Advertisement

முத்தக் கவிதை நீ – 7

நல்ல இனிமையான பாடல் திடீரென நடுவில் ஸ்வரம் தப்பினால் எப்படி இருக்குமோ, குளிர்காலத்து காலை நேர தூக்கத்தின் இடையே தடங்கல் ஏற்பட்டால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு  கோபம் உண்டானது மைக்கேலுக்கு. அவன் தனது பேபியின் நினைவில் மூழ்கி இருக்கும் போது யார் இடையிட்டாலும் அவனால் ஏற்றுக் கொள்ள முடியாது. அவளின் நினைவுகளோடு அவனிருக்கும் நேரம் அவனுக்கு ரொம்பவுமே ஸ்பெஷலான நேரம். யார் என்ற எரிச்சல் பார்வையுடனே பார்த்தவனின் புருவம் ஆச்சரியத்தில் வில்லாக வளைந்து நின்றது.

‘இவள்….. இவளை எங்கோ பார்ததிருக்கிறோமே!!! எங்கே???’ கண்கள் அவளை விட்டு அகலாது சிந்தனை வயப்பட்டவனாய் விழிதட்ட மறந்து பார்த்தபடி இருந்தான் மைக்கேல். “எக்ஸ்க்யூஸ் மீ” மறுபடியும் குயில் கூவி தனக்கு வழி வேண்டும் என்று கேட்டு அவனது சிந்தனையைக் கலைத்தது. குழப்பத்துடனே நகர்ந்து வழிவிட்டவன் யோசித்தபடியே அவளைப் பார்த்திருந்தான்.

தனக்கான இருக்கையில் அமர்ந்தவள் சற்று நேரம் கண்களை மூடி அமர்ந்திருந்தாள் ஆழ்ந்த மௌனத்தில். அவளையே கேள்வியாய் பார்த்திருந்தான். தலையை உலுக்கியபடி திரும்பிக் கொள்ள சிலமணி நேரங்கள் மௌனமாய் கரைந்தது. மைக்கேல் மனது முழுவதும் தனது பேபியையே சுற்றிச் சுற்றி வந்தது. ‘இப்போது எப்படி இருப்பாள்? அதே சுருட்டை முடியும் துறுதுறு கண்களும் குண்டு கன்னங்களும் யாரையும் பார்த்தவுடன் கவர்ந்திழுக்கும் வசீகரமும் ……. அப்படியே இருப்பாளா? இன்னமும் வால்தனங்களால் தன்னுடன் இருப்போரைச் சிரிக்க வைத்துக் கொண்டு இருப்பாளா? அல்லது வளர்ந்ததால் மாறியிருப்பாளோ? ச்சே கட்டாயம் மாறியிருக்க மாட்டாள்’ எண்ணங்கள் ஓட அவனையும் அறியாமல் தலையை ஆட்டிக் கொண்டான்.

அவள் பெயரே வெகு நாட்களுக்கு தனக்கு சொல்லத் தெரியவில்லை என்று எவ்வளவு கோபம் அவளுக்கு. பாவம் மைக்கேலுக்கு நேத்ரா என்று தெளிவாக சொல்லத் தெரியவில்லை. ஆனால் தன்னைவிட மிகவும் குள்ளமாக ஸ்ப்ரிங் பொம்மை போல் ஒருவள் வந்து தன்னிடம் கோபத்தில் கத்தி ஆர்ப்பாட்டம் செய்த போது ஏனோ அப்படியே அள்ளிக் கொள்ள தான் தோன்றியது அன்று. “நேத்ரா” அவனின் பேபி.. சொல்லிப் பார்த்துக் கொண்டான் மைக்கேல். அவள் பெயரே இனித்தது அவனுக்கு. கடைவாயில் ஒதுக்கிய கற்கண்டாய் எப்போதுமே இனிப்பவள் அவள்.

“மைக்கேல் தானே நீங்க?” அருகில் இருந்த குயில் கூவியது மைக்கேலின் கவனத்தைக் கலைத்தது. ஆம் என்பதாய் தலையசைத்தவன் மீண்டும் தன்னினைவுகளுடன் மூழ்க முயற்சிக்க “உங்களுக்கு என்னை நியாபகம் இல்லையா? நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு ஃபோட்டோ ஷூட் பண்ணிருக்கோம். ஐம் ஸாஷா” கைகளை குலுக்குவதற்காக நீட்டியவளை கூர்மையாகப் பார்த்தான் மைக்.

அன்றைய படப்பிடிப்பு நினைவில் வர ஒரு மெல்லிய புன்னகையை கொண்டு வந்தது அவனுக்கு.  பொதுவாகவே பெண்களிடம் இருந்து சற்றுத் தள்ளியே தான் இருப்பான். அதற்காக முனிவனெல்லாம் இல்லை. ஏனோ எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் அவனது ஸ்பிரிங் பேபி நினைவு வந்தது. இந்தப் பெண்ணுடன் நடந்த ஃபோட்டோ செஷனில் இந்தப் பெண் இவனிடம் பேச எவ்வளவோ முயற்சித்துப் பார்த்து தோற்றவளாய் போகும் போது “உனக்கெல்லாம் கேர்ள் ஃப்ரெண்டே கிடைக்காமத் தான் கஷ்டப்படுவ” எனறு மனதார சாபமிட்டுச் சென்றிருந்தாள்.

அவளுக்குமே பழைய நினைவு வந்தது போல. சிரித்துக் கொண்டாள்.  “ஐ நோ உங்களுக்கு பெண்கள்கிட்ட பேச அவ்வளவு இன்ட்ரஸ்ட் இல்லை தான். ஆனா இந்த பயணம் பலமணி நேரம் ஆகும். பக்கத்து பக்கத்து சீட்ல உட்கார்ந்து கிட்டு பேசாம போரடிச்சு….. ப்ளீஸ் ஐ ஹோப் யூ அண்டர்ஸ்டாண்ட். ஜஸ்ட் ஜெனரல் டாக்ஸ். “ தனது அதீத மேக்கப் பூச்சு பளபளத்த விழிகளை பாவமாக தாழ்த்தி செயற்கை பணிவைக் காட்டினாள். ஏனோ சட்டென்று யாருக்கும் பணியாமல் நிமிர்ந்து நிற்கும் தன் பேபியின் முகம் கண்முன் வந்து போனது.

தான் பதிலளிக்காத போதும் தன்னிடம் விடாது அடைமழையாய் பேசியபடி வந்த ஸாஷாவின் உதவியால் விமானம் தரையிறங்கும் போது மைக்கேலுக்கு நல்ல தலைவலி. விட்டால் போதும்டா சாமி ஓடி விடலாம் என்பதாய் திரும்பியும் பாராமல் தன் லக்கெஜ்களை எடுத்துக் கொள்ள கன்வெயர் அருகில் சென்றவனின் பின்னோடே வந்து சேர்ந்த ஸாஷா “இந்த ஜர்ணியை நான் மறக்கவே மாட்டேன். தாங்க்ஸ் ஃபார் தி கம்பெனி. சீக்கிரமே மீண்டும் சந்திப்போம் மைக்” என்று விடைபெற கைகுலுக்க கையை நீட்டினாள்.

ஏனோ மனமே இல்லாவிட்டாலும் மரியாதை நிமித்தம் கைகளை நீட்டியவன் கைகளைப் பற்றியவள் “ஏனோ உங்களுக்கு என்னை பிடிக்கல. பட் ஐ வில் வெய்ட் மைக். நீங்க உங்களுக்கு எப்போ என்ன உதவி வேணும்னாலும் என்னை வந்து பாருங்க. ஏன்னா திஸ் இஸ் மை ஹோம்லேண்ட். ஹோப் டு மீட் யூ சூன்” என்று செயற்கை சிரிப்பொன்றை ஒட்ட வைத்தவளாய் தனது அலைபேசி எண்ணை எழுதிய ஒரு சின்ன தாளை அவனது கரங்களில் திணித்து விட்டு திரும்பித் திரும்பி பார்த்தபடி சென்று விட்டாள்.

‘இவளை ஏன் எனக்கு பிடிக்கவில்லை. ஒருசிலரைப் போல் வழிசல் எல்லாம் இல்லை. கூட வேலை செய்த ஓரிரு முறைகளை வைத்துப் பழக்கம். அவ்வளவே. ஆனால் ஏனோ மாடலிங் துறையில் இருப்பவர்களுக்கு பழக்கப்பட்டுப் போன செயற்கை சிரிப்பும் மேலோட்டமான பழக்கமும் ஏனோ ஸாஷாவை சற்று தன்னிடம் இருந்து ஒதுங்கியே காட்டியது மைக்கேலுக்கு. ஏனோ யாரைப் பார்த்தாலும் அவனால் அவர்களை தனது பேபியுடன் ஒப்பிட்டுப் பார்க்காமல் இருக்க இயலவில்லை.

அவளுடன் அவன் செலவழித்தது ஒருவருட காலம் மட்டுமே. ஆனால் அவளிடம் எந்த ஒரு செயற்கை விஷயமும் அவன் கண்டது இல்லை. பள்ளி மாணவியாய் அறிமுகம். ஆனால் அவளைப் பிடித்துப் போய் அவளுடன் நட்பு கொண்டு பின்பு அந்த நட்பு காதலாகி பித்தாகிப் போகும் வரைக்கும் கூட ஏன் அதன்பின் வேண்டாம் இனி எதுவும் இல்லை என்று முறித்துச் சென்ற போதும் கூட சிறு அளவு கூட கள்ளம்கபடமோ செயற்கைத்தனமோ இல்லை அவளிடம். எப்போதும் நேர்கொண்ட பார்வையும் படபட பட்டாசாய் பொரிந்து கொட்டும் சுறுசுறுப்பும் தான் அவள்.

‘பேபி நீ எங்கே இருக்க???? இப்படி என்னை உன்மேல் பைத்தியமாக்கிட்டியே பேபி.  உனக்காகவே வந்துட்டேன். உன்னோட நாட்டுக்கே வந்துட்டேன். இனி இங்கே தான். உன்னோட தான் என் வாழ்க்கை. கெட் ரெடி பேபி.’ மனதுக்குள் சொல்லியபடியே லக்கேஜ்களை எடுத்துக் கொண்டு ஏர்ப்போர்ட்டை விட்டு வெளியேறினான்.

———————————————-+————————————————————————————–

மயிலாப்பூர் மேலமாசி வீதியே களைகட்டியிருந்தது. பாட்டிக்கு உடம்பு சரியில்லாத காரணத்தால் சிம்பிளான திருமணம் என்ற பேரில் சொல்லிக் கொண்டாலும்  யசோதாவிடம் நன்றாக கறந்து விட்டாள் விசாலம். கற்பகாம்பாள் சந்நிதியில் திருமணம் நடத்தி மருத்துவமனை சென்று பாட்டியிடம் ஆசீர்வாதம் வாங்கி வந்தனர் கிருஷ்ணாவும் மீனாவும்.  கீர்த்தி தான் ஓடி ஓடி வேலை செய்தான் பொறுப்பான அண்ணனாய்.

திருமணத்திற்கு முன்பு கிருஷ்ணாவைத் தனியே அழைத்துப் பேசியவன் அவனிடம் சில விஷயங்களை தெளிவுபடுத்தியிருந்தான். “கிருஷ்ணா நேக்கு மீனா வேற நேத்ரா வேற இல்லை. ரெண்டு பேரும் என்னோட தங்ககைள் தான்.  நோக்கு கல்யாணம் பண்ணிக் குடுக்கிறதுல நேக்கு துளிகூட இஷ்டமில்லை. இது உன்னோட உத்யோகத்துக்காகவோ இல்லை சம்பாத்தியத்துக்காகதவோ இல்லை.  நீயும் அத்தையும் எனக்கு ஒட்டாத மனுஷா தான். அத்தை கிட்டயும் சொல்லி வை. என்னவோ பிடிக்கல. பூசி மொழுகி பேசத் தெரியாது நேக்கு. மீனா இஷ்டப்பட்டாளேனு தான் இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துண்டோம். அவளை நீ நல்லபடியா பார்த்துக்கணும். அப்படி அவளை மனசு வருத்தப்பட வைச்சா இதுவரைக்கும் அமைதியா பார்த்த இந்த கீர்த்திவாசன் உன்னை சும்மா விட மாட்டேன்.புரிஞ்சுதா?” முகத்தில் உணர்ச்சியற்று குரலில் உறுதியாகப் பேசினான்.

கீர்த்தி பேசிய தொனியே சொன்னது அவன் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் அவன் நன்கு யோசித்து சொன்னது என்றும், அதில் ஏதாவது மாறினால் அவன் சொன்னதைச் செய்வான் என்றும். மீனாவிற்கு ஒன்று என்றால் கேட்பதற்கு நாங்கள் இருக்கிறோம் என்ற வார்த்தையை அந்த உத்திரவாதத்தை தான் இவ்வளவு கரடுமுரடாக கீர்த்தி கூறியிருந்தான். சாதாரணமாக அதிர்ந்து கூட பேசாதவன் இன்று ஒரு அண்ணனாக பேசுவது இதமாக இருந்தது கிருஷ்ணாவிற்கு. தன் அம்மாவிடம் சொல்லி வைக்க வேண்டும் மீனாவை நல்லவிதமாக நடத்த வேண்டுமென என்று நினைத்துக் கொண்டான்.

திருமணம் முடிந்து வீட்டிற்கு வந்தவர்களை ஆர்த்தி எடுத்து உள்ளே அழைத்துச் சென்று திருஷ்டி கழித்தார் கமலா. விசாலம் அதைச் செய் இதைச் செய் என உயிரை எடுத்துக் கொண்டிருந்தாலும் மீனாவின் சந்தோஷத்துக்காக பொறுத்துக் கொண்டவராய் சிரித்த முகமாய் செய்தார். நேத்ரா ஒரு ஓரமாய் அமர்ந்து நடப்பதை எல்லாம் வேடிக்கை பார்த்தபடி இருந்தாள். தான் தப்பினோம் என்று எண்ணினாலும் தன் தங்கையின் வாழ்க்கை நன்கு அமைய வேண்டுமே என்ற கவலை அரித்தது.

மதிய உணவிற்குப் பின் கிருஷ்ணா விசாலத்திடம் வந்து “அம்மா வா நம்மாத்துக்கு போகலாம்” என்றழைக்க விசாலமோ மகனை முறைத்துப் பார்த்து விட்டு “என்னடா அவசரம். இருந்து எங்கம்மாவோட காரியத்தை எல்லாம் முடிச்சிட்டு போகலாமே. ஏன் சொல்றேன்னா இங்கே நம்ம இல்லைன்னா உயில்படி பாகம் பிரியாது. உங்க மாமி எல்லாத்தையும் அவ பொறந்தாத்துக்கு மூட்டை கட்டிடுவா. எப்படியும் இன்னைக்கோ நாளைக்கோ.” என்று சொல்லி முடிக்கும் முன் “விசாலம்ம்ம்” என்று கத்தியேவிட்டார் சீனிவாச சாஸ்திரி.

இது நாள் வரை தனது பேச்சுக்கு மறுபேச்சு பேசாத மனிதன் தன்னை அதட்டிக்கூட ஒரு வார்த்தை சொல்லாதவர் இன்று ருத்ரமூர்த்தியாய் தன்னை ஏன் முறைத்துக் கொண்டிருக்கிறார் என்று புரியாமல் முழித்தாள் விசாலம். “அடிப்பணப் பிசாசே!! இவ்வளவா கீழ்த்தரமா போவ நீ? உன்னைப் பெத்தவ தானே அங்கே ஹாஸ்பிட்ல்ல உயிருக்குப் போராடிண்டிருக்கா? அவ பத்திரமா ஆத்துக்கு வரனும்னு நாங்க எல்லாரும் வேண்டிண்டிருக்கோம். நீயானா காரியம் முடியட்டும்னு பேசறியே? ச்சீச்சீ. என்ன ஜென்மமோ நீ. போயிடு இப்பவே உங்காத்துக்கு போயிடு. உனக்கான பங்குக்கும் மேலயே உனக்கு வந்து சேரும்.” கத்தியவர் தன் மேல்த்துண்டை உதறி தோளில் போட்டவராய் வெளியேறினார்.

அது நாள்வரை அதிர்ந்து பேசாத மனிதன், தன்னை விசாலம் படுத்தும் போதெல்லாம் தலையிடாது ஒதுங்கியே இருந்தவர் இன்று விஸ்வரூபம் எடுத்தவராய் அடைமழையாய் பொழிந்து கொட்டியது கமலாவை வாயடைத்து நிற்க வைத்தது. தடுமாறிப் போனவளைக் கைத்தாங்கலாக பற்றிய நேத்ரா தனது அறைக்கு அழைத்துச் சென்றாள்.

செய்வதறியாது முழித்து நின்ற யசோதாவை தன்னோடு அணைத்து அவளை மெல்ல நடத்தி தனது அம்மாவிடம் அழைத்துச் சென்றான் கீர்த்தி. தனது மாமாவின் ரௌத்திரத்தைக் கண்டு வாயடைத்து நின்றுவிட்ட கிருஷ்ணாவை தோளில் தட்டிய மீனா “என்னண்ணா இப்படி பார்த்துண்டிருக்கேள். வாங்கோ நம்மாத்துக்கு போகலாம். அம்மாவையும் கூப்பிடுங்கோ” என்றாள். ஏனோ அதிர்ச்சியில் இருந்து வெளிவர இயலாது முழித்தவனுக்கு கொஞ்சம் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்து விட்டு விசாலத்திடம் வந்தாள் மீனா.

“அம்மா !! வாங்கோ போகலாம்” என்று தோளைப் பற்றி அணைத்துக் கொண்டாள். “பார்த்தியாடி மீனா?? எங்கண்ணா எப்படி மாறிட்டான்னு?” என்று ஆரம்பித்தவள் மேலும் எதுவும் சொல்லும் முன் “அம்மா நீங்க பேசினது தப்பு. பெரியப்பா இத்தோட நிறுத்திண்டாளேனு நினைச்சுக்கோங்கோ. வாங்கோ” என்று அதட்டி அவரை இழுத்துச் சென்றாள். சன்னல் வழியாக இவர்கள் போவதைப் பார்த்திருந்த நேத்ராவிற்கு தன் தங்கை சமாளித்துக் கொள்வாள் என்ற நம்பிக்கை தலைகாட்ட நிம்மதிப் பெருமூச்சொன்றை வெளியேற்றினாள்.

புயலுக்குப் பின் வரும் அமைதியாய் வீடே நிசப்தமாய் இருக்க ஆளுக்கொரு மூலையாய் முடக்கிக் கொண்டார்கள். அவரவருக்கு அவரவர் சிந்தனை. யாருக்கும் நடந்ததில் இருந்து வெளி வர இயலவில்லை. அதனால் தானோ என்னவோ ஹாலில் அலறிய தொலைபேசியை யாருமே கவனிக்கவில்லை. நாலைந்து முறை அடித்து ஓய்ந்து பின் மீண்டும் அலற கீர்த்தி தான் சுயவுணர்வு வந்தவனாய் பாய்ந்து சென்று எடுத்தான்.

அனைவரின் கவனத்தையும் அவனது “பாட்டீஈஈஈஈஈஈ” என்ற அலறலே பதறியெழ வைத்தது.

கவிதையாவாள்!!!!!!!!!!!!!!!

Advertisement