Advertisement

12 – முத்தக் கவிதை நீ

நமக்கு வாழ்க்கையில் நம்பிக்கை குறையும் போதெல்லாம் நம்மை சுற்றியுள்ள, நமது மனதுக்கு நெருக்கமானவர்கள் கொடுக்கும் தெம்புக்கு இணை இந்த உலகில் வேறு எதுவுமே இல்லை. அப்படி ஒரு மனதைரியத்தை தான் நேத்ராவிற்கு மியாவும் டெட்டியும் கொடுத்தார்கள். இனி தன் வாழ்வில் தனது மேக்னெட் இல்லை எனவும் அதற்கு காரணமும் தான் தான் எனவும் குற்றவுணர்வில் தன்னை குறுக்கிக் கொண்டு இருந்த நேத்ரா அந்த குற்றவுணர்ச்சியில் இருந்து வெளிவர பெரிதும் உதவியது இவர்கள் தான்.

ஃபோரம் மாலை மூவருமாகச் சேர்ந்து அலசி ஆராய்ந்து புரட்டிப் போட்டனர்.  காலை பத்து மணிக்கு நுழைந்தவர்கள் மதியம் இரண்டு மணி வரை சுற்றித் திரிந்து வெற்றிகரமாக எதுவுமே வாங்காமல் அந்த மாலில் இருக்கும் அத்தனை கடைகளிலும் புகுந்து அங்கிருந்த சேல்ஸ் கேர்ள்ஸின் வயிற்றெரிச்சலை லாரி லாரியாக வாரிக் கொட்டிக் கொண்டு வெளியேறினார்கள். விலை கொடுத்து ஏதாவது வாங்கியிருந்தால் கூட இவர்களுக்கு அவ்வளவு சந்தோஷம் கிடைத்திருக்குமோ என்னவோ, ஆனால் மதியம் இரண்டு மணிக்கு வெளி வரும்போது அப்படி ஒரு புத்துணர்வு நேத்ராவிற்கு.

மதிய உணவுக்காக அருகில் இருந்த தாபாவில் நுழைந்தனர். என்னவோ நிறைய வேலை செய்து வெட்டி முறித்தாற் போன்று அப்படி ஒரு பசி மூவருக்கும். தங்களது விண்டோ ஷாப்பிங் அனுபவங்களைப் பற்றி பேசியபடி தங்களுக்கான ஆர்டரை கொடுத்துவிட்டுக் காத்திருந்தனர்.  “ஸ்பிரிங் உனக்கு ஸ்பெஷல் ட்ரெயினிங் கொடுக்கனும். உனக்கு விண்டோ ஷாப்பிங் பத்தி ஒன்னுமே தெரியலையே?” அலுத்துக் கொண்டாள் டெட்டி.

அவளை வெட்டவா குத்தவா ரேஞ்சுக்கு முறைத்து வைத்த நேத்ரா “உன்னை அங்க யாரும் அடிக்காம விட்டாங்கனு சந்தோஷப்படு. ஒரு டாப் கலர் சரியில்லைன்னு ஒதுக்கினா, இன்னொன்னு சைஸ் இருந்தும் இல்லைன்னு ஒதுக்கறா, இன்னொன்னு வேற டாப்புல இருக்கிற டிசைன் இதுல இருந்தா நல்லாருக்கும்னு வேண்டாம்னு சொல்றா. அந்த சேல்ஸ் கேர்ள் பாவம். விட்டா அழுதுருப்பா. உன்னையெல்லாம் ஆர்டர் குடுத்து தான் செஞ்சிருப்பாங்க போல. யுனீக் பீஸ்பா நீ “ என்றாள் நேத்ரா.

அதுவரை தனது மொபைலில் எதையோ நோண்டிக் கொண்டிருந்த மியா “பேபீஸ் இங்கே பாரேன் இந்த வாரத்து ஃபேஷன் கலெக்ஷன் இன்ஸ்டாகிராம்ல போட்டுட்டாச்சு. செம்மயா இருக்குல்ல. இந்த லாவெண்டர் கலர் ஃபராக் சூப்பர் தானே.” இடமும் வலமுமாக மொபைல் ஸ்க்ரீனை நகர்த்தி காண்பித்தாள். நேத்ராவையும் தாண்டி தலையை நீட்டிப் பார்த்த டெட்டி “இனி நமக்கு ஆன்லைன் ஷாப்பிங் தான் சரிவரும் போலயே” என்று மோவாயைத் தடவியபடி சொல்லி வைத்தாள்.

அசுவாரஸ்யமாக பார்த்துக் கொண்டிருந்த நேத்ராவின் பார்வையில் பட்டது அந்த புகைப்படம். அது…. அவன்….. ஒரு பெண்ணை கைத்தாங்கலாய் பிடித்தபடி நின்ற புகைப்படம். புகைப்படத்தின் கீழே கேப்ஷனில் “ரகசியத் தேனிலவு கொண்டாட இந்தியா வந்த ஆஸ்திரேலியா மாடல்கள்” என்று இருந்தது. இது….. இவன்?????? தேனிலவா?????? அதுவும் இந்தியாவிலா??? கண்கள் சட்டென குளமாக பார்வையைத் தாழ்த்திக் கொண்டாள்.

அவ்வளவு நேரம் தங்களுடன் நன்றாகப் பேசிக் கொண்டிருந்த நேத்ராவின் திடீர் மௌனம் மியாவின் பார்வைக்குத் தப்பவில்லை. “பேபி ஆர் யூ ஆல்ரைட்?” என்று கேட்க சட்டென தன்னை சுதாரித்துக் கொண்டவளாய் ஒரு ரெடிமேட் செயற்கை புன்னகையை கொடுத்தவள்  தனது ப்ளேட்டில் இருந்த உணவில் கவனத்தை திருப்புவதாய் பாவனை செய்தாள்.

மியாவும் டெட்டியும் பார்வையாலே பேசிக் கொண்டதை நேத்ரா பார்க்கவில்லை. உண்டு முடிக்கும் வரை யாருமே பேசவில்லை. தன்னுள்ளே ஆழ்ந்து போனதாலோ என்னவோ நேத்ரா எதையும் கண்டுகொள்ளும் நிலையுலுமில்லை. உணவு முடிந்து தங்களது அறைக்குப் போய்ச் சேரும்வரை இப்படியே தானிருந்தது. அறைக்குள் நுழைந்ததும் டெட்டி நேத்ராவின் கைகளைப் பற்றி இழுத்து “கமான் கேர்ள் ஸ்பிட் இட் ஔட். என்ன தான் உன் ப்ரச்சனை? இன்னிக்கு காலைல வரைக்கும் நல்லா தானே இருந்த? என்னாச்சு இப்போ?” என்றாள்.

எதுவும் பேசாமல் தனது அறைக்குச் சென்ற நேத்ரா தனது அலமாரிக்குள் துணிகளுக்கு அடியில் வைத்திருந்த லேமினேட் செய்யப்பட்ட ஃபோட்டோ ஒன்றை எடுத்து வந்து இருவரிடமும் நீட்டினாள். அதில் நேத்ரா குட்டி நேத்ராவாக பள்ளிக்காலச் சிறுமியாக இருந்தபோது எடுத்தது என்பது புரிந்தது.

பரதநாட்டிய உடையில் இருந்த நேத்ரா வின் அருகில் நெடுநெடுவென வளர்ந்த ஒருவன் நின்றிருந்தான். நேத்ராவையே பார்த்தபடி நின்றிருந்தான். அவனது பார்வையில் அவள் மீது இருந்த காதல் புரிபட்டது. கண்கள் மட்டும் பூனைக்கண்கள் போல் இருந்தது. ஆனால் அதுவே அவனுக்கு ஒருவித கவர்ச்சியாய் இருந்தது.  “வாவ் திஸ் மேன் இஸ் ஸோ ஹேண்ட்ஸம்” வெளிப்படையாகவே ஜொள்ளினாள் டெட்டி.

“ஹேய் வெய்ட்!!! இது ….” ஏதோ புரிபட மியா தனது மொபைலை எடுத்து அவசர அவசரமாக இன்ஸ்டாவை நோண்டினாள். “பேபி திஸ் இஸ் ஹிம். இவர் தான் உன்னோட மேக்னெட்டா? அப்போ இந்த கேப்ஷன்ல போட்டிருக்கிற நியூஸ் பார்த்திட்டு தான் நீ அப்செட் ஆகிட்டியா? “ மியா தனது பேபியை எப்படி தேற்றுவது என்று புரியாமல் பிதற்றினாள். ஃபோட்டோவையே வெறித்துப் பார்த்திருந்த நேத்ரா ஒரு கசந்த புன்னகையை மியாவிடம் சிந்தினாள்.

“அவன் அவ்வளவு சீக்கிரமா எல்லாம் என்னை விட்டுட மாட்டான் பேபி. அந்த நேரத்துல அவ்வளவு மனசு கஷ்டத்துலயும் நாந்தான் அவனை போனு சொன்னேனே தவிர அவன் என்னை விடவே இல்லை. இப்பவும் ஐம் ஷ்யுர் அவன் அந்த ஃபேட்டோவுக்கு ஏதாவது ரீஸன் இருக்கும். ஐ நோ ஹிம். ஹீ இஸ் மை மேக்னெட் ஃபாரெவர்” என்றாள் உறுதியான குரலில்.

“அப்புறமா என்ன டேஷுக்கு அங்க தாபாவுல இருந்து இங்க வர்ற வரைக்கும் எதையோ பறிகொடுத்த மாதிரி வந்தியாம். பொஸஸிவ்னெஸ் வந்துருச்சோ? ஒத்துக்க மனசில்லையா பேபி?” கோபமும் அதே சமயம் கவலையும் தொனிக்க கேட்டு வைத்தாள் டெட்டி.

“டெட்டி ஜஸ்ட் ஸ்டாப் இட். நீ அவளை காயப்படுத்தற.” மியா நேத்ராவை அணைத்தபடி சொன்னாள். மறுத்து தலையசைத்த நேத்ரா “எனக்கு அவ ஆதங்கம் புரியுது பேபி. அவ என்னை காயப்படுத்தல. நான் காயப்படக் கூடாதுனு பயப்படறா. நான் அப்செட் ஆனதுக்கு காரணம் அந்த ஃபோட்டோ இல்லை பேபீஸ். மேக்னெட் இஸ் இன் இந்தியா!!!!!!!! ஏன்???? இப்போ எதுக்கு இங்க வந்திருக்கான்.? அப்போ அவன் அங்க வீட்டுக்குப் போய் கேட்டுட்டா???” தலையை இரு கைகளிலும் தாங்கியவளாய் அப்படியே மடங்கி அமர்ந்தாள் நேத்ரா.

மியாவுக்கும் டெட்டிக்கும் இவளை எப்படித் தேற்றுவது என்று தெரியவில்லை. அவள் பயப்படுவது போல் மைக் இவளின் வீட்டுக்கு போய் விசாரித்தால் என்னாகுமோ? ஆனால் இப்படியும் நடக்குமா? சுமார் ஐந்தாறு வருடங்குளுக்கு முன் பார்த்து மனதை பறிகுடுத்த ஒரு பெண்ணுக்காக அவளே வேண்டாம் என்று சொன்ன பின்பும் அவளைத் தேடி நாடுவிட்டு நாடு வருவானா ஒருவன். மைக்கேலின் மீதான மதிப்பு தங்கத்தின் விலை போல் சரேலென உயர்ந்து போனது இருவருக்கும்.

மாலை மூன்று மணி சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. காலை ஃப்ளைட்டை தூங்கியே மிஸ் செய்த கடுப்பில் தனது செக்யூரிட்டி க்ளியரன்ஸ் முடிந்து ஃப்ளைட்டில் ஏறி அமர்ந்த மைக் டேக் ஆஃபிற்கு முன் மொபைலை ஃப்ளைட் போரில் போடும் முன் ஒரு முறை ஏதாவது தனக்கு செய்தி உண்டா என்று பார்க்க டேட்டா ஆன் செய்தவன் இன்ஸ்டாகிராமில் ஃபோனே ஜாமாகி நிற்கும் அளவிற்கு நோட்டிஃபிகேஷன் வர அரண்டு போனான்.

எப்படியும் ஃப்ளைட் கிளம்ப நேரமாகும் என்பதால் என்ன திடீர் பரபரப்பு என்று பார்க்கலானான். அவனையும் ஸாஷாவையும்  டேக் செய்து நேற்று ஹோட்டல் லாபியில் எடுத்த புகைப்படத்தையும் போட்டு ரகசிய தேனிலவு என்று போட்டிருந்ததைப் பார்த்ததும் அதிர்ந்து தான் போனான். இது ஸாஷாவின் வேலை என்று நன்றாகவே புரிந்தது. அந்தப் புகைப்படத்தின் கீழே ஸாஷாவின் பதில்களும் அதற்கு ஏற்பவே இருந்தது மைக்கேலுக்கு வெறியை உருவாக்கியது.

தனது கோபத்தை எல்லாம் கொட்டிக் தீர்த்து வண்ண வண்ண வார்த்தைகளை கலந்து அதற்கு பதில் கொடுத்த மைக் பின்பு தனது வாலட்டில் இருந்த புகைப்படத்தை எடுத்து அந்தப் புகைப்படத்தை தனது மொபைல் காமிராவில் கிளிக்கியவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு “எனது வாழ்க்கையான இவளுக்காக இந்தியாவில் இருக்கிறேன். இவள் மட்டுமே என் வாழ்க்கை. இவளுக்காக மட்டுமே நான்” என்று கேப்ஷனிட்டு புகைப்படத்தை அப்லோட் செய்தான்.

இது தனது மாடலிங் வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக மாறும் என்பதும் புரிந்தது. ஆனால் ஸாஷா செய்த வேலையை அவனால் மன்னிக்கவே முடியவில்லை. அனல் மூச்சு வாங்க தனது கோபத்தைக் கட்டுப்படுத்தும் வழியறியாமல் கை முஷ்டிகள் இறுக கண்மூடி அமர்ந்திருந்தான். அவனது மொபைலில் ஏதோ நோட்டிஃபிகேஷன் வந்திருந்தது. என்னவென்று எடுத்துப் பார்த்தவனுக்கு ஆச்சரியத்தில் சந்தோஷத்தில் உள்ளம் குதித்து குத்தாட்டம் போட்டது.

அழுது சோர்ந்து போயிருந்த நேத்ரா அப்படியே தூங்கிப் போயிருந்தாள். அவளை சமாதானப் படுத்தும் வகையறியாமல் மியாவும் டெட்டியும் தங்களது தலையில் இல்லாது மூளையைப் போட்டு உருட்டிக் கொண்டிருந்தார்கள். ஹரிணி மைக் தி மாடல் என்ற அவனது ப்ரொஃபைலை ஃபாலோ செய்யத் தொடங்கினாள். அவனது புகைப்படங்களை எல்லாம் பார்த்தவள் அவனது பெர்சனல் வாழ்க்கையைப் பற்றி கூகுளில் தேடிப்பிடித்து படித்தாள்.

மைக்கின் சொந்த வாழ்க்கையைப் பற்றி அவ்வளவு தூரம் ஒன்றும் பெரிதாக இல்லை இணையத்தில். அவன் அவ்வளவு தூரம் யாரிடமும் சோஷியலைஸ் செய்யாத ஆசாமியாகவே இருந்திருக்கிறான். மாடலிங் துறையில் அவனுக்கு மிகவும் நல்ல பெயர். கணினி துறையில் படித்திருந்தான். அவனது முகநூல் பக்கங்களைப் புரட்டிப் பார்க்க அதிலும் ஒன்றும் பெரிதாக தெரிந்து கொள்ள இயலவில்லை.

“என்ன மியா இந்த ஹீரோ சார் ரொம்ப சோதிக்கறார். அவரோட எந்த ப்ரொஃபைலும் மாடலிங் தவிர அவரைப் பத்தி வேற எந்த செய்தியுமே சொல்லலியே. இவரை எப்படித்தான் ஜட்ஜ் பண்றது?” என்றாள் டெட்டி. “நாம ஏன் அவரை ஜட்ஜ் பண்ணனும். ஸ்பிரிங்கிற்கு அவரைப் பிடிச்சிருக்கு. அவளோட ஜட்ஜ்மெண்ட் எப்பவுமே தப்பாகாது. அந்தண்ணா இந்தியா வந்தாச்சுல்ல. இனி இவளைத்தேடி இங்கே  வந்து நம்ம பேபியை தூக்கிட்டு போகப்போறார் பாரேன்” கண்களில் கனவுகளுடன் பேசினாள் மியா.

“டோண்ட் பீ ஸ்டுபிட் மியா? அவருக்கு இவ எங்க இருக்கானு எப்படித் தெரியும்? அவருக்குத் தெரிஞ்சா தானே வந்து தூக்கிட்டுப் போக முடியும்?” என்றாள் டெட்டி. “பேபி அது அண்ணாவோட சாமர்த்தியம். நீ நேத்துவுக்கு தெரியாம எதுவுமே செய்யாத சொல்லிட்டேன்.” கைகளை நீட்டி எச்சரிக்கை செய்தவள் வெளியே சென்று வந்த அயர்ச்சியில் தூங்கிப் போனாள்.

தனது தலையைக் குடைந்து யோசித்துக் கொண்டிருந்த ஹரிணி மீண்டும் இன்ஸ்டாகிராமில் மைக்கேலின் ப்ரொஃபைலை குடைய அவன் பதிந்திருந்த புகைப்படம் கண்ணில் சிக்கியது. “ஹுர்ரே” தன்னை மறந்து கத்தி விட்டாள் ஹரிணி.  நேத்ராவின் புகைப்படத்தை போட்டு அவனிட்டிருந்த கேப்ஷன் ஹரிணிக்கு இவர்களைச் சேர்த்து வைக்க வழியென்ன என்று ஐடியாவைக் கொடுத்தது. இவர்களிடம் சொன்னால் இரண்டு பாட்டிகளுமாகச் சேர்ந்து அட்வைஸ் செய்தே கொன்றுவிடுவார்கள் என்பதால் சொல்ல வேண்டாம் என்று முடிவு செய்தாள்.

அவசர அவசரமாக மைக்கேலின் ப்ரொஃபைலுக்கு ஒரு குறுஞ்செய்திகளை தட்டிவிட்டவள் அவன் பதில் வருவதற்கு காத்திருக்க தொடங்கினாள்.

கவிதையாவாள்!!!!!!!!!!!

Advertisement