Advertisement

“முழு பலத்தையும் உபயோகிங்க மா”
“என் பலமே என் புருஷன் தான் டாக்டர் அவரை உள்ள விடுங்க ப்ளீஸ்”
“அப்படி எல்லாம் அலோவ் பண்ண முடியாது மா”
“ஏன் அன்னிக்கு எனக்கு ஊசி போடும் போது மட்டும் அலோவ் பண்ணுனீங்க” என்றதில் டாக்டர் ஒருநொடி அவள் முகத்தை உற்று நோக்க,
“மா கொஞ்சம் கோஆப்பரேட் பண்ணுங்க” என்று செவிலிப்பெண் குரலை உயர்த்த.. அதற்குமேல் பொறுக்க முடியாத வலியில் சுயநினைவையே இழக்கப் போய்விட்டாள் பல்லவி.
“சிலதை நீ மட்டுமே தனியா எதிர்கொள்ளுற மாதிரி இருக்கும் அப்போ எக்காரணத்தைக் கொண்டும் என் அனு பலவீனமாகிட கூடாது. தனியா எல்லார்த்தையும் சமாளிக்க கத்துக்கணும்” என்ற ஸ்வரனின் வார்த்தைகளுக்கான பொருள் விளங்க, தன் முழு பலத்தையும் திரட்டி
“ஆதீஈஈஈ….” என்று அகத்தின் அடி ஆழத்தில் இருந்து ஒருமுறை உரக்க அழைத்திருந்தாள். 
அன்னையின் அலறலில் அவன் தந்தை பெயரை அறிந்தானோ..! அதற்கு மேலும் அவளை வாட்டாமல் புவியைத் தொட்டிருந்தான் அந்தப் பூப்பந்து.
அவனது ‘வீல்’ என்ற அலறல் மட்டுமே மயக்க நிலைக்குச் சென்று கொண்டிருந்தவளுக்கு கேட்டது.
தன் மகன் படும் இன்னல்களைக் காண சகியாது தூரத்தில் அமர்ந்தபடி தனக்குள் பரிதவித்துக் கொண்டிருந்தார் அம்பிகா. சரண் அவர் கரத்தை அழுந்தப் பற்ற, அவன் புறம் திரும்பினார்.
தன் முகத்தையே பார்த்திருக்கும் சரணும் பயந்துபோகக் கூடும் என்று எண்ணியவர் தன்னை கட்டுக்குள் கொண்டுவந்து
“நீ வேணும்னா தாத்தா பாட்டியோட வீட்ல போய் இருக்கியா.. அக்கா வந்ததும் இங்க வந்துக்கலாம்” என, அவன் மறுத்துவிட்டான்.
பல்லவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி அறிந்ததுமே கல்லூரியில் இருந்து அவன் ஒருவனே கிளம்பி வந்திருந்தான். அப்போதிருந்து அவளைக் காண காத்திருக்கிறான். எதற்கும் தளர்ந்துபோகாத ஸ்வரன் அப்படி அமர்ந்திருப்பது வேறு அவனையும் பயம்கொள்ளச் செய்ய, அம்பிகா சரணை தன்னோடு அமர்த்திக் கொண்டார்.     
டாக்டர் வெளியே வரவும், ஸ்வரன் ஒருவராக எழுந்து அவர்முன் நிற்க
“வாழ்த்துகள் உங்களுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கு” என்று சொல்ல, அந்த சந்தோசம் சிறிதுமின்றி
“அனு..??” என்றிருந்தான்.
“ஷி இஸ் ஆல்ரைட்.. மயக்கத்துல இருக்காங்க. கொஞ்ச நேரத்துல நர்ஸ் பேபியோட வருவாங்க அப்பறம் போய் அவங்களை பாருங்க” என்றுவிட்டு செல்ல, அதற்குள் வீட்டில் காத்திருக்க முடியாது சுந்தரேஸ்வரனும் சிவகாமியும் அங்கேயே வந்திருந்தனர்.
அவர்களோடு சுரேகாவும் அவள் கணவரும் இணைந்துகொள்ள, விஷயம் அறிந்து அனைவருக்கும் ஆனந்தம் பொங்க, சரியாக குழந்தையை எடுத்து வந்திருந்தார் செவிலிப்பெண்.
ஸ்வரன் வாங்கட்டும் என அனைவரும் அவனைப் பார்க்க, குழந்தையின் முகத்தைப் பார்த்தவன் கைகளில் வாங்க முயற்சிக்கவில்லை. எப்படித் தூக்குவது என்று தயங்குகிறானோ என்றெண்ணிய தாத்தா
“முதல்ல நீங்க வாங்குங்க சிவகாமி” என்றார் சிவகாமியிடம்.
“கொள்ளுப் பேரனை நீங்களே வாங்குங்க” என்று அவர் கண்டிப்பாய் சொல்ல, மறுக்காது சுந்தரேஸ்வரனே வாங்கிக்கொண்டார்.
அவருக்கு இன்னதென்று சொல்லமுடியா உணர்வொன்று உள்ளத்தில் உருவெடுத்தது. அவரது ஸ்வரனின் மகன்.. அவனை கைகளில் ஏந்த கொடுத்து வைத்ததை எண்ணி எண்ணி இன்புற்றார்.
அடுத்து அவர் சிவகாமியின் கைகளில் கொடுக்க, குழந்தையை கைகளில் ஏந்தியதும் அவருக்கு தானாய் கண்களில் நீர் பெருகியது. 
முதலில் அவர் மகளை ஏந்தி, அடுத்து பல்லவியை ஏந்தி, இப்போது பல்லவியின் குழந்தையையும் ஏந்துகிறார். தன் கொள்ளுப் பெயரனின் நெற்றியில் அழகாய் முத்தமிட்டார். அவன் முகத்தைக் கண்ட நொடி அவர் இதுவரை அனுபவித்த கஷ்டங்கள் போல் இனி நூறு மடங்கு அனுபவித்தாலும் பரவாயில்லை என்று தோன்றியது. 
இனி உங்களுக்கு துன்பம் என்பதே கிடையாது சிவகாமி வரும் நாட்கள் எல்லாம் உங்களுக்கு இன்பம் மட்டுமே என்று காலம் அறிவிப்பு விடுத்தது.  
“அத்தை..! நீங்க பாட்டி ஆகிட்டீங்க” என சரண் அம்பிகாவிடம் சொல்லி மகிழ, 
“சரண் கண்ணா..! நீ மாமா ஆகிட்ட டா” என்று தனது மகிழ்ச்சியையும் அவனோடு பகிர்ந்துகொண்டார்.
ஸ்வரன் அமைதியாய் அருகில் நின்றிருப்பது கண்டு,
“அண்ணா..! உங்க பையனை நீங்க எடுங்க” என்று சுரேகா சொல்ல,
“நான் அனுவை பார்த்துட்டு வரேன்” என்று அவள் இருந்த அறைக்குள் சென்றுகொண்டான்.
“என்னாச்சு ஸ்வரனுக்கு..?” என்றார் தாத்தா, அவன் குழந்தையை கையில் கூட வாங்காதது கண்டு.
“ரொம்ப துடிச்சு போயிட்டான் மாமா. பல்லவி கண்ணு முழிச்சா தான் இவன் கொஞ்சம் சரியாவான்” என்றார் அம்பிகா தன் மகனை அறிந்து. 
அம்பிகா தன் பேரனை கைகளில் வாங்கியதும் அவருக்கு அத்தனை ஆனந்தம். ஸ்வரனிற்கு செய்யத் தவறியதை எல்லாம் அவன் மகனிற்கு செய்யவேண்டும் என்று நினைத்தார். மிச்சம் இருக்கும் காலம் முழுக்க ஸ்வரனிற்காகவும் அவன் மகனிற்காகவும்.. பல்லவி, சரண், மற்றும் பெரியோர்கள் கொண்ட இந்த அழகிய கூட்டிற்காக மட்டுமே வாழ நினைத்தார்.
அடுத்து சரண் தன் அக்கா மகனை கைகளில் வாங்கியதும் முதலில் நழுவ விட்டுவிடுவோமோ என்ற பயத்தோடு பிடித்திருந்தான். சிவகாமி தன் கையை சேர்த்துப் பிடிக்க, பின் குழந்தையை மெல்ல ரசித்தான். பல்லவியின் மகன்.. தன் அக்காவின் மகன் என்றதில் அத்தனை ஆனந்தம் சரணுக்கு. இவன் வளர வளர இவனுக்கு பக்க பலமாய் இருந்து இவனை பாதுகாக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டான். உடனே தன் தாய் மாமனின் மேல் பன்னீர் தெளித்திருந்தான் குட்டிப் பையன்.
“அடடா..! மாமன் மேல பன்னீர் தெளிச்சுட்டானா” என்று சுரேகாவின் சரிபாதி சொல்ல, அனைவரும் சிரிக்க.. பின் சிவகாமி குழந்தையை சரணிடம் இருந்து வாங்கிக் கொண்டார்.
அதற்குள் சரணிற்கு போன் வர, திரையில் மிளிர்ந்த பெயரைக் கண்டு புன்னகையுடன் அழைப்பை ஏற்று காதிற்குக் கொடுத்தான்.
“சரண்..! அக்காக்கு என்ன குழந்தை..?” என்று மறுமுனையில் ஆவலாய் ஒலித்தது சத்ரியாவின் குரல்.
“பையன்..!” என்றான் மகிழ்ச்சியாய்.
“வாவ்.. ஓகே ஓகே நான் கிளாஸ்ல இருக்கேன். சார் வேற கரெக்ட்டா ஸ்மெல் பண்ணி என்னவே குறுகுறுன்னு பார்க்குறார் நான் அப்பறம் கூப்பிடுறேன். பை” என்று வைத்துவிட்டாள்.
குழந்தையை அனைவரும் மாற்றி மாற்றி எடுக்க, கண்களை அழகாய் மூடி மூடித் திறந்து பார்த்தது அந்தப் பூப்பந்து. 
உள்ளே வந்த ஸ்வரன் பல்லவியின் தலையை மெல்ல வருடியபடி அவள் அருகிலேயே அமர்ந்துகொண்டான். மிகவும் சோர்ந்துபோய் இருந்தாள். அனைவரும் குழந்தையை கொஞ்சி மகிழ, அவன் மட்டும் பல்லவியை விட்டு அகலவே இல்லை.
சிறிது நேரத்தில் கண்விழித்தவள் தன் முன்பிருக்கும் ஸ்வரனைக் கண்டு புன்னகைத்து,
“குழந்தையை பார்த்தீங்களா..?” என்றாள் மெல்ல. அவன் ஆமாம் என்று தலையசைக்க, 
“யாரை மாதிரி இருந்தான். உங்களை மாதிரி தானே..?” என்றாள் அத்தனை சோர்விலும். அதில் பேச்சற்று போனவன் ஒரு பெருமூச்சிட்டு வார்த்தை திரட்டி 
“ஏன் அனு அப்படி சொன்ன..?” என்றான். அவள் அமைதியாய் பார்த்திருக்க
“கொஞ்ச நேரத்துல உயிரே இல்ல” என்று சொல்ல, அவன் வாயை தன் கையால் மூடினாள். அதற்குள் அவளருகில் வந்த சுரேகா 
“வாழ்த்துக்கள் சிங்கம். ஒரு அழகான சிங்கக் குட்டியை ஈன்றேடுத்திருக்கிறீர்கள்” என்று சொல்லிச் சிரிக்க, அவளை செல்லமாய் முறைத்தவள்
“ஆனாலும் நீ இருக்கையே..!” என, அவள் மகனை எடுத்துவந்து அவள் கைகளில் கொடுத்தார் சிவகாமி. 
வாங்கத் தெரியாது முழித்தவளுக்கு சிவகாமி சொல்லித்தர, பக்குவமாய் குழந்தையை கைகளில் வாங்கினாள்.
கண்களை விரித்து அவளையே பார்த்திருக்க, தானாய் கண்களில் நீர் சுரக்க அவனது பட்டுக் கன்னத்தில் மெல்ல தன் இதழ்களை ஒற்றினாள். 
“ஸ்வரன்..! அதான் பல்லவி நல்ல படியா எழுந்து உக்காந்துட்டாளே இனியாவது குழந்தையை கையில வாங்குப்பா” என்று சுந்தரேஸ்வரன் சொன்னதும் அதிர்ச்சியாய் ஸ்வரனை பார்த்தாள் பல்லவி.
அதற்குள் குழந்தை அழத்துவங்க, 
“நீ பசியாத்து மா.. நாங்க வெளிய இருக்கோம்” என அனைவரும் அங்கிருந்து சென்றுகொள்ள சிவகாமி மட்டும் அவளுடன் இருந்தார். அமிர்தம் உண்ட மயக்கத்தில் மகவு கண்மூடித் தூங்க, மகனை கையில் வைத்திருந்தபடியே
“ம்மா.. அவரை கொஞ்சம் உள்ள வரச் சொல்லுறீங்களா” என்றாள் பல்லவி. சிவகாமி சென்று ஸ்வரனை அனுப்ப, உள்ளே வந்தவன் அவளருகே நின்றிருக்க, அவன் பார்வை மொத்தமும் அவள் கைகளில் இருந்த மகனின் மேல்.
அதற்குள் மீண்டும் உள்ளே வந்த சுரேகா, குழந்தைக்காக வாங்கி வந்த தங்க மோதிரத்தை பல்லவியிடம் கொடுக்க..
“எதுக்கு ரேகா இதெல்லாம்..?” என்றவளுக்கு
“என் மருமகனை வெறும் கையோடவா வந்து பார்ப்பேன்..” என்றுவிட்டு குழந்தையை கொஞ்சி மகிழ்ந்தாள்.
“பல்லவி..! உன் மகனுக்கு இப்போவே பொண்ணு ரெடி” என்றார் அம்பிகா சுரேகாவை பார்த்து புன்னகைத்தபடி.
“அப்படியா ரேகா” என்று மகிழ்ச்சியுடன் அவளை பார்த்தவள், தன் அத்தையிடம் திரும்பி 
“பொண்ணுன்னு எப்படி சொல்லறீங்க அத்தை.. அவளுக்கும் பையனா இருந்தா..?” என்றாள்.
“அப்போ என் பையனுக்கு நீ பொண்ணை ரெடி பண்ணு.. எப்படியும் என் அண்ணன் வீட்ல சம்பந்தம் பண்ணாம நாங்க விடுறதா இல்லை.. சரிதானங்க” என்று அவள் கணவனைப் பார்க்க 
“நீ சொன்னா சரிதான் ரேக்ஸ்” என்று புன்னகைத்தான் அவனும்.
பல்லவி தான் அவள் கூறியதில் வெட்கப்பட்டுக்கொண்டு ஸ்வரனை பார்த்திருந்தாள்.  
சிறிது நேரத்தில் அவர்கள் அனைவரும் பல்லவிக்கும் ஸ்வரனிற்கும் தனிமை கொடுத்து சென்றபின், ஸ்வரனையே பார்த்திருந்தவள் 
“இந்தாங்க” என குழந்தையை நீட்டவும் தான் ஸ்வரன் கைகளில் வாங்கியிருந்தான்.
செவ்விதழ்களை அசைத்து கொட்டாவி விட்டவனை பார்க்கப் பார்க்க திகட்டவில்லை.
“எங்க நான் உங்களை தனியா விட்டுட்டு போய்டுவனோன்னு நான் என் கையால குழந்தையை கொடுக்கற வரைக்கும் நீங்க வாங்க மாட்டேன்னு இருந்திருக்கீங்க..?” என்றாள் சரியாக அவன் அகம் படித்து. 
“நான் தான் அன்னிக்கு எதோ அறிவு கெட்ட தனமா அப்படி சொல்லிட்டேன்.. நீங்க ஏன் ஆதி அதை நினைச்சுட்டு நம்ம ஜூனியரை வாங்காம இருந்தீங்க” என்றாள். 
“ப்ச்.. போ அனு” என்றுவிட்டு குழந்தையை ரசித்துப் பார்த்திருந்தான்.
“நான் எங்கயும் போறதா இல்லை ஆதி. உங்களை விட்டு போய்ட முடியுமா என்னால” என்று விசும்ப, குழந்தையும் சிணுங்க.. தன் இரண்டு குழந்தைகளையும் சமாதானம் செய்தவன் அவளருகில் அமர்ந்துகொள்ள.. வாகாய் அவன் தோளில் சாய்ந்துகொண்டாள் பல்லவி.
“இந்த அனுபல்லவிக்கு ஒரு சிவகாமி.. ஆதீஸ்வரனுக்கு ஒரு சுந்தரேஸ்வரன்.. சரணுக்கு ஒரு ரஞ்சிதா இல்லாம போயிருந்தா நம்ம எல்லோருக்கும் வாழ்கைன்னு ஒன்னு இருந்திருக்கவே இருந்திருக்காது இல்ல ஆதி” என்றாள் கடந்து வந்ததை எண்ணிப் பார்த்து.  
“நம்ம அனுபவிச்ச எந்த ஒரு கஷ்டத்தையும் நம்ம குழந்தை அனுபவிக்க மாட்டான் அனு” என்றான் உறுதியுடன்.
அதில் நிமிர்ந்து அவன் முகம் கண்டவள்,
“குழந்தையை கீழ படுக்க வைங்க” என, அவனும் மெல்ல மெத்தைமேல் படுக்கக் வைக்க, குழந்தையின் தொப்புள் கொடியில் படுமாறு லேசாய் கைவைத்து, ஸ்வரனின் கையையும் பிடித்து நீட்டி
“அம்மாவும் அப்பாவும் உன்னை நல்லா பார்த்துப்போம் கண்ணா. எந்த கஷ்டம் வந்தாலும் அது எங்களை தாண்டி தான் உனக்கு வரும். எந்த ஒரு சூழ்நிலையிலும் உன்ன தனியா விட்டுட மாட்டோம். உனக்கு நல்ல அப்பா அம்மாவா பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸா இருப்போம்” என்று சொல்லி இருவரும் மகனின் தொப்பிள் கொடியில் சத்தியம் செய்தனர்.
“நீ தான் அப்பா அம்மாவுக்கு உலகமே கண்ணா.. வி லவ் யூ” என்று சொல்ல.. சந்தோசமாய் தன் செவ்விதழ் அசைத்து அதில் எச்சில் மொட்டுக்களை உற்பத்தி செய்து கொண்டிருந்தான் அவர்கள் புத்திரன்.
இருவரும் அவன் கையைப் பிடித்து சிறிது நேரம் கொஞ்சி மகிழ, 
“ஆதி..! இப்போ சொல்லுங்க இவன் உங்களை மாதிரி தானே இருக்கான்” என்றாள் பல்லவி.
“இல்ல.. அவங்க அம்மா மாதிரி” என்றான் ஸ்வரன்.
“ஒத்துக்க மாட்டீங்களே.. சரி நம்மளை மாதிரி இருக்கான் போதுமா” என்றதில் ஸ்வரன் புன்னகைத்தபடி நிமிரச் செல்ல, பல்லவியும் நிமிரச் செல்ல.. இருவரும் அப்போது தான் அதை கவனித்தனர்.
இருவரது கையையும் அழகாய் இருவிரல் கொண்டு இரண்டு புறமும் பிடித்துக் கொண்டிருந்தான் அவர்களது கீதம்.  
அவன் ஒரு கன்னத்தில் பல்லவியும், மறு கன்னத்தில் ஸ்வரனும் ஒருசேர முத்தமிட, அழகாய் வங்கிக் கொண்டு தன் கை கால்களை அசைத்து தன் உற்சாகத்தை தெரிவித்தான். 
ஸ்வரபல்லவியின் கீதம்.!
அவர்கள் மீது சந்தோசப் பூக்களை அள்ளித் தூவி, இதுவரை இலையுதிர் காலமாய் மட்டுமே இருந்த அவர்களது வாழ்வில் இனி மீளா வசந்தம் மட்டுமே வீசும் என நிலையானதொரு அறிவிப்பை விடுத்து.. இனிவரும் நாட்களில் அவர்கள் பயணிப்பதற்காக வண்ணப் பூக்கள் கொண்டு வழிப்பாதை அமைத்திருந்தார் அனைத்திற்கும் ஆதியான ஆதிபகவன்.  
கீதமானது…!

Advertisement