Advertisement

  1. முத்தக் கவிதை நீ
அந்த ஜுலை மாதத்துக் காலை நேரம் பெங்களூர் நகரத்தை தனது குளிரினால் குளிப்பாட்டியது. ஜே.பி.நகரின் மையப்பகுதியில் இருந்த வாசவி எஜுகேஷன் ட்ரஸ்ட்டின் கல்லூரி வளாகம் ஒன்பது மணிக்கெல்லாம் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. எம்.சீ.ஏ பிரிவின் முதலாம் வருட வகுப்புகள் ஆரம்பித்திருக்க அனைவரும் மும்முரமாய் கவனித்துக் கொண்டிருந்தனர். நாலாவது வரிசையில் இருந்த ஒருத்தியை தவிர.
அமர்ந்திருந்த பெஞ்சிற்கு அடியில் அலைபேசியை வைத்து தனக்கு வந்த குறுஞ்செய்தியைப் படிக்க முயன்று கொண்டிருந்தாள் சௌமியா. இவள் குறுஞ்செய்திகளை வாசித்து பதிலனுப்பும்முன் அடுத்த செய்தி வந்திருந்தது. ‘இவ ஒருத்தி. அனுப்பின மெஸேஜுக்கு பதில் வரும்முன்ன அடுத்த மெஸேஜ் அனுப்பிருவா. கிளாஸுக்கு வராம எங்க சுத்தறாளோ?’ மனதுக்குள் திட்டிய படியே பதில் அனுப்பினாள்.
‘ஐயம் வெயிட்டிங் இன் கேண்டின். கம் ஔட்’ என்று அடுத்து வந்த குறுஞ்செய்தியை புறக்கணித்து வகுப்பை கவனிக்கவா இல்லை எழுந்து போகவா என்று மனதுக்குள் பட்டிமன்றம் நடத்திய சௌமியா செய்தி அனுப்பியவளின் குணமறிந்தவளாய் இப்போது போகாமலிருப்பது தான் தனக்குத்தானே வைத்துக் கொள்ளும் ஆப்பு என்று புரிந்து மெல்ல எழுந்து அரைமணிநேரமாய் ரம்பம் இழுத்துக் கொண்டிருந்த ப்ரொஃபஸர் ராகவியிடம் “ஐம் ஃபீலிங் சிக். நீட் டு கோ” என்று முகத்தைப் பாவமாய் வைத்துக் கொண்டு சொல்ல ஆமோதிப்பாய் தலையசைப்பைப் பெற்று அங்கிருந்து அகன்றாள்.
வகுப்பை விட்டு வெளியே வந்தவளுக்காகவே காத்திருந்தது போல் சௌமியாவின் தோளைச் சுற்றிக் கைபோட்டு இழுத்துக் கொண்டாள் நேத்ரா. திடும்மென்று தன்னை யாரோ தோள்தொட்டு இழுக்க பயந்து போனவளாய் பதறி விலகியவளைக் கண்டு கலகலவென்றுச் சிரித்தவளை வெட்டவா குத்தவா என்று பார்வை பார்த்து வைத்தாள் சௌமியா.
“என்ன மியா!!! பயந்துட்டியா?? என்னவிட்டா யாரு உன்னை இப்படி ஹக் பண்ணுவாங்க? வா பேபி போகலாம்” என்று கேண்டினை நோக்கி இழுத்தாள். “நேத்ரா!! இப்படி பாதி நாள் கிளாஸ் அட்டெண்ட் பண்ணலைன்னா அட்டெண்டன்ஸ் ஷார்ட்டேஜ் வருமே. என்ன பண்ணுறதா ஐடியா?” இடுப்பில் கைவைத்தபடி நகரமறுத்து முறைத்து நின்ற சௌமியை விஷமச் சிரிப்புடன் பார்த்து நின்றவள் “அதுக்கெல்லாம் ஆள்செட் பண்ணி ப்ராக்ஸி குடுக்க ஏற்பாடு செஞ்சாச்சு மியா. என்னவோ ஸ்கூல் பசங்க மாதிரி பயப்படாத. இன்னிக்கு கேண்டின்ல ஸ்பெஷல் ரவா தோசையாம். வா போகலாம்” என்று சௌமியாவையும் தரதரவென்று பிடித்து இழுத்தபடி சென்றாள்.
நேத்ரா ஐந்தேகாலடி அறுந்த வால். சராசரிக்கும் சற்று குறைவான உயரம் தான். சுருட்டை முடி. துறுதுறு கண்கள். ஓரிடத்தில் நில்லாமல் எப்போதும் யாரையாவது வம்பிற்கு இழுக்கும் குணம். மியா என்ற சௌமியாவால் கோவம் வரும்போது மட்டும் ‘சென்னைரௌடி’ என்று அழைக்கப்படுபவள். ஆம் நேத்ராவிற்கு சென்னை மாநகரம் தான் பிறந்து வளர்ந்த ஊர். மைலாப்பூரில் சீனிவாச சாஸ்திரியின் மகள் தான் நேத்ரா. சீனிவாச சாஸ்திரி வைதீகம் செய்பவர். அவருக்கும் அவரது மனைவி கமலத்திற்கும் பிறந்தவர்கள் தான் நேத்ராவும் கீர்த்தி என்ற கீர்த்திவாசனும். 
கீர்த்திவாசன் கணினியில் பொறியியல் படிப்பு முடித்ததும் பெங்களூர் வந்து வேலை தேடிக் கொண்டான். அவனுக்கும் நேத்ராவிற்கும் நான்கு வயது இடைவெளி தான். நேத்ரா படபட பட்டாசு என்றால் கீர்த்தி அமைதியான குணம். யாரிடமும் அவ்வளவு சீக்கிரம் பேசக்கூட மாட்டான். இவனுடன் படித்தவர்கள் எல்லோருக்கும் இவனையும் நேத்ராவையும் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கும். அப்படியொரு அண்ணனுக்கு இப்படி ஒரு தங்கையா என்று. பள்ளிப் பருவம் வரை அறுந்தவாலாக திரிந்தவள் ஏனோ பின்பு தனக்குள்ளேயே ஒடுங்கிப் போனாள். கமலம் மட்டுமே மகளின் இந்த ஒதுக்கத்தைப் பார்த்து தவித்துப் போனார்.
சென்னையில் கணினியில் இளநிலைப்பட்டம் வாங்கியவள் அடுத்து என்ன என்று எந்த முடிவும் எடுக்காமல் இருக்க சீனிவாசனின் புலம்பலினால் கீர்த்தி வாசன் நேத்ராவை பெங்களூர் அழைத்து வந்து கல்லூரியில் சேர்த்தும் விட்டான். வீட்டில் எல்லோருக்கும் செல்லப் பெண்ணான நேத்ரா பயப்படும் ஒரே ஆள் கீர்த்தி தான். குரலை அதிகம் உயர்த்தாமல் அதிராத ஆழ்ந்த குரலில் பேசும் கீர்த்தியைக் கண்டால் எப்போதும் நேத்ராவிற்கு பயம் தான்.
படிப்பில் சுட்டிதான் என்றாலும் ஏனோ கீரத்திவாசனைப் போல் அக்கறை எடுத்துப் படிக்கும் பழக்கமெல்லாம் அவளிடம் இல்லை. எப்போதும் தானும் தன்னைச் சுற்றி இருப்போரும் சந்தோஷமாக சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும். இது மட்டுமே அவளுக்கான எண்ணம். மற்றபடி வாழ்க்கையில் எதையும் சீரியஸாக எடுத்துக் கொள்ள மாட்டாள். மைலாப்பூரின் வாரன் ரோட்டையே தன் நண்பர்களுடன் ரெண்டு படுத்தும் நேத்ரா வீட்டிற்குள் நுழைந்து விட்டால் ஏனோ பேசாமடந்தை தான்.
பரம்பரை பரம்பரையாக வைதீகம் செய்து வருபவர்கள் சீனிவாசன் குடும்பத்தினர். தாத்தா பாட்டி அப்பா அம்மா சித்தப்பா சித்தி அவர்களின் பிள்ளைகள் என்று பெரிய கூட்டுக் குடும்பத்தில் வளர்ந்தவள் தான் நேத்ரா. ஆனால் இவள் பள்ளியிலோ கல்லூரியிலோ அடிக்கும் லூட்டியோ எடுக்கும் அவதாரமோ வீட்டிலிருப்பவர்கள் அறியாத ஒன்று. அவர்களைப் பொறுத்தவரை தனக்கென்று எதுவும் ஆசைப்படாத ஒரு அப்பாவிப் பெண் தான் நேத்ரா.
ஆயிரம் பத்திரம் சொல்லி கீர்த்தியிடம் நேத்ராவைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பை கொடுத்திருந்தார் கமலா. “கண்ணப்பா!! இவளுக்கு ஒன்னும் தெரியாது. பசின்னுகூட வாயைத் திறந்து கேட்க மாட்டா. அது தெரியாத ஊர். புரியாத பாஷை. இவளை பத்திரமா பார்த்துக்கோ” என்று இவனுக்குக் காதில் ரத்தம் வரும்வரை சொல்லி அனுப்பியிருந்தனர்.
கல்லூரியில் சேர்ந்து விட்டு அவளை தனது ரூமிற்கு அருகிலேயே ஒரு ஹாஸ்டலில் சேர்த்து விட்டான் கீர்த்தி. தான் ஒரு அபார்ட்மெண்ட் பார்த்து வாடகைக்கு எடுக்கும் வரை நேத்ராவை தங்கவைக்க அவனுக்கு அந்த ஹாஸ்டல் தான் உதவியது. எங்கே கீர்த்தியுடன் தங்க வேண்டி வருமோ என்ற பயத்தில் இருந்தவளுக்கு ஹாஸ்டல் சொர்க்கலோகமாக தெரிந்தது.
கல்லூரி சேர்ந்த ரெண்டே நாளில் சௌமியா நேத்ராவின் பெஸ்ட்டீ ஆகிப்போனாள். நேத்ராவின் கலகலப்பான குணம் சௌமியாவை கவர்ந்தது. பணக்கார பெற்றோர்களுக்குப் பிறந்திருந்தும் வாழ்நாளில் பாதியை ஹாஸ்டலிலேயே செலவழித்த சௌமியாவிற்கு பார்த்ததும் ஏனோ நேத்ராவை ரொம்பவே பிடித்துப் போனது. நேத்ராவும் சௌமியாவும் நகமும் சதையும் போலாகி விட்டார்கள்.
இந்த ஒரு மாதத்தில் இருவருமாக வகுப்பைக் கட்டடித்து ஊர் சுற்றுவதாகட்டும் முன்னிரவு வரை தெருவோரப்‌ பார்க்குகளில் பொழுதை ஓட்டிவிட்டு நள்ளிரவு கேட்டைத் தாண்டி குதித்து ஹாஸ்டலுக்குச் செல்வதாகட்டும் நேத்ராவும் சௌமியாவும் பார்ட்னர்ஸ் இன்  க்ரைம் ஆனார்கள். 
என்னதான் நானும் ரௌடி தான் ரேன்ஞ்சுக்கு நடந்து கொண்டாலும் நேத்ரா தனக்கென்று சில விதிமுறைகள் வைத்திருந்தாள். அவள் பேச்சில் ஹாஸ்யம் இருக்கும் ஆனால் யாரையும் காயப்படுத்தியதில்லை. அவளது பழக்க வழக்கமெல்லாம் சௌமியா மற்றும் இன்னும் இரண்டு பெண்களுடன் மட்டுமே. அவளது துறுதுறுப்பைக் கண்டு அவளிடம் நட்பு பாராட்ட வந்த சிலரை ஏனோ எட்டவே நிறுத்தி விட்டாள் நேத்ரா.
ஸ்கூல் படிக்கும் வாண்டுகள் கூட ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் என்று கலக்கும் போது முதுகலை பட்டம் படிக்கும் நேத்ரா தனக்கென்று ஒரு அலைபேசி கூட வைத்துக் கொள்ளவில்லை. சௌமியாவிற்கு புதிராகவே தெரிந்தாள் நேத்ரா. ஏனென்று கேட்டதற்கு “மியா ஐம் நாட் இன்ட்ரஸ்டெட். இதெல்லாம் சும்மா வேஸ்ட் ஆஃப் டைம்” என்று விட்டாள். மற்ற நாட்களில் மறந்தும் சாமி கும்பிடாத நேத்ரா சனிக்கிழமைகளில் அனுமன் கோவிலில் பழியாய் கிடந்தாள்.
இவளைப் பற்றி யோசித்தபடியே இருந்த சௌமியாவின் கண்முன் கைகளைச் சொடுக்கிய நேத்ரா “மியாஆஆஆஆ! முழிச்சுகிட்டே தூங்கறியா?” என்று அவளது தோள்களைப் பற்றி உலுக்கினாள். நடப்பிற்கு வந்தவளாய் சௌமியா “நான் என்ன பூனையா? மியானு கூப்பிடற?” கோபம் போல் முகத்தை வைத்துக் கொண்டாள்.
“யெஸ் பேபி!! மை செல்லப் பூனைக்குட்டி தான் நீ! ஒரு ரவா தோசையை வச்சுகிட்டு இவ்வளவு நேரமா உட்கார்ந்திருக்கியே!! நான் பாரு ரவா தோசை, அக்கிரொட்டி, முடிச்சு இப்போ மசாலா சாயா ஆர்டர் குடுத்தாச்சு. உனக்கு சாயா வேணுமா?” அடுக்கிக் கொண்டே போனாள். “ஐயோ எனக்கு போதும் பா. இதுக்கே நான் எக்ஸ்ட்ரா ஒருமணி நேரம் த்ரெட்மில்லில ஓடனும்” என்றாள் மியா.
சௌமியாவிற்கு மாடலிங்கில் ஆர்வம். அதனால் தன் உடல் எடை அதிகரித்து விடாமலிருக்க எப்போதும் உணவுக்கட்டுப்பாட்டைக் கடைபிடிப்பாள். நேத்ராவோ நேரெதிர். உண்பதற்காகவே உயிர் வாழ்கிறேன் என்பது தான் அவளது சித்தாந்தம். “வாய்க்கு ருசியா சாப்பிடலைன்னா அப்புறமா இந்த வாழ்க்கையே வேஸ்ட் மியா. என்ன எக்ஸ்ட்ரா ரெண்டு கிலோ ஏறுமா? ஏறிட்டுப் போகுது. அதுக்காக கண்முன்னாடி டெத்பை சாக்லெட் ஐஸ்க்ரீமையும் மட்டர் பன்னீர் மசாலாவையும் ஏக்கப் பார்வை பார்த்திட்டு சாப்பிடாம இருக்க முடியுமா?” என்பாள்.
ஒருவழியாக கேண்டினை ஒருவழியாக்கி அங்கிருந்தவர்கள் இவர்களை விநோதமாகப் பார்க்க வைத்து எப்போதடா கிளம்புவார்கள் என்று பலரை கொலைவெறிப் பார்வை பார்க்க வைத்து வெற்றிகரமாக அங்கிருந்து மியாவைக் கூட்டிக் கொண்டு கிளம்பினாள் நேத்ரா.
‘இன்னிக்கு லஞ்ச் மெனு கேட்கலையே மியா நீ? பாலக் பன்னீர், ராகி முத்தே, புலவ், ஜாமுன். நான் மஞ்சுநாத்கிட்ட சொல்லி வச்சுருக்கேன் நம்ம பங்கை தனியா எடுத்து வைக்கச் சொல்லி. இன்னிக்குனு பார்த்து ஒரு மணிவரைக்கும் லேப் வச்சுட்டாங்களே” என்னவோ வாழ்க்கையின் பெரிய ப்ரச்சனையே இதுதான் என்பது போல் பேசிக் கொண்டே வந்தாள். ‘என்ன பீஸ்டா இவ. எப்போ பாரு சாப்பாடு தானா? இதுல கேண்டின் ஹெல்பரை கூட்டுச் சேர்த்தாச்சு!! கடவுளே என்னைக் காப்பாத்து!!’ என்று மனதுக்குள் வேண்டுதல் வைத்தவளாய் நேத்ராவுடன் இணைந்து நடந்தாள் மியா.
இவர்கள் லேப் இருக்கும் ப்ளாக்கை அடையும் போது “எக்ஸ்யூஸ் மீ. நேத்ரா. கேன் ஐ டாக் டு யூ?” என்ற குரல் இவர்களை தடுத்து நிறுத்தியது. குரலுக்குச் சொந்தக்காரன் இவர்கள் கிளாஸைச் சேர்ந்த நகுல். இதுவரை நேத்ராவிடம் எந்த ஆணும் வந்து பேசியதில்லை. அவளும் பேசவிட்டதுமில்லை. இன்று இவன் வந்து பேசவும் சௌமியாவிற்கு ஆச்சரியமாக இருந்தது. நாகரீகம் கருதி சற்று முன்னே நடக்கப் போனவளின் கைகளைப் பற்றி நிறுத்தியவள் “நில்லு மியா! நீயும் இரு. என்ன விஷயம் நகுல்?” என்றாள் விட்டேத்தியான தொனியில்.
சௌமியா அகன்றால் கொஞ்சம் தனிமை கிடைக்கும் இவளிடம் மனம்விட்டுப் பேசலாம் என்றெண்ணி வந்தவனுக்கு ஏமாற்றமே. இருந்தாலும் இன்று எப்படியும் பேசி விடவேண்டும் என்ற முடிவுடன் “அது… அது வந்து… நேத்ரா ஐ லவ் யூ. ஐ ஃபெல் ஃபார் யுவர் நேச்சர். யூ ஆர் அன் ஏஞ்சல் நேத்ரா. யூ ஸ்டோல் மை ஹார்ட். என்னை ஏத்துப்பியா? எனக்கு இந்த ஸ்பிரிங் முடி, இந்த துறுதுறு கண்கள், இந்த கலகல சிரிப்பு எல்லாம் எனக்கே எனக்கு வேணும். வாழ்நாள் முழுவதும். கிடைக்குமா?” என்றான் கைகளில் இருந்த ஒற்றை ரோஜாவை நீட்டியபடி.
இது எதிர்ப்பார்த்தது தான் என்ற போதும் இதற்கு நேத்ராவின் பதில் எப்படி இருக்கும் என்ற ஆர்வத்தில் அவளைப் பார்த்த சௌமியாவிற்கு அதிர்ச்சி தான். நேத்ரா மனதளவில் எங்கோ பலநூறு மைல்களுக்கு அப்பால் சென்றுவிட்டது போன்ற உணர்வைக் கொடுத்தது அவள் நின்ற விதம். “நேத்ரா!! பேபி!! வாட் ஹேப்பன்ட்” என்று அவளது தோள் தொட்டு சௌமியா உலுக்க தன்னுணர்வு பெற்றவளாய் விதிர்த்து நிமிர்ந்தவள் தன் முன் நின்று தன் பதிலுக்காக தன்னையே பார்த்திருக்கும் நகுலிடம் “ஐம் சாரி. ஐ காண்ட். டோண்ட் மிஸ்டேக் மீ. டோண்ட் பாதர் மீ ப்ளீஸ்” என்று மறுத்துவிட்டு அங்கிருந்து விடுவிடுவென நடந்து சென்றாள்.
“பேபி வெய்ட். ஐம் கமிங்” என்றபடி அவள் பின்னோடு ஓடி அவளோடு இணைந்து கொண்ட சௌமியாவிற்கு இந்த நேத்ரா மீண்டும் புரியாத புதிராகவே இருந்தாள். லேபில் வெப் கோடிங் செய்ய அமர்ந்தவளின் காதுக்குள் “திஸ் லாங்க் ஸ்பிரிங் ஹேர், திஸ் ஹார்ட்டி லாஃபிங் ப்யூட்டி, திஸ் ஏஞ்சல் இஸ் கோயிங் டு பீ மைன் லைஃப் லாங்” என்ற அவனது குரலே. கடந்தகாலம் அவளைத் தன்னுள் இழுத்துக் கொள்ள வெளிவர முடியாமல் போராடினாள் நேத்ரா.
…,..

Advertisement