Advertisement

அனைத்தும் சரியாக இருக்கவேண்டும் அவனுக்கு. வாடிக்கையாளர்கள் எவ்வகையிலும் அதிருப்தி அடைந்துவிடக் கூடாது என்பதில் அதிக கவனமாய் இருப்பான். அதுபோல் தான் அந்த ஆர்டரும் அவர்களுக்கு  நிறைவாய் இருக்க வேண்டும் என்று பார்த்துப் பார்த்து செய்து கொண்டிருந்தான். 
மதிய வேளையில் பல்லவி உறங்கிக் கொண்டிருக்க, ஸ்வரன் வெளியே சென்றிருக்க, அன்றைய சமையலை மெல்ல ஆரம்பித்திருந்தார் சிவகாமி. எது எங்கிருக்கிறது என்று அவர் தேடித் தேடி எடுத்துக் கொண்டிருக்க,
“என்ன சமைக்குறீங்க சிவகாமி?” என்றபடி துண்டை எடுத்து தலையில் கட்டியபடி சமையலறைக்குள் நுழைந்தார் சுந்தரேஸ்வரன். அவரது தோற்றமே கூறியது அவர் சமைக்கத் தயாராகிவிட்டார் என்று.
“மோர் குழம்பும் ரசமும் தான் வைக்கப் போறேங்க. உங்களுக்கு எதாவது வேணும்னா சொல்லுங்க அதையும் செஞ்சிடலாம்” என்றபடி வேலையில் மும்மரமாய் இருக்க 
“என்ன சிவகாமி வெறும் ரசமா வைக்குறீங்க? முன்னாடி நம்ம வாசல்ல முடக்கத்தான் கொடி இருக்கும் பாருங்க, நாலு தலையை கிள்ளிட்டு வாங்க. அதுல ரசம் வெச்சு குடிச்சா உடம்புவலி எல்லாம் பறந்து போயிடும். நீங்களும் குடிச்சிட்டு பல்லவிக்கும் அதை கொடுங்க” என்றதும் அவரை வியந்து பார்த்தபடியே வாசலுக்கு விரைந்தார்.
“மெதுவா போங்க சிவாகாமி. நீங்களும் எங்காவது வழுக்கி விழுந்துடாதீங்க. இப்போதான் தெரியுது பல்லவிக்கு இந்த வேகம் எங்கிருந்து வந்திருக்குன்னு” என்ற அவர் குரல் பின்னால் வர, நடையின் வேகத்தை குறைத்துக் கொண்டார் சிவகாமி.
அவர் சென்று வெகுநேரமாகியும் திரும்பாதது கண்டு சுந்தரேஸ்வரன் வெளியே வந்து பார்க்க, சிவகாமி பலத்த யோசனையில் நின்றிருப்பது கண்டு அவரருகே சென்றார். 
“உங்களை முடக்கத்தான் தலை தானே கிள்ளிட்டு வர சொன்னேன்” என்றதும், திடுக்கிட்டு திரும்பியவர் 
“இதுல எது முடக்கத்தான் தலைன்னு தெரியலைங்க” என பாவமாய் கூற, புன்னகைத்த சுந்தரேஸ்வரன் அதைக் காண்பித்து
“இதான் சிவகாமி. இதை தொடர்ந்து சாப்பிட்டா கை கால் உடம்பு வலியெல்லாம் சரியாகிடும். இது கற்பூரவள்ளி. முள்ளு முள்ளா இருக்குறது தூதுவளை. ஜலதோஷம் சளின்னா எல்லாம் இதை வெச்சே சமாளிச்சுக்குவேன் நான்” என்று அங்கிருந்தவற்றை எல்லாம் ஒவ்வொன்றாய் காண்பித்து விளக்க, இவருக்கு இத்தனை விஷயம் தெரிந்துள்ளதா என்று ஆச்சர்யமாய் பார்த்திருந்தார் சிவகாமி.
நான்கு நாட்கள் கடந்திருக்க, பல்லவியை அம்மூவரும் தங்கத் தட்டில் வைத்துத் தாங்கியதில் வலியும் வீக்கமும் குறைந்து நன்றாக நடக்க ஆரம்பித்திருந்தாள். 
அதன்பின் சிவகாமி அவர் இல்லத்திற்கு சென்றுவிட, ஸ்வரன் பல்லவியை கவனித்துக் கொண்டான். அவளுக்கு அதிக வேலை வைக்காது முடிந்தவறை இவனே அனைத்தையும் பார்த்துக் கொண்டான். 
கடந்த நான்கு நாட்களும் பல்லவி அவள் பாட்டியோடும் ஸ்வரன் அவன் தாத்தாவோடும் தங்கியிருக்க, இன்றைய இரவில் தான் மீண்டும் இருவரும் அவர்களது அறையில் ஒன்றாய் தங்கும்படி இருந்தது. இடைக்காலப் பிரிவு இருவருக்கும் இடையில் ஒருவித நெருக்கத்தை கொண்டுவந்திருந்தது. 
அவர்களது அறைக்குள் எட்டி எட்டி பார்த்தபடி பின் கையைப் பிசைந்துகொண்டு ஆந்தை முழி முழித்தவாறே மெல்ல நுழைந்தாள் பல்லவி. அவள் எதுவோ பேசத் தயங்குகிறாள் என அவள் உடல் மொழி பேசியது ஸ்வரனிடம். 
அவளும் அப்படித்தான் அதைச் சொல்வதா? வேண்டாமா? எப்படிச் சொல்வது என்று யோசனையில் இருந்தாள். 
சிவகாமியும் சுந்தரேஸ்வரனும் கூறிய வார்த்தைகள் தான் அவளுள் ரீங்காரமிட்டன. அதிலிருந்து தான் அவனைப் பார்க்கும் போதெல்லாம் நெளிந்து கொண்டிருகிறாள் என்பதை அவனும் அறிவான்.
இன்னும் சில தினங்கள் இங்கேயே இருக்கும்படி இவர்கள் கூற, சிவகாமி மறுத்துவிட்டார். அவர் கிளம்பும்போது 
“இனி எப்போ வர்றீங்க பாட்டி..?” என ஸ்வரன் கேட்டிருக்க
“பல்லவிக்கு எதாவது விசேஷம்னா உடனே வந்துட போறேன்” என்று அவர் புன்னகைக்க, உடனே ஸ்வரன் தன் வாயை இறுக மூடிக்கொண்டான். அது புரியாத பல்லவியோ
“எனகென்ன விசேஷம் ம்மா.. அது எப்போ வரும் நீங்க எப்போ வருவீங்க..?” என்று வாயை விட, பெரியவர்கள் இருவரும் சிரிக்க, ஸ்வரன் தன் தலையை முட்டிக்கொள்ள சுவரைத் தேடினான்.
“சீக்கிரம் பேரனையோ பேத்தியையோ கையில கொடுத்தா அதை வளர்த்த வந்திடுவேன்னு சொல்லுறாங்க பல்லவி மா” என்ற தாத்தாவின்  விளக்கத்தில் தன் முட்டைக் கண்ணை விரித்து ஸ்வரனைப் பார்க்க 
‘இங்க என்ன லுக்கு..? நீதானே கேட்ட நீயே பதில் சொல்லு’ என்பதாய் கண்காட்டிவிட, அவர்களிடம் சிரித்து மழுப்பினாள் பல்லவி. 
“உட்காரு அனு” என்ற ஸ்வரனின் குரலில் நினைவுக்கு வந்தவள் மெல்ல அவன் அருகில் வந்து அமர்ந்தாள்.
“என்கிட்டே எதாவது சொல்லனுமா?” என்றான் மெல்ல. 
முதலில் இல்லை என்று தலையசைத்து பின் ஆமாம் என அசைக்க.. புன்னகைத்த ஸ்வரன்,
“எதாவது ஒன்னை சொல்லு. சரி சொல்லு என்ன விஷயம்” என்றான்.
அவள் அப்போதும் தயங்க.. அவள் இப்போதைக்கு சொல்லப் போவதாய் தெரியவில்லை என்றறிந்து அவள் கையை எடுத்து மெல்ல தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டான். உடனே உள்ளுக்குள் படபடவென இருந்தது பல்லவிக்கு.
“ரிலாக்ஸ் அனு. ஏன் ஒருமாதிரி இருக்க” என்றிருந்தான் அடுத்து அவள் மயக்கம் போடுவதற்குள். 
‘ஆங்’ என புரியாது அவனை நிமிர்ந்து பார்க்க, 
“நம்ம கொஞ்ச நேரம் பேசலாம்” என்றான். 
“ஹ்ம்ம்.. பேசலாமே” என்றபடி மெல்ல அவனிடமிருந்து கையை உருவிக்கொள்ள முயல, அவன் கைகளுக்குள் இவள் கையை டைட்டாக லாக் செய்திருந்ததால் அவளால் உருக முடியாதுபோக, விட்டுவிட்டாள்.
“நீ பர்ஸ்ட் கம்போர்ட்டபில்லா இரு அனு. நம்ம லைஃப்ப இப்பவே ஸ்டார்ட் பண்ணனும்னு எந்த அவசியமும் இல்ல. முதல்ல ஒருத்தரை ஒருத்தர் நல்லா புரிஞ்சுக்கலாம்” என்று கூறியதும் அவனை விழி விரித்துப் பார்த்தாள். 
அதைத் தானே எப்படிக் கூறுவதென்று தயங்கிக் கொண்டிருந்தாள். 
‘ஆதி எனக்கு கொஞ்சம் டைம் வேணும். அதுவரைக்கும் ஒருத்தரை ஒருத்தர் நல்லா புரிஞ்சுக்கலாம். தப்பா எடுத்துக்காதீங்க’ என்பதை பலமுறை மனதிற்குள் ஒத்திகை பார்த்திருந்தாள்.
அப்படியும் அவன்முன்பு கூற நா எழவில்லை. இதைச் சொன்னாலும் அவன் எப்படி எடுத்துக் கொள்ளப் போகிறானோ என்றிருக்க, அவன் அவளுக்கு அந்த வேலையை வைக்கவேயில்லை. அவள் கண்கள் என்றிருக்கும் இரண்டு கோழி மொட்டுகளை உருட்டுவது கண்டு
“என்ன ஆந்த முழிக்குற.. அப்போ நீ இதை சொல்ல வரலையா..? அப்போ ஸ்டார்ட் பண்ணிடலாமா” என அவளைப் பார்த்துக்கொண்டே கண்ணடிக்க
“ம்கூம்..” என்று தலையை வேகமாய் ஆட்டியவளைக் கண்டு அவனுக்கே சிரிப்பு வந்துவிட்டது. அவன் கலகலவென சிரிக்க, அவளோ தலையை கவிழ்த்து அமர்ந்திருக்க,
“அனு..! என்ன புதுசா வெக்கம் எல்லாம் வருது உனக்கு” என்று கேட்டு தலையணையால் அவளிடம் இண்டு மொத்து வாங்கியவன், அதை அவளிடம் இருந்து பறித்து தன் மடியில் வைத்துக்கொண்டு 
“தாத்தா பாட்டி சொல்லுறாங்கன்னு எல்லாம் யோசிக்காத அனு. உனக்கா தோணுனா தான் நாம முழுமனசோட நம்ம ஃலைப்ல நெக்ஸ்ட் ஸ்டெப் எடுத்து வைக்கமுடியும். அது தோணும்போது பார்த்துக்கலாம்” என்றுவிட்டு அவளைப் பார்க்க
“அதுவரைக்கும்..??” என்றாள். 
அவள் சந்தோசத்தை நினைக்கும் அவனின் சந்தோசதை, அவள் நினைத்தால் எழுந்த கேள்வி.
“அதுவரைக்கும்.. நோ மீன்ஸ் நோ” என்று கண்சிமிட்டியதில் அவளுமே அவனோடு சேர்ந்து அழகாய் புன்னகைத்தாள். 
பின் அவனிடமிருந்த தலையனையை வாங்கி இருவருக்கும் இடையில் வைத்துவிட்டு படுத்துக்கொண்டாள். அவனும் பார்டருக்கு அந்தப் பக்கம் படுத்துக்கொள்ள, சில நொடிகளிலேயே
“ஆதி எனக்கு ஒரு சந்தேகம்.. அன்னிக்கு தண்ணி எடுத்துட்டு திரும்பும்போது நான் விழப்போறேன்னு உங்களுக்கு எப்படி தெரியும்? கால் வைக்கப் போகைல கரெக்டா கத்துனீங்க” என்று பல்லவி கேட்க
“அதெல்லாம் உனக்கு எதுக்கு” என்று கத்தரித்தான் ஸ்வரன். 
“சொல்லுங்க ஆதி.. சொல்லுங்க ஆதி” என அவன் கையைச் சொரிய
“சொல்றேன் சொல்றேன் தயவு செஞ்சு உன் நெகத்தை வெட்டுமா.. எவ்வளவு ஷார்ப்பு” என தன் கையைத் தேய்த்துக் கொண்டவன், 
“அன்னிக்கு ஒருநாள் நானும் அப்படி தான் விழுந்தேன் அனு. நீயும் அதே இடத்துல அதே பொசிசன்ல திரும்புனையா அதான் உன்ன அலெர்ட் பண்ணுனேன்” என்றதும் சிரிப்பை அடக்க முடியாது சிரித்தாள் பல்லவி.
“ஏய் என்ன சிரிப்பு” 
“சரி விடுங்க நாளைக்கு அங்கிருக்கற பாசியை எல்லாம் நம்ம தேய்ச்சு நல்லா கழுவி விட்டுடலாம்” என்றாள்.
“நம்ம தேய்ச்சு கழுவலாங்கற.. நானும் வந்து கழுவணுமா அனு?”
“ஆமா பின்ன, நீங்க முன்னாடியே ஒழுங்கா கழுவி இருந்தா நான் ஏன் விழுந்திருக்கப் போறேன்”
“சாரி அனு. பாவம் நீ வேற விழுந்து எந்திருச்சு நாலு நாலா ரொம்ப கஷ்டப்பட்டு போய்ட்ட. நீ இல்லாம எனக்கு தூக்கமே வரல தெரியுமா” என குரலில் ஸ்ருதி குறையக் கூற, 
“எனக்கும்தான்” என்றாள் மெல்ல, அவளையும் மறந்து.
“என்ன சொன்ன?” என அவன் எழுந்தே அமர்ந்துகொள்ள
“அது.. அது ஒன்னும் சொல்லலையே…”
“ஏய் இல்ல நீ எதோ சொன்ன”
“பேசாம தூங்குங்கன்னு தான் சொன்னேன்” என்றாள்.
சிறிது நேர அமைதிக்கு பின், 
“அனு..” என்ற குரலில், தலையணை பார்டருக்கு அந்தப்பக்கம் படுத்திருந்தவனைத் திரும்பிப் பார்த்தாள் பல்லவி.
“தூங்கலையா..?” என்றான்.
“நீங்க தூங்கலையா..?” என்றாள்.
“தூக்கம் வரல”
“எனக்கும்”
“அனு..!”
“ஹ்ம்ம்..”
“நான் கட்டிக்கவா” என கிறக்காமான குரலில் கேட்க.
“ஹ்ம்ம்ம்ம்…” என்றாள் லேசான வெக்க ரேகைகளுடன்.
அடுத்தநொடி அவன் பாட்டிற்கு திரும்பிப் படுத்துக்கொள்ள, புரியாது பார்த்திருந்தவள்
“நான் ஓகே தானே சொன்னேன்” என்றாள். பிறகு ஏன் திரும்பிப் படுத்தான் என்று குழப்பமாய்.
“எதுக்கு ஓகே சொன்ன?” என்றான் அவனும் திரும்பாமலே. 
“கட்டிக்கவான்னு கேட்டீங்க அதுக்கு” என்றாள்.
“நான் கரண்ட்டு பில்ல தானே சொன்னேன். லைட் எறிஞ்சிட்டு இருந்துச்சு” என்றதும் அவள் காதில் புகை வராத குறை. 
“ஆமா நீ என்ன நினைச்ச அனு? நான் உன்னை சொன்னேன்னா” என்று அதரங்களில் அடக்கப்பட்ட சிரிப்புடன் கேட்க 
“ச்சே..” என இஷ்டதிக்கு ச்சேக்களை சொல்லியபடி தலையனையை குத்திக்கொண்டு திரும்பிப் படுத்துக் கொண்டு போர்வையால் முகத்தையும் மூடிக்கொண்டாள். 
“இதை இதை இதை தான் உன்கிட்ட இருந்து இப்போதைக்கு நான் எதிர்பார்த்தேன்” என்றான் ஸ்வரன் ஆனந்தமாய்.
‘எதை’ என போர்வையை முகத்திலிருந்து விலக்கிப் பார்த்தாள். எழுத்து சென்று விளக்கை அணைத்து வந்தவன் 
“நம்ம அக்ரிமென்ட் ரூல் நம்பர் ஃபோர் படி இனி நான் எதையும் கேட்கப் போறதில்லை” என்றதும் தான் அவளுக்குப் புரிந்தது. 
இருவருக்கும் பாகப் பிரிவினையாய் இடையில் இருந்த தலையணையை தூக்கித் தூரப்போட்டுவிட்டு அவள் அருகில் நெருங்கி வந்து அவளிடை மீது கைப்போட்டுக்கொண்டு படுத்துக்கொண்டான் ஸ்வரன்.
இம்முறை சிரிப்பதைத் தவிர பல்லவியால் வேறெதுவும் செய்ய முடியவில்லை. 
கீதமாகும்….

Advertisement