Advertisement

அடுத்த நாளே என்னை சிவகாமி அம்மா வீட்டுல விட்டுட்டு போய்ட்டாங்க. அதுதான் அவங்களை நான் கடைசியா பார்த்தது ஆதி. அடுத்தநாள் அம்மா இந்த உலகத்துல இல்லை. சூசைட் பண்ணிக்கிட்டாங்க. இன்னிக்கு தான் அது. இந்த நாள் வராம இருந்திருக்கலாம் எங்க வாழ்க்கைல” என்றதும் தான் கலையில் இருந்து அவள் ஒதுமாதிரி இருந்தது நினைவில் வந்தது.
கேட்கும் அவனாலேயே சகித்துக் கொள்ள முடியாதிருக்க, அந்நேரத்தில் அவள் அன்னைக்கு எப்படி இருந்திருக்கும் என்று யோசிக்கவும் முடியவில்லை அவனால். இதெல்லாம் பல்லவி தெரிவிக்கும் போது அவளுக்கு எப்படி இருக்கும்? அவனது அணைப்பின் மூலம் அவளுக்கான பாதுகாப்பை பலமாய் உணர்த்தினான் ஸ்வரன்.
“அவன் என் பொண்ணையும் பேத்தியையும் பண்ணாத கொடுமை இல்லைங்க. எல்லார்த்தையும் சகிச்சிட்டு இருந்தா என் பொண்ணு. ஆனா அவன் பண்ணப்போன ஒரு காரியத்தை மட்டும் அவளால தாங்கிக்கவே முடியல.. அதுல தான் ஒட்டுமொத்தமா ஒடஞ்சுபோய் உசுரையே விட்டுட்டா” என தேம்பிய சிவகாமியை விழி விலகாது பார்த்திருந்தார் சுந்தரேஸ்வரன்.
“என் பொண்ணு அப்படி ஒரு முடிவெடுப்பான்னு நான் நினைச்சும் பார்க்கலைங்க. பல்லவிக்காக மறுபடியும் வாழ்க்கைல ஓடவேண்டிய நிலை. இந்த ஊருக்கு வந்தேன். இட்லி கடை ஆரம்பிச்சேன். அக்கம் பக்கத்துல துணி துவச்சு, பாத்திரம் கழுவி அவளையும் படிக்கச் வெச்சேன். என் பொண்ண வளர்த்துன மாதிரி இல்லாம பல்லவிக்கு தைரியமா இந்த உலகத்தை எதிர்கொள்ள கத்துக் கொடுத்தேன். அவ அம்மா பட்ட கஷ்டத்தை எல்லாம் சொல்லி, என்ன ஆனாலும் தொடர்ந்து போராடனும் வாழ்க்கையை முடிசிக்கக் கூடாதுன்னு அறிவுறுத்தி வளர்த்தேன்” என்ற சிவகாமியை இப்போது பெருமிதமாய் பார்த்திருந்தார்.
“அந்தாளு அம்மாவுக்கு கடைசியா செய்ய வேண்டியதைக் கூட செய்யல. சிவகாமிம்மா தான் ஒத்தை ஆளா நின்னு எல்லாம் முடிச்சு, என்னையும் இந்த ஊருக்கு அழச்சிட்டு வந்துட்டாங்க. எல்லாமே என் சிவகாமிம்மா சொல்லித்தான் தெரியும் ஆதி. ஆனா எனக்கு எதெல்லாம் தெரியக் கூடாதுன்னு அவங்க மறச்சாங்களோ அதெல்லாம் அப்போவே எனக்குள்ள பதிஞ்சு போயிருந்தது அவங்களுக்கு தான் தெரியல ஆதி. என் அம்மாவோட அழுகுரல், அவங்க கடைசியா சொன்ன வார்த்தைகள், அந்தாளுகிட்ட நான் வாங்குன அடி, இதெல்லாம் என்னை விட்டு போமாட்டிது ஆதி. அந்த ரணம் இன்னும் இருக்கு” என அவன் பிடியில் இருந்தபடியே கூறினாள்.
“ரொம்ப கொடுமையான விஷயம் எது தெரியுமா ஆதி?” என விலகி அவன் முகம் காண, அவனும் அவள் பதிலுக்காக காத்திருந்தான்.
“நமக்கு பிடிச்சவங்க முகம் நாளடைவுல நம்ம நியாபகத்துல இருந்து மறையறது தான். எனக்கு என் அம்மா முகமே சரியா நியாபகம் இல்ல ஆதி. ஒரு போட்டோ கூட இல்ல. அந்த ஆளை நான் மறந்துட்டேன்னு சந்தோசப்படுறதா இல்ல என் அம்மாவ நினைவு படுத்திப் பார்க்க முடியலைன்னு வருத்தப்படுறதா?”
“அனு.! நீ அப்படியே உன் அம்மா சாயல்ன்னு சிவகாமி பாட்டி சொல்லுவாங்க. உன்ன மாதிரி தான் அவங்க இருந்திருப்பாங்க” என்று அவன் சொன்னதில் ஒரு ஓரத்தில் இனித்தது அவளுக்கு. அதில் அவள் அன்னைக்கான ஏக்கங்கள் அதிகரிக்க,
“அம்மா ஏன் இப்படி பண்ணுனாங்க? எனக்காக அவங்க இருந்திருக்கலாம்ல ஆதி.. அந்தாள விட்டு வந்து சிவகாமி அம்மா வீட்டுல இருந்திருக்கலாம். அவங்க என்னை மட்டும் விட்டுட்டு போய்ட்டாங்க? அவங்க அடி வாங்கும் போதெல்லாம் நான் பெருசாகி அவங்களை தனியா கூட்டிட்டு வந்து நல்லா பார்த்துக்கணும்னு நினைப்பேன். அம்மா ரொம்ப பாவம் ஆதி. அவங்க அப்படி ஒரு முடிவை எடுக்கும்போது கடைசியா என்னை தானே நினைச்சிருப்பாங்க? எப்படி துடிச்சிருப்பாங்க? எனக்கு அவங்க வேணும் ஆதி” என்று கதறிக் கொண்டிருக்க, அவனுக்கு என்ன கூறுவதென்றே தெரியவில்லை. 
அவளோ தன் மனதை இதுநாள் வரை அழுத்திய பாரத்தை எல்லாம் அவனிடம் கொட்டிக் கரைக்கும் வழி தேடிக் கொண்டிருந்தாள்.
“அனு..! ப்ளீஸ் அழாத. இங்க பாரு, நான் இருக்கேன் உனக்கு. இப்படி எல்லாம் அழக்கூடாது அனு” என்று அவள் முகம் பற்றிக் கூற, அவன் நெஞ்சில் சாய்ந்துகொண்டு அழுதாள்.
சிவகாமி அனைத்தையும் சுந்தரேஸ்வரனிடம் கூறி முடித்திருந்தார்.
“பல்லவிக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமச்சுத் தரணும்னு வேண்டாத தெய்வமில்லை. ஸ்வரன் தம்பி கையில அவளைப் பிடிச்சுக் கொடுத்ததுல இருந்து தான் எனக்கு இரவெல்லாம் தூக்கமே வருது. இத்தனை நாலா நான் நிம்மதியா தூங்குனது கூட இல்லைங்க. அவளை வேலைக்கு அனுப்பிட்டு அடிமடில நெருப்பை கட்டிட்டு அவ வர்றவரைக்கும் வாசலையே பார்த்திருப்பேன்” என்றார் சிவகாமி.
அவர் அழுது அழுது இரண்டுமுறை தும்மிவிட, உடனே எழுந்து சமையலறைக்குள் நுழைந்தார் சுந்தரேஸ்வரன்.
துளசி, இஞ்சி தட்டிப் போட்டு தேநீர் கலந்து எடுத்து வந்து கொடுத்தார்.
மெல்ல நிமிர்ந்து பார்த்த சிவகாமி ஒரு சிறு புன்னகையுடன் அதை வாங்கிப் பருகினார். இவர் ஒருவர் தான் சிவகாமியை அமரச்செய்து தேநீர் கலந்து கொடுக்கும் முதல் ஆள். 
சில நொடி மௌனம். தன்னை மீண்டும் ஆசுவாசப் படுத்திக்கொண்டு தொடர்ந்தாள் பல்லவி.
“எனக்கு தெரியும் ஆதி, ஆரம்பத்துல நான் உங்ககிட்ட நடந்துகிட்ட விதத்துல நீங்க ரொம்பவே வருத்தப் பட்டிருப்பீங்கன்னு. ஆனா அதை எல்லாம் வெளிக்காட்டிக்கவே இல்ல நீங்க. ஒரு ஸ்டேஜ்க்கு மேல என்னாலயும் என்னை மாத்திக்காம இருக்க முடியல. நான் கோபப்பட வாய்ப்பே கொடுக்காத ஒருத்தர்கிட்ட காரணமில்லாம நான் எப்படி வெறுப்பையோ, கோபத்தையோ காண்பிக்க முடியும்?” என்று அவள் கூற, அவளையே பார்த்திருந்தான் ஸ்வரன்.
“ஒரு ஆணையும் இதுவரை நான் என்னோட நட்பு வட்டத்துக்குள்ளையும் அனுமதிச்சதில்ல ஆதி. அனுமதிக்கவும் முடியல. எல்லாரும் என் அப்பா மாதிரி இல்லை தான். அது புரிஞ்சிருந்தாலும் அந்த பாதிப்புல இருந்து என்னால வெளிய வரவே முடியல. ஏன்னா நான் இதுவரை என் வாழ்க்கைல சந்திச்சதெல்லாம் மோசமான முன்னுதாரணங்கள் தான்”
“சுரேகா எப்படிப்பட்டவ? ஆனா அவ அப்பா அவளை மாதிரி இல்லை. மாசம் ஒன்னு ஆனா, அடுத்து ஒரு நாள் வீட்டு வாடகை தர தாமதிச்சாலும் பொம்பளைகன்னு கூட பார்க்காம வாய் விடுவாரு. வீட்டை உடனே காலி செய்ய சொல்லி நிப்பாரு. சிவகாமி பாட்டி எத்தனை தடவ கெஞ்சிருப்பாங்க தெரியுமா? சில நேரத்துல அவருக்கே தெரியாம அவங்க வீட்ல இருந்து காசை கொண்டுவந்து கொடுப்பா சுரேகா. அதை கைநீட்டி வாங்கவும் முடியாம மறுக்கவும் முடியாம எத்தனை நாள் நான் துடிச்சிருப்பேன் தெரியுமா?”
“வாழ்ந்து காட்டணும்னு ஒரு வெறி. நான் ஸ்கூல் படிக்கும்போதே டியூஷன் எடுத்து, லீவ் நாள்ல வீதியில மாவு வித்து பணம் சேர்த்து வெச்சு சுரேகா கிட்ட வாங்குன எல்லார்த்தையும் திருப்பிக் கொடுத்தேன். அப்போ ஒரு சந்தோசம் எனக்கு, நான் யாருக்கும் கடனாளியா இல்லைன்னு. சின்னக் கூட்டுக்குள்ள வாழ்ந்தாலும் நேர்த்தியா வாழனும் ஆதி எனக்கு” என்றவளுக்கு அவளை எண்ணி லேசான பெருமிதம். அவனுக்கும் அதே உணர்வு தான். 
“நான் கொஞ்சம் திமிரா தான் நடந்துகிட்டேன் ஆதி. அது எனக்கே நல்லா தெரியும். இப்போன்னு இல்ல, என்னிக்கு நானும் சிவகாமி அம்மாவும் தனியா இந்த ஊருக்கு வந்தோமோ அப்போ இருந்தே இது எனக்கு நானே போட்டுக்கிட்ட பாதுகாப்பு வேலி. அப்படி திமிரா இல்லமா இருந்தா எங்களால இதுவரைக்கும் தனியா வந்திருக்க முடியாது”
“என் அப்பா அம்மா என்னோட இருந்திருந்தா எனக்கு ஏன் இந்த நிலைமை, தனியா கஷ்டப் படணும்னு. நான் வேலைக்கு போனப்பறம் கொஞ்சம் எங்க குடும்ப சூழல் மாறுச்சு. அங்க ஒரு எதிர்பாராத திருப்புமுனை. நைட் ஷிஃப்ட் பார்க்க எனக்கும் பிடிக்கலை தான். ஆனா போகப் போக எனக்கு பணத்தேவை அதிகம் ஆகிட்டே போச்சு. யாரு கொடுப்பா? நான் தான் போராடியாகணும்” 
“நானும் ரத்தமும் சதையும் கொண்ட ஒரு சாதாரண மனுஷி தானே? பயம் பாசம் அழுகை சிரிப்பு எல்லாம் வரத்தானே செய்யும். நைட் அர்த்த ராத்திரில நடந்து வரும்போதும் ரொம்பவே பயமா தான் இருக்கும். பயத்தை பார்த்தா எங்க வாழ்க்கை ஓடாது. என்ன நானே தைரியமா காட்டிட்டு தான் கடந்து வருவேன்”
“ஆனா சுயத்துக்கும் அதை மறச்சு அதுக்குமேல நாம போட்டுக்குற வேசத்துக்கும் வேறுபாடு இருக்கில்லையா? உங்க விசயத்துல தான் என் வேஷம் கலைந்து சுயம் வெளிய வந்திருக்கு. பெத்தவங்க கிட்ட கிடைக்காத பாதுகாப்பா மத்தவங்க கிட்ட கிடைச்சிடப் போகுதுன்ற எண்ணம் தான் எனக்கு நம்ம கல்யாணத்தப்போ இருந்துது. இந்த திருமணம் எனக்கு ஒரு தடையா இருக்கும்னு நெனச்சேன் ஆனா அது என்னோட தடைகளை தகர்த்தெரிஞ்சு குழம்பிய குட்டையா இருந்த என் வாழ்க்கைய தெளிஞ்ச நீரோடையா தான் மாத்திருக்கு. மாத்திருக்கீங்க” என்று முடித்தவள் அவனது கைகளை அழுந்தப் பற்றிகொண்டாள்.
அதுவரை அவள் பேசியதை அமைதியாய் கேட்டிருந்தவன் 
“உன்னோட பின்புலம் எனக்கு ஓரளவுக்கு தெரியும் அனு. ஆனா நான் நினைத்தும் பார்க்காத அளவுக்கு நீ பல கஷ்டங்களை கடந்து வந்திருக்க. இனி உன் வாழ்க்கைல ப்ராப்லமே வராதுன்னு என்னால சொல்ல முடியாது, ஆனா அதை நீ தனியா ஃபேஸ் பண்ணுற மாதிரி நிச்சயம் இருக்காது. உன்கூட நான் இருப்பேன்னு மட்டும் என்னால உறுதியா சொல்ல முடியும்” 
அந்த உறுதியானது அவன் உடல் பொருள் ஆவி அனைத்திலும் வெளிப்பட, அவன் அணைப்பிலும் வெளிப்பட்டது.
“நான் உங்களுக்கு நல்ல வைஃபா ஆதி?” என்றதும் அவளைத் தன்னிடம் இருந்து விலக்கி அவள் முகம் பார்த்தவன், அவள் கண்களைப் பார்த்துக்கொண்டே ஆமாம் என்று தலையசைத்தான்.
“இல்லை.. நான் உங்களுக்கு நல்ல வைஃபா நடந்துக்கவே இல்லை ஆதி” என்றாள்.
“அனு!” என அவன் பேசும்முன் தடுத்தவள்
“நல்ல வைஃபா நடந்துக்கணும்னு நானும் நினைப்பேன் ஆதி. ஆனா என்னால முடியல. ஒவ்வொரு முறையும் நான் நினைக்கும்போதெல்லாம் எனக்கு நடந்தது நாளைக்கு என் குழந்தைக்கும் நடந்திடுமோன்னு ஒரு பயம் வருது. உள்ளுக்குள்ள அது என்ன ரொம்பவே கொல்லுது ஆதி” என்றாள். 
இந்த தேவதையை கண்ணில் வைத்து, பொத்திப் பொத்தி பாதுகாக்க வேண்டும். இனி அவள் தோட்டத்தில் தன்னால் முடிந்தவரை சந்தோசப் பூக்களை மட்டுமே நடவேண்டும். அவளே திக்கு முக்காடிப் போகும் அளவில் அன்பை பொழிந்து, அதில் இருவரும் நனைந்து திளைத்து ஒரு குடையின் கீழ் இறுதிவரை இருவரும் இணைந்து இருக்கவேண்டும் என்று அவன் மனதில் ஆயிரம் எண்ணங்கள் அவளோடன வாழ்க்கை குறித்து அடி ஆழத்தில் இருந்து எழுந்தது.    
அவன் மௌனம் கண்டு,
“உங்கமேல எனக்கு நம்பிக்கை இல்லாம இல்லை ஆதி. உங்களை நம்பாம நான் வேற யார நம்பப் போறேன். உங்களுக்கும் எத்தனையோ ஆசை இருந்திருக்கும் அதெல்லாம் எனக்காக விட்டுக்கொடுத்து வாழுறீங்க. ஆனா நான் அப்படி இல்லையோன்னு கஷ்டமா இருக்கு ஆதி. முயற்சி பண்ணினாலும் என்னால முடியலை. கல்யாணம் பண்ணி உங்க லைஃப்ப ஸ்பாயில் பண்ணிட்டனோன்னு தோணுது. நீங்க பேசாம என்னை விட்டுட்டு உங்களுக்குன்னு வேற ஒரு நல்ல துணையா பார்த்து வாழ்க்கையை அமைச்சிட்டு போய்டுங்க” என்றதும் அதுவரை பொறுமையாய் இருந்தவன்
“அனு! என்ன பேசறோம்னு யோசிச்சு பேசு. பைத்தியம் மாதிரி பேசாத” என அழுத்தம் திருத்தமாய் கூறினான்.
“இல்லை ஆதி”
“இனி எதுவும் பேசாத. போதும் நீ இதுவரை பேசியதே”
“ஆதி அது.. ”
“ப்ச்.. அமைதியா இரு. இனி நான் பேசுறதை நீ கேளு” என்றுவிட்டான்.
அவள் அதையும் கேட்காது எதோ சொல்ல வர
“நீயே பேசாம இருந்திரு அனு இல்லை உன் வாய்க்கு வலுக்கட்டாயமா பூட்டு போடவேண்டியது வரும்” என்றதும் வாயை மூடிக்கொண்டாள்.
சில நொடி மௌனத்திற்குப்பின்
“ஹ்ம்ம்.. தட்ஸ் குட். என்னை பொறுத்தவரை கல்யாணம்ன்றது சரியான துணையை சூஸ் பண்ணுறது மட்டுமே இல்ல அனு.. சரியான துணையா நடந்துக்கறதும் தான். நான் உன்கிட்ட சரியா நடந்துக்குறனா..?” என்றான்.
இது என்ன கேள்வி..? அதைத் தானே நானும் சொல்கிறேன். அவன் ஒருவன் மட்டுமே ஆரம்பத்தில் இருந்து சரியாய் நடந்து கொண்டிருக்கிறான் என. ஆமாம் என்று பலமாய் தலையசைத்தாள். 
“மனசு ஒத்து வாழுறது தான் வாழ்க்கை அனு. எல்லாருக்கும் தேவைகள் இருக்கும் அதை ஒரு நிர்பந்தத்தினாலையோ மனம் ஒத்துப் போகாமையோ எல்லம் பூர்த்திசெய்ய முடியாது. அது உண்மையான வாழ்க்கையும் இல்லை. இங்க நம்ம என்ன நினைக்குறோம்ங்கறது தான் முக்கியம். மத்தவங்க பார்வைக்காக நம்ம வாழமுடியாது. என் மனைவி மனப்பூர்வமா அவளை ஒப்படைக்கற வரைக்கும் காத்திருக்கறதும் கூட சுகம் தான்” என்றான் அவளைப் பார்த்து கண்சிமிட்டி.
அவனையே இமைக்காது பார்த்திருந்தவளிடம்
“உன்னை தவிர என் வாழ்க்கைல வேற யாரு வந்திருந்தாலும் நான் இவ்வளவு சந்தோசமா இருந்திருப்பேனான்னு தெரியல அனு. யூ ஆர் தி பெஸ்ட் வைஃப். உன் இடத்தை யாராலையும் நிரப்ப முடியாது” என்றான் மனதார. 
“உன்ன விடுறதை எல்லாம் என்னால கனவுல கூட யோசிச்சுப் பார்க்க முடியாது அனு. நீயே நினைச்சாலும் உன்னாலையும் என்னை விட்டுப் போக முடியாது. சோ தேவை இல்லாம யோசிச்சு உன்னை குழப்பிக்காத ஆந்த” என்றதும் கண்ணீர் தடம் பதிந்த முகத்தில் லேசான புன்னகை மலரத் துவங்கியது.
அவனே எதிர்பாராத நேரத்தில், அவளது முதல் முத்தத்தை முன்வந்து அவனது கன்னத்தில் முத்திரையாய் பதித்திருந்தாள் பல்லவி.
“ஏய் நீ இப்போ என்ன பண்ணுன?” என நம்பமாட்டாமல் அவளிடமே கேட்டு வைக்க, இப்போது நறுக்கென்று அவன் அதரங்களில் தன் விரல்களைப் பதித்தாள். 
அவள் கிள்ளியதில் அவன் முகம் சுருக்கிப் பார்க்க, அவனுக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. 
இப்போது அவளிதல்களால் அவள் ஏற்படுத்திய காயத்திற்கு மருந்திட்டிருந்தாள். 
நீயென்ன போடுவது பூட்டு. நான் போடுகிறேன் பார் என்று பூட்டியே காண்பித்திருந்தாள். அவள் பூட்டு மெல்லத் திறந்த வேளையில் அவன் பூட்டு மெல்லப் பூட்ட ஆரம்பித்தது.
காயம் எல்லாம் மறைய ஆரம்பித்து காதல் மெல்ல மாயம் செய்ய ஆரம்பித்தது.
கீதமாகும்….

Advertisement