Advertisement

அலை-3

     அவளை அவன் அறையில் கண்ட நொடி அவனுள் அத்தனைப் பரவசம்! ஆனால் அடுத்த நொடியே மனதுள் சுள்ளென்ற கோபம் எழ,

     ‘ஏய்! எந்த முகத்தை வச்சுக்கிட்டுடி மறுபடியும் இங்க வந்த?!’ என்று அவளை எழுப்பிக் கேள்வி கேட்க வேண்டும் போல் இருந்தது.

     ஆனால் கோபத்துடன் அவள் அருகே வந்தவனால் அசதியில் நன்றாய் உறங்கிக் கொண்டிருக்கும் தன் ராங்கிக்காரியை எழுப்ப முடியவில்லை!

     அவன் கோபத்திற்கு நேர்மாறாய் அவளைத் தட்டி எழுப்ப நினைத்த அவன் கைகள் பின்வாங்க, மனமும், தன் மகவைச் சுமந்து கொண்டிருக்கும் தன் நேசமிகுந்தவளை தொந்தரவு செய்ய மனமில்லாமல் பின்வாங்கியது.

    அவள் தூக்கம் கலையா வண்ணம், மெல்ல குளியறைக்குச் சென்று முகம் கழுவி உடைமாற்றிக் கொண்டு வந்தவன், அவள் வந்த சந்தோஷத்தில் இரவு உணவைக் கூட உண்ண மறந்து, அவனது கட்டிலில் சென்று வாகாய்ப் படுத்துக் கொண்டான் அவள் தன் பார்வையில் படும் வண்ணம்.

     கண்கள் வழியே தான் பிடிவாதமாய் தாலி கட்டி அழைத்து வந்தவளை ஏந்திக் கொண்ட அவன் உள்ளம், அந்தப் பழைய நாட்களை  அசை போடச் சென்றது அவன் பிடிவாதத்தை மீறி.

********

     அன்று ஆளுங்கட்சியினர் நடத்தும் பந்த் என்பதால், சாலைகள் வண்டிகளின்றி வெறிச்சோடிக் கிடந்தன.

     அவன் மெல்ல ஜாகிங் செய்தபடி வெறிச்சொடியிருந்த அந்த நிவ் ஆவடி சாலையில் வந்து கொண்டிருந்தான். பொதுவாய் அந்தச் சாலையில் போக்குவரத்து அதிகமாய் இருக்கும் என்பதால் அவன் அந்தப் பக்கம் வருவதில்லை. ஆனால் இன்று பந்த் என்பதாலும், அந்த வழியில் நண்பர் ஒருவரைச் சந்திக்க வேண்டி இருந்ததாலும், அந்தப்பக்கம் வந்திருந்தான். 

     அச்சாலையின் இருபுறமும், மரங்கள் அடர்ந்திருந்தாலும், ஒருபுறம் ஹாவுசிங் போர்ட் ஏரியா என்பதால் நிறைய மக்கள் வசிக்கும் பகுதியாகவும், சற்றே நெரிசல் நிறைந்த பகுதியாகவும் இருந்தது. அதனாலேயே அவன் பொதுவாய் அந்தப் பக்கம் வருவதில்லை!

ஆனால் இன்று பள்ளிக் கூடம் முதல் அனைத்து கடைகளும் மூடியிருந்ததால் அத்தெருவே வெறிச்சோடி இருந்தது.

அவன் தன் நண்பரைச் சந்தித்துவிட்டு வீடு திரும்பும் வழியில், “அண்ணே அண்ணே” என்று ஒரு பெண்ணின் குரல் கேட்க, அவன் சட்டென்று நின்றான்.

ஒரு கர்பிணிப் பெண் சாலையின் ஓரமாய் இருந்த பிளாட்பார்மில் அமர்ந்திருக்க, அவள் முகத்தில் வலியின் வேதனை நன்றாகத் தெரிந்தது.

     “அண்ணே நான்தான் உங்களைக் கூப்பிட்டேன்.” என்றாள் மூச்சு வாங்கியபடி.

     அவன் வேகமாய் அவள் அருகே செல்ல, “அண்ணே வாக்கிங் போகலாம்னு இந்த ரோட்டுப் பக்கம் வந்தண்ணே திடீர்னு வலி வந்துடுச்சு! எங்க வீடு இங்க, பக்கம்தான். அதோ தெரியுதே, அந்த சி ப்ளாக்ல தான் குடி இருக்கேன். அதே சி ப்ளாக்ல தேனுன்னு ஒரு பொண்ணு ஆட்டோ ஓட்டுறா. இன்னிக்கு பந்த்னால வீட்லதான் இருக்கா. கொஞ்சம் போய் அவளை ஆட்டோவை எடுத்துட்டு வரச் சொல்றீங்களா அண்ணே?! ஹாஸ்பிட்டலுக்குப்” என்றாள் வலியைப் பொறுத்துக் கொண்டு.

     “ஹான். சரி சரிம்மா நீ பத்திரமா இரு!” என்றவன், சில நொடிகளில் சி ப்ளாக்கை அடைந்து,

     “தேனு! தேனு!” என்று அழைக்க,

பந்த் என்பதால் படுக்கையில் இருந்தே எழாத அவ்வீட்டின் மகாராணி, ‘எவன்டா அது?! நம்மல இவ்ளோ தைரியமா பேர் சொல்லிக் கூப்பிடுறது, அதுவும் புது குரலா இருக்கு?!’ என்று நினைத்தபடி மெல்ல எழுந்து அமர்ந்தாள்.

    ஆனால், அவள் பிபியை ஏற்றும் விதமாய், அவன் மீண்டும், “ஏய் இங்க யார் தேனு? சீக்கிரம் வெளில வா!” என்று அதிகாரமாய் அழைக்க,

     “அடி! எவன் அவன்?! எவ்ளோ தைரியம் இருந்தா என்பேரை ஏலம் போடுவான்?!” என்று கேட்டபடி வெளியே வந்தவள், ஒரேநொடியில் கப்சிப் என்று வாயை மூடிக் கொண்டாள் அவனைக் கண்டதும்.

“நி நீங்களா?! என்ன?! எதுக்கு என்னைக் கூப்டீங்க?!” என,

     “வந்து உன் வண்டியை எடு” என்றான் கட்டளை போல்.

‘ஹான் அது சரி! எம்புட்டு தைரியம் இருந்தா என் இடத்துக்கே வந்து என்னையே மிரட்டுவார் இந்த ஆபீசர்?! உன் அதிகரமெல்லாம் என் இடத்துல செல்லாது ஆபிசரே! வண்டி எப்சி பண்ண அன்னிக்கு எப்படி சீனப் போட்டாரு?! இவர் சொன்னதும் நான் வண்டியை எடுக்கணுமா?!’ என்று வெளியே அவனை எதுவும் கேட்கத் தோன்றாது, உள்ளுக்குள் அவள் மல்லுக் கட்டிக் கொண்டு நிற்க,

     “ஏய்! சொல்றது காதுல விழல?! வண்டியை எடு! அங்க ஒரு பொண்ணு பிரசவ வலியில தவிச்சிட்டு இருக்கா. அவதான் உன் பேரைச் சொல்லி உன்னை அழைச்சிட்டு வர சொன்னா. சீக்கிரம் வா” என்றவன், அவள் அப்போதும் சட்டென்று எதுவும் விளங்காது நிற்பதைக் கண்டு, வண்டியில் சாவி இருக்கிறதா என்று கவனித்தான்.

     வண்டியில் சாவி இருப்பதைப் பார்த்ததும், “இது உன் வண்டிதானே?!” என்றவன், அவளைக் கொஞ்சமும் எதிர்பாராது, தானே வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பி விட, அவள்,

     “யோவ் பெரிய ஆபிசரே! நில்லுங்க நானும் வரேன்” என்று கத்தியதைப் பொருட்படுத்தவில்லை!

     அவன் வேகமாய் அப்பெண்ணின் அருகே சென்று வண்டியை நிறுத்தி, அவளைக் கைத்தாங்கலாய் அழைத்துச் சென்று வண்டியில் அமர வைக்க, அதற்குள் ஒரே மூச்சில் அங்கு ஓடிவந்திருந்தாள் தேனு.

     “ஏய்! ஜெயா இவ்ளோ காலங்கார்த்தால நீ ஏன்டி மெயின்ரோடு வரைக்கும்  வந்த?! அதுவும் அண்ணன் ஊர்ல இல்லாத நேரத்துல ஒண்டியா?!” என்று கத்தியபடியே தன் ஆட்டோவினுள் ஏறி அவளைத் தன்மேல் சாய்த்துக் கொண்டாள்.

    அதற்குள் ஆட்டோ வேகமெடுக்க, ஆட்டோவினுள் இருந்த அந்தப் பெண், மூச்சு வாங்கியபடியே,

     “அ அண்ணே எக்மோர் ஹாஸ்பிட்டலுக்கு போகணும் ண்ணே! இங்க காந்திநகர் ஹாஸ்பிட்டல்ல வெறும் செக்அப்க்கு மட்டும் தான் பார்ப்பாங்க” என்றாள் கலங்கிய கண்களுடன்.

அவள் பொருளாதார நிலை எண்ணி, அப்படிச் சொல்கிறாள் என்று அவனுக்குப் புரிந்தது.

     ஆனால் அவள் இருக்கும் நிலையிலும், பந்த் நடக்கும் இந்தச் சூழ்நிலையிலும்அவ்வளவு தூரம் பிரச்சனையின்றி அவர்களை அங்கு அழைத்துப் போவது சிரமம் என்று தோன்ற, அவன் அருகே தனக்குத் தெரிந்த ஒரு தனியார் மருத்துவமனைக்கு வண்டியைச் செலுத்தினான்.

     ‘இவளுக்கு இப்போதானே ஒன்பதாம் மாசம் ஆரம்பம்! சீமந்தமே அடுத்த வாரம்தானே! அதுக்குள்ள பிரசவ வலி வந்துடுச்சு! ஆண்டவா தாயையும் புள்ளையையும் நீதான் காப்பத்தணும்!’ என்று வேண்டிக் கொண்ட தேனு,

     “தொ! இன்னும் கொஞ்ச நேரத்துல போய்டலாம் ஜெயா?! என்று சொல்லு போதே, அவன் அந்தத் தனியார் மருத்துவமனை முன் வண்டியை நிறுத்தி இருந்தான்.

     “ஐயோ! தனியார் ஆஸ்பத்திரி எல்லாம் வேண்டாம்ணே நிறைய காசு கேப்பாங்க! நான் வலி பொறுத்துக்குவேன். நீங்க கவர்மென்ட் ஹாஸ்பிட்டலுக்கே போங்க” என்றாள் அப்பெண் வலியை அடக்கியபடி.

     அவன் அப்பெண்ணின் பேச்சைப் பொருட்படுத்தாமல் மருத்துவமனைக்குள் சென்று பேச, உடனடியாக சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

     ‘இந்த ஆபீசர் என்ன? இவர் பாட்டுக்கு தனியார் ஆஸ்பத்திரியில சேர்த்துட்டார். இவரா காசு கட்டுவாரு?! பாவம் அவளே காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டு, அப்பா, அம்மாவைப் பிரிஞ்சு வந்து கஷ்டப் படுறா! அவ வீட்டுக்காரரும் அவ்ளோ வசதி இல்லையே?!’ என்று நினைத்து வருந்தினாள் தேனு.

     நேரம் செல்லச் செல்ல அப்பெண்ணிற்கு வலி அதிகமாக, அவள் கதறிய கதறலைக்கேட்டு அவனுள் சொல்லொணா வலி.

     ‘எவ்ளோ கஷ்டப்பட்டு ஒரு பெண் தன்னோட உயிரை இந்த உலகத்துக்கு கொண்டு வரா! ஆனா?!’ என்று அவன் எண்ணம் எங்கோ சென்று விட, அவன் முகம் பெரும் வேதனையைச் சுமந்து நின்றது.

     அவனது ரியாக்ஷன் ஒவ்வொன்றையும், வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த தேனு,

     ‘இந்தா ஆபீசர் எதுக்கு இவ்ளோ பீல் ஆகுறாரு?! என்னமோ இவர் பொண்டாட்டிக்கே பிரசவம் ஆவுற மாதிரி!’

     “ஹெலோ ஹெலோ ஆபீசர் சார்! என்னத்துக்கு நீங்க இவ்ளோ பீல் பண்றீங்க என்னாமோ உன் பொண்டாட்டி பிரசவ வலியில துடிக்கிற மாதிரி?!” என்று மனதில் பட்டதைக் கேட்டும் விட,

     “இ இல்ல! அந்தப் பொண்ணும் குழந்தையும்!” என இழுத்தவன்,

     “கரக்ட் டைம்க்கு வந்துட்டோம்ல! அம்மாவுக்கும் குழந்தைக்கும் ஒன்னும் ஆகாதே?! நல்ல படியா குழந்தைப் பிறந்துடும்ல?!” என்றான் தன்னையும் மீறி பரிதவிப்புடன்.

     அவனை ஒருமாதிரியாய்ப் பார்த்த தேனு, “நான் எத்தனையோ பிரசவ கேசை என் வண்டியில கொண்டு போய் விட்டிருக்கேன். இவளை விட மோசமா வலியில கத்துவாங்க! ஜெயாவுக்கு ஒன்னும் ஆவாது! இன்னும் கொஞ்ச நேரத்துல குழந்தைப் பிறந்திடும். அப்புறம் அம்மாவும் புல்லையும் ஜம்முன்னு சிரிப்பாங்க பாருங்க” என்றாள் சிரிப்புடன்.

     அவளது புன்னகையும், பேச்சும் இதுவரை அவன் மனதில் இருந்த பதட்டத்தைப் போக்க,  தனது எண்ணங்களைக் கட்டுக்குள் கொண்டு வந்து, சகஜ நிலைக்கு மீள முயன்றான் அவன்.

     சிறிது நேரத்தில் ஜெயாவின் கதறல் நின்று குழந்தையின் அழுகைக் குரல் கேட்க, வெளியே நின்றிருந்த இருவர் முகத்திலும் ஒருசேரப் புன்னகை!

     வெளியே வந்த நர்ஸ் ஒருவர், “ஆண் குழந்தை பிறந்திருக்கு. அம்மா, பையன் ரெண்டு பேருமே சுப்பரா இருக்காங்க சார்!” என,

     “தேங்க் யூ சிஸ்டர்” என்றான்.

     “உள்ள போய் குழந்தையைப் பார்க்கலாமா?!” எனத் தேனு அவனிடம் ஆர்வமாய்க் கேட்க,

     “நீ போய் பாரு! நான் ரிஷப்சன் வரைக்கும்போயிட்டு வரேன்” என்றவன் அவன் பதிலை எதிர்பார்க்காமல், வரவேற்பரைக்குச் சென்று தனது டெபிட் கார்டை நீட்டினான்.

     “இப்போ நான் அட்மிட் பண்ண பெண்ணோட டெலிவரிக்கும் அவங்க டிஸ்சார்ஜ் ஆகுற வரைக்கும் ஆகப் போற செலவுகளுக்கும் சேர்த்து பில் போடுங்க. இப்போவே பே பண்ணிடறேன்” என, வரவேற்பறையில் இருந்த பெண் ஆச்சர்யமாய்ப் பார்த்தாள்.

     “சார்! அவங்க உங்களுக்குத் தெரிஞ்சவங்களா?!” என்று அப்பெண் கேட்க,

     “ம் அப்படித்தான் வச்சுக்கோங்களேன்” என்ற பதிலில் அப்பெண் புன்னகையுடன் அவனது கார்டைக் கையில் வாங்கினாள்.

     சிறிது நேரம் கழித்து குழந்தையைப் பார்த்து விட்டு வெளியே வந்த தேனு, அவன் வெளியே இல்லாததைக் கண்டு,

     “இங்க ஒருத்தர் என்கூட நின்னு பேசிட்டு இருந்தாரே, அவர் எங்க போனார்னு பார்த்தீங்களா?!” என்றாள் பக்கத்தில் இருந்த ஒரு பெண்மணியிடம்.

     “அவர் அப்போவே வெளியில கிளம்பிப் போய்ட்டார் மா” என்று அவர் தகவல் சொல்ல,

     “அட என்ன இந்த மனுஷன்! இப்படி சொல்லாம கொள்ளாம இவ்ளோ பெரிய ஹாஸ்பத்திரியில கொண்டாந்து சேர்த்துட்டு போயிட்டாரு! இவர் பெரிய்ய்ய ஆபீசர்! இவர்கிட்ட பணம் இருக்கும். அதுக்குன்னு எல்லோரும் பணக்காரங்களாவா இருக்க முடியும்?!”  என்று வாய்விட்டுப் புலம்பியபடியே அருகே இருந்த அதே பெண்மணியிடம் அவரது கைபேசியை கேட்டு வாங்கி, ஜெயாவின் கணவர் ராஜேஷிற்கும், தனது தாய் செல்லமாவிற்கும் விவரம் தெரிவித்து அங்கு வரச் சொன்னாள்.

     அதற்குள் ஜெயாவின் அருகே துணைக்கு யாரேனும் வந்து இருங்கள் என்று செவிலியர் அழைக்க, அவள் கவனம் அவனை விடுத்து அவள் புறம் திரும்பியது.

    ஆனால் உள்ளே சென்றதுமே ஜெயா, “அந்த அண்ணன் எங்க தேனு?!” என்று மீண்டும் அவனைப் பற்றியே கேட்க,

     “ஹான்! கொண்டு வந்து சேர்த்ததோடு கடமை முடிஞ்சிடுச்சுன்னு கிளம்பிட்டார்” என்றாள் வெடுக்கென்று.

     “ஓ! குழந்தையைக் கூட பார்க்காம போயிட்டாரே! நன்றி கூட சொல்ல முடியலை அவருக்கு! பார்க்க ரொம்ப பெரிய இடத்து மனுஷன் போல தெரிஞ்சுது. ஆனா கொஞ்சம் கூட வித்தியாசம் பார்க்காம, அவரே ஆட்டோ ஓட்டிட்டு வந்து ஹாஸ்பிட்டல்ல சேர்த்தார் பாரேன்” என்று ஜெயா அவனுக்குப் புகழாரம் சூட்ட,

     “அதெல்லாம் சரிதான்! ஆனா இப்போ பில்லை நீட்டுவாங்களே. அதுக்கு என்ன வழி?!” என்றாள் தேனு கவலையாய்.

     “ஹான் அதான் தேனு பயமா இருக்கு!” என்றவள் சட்டென்று யோசனை வந்தவளாய்,

     “அடுத்த வாரம் எனக்கு சீமந்தம் செய்ய எடுத்து வச்ச காசு கொஞ்சம் இருக்கு, நார்மல் டெலிவரிதானே! சமாளிச்சுக்கலாம்” என்றாள் ஜெயா நம்பிக்கையுடன்.

     “சரி சரி. மேற்கொண்டு ஆனா நான் அலமு அக்காகிட்ட கேட்டு வாங்கி தரேன்.” என்று தேனுவும் தன் பங்கிற்குச் சொல்ல,

     “நீங்க என்ன பேசிக்கிட்டு இருக்கீங்க? உங்களைக் கொண்டு வந்து சேர்த்தாரே எங்க ஹாஸ்பிட்டல் டீனோட பிரெண்ட் பேரழகன் சார்! அவர் உங்க பில்லை செட்டில் பண்ணிட்டுதானே இங்க இருந்து கிளம்பினார்” என, இரு பெண்களும் வாயடைத்து நின்றனர்.  

     அவளுடைய நினைவும் அவள் அருகே இருக்கும் நிம்மதியும் சேர்ந்து கொள்ள, அவன் வெகு நாளைக்குப் பிறகு நன்றாய் உறங்கி போயிருந்தான்.

     அதிகாலையிலேயே உறக்கம் களைந்து எழுந்த தேனு, தான் இருக்கும் இடம் உணர்ந்து, சட்டென்று அவன் கட்டில் இருந்த பக்கம் திரும்ப, சிறு புன்னகையுடன் உறங்கிக் கொண்டிருந்த தன் பேரழகனைக் கண்டதும், எப்போதும் போல் அவன் கன்னத்தைக் கடித்து வைக்கும் ஆசை எழும்ப,

     “ச்சே உனக்கெல்லாம் மானரோஷமே இல்லடி!” என்று மூளைத் திட்டியதைப் பொருட்படுத்தாமல்,

     நேரே எழுந்து சென்று, அவன் முரட்டுக் கன்னத்தில் அழுத்தமாய், அதே நேரம் காயம் படாமல் ஒரு கடி வைக்க, திடுக்கிட்டு கண்விழித்த அழகன்,

     “ஏய்! அறிவிருக்காடி உனக்கு?!” என்றான் கோபத்துடன்.

     “ம்! இத்தனை நாள் காணாம போயிருந்ததை நேத்துதான் தேடி கண்டு பிடிச்சு எடுத்துட்டு வந்தேன் ஆபீசர்” என்று அவன் கன்னத்தை ஒரு தட்டு தட்டியவள்,

     “நான் போய் குளிச்சிட்டு வரேன்” என்று சர்வசாதரணமாய்ச் சொல்லிவிட்டுச் செல்ல,

     “ச்சே! என்ன இது இவ்வ்வளவும் கனவா?!” என்று புரியாமல் குழம்பி நின்றான் நம் தேனுவின் பேரழகன்.

                                              -மௌனங்கள் மொழி பேசுமா?

Advertisement