஆகியும் அகல்யா வாயைத் திறக்கவில்லை என்றதும் குகா

“பேசணும்னு சொல்லிட்டு அமைதியா இருந்தா என்ன அர்த்தம்.. டின்னர் டைம் வேற நெருங்கிடுச்சு.. சீக்கிரம் சொல்லு..” என்க

“தின்னி மாடு.. அவ எவ்வளவு பீல் செஞ்சுகிட்டு இருக்கா.. உனக்குச் சாப்பாடு கேட்குதா…”–‘ரோகிணி’

“எனக்குச் சோறு தான் முக்கியம்..” என்றாள் அலட்டிக் கொள்ளாமல்.

“சாரி.. உங்க ரெண்டு பேர்கிட்டையும் சொல்லக் கூடாதுன்னு இல்லை.. என்னமோ ஒரு தயக்கம்..”

“என்னவாம்டி இவளுக்கு?” ஒன்றும் தெரியாதவள் போல் ரோகிணியிடம் கேட்க, ரோகிணிக்கும் அதே தான்.. என்ன பேசுகிறாள் அகல்யா என்றே புரியவில்லை…ஆரம்பம் முதலே ஏதோ சொல்கிறார்கள் இருவரும் ஒன்றும் விளங்க தான் இல்லை.. அவள் பாவமாக இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“இப்படிப் பண்ணாதே குகா.. இட்ஸ் ஹர்ட்டிங்..” அகல்யாவிற்குக் குகாவின் இந்தச் செய்கையைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை..

“எதுவா இருந்தாலும் நேர பேசு.. இட்ஸ் ஹர்ட்டிங்.. சாரி.. இதெல்லாம் எனக்கு வேண்டாம்..”

“…”

“ஓகே பைன்… இப்படியே உட்கார்ந்திரு.. நான் புக் படிக்கிறேன்..” புத்தகத்தை எடுக்கக் கையை நீட்டினாள்.. அவள் கையைப் பட்டெனத் தட்டிவிட்டாள் ரோகிணி..

“கடுப்பேத்துறீங்கடி.. கொஞ்ச நேரம் முன்ன வரை நல்லா தானே இருந்தோம்.. இப்போ எதுக்கு இப்படிப் பண்றீங்க.. ஹேய் நீ கவின்ன லவ் பண்றியா?”அகல்யாவைப் பார்த்து நேரடியாகக் கேட்டாள். அவள் அமைதியாக இருக்க

“அகல்.. வாயை திறந்து சொல்லு குகா சொல்லுறது எல்லாம் உண்மையா?”

“ம்..” என்ற மெல்லிய முனங்கல் மட்டுமே அகல்யாவிடம் இருந்து வந்தது..

‘இப்பயாச்சும் நம்புறியா?’ என்கிற ரீதியில் ரோகிணியைப் பார்த்தாள் குகா.

“எங்ககிட்ட ஒரு வார்த்தைக் கூடச் சொல்லல.. எத்தனை நாளா நடக்குது இது?” தோழி தங்களிடம் இருந்து இதை மறைத்து விட்டாளே என்கிற ஆதங்கம் நிரம்பிய குரலில் ரோகிணி கேட்க

“உங்ககிட்ட மறைக்கணும்னு நான் நினைக்கல. ஒரு மாசமா தான் லவ் பண்றோம்.. சொல்லணும்னு நினைப்பேன்.. அப்பறம் எப்படிச் சொல்லுறதுன்னு ஒரு மாதிரி இருக்கும்.. ரெண்டு மூணு தடவை சொல்ல ட்ரை பண்ணேன். என்னால முடியலை.. அயம் சாரி..” என்றாள் உள்ளே சென்ற குரலில்..

“என்ன சொல்ல முடியலை.. லவ் தானே பண்ற.. அதை ப்ரெண்ட்ஸ் கிட்ட மறைக்க என்ன இருக்கு? நான் ஸ்ரீயை லவ் பண்றேன்னு உங்க கிட்ட அவருக்கு ஓகே சொல்லுறதுக்கு முன்னமே சொன்னேன் தானே.. நாங்க என்ன உங்க வீட்டுல போட்டுக் கொடுக்கப் போறோமா? நீ காதலிக்கிறவன் நல்லவனா இருந்தா நாங்களே உன் காதலுக்குச் சப்போர்ட் செய்வோம் தானே.. எங்களை நீ இவ்வளவு தான் புரிஞ்சு வெச்சுருக்கியா? என்னைவிடு, குகா உனக்கு பத்து வருஷமா ப்ரெண்ட் அட்லீஸ்ட் அவகிட்டயாச்சும் சொல்லிருக்கலாம்ல..”

“நீ வேற குகா வேற இல்லை எனக்கு.. ரெண்டு பேருமே என் பெஸ்ட் ப்ரெண்ட்ஸ் தான்.. எனக்கு எது தடுத்துச்சுன்னு தெரியலை… சாரிய தவிர வேற என்ன சொல்லுறதுனும் எனக்குத் தெரியலை..” என்றவளின் கண்களில் மறுபடியும் கண்ணீர் வந்தது..

அங்கே அசாத்திய அமைதி நிறைந்திருந்தது.. ரோகிணிக்குக் கண்மண் தெரியாத அளவிற்குக் கோபம்.. குகா முதலில் கூறிய பொழுது கூட ஏதோ கவினையும் அகல்யாவையும் வைத்து விளையாடுகிறாள் என்று தான் நினைத்தாள்.. உண்மையாகவே காதலாக இருக்கும் என்று அவள் நினைக்கவில்லை.. இதற்கு மேல் பேசினால் இருக்கிற கோபத்தில் எதையாவது சொல்லி அகல்யாவை காயப்படுத்தி விடுவோமோ என்று அமைதியாக இருந்தாள்..

“ஓகே சாப்பிட போலாமா?” என்றவாறே மூவரின் ப்ளேட்டையும் எடுத்துக் கொண்டே கேட்டாள் குகா..

“குகா.. இங்க இவ்வளவு பிரச்சனை போயிட்டு இருக்கு.. கூலா சாப்பிடலாமான்னு கேக்குற?” –‘ரோகிணி’

“இதுல என்ன பிரச்சனை இருக்கு.. அகல் கவின் நல்ல பேர்.. காதலுக்கு எதிர்க்கிற பேமிலியும் இல்ல அகலோட வீட்டில.. இதுல எங்க இருந்து பிரச்சனை வருது..”

“அவ நம்மகிட்ட இருந்து இந்த விஷயத்தை மறைச்சிருக்காடி.. எனக்கு அவ்வளவு கோபம் வருது.. உனக்கு வரலையா?”

“கோபப்படுற அளவுக்கு ஒன்னும் இல்லை.. ஆயிரம் தான் குளோசா இருந்தாலும் எல்லாருக்கும் ஒரு பர்சனல் இருக்கும்.. அகல் க்கு இது பர்சனல்.. ஏன் சொல்லலைன்னு நம்ம கேள்வி கேட்க முடியாது..”

“அப்போ எதுக்குடி இவ்வளவு நேரமா அவளைக் குத்திக் குத்திப் பேசிக்கிட்டு இருந்த?”

“அவ வாய்ல இருந்து உண்மையை வர வைக்கத் தான்..”

“என்னமோ சொல்லுற? ஒன்னும் புரியலை. ஆமா உனக்கு எப்போ இந்த விஷயம் தெரிஞ்சது?”

“ரொம்ப முக்கியம்.. வாங்கடி சாப்பிட போகலாம்.. பசிக்குது.. வந்து மத்ததைப் பேசலாம்..”

இருவரையும் அடுத்துப் பேசவிடாமல் நகர்த்திக் கொண்டு டைனிங் ஹாலிற்குச் சென்றாள்.. மூன்று சப்பாத்திகளை நன்றாக அவள் உண்டு கொண்டிருக்க மற்ற இருவரும் கொறித்துக் கொண்டிருந்தனர்.. அவர்கள் உண்ணவில்லை என்பதைக் கண்டும் காணாமல் இருந்து கொண்டாள் குகா..

உணவை முடித்துக் கொண்டு மீண்டும் மூவரும் மாநாடு போட்டு அமர்ந்தனர்..

“குகா.. என்னைத் திட்டு, சண்டைப் போடு, ஏன் அடிக்கக் கூடச் செய்.. நீ என்னமோ பண்ணு நான் கண்டுக்க மாட்டேன் அப்படின்னு இருக்காதே.. ப்ளீஸ்..” அகல்யா மன்றாட

“அவளுக்குச் சொன்னது தான் அகல் உனக்கும்.. நாங்க ரெண்டு பேரும் உனக்குப் பெஸ்ட் ப்ரெண்ட்சா இருக்கலாம்.. அதுக்காக நீ எல்லாத்தையும் எங்ககிட்ட சொல்லனும்னு அவசியம் இல்லை.. இந்த விஷயம் எனக்குப் பத்து நாளைக்கு முன்னாடியே தெரியும்..

தெரிஞ்சதும் எனக்கு உன்மேல கோபம் வந்தது.. பேசக் கூடாதுன்னு எல்லாம் நினைச்சேன்.. கொஞ்சம் பொறுமையா யோசிச்சுப் பார்த்ததும் தான் புரிஞ்சது இது உன்னோட பெர்சனல்.. அதைச் சொல்லுறதும் சொல்லாமல் இருக்குறதும் உன் இஷ்டம்ன்னு..

இந்தப் பத்து நாளில உன்கிட்ட நான் வித்தியாசமா பேசிருக்கேனா? எப்பவும் போலத் தானே நடந்துகிட்டேன்.. ஸ்டில் நான் அப்படித் தான் இருக்கேன்..உனக்குக் கில்டி கான்சியஸ் அதான் நான் உன்னைக் கண்டுக்காத மாதிரி இருக்கேன்னு தோணுது..

ஜஸ்ட் ரிலாக்ஸ்… நீங்க ரெண்டு பேரும் சேர்ந்தா எனக்கு ரொம்பச் சந்தோஷம்..” என்றாள் புன்னகையுடன்..

“குகா.. நான்.. சாரி..”

“அடடா… இவ்வளவு சொல்லுறேன் திரும்ப ஆரம்பிக்காதே.. ஓடிடு.. அங்க பாரு அவ தான் கோபமா இருக்கா… அவளைப் போய்ச் சமாதானப் படுத்து..” ரோகிணியைக் காட்டி அவள் கூற

“நிஜமா?”

“பத்து வருஷமா என்னோட இருக்க.. என்னை நீ என்ன புரிஞ்சு வெச்சுருக்க? கோபம் எல்லாம் இல்லைடி.. ஆரம்பத்துல கஷ்டமா இருந்தது தான். எல்லாவிஷயத்தையும் எல்லார் கிட்டையும் சொல்லனும்னு அவசியம் இல்ல.. அது யாரா இருந்தாலும்.. உனக்குத் தெரியாம எனக்கும் futureல பெர்சனல்வரலாம்.. எல்லா ரிலேஷன்ஷிப்லையும் அப்படித் தான்.. ஓபன் புக்கா யாராலையும் இருக்க முடியாது..” என்று நீண்ட விளக்கம் கொடுத்த குகா அறியவில்லை, பின் நாளில் இதே விஷயத்திற்காகத் தன்னுடைய சந்தோசத்தையே இழக்கப் போகிறாள் என்று..

“சரி எங்க லவ் ஸ்டோரிய சொல்லுறேன்..” அகல்யா ஆரம்பிக்க

“வேண்டாம்.. எங்கக் கிட்ட இருந்து மறைக்கணும்னு நீ முடிவு பண்ணதை தெரிஞ்சுக்கணும்னு எனக்குத் தோணலை..” ரோகிணி பட்டென்று சொல்லிவிட, அகல்யாவிற்கு ஆயாசமாக இருந்தது..

“ரோகி… அடுத்து நீயா? ப்ளீஸ்டி..”

“எனக்குக் கோபம் தான் அகல்.. அதுக்காக உன்னோட பேசாம எல்லாம் இருக்க மாட்டேன்.. இந்த விஷயத்தை மறந்துடுவோம்.. வா சீரியலை கண்டினியூ பண்ணுவோம்.” என்றவள் மடிக்கணினியை இயக்க  ஆரம்பித்தாள்.

ஒருத்தி கோபம் இல்லை என்கிறாள் ஆனால் கோபமாக உள்ளது போலவே உள்ளது அவளின் செய்கைகள், இன்னொருத்தி கோபம் தான் என்று வெளிப்படையாகக் கூறிவிட்டாள், இருந்தும் அவளைச் சமாதானப்படுத்தும் வழி தெரியாது விழி பிதுங்கி நின்றாள் அகல்யா. ‘லவ் பண்றவங்க எல்லாம் சந்தோசமா இருக்காங்க.. எனக்கு மட்டும் ஏன்டா இப்படி..’ என்று எண்ண மட்டுமே முடிந்தது அகல்யாவால்…

 

Advertisement