Advertisement

காதல் செய்வேன் கட்டளைப்படி

காதல் 14

காலையில் வழக்கம் போல் எழுந்த மாறன், மனைவி தூங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு, சத்தம் செய்யாமல் குளியல் அறைக்குச் சென்றான்..

காபியை குடித்துக் கொண்டு இருக்கும் போதே சித்ரா அழைத்து ஒரு மணி நேரத்தில் வந்துவிடுவோம் என்று கூறினார்.. அவர்கள் வருவதற்குள் வீட்டை கொஞ்சம் ஒதுங்குப் படுத்தியவன், மனைவியை எழுப்புவோமா என்று அவன் யோசித்துக் கொண்டிருக்கும் போதே குகா எழுந்து குளியல் அறைக்குள் சென்றாள்.

குளித்து முடித்து வந்தவளிடம் “காபி போடவா?” என்று மாறன் கேட்க

“இல்ல வேண்டாம்.. ஒரு மாதிரி இருக்கு..” என்று சோபாவில் அமர்ந்துக் கொண்டாள்..

“என்னாச்சு?” மாறன் சற்று பதட்டமாக அவள் அருகில் சென்று கேட்க

“ஒண்ணுமில்ல.. மார்னிங் சிக்னெஸ் தான்.. நீங்க பயப்படாதிங்க..” என்றவள் சோபாவில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டாள்..

“ரூம்ல போய் படு குகா..”

“இல்ல.. அத்தை வரட்டும் அப்புறம் படுத்துக்குறேன்..”

“சரி இரு கஷாயம் போட்டுக் கொடுக்குறேன்..” என்றவன் கிச்சனுள் செல்லப் போக

“எனக்கு எதுவும் குடிக்கணும் போல இல்ல.. வேண்டாம்.. ப்ளீஸ்”

“ப்ரேக் பாஸ்ட் செய்யட்டா?”

“மாறன் ப்ளீஸ் என்னை விட்டுடுங்க.. என்னால பேசவே முடியல..” சலிப்பாக கூறிவிட்டு மீண்டும் கண்களை மூடிக் கொண்டாள்..

அதற்கு மேல் அவனால், அவளிடம் எதுவும் பேச முடியவில்லை.. ஹாஸ்பிடல் செல்வோமா என்று கேட்கலாம் என்று நினைத்தவன், பின் சிறிது நேரம் சென்றதும் கேட்போம் என்று அமைதியாக இருந்தான்..

அதற்குள் சித்ராவும், சுதாகரனும் வந்துவிட்டனர்..

“வாங்கத்தை.. வாங்கமாமா..” சோர்வாக இருந்தாலும், சிரித்த முகமாகவே குகா அவர்களை வரவேற்றாள்.. மருமகளின் சோர்ந்த முகத்தைப் பார்த்த சித்ரா,

“என்னமா முகமே சரியில்ல.. என்ன பண்ணுது?” என

“டயர்டா இருக்கு.. வேற  ஒண்ணுமில்ல அத்தை..” என்றாள்..

“ரெஸ்ட் எடுக்க வேண்டியது தானே.. எதுக்கு எழுந்த..” என்று மருமகளிடம் ஆரம்பித்தவர் மகனிடம் “உனக்கு எத்தன தடவை சொன்னாலும் அறிவே இருக்காதாடா.. முடியாம இருக்கா, அவளை ரெஸ்ட் எடுக்க சொல்லாம என்ன செஞ்சுட்டு இருந்த நீ?” என்று கடிந்தார்..

“அத்தை.. அவர் என்னை படுக்க தான் சொன்னார்.. நான் தான் கொஞ்ச நேரம் உங்களோட பேசிட்டு இருக்கலாம்னு எழுந்தேன்..”

“எல்லாம் பொறுமையா பேசிக்கலாம்.. இப்போ போ” என்று அவளை அனுப்பிய பின்னே, அவர் ரெப்ரெஷ் ஆகி காபியைக் குடித்தார்..

“என்னடா ஆச்சு.. அவ முகமே வாடிப் போய் இருக்கு.. போன தடவை பார்த்ததை விட வெயிட் கூட குறைஞ்சுட்டா.. டாக்டர் என்ன சொன்னார்?”

“டயர்டா தான்மா இருக்கா.. நீர் சத்து கம்மியா இருக்குன்னு சொன்னாங்க.. ரெண்டு நாளா சரியா சாப்பிடுறதே இல்ல..”

“சரி நான் குளிச்சுட்டு எதாச்சும் பண்ணுறேன்.. கொஞ்ச நேரம் கழிச்சு அவளை எழுப்பு..” என்றவர் மடமடவென வேளைகளை செய்தார்..

சீதாவிற்கு உதவிகளை செய்து விட்டு தங்கள் அறைக்கு வந்த மாறன், மனைவியின் அருகில் அமர்ந்தவன் அவள் தலையை கோதிக் கொடுத்துக் கொண்டிருந்தான்.. அதில் தூக்கம் லேசாக கலைய கண்ணைத் திறந்தாள் குகா..

“அச்சோ சாரி..” என்று கையை வேகமாக எடுத்தான்..

“ரொம்ப நேரம் ஆகிடுச்சா?” கேட்டுக் கொண்டே எழுந்து அமர்ந்தவளை

“இல்ல இல்ல தூங்கு..” என்றான் மாறன்..

“இப்போ நல்லா தான் இருக்கேன்..” என்றவள் ரெப்ரெஷ் ஆகிவரும் வரை அவன் அங்கேயே இருந்தான்.

“என்ன இன்னைக்கும் வீட்டுலையே இருக்கீங்க?” முகத்தைத் தொடைத்துக் கொண்டே அவள் கேட்க, அவன் பதிலேதும் சொல்லவில்லை..

“என்ன வக்கீல் சார் அமைதியா இருக்கீங்க?” அவள் அவனை சீண்ட, அப்பொழுதும் அவன் பதில் சொல்லாமல் அவளை பார்த்துக் கொண்டே இருந்தான்..

“ரொம்ப நடிக்க வேண்டாம்.. கூப்பிடும் போது வரதில்ல.. இப்போ ரெண்டு நாளா வீட்டுலையே குட்டி போட்ட பூனை மாதிரி சுத்துனா, நீங்க ரொம்ப நல்லவருன்னு நாங்க நம்பிடுவோமாக்கும்..”

“…”

“சாப்டுட்டு கிளம்புங்க.. அத்தை தான் இருக்காங்கள..”

“…”

“அட பதில் பேச மாட்டீங்களா? இப்படி அமைதியா இருந்தா எப்படி வக்கீல் சார் கேஸ்ல ஜெயிக்க முடியும்..” என்றதும்

“போடி..” என்றவன் அறையை விட்டு வெளியே சென்றான்..

“பார்டா கோபத்தை.. நாங்க கோபப்படனும்..” என்று முனுமுனுத்துக் கொண்டே குகாவும் அவன் பின்னோடு சென்றாள்.

“குகா எழுந்துட்டாளா?” என்று சித்ரா கேட்டுக் கொண்டிருக்கும் போதே குகாவும் வெளியே வந்திருந்தாள்.

“வாமா சாப்பிடலாம்..” என்றவர், அனைவருக்கும் காலை உணவை எடுத்து வைத்தார்..

“சாரி அத்தை.. ஊர்ல இருந்து வந்த உங்களை வேலை செய்ய வெச்சுட்டு நான் படுத்துட்டேன்..” குகா வருந்த

“உடம்பு சரியில்லாத உன்னைப் பார்க்க நாங்க வந்திருக்கோம்.. சும்மா சாரி பூரின்னு சொல்லாம சாப்பிடு..” என்று அதட்டியவர் மருமகளிற்கு பார்த்து பார்த்து பரிமாறினார்..

“இப்போ பரவாயில்லை தானே?” சித்ரா கேட்க

“உங்களோட சண்டைப் போடுற அளவுக்கு ஸ்ட்டிரெண்த் வந்துடுச்சு அத்தை..” என்றாள் குகா சிரித்துக் கொண்டே

“உன்னை நான் திட்டுறதுக்கு முன்னாடி, நீ முந்திக்கலாம்ன்னு பாக்குறியா?”

“ஹீ.. ஆமா..”

“வந்ததும் நல்லா உன்னை நாலு அடி வைக்கனும்னு தான் வந்தேன்.. உன் முகத்தைப் பார்த்ததும் பாவமா இருந்ததா விட்டுட்டேன்..”

“எனக்கு பதில என் பெட்டர் ஹாப் இருக்காரே அத்தை.. அவருக்கு கொடுங்க.. நான் வேற அவர் வேறையா?”

“ஆமா.. ஆமா.. அவனுக்கு கொடுக்க வேண்டியதையும் சேர்த்துவேனா உனக்கு கொடுக்குறேன்..”

“உங்க மருமக ரொம்ப அமைதின்னு நினைச்சுட்டு இருந்திருப்பீங்க தானே.. பார்த்துகோங்க இப்படி ஒருத்திகிட்ட என்னை மாட்டிவிட்டுட்டு நீங்க ஜாலியா ஊர்ல இருக்கீங்க..” மாறன் வருத்தமாக தாயிடம் கூற

“அனுபவிடா.. சின்னதுல என்னை எவ்வளவு கொடுமை பண்ணுவ.. அப்போல்லாம் நினைப்பேன், இதுக்கெல்லாம் உன் பொண்டாட்டிக்கிட்ட அனுபவிப்படான்னு.. நடந்திடுச்சு.. கடவுள் இருக்கார்டா மாறா..”

“வாட் அ பேமிலி..” என்று தலையில் அடித்துக் கொண்டவன் அங்கிருந்து சென்றான்..

மாமியார் மாமனாருடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு குகா அறைக்குச் செல்லும் போது மாறன் யாரிடமோ கோபமாக பேசிக் கொண்டிருந்தான்..

“என்னடா சொல்லுற? எப்போ?”

“…”

“ப்ச்.. இந்த நாடு எதை நோக்கிதான் போகுதோ..”

“…”

“நம்ம நேரமாடா? கரெக்டா இந்த நேரத்துல இப்படி தீர்ப்பு கொடுத்திருக்காங்க. சரி இனி அவனுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க முடியாது.. நாளைக்கு பேசலாம் அடுத்து என்ன பண்ணுறதுன்னு”

“..”

“ஹான்.. நல்லா இருக்கா.. அம்மா வந்துட்டாங்க.. ஒன்னும் பிரச்சனையில்லை… ஓகே வெச்சுடுறேன்..” என்றவன் போனை அணைத்துவிட்டு திரும்ப, அப்பொழுது தான் குகா ரூமினுள் இருப்பதை அவன் பார்த்தான்..

“என்னாச்சு? எதாச்சும் ப்ராப்ளமா?” போனில் பேசியதை வைத்து குகா, மாறனிடம் கேட்க    

“இல்ல.. கேஸ் விஷயம் தான்.. நீ டேப்லெட் போட்டு ரெஸ்ட் எடு..” என்றவன் வேறு எதுவும் கூறவில்லை..

அன்று முழுவதுமே அவன் மற்றவர்களிடம் நன்றாக பேசினாலும், அவன் முகம் என்னவோ போலே இருந்தது.. இதை கவனித்த குகா இரவு மாறனிடம்

“இங்க உக்காருங்க.. உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்..” மெத்தையில் தலையணையை வைத்து, அதில் சாய்ந்து கொண்டவ, அருகில் கணவனை அமரும்படி கூறினாள்.. அவனும் அவள் அருகில் சென்று அமர்ந்து

“சொல்லுமா..” என்றான்..

“நீங்க தான் சொல்லணும்?”

“என்னது? சாரியா? சொன்னேன்ல.. திரும்ப சொல்லனுமா?”

“ப்ச்.. அதில்ல.. உங்க முகமே சரியில்ல.. காலைல போன்ல பேசுனதுல இருந்து ஒரு மாதிரி தான் இருக்கீங்க..”

“கேஸ் விஷயம் தான் வேற ஒண்ணுமில்ல..”

“அதெல்லாம் இந்த கேஸ்லையும் ஜெயிச்சுடுவீங்க.. வொரி பண்ணாதிங்க..” எனவும், அவள் மடியில் சென்று படுத்துக் கொண்டவன்..

“இதுல ஜெயிச்சாலும் எனக்கு இனி முழு சந்தோஷம் இருக்காது..” என்றான்..

“ஏன்?”

“இனிமே ஒரே பாலினத்துல உறவு வெச்சுகிறது தப்பில்லைன்னு சுப்ரீம் கோர்ட்ல தீர்ப்பு சொல்லிட்டாங்க..”

“வாட்?”

“ப்ச்.. இதுக்கு மேல உனக்கு எப்படிடி புரிய வைக்க?”

“நான் புரியலைன்னு சொன்னேனா.. ஷாக்ல வாட்ன்னு சொல்லிட்டேன்..” என்றவள் “நாட்டுல ஆயிரத்தெட்டு பிரச்சனை இருக்கு.. அதெல்லாம் உங்கள மாதிரி வக்கீலுங்க கண்ணுக்கு தெரியாதா? நாசமா போற கேசா எடுப்பீங்களா?” என்றாள் கோபமாக

“கருமம்.. இந்த நாட்டை நாசமாக்காம விட மாட்டாங்களா?  பாரின் கண்டிறியப் பார்த்து நல்ல விஷயத்தை எதவும் கத்துகலை.. நாராசமா என்ன என்ன இருக்கோ எல்லாத்தையும் அப்படியே பாலோ பண்றாங்க..”

“எனக்கும் கோபமா வருது.. இதை தப்புன்னு சொல்ல முடியாது.. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பீலிங்க்ஸ்.. ஆனா அந்த பையன் இதை மறைச்சு ஒரு பொண்ணு வாழ்க்கையை கெடுத்துட்டானே அது தான் கோபம்..”

இருவரும் சிறிது நேரம் நாட்டு நடப்பை நாராசமாக கழுவி கழுவி ஒற்றினார்கள்..

“ஹே என்ன மடில படுத்துட்டு இருக்க எழுந்திரி மேன்..” தன் மடியில் இருந்து அவனை உருட்டி மெத்தையில் தள்ளி விட்டாள் குகா..

“இப்போ தான் உனக்கு அது தெரியுதா?” என்றவன் அவள் கையை நறுக்கென்று கிள்ளி விட்டான்..

“ஆ.. எருமை கட்டுன பொண்டாட்டியை அதுவும் வாயும் வயிறுமா இருக்கும் போது அடிச்சு கொடுமைபடுத்துற..” கையை தேய்த்து விட்டுக் கொண்டே கூறியவளை முறைத்தவன்

“அடிக்கு கொடுமைப்படுத்துறேனா? லைட்டா கிள்ளுனதுக்கு எப்படி பொய் சொல்லுற நீ?” என்றான்..

“இது மட்டும் தான் கொடுமையா? என்னை தனியா தனியா விட்டுட்டு போற, அது கூட ஒரு வித கொடுமை தான்..” என்றாள் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு..

“அயம் ரியலி சாரிடா.. நான் வேணும்னு பண்ணல.. ஆனா அது என் தப்பு தான்..”

“தப்பு பண்ணிருக்கீங்கள அப்போ அதுக்கு தண்டனை கொடுக்கணும்ல..”

“சரி என்ன பண்ணனும் சொல்லு?” என்றதற்கு குகா பதில் கூறுமுன், ஹாலில் இருந்து பாடல் சத்தம் கேட்டது..

தவறு செய்தால் முத்தம் தந்தென்னை திருத்திக்கணும் தண்டனை சரியா?

இதைக் கேட்டதும் மாறன் சிரித்துக் கொண்டே “எனக்கு ஓகே..” என்று அவன் கன்னத்தைக் காட்ட,

“நினைப்பு தான்.. ஒடுங்க..” என்றவள் அங்கிருந்து நகரப் போக

“தண்டனையை கொடுத்துட்டு போ..” என்றதும் அவனை முறைத்தவளைப் பார்த்து “ஹே.. கிஸ் கேட்கல.. நீ பனிஷ்மெண்ட் இருக்குன்னு சொன்னல்ல அதை தான் கேட்டேன்..”

“அப்பா… ரொம்ப நல்லவர் தான்..” என்றவள் பின் “இனிமே இப்படி பண்ணாதிங்க மாறன்.. போன் பண்ணா, பிசியா இருந்தாலும், அப்புறம் பேசுறேன்னு சொல்லீடாச்சும் கட் பண்ணுங்க..” என்றாள்..

“இனி எப்பவும் அப்படி நடக்காதுமா.. ப்ராமிஸ்..” என்றவன் அவளின் கையில் தனது கையை வைத்தான்.. குகா அவன் கன்னத்தைத் தன் புறம் திருப்பி, அவன் கேட்ட தண்டனையைக் கொடுத்தாள்..

                                    *********************

குகாவிற்கு ஏழாவது மாதமே வளைகாப்பு போட பெரியவர்கள் முடிவு செய்திருந்தனர்..  

“ஏன்மா இவ்வளவு சீக்கிரம்?” தாயிடம் குகா கேட்க

“அப்புறம் இன்னும் உன்னை இங்க தனியா விட்டு, நீ வேற எதையாச்சும் இழுத்து விட்டுக்கவா?” சீதா மகளைத் திட்ட, சித்ராவிடம் பேசிப் பார்ப்போம் என்று அவரிடம் சென்றாள்

“இங்க உன்னை தனியா விட மனசே இல்ல.. உன் புருஷனை நம்பி எல்லாம் உன்னை விட முடியாது..” கறாராக கூற, இறுதியாக மாறனிடம்

“நீங்க எதுவும் சொல்ல மாட்டிங்களா? இப்பவே போனா, நான் வர ஆறு மாசம் ஆகும்.. உங்களுக்கு கஷ்டமா இல்லையா?”

“இல்ல குகா.. அவங்க சொல்லுறதும் சரி தானே.. நீயும் குழந்தையும் நல்லா இருக்கணும்னு தானே சொல்லுறாங்க.. நான் உன்னை சரியா பாத்துக்காட்டி என்ன பண்ணுறது?”

“யோவ். சரியா பாத்துப்பேன்னு உன் வாயில இருந்து வார்த்தை வருதா? போ போய் அந்த கருப்பு கோர்ட், வெள்ளை பேண்ட்டோடையே குடும்பம் நடத்து..” என்று கோபப்பட

“நானும் உன்னை ரொம்பவே மிஸ் பண்ணுவேன் குகா.. இருந்தாலும் அதை எல்லாம் தான்டி, அத்தை உன்னை நல்லா பாத்துபாங்கன்னு நிம்மதியா இருப்பேன்ல.. கொஞ்ச நாள் தானேடா அட்ஜஸ்ட் பண்ணிக்கோ.. நானும் அடிக்கடி வந்து உன்னைப் பாக்குறேன்..” மாறன் அவளை சமாதானப்படுத்த

“நீ தானே வந்துட்டாலும்.. போயிரு எதுனா சொல்லிட போறேன்..”

வளைகாப்பு முடிந்து ஊருக்கு செல்லும் வரையிலுமே, அனைவரிடமும் “இங்கையே கொஞ்ச நாள் இருக்கேனே..” என்று பலவாறு கேட்டுப் பார்த்தும், யாரும் குகாவின் பேச்சை காதிலே வாங்கவில்லை.. மாறனைத் திட்டிக் கொண்டே தாய் வீட்டிற்கு சென்றாள் குகா..

மாறனும் பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை என்று இரு முறை வந்திருந்தான்.. அன்று ஸ்கேன் எடுக்க, சீதாவும் குகாவும் மருத்துவமனை சென்றிருந்தனர்.. ஸ்கேன் செய்யும் மருத்துவர்

“எட்டு மாசம் முடியப் போகுதுல.. இன்னும் குழந்தை தலை திரும்பல..” என்று குகாவிடம் கூற, குகாவிற்கு சற்று பயமாக இருந்தது..

“ஒன்னும் பிரச்சனையில்லை.. நீங்க பயப்படாம டாக்டரை போய் பாருங்க..” எனவும் குகா வெளியே வந்தாள்.. சீதா ஸ்கேன் ரூமிற்கு வெளியே நின்றுக் கொண்டிருந்தார்..

“என்ன சொன்னாங்க?” என்று அவர் கேட்கவும், குகாவும் அந்த மருத்துவர் கூறியதை சொன்னாள்..

“எல்லாருக்கும் இப்பவே தலை திரும்பாது.. நீ பயப்படாம வா.. நம்ம டாக்டர் கிட்ட கேட்டுப்போம்..” சீதா மகளை அழைத்துக் கொண்டு மகப்பேறு மருத்துவரிடம் சென்று ஸ்கேன் ரிபோர்ட்டை பற்றிக் கேட்க

“இது ஒன்னும் பெரிய பிரச்சனையில்லை.. சிலருக்கு முப்பதாவது வாரத்துலையே தலை திரும்பிடும்.. சிலருக்கு டெலிவெரிக்கு ரெண்டு மூணு நாள் முன்னக் கூட தலை திரும்பும்..

குழந்தை வெயிட் இப்பவே 2.7kg இருக்கு.. இன்னும் சாலிடா ஒன் மந்த்துக்கு மேலையே இருக்கு டெலவரிக்கு, அதுக்குள்ள இன்னும் கொஞ்சம் வெயிட் ஏறலாம்.. அப்படி கூடிடுச்சுனா நார்மல் டெலிவரி கொஞ்சம் கஷ்டம்..” என்றவர், குகாவின் முகம் பார்த்து

“இதுக்கெல்லாம் பயப்படக் கூடாது குகா.. இதெல்லாம் இப்போ சகஜம் ஆகிடுச்சு.. ரெண்டு வாரம் கழிச்சு வாங்க.. இன்னொரு டைம் ஸ்கேன் செஞ்சு பார்த்துடுவோம்..” என்றவர் மாத்திரைகளை எழுதிக் கொடுக்க அதை வாங்கியப் பின், இருவரும் வீட்டிற்கு வந்தனர்..

குகா மாறனிற்கு போன் செய்து, மருத்துவர் கூறியதை சொல்லி கவலைப்பட்டுக் கொண்டிருந்தாள்..

“ஹே லூசு அதான் சொல்லுராங்கள்ள டெலிவரிக்கு ரெண்டு மூணு நாளைக்கு முன்னக் கூட தலை திரும்பும்ன்னு அப்புறம் ஏன் டென்ஷன் ஆகுற.. ரிலாக்சா இரு.. நெக்ஸ்ட் செக் அப் போறதுக்குள்ள தலை திரும்பிடும்..” என்றான்..

இரு வாரங்கள் கழித்து ஹாஸ்பிடல் சென்று ஸ்கேன் செய்த போதும், குழந்தை இன்னும் திரும்பவில்லை.. குகாவிற்கு கண்கள் கலங்க ஆரம்பித்துவிட்டது.. அன்று மாறனும் ஊரிலிருந்து வந்திருந்ததால் அவளுடன் மருத்துவமனை வந்திருந்தான்..

“ஐயோ.. என்ன குகா இது குழந்தை மாதிரி அழுதுட்டு இருக்கீங்க.. நான் தான் சொன்னேன்ல இது இப்போ ரொம்ப நார்மல்ன்னு.. தினமும் ஒரு மணி நேரம் நடங்க.. நான் சொல்லுற எக்ஸ்சசையை செய்ங்க..” என்றார்

அன்று வீட்டிற்கு வந்தும் அவள் அழுதுக் கொண்டே இருந்தாள்.

“எனக்கு ரொம்ப பயமா இருக்கு மாறன்..”

வந்தவனைக் கட்டிக் கொண்டு மீண்டும் குகா அழ,

“ப்ச்.. என்னமா இது? இதுக்கே இப்படி பயப்படுற? சிசேரியன் எல்லாம் இப்போ ஒண்ணுமேயில்லை.. ரொம்ப எல்லாம் வழிக்காது” ஆறுதல் கூறுகிறேன் என்று அவன் பேச பேச, குகா மேலும் அழுதாள்..

வெகு நேரமாக இருவரும் வெளியே வராததால், கதவைத் தட்டி விட்டு உள்ளே வந்த சீதா, மகள் அழுவதைப் பார்த்துவிட்டு

“குகா.. பொம்பளைங்கன்னா இதெல்லாம் தாங்கி தான் ஆகனும்.. சும்மா நீ பயந்து அவரையும் பயப்பட வைக்காதே..” என்று அதட்டியவர், மருமகனிடம்

“காபியை குடிங்க மாப்பிள்ளை.. இவ சும்மா, சின்ன விஷயத்துக்கு எல்லாம் பயப்படுறா.. நானும் தினமும் சொல்லிட்டு தான் இருக்கேன்.. மண்டைல ஏத்திக்கவே மாட்டுறா..” என்றார்..

“இல்லத்தை.. முதல் குழந்தைல, இதெல்லாம் புதுசு.. அதான் கொஞ்சம் பயப்படுறா..” மாறன், மனைவிக்கு ஆறுதலாக பேச,

“ம்க்கும்.. அப்படி பயம் இருக்கவ, குழந்தை நல்லப்படியா பிறக்கணும்னு, குனிஞ்சு நிமிர்ந்து வேலைப் பார்க்கணும்.. அதை விட்டுட்டு தினமும், உங்களையே வேலை வாங்கிட்டு இருந்தா, இப்படி தான் உடம்பைப் போட்டுப் படுத்தும்.. ஒழுங்கா வீட்டை சுத்தி நட போ..” என்று விரட்டினார்..

அங்கிருந்த இரண்டு நாளும் மாறன் ஓரளவிற்கு குகாவிற்கு தைரியம் சொல்லினான்..

சித்ரா பிரவசத்திற்கு பத்து நாட்கள்  முன்பே வந்திருந்தார்.. மாறனும் ஒரு வாரத்தில் வருவதாக கூறியிருந்தான்..  நடுவில் ஒரு முறை ஸ்கேன் செய்ய சென்றபோது, குழந்தையின் தலை திரும்பியிருந்தது.. அப்பொழுது தான் குகாவிற்கு சற்று நிம்மதியாக இருந்தது..

அன்று காலையிலிருந்து குகாவிற்கு அடிவயிர் வலிப்பதுப் போலலிருந்தது.. சீதாவிடமும் சித்ராவிடமும் இதை அவள் கூறியபோது

“அப்படி தான்மா இருக்கும்.. இனி எப்ப வேணும்னாலும் உனக்கு வலி வரும்..” என்று கூறினர். இவள் உடனே மாறனை போனில் அழைத்துவிட்டாள்.. அவன் ‘ஹலோ’ என்று சொன்னதும், அவனிடமும் அனைத்தையும் கூறியவள்

“உங்களைப் பார்க்கணும் மாறன்.. ஒருவேளை இன்னைக்கே பெயின் வந்தா என்ன பண்ணுறது? உங்களைப் பார்க்காம நான் ஹாஸ்பிடல் போக மாட்டேன்..”

“குகா அப்படி எல்லாம் பண்ணாதே.. வலி வந்தா அத்தை அம்மா கிட்ட சொல்லிடு.. நான் இன்னைக்கு நைட் கிளம்பி வரேன்..”   

“வந்துடுவீங்க தானே?”

“வந்துடுவேன்மா.. இப்போ கொஞ்சம் வேலை இருக்கு.. முடிச்சுட்டு கிளம்பிடுறேன்.. நீ எதுவும் லூசு மாதிரி பண்ணக்கூடாது.. புரியுதா?”

“ம் சரி..” என்றவள், வெளியே சென்று பெண்கள் இருவரிடமும் மாறன் நாளை வந்துவிடுவான் என்பதைக் கூறினாள்..

“குகா, உனக்கு அறிவேயில்லாயா? சும்மா சும்மா அவரை அழைய வெச்சுகிட்டே இருக்க.. உனக்கு வலி வந்தப் பின்னாடி போன் பண்ணாக் கூட, குழந்தைப் பிறக்க முன்ன மாப்பிள்ளை பிளைட்ல வந்திடுவார்.. நீ சும்மா போனை செஞ்சு செஞ்சு அவரையும் பயப்பட வெச்சு, ரெண்டு மாசத்துல அஞ்சு தடவை வந்துட்டார்..” சீதா வழக்கம் போல் மகளைத் திட்டினார்..

“விடுங்க அண்ணி.. எத்தனைப் பேர் கூட இருந்தாலும் புருஷன் இருக்க மாதிரி வருமா? அவனை எல்லாம் இப்படி அழைய விட்டா தப்பேயில்லை.. ஒழுங்காவே இவளைப் பாத்துக்கலதானே அவன்.. இப்போ அனுபவிக்கட்டும்..” என்றார் சித்ரா..

Advertisement