Advertisement

ஓம் ஒளியெலாமானாய் போற்றி!!
10
தெருவில் போவோர் வருவோரெல்லாம் அவ்விடத்தில் நின்று ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டுச் சென்றனர். 
பார்ப்பதற்கு தாஜ்மஹால் அல்ல.. டாஸ்மார்க் அது.!
அதன் வாசலில் அன்றாடம் நிகழ்ந்தேறிக் கொண்டிருக்கும் ஒன்றுதான் இன்றும் நடந்து கொண்டிருந்தது. 
“யோவ்..! ஏன்யா இப்படி தினமும் குடிச்சிட்டு ரோட்டுல குப்புற விழுந்து கிடக்குற.. பொட்டப் புள்ளைய வீட்டுல வெச்சுட்டு புத்தியே வராதாயா உனக்கு..? உனக்கு எதாவது ஆகித்தொலஞ்சா எங்க நிலைமை என்ன ஆகுறதுயா” என குப்புறக் கிடந்த குடிமகனை அவன் மனையாள் ஒருபுறம் கைப்பற்றி தூக்க முயற்சிக்க,
“அப்பா.. வாப்பா நம்ம வீட்டுக்கு போலாம். எல்லாரும் பாக்குறாங்கப்பா” என மகள் ஒருபுறம் கைப்பற்றி தூக்க,
“ஏய் சனியனுகளா..! கைய விடுங்க. செவுல்லையே ஒன்னு விட்டேன்னு வையு” என்று கண்மண் தெரியாத கோபத்தில் அவர்களை அடிக்க கை ஓங்கினான் அவன். மரியாதை தரும் அளவிற்கு மகத்தானவன் அல்ல. மானம் கெட்ட மகாகுடிகாரன் அவன்.
அவன் அவர்களை நோக்கி கை ஓங்கிய மறுநொடி, அவன் கன்னத்தில் பளாரென்று விழுந்த ஒன்றில், தலை சுற்றி மீண்டும் கீழே விழுந்தான்.
“யாருடா என்ன அடிச்சது? என்ன அடிக்குற அளவுக்கே தைரியம் வந்திருச்சா டா” என உளறி தடுமாறி அவன் எழுந்து நிற்க, அவன் முன் பத்ரகாளியாய் பல்லவி நின்றிருந்தாள்.
“பொண்டாட்டி புள்ளைய வெச்சு காப்பாத்தத் தெரியாத நீ எல்லாம் ஆம்பளையா? உனக்கெல்லம் கல்யாணம் குழந்தை குட்டி ஒரு கேடு. ஏண்டா நீங்களும் ஒழுங்கா வாழாம அவங்க வாழ்க்கையும் இப்படி சீரழிக்குறீங்க.. இதுக்கு தனியா இருந்து குடிச்சே சாக வேண்டியது தானே. உன்னால பாதிக்கப்படுறது உன் பொண்ணு தான்.. உன்னால நாளைக்கு அவ ஒட்டு மொத்த ஆண்களையும் வெறுத்து ஒதுக்கிடுவா.. நீங்க எல்லாம் திருந்தாத ஜென்மங்க” என ஆக்ரோஷமாய் பல்லவி பேசிக்கொண்டிருக்க, கண்களில் வழியும் கண்ணீரைத் துடைத்தபடி அவளருகில் நின்றிருந்தாள் அச்சிறுமி.
அவள் வடிவில் தன்னைப் பார்ப்பதுபோல் இருந்தது பல்லவிக்கு.
“நான் கஷ்டப்பட்டு தினக் கூலிக்கு போய் சம்பாரிச்சு என் புள்ளைக்காக நாலு காசு சேர்த்தாலும், இந்தாளு தினமும் அதை எடுத்துவந்து குடிச்சு கரியாக்குறான் மா. என்னால தினமும் போராட முடியல. பேசாம நானும் எம்புள்ளையும் விசத்தை குடிச்சிட்டு மேல போய் சேந்திட வேண்டியதுதான்” என அவன் மனைவி விரக்தியாய் பேச,    
“நீங்க ஏன் சாகணும்..? இந்தால நம்பி தினமும் அடிபட்டு மிதிபட்டு வாழுறதுக்கு உங்க புள்ளைய நல்லா படிக்க வையுங்க.. அவ காப்பாத்துவா உங்களை. அதை விட்டுட்டு கோழைத்தனமா சாகுறேன்னு சொல்லுறீங்க. உயிர் அவ்வளவு சாதாரணமா போயிடுச்சா?” என, அவளையே பார்த்திருந்த சிறுமி
“அம்மா நீ வாம, நாம வீட்டுக்கு போவோம். நாளைக்கு எனக்கு பரிட்சை இருக்கு. நான் படிக்கணும். இவரை இங்கயே விட்டுட்டு வா. எனக்கு நீ மட்டும் போதும்” என வேகமாய் அவளது தாயின் கைப்பற்றி இழுக்க, கண்களை துடைத்துக் கொண்டு.. விழுந்து கிடக்கும் அவனையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு சென்றுகொண்டார்.
“தினம் தினம் ஏதோ ஒரு குடும்பம் இப்படி சாராயக் கடை முன்னாடி நின்னு கண்ணீர் விடுறது வாடிக்கையா போய்டுச்சு. எத்தனை முறை தான் புகார் குடுக்குறது..? இழுத்து மூடுவானுகனு பார்த்தா தெருவுக்கு தெரு திறப்பு விழா வைக்குறானுக. இன்னும் எத்தனை பேரோட வாழ்க்கைல விளையாடப் போரானுகளோ எத்தனை குடும்பங்கள அழிக்கப் போரானுகளோ” என பொதுஜெனம் புலம்பியவாறு கடந்து செல்ல, பல்லவி மட்டும் நகராது நின்றிருந்தாள்.
அந்த சிறுமியிடம் கண்ட துணிவு அன்று அவளிடமும் இருந்திருந்தால்.. அவள் அன்னை அவளுடன் இருந்திருப்பார் இந்நேரம். 
அதை எண்ணிய மறுநொடி, ரோடென்றும் பாராது ஓவென கத்தி அழவேண்டும் போல் இருந்தது பல்லவிக்கு. அவள் கரத்தை அழுந்தப் பற்றிய கரத்தை உணர்ந்து உயிரற்ற பார்வையுடன் நிமிர்ந்து பார்க்க, 
ஸ்வரன் நின்றிருந்தான்.
“நம்ம வீட்டுக்கு போலாம் அனு” என்று அவள் கைப்பற்றி அழைத்து வர, அவனோடு வண்டியில் ஏறியவள் வீடு வரும் வரையில் வாய் திறக்கவில்லை. 
ஸ்வரனும் எதுவும் பேசவில்லை. வீட்டை அடைந்ததும் அவளை இறக்கி விட்டவன் வண்டியை திருப்பிக் கொள்ள, பல்லவியை எதிர்கொண்ட சுந்தரேஸ்வரன்,
“என்ன பல்லவிமா இன்னைக்கு வேலை அதிகமா.. ரொம்ப களைச்சுப்போய் தெரியுற” என்று கேட்க, 
“ஹ்ம்ம்…” என்ற பதிலை நொடிக்கும் குறைவான நேரத்தில் அளித்தவள், அவலறைக்குள் வந்து கதவடைத்துக் கொண்டாள்.
அவளுக்கு வேலை செய்த களைப்பு தான் என்று முதலில் எண்ணி இருந்த தாத்தா, சிறிது நேரம் கழிந்த பின்னும் அவள் வெளியே வராதிருக்க.. அவளுக்கு சூடாக தேநீர் போட்டு எடுத்துக் கொண்டு சென்றார். கதவு தாளிட்டிருக்க,
“பல்லவி மா.. பல்லவி மா..” எனக் கதவைத் தட்ட, வெளியே சென்றிருந்த ஸ்வரனும் அப்போது தான் உள்ளே நுழைந்தான்.
“கொஞ்சம் என்னை நிம்மதியா தான் இருக்க விடுங்களேன்… எல்லாரும் என்னை ஒரே அடியா கொல்லாதீங்க” என்று உள்ளிருந்து கத்தியேவிட்டாள் பல்லவி. 
சுந்தரேஸ்வரனுக்கு முகம் வாடிவிட, கையிலிருந்த தேநீருடன் அவர் திரும்பும்போது அங்கே ஸ்வரன் தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பது கண்டு முகத்தை சரி செய்தவர்
“அது ஒண்ணுமில்லப்பா.. ரொம்ப களைச்சுப்போய் இருந்தா அதான்” என்றார், அவன் எதாவது தவறாய் எடுத்துகொள்ளக் கூடாதே என்பதற்கு.
அவர் கையிலிருந்த தேநீரை வாங்கியவன்
“ப்பா.. ராமமூர்த்தி மாமா உங்களை விசாரிச்சாரு. நம்ம சேகர் அண்ணன் கடையில தான் இருக்காரு பார்த்துட்டு வர்றீங்களா” என்றான். 
“சரிப்பா” என்று நகரச் சென்றவர் பின் திரும்பி அவன் தோளைத் தொட்டு
“என்ன பிரச்சனைன்னு பொறுமையா கேளுப்பா” என,
“ப்பா.. நான் பார்த்துக்கறேன் நீங்க ஒன்னும் கவலைப் படாதீங்க” என்று அனுப்பிவைத்தான்.
அனு அனுவென கதவைத் தட்டிப் பார்த்துவிட்டான் ஸ்வரன். அவள் திறந்த பாடில்லை. 
“பல்லவி..! இப்போ கதவை திறக்கப் போறயா இல்லையா” என்று குரல் உயர்த்த, அதுவரை அழுதுகொண்டிருந்தவள் மெல்ல எழுந்து வந்தாள் கதவருகே. 
அதற்குள் பொறுமை பறந்திருக்க, தன் கையிலிருந்த டீ டம்ளரை தூக்கி எரிந்திருந்தான் ஸ்வரன். அது கீழே விழுந்த சத்தத்தில் கைநடுங்க மெல்லக் கதவைத் திறந்தாள்.
அழுது சிவந்திருந்த அவள் முகத்தைக் கண்டு கடிந்துகொள்ளக் கூட முடியவில்லை அவனால். அவள் நகர்ந்துகொள்ள இவன் கதவை தாளிட்டுவிட்டு உள்ளே வந்தான்.
“உள்ள வந்து கதவை சாத்திக்குறது என்ன பழக்கம் அனு? நமக்கு என்ன கோபம் வருத்தம் இருந்தாலும் அதை பெரியவங்க கிட்ட காட்டலாமா? தாத்தா உனக்கு டீ தான் எடுத்துட்டு வந்தாரு. நீ இப்படி நடந்துகிட்டா அவரு வருத்தப்பட மாட்டாரா?” என்றான் பொறுமையாக, அவள் அருகில் சென்று அமர்ந்து.
“நான் வேணும்னே பண்ணல ஆதி” என்றாள் அழுதவாறு.
“தெரியும் அனு. நீ எதோ டென்ஸன்ல சொல்லிட்ட, ஆனா வயசானவரு அவரு வருத்தப்படுவாரு தானே. இனி இப்படி நடந்துக்காத. உனக்கு எதுனாலும் அதை என்மேல காமி” என்றான்.
“சாரி ஆதி” என்றாள் கண்களைத் துடைத்துக்கொண்டே.
“சரி இப்போ சொல்லு, என்னாச்சு? எதுக்கு இப்படி அழுதுட்டு இருக்க?” 
அவன் கேட்பதற்காகவே காத்திருந்தவள் போல் அவன் முகம் கண்டாள். எதை சொல்வது எதை விடுவது.. அனைத்தையும் கொட்டித் தீர்க்கும் வேகம் பல்லவிக்கு. எங்கிருந்து ஆரம்பிப்பது எங்கு சென்று முடிப்பது ஒன்றும் புரியவில்லை. வேகம் இருந்த அளவிற்கு உள்ளிருந்து வார்த்தை வரவில்லை.
அவளையே பார்த்திருந்தவன் பின் எழுந்து கதவருகே செல்ல,
“ப்ளீஸ் ஆதி..” 
செல்லவேண்டாம் என கெஞ்சலுடன் அவள் குரல் வர, ஒரு நொடி திரும்பி அவளைப் பார்த்தவன், இரண்டு கைகளையும் அவளை நோக்கி விரித்து ‘வா’ என்பதுபோல் கண்களால் அருகே அழைக்க, சிறகடித்தவள் அடைக்கலம் தேடியிருந்தாள் அவன் கூட்டினில்.
அவளை அமைதிப்படுத்த அவனது அவ்வொரு அணைப்பு போதுமானதாய் இருக்க, நொடிகள் நிமிடங்களாய் நகர, அவளை தன்னிடம் இருந்து மெல்ல விலக்கியவன்,
“அனு மா.. நீ போய் ஃபேஷ் வாஷ் பண்ணிட்டு வா. பொறுமையா பேசலாம்” என்று அவளை அனுப்பி வைக்க, அவள் முகம் கழுவி வந்ததும் சூடான டீயை அவளுக்கு அளித்தவன், அவள் பருகி முடித்ததும் தான் அவளை தன்னோடு பேச அனுமதித்தான்.
“எதுவா இருந்தாலும் சொல்லு அனு. நம்ம சேர்ந்து பார்த்துக்கலாம்” என்று அவளருகில் அமர்ந்தவன் அவளை தன் தோள்மேல் சாய்த்துக்கொள்ள, 
“ஹ்ம்ம்..” என்றபடி அவன் தோளில் வாகாய் சாய்ந்து கொண்டாள்.
“ரோட்ல அந்த குடிகாரனோட என்ன பிரச்சனை உனக்கு?” என ஆதியே ஆரம்பித்தான்.
“ஒன்னும் இல்ல” 
“அப்பறம் எதுக்கு அவனைப் போட்டு அடிச்ச?”
“உங்களுக்கு தெரியாது ஆதி, அந்த சின்னப் பொண்ண பார்த்திருக்கணும் நீங்க. அப்பா ப்ளீஸ்ன்னு எப்படி எல்லாம் கெஞ்சிட்டு இருந்தா தெரியுமா? அது புரியாம அவன் அவளையே அடிக்க வர்றான். அவ வயசுல இதெல்லாம் பார்க்கணுமா? படிக்க வேண்டிய வயசு. அந்தாளு தன்னோட சந்தோசத்துக்காக அந்த சின்ன பொண்ணோட சந்தோசத்தை கெடுத்துட்டு இருக்கான். அவ வாழ்க்கை என்ன ஆகுறது?”
“அனு..! அதுக்கு நம்ம என்ன பண்ண முடியும் மா? அந்த ஆளா திருந்துனாதான் உண்டு. நீ இதெல்லாம் நினைச்சிட்டு இருக்காத”
“நினைக்காம என்ன பண்ணுறதாம்.. சும்மா சொல்லுவீங்களே எல்லா ஆண்களும் அப்படி இல்லை நான் தான் தப்பா போர்ட்ரைட் பண்ணுறேன்னு. எல்லா பொண்ணுகளுக்கும் ரோல் மாடல் அவங்க அப்பா தான். அவர் மேல இருக்குற மதிப்பும் மரியாதையும் தான் மத்த ஆண்களையும் மதிக்க வைக்கும்.. நம்ப வைக்கும். எனக்கு ஆரம்பமே தப்பா இருக்கும்போது நான் எப்படி மத்தவங்களை நம்புறது” என்றாள் அடக்கப்பட்ட ஆதங்கத்துடன்.
அதில் அவளை அதிர்ந்துபோய் பார்த்திருந்தான் ஆதீஸ்வரன்.
மனம் சரியில்லாது இருக்க, சாலையில் இறங்கி மெல்ல நடைபோட்டார் சுந்தரேஸ்வரன். கால்கள் தானாய் அழைத்து வந்தன சிவகாமியின் வீட்டுப் பக்கம்.
“வாங்க.. என்ன இந்நேரத்துல நீங்க மட்டும் வந்திருக்கீங்க.. உள்ள வாங்க” என வரவேற்றார் சிவகாமி. 
என்றும் புன்னகை முகமாய் வரவேற்கும் அவரிடம் இன்று புன்னகை தவறியதை குறித்துக் கொண்டார் சுந்தரேஸ்வரன். அதுபோல் அவர் அகத்திலுள்ளதையும் அவர் முகம் காட்டிக் கொடுத்துவிட, 
“என்ன ஒருமாதிரி இருக்கீங்க.. எதாவது பிரச்சனயா?” என்றார் சிவகாமி சரியாக.
“பல்லவி தான் எதோ போலவே இருக்கா. உங்க நியாபகம் வந்திருச்சோ என்னவோ. அதான் உங்களை அழச்சிட்டுப் போலாம்னு வந்தேன்” என்றார்.
“அவ அம்மாவ நினைச்சிருப்பா” என்றார் குரல் கம்ம, கண் கலங்கியபடி.
“வருத்தப்படாதீங்க சிவகாமி. நம்மால நடந்ததை மாத்தவா முடியும். ஸ்வரன் அப்பா தவறையில அவன் கைக்குழந்தை. முடிவு வர்றதுக்கு நம்ம என்ன பண்ணமுடியும். கடந்து தான் வந்தாகணும்” என்றார் அவரது நினைவுகளை எட்டிப்பார்த்து.  
“முடிவு நம்மளைத் தேடி வந்தா பரவாயில்லைங்க. என் மக அவளா இல்லை தேடிக்கிட்டா” 
“என்ன சொல்லுறீங்க சிவகாமி” என்றவரிடம் சொல்லத் துவங்கினார் அவரது இளமைக்காலம் தொட்டு. 
இதுவரை யாரிடமும் பகிர்ந்துகொள்ளாது தன்னுள் போட்டுப் புழுங்கிய விடயங்களை எல்லாம் கொட்டிவிடத் தீர்மானித்தவர், மெல்லக் கூற ஆரம்பித்தார்.
“பதினாறு வயசுல எனக்கு கல்யாணம் பண்ணி அனுப்பிட்டாங்க. பதினெட்டு வயசுல பல்லவியோட அம்மா, என் வயித்துல இருக்கும்போதே நோய்வாய்ப்பட்டு அவரு தவறிட்டாரு. புள்ளையையும் பார்த்துக்கிட்டு, பெரியவங்களுக்கும் சமச்சுப்போட்டு, வீட்டு வேலை எல்லாம் செஞ்சே என் நாள் ஓடிடுச்சு. அதுவரைக்கும் கூட ஒரு பாதுகாப்பு இருந்துச்சு பெரியவங்களும் போனப்பறம் வயசுப்புள்ளைய வெச்சுக்கிட்டு படாதபாடு பட்டுப் போயிட்டேன்” என்று தன் நினைவுகளில் கண்களைத் துடைத்துக் கொண்டவர்
“நம்ம கஷ்டப் பட்டாலும் பரவாயில்ல நம்ம புள்ளை நல்லா இருக்கணும்னு பத்து வீட்டுல பாத்திரம் தேய்ச்சு படிக்கச் வெச்சேன். எங்கயும் வெளிய விடாம பொத்திப் பொத்தி வளர்த்தேன். கல்யாணம் பண்ணி வைக்க வேண்டிய நேரத்துல.. நல்ல இடம்னு நம்பி, அவனை அவளுக்கு கட்டி வெச்சு, நானே அவளை பொதகுழியில தள்ளிட்டேன்” என்று தலையில் அடித்துக்கொண்டு அழுது தீர்த்தார்.
அவரை தேற்றும் வழி தெரியாது பார்த்திருந்தார் சுந்தரேஸ்வரன்.
“சிவகாமிம்மா என் அம்மாவை கஷ்டப்பட்டு வளர்த்திருக்காங்க ஆதி. அம்மாவுக்கு மேரீட் லைஃப் அவ்வளவு நல்லா இல்லை. அப்பா.. அந்தாளை அப்பான்னு சொல்லக் கூட எனக்கு வாய் கூசுது. அந்தாளு ஒரு குடிகாரன்னு தெரியாம அம்மாவை அந்தாளுக்கு கல்யாணம் பண்ணி வெச்சுட்டாங்க ஆதி. அம்மாவும் பொறுத்துப் பொறுத்துப் போயிருக்காங்க. நான் பொறந்த அப்பறமும் அந்தாளு மாறலை. தினமும் என் கண்ணு முன்னாடியே அம்மாவை போட்டு அந்த அடி அடிப்பாரு. அம்மா ரொம்ப பாவம் ஆதி” என்று அழ, அவளை தன்மீது சாய்த்துப் பிடித்துக் கொண்டான். 
“அம்மா எல்லார்த்தையும் எனக்காக பொறுத்துப் போவாங்க. அந்தாளு செஞ்ச அக்கிரமத்துக்கு அளவே இல்ல ஆதி. குடிச்சிட்டு வந்து தினமும் ஒரே கலாட்டா. ஒருநாள் பொறுக்க முடியாம அம்மா தட்டிக் கேட்டதுக்கு என்ன செஞ்சாரு தெரியுமா..? எனக்கு அடுத்து அம்மாக்கு இன்னொரு குழந்தை வரப்போற நேரத்துல அந்தாளு அம்மா வயித்துல உதச்சதுல அவங்க கீழ விழுந்து….” என நிமிர்ந்து வலியோடு அவன் முகம் நோக்க,
“வேண்டாம் அனு உனக்கு கஷ்டமா இருந்தா விட்டிடு” என்றான்.
“இல்லை நான் எல்லாம் சொல்லணும். நீங்க கேளுங்க” என்றவள், அதை எண்ணி இப்போதும் அழுது கரைந்தாள். கொஞ்சம் தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டு
“எனக்கு அப்போ வெறும் ஏழு வயசுதான் ஆதி. ஒருநாள் தூங்கிட்டு இருந்த என்னை அம்மாவுக்கு தெரியாம எடுத்துட்டு போய் காசுக்காக விற்கப் பாத்திருக்காரு ஆதி” என்றதும் அவனே பேரதிர்ச்சியில் இருந்தான்.
“அம்மா அந்த நேரத்துல என்னை தேடிட்டு அங்க வந்ததால காப்பாத்த முடிஞ்சது. இல்லைனா என் வாழ்க்கையே தலை கீழா மாறிருக்கும். அந்தாளு என்னை எந்த நிலைமைக்கு தள்ளிருப்பாருன்னு நினைக்கவே நெஞ்சை அடைக்குது ஆதி” என்று தேம்பியவள் 
“இதோட முடியல ஆதி. ஒருநாள் குடிச்சிட்டு வந்து போதை தலைக்கேற, யாரு என்னனு கூட பார்க்காம என்னை.. என்னை” என்று அவள் மேலும் சொல்லமுடியாது தொண்டை அடைக்க தன் நெஞ்சை பிடித்துக் கொள்ள,
“போதும் அனு” என்று அவளை இறுக அணைத்துக் கொண்டான். அவள் உடலோடு சேர்த்து உள்ளமும் குலுங்குவதை அவனால் உணர முடிந்தது.
“அனு.. ரிலாக்ஸ். இரு தண்ணி எடுத்து வர்றேன்” என்று எழச் செல்ல, அவனை நகர விடாது பிடித்துக் கொண்டவள்,
“எனக்கு அதெல்லாம் வேண்டாம் ஆதி. ப்ளீஸ். எங்கயும் போகாதீங்க” என்றதும் அப்படியே அமர்ந்துகொண்டான்.
“அம்மா வந்து காப்பாத்துனாங்க ஆதி. அவங்களுக்கு ஒரு நிமிஷம் உயிரே இல்லை. ஏன் ஆதி குடி போதைல யாரு என்னனு கூட தெரியாதா? பெத்த பொண்ணுக்கு கூட வித்தியாசம் தெரியாதா?” 
என்ன பதில் சொல்ல அவளது கேள்விக்கு..? அவனுக்கு நேர்மாறான ஒருவரைப் பற்றி அவள் கூறுவதைக் கேட்க, அவனுக்குமே அதிர்ச்சி தான். 
“எனக்கு வந்து பொறந்ததுக்கு நீ இன்னும் என்னவெல்லாம் அனுபவிக்க போரையோன்னு அம்மா சொல்லி அழுதது எனக்கு இன்னும் கேட்டுகிட்டே இருக்கு ஆதி.

Advertisement