Advertisement

ஓம் கொற்றவா போற்றி!!
20
மருத்துவமனை வளாகம்..!
இதயத்துடிப்பு நொடிக்கு நொடி அதிகரிக்க.. அதன் ஆதீத அளவை அவன் இதயமே அவனிடம் இயம்பியது. 
இதுவரை அவன் கண்டிறாத அளவில் பயமும் பதற்றமும் சூழ, சுழலில் சிக்கித் தவித்திருந்தான் ஆதீஸ்வரன். அச்சப் பேரலைகளில் இருந்து தன் அகத்தை அமைதிப்படுத்த முயன்று, பெரிதாய் தோற்றான். 
இதுநாள் வரை அவனை இன்புற வைத்தவள் தான் இப்போது துன்புற வைக்கிறாள்.
ஸ்வரன் தன்னருகில் யாரையும் அனுமதிக்கவில்லை. தனிமையில் கண்மூடி அமர்ந்திருந்தான். இமைகளுக்கு நடுவில் அவனது அனு வந்து நின்றுகொள்ள, மெல்லக் கண்திறந்தவன் அவளோடன அழகிய நிகழ்வுகளை எண்ணிப் பார்த்தாள்.
ஒன்றாம் மாதத்தில்..
“இப்படி நடக்கலாமா ஆதி..? இப்படி உக்காரலாமா..? குனியக் கூடாதா.. ஓடக்கூடாத” என அத்தனை சந்தேகங்களையும் அவனிடம் முன் வைக்க, விழி பிதுங்கிப்போய் நின்றிருந்தான். 
அடுத்த நாளே ‘ஃபீல் ஃப்ரீ ப்ரக்நென்சி’ என்று அவளது அனைத்து சந்தேகங்களுக்கும் பதில்களைத் தாங்கிய புத்தகங்களை வாங்கிக் குவிக்க, ஒரே நாளில் அதை அனைத்தையும் விடாமல் படித்துக் கொண்டிருந்தவளைக் கண்டு புன்னகைத்தான். 
இரண்டாம் மாதத்தில்..
“பேபிக்கு பாதாம் பால் வேணும்.. புளிக்குழம்பு வேணும்.. அரிசி வத்தல் வேணும்.. மாங்காய் வேணும்” என்று குழந்தையை சாக்காய் வைத்து அவளுக்கு வேண்டியவற்றை எல்லாம் பட்டியல் இட்டுக்கொண்டே போக,
“சாம்பல் வேணுமா..?” என்று கேட்டவனை முறைத்தவள்
“பால்கோவா கேக்குது உங்க குழந்தை சீக்கிரம் செஞ்சு எடுத்துட்டு வாங்க” என அவனுக்கும் வேலை வைத்தாள்.
கேட்டது அவன் முதல் குழந்தை ஆயிற்றே..! மறுக்காது செய்து கொடுத்தான் ஸ்வரன்.
மூன்றாம் மாதத்தில்..
சிவகாமி சொல்லியும் கேட்காது உணவு தாளிக்கும் இடத்தில் நின்றுகொண்டு 
“எனக்கு வாமிட் எல்லாம் வரவே இல்லை..!” என்று சொல்லிய சில நிமிடங்களில் வாயை பொத்திக்கொண்டு வெளியே ஓடியவளைக் கண்டு விரைந்து அவள் பின்னால் சென்றான்.
ஓங்கரித்து அடிவயிற்றில் இருந்து எக்கியவளின் தலையை இறுக  பிடித்துக்கொள்ள, சில நிமிடங்களில் தன்னை சுத்தம் செய்து நிமிர்ந்தவளின் ஒற்றை விழித் துளியை துடைத்தவன்
“ரிலாக்ஸ் அனு. இது காமன் தான்” என்று தைரியப் படுத்தினான். 
நான்காம் மாதத்தில்…
வாந்தி அதிகரிக்க.. சாப்பிடும் போது தூங்கும் போது என நேரம் காலமின்றி அவளை படுத்தி எடுக்க.. முகம் சுளிக்காமல் அதை அவன் கைகளில் ஏந்திய தருணங்கள் பல. 
அதைக் கண்டு அவள் கண்களில் முத்துதித்த போதெல்லாம் 
“ஈஸி.. ஈஸி ரிலாக்ஸ் அனு. நம்ம சுட்டி உள்ளிருந்து ஓவர் சேட்டை செய்யுறாங்களோ” என்றவன் அவள் வயிற்றருகே சற்று குனிந்து 
“அம்மா பாவம் கண்ணா ரொம்ப கஷ்டப் படுத்தாதீங்க” என்று சொல்லி அவள் முகத்தில் புன்னகை பூக்கச் செய்வான்.
ஐந்தாம் மாதத்தில்…
அவன் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருக்க, அவள் அவனை லேசாய் எழுப்பியதும் உடனே தன் உறக்கத்தை விடுத்து வேகமாய் எழுந்தவன்
“என்னாச்சு அனு” என 
“நீங்க ஏன் இப்படி தூங்குறீங்க..?” என்றிருந்தாள்.
“ஏன் அனு உனக்கு தூக்கம் வரலையா”
“இல்லை. நீங்க ஏன் குப்புற படுத்து தூங்குறீங்க” என காரணமின்றி அழ,
“இப்போ ஏன் மா அழற.. உடம்புக்கு ஏதாவது பண்ணுதா” என பதற்றம் கொண்டவனுக்கு
“என்னால அப்படி தூங்க முடியல நீங்களும் அப்படி தூங்காதீங்க” என சிறுபிள்ளை போல் கூறியவளை அணைத்து
“சரி நானும் உன்னை மாதிரியே தூங்குறேன்” என்று மெல்ல தட்டிக் கொடுத்து தூங்க வைத்தான்.
ஆறாம் மாதத்தில்…
“ஏன் ஆதி..! நமக்கு பொண்ணு பொறக்குமா பையன் பொறக்குமா” என்று கேட்க
“எதுவா இருந்தா என்ன அனு.. நம்ம ரத்தத்தையும் சதையையும் பங்குபோட்டு பிறக்கப்போற உயிர் அது. ஆணா இருந்தாலும் பெண்ணா இருந்தாலும் நம்ம ஜூனியர். அவ்வளவு தான்”
“ஹ்ம்ம்..” என்றவள் சிறிது நேரத்திலேயே
“ஒருவேளை ட்வின்ஸ் பொறந்தா” என்றாள் கண்கள் மின்ன.
“அனு..! ஸ்கேன் ரிப்போர்ட் பார்த்த தானே.. ஒரு பாப்பா தான். ரொம்ப யோசிக்காம தூங்கு” என்றதில் அமைதியாய் படுத்துக் கொண்டாள். 
மற்றொருநாள் அதேபோல் பேசிக்கொண்டிருக்க.. அவர்களது ஜூனியர் அவள் வயிற்றில் கொடுத்த உதையில் அவனை பிடித்து உலுக்கியவள் 
“ஆதி குழந்தை உதைக்குது” என்று பூரிப்புடன் சொல்ல,
“எங்க அனு..?” என அவனும் ஆர்வமாய் பார்த்திருக்க, 
“இங்க நெளியுது இங்க உதைக்குது” என அவன் கையை எடுத்து அவள் வயிற்றில் வைத்து மகவின் அசைவை அவன் உணரச் செய்தாள்.
உணர்வுக் குவியலாய் கையை எடுக்க மனமில்லாது அமர்ந்திருந்தான். 
ஏழாம் மாதத்தில்…
கொஞ்சம் சதை போட்டு தாய்மை தந்த செழிப்பில் கொள்ளை அழகில் வீற்றிருந்தவளை விட்டு விலக மறுத்தது அவன் பார்வை. 
அம்பிகா இதுவரை பாதுகாத்து வைத்திருக்கும் வளையல்களை தன் மருமகளின் வளைகாப்பின் போது அணிவிக்கச் செல்ல, அப்போது கூட தன் கைகளை நீட்டாது ஸ்வரனின் அனுமதிக்காக காத்திருந்தாள் பல்லவி. 
ஸ்வரனிடம் இருந்து ஒரு தலையசைப்பு வந்ததும் தான் தன் கைகளை அம்பிகா முன் நீட்டியிருந்தாள். 
ஒவ்வொருவராய் அவள் கொழுகொழு கன்னத்தில் சந்தனமிட்டு கைக்கு வளையல் அணிவித்து பூத்தூவி வாழ்த்திச்செல்ல, அன்றைய நாள் முழுதும் அவன் முன் தன்னிரு கைவளையல்களை ஆட்டிக் காண்பித்துக் கொண்டே இருந்தாள். 
“ஏன் அனு..! நம்ம ரூம்ல நெறைய குட்டி குட்டி குழந்தைக போட்டோஸ் எல்லாம் ஒட்டி இருந்தேனே எங்க காணோம்” என்று வெறும் சுவற்றை பார்த்தபடி கேட்க,
“அது நான் தான் சரணை கூப்பிட்டு எடுக்க சொன்னேன் ஆதி” என்றாள்.
‘ஏன்’ என்பதாய் அவன் பார்க்க
“அதுமாதிரி அழகா குழந்தை பிறக்கணும்னு தானே போட்டோஸ் மாட்டுறது. அதையே பார்த்துட்டு இருக்குறது..?” 
ஆமாம் என்று தலையசைத்தான்.
“எனக்கு அப்படி எல்லாம் வேண்டாம். உங்களை மாதிரி தான் வேணும். நான் உங்க முகத்தை தான் அதிகமா ஃபோகஸ் பண்ணுறேன். நாள் முழுக்க பார்த்துட்டே இருக்கேன். வேலை செய்யும்போது உங்களை பார்க்க முடியலைனா என் போன்ல உங்க போட்டோவை அடிக்கடி எடுத்து பார்த்துப்பேன். நீங்க வேணும்னா பாருங்க நம்ம ஜூனியர் அப்படியே உங்களை உரிச்சு வெச்சு இருக்கப் போறாங்க” என்று சொல்லிவிட்டு அவனைப் பார்க்க, அவன் விழியோரம் ஒரு துளி நீர்.
அதை துடைத்துவிட்டவள்,
“டேய் கண்ணா..! உங்கப்பா அசிங்கமா அழுகுறார் டா வெரி பேட். உன் அம்மா தான் சிங்கம்” என்று குழந்தையிடம் பேச, அது கொடுத்த உதையில்
“பார்த்தியா நீயும் உங்க அப்பா பக்கமா..?” என்றவள் ஸ்வரனிடம் திரும்பி 
“ஆதி..! நான் தான் உங்களை அழவெச்சேன்னு நினைச்சு எனக்கு உதை விழுது. அடி தாங்க முடியலை தயவு செஞ்சு சிரிச்சிடுங்க ப்ளீஸ்” என்றாள்.
அவள் பாவனையில் லேசாய் சிரித்தவன் தன் மனையாளுக்கு மெல்லிய முத்தத்தை வழங்கிவிட்டு தன் மகவுக்காக மண்டியிட்டு அவள் மணிவயிற்றில் தன் அதரத்தை அழுந்தப் பதித்தான்.   
எட்டாம் மாதத்தில்…
கண்ணாடி முன்பு வந்து நின்றுகொன்று அதில் தன்னை அப்படியும் இப்படியுமாய் திரும்பித் திரும்பி பார்த்தவள், பின் அவளருகே நின்றிருக்கும் ஸ்வரனை கண்டு இருவரையும் ஒப்பிட்டுப் பார்த்தாள்.
“ரொம்ப குண்டா தெரியுறனா..?” என்று கேட்டுவைக்க
“ரொம்ப எல்லாம் இல்ல அனு.. லைட்டா தான். அதெல்லாம் ஸ்லிம் ஆகிடலாம் கவலைப் படாத” என்றான் ஸ்வரன்.
இருந்தும் மனம் ஆறவில்லை அவளுக்கு, சிறிது நேரத்தில் மீண்டும் இருவரையும் ஒப்பிட்டுப் பார்த்தவள்
“நான் அசிங்கம் ஆகிட்டேனாங்க..” என அவனிடம் கேட்க
“யாரு சொன்னா..? பேரழகி நீ” என்றான் அவளை ரசித்து பார்த்தபடி.
“ச்சே.. பொய் சொல்லாதீங்க. நான் ரொம்பவே குண்டாகிட்டேன்.. ஆண்ட்டின்னு சொன்ன பொடியனுக எல்லாம் இனி பாட்டின்னு சொல்லப் போறானுக.. ச்சே..” என புலம்பியவாறு இஸ்டத்திற்கு ‘ச்சே’க்களை வாரி வழங்க, அதை கணக்கெடுத்துக் கொண்டே வந்தவன்   
“இல்ல அனு மா.. உள்ள நம்ம ஜூனியர் வளர்ந்துட்டே போறாங்க சோ அப்படித்தான் இருக்கும்” என்று பொறுமையாய் கூறிவிட்டு
“இவ்வளவு நாள் நீ இதை மறந்து போனதுல எனக்குமே வருத்தம் தான் அனு” என்றான் சோகமாய். அதில் அவள் புரியாது பார்க்க
“அக்ரிமெண்ட் நம்பர் ஃபோர் படி இனி நீ சொல்லுறதை நான் கேட்க மாட்டேன்” என்றுவிட்டு அவளருகே வர, அதை புரிந்து கொண்டவள் கண்மூடி நின்றுகொண்டாள்.
அவளுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்தது அவள் மகவுக்கு கிடைக்க, மெல்ல கண்திறந்து பார்த்தவள்
“இப்போ எல்லாம் நீங்க சரியில்லை ஆதி.. எனக்கு கிடைக்க வேண்டியது எல்லாம் இன்னொரு ஆளுக்கு தான் கிடைக்குது” என் போலியாய் வருத்தம் கொள்ள
“அப்படியா அனு..!” என்று அவள் இரண்டு கன்னத்திலும் மகவுக்கு கொடுத்ததைக் காட்டிலும் இருமடங்காய் தந்தான்.
மற்றுமொருநாள்..
“ஆதி..! நம்ம ஜூனியர் பிறந்ததும் நான் தான் குழந்தையை என் கையால உங்ககிட்ட தருவேன். அதுவரைக்கும் நீங்க எடுக்கக் கூடாது சரியா” என்றாள் கட்டளையாய்.
“ஏன் அனு” என கேட்டுவிட்டு அவளைப் பார்த்திருக்க
“இல்ல.. அதை நினச்சா எனக்கு எதாவது ஆகிடுமோன்னு கொஞ்சம் பயமா இருக்கு ஆதி. நான் என் கையால தர்ற வரைக்கும் நீங்க குழந்தையை தூக்காம காத்திருப்பீங்க.. அந்த நேரத்துல அந்த எண்ணமே எனக்கு எதுவும் ஆகவிடாது”
“உனக்கு ஒன்னும் ஆகாது அனு. பயப்படவே வேண்டாம். ஆதி இருக்குற வரைக்கும் அனுவுக்கு ஒன்னும் ஆக விடமாட்டான். உன் ஆசைக்காக இதுக்கு நான் ஒத்துக்குறேன். நீயா தர்ற வரைக்கும் நம்ம ஜூனியரை நான் எடுக்கலை போதுமா” என்றான். 
அதற்கு அழகாய் தலையசைத்து புன்னகைத்தவள் அவனை அணைக்க முயன்று அது முடியாது போக, இடையில் அவர்களது வாரிசு தடையாய் இருப்பது கண்டு இருவரும் பொங்கிச் சிரித்தனர்.  
ஒன்பதாம் மாதத்தில்…
“அனு..! எங்க ஒளிஞ்சிருக்க வாக்கிங் போகணும் வெளிய வா” என்றான்.
நொடிகள் கடந்தும் அவளிடம் பதில் வராதிருக்க, உள்ளே சென்று பார்த்தான். 
குளிர்சாதான் பெட்டிக்கும் சுவருக்கும் மறைவில் நின்றுகொண்டிருந்தாள். அவள் மறைந்து நின்றாலும் வயிறு வெளியே காட்டிக் கொடுக்க, கைப்பிடித்து வெளியே அழைத்து வந்தான்.
“என்னால முடியாது ஆதி. குளிரா இருக்கு எனக்கும் மூச்சு வாங்கும்” என்று அழாத குறையாய் கூறினாள்.
“நல்லா நடந்தா தானே ஆரோக்கியமா இருக்கும். நார்மல் ஆகும்” என்று பேசியபடியே அவளுக்கு ஸ்கார்ப் அணிவித்து சால்வை போர்த்திவிட
“இப்படியே போனா ரோட்ல நாய் துரத்தும் ஆதி” என்றாள்.
“இது தான் உனக்கு பிரச்சனையா..?”
“ஆமா நீங்க ஓடுவீங்க நான் ஓடுவேனா”
“அப்படி நாய் துரத்தினா உன்னையும் தூக்கிட்டு நானே ஓடுவேன். நீ வாக்கிங் வந்தே ஆகணும். சாக்கு சொல்லாம வா” என விடாப் பிடியாக அழைத்துச் சென்றான்.
தஸ் புஸ்ஸென மூச்சிரைக்க வருபவளைக் காண பாவமாய் இருக்கும். காலில் நீர் கோர்த்து வீக்கம் கொள்ளும்போது இரவெல்லாம் தூங்க முடியாது சிரமப்படுபவளின் பாதத்தை இதமாய் பிடித்து விடும்போது அவனை அறியாமல் கண்களில் நீர் சுரந்தால், அவளுக்கோ அவளை அறியாது தலையணையை விழிநீர் நனைக்கும். 
அவள் உறங்கிவிட்டாள என்று உறுதி செய்துவிட்டே ஒவ்வொரு நாளும் உறக்கம் கொள்வான் ஸ்வரன்.
மகவை மனைவி சுமக்க மனைவியை அவன் சுமந்தான்.
நாள் நெருங்க நெருங்க பல்லவி மீது அனைவருமே அதீத கவனத்தை வைத்திருந்தனர். காலையில் அவளது சிவகாமி அம்மா ஊட்டிவிட கொஞ்சம் உண்டவள் போதுமென்றுவிட்டு எழச்செல்ல, இடுப்பில் லேசான வலியை உணர்ந்தாள்.
அது சில நிமிடங்களில் மெல்ல அதிகரிக்க, தாமதிக்காது அவளோடு மருத்துவமனை விரைந்திருந்தான் ஸ்வரன்.
ஆரம்பத்தில் தைரியத்துடன் இருந்தவள் வலி கூடக் கூட பொறுக்க மாட்டாது பல்லைக் கடித்தாள். லேசாய் பயம் சூழ்ந்துகொள்ள, எதிர்மறையான சிந்தனைகள் கூட எழுந்தது.
பரிசோதனை செய்த மருத்துவர் நார்மலுக்கு முயற்சி செய்வதாய் தெரிவித்து அதற்கான சிகிச்சைகளை அளிக்க, சில மணி நேரத்தில் எழுந்த வலியில் பல்லவிக்கு உயிரே போனதுபோல் இருந்தது.
அடுத்து அவளை லேபர் வார்டிற்கு மாற்ற, ஸ்வரனின் கைகளை அழுந்தப் பற்றிக் கொண்டவள் அவனை குனியச் சொல்லி 
“ஆதி..! எனக்கு ஏதாவது ஆனா நம்ம குழந்தையை பத்திரமா பார்த்துக்கோங்க” என்று சொல்ல
“அனு..! அதெல்லாம் ஒன்னும் இல்ல. நீங்க ரெண்டு பேரும் நல்லபடியா வருவீங்க இப்படி எல்லாம் பேசக்கூடாது” என்று அவள் கையை தன்னிரு கைகளுக்குள் பொத்திக்கொண்டான்.
“இல்ல ஆதி எனக்கு பயமா இருக்கு. பெய்ன் அதிகமா இருக்கு” என்ற போதே மீண்டும் ஒரு வலி பெரிதாய் உருவெடுக்க 
“அம்மாஆஆ” என்று அலறினாள். அவள் அலறலில் அவன் உதிரம் எல்லாம் சொட்டுவதுபோல் இருந்தது.
“ஆதி..! எத்தனை ஜென்மம் எடுத்தாலும் உங்களோடவே இருக்கணும். ஐ லவ் யூ ஆதி. குழந்தைய பத்திரமா பார்த்துக்கோங்க” என தீனமாய் அவள் குரல் அவன் காதில் ஒலித்துக் கொண்டே இருக்க, அவளுக்கு தைரியம் சொல்லியவன் மொத்தமாய் துவண்டு போயிருந்தான்.
ஆலமரம் போலிருந்த ஆண்மகனையே அடிவேரோடு அசைத்துப் பார்த்திருந்தாள் அனுபல்லவி. அவனை அசைத்தது போதாதென்று மருத்துவரையும் அவளோடு மல்லுக்கட்ட வைத்திருந்தாள்.

Advertisement