Advertisement

அத்தியாயம் 5

தூங்கி எழுந்ததும் முகம் கழுவி வந்தவளிற்கு வயிற்று வலி எடுத்தது..

“ஐயோ இது வேற.. மாசம் ஆனா கடுப்பா இருக்கு..” என்றவள் கப்போர்டை திறந்து நாப்கினை எடுக்க ஒன்று மட்டுமே இருந்தது..

“வாங்கி வைக்காம விட்டுட்டேன்.. விதுகிட்ட சொல்லனும்” என்று எண்ணியவள் அறையை விட்டு வெளியே வந்தாள்..

“அத்தைகிட்ட வேற சொல்லனும்.. மாமா பக்கத்துல இருக்காரே..” என்று யோசித்தவள் அறையின் வாயிலேயே சிறிது நேரம் நின்றாள்..

“என்னமா அங்கேயே நிக்கிற?” சேதுராமன் மருமகள் வெகு நேரமாகக் கதவின் அருகேயே நிற்பதைப் பார்த்து கேட்டார்..

“ஹான்..” என்று தயங்கியவள் “அவர் இல்லையா மாமா?” என்றாள்

“வெளிய போயிருக்கான்.. எதாவது வேணுமா?” என்ற மாமனாரிடம் எதுவும் கூறாமல்

“அத்தை ஒரு நிமிஷம்” என்று மாமியாரை அழைத்தாள்..

“என்ன ஜீவிதா?” என்றார் கணவனின் அருகேயே நின்றுகொண்டு

‘ஐயோ மாமா முன்னாடி நான் எப்படிச் சொல்லுவேன்..’

“என்னமா? சொல்லு..” என்றார் மறுபடியும்

“அது..” என்று தயங்கியவள் பின் மெதுவாக “ஆத்ல இல்ல..” என்றாள்

“ஓ. இது தானா? இதுக்கு ஏன் இப்படித் தயங்குற? நீ எப்பவும் தூரம் ஆனா படுத்துக்குற ரூம்க்கு போ..” என்றவர் சமையல் அறைக்குச் சென்றார்..

வைதேகிக்கு அது பெரிய விஷயம் இல்லை. அவர்கள் வீட்டில் எப்பொழுதும் இந்த மாதிரி சமயங்களில் தனியாக இருப்பர்.. அவர்கள் வீட்டுப் பிள்ளைகள் அனைவருக்கும் சிறுவயதிலேயே இந்த விஷயம் தெரியும்.. மூன்று நாட்கள் தனியாக இருப்பதால் வீட்டில் உள்ள அனைத்து ஆண் மக்களுக்குமே அது தெரிந்த விஷயம் தான்..

ஆனால் ஜீவிதாவிற்கு இது முற்றிலும் புதிது.. திருமணம் ஆனதில் இருந்து தான் இந்த நாட்களில் தனியாக இருக்கிறாள்.. அதுவும் மாமனார் கொழுந்தனார் முன்னிலையில் தனியாக உட்காந்திருப்பது காட்சிப் பொருள் போல் இருந்தது.. தாய் வீட்டில் இவ்வாறு இருந்திருந்தால் அவளிற்கு அது சங்கடமாகத் தெரிந்திருக்காது..

அங்கே சுதந்திரமாகச் சுற்றிவிட்டு இங்கேயோ மூன்று நாட்களும் தனியறையில் தரையில் படுத்துக் கிடப்பது மிகவும் கஷ்டமாக இருந்தது..

தாய் வீட்டில் இருக்கும் பொழுது அவள் அம்மாவை அங்கே இங்கே நகர விடமாட்டாள்..

“அம்மா எனக்கு வயிறு வலிக்குது.. நீங்க ஹாயா இருக்கீங்க.. என் பக்கத்துலையே உட்காருங்க..” என்பாள்..

“நான் உன் பக்கத்துல உட்கார்ந்தா மட்டும் உன் வலிய என்னால வாங்கவா முடியும்.. சமையல் வேலைய யார் பார்ப்பா? புகுந்த வீட்ல போய் நல்லா அனுபவிக்கப் போற.. உன் மாமியார் இப்படி உன் கூடவே உட்காந்திருப்பாங்களா?”

“என் புருஷன் உட்காருவான்..”

“ஆமா அவனுக்கு வேற வேலை இல்ல பாரு..” என்று திட்டினாலும் மகளின் அருகில் அவ்வபொழுது அமர்ந்து கொள்வார்..

ஆனால் இப்பொழுதோ மூன்று நாட்களும் அவள் இருக்கும் அறைக்குக் கூட விதுரன் வர முடியாது.. சாப்பாடை மட்டும் வைதேகி ப்ளேட்டில் வைத்து மருமகளுக்குக் கொடுப்பார்.. 

வயிற்று வலியோடு தரையில் தனியாகப் படுப்பது, கணவனின் முகம் கூடச் சரியாகப் பார்க்க முடியாதது எல்லாம் சேர்ந்து அவளிற்கு மிகுந்த எரிச்சலைக் கொடுக்கும்..

மொபைலில் கணவனிற்கு நாப்கின் வாங்கி வருமாறு மெசேஜ் செய்துவிட்டு அவள் வழக்கமாகப் பயன்படுத்தும் அறைக்குச் சென்றாள்..

‘இந்து மூணு நாள் தொல்லைக்குப் பேசாமா குழந்தையே பெத்துக்கலாம் போல..’

‘இந்த வலியே உன்னால தாங்க முடியலை.. நீ எப்படிப் பிள்ளைப் பெத்துக்குற வலிய தாங்குவ.’ என்ற மனசாட்சியின் கேள்விக்கு

‘அப்போ என்கூட விது இருப்பான்ல.. ப்ரெக்னசி சிக்னஸ் அப்போ அவன் என் பக்கத்துல இருப்பான்.. அவன் மடில படுத்துக்குவேன்.. இப்போ மாதிரி தனி ரூம்ல இருக்க மாட்டோம்ல..’ என்று பதில் அளித்தாள்..

சிறிது நேரத்தில் அவள் கேட்டதை வாங்கி வந்த விதுரன் அவளிடம் அதைக் கொடுத்துவிட்டு எதுவும் வேண்டுமா என்று கேட்டான்..

“வெந்தயம் வேணும்..” என்றாள் சோர்வாக.

“ரொம்பப் பேயின் இருந்தா ஹாஸ்பிட்டல் போவோமா?”

“இதுக்கு எல்லாம் ஹாஸ்பிட்டல் போவாங்களா? வெந்தயம் தயிர்ல போட்டுக் குடிச்சா சரியாகிடும்.. அது மட்டும் எடுத்துக் கொடு விது..” என்றதும் அதைக் கொடுத்தான்..

இரவு இருவருக்கும் தூங்கா இரவாகிப் போனது.. சனி ஒரு நாள் தான் அவர்கள் சந்தோஷமாக இருப்பது.. அதுவும் இன்று இப்படி ஆனதில் இருவருக்கும் வருத்தமே.. தங்கள் துணையை நினைத்துக் கொண்டே இருவரும் படுத்திருந்தனர்..

மறுநாள் காலை எழுந்தவள் மாமியார் கொடுத்த காபியை பருகிவிட்டு அந்த அறையிலேயே இருந்தாள்..

‘ஒரே ரூம்ல நாள் முழுக்க இருக்கனும்.. ச்ச.. வீக் டேஸ்ல வந்துருக்கக் கூடாது.. ஆபிஸ்ல டைம் போகிருக்கும்.. இப்போ நேரத்த நெட்டித் தள்ள வேண்டியதா இருக்கு..’ என்று புலம்பிக் கொண்டே புத்தகம் ஒன்றை எடுத்துப் படித்துக் கொண்டிருந்தாள்..

அன்று அமாவாசை என்பதால் முன்னோர்களுக்குத் திதி கொடுத்துவிட்டு தான் சாப்பாடு.. அதுவும் வீட்டில் எல்லாரும் உண்டு முடித்தப் பின் தான் இவள் உண்ண முடியும்.. பசி வேறு வயிற்றைக் கிள்ள பிறந்த வீட்டோடு புகுந்த வீட்டை ஒப்பிட்டுப் பார்த்தவளின் கண்களில் கண்ணீர் வந்தது..

‘அஞ்சு நிமிஷம் சாப்பாடு செய்ய லேட் ஆனா அம்மாகிட்ட எப்படி கத்துவேன்.. அம்மாவ கஷ்டப்படுத்துனதுக்குத் தான் இப்போ நல்லா அனுபவிக்கிறேன் போல..’

இரண்டாம் நாள் வலி வேறு அதிகமாக இருக்க, பசியும் வலியும் சேர்ந்து அவளிற்கு மயக்கமே வந்துவிட்டது.. புத்தகத்தை மூடி வைத்துவிட்டுப் பாயில் படுத்தவளின் கண்கள் சொருகியது..

மதிய உணவை உண்டு முடித்தவுடன் மருமகளுக்கு தட்டில் உணவை எடுத்துக் கொண்டு வந்த வைதேகி, ஜீவிதா தூங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து 

“ஜீவி.. ஜீவி..” என்று குரல் கொடுக்க, அவளிடம் எந்தவொரு அசைவும் இல்லை..

“ஜீவிதா..” என்று சற்று குரலை உயர்த்தியும் கூப்பிட்டுப் பார்த்தார்.. பல முறை கூப்பிடும் அவள் விழி திறக்காமல் இருக்கவும் வைதேகிக்கு சற்றுப் பயம் வந்தது.. அதற்குள் அன்னையின் குரல் கேட்டு அங்கே வந்த விதுரன்

“என்னமா ஏன் இப்படிக் கத்தீண்டு இருக்க?” என்று கேட்டான்..

“ரொம்ப நேரமா கூப்பிடுறேன்டா.. எழுந்துக்கவே இல்ல..” என்று கூறவும்

“ஜீவி.. ஜீவி..” என்று விதுரனும் சற்றுச் சத்தமாக அழைத்தான்.. அப்பொழுதும் அவளிடம் அசைவில்லை எனவும் வேகமாக அவளின் அருகில் நெருங்கினான்..

“டேய். அவ மேல படாதே.. தீண்டல்..” என்ற தாயின் வார்த்தையை அவன் கேட்கவே இல்லை.. அவள் அருகில் சென்றவன் அவள் தலையை நிமிர்த்தித் தன் மடியில் வைத்துக் கன்னம் தட்டி எழுப்பினான்..

“ஜீவி.. இங்க பாரு.. ஜீவி..”

சேதுராமன் துருபதன் இருவரும் அறைக்கு வந்தனர்..

“என்னாச்சுடா?” என்ற சேதுராமனின் கேள்விக்கு

“என்னன்னு தெரியலைப்பா.. எழுந்துக்கவே மாட்டுறா?” என்றவன் மீண்டும் கன்னத்தில் பலமாகத் தட்டினான்..

“விது.. இந்தா இந்தத் தண்ணிய தெளி..” சொம்பில் இருந்த தண்ணியை அண்ணனிடம் கொடுத்தான் துருபதன்.. தண்ணீரைத் தெளித்தும் பயன் இல்லாமல் போகவே அனைவருக்கும் பயம் கவ்விக் கொண்டது..

“விது ஹாஸ்பிட்டல் போகலாம்.. நான் கார் எடுக்குறேன்.. நீ மன்னிய தூக்கீண்டு வா..” என்ற துருபதன் கார் கீயை எடுத்துக் கொண்டு வெளியேற மனைவியைக் கைகளில் தூக்கிக் கொண்டு தம்பியின் பின்னோடு சென்றான் விதுரன்..

மருத்துவமனையில் ஜீவிதாவை அனுமதித்தனர்.. அவளைப் பரிசோதித்த மருத்துவர் 

“ஒண்ணுமில்லை.. பிளட் லாஸ் அதிகமா இருந்திருக்கு.. சாப்பிடாம வேற இருந்திருக்காங்க.. அதான்.. வேற ஒண்ணுமில்லை.. ட்ரிப்ஸ் ஏர்னதும் வீட்டுக்கு கிளம்பலாம்..” என்று கூறினார்..

அவள் பசி தாங்க மாட்டாள் என்று விதுரனிற்குத் தெரியும்.. தெரிந்தும் தான் மனைவியைக் கண்டுக் கொள்ளாமல் இருந்துவிட்டோம் என்று அவன் மீதே அவனிற்குக் கோபமாக வந்தது..

மருத்துவமனைக்கு விதுரன் துருபதன் மட்டுமே வந்திருந்தனர்.. சிகிச்சை முடிந்து மனைவியுடன் காருக்கு வந்த விதுரன் தம்பியிடம்

“ஜீவிதா வீட்டுக்கு போடா..” என்றான்

அவனும் ஏன் என்று எதுவும் கேட்காமல் வண்டியை ஜீவிதாவின் வீட்டை நோக்கிச் செலுத்தினான்.. ஜீவிதாவிற்கு இருந்த டயர்டில் கணவனின் மடியில் படுத்து உறங்கிவிட்டாள்.. அதனால் அவளுக்குத் தாங்கள் எங்கே செல்கிறோம் என்று தெரியவில்லை..

வீடு வந்ததும் மனைவியைக் கைத்தாங்கலாக இறக்கினான்.. அப்பொழுது தான் அம்மா வீட்டிற்கு வந்திருப்பதைக் கவனித்தாள் ஜீவிதா.. ‘ஏன்’ என்பது போல் அவள் கணவனை நிமிர்ந்து பார்க்க அவன் ‘வா’ என்று சைகை செய்தான்.

வீட்டின் அழைப்பு மணியை அடித்துவிட்டு காத்திருந்தனர்..  கதவைத் திறந்த ரமா மகளையும் மருமகனையும் கண்டு அதிரிச்சியடைந்தார்..

“வாங்க மாப்பிள்ளை.. வா ஜீவி.. வரேன்னு சொல்லவே இல்ல..” என்றவர் அப்பொழுது தான் கவனித்தார் வாடிய கொடு போன்று இருந்த மகளையும் அவள் கையில் இருந்த  வென் ப்ளானையும்..

“என்னாச்சு ஜீவி?” என்றவர் மகளின் அருகே வந்தார்..

“அத்தை அவ டயர்டா இருக்கா.. முதல்ல அவ உட்காரட்டும்..” என்றவன் உள்ளே அழைத்துச் சென்று சோபாவில் அமர வைத்தான்..

தலை சுற்றல் அவளுக்குக் கொஞ்சம் இருந்ததால் சோபாவில் உட்கார்ந்ததும் பின்னல் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டாள்.. மகளை அவ்வாறு பார்த்ததும் ரமாவிற்கு அழுகை வந்தது..

“என்னாச்சு மாப்பிள்ளை? ட்ரிப்ஸ் போட்டுருக்கு.. உடம்பு சரியில்லையா?” என்றார் கலங்கிய குரலுடன்..

“என்ன மன்னிச்சுடுங்க அத்தை.. உங்க பொண்ண நல்லா பார்த்துக்குவேன்னு உங்ககிட்ட சொன்னேன்.. ஆனா உங்களோட இருந்தப்ப அவ எவ்வளவு சந்தோசமா  இருந்தாளோ அதுக்கு நேர்மாறா எங்க வீட்ல கஷ்டத்த அன்பவச்சிட்டு இருக்கா.. இதுக்கு மேலையும் அவ அங்க இருந்தா இன்னும் அவ உடம்பு மோசமா போகிடும்.. கொஞ்ச நாள் அவ உங்களோட இருக்கட்டும்..” என்றான்..

மருமகனின் பதிலில் தலையும் புரியாமல் வாலும் புரியாமல் குழம்பிய முகத்துடன் மகளையும் மருமகனையும் மாறி மாறி பார்த்தார் ரமா..

கணவனின் பேச்சில் சட்டென்று கண் திறந்த ஜீவிதா அவனை ஒரு மாதிரியாகப் பார்த்துவிட்டு அறைக்குச் செல்ல எழுந்தாள்.. எழுந்தவள் சற்றுத் தடுமாற வேகமாகப் பிடிக்க வந்த கணவனின் கைகளைத் தட்டிவிட்டவள்

“விட்டுட்டு போகணும்ன்னு தானே வந்தீங்க.. கிளம்புங்க..” என்றவள் தாயின் புறம் திரும்பி “ரூம்க்கு கூடீட்டு போங்க மா..” என்றாள்

“ஜீவி என்னமா ஆச்சு.. எனக்கு ஒன்னும் புரியலை… மாப்பிள்ளை என்னவோ சொல்றார்.. நீ என்னமோ சொல்ற.. உங்க ரெண்டு பேருக்குள்ள எதுவும் சண்டையா?”

“அம்மா.. என்னால நிக்க முடியலை.. ப்ளீஸ் ரூம்க்கு கூடீட்டு போங்க” என்று கூற அதற்கு மேல் எதுவும் கேட்காமல் மகளை அவளது அறையில் கொண்டு சென்று விட்டார் ரமா..

“எதாச்சும் சாப்டுறியா? ஜூஸ் போட்டுக் கொடுக்கவா?”

“வேண்டாமா.. தூங்குறேன்..” என்றவள் படுத்துக் கொண்டாள்..

ஏசியை உயிர்பித்துவிட்டு வெளியே வந்த ரமா மருமகனின் அருகில் சென்றார்..

“நான் கிளம்புறேன் அத்தை.. பத்து நாள் அவ இங்க இருக்கட்டும்.. வீக்கா இருக்கா.. நல்லா சாப்பிட வைங்க.. இன்னும் அவ காலைல இருந்து எதுவும் சாப்பிடலை..” என்றான்

“இன்னும் சாப்பிடலையா? மணி நாளாகா போகுதே.. அவ எவ்வளவு நேரம் பசி தாங்கவே மாட்டாளே.. இப்போ ஜூஸ் குடிக்கிறியான்னு கேட்டதுக்கு வேண்டாம்ன்னு சொல்லீட்டா..”

“ட்ரிப்ஸ் போற்றுக்கதுனால அவளுக்குச் சாப்பிடப் பிடிக்காம இருக்கலாம். கொஞ்ச நேரம் கழிச்சு எதுனா கொடுங்க..” என்றவன் “அவளுக்குப் பீரியட்ஸ்..” என்றான்

ரமாவிற்கு ஓரளவிற்கு விஷயம் புரிந்திருந்தது.. தங்கள் வீட்டில் இந்த மாதிரி நேரத்தில் மகள் செய்யும் அட்டகாசம் அவர் அறியாததா.. மாப்பிள்ளை வீட்டில் தனி அறையில் படுத்திருப்பதாக முன்பே கூறியிருக்கிறாள்.. பெரும்பாலும் அவளிற்கு யாராவது ஊட்டி விட வேண்டும்.. அதுவும் வலியுடன் அவள் இருந்தால் பக்கத்தில் உட்கார்ந்து ஊட்டி விட்டால் மட்டுமே உண்பாள்.. அங்கே அப்படி இருந்திருக்க முடியாது.. அதில் சரியாக உண்டிருக்க மாட்டாள் அதில் தான் முடியாமல் ஆனது போல என்று நினைத்துக் கொண்டார்..

“நாளைக்கு அவள ஆபிஸ் போக வேண்டாம்ன்னு சொல்லிடுங்க அத்தை..”

“சரி மாப்பிள்ளை..”

“அப்போ நான் வரேன் அத்தை..”

“காபி குடிச்சுட்டு போங்க மாப்பிள்ளை..”

“இல்லத்தை.. இருக்கட்டும் நாளைக்கு வரேன்..” என்றவன் மாமியாரிடம் விடைபெற்றான்..

காரிலேயே இருந்த துருபதன் அண்ணன் வந்ததும்

“மன்னிய இங்க விட்டுட்டு வந்துட்டியா? ஏன்டா?”  என்றான்

“கொஞ்ச நாள் இருக்கட்டும்.. நீ வண்டிய எடு..”

அவர்கள் வீட்டிற்கு வந்ததும் வைதேகியை முறைத்துவிட்டு அறைக்குச் சென்றவன் கதவை அறைந்து சாற்றினான்.. மகனின் செய்கையில் குழம்பிய வைதேகி சின்ன மகனிடம் என்னவென்று கேட்டார். அவன் நடந்ததைக் கூறவும்

“எதுக்கு அவ அம்மா ஆத்துல விட்டுட்டு வந்துருக்கான்.. நான் பாத்துக்க மாட்டேனா?” என்ற தாயின் கேள்வி அறையில் இருந்த விதுரனின் காதில் நன்றாக விழுந்தது.. அதற்கு பதிலளிக்கும் விதமாக கதவை திறந்து வெளியே வந்தவன்

“ரொம்ப நன்னா பாத்துண்டியே மா.. இதுக்கு மேலையும் அவள உன்கிட்ட விட்டா அவளைக் கொன்னுட்டு தான் மறுவேள பார்ப்ப..” என்றான் கோபமாக

மகனின் வார்த்தையில் வைதேகி ஸ்தம்பித்து நின்று விட்டார்..

என் காதல் தாரகை நீ தானடி

Advertisement