Advertisement

ஓம் ஊழிநாயகனே போற்றி!!
6  
பாவையவளின் பாதங்களிரண்டும் பாதையில் படிந்து போய்கிடந்த பாசத்தின் மீது பாசம் கொள்ள.. அடுத்த கணம் தரையில் விழுந்து கிடந்தாள் ஸ்வரனின் பல்லவி. 
இடையில் தாங்கி வந்த பானையையும் போட்டு உடைத்திருந்தாள். 
“அனு..!!!” அவள் விழுந்த அடுத்த கணம் அவள் முன்பு வந்து நின்றவன் இமைப்பொழுதில் அவளை எழுப்பி நிறுத்தவும் செய்தான். 
இடையில் வாங்கிய அடியில் வந்த வலிகளையெல்லாம் இமை மூடி தனக்குள் புதைத்துக் கொள்ள முயல, அதற்குள் அவள் முகம் படித்த தாத்தா,
“பல்லவிம்மா எதுக்கும் டாக்டரை பார்த்துட்டு வந்திருங்க.. ரெண்டு பேரும் கிளம்புங்க” என்றார்.
“அதெல்லாம் வேண்டாங்க தாத்தா. லேசான அடி தான்” என அவருக்கு சமாதானம் சொன்னவள், தன்னையும் சமாளித்துக் கொண்டு உள்ளே வந்தாள். 
அவளோடு வந்த அவளின் சரிபாதி,
“அனு நம்ம டாக்டர் கிட்ட போய்ட்டு வந்திடலாம்” என்று அழைக்க.. வேண்டாமென்று மறுத்துவிட்டாள். 
“ப்ச்.. ஏன் அனு இப்படி பண்ணற” என புலம்பியபடி அவன் தைலத்தை தேடி எடுத்துவந்து ஹாலில் அமர்ந்திருந்தவளிடம் நீட்ட, அதை வாங்கிக்கொண்டு மெல்ல எழுந்தாள் அவள் அறைக்குச் செல்ல.
“முடியுமா உன்னால? நான் போட்டு விடட்டா” என்றதில் 
‘நீங்களா..?? எனக்கா..??’ என அவனைப் பார்த்த பார்வையிலேயே 
“இல்லைனா வா ஹாஸ்பிட்டல் போய்ட்டே வந்திடலாம்” என்றான்.
“அதெல்லாம் வேண்டாம் ஆதி. நான் நல்லா தான் இருக்கேன். கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துக்கட்டுமா?” என்றாள். 
‘இது என்ன கேள்வி’ என அவன் முறைக்க, அவன் பின்னோடு வந்த சுந்தரேஸ்வரன்
“நீ கொஞ்ச நேரம் ஓய்வெடு மா.. நைட் நானே சமைச்சுக்கறேன்” என்றார். 
எப்போது நேரம் கிடைக்கும் சமையலை கையில் எடுக்கலாம் என்று காத்திருந்தவரை ஸ்வரன் ஒரு முறை முறைத்ததில் அங்கிருந்து நகர்ந்துகொண்டார். 
அதற்குள் பல்லவி அவர்களது அறைக்குள் சென்று படுத்துக்கொள்ள, ஸ்வரன் அவளைக் காண அவர்களது அறைக்குள் வர, தைலத்தை போட முடியாது எரிச்சலில் இருந்தவள் அவனைக் கண்டதும்
“ஏங்க குட்டி போட்ட பூனையோட்ட என் பின்னாலயே வர்றீங்க? கதவை சாத்திட்டு வெளிய போங்க நான் கொஞ்ச நேரம் தூங்கணும்” என்று கத்தியேவிட்டாள்.
“ஓகே ஓகே கத்தாத..” அவசரமாய் அவளை விட்டு அறையை விட்டு ஓடி வந்திருந்தான் வெளியே. அப்போது சென்றவன் இரவு உணவை தயார் செய்துவிட்டுத் தான் மீண்டும் அவ்வறைக்குள் வந்தான். 
“அனு எழுந்து வந்து சாப்டுட்டு அப்பறம் படுத்துக்கோ” என எழுப்ப, எழ முயன்றாள் ஆனால் முடியவில்லை. 
முயன்றால் முடியாதது எதுவுமில்லை என தனக்குத் தானே கூறிக்கொண்டு கஷ்டப்பட்டு எழுந்தாள். இடுப்பில் சுளீரென்ற வலி தென்பட காலை ஊன்றவே சிரமமாய் இருந்தது. அவளையே பார்த்திருந்த ஸ்வரன்,
“ரொம்ப வலிக்குதா??” என்றபடி அருகில் வர,
“ஹ்ம்ம்…” என்றவள் கண்களில் கண்ணீர்.
“ஹாஸ்பிட்டல் போலாம் வா” என்றதும் உடனே வேண்டாம் என்று தலையசைத்தாள்.
“ப்ச்.. பிராக்செர் ஆகியிருக்கப் போகுது. விளையாடாம வா அனு” என அதட்டி அவளை எழுப்ப முயற்சிக்க
“அங்க போனா ஊசி போடுவாங்க நான் வரல” என்றாள் ஊசிக்கு அழும் குழந்தைபோல்.
இப்போது தான் அவனுக்குப் புரிந்தது ஹாஸ்பிட்டல் செல்லக் கேட்ட போதெல்லாம் ஏன் மறுத்தாள் என்று. அவளிடம் எதுவும் பேசாது வெளியே வந்தவன் சுந்தரேஸ்வரனிடம் கூறிக்கொண்டு பின் ஆட்டோ பிடித்துவந்து பல்லவியை அலேக்காய் தூக்கிச் சென்று அவள் வாயைப் பொத்தி வண்டியில் ஏற்றி மருத்துவமனைக்கே சென்றிருந்தான். 
அவளை பரிசோதனை செய்த மருத்துவர் 
“லேசா ஹிப் ஸ்ப்ரைன் ஆகிருக்கு. ஃபோர் டூ பைவ் டேய்ஸ் அதிக மூவ்மெண்ட் கொடுக்காம கம்ப்ளீட் ரெஸ்ட் எடுத்தாவே ஷி வில் பீ ஆல்ரைட். அப்போவும் பெய்ன் இருந்தா மட்டும் நம்ம ஒரு ஸ்கேன் பார்த்துக்கலாம்” என்று சொல்லவும்தான் ஸ்வரனிற்கு உயிரே வந்தது. 
அடுத்து மருத்துவர் கூறிய செய்தியில் பல்லவிக்கு உயிரே போனது.
“நத்திங் பிக். ஒரு இன்ஜெக்சன் போடணும்” என்றுவிட்டு ஊசியை தயாராக எடுத்துக்கொண்டு தன் மூக்குக் கண்ணாடியை சரி செய்து கொண்டே அவர் பல்லவியை நெருங்க
“இன்ஜெக்சன் வேண்டாம் டாக்டர்” என அவள் கத்திய கத்தில் வெளியே காத்திருந்த நோயாளிகள் எல்லாம் பயந்துபோய் மருத்துவரின் அறையையே பார்க்க, ஸ்வரன் வேகமாய் வந்து அவள் வாயைப் பொத்தினான்.
“அவ அப்படி தான் சொல்லுவா. நீங்க போடுங்க டாக்டர்” என்றவன் பல்லவியின் கையைப் பிடித்து நீட்ட,
“நோ நோ அடிபட்ட இடத்துல போட்டா  தான் பெய்ன் ரிலீவ் ஆகும்” என்று மருத்துவர் கையில் ஊசி குத்த மறுத்தார்.
“ஓகே நான் வெளிய இருக்கேன் டாக்டர்” என ஸ்வரன் வெளியே செல்லப் போக, சற்றுமுன் அவள் கத்தியதை நினைத்த டாக்டரோ
“இட்ஸ் ஓகே நோ ப்ராப்லம். நீங்க இங்கயே இருங்க. இவங்க உங்க வைஃப் தானே” என, பல்லவிக்கு ரத்தக் கண்ணீர் வந்தது. 
“நான் ஊசி போட்டுக்குறேன் டாக்டர். அவர் போகட்டும்” என்றாள் வலியை பொறுத்துக் கொண்டு.
“உங்க ஹஸ்பென்ட் தானே மா.. பேசாம உக்காருங்க” என்றுவிட 
‘போயும் போயும் இந்த லூஸு டாக்டர் கிட்ட தான் கூட்டிட்டு வருவிங்களா’ என ஸ்வரனை பார்த்து முறைத்துக் கொண்டிருந்தாள்.
அந்நேரதைப் பயன்படுத்தி மருத்துவர் அவளுக்கு ஊசியை குத்திவிட அவன் கையை இறுகப் பற்றிக்கொண்டாள். பெய்ன் கில்லெர் மாத்திரைகளும், அடிபட்ட இடத்தில் போடுவதற்கு பவர் ஜெல்லும் கொடுக்க, வாங்கிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தனர்.
வீடு வந்தவர்களிடம் சுந்தரேஸ்வரன் விசாரிக்க, பெரிதாய் ஒன்றுமில்லை என்று தெரிவித்த ஸ்வரன், அவளை தூக்கிவந்து மெத்தையில் அமரவைத்துவிட்டு, தட்டில் மூன்று இட்லியை வைத்து எடுத்து வந்து ஊட்ட.. 
“எனக்கு கையில எதுவும் அடிபடலை.. அடிபட்டா அப்போ ஊட்டி விடுங்க..” என்று அவனிடம் தட்டை கேட்க.. 
“வாயை மூடிட்டு சாப்பிடு” என கத்திவிட்டான் அவள் பேச்சில் காட்டம் கொண்டு.
சட்டென திகைத்தவள் இதழில் மெல்ல வந்தமர்ந்தது மென்முறுவல் ஒன்று.
“வாயை மூடிட்டு எப்படி சாப்பிடுறது?” என மெல்ல முணுமுணுக்க..
“என்ன?” என்றான் குறையா எரிச்சலோடு.
“ச்சே.. எனக்கு எதுவும் வேண்டாம். எழுந்து போங்க..” 
அவன் கண நேர மாற்றம் அவளின் ஒவ்வொரு அணுவையும் இம்சித்தது.
“அனு!!” என்றழைத்தும் அவனின் அனு அவன் முகம் பார்க்காது அமர்ந்திருக்க.. தணிந்தான் தத்தையின் தலைவன். 
“சரி.. சாரி.. இந்தா சாப்பிடு.. டேப்ளட் போடனும்” என கனிவாய் சொல்லவே சமாதானம் ஆகினாள்.
அவளுக்கு ஊட்டியவன் அதன் பிறகு உண்டு வர, அவள் வலிகள் எல்லாம் கண்ணீரில் கரைய வழிகள் கண்டிருந்தன.
“அனு.. என்னாச்சு?”
“வ..லிக்குது ஆதி” என்ற அவள் வார்த்தைகளில், அவன் உணர்ந்தான் அவளின் வலியை. 
“ஒரு நிமிஷம் இரு..” என வேகமாய் சென்றவன் வெந்நீரோடு வந்தான்.
அவள் தயங்கி அவன் முகம் பார்க்க.. அவனிடம் துளியும் தயக்கமில்லை.
“திரும்பி படுடா..” என்றவனது கருத்தும் கவனமும் அடுத்த பத்து நிமிடங்கள் வலியை ஒத்தடம் மூலம் விரட்டுவதில் தான்.
உறக்கம் அவளைத் தழுவிட, அவளுக்கு போர்வை போர்த்திவிட்டு சுந்தரேஸ்வரனை ஒருமுறை சென்று பார்த்துவிட்டு வந்தவன் விளக்கை அணைத்துவிட்டு வந்து பல்லவியின் அருகில் படுத்துக் கொண்டான்.
நடு ஜாமத்தில் விழிப்பு தட்ட எழுந்தவன் பல்லவியை ஒருமுறை பார்க்க, அவளிடம் அசைவு தெரிவது கண்டு அவன் சென்று லைட்டைப் போட, அவள் அழுதிருக்கிறாள் என்று தலையணை தாங்கிய ஈரம் காட்டிக்கொடுத்தது.
“என்ன அனு மா இன்னும் வலிக்குதா” 
இல்லை என்று தலையசைக்க, 
“சிவகாமி பாட்டி ஞாபகம் வந்திடுச்சா” என்றான். 
அதற்கும் இல்லை என்று தலையசைக்க, பின் என்னவென்று யோசித்தான். மாலை அவள் சமைத்த உணவைப் பற்றி கேட்டது நினைவில் வர, அதற்கு இரவு அவன் ஸ்டைலில் பாராட்டலாம் என்று எண்ணியிருந்தான். இப்போது அது முடியாது போன வருத்தத்தில்,
“நீ சமைச்சது பத்தி நைட் சொல்றேன்னு சொல்லிருந்தேன். இப்போ சொல்ற நிலைமைல நானும் இல்லை அதை கேட்குற நிலைமைல நீயும் இல்லை” என்றான். 
“ச்சே.. நான் ஒன்னும் அதுக்கு அழல” என்றாள்.
“என்னனு சொன்னா தானே தெரியும். சொல்லு அனு” என்று கேட்க
“எனக்கு ரெஸ்ட் ரூம் போகணும்” என்றாள் தயக்கத்துடன்.
“என்னை எழுப்பியிருக்கலாம்ல அனு. சரி வா” என அவளை மெல்லத் தூக்கிச் சென்று உள்ளே விட்டுவிட்டு கதவை சாற்றிக்கொண்டு வெளியே நின்றிருந்தான். பின் அவளை மீண்டும் தூக்கிவந்து மெத்தையில் படுக்க வைத்துவிட்டு விளக்கை அணைத்துவிட்டு வருவதற்குள் அவள் அழுகை அதிகமானது.
“என்னாச்சு அனு மா.. ஏன் அழுதுட்டே இருக்க” என்றபடி அவளருகே வந்தமர,
“தெரியல.. அழுகையா வருது” என்றாள் விசும்பிக் கொண்டே.
“உனக்கு ஒன்னும் இல்லை அனு. பயப்படாத. எல்லாம் சீக்கிரம் சரியாகிடும். நான் உன் கூட தானே இருக்கேன். நான் வேணும்னா நாளைக்கு சிவகாமி பாட்டியை கூட்டிட்டு வரட்டுமா?”
“வேண்டாம். எனக்கு இப்படி ஆகிடுச்சுன்னு அவங்களுக்கு தெரிய வேண்டாம். அப்பறம் ரொம்ப வருத்தப்படுவாங்க” என்றதும் 
“சரி நான் சொல்லல. நீ பேசாம தூங்கு. எதுவேணும்னாலும் என்னை எழுப்பு” என்று அவளுக்கு மீண்டும் போர்வையை போர்த்திவிட்டு மெல்ல அவள் தலையை வருடிக் கொடுக்க சிறிது நேரத்தில் உறங்கிப்போனாள் பல்லவி. 
அவள் உறங்கியதும் அவள் முன்நெற்றியில் மெல்ல இதழ் பதித்தவன் பின் அவளைப் பார்த்துக்கொண்டே உறங்கிப்போனான்.
காலையில் கண்விழித்த பல்லவி முதலில் கண்டது தன் சிவகாமி அம்மாவைத் தான்.  
பல்லவி சங்கோஜப் பட்டுக்கொண்டு தன்னிடம் எதையும் கேட்க மாட்டாள் என்று எண்ணியவன் அதிகாலையில் சிவகாமியின் இல்லத்திற்கு சென்று விசயத்தைக் கூறி, அவரையும் கையோடு அழைத்துக் கொண்டே வந்துவிட்டான்.
‘சொல்லமாட்டேன் சொல்லமாட்டேன்னு சொல்லிட்டு விடிஞ்சும் விடியாமையும் பாட்டியோட வந்துட்டாரே. நைட் நம்ம பக்கத்துல தானே படுத்திருந்தாரு எப்போ எந்திருச்சு போய் பாட்டியை கூட்டிட்டு வந்தாரு’ என ஸ்வரனைத் தேட, அந்நேரத்தில் அவனும் சரியாய் என்ட்ரி கொடுத்து அவளிடம் முறைப்பை பெற்றுகொண்டான்.
“அந்த தம்பியை எதுக்கு முறைக்குற? என்கிட்டே சொல்லக்கூடாதுன்னு வேற சொல்லிருக்க.. அவ்வளவு பெரிய மனுசி ஆகிட்டியா பல்லவி நீ” என்று சிவகாமி ஆரம்பிக்க, அதற்கும் அவனைத்தான் முறைத்தாள் பல்லவி.
“பாட்டி நீங்க பேசிட்டு இருங்க நான் இப்போ வந்திடறேன்” என அங்கிருந்து தப்பித்து வெளியில் வந்துகொண்டான் ஸ்வரன்.
அவன் செய்தது தான் சரி என்று பட்டது பல்லவிக்கும். அவள் தேவைகளை எல்லாம் சிவகாமி உடனிருந்து பார்த்துக்கொள்ள, ஆதீஸ்வரன் அவன் தொழிலை கவனிக்க ஆரம்பித்தான்.
வொர்க்கிங் ப்ளேஸ் என்றெல்லாம் தனியாக இல்லை அவனுக்கு. அவனிடம் ஆர்டர் கொடுக்க வருவோர் எல்லாம் அவனது இல்லத்திற்கு தான் அவனைச் சந்திக்க வருவர். பல நேரங்களில் விஷேச இடங்களில் சென்று சமைப்பது போல் தான் இருக்கும். சில நேரங்களில் தான் வீட்டின் முன்பிருக்கும் காலி இடத்தை உபயோகித்துக் கொள்ளவது போலிருக்கும். பெரியவரை தனிமையில் விடாதபடி தான் அவனும் பார்த்துக் கொள்வான்.
தலைமுறை தலைமுறையாக சுந்தரேஸ்வரன் இத்தொழிலை செய்துகொண்டிருப்பதால் பலரது நன்மதிப்பைப் பெற்றிருந்தது அவர்களது கேட்டரிங் சர்விஸ். தொடர்ந்து ஆர்டர்கள் வந்துகொண்டிருக்க வருமானத்திற்கு குறைவில்லை. 
விஷேசங்கள் இல்லாத மாதங்களில் கோவில்களில் இருந்து காண்ட்ராக்ட் வரும். சில கரி நாட்களில் ஆர்டர் எதுவும் இருக்காது அப்போது மட்டும் கையில் இருப்பதை வைத்து சமாளிக்கும்படி இருக்கும். ஸ்வரன் சிறு வயதுமுதலே இதைப் பார்த்து வளர்ந்ததால் அவனை அப்போதிருந்தே தொழிலுக்குத் தயார்படுத்திக் கொண்டான். 
இன்றும் அவனைத் தேடி ஒருவர் வந்து அவரது வீட்டு விஷேசத்திற்கு மூன்று வேலைக்கான சமையல் ஆர்டரை அளிக்கவும், உடனே அவனது நண்பர் குழுவிற்கு வாட்சப்பில் தகவல் அளித்தான். விசேஷங்களில் பரிமாறுவதற்கு இப்படி அவன் குழுக்கள் வாரியாக ஆட்களை உடன் வைத்திருந்தான். விழா முடிவில் அவர்களுக்கான தொகை அவர்களுக்கு போய் சேர்ந்துவிடும். பார்ட் டைம் வேலை போல் இதைச் செய்ய கல்லூரி மாணவர்கள் தான் அதிகம் இருந்தனர்.
“ஹெலோ நான் ‘நளன் கேட்டரிங் சர்விஸ்’ ல இருந்து பேசுறேன்ங்க நம்ம பையன் ஒருத்தன் வருவான் அவன்கிட்ட லிஸ்ட் வாங்கிட்டு பொருளெல்லாம் சரியா அனுப்பிவிடுங்க” என ஒவ்வொரு இடத்திலும் கைப்பேசியில் அழைத்து தகவல் தெரிவித்துவிட்டு டைரியில் அனைத்தையும் கணக்குப் போட்டுக் கொண்டிருந்தான். 

Advertisement