Advertisement

மொழி-1

     “என்ன இளங்கோ நீங்க?! வண்டி நல்ல கண்டிஷன்ல இருக்கா இல்லையான்னு தினமும் செக் பண்ண மாட்டீங்களா?!” என்றான் காட்டமாக.

     “சார் மதியம் கூட நல்லாதான் சார் இருந்தது. இப்போதான் திடீர்னு ஸ்டார்ட் ஆகலை! எஞ்சின் பால்ட் போல சார். திடீர்னு இப்படி சதி பண்ணிடுச்சு! நீங்க ஆபிஸ் ஹார் முடிஞ்சு வரதுக்குள்ள ரெடியாகிடும்னு நினைச்சேன். ஆனா இன்னிக்கு ரெடி ஆகாதுன்னு சொல்லிட்டான் மெக்கானிக்! மன்னிச்சிடுங்க சார். நான் வேற வண்டி ஏற்பாடு பண்ணிடறேன் சார்.” என்று இளங்கோ சார் மேல் சார் போட்டு பவ்யமாய் பதில் அளித்துக் கொண்டிருக்க,

     இளங்கோவை வறுத்து எடுத்தவனோ, இப்போது அவனது அலுவகத்தின் வழியே கடந்து கொண்ருந்த ஆட்டோவைப் பார்த்துக் கொண்டே,

     “நீ எந்த வண்டியையும் ரெடி பண்ண வேணாம்! போய் அந்த ஆட்டோவை அழைச்சிட்டு வா!” என்றான்.

    இளங்கோ சட்டென்று பார்வையை ஆட்டோவின் மீது திருப்ப அவனுக்கு எல்லாம் புரிந்து விட்டது.

     “இதோ இதோ போறேன் சார்!” என்றவன் ஓட்டமாய் ஓடிச் சென்று ஆட்டோவை நிறுத்த,

     வண்டி சட்டென்று நிற்காமல், மெதுவாய் நின்றது.

     “சார் வெளில போகணும்! ஆட்டோ..” என்று அவன் தயங்கியபடி கேட்க,

     “ம்!” என்றது ஆட்டோவினுள் இருந்த அக்குரல்.

     அதில் சிறிதும் தயக்கமில்லாதது கண்டு, இளங்கோ, உள்ளுக்குள் வியந்து கொண்டு, அவனது மேலதிகாரியை அழைத்து வர, வந்தவன் ஆட்டோ டிரைவரை மேலும் கீழுமாய் பார்த்தவாரே ஆட்டோவினுள் ஏறி அமர்ந்தான்.

     “எங்க போகணும்?!” என்று ஆட்டோ டிரைவர் கடமையே கண்ணியமாய்க் கேட்க,

     பின் இருக்கையில் அமர்ந்திருந்தவன் அமைதி காக்க,

     “சார் அவர் வீட்டுக்குதான் போகணும்” என்றான் இளங்கோ பதட்டமாய்.

     இப்போது கூட அவன் பதில் சொல்லாதது கண்டு பின்னே அமர்ந்திருந்தவனை, கண்ணாடி வழியே முறைத்துவிட்டு தன் ஆட்டோவைக் கிளப்பினாள் அவள்.

     ஆனால் அதன்பின் மறந்தும் அவனைக் கண்ணாடி வழியே கூட அவள் நிமிர்ந்து பார்க்காமல், சாலையின் மீது கவனத்தை வைத்து வண்டியைச் செலுத்திக் கொண்டிருக்க, அவள் வண்டியைக்கிளப்பிய நொடி முதல் அவன் கண்கள் அவளை விட்டு எங்கும் அகலாமல் அவள் மீதே நிலைத்திருந்தன.

     ‘கொஞ்சம் மெலிஞ்சுட்டாளோ!’ என்று நினைத்தவன் தன் கோபத்தையும் மீறி அவளைத் தன் கண்களால் அரவணைத்துக் கொண்டான் காதலோடு.

                                    *******

     “சார் சார் தயவுசெஞ்சி எப்டியாவது இந்த ஒருதரம் எப்சி பண்ணி விட்டுட சொல்லு உங்க பெரிய ஆபிசரை! அடுத்த தடவைல இருந்து பக்காவா வண்டியை ரெடி பண்ணி எடுத்துனு வரேன்!” என்று கெஞ்சிக் கொண்டிருந்தாள் அவள்.

     “இங்க பாரு! நீ குடுக்குற சொற்பக் காசு ஆயிரம் ரூபாய்க்கு எல்லாம் நான் அவர்கிட்ட போய் நின்னு என் வேலைய இழக்கணுமா?! இந்த வேலையே வேணாம். ஒழுங்கா வண்டியை ரெடி பண்ணி எடுத்துட்டு வா. அவரே எப்சி பண்ணியாச்சுன்னு கையெழுத்துப் போட்டுக் குடுத்துடுவாரு!” என்று விட்டு அவன் நகர,

     அதுவரை அவனிடம் கெஞ்சிக் கொண்டிருந்தவள்,

    “யோவ் சின்ன ஆபிசரே! எத்தினி வருஷமா நீ என்னன்ட காசு வாங்கிக்கினு பெரிய ஆபீசரான்ட கையெழுத்து வாங்கி குடுத்திருப்ப! இப்போ மட்டும் என்ன புதுசா இப்படி சீனைப் போடுற?!” என்று அவள் எகிற,

இதையெல்லாம் தூரத்திலிருந்து கேட்டுக் கொண்டிருந்தவன்,

“மூர்த்தி!” என்று குரல் கொடுத்தான்.

     “அய்யய்யோ இந்த பொண்ணு பண்ண கலாட்டாவுல சாரே எழுந்து வெளில வந்துட்டாரே! ஐயோ இவ பேசினது எல்லாம் கேட்டிருப்பாரோ?!” என்று பயத்தில் புலம்பியபடியே அவனை நோக்கி ஓடத் துவங்கினார் மூர்த்தி.

     அவளும் அவர் பின்னேயே செல்ல, இருவரையும் பார்த்துக் கொண்டிருந்த அவன் வெளிர்ந்த முகம் இப்போது செந்நிறமாய் மாறிப் போனது.

     அவன் பார்த்த பார்வையிலேயே அவன் அனைத்தையும் கேட்டுவிட்டான் என்று மூர்த்தி உணர்ந்து கொள்ள,

     “சார்! அது அந்தப் பொண்ணுதான் சார்…” என்று அவர் சட்டென அவள் மீதி பழியைத் தூக்கிப் போட, அவரை நிதானமாய் ஒரு பார்வை பார்த்தான்.

     அவனது இந்தப் பார்வை இப்போது அவருள் வயிற்றைக் கலக்குவது போன்ற பிரமையை ஏற்படுத்த,

     “சார் இப்போவெல்லாம் நாங்க யாருமே காசு வாங்குறது இல்லை சார்!” என்றார் சரணடைந்து.

     “அப்டியா அப்போ அந்தப் பொண்ணுகிட்ட சொற்பக் காசு ஆயிரம் ரூபான்னு சொல்லிட்டு இருந்தீங்க! அப்போ அஞ்சாயிரம் ரூபா குடுத்தா என் கையெழுத்தைநீங்க போட்டுக் குடுத்திருப்பீங்களோ?!” என்றான் முகத்தில் எந்த உணர்வும் காட்டாமல்.

     “ஐயோ சார்! நான் அப்படியெல்லாம் பண்ணதில்லை சார்!” என்று வெலவெலத்துப் போன மூர்த்தி,

     “இனி இனி எப்பவும் இதுபோல செய்ய மாட்டேன் சார்! ரிப்போர்ட் மட்டும் எழுதிடாதீங்க சார்” என்றார் கைகூப்பி.

     “கையை கீழ இறக்குங்க!” என்று அவருக்கு ஆணையிட்டவன்,

     “இந்த ஆபீஸ்ல இருக்குவங்கள்ல யாரவது ஒருத்தர் செய்யிற சின்ன தப்புல கூட, பல உயிர்களோட வாழ்வு சம்மந்தப் பட்டிருக்கு!இனி ஒருமுறை இது போல நடந்தா நிச்சயமா உங்களுக்கு வேலை இருக்காது” என்று அவரை எச்சரித்தான்.

     அந்த அதிகாரி சொல்வது சரியென்று அவள் மண்டைக்கு உரைத்த போதும், அவளது நிலைமை இன்றோடு எப்சி செய்ய வேண்டிய தேதி முடிவடைய உள்ளதால்,

    “சார் பெரிய ஆபீசர் சார், இந்த தடவை மட்டும் எனக்குக் கையெழுத்துப் போட்டுக் குடுத்துடுங்க சார்! நான் எப்டியும் இன்னும் ஒரு மாசத்துல வண்டியை பக்காவா ரெடி பண்ணிடுவேன்!” என்று அவள் இப்போது அவன் அருகே சென்று கெஞ்சத் துவங்க,

    “நீங்க வண்டியை ஒழுங்கா ரெடி பண்ணி எடுத்துட்டு வாங்க. நான் அடுத்த நிமிஷமே கையெழுத்துப் போடுறேன்” என்று அழுத்தம் திருத்தமாய்ச் சொல்லிவிட்டு, அவன் தனது அலுவலக அறைக்குள் நுழைந்துவிட, அவனைத் தொடரப் போனவளை, தடுத்தி நிறுத்திய மூர்த்தி,

    “சார்தான் சொல்லிட்டார்ல ஒழுங்கு மரியாதையா வண்டியை ரெடி பண்ணி எடுத்துட்டு வா” என்று கத்திவிட்டு,

    “உன்னால இன்னிக்கு என் வேலையே போக இருந்தது! யார் செஞ்ச புண்ணியமோ தப்பிச்சுட்டேன்!” என்று புலம்பியபடியே நகர்ந்து விட்டார்.

‘ஐயோ நான் என்னதான் செய்வேன்! இவன் படிப்புக்காக ஊர் முழுக்க கடன் வாங்கியாச்சு! போதாக்குறைக்கு இந்த அப்பா பண்ண வேலைக்கு எப்சி பண்ண சேர்த்து வச்சிருந்த காசையும் செலவு பண்ண வேண்டியதாப் போச்சு! சரி காசு குடுத்தா இந்த ஆபீசர் எப்பவும் கையெழுத்து வாங்கி குடுத்துடுவாறேன்னு தைரியமா வந்தா, இந்த பெரிய ஆபீசர் ரொம்பதான் ஸ்ட்ரிக்ட்டு போல! யோவ் ஆண்டவா என்னய்யா இப்படி புலம்ப வுட்டுட்ட என்ன?!’ என்றவள் வேறு வழியின்றி ஆட்டோவை எடுத்துக் கொண்டு வட்டிக்கு விடும் அலமு அக்கா வீட்டிற்குச் சென்றாள்.

     “வா தேனு…” என்று அவளைப் புன்னகை முகத்தோடு வரவேற்ற அலமுவை,

     “உனக்கென்ன வாய் முழுக்க பல்லா நீ என்னை வரவேற்ப்ப! வட்டி கட்டுறவளுக்குதான தெரியும் கஷ்டம்” என்று வாய்விட்டுச் சலித்தபடியே,

    “ஒரு அஞ்சாயிரம் இருந்த கொடு அலமுக்கா” என்றாள்.

     “இன்னா தேனு இப்படிச் சொல்லிட்ட! உன்னை மாதிரி ஒரு சில ஆளுங்க ஒழுங்கா வட்டி கட்டுறதுலதான் என் பொழைப்பே ஓடுது! நீ இப்படிச் சலிச்சுக்கினா எப்படி?” என்றவர்,

     “அஞ்சாயிரம் போதுமா?” என,

     “ம்!” என்று அவரை முறைத்தவள்,

“எல்லாம் போதும் குடு!” என்றவள், வாங்கிய கையோடு ஆட்டோவை வொர்க்ஷாப்பிற்கு எடுத்துச் சென்று,

     “வண்டியை ரெடி பண்ணு சையது” என்றாள்.

     “யக்கா நான்தான் நேத்தே சொன்னேன்ல. என்ஜின் கொஞ்சம் கோளாறா இருக்கு. சேர்த்து பண்ணிக்கோன்னு. நீ மேலோட்டமா ரெடி பண்ணிட்டு போயி எப்சி பண்ண சொன்னா, ஒரு ஆபீசர் இல்லாட்டியும் ஒரு ஆபீசர் ஆப்பு வைக்கத்தானே செய்வாரு!” என்று கடைக்காரப் பையன் சொல்ல,

     “வேணாண்டா நானே கடுப்புல இருக்கேன். இந்தா காசு. சீக்கிரம் மாத்த வேண்டிய சாமான எல்லாம் மாத்தி ரெடி பண்ணு. இன்னியோட கடைசி தேதி! சாயந்தரத்துக்குள்ள நான் போயாகணும். ஏற்கனவே என் அப்பா பண்ண வேலையால இவ்ளோ நாள் இழுத்தடிச்சிடுச்சு! இன்னைக்குள்ள நான் எப்சி பண்ணலைன்னா அதுக்கு வேற பைன் கட்டச் சொல்லுவானுங்க!” என்றவள், பக்கத்திலிருந்த டீக்கடையில் ஒரு டீ எடுத்து வருமாறு சொல்லிவிட்டு தனது வண்டி ரெடியாவதற்காகக் காத்திருக்கத் துவங்கினாள்.

அவள் பொறுமையை மிகவும் சோதிக்காமல், வண்டியை விரைவில் அவன் தயார் செய்து கொடுக்க, அதை எடுத்துக் கொண்டு மீண்டும் வட்டாரப் போக்குவரத்து அலுவகம் நோக்கி பயணித்தாள் பதட்டத்துடன்.

     அப்போது கிட்டதட்ட மணி மாலை நான்கை நெருங்கிக் கொண்டு இருக்க, அவன் எங்கோ வெளியே கிளம்பிக் கொண்டிருந்தான்.

    “அய்யய்யோ, இந்த பெரிய ஆபீசர் எங்கயோ கிளம்புறார் போல!” என்று தன் வண்டியை நிறுத்திவிட்டு பதறியடித்துக் கொண்டு அவன் அருகே ஓடியவள்,

     “சார் சார்!” என்று அழைத்து அவனைத் தடுத்து நிறுத்தினாள்.

     “என்ன?!” என்பது போல் அவன் திரும்பிப் பார்க்க,

     “வண்டி வண்டி ரெடி பண்ணி கொண்டாந்துட்டேன் சார்! நீங்க பார்த்துட்டு ஒரு கையெழுத்துப் போட்டுக் கொடுத்துடுங்க சார்!” என்றவளை,

    “இன்னிக்கு வெளில வேலை இருக்கு! நாளைக்கு காலையில் வண்டியை எடுத்துட்டு வாங்க! செக் பண்ணிட்டு சைன் பண்ணி கொடுக்கறேன்” என்றவன், அவனது அலுவலக வண்டியில் ஏறிவிட,

     “அய்யோ சார் சார்! இன்னிக்குத்தான் கடைசி தேதி! நாளைக்குன்னா பைன் வேற கட்ட வேண்டி வரும்!” என்று அவள் புலம்பியது அவன் காதில் கேட்கவில்லை! ஏனெனில் அவனது சிந்தனை அங்கே விபத்துக்கு உள்ளாகி இருந்த அந்த ட்ராவல்ஸ் பேருந்தில் இருந்த உயிர்களிடையே சிக்கிக் கொண்டிருந்தது.

     ஆனால் அவளுக்கு அதெல்லாம் தெரியுமா என்ன?! அவளுக்கு அவள் கவலை!

     அவன் விபத்து நடந்த இடத்திற்குச் சென்று, அதில் பயணம் செய்த உயிர்களுக்கு பெரிதாக எந்த ஆபத்தும் இல்லை என்பது தெரிந்த பின்பே கொஞ்சம் திருப்தி அடைந்தான்.

    ஆனால் விபத்திற்குள்ளான வண்டியை ஆய்வு செய்து அதன் ஓட்டுனரை விசாரணை செய்ததில், வண்டிஒழுங்காகப் பராமரிக்கப் படவில்லை என்பதும், அவனும் கைதேர்ந்த ஓட்டுனர் இல்லை என்பதும் தெரிய வர, அவன் அவனது ஓட்டுனர் உரிமத்தையும், அந்த வண்டியின் உரிமத்தையும் ரத்து செய்துவிட்டு, அந்த ட்ராவல்ஸின் அத்தனை வண்டிகளையும் ஆய்வு செய்யுமாறு உத்தரவிட்டுவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.

     மறுநாள் காலை அவள் முதல் ஆளாய் நின்றிருக்க, அவன் எல்லோருக்கும் போல் பொதுவாய் அவளுக்கும் ஒரு நாள் தவறி எப்சி செய்ததற்கான அபராதத் தொகையைச் செலுத்துமாறு கூறிவிட்டு, வண்டி எப்சி செய்து விட்டதாய் தன் கையெழுத்தையும் இட்டுவிட்டு அவன் வேலையைப் பார்க்கச் சென்றான்.

    ஆனால் அவனால் அங்கு கிட்டத்தட்ட நேற்றிலிருந்து பத்தாயிரம் ரூபாய் வரை நஷ்டப்பட்டவள், அவன் மீது எந்த விதமான உணர்வில் இருப்பாள்?!

********

     அவளது யோசனையில் அவன் மௌனத்தில் திளைத்திருந்தாலும் அவள் ஆட்டோவின் மூலம் கொடுத்த ஹாரன் சத்தம் அவன் மௌனத்தைக் கலைக்கச் செய்தது.

     வீடு வந்துவிட்டதை உணர்ந்து அவன் தன் பர்ஸிலிருந்து ஒரு இரண்டாயிரம் ரூபாய்த் தாளை எடுத்து அவளிடம் நீட்ட,

     அவள் அதனை வாங்காமல், தனது வண்டியின் மீட்டரைத் தன் கண்களால் சுட்டிக் காட்ட,

“பரவாயில்லை வச்சுக்கோ. மத்தவங்களுக்கு உதவும்” என்று அவன் நக்கலாய்ச் சொல்லிவிட்டு ஆட்டோவின் மீட்டர் மீது பணத்தை வைக்க,

     “எங்களை வேணாம்னு தூக்கி எறிஞ்சவங்ககிட்ட கையேந்துற அளவுக்கு ஆண்டவன் என்னை வைக்கல!” என்றவள், பணத்தை எடுத்து அவன் கையில் திணித்து,

     “வேணும்னா யாரோ வழியில போற ஒருத்தருக்கு லிப்ட் கொடுத்து உதவி செய்ததா நினைச்சுக்குறேன்” என்றுவிட்டு தன் ஆட்டோவைக் கிளப்பினாள் சீற்றமாய்.

     அவளது ஆட்டோ செல்வதையே சிறிது நேரம் தன்னை மீறிப் பார்த்திருந்தவன் சொல்ல முடியா உணர்வில் தத்தளிக்க, ஏற்கனவே நீ தவறு செய்கிறாய் என்று முள்ளாய்க் குத்திக் கொண்டிருந்த அவன் உள்ளம் இப்போது இன்று அவளைக் கண்ட நொடி முதல் அவனை மேலும் காயப் படுத்தத் துவங்கியது…

     அவனது வீடு இருக்கும் தெரு வரை தாமதிக்காமல் தன் ஆட்டோவை வேகமமெடுத்துக் கொண்டுக் கிளம்பியவள், அடுத்த தெருவின் வளைவில் திரும்பியதும், தன் ஆட்டோவை ஓரமாய் நிறுத்தி விட்டு, சில நிமிடங்கள் கண்களை மூடித் திறந்தாள்.

     அதன்பின் சில நொடிகள் தலைகுனிந்து தன் மேடிட்டிருந்த வயிற்றையே வெறித்துக் கொண்டிருந்தவள், ஆசையுடன் தன் வயிற்றை  ஒருமுறைத் தொட்டுப் பார்த்துச் சிரித்துவிட்டு மீண்டும் தன் ஆட்டோவைக் கிளப்பிக் கொண்டு சென்றாள் தன் வாழ்வின் சவால்களை எதிர்கொள்ள…

                                                 -மௌனங்கள் மொழி பேசுமா?

Advertisement