Advertisement

 மொழி-2

“என்னடா உன் அக்கா இன்னும் வீட்டுக்கு வரலை?! இவ்ளோ நேரம் வெளிய இருக்க மாட்டாளே!” என்று செல்லம்மா புலம்பிக் கொண்டிருந்தார்.

     ஆனால் அவர் கை மட்டும் தனது வேலையில்  கவனமாக இருந்தது.

     ஆவி பறக்கும் இட்டிலிகளைத் தட்டில் வைத்து அதற்குச் சட்டினியும் சாம்பாரும் ஊற்றி தனது ரோட்டோர வண்டிக் கடைக்கு வந்திருந்த வாடிக்கையாளரிடம் நீட்டிய செல்லம்மா,

     “ஏன்டா ஒரு எட்டு வீடு வரைக்கும் போய்ப் பார்த்துட்டு வந்துடேன்.” என்று ஏவினார் தனது மகன் ரவியை.

     “அம்மா அக்கா கடைக்கு வந்துட்டுதானே வீட்டுக்குப் போகும். நீ எதுக்கு சும்மா புலம்புற?” என்று ரவி தாயை ஆறுதல் படுத்த,

     “ஆமா! இருந்தாலும் வயித்துப் புள்ளைக்காரி, ராத்திரி ஒம்பது மணி வரைக்கும் என்னத்துக்கு வண்டி ஓட்டணும்?! வரட்டும் இன்னிக்கு” என்று மகளின் நலன் கருதி அவளைத் திட்டியவர், தூரத்தில் மகளின் ஆட்டோ கண்ணுக்குத் தென்படவும், சற்றே நிம்மதி அடைந்து,

     “டேய் உன் அக்கா வந்துட்டா டா” என்றார் நிம்மதிக் குரலில்.

     “நான்தான் சொன்னேன்ல” என்ற ரவி அக்காவிற்காய் ஒரு தட்டை எடுத்து அதில் வாழை இலையை வைத்து தாயிடம் நீட்டினான்.

     செல்லம்மா அதில் மகளுக்கு இட்லி வைத்து சாம்பார் சட்டினியை ஊற்றி மகளிடம் கொண்டு போய்க் கொடுக்க,

     “எனக்கு வேணாமா” என்றாள் சோர்வாய்.

     “என்ன தேனு…! உடம்புக்கு எதுனா பண்ணுதா?! இந்த நிலைமையில வண்டி ஓட்டாதன்னா கேட்டாதான! வயித்துல புள்ளைய வச்சுக்கிட்டு ஆட்டோ ஓட்டுற! அதுக்கு எதுனா ஒன்னு ஆச்சுன்னா?!” என்று செல்லம்மா புலம்ப ஆரம்பித்துவிட,

     “ம்மா போதும் நிறுத்து! என் புள்ளை கண்ணன் சாமி மாதிரி. யார் அவனை அழிக்க நினைச்சாலும் அவன் இந்த உலகத்துக்கு வந்தே தீருவான்! யாராலயும் அவன் பொறப்பத் தடுக்க முடியாது!” என்று சட்டென கோபம் கொண்டவள்,

     இதுவரை இருந்த சோர்வைத் தூக்கிப் போட்டுவிட்டு, தாயின் கையிலிருந்த தட்டை வாங்கி,

     ‘உனக்காக அம்மா என்ன வேணாலும் செய்வேன்டா கண்ணா! அப்படி இருக்கும்போது தேவையில்லாம யாருக்காகவும் பட்டினி கிடந்து உன்னை அம்மா கஷ்டப்படுத்த மாட்டேன் தங்கம்!’ என்று மனதோடு மகனிடம் உரையாடியவளுக்கு வயிற்றில் இருந்து கேட்டுக் கொண்டிருப்பது தன் மகன் மட்டும் அல்ல மகளும்தான் என்பது தெரியாமற் போனது.

                                    **********

மறுநாள் காலை, “டேய்! நீ பண்றது கொஞ்சம் கூட சரியில்லடா! நீதான அந்தப் பொண்ணக் கட்டிக்கிறேன்னு கை காட்டின. அதனாலதான நாங்க வசதி வாய்ப்பக் கூட பார்க்காம கல்யாணம் செய்து வச்சோம்! இன்னிக்கு அவ ஒரு பக்கம் நீ ஒரு பக்கம்! முதல்ல கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னு பிடிவாதம்! இப்போ கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரியா இருக்க! அப்படி என்னதான் பிரச்சனை உனக்கு! வெளில சொன்னாதானே தெரியும்?!” என்று எப்போதும் போல் புலம்பிக் கொண்டே அவன் தட்டில் இன்னோரு தோசையை எடுத்து வைத்தார் அவனின் அம்மா குமுதா.

     அவனும் எப்போதும் போல் இப்போதும் மௌனமாகவே அவர் வைத்த உணவை விழுங்கிக் கொண்டிருந்தான் எதற்கும் பிடி கொடுக்காமல்!

      ஆனால் அவன் சற்றும் எதிர்பாராத விதமாய் அன்று,“அம்மா கேட்குறாங்க இல்ல! பதில் சொல்லுடா?” என்று ஒலித்தது அவன் அண்ணன் ரகுபதியின் குரல்.

     அண்ணன் குரல் கேட்டதும் எழப் போனவன், மீண்டும் தயக்கமாய் அமர்ந்துவிட,

     “அம்மா அந்தப் பொண்ணு மாசமா வேற இருக்கு போல! நேத்து இவன் அந்தப் பொண்ணு ஆட்டோவுலதான் வந்து இறங்கினான். மீனாட்சி என்னைக் கூப்பிட்டுக் காண்பிச்சா. அப்போதான் எனக்கே விஷயம் தெரிஞ்சுது.” என்றார் காட்டமாய்.

     “அடக்கடவுளே! அவ நம்ம குடும்ப வாரிசா சுமந்துட்டு இருக்காளா?! டேய் இது உனக்கு முன்னாடியே தெரியுமா?! தெரிஞ்சும் நீ அவளைத் தனியா அவ அம்மா வீட்ல விட்டு வச்சிருக்கியா?!” என்றார் ஆதங்கமாய்.

     அவன் அப்போதும் கல் போல் அமர்ந்திருக்க, “ஏன்டா ஏன்டா! நீ இப்படிக் கல்நெஞ்சக்காரனா இருக்க?! மாசமா இருக்க பொண்ணை ஏன்டா இப்படித் தனியா தவிக்க வச்சிருக்க?! அந்தப்பொண்ணு வீட்ல வேணாம்னு மறுத்தப்போ கூட நீதானே அவங்க வீட்ல பேசி சமாதானப் படுத்தி அவளை இந்த வீட்டுக்கு மருமகளா கூட்டிட்டு வந்த?! இப்போ எதுக்குடா அவளை வீட்டை விட்டு விரட்டின?!” என்றார் குமுதா பொறுமையைக் கைவிட்டு.

ஆனால் அவனோ அப்போதும் பொறுமையாகவே அவரை நிமிர்ந்து பார்க்க, அதில் மேலும் கோபமடைந்த ரகுபதி,

“எனக்குத் தெரிஞ்சி அவ எந்த பிரச்சனையும் செய்திட்டு வீட்டை விட்டுப் போயிருப்பான்னு தோணலை! நிச்சயமா நீதான் அவ வீட்டை விட்டுப் போகக் காரணமா இருந்திருப்ப!” என்றார் சீற்றமாய்.

     இத்தனை நாள் மௌனமாய் இருந்தவனோ மெல்ல கண்கள் நிமிர்த்தி அவரை ஆழ்ந்த பார்வை பார்த்து, சின்னதாய்க் கண்மூடித் திறந்து, மெல்லிய தலையசைப்போடு,

“ம்! ஆமாம் எல்லாத் தப்பையும் நான்தான் செஞ்சேன்!நான்தான் அவளை வீட்டை விட்டுத் துரத்தினேன். ஏன்னா நான் இரக்கமில்லாதவன்! நான் ராட்சசன்! நான் கொலைகாரன்!” என்று அழுத்தமாய்ச் சொல்லிவிட்டு, தான் அமர்ந்திருந்த நாற்காலியை மெல்ல நகர்த்திவிட்டு எழுந்து அங்கிருந்து வெளியேறினான்.

ஆனால் இதுநாள் வரை அவன் விலகலுக்கும் கோபத்திற்கும் காரணம் புரியாமல் இருந்த ரகுபதிக்கோ, அவன் உதிர்த்துச் சென்ற வார்த்தைகளில் ஏதோ ஒன்று விளங்கியது போல் இருந்தது.

‘ஐயோ இவன் என்ன சொல்றான்?! இவன் வாழ்க்கை இப்படி ஆக நான்தான் காரணமா?!’ என்று இடிந்து போய், அருகே இருந்த நாற்காலியில் சோர்வுடன் அமர, குமுதாவும், மீனாட்சியும், ஒருசேர,

     “என்னப்பா இது?! இவன் என்ன சொல்றான்?!” என்றனர் கலக்கத்துடன்.

     “அம்மா அவன் அன்னிக்கு நடந்த எதையுமே இன்னும் மறக்கலைன்னு நினைக்கிறேன்! நான் அன்னிக்கு அவனைச் சொன்ன அந்த வார்த்தைகளை இன்னிக்கு அவனுக்கு அவனே சுட்டிக் காட்டிக்குறான்! ஆனா அதுக்கும், அவன் மனைவியும், இவனும் பிரிஞ்சிருக்குறதுக்கும் என்ன சம்மந்தம்?!” என்று புரியாமல் கேட்டவர்,

     “அப்போ! அப்போ இவன்,இவன் இத்தனை வருஷமா என்னை விட்டு இப்படி விலகி இருக்கிறதுக்கு காரணம், அன்னிக்கு, அன்னிக்கு ஒருநாள் நான் இவன்மேல கோபப்பட்டதுக்கா?!” என்றார் இத்தனை நாள் தன் உயிருக்கு உயிரான தம்பி தன்னை விட்டு விலகி நின்றதற்கு காரணம் விளங்கியவராய்.

     தாய்க்குமே இரு மகன்களின் நிலையையும் எண்ணிக் கண்ணீர் பெருக,

“ரெண்டு பிள்ளைகளைப் பெத்து ரெண்டுமே இப்படிக் காலத்துக்கும் சந்தோஷமா இருக்கிறதைப் பார்க்க முடியாத அளவுக்கு அப்படி என்னதான் நான் பாவம் பண்ணேன் மீனா?!” என்றார் மருமகளைப் பார்த்து.

     மீனாட்சிக்கும் என்ன ஆறுதல் சொல்வதென்று புரியவில்லை! ஆனாலும் ஆறுதலாய் அத்தையின் கையைப் பற்றிக் கொண்டார்.

     கணவன் ஒருபுறம் கலங்கிப் போய் அமர்ந்திருக்க, தாயைப் போல் தன்னைப் பார்த்துக் கொள்ளும் தனது அத்தை, கண்கலங்கி நிற்க, சிறுவயதில் மகன் போல் தன்னைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டு இருந்தவன் ஒருபுறம் அவளிடம் முகம் கொடுத்துக் கூட பேச முடியாமல் தவித்துக் கிடக்க,

     ‘என் குடும்பத்துக்கு ஏன் இந்த நிலைமையைக் குடுத்த இறைவா?! எங்க வாழ்வோட சாபங்கள் நீங்கவே நீங்காதா?!’ என்று சில நொடிகள் இறைவனிடம் மன்றாடிய மீனா,

     ‘இல்லை இப்படியே நானும் இவங்களோட சேர்ந்து கலங்கிப் போய் நின்னா சரியா வராது! இவன் மனுசுல என்னதான் நினைச்சுக்கிட்டு இருக்கான்! அவன் இஷ்டத்துக்கு நடந்துக்கறான். இவன…” என்று அவனிடம் இன்று பேசியே தீர வேண்டும் என்று அவனது அறை நோக்கி நடக்க, அவனோ அலுவலகத்திற்கு புறப்பட்டுக் கொண்டிருந்தான்.

     “தம்பி…!” என்று மீனா அவனை அழைக்க,

     “ஆபீஸ்க்கு நேரமாச்சு அண்ணி! நான் கிளம்பறேன்” என்று அவர் அனுமதியை எதிர்பார்க்காமல் அவன் கிளம்பியே விட்டான்.

     அவன் கிளம்பிச் செல்வதையே சில நொடிகள் பார்த்திருந்த மீனாவிற்கு,

‘இல்ல இவன் எதுக்கும் பிடி கொடுத்துப் பேச மாட்டான்! இவன்கிட்ட பேசுறதை விட, அவகிட்ட பேசினாதான் நம்ம கேள்விகளுக்கு விடை கிடைக்கும்! அவங்களைச் சேர்த்து வைக்கவும் முடியும்” என்று யோசித்து அவனிடம் பேச வேண்டும் என்று எடுத்த முடிவைக் கைவிட்டார்.

                                       *****

     பிற்பகல் மூன்று மணி இருக்கும். சாவாரிக்காக தனது பகுதிக்குரிய ஆட்டோ ஸ்டாண்டில் வண்டியைப் போட்டுவிட்டுக் காத்திருந்த நேரம், எதையும் யோசிக்காமல் இருக்கவென கையில் செய்தித் தாளை எடுத்து அதனுள் மூழ்கி இருந்தாள் அவள்.

     அப்போது, “அண்ணாநகர் போகணும். வருவீங்களா?” என்றது ஒரு பெண்மணியின் குரல்.

     தனக்கு பரிச்சயமான குரல் போல் இருக்க, அவள் சட்டென்று நிமர்ந்தாள்.

     அவள் கொஞ்சமும் அவரை அங்கு எதிர்பாக்கவில்லை!

“அ அக்கா.. நீ நீங்க ஆட்டோல?!” என்று அவள் திணற,

     “எங்க வீட்டு மருமக, ஆட்டோவே ஓட்டும்போது நான் ஆட்டோல சவாரி கூடப் போகக்கூடாதா என்ன?!” என்று அவர் குதர்க்கமாய்க் கேள்வி எழுப்ப,

     “இ இல்ல.. வாங்க” என்றவள்,

     “எங்க போகணும்?” என்றாள்.

     “நம்ம வீட்டுக்கு” என்று மீனா அழுத்தமாய் பதில் கொடுக்க, அவள் எதுவும் பேசாமல் வண்டியைக் கிளப்பினாள்.

     வண்டியில் ஏறிய பின் மீனாவும் எதுவும் பேசவில்லை! தேனுவும் எதுவும் பேசவில்லை! வண்டியை அவர்கள் வீட்டின் முன் நிறுத்த, கீழே இறங்கிய மீனா, முன்சென்று அவள் ஆட்டோவைப் பூட்டி சாவியைக் கையில் எடுக்கப் போக,

“அக்கா என்ன பண்றீங்க” என்று பதறி அவர் கையைப் பிடித்தாள் தேனு.

     “இறங்கி வீட்டுக்குள்ள வா. எதுவாயிருந்தாலும் வீட்டுக்குள்ள போய் பேசிக்கலாம். தெருவில் நின்னு பேசினா நல்லா இருக்காது.” என்று சாவியை எடுத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்றே விட, அவள் வேறு வழியின்றி அவரைப் பின் தொடர்ந்து அவர்கள் வீட்டு வாயிலில் சென்று நின்றாள்.

     “தேனு…! வா! உள்ள வாம்மா.. ஏன் வெளியிலேயே நிக்குற?!” என்றபடி குமுதா சின்ன மருமகளைப் பார்த்ததும் சோபாவிலிருந்து எழுந்து அன்போடு வரவேற்க, அவள் அப்போதும் தயங்கி நின்றாள்.

     “உள்ள வா தேனு!” என்று மீனா கட்டளைக் குரலில் கூப்பிட, தேனு தயக்கத்துடன் மனமின்றி அவர்கள் வீட்டு வாயிலில் காலெடுத்து வைத்து உள்ளே சென்றாள்.

     “அத்தை, இவ ஏன் வீட்டை விட்டுப் போனான்னு உங்களுக்குத் தெரியுமா?!” என்று தன் மாமியாரைப் பார்த்துக் கேள்வி கேட்ட மீனா, பார்வையை மட்டும் தேனுவின் புறம் திருப்பினாள்.

     தேனு பதில் கூற முடியாது நிற்க, மீனா எல்லாவற்றையும் குமுதாவிடம் கூறி முடிக்கும் சமயம்,

     ‘இதெல்லாம் இவங்களுக்கு எப்படித் தெரியும்?!’ என்று தேனு விழிக்க, தேனுவின் அம்மாவும் தம்பியும் அவர்களது வீட்டிற்குள் தேனுவின் உடமைகளுடன் வந்து சேர்ந்தனர்.

     அவள் கோபத்துடன் தன் தாயைப் பார்க்க, “அங்க என்ன முறைப்பு தேனு?! போ உன் பொருள் எல்லாம் எடுத்துட்டு உங்க ரூமுக்குப் போ” என்றார் குமுதா அதட்டலாய்.

     “இல்ல அத்தை!” என்று மறுக்க,

     “சொல்றதைச் செய் தேனு! அவன் பேசினது தப்புதான். நான் இல்லைன்னு சொல்லலை. அதுக்காக நீ அவனைத் தூக்கிப் போட்டுட்டு போயிட்டா எல்லாம் சரியாகிடுமா? நீ கூட இருந்துல்ல அவன் மனசை மாத்தி இருக்கணும்! அவன் அப்படிச் சொன்னான்னா அதுக்கு ஏதாவது ஒரு காரணம் இருந்திருக்கலாம்னு நீ ஏன் யோசிக்கத் தவறின? என்ன ஏதுன்னு கூட யோசிக்காம, அவனையும் கேட்காம ஏன் அட்லீஸ்ட் எங்ககிட்டயாவது விஷயத்தைச் சொல்லி இருக்கலாம்ல?! இப்படி எதையுமே செய்யாம, நீயா ஒரு முடிவை எடுத்து, அதுவும் நீ கர்ப்பமா இருக்க விஷயத்தைக் கூட எங்க கிட்ட சொல்லாம நாங்க ஊர்ல இல்லாத சமயத்துல நீ வீட்டை விட்டுப் போயிருக்க! அன்னிக்கே நீ கர்ப்பமா இருக்கிறது தெரிஞ்சிருந்தா நாங்க அவன் தடுத்திருந்தாலும் உன்னைத் தேடி வந்திருப்போம்! நீ எங்களை மதிக்காம போனதுல இருந்த வருத்தத்திலயும், அவனும் நாங்க உன்னை அழைச்சிட்டு வந்தா அவன் இந்த வீட்ல இருந்து வெளியேறிடுவேன்னு சொன்னதுனாலயும் இத்தனை நாள் ஒன்னு அவனா இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு கட்டுவான், இல்லை, நீயோ, உங்க அம்மா வீட்ல இருந்தோ யாராவது வந்து பேசுவீங்கன்னு நினைச்சு காத்துகிட்டு இருந்தோம்! ஆனா நேத்து நீ அவனை ஆட்டோவில் இறக்கி விட்டுட்டுப் போனப்போ தான் நீ கர்ப்பமா இருக்குற விஷயமே எனக்குத் தெரிஞ்சுது. என்னதான் பிரச்சனை இருந்தாலும் வீட்ல இருக்கப் பெரியவங்க கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு முடிவெடுப்போம்னு கூட உனக்குத் தோணலை இல்லை! உங்கம்மா மேலயும் தப்பு இருக்கு! அவங்களாச்சும் என்ன ஏதுன்னு ஒரு போன் போட்டு விஷயத்தைச் சொல்லி இருக்கலாம்! இல்லை, அன்னிக்கு நான் போன் பண்ணும் போதாவது எடுத்து நீ பேசி இருக்கலாம்! தப்பு உங்க மேலயும் தானே?” என்று மீனா சராமரியாய் கேள்விகளை எழுப்ப, தேனு என்ன சொல்வதென்று புரியாமல் தவித்தாள்.

     “உள்ள போ தேனு! இனி எப்போ எது நடந்தாலும் இதுதான் உன் வீடு! அவன் நிச்சயமா உன்னை மனதார வீட்டை விட்டுப் போகச் சொல்லி இருக்க மாட்டான்! முதல்ல அவன் இப்படி ஒரு முடிவை எடுத்ததுக்கு என்ன காரணம்னு தெரிஞ்சிக்கோ! அப்புறமும் அவன்மேல தப்பு இருந்தா தராளமா நீ என்ன முடிவு வேணும்னாலும் எடுக்கலாம்! அதுக்கு நாங்க தடையா இருக்க மாட்டோம்” என்று மீனா இப்போது பொறுமையாய் எடுத்துச் சொல்ல, தேனு மறுக்க முடியாமல் தன் தாயின் கையிலிருந்த தனது துணிகள் அடங்கிய பையை எடுத்துக் கொண்டு அவனது அறைக்குள், அதாவது அவர்களது அறைக்குள் நுழைந்தாள்.

     அறைக்குள் சென்று விட்டாள்தான்! ஆனால் அவன் வந்தால் என்ன சொல்லுவான்? தான் அன்று அவனிடம் பேசிவிட்டுச் சென்றப் பேச்சுக்கும் இதோ இன்று இப்போது அவன் அனுமதி இல்லாமல் அவன் அறைக்குள் மீண்டும் நுழைந்திருக்கும் நிலைக்கும் என்ன காரணம் சொல்லுவது என்ற தவிப்பு அவளைத் தொற்றிக் கொண்டது.

     காலை அண்ணன் ரகுபதியிடம் நடந்த பேச்சு வார்த்தையில் அவனுக்கு மாலை வேலை முடிந்ததும் வீடு திரும்ப மனமில்லாமல் போனது. அலுவலகத்தின் அருகில் இருந்த அந்த பூங்காவிற்குச் சென்றவன், நெடுநேரம் கழித்தே வீட்டிற்குக் கிளம்பினான்.

     இளங்கோ அவன் என்ன சொல்லியும் கேட்காமல், அவன் வீட்டிற்குக் கிளம்பும் வரை அவனுக்காய் வெளியே காத்திருக்க, அங்கே தத்தம் பெற்றோர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறு குழந்தைகளை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தவன், அனைவரும் அங்கிருந்து வெளியேறிய பின்னும் வெறிச்சொடியிருந்த அந்தப் பூங்காவைப் சலனமற்றுப் பார்த்தபடி அமர்ந்திருந்தான் ஏதேதோ நினைவுகளைச் சுமந்தபடி.

  பூங்காவின் வாயிலைப் பூட்டும் நேரம் வரை அங்கேயே அமர்ந்து இருந்தவன்,காவலாளி அவனுக்காய் தயங்கிபடி நிற்பதை உணர்ந்தவுடன், மெல்ல எழுந்து வெளியே வந்து தனது வண்டியில் ஏறினான்.

     இதயம் தடம் மாறித் துடிக்க, இலக்கின்றி அவன் பார்வை வீதிகளை வலம்வர, வண்டி மட்டும் சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்தது.

    ஆனால் காரை ஒட்டிக் கொண்டிருந்த அவனது அலுவலக ஓட்டுனரான இளங்கோவின் மனம் கூட அவனது மேலதிகாரிக்காய் பரிதவித்துக் கொண்டிருந்தது.

     ‘ச்சே என்ன மனுஷன் ய்யா?! ஊருக்கே பார்த்து பார்த்து நல்லது செய்யிறாரு! ஆனா அவர் வாழ்க்கை இப்படித் தனிமையில போகுதே!  நான்பார்த்து அதிக பட்சம் அவர் சிரிச்சிப் பேசி சந்தோஷமா இருந்தது அந்த அம்மாவைக் கல்யாணம் பண்ணி வாழ்ந்த அந்த சில  மாசம்தான்! ஆனா அதுவும் இன்னிக்கு இல்லாமப் போச்சு!’ என்று வருந்தியவன், தனது மேலதிகாரியான அவனிடம் எப்போதும் போல் தன் மனதில் தோன்றியதைக் கேட்க நினைத்து எதுவும் கேட்க முடியாமல் மனதினுள்ளேயே வைத்துக் கொண்டான்.

     இரவு அவன் வீட்டிற்குச் செல்லும் நேரம் எல்லோரும் இரவு உணவை முடித்துவிட்டுப் படுக்கச் சென்றிருக்க, தன் அறைக் கதவைத் திறந்தவனுக்கு என்றுமில்லாத அதிசமாய் அன்று விளக்கு எரிந்து  கொண்டிருந்ததைப் பார்த்து மனதுள் ஏதோ உந்த, சட்டென்று கட்டில் போடப்பட்டிருந்த பக்கம் திரும்பினான்.

     அவன் மனதுள் தவமிருந்து எதிர்பார்த்திருந்த நாளாய், அவன் எதிர்பார்த்தபடியே அவள் அங்கு அவனது கட்டிலின் அருகே கீழே தரையில் போர்வை விரித்துப் படுத்து உறங்கியும் போயிருந்தாள் மசக்கையின் அசதியில்…

 -மௌனங்கள் மொழி பேசுமா?

Advertisement