Advertisement

ஓம் ஐந்தமுது உகந்தாய் போற்றி!!
9
புத்தம் புது பொழுது மெல்லப் புலர்ந்தது. பொழுதின் பொலிவு பல்லவியிடத்தில் பெயருக்கும் இல்லை. 
இந்நாள் மட்டும் வராமல் இருக்கக் கூடாதா என்று வருடா வருடம் நினைக்கத் தவறுவதில்லை அவள். 
நாள்காட்டியில் இருந்து கிழித்தோ.. கைப்பேசியில் இருந்து மறைத்தோ வைப்பதால் ஒன்றும் மாறப் போவதில்லை. நடந்து முடிந்ததை இனி யாரும் மாற்றப் போவதுமில்லை. 
நினைக்கக் கூடாது என்று நினைக்கும் போது தான் மறக்க விடாது செய்கிறது சில நிகழ்வுகள். என்னதான் இயல்பாய் இருப்பதுபோல் வெளியே காட்டிக்கொண்டாலும், அவள் மனமும் மூளையும் இன்றைய நாளின் பின் இருக்கும் நிகழ்வுகளை மறந்து வேறெதிலும் கவனம் செலுத்துவதாய் இல்லை என்பதை திட்டவட்டமாய் தெரிவித்தது.
“என்ன பல்லவி இவ்வளவு அஜாக்கிரதையாக தான் வேலை செய்வீங்களா? இதை உங்ககிட்ட இருந்து நான் எதிர்பார்க்கலை” என்ற மேலதிகாரியின் குரல் அவளை குற்றம் சாற்றியது.
இதுபோல் கவனக் குறைவாய் எல்லாம் இருந்ததில்லை இதுவரை. ஒரு நொடி கவனக் குறைவுதான் இங்கு பல இழப்புகளுக்கு காரணமாய் அமைகிறது. 
“சாரி சார். இப்போ சரி பண்ணிடறேன்” என விடைபெற்று வந்தவள், தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்துவிட்டாள்.
இதுவரை இந்நாளில் தன்னை காயம் செய்யாத தனிமையை மட்டும் தனக்கென எடுத்துக் கொள்வாள். 
ஆனால் இன்று? ஸ்வரன் மற்றும் சுந்தரேஸ்வரன் முன்பு அப்படி இருக்க முடியாது. சிவகாமியிடமும் செல்ல முடியாது. அதனால் அலுவலகத்திற்கு கிளம்பி வந்து விட்டாள். இங்கும் ஏன் வந்தோம் என்று எண்ணும்படியே நிகழ்ந்து கொண்டிருந்தது ஒவ்வொன்றும்.  
மதியம் வரை, அவளது தவறைத் திருத்தி வேலையை சரிவர முடித்துக் கொடுப்பதிலேயே கழிந்தது. மதிய உணவையும் உட்கொள்ளத் தோன்றாது இருக்கையில் கண்மூடி சாய்ந்திருந்தவளின் கவனத்திற்கு வந்தது கைப்பேசியின் சிணுங்கள்.
திரையில் ரஞ்சிதா. அப்பெயரைக் கண்டதும் உடனே அழைப்பை ஏற்று காதிற்கு கொடுத்தாள்.
“எப்படி மா இருக்க”
“ஹ்ம்ம்.. இருக்கேன் மேடம்” என்று அவள் கூற, அவர் அடுத்து கூறியதில் பல்லவிக்கு ஒருநொடி ஒன்றும் ஓடவில்லை. 
அவரிடம் சொல்லிவிட்டு வந்தது என்ன.. தான் செய்து கொண்டிருப்பது என்ன..? இதுவரையில் ஸ்வரனிடம் எதையும் தெரிவித்திருக்கவில்லை. தனது பிரச்சனைகளில் சரணை எப்படி மறக்கலாம்..? மறந்துதான் போனேனே நான் என தன்னை தானே குற்றம் சாடியவளுக்கு மூளை விரைந்து செயல்பட மறுத்தது.   
“இன்னிக்கு நீ வர்றியா பல்லவி..?” என அவர் கேட்க, மறுக்கவில்லை.. மறுக்கத் தோன்றவுமில்லை.
“வர்றேன் மேடம்” என்றுவிட்டு கைப்பேசியை கீழே வைத்தாள்.
அதன்பின் எந்த வேலையும் ஓடவில்லை. நேரம் எப்படிக் கடந்ததென்று அவள் நிச்சயமாய் அறியவில்லை. அலுவலகம் முடிந்ததும் அன்பு அறக்கட்டளையில் இருந்தாள் பல்லவி.
கண்கள் மைதானத்தின் பக்கமே இருக்க, கால்கள் தானாய் அவ்விடம் அழைத்துசெல்ல, இரண்டும் அவளை ஏமாற்றவில்லை. 
அவள் எதிர்பார்த்தவன், சிவப்பு நிற டீ ஷர்ட் அணிந்தபடி இடது கையில் கிரிக்கெட் மட்டையைப் பிடித்தபடி தன் நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்தான். 
அந்தப் பதினேழு வயதினனையே இமைக்காது பார்த்திருந்தாள் பல்லவி. எத்தனை முறை பார்த்தாலும் முதல் முதலாய் பார்ப்பதுபோல் தான் பார்த்திருப்பாள் அவனை. 
“சார் கையில ஸ்டெதஸ்கோப் பிடிப்பாருன்னு பார்த்தா கிரிகெட் பேட்டை தான் பிடிக்கிராரு..” என்றபடி வந்தார் ரஞ்சிதா.
“என்ன மேடம் சொல்லுறீங்க.. அவன் ஒழுங்கா படிக்குறது இல்லையா” என்று பல்லவி இப்போது கவலையாய் பார்க்க,
“அதெல்லாம் இல்ல. எதை எந்த நேரத்துல செய்யணும்னு சரியா செய்வான். எக்ஸாம் எல்லாம் ரொம்ப நல்லா பண்ணிருக்கேன்னு தான் சொன்னான். அவனைப் பத்தி கவலையே வேண்டாம். அடுத்து நீட் எக்ஸாம் வருது. க்ளியர் பண்ணிட்டா பரவாயில்லை.. பண்ணிடுவான்” என்று கூறிக்கொண்டிருக்கும் போது பல்லவியின் காலடியில் வந்து விழுந்தது பந்து. 
குனிந்து அதை கையில் எடுக்க, தூரத்தில் 
“அக்கா..” என்று ஒலித்த குரலில் மெல்லத் திரும்பினாள் குரல் வந்த திக்கில். 
அழைத்தவன் சரண்.
அவனிடம் இருந்து இந்த ஒரு அழைப்பிற்காகத் தானே அனுதினமும் காத்திருக்கிறாள் அனுபல்லவி. தானாய் கண்களில் நீர் கோர்க்க, இதழ்களில் புன்னகையும் விரிய அவனை பார்த்தபடியே நின்றிருந்தாள்.
“அக்கா.. பால்..” என்று அவன் அங்கிருந்து குரல் கொடுக்க.. பந்தை தூக்கி வீசினாள்.
“தேங்க்ஸ் க்கா” என்றுவிட்டு விளையாட்டை கவனித்தனர். 
பல்லவி தன் பார்வையை திருப்பாது நின்றிருக்க..
“இதை தான் நானும் இத்தனை நாளா எதிர்பார்த்தேன். அந்த நாள் இன்னைக்கு தான் வந்திருக்கு. ரொம்ப சந்தோசம் மா” என்றதில் அவர் புறம் திரும்பியவள் தன் பதிலை முழுதாய் முன்வைப்பதற்குள் அவர்களிடம் வந்த ரஞ்சிதாவின் செக்ரெட்ரி, அவரைச் சந்திக்க அன்பு அறக்கட்டளைக்கு நிதி உதவி வழங்கும் முக்கிய நபர் ஒருவர் வந்திருப்பதாய் கூற, அவர் பல்லவியை காத்திருக்கும் படி கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்துகொண்டார்.
பல்லவியின் மனதில் சஞ்சலம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. வேறொரு நாளாய் அமைந்திருந்தால் நிச்சயம் விரைந்து ஒரு முடிவிற்கு வந்திருப்பாள். ஆனால் இன்று..? எதையும் தெளிவாய் சிந்திக்க தன்னால் முடியாதென்று அவளுக்கே நன்கு தெரியும்.
அப்படியான இந்நாளில் தான் அவள் அதிக சோதனைக்கு உட்படுத்தப் படுகிறாள். அனைத்து திசையிலிருந்தும் கூரிய அம்புகள் வந்து பாய, கேடயமாய் இருந்து அவளை பாதுகாப்பது தான் யாரோ..?
ஸ்வரனிடம் பேசிவிடலாம் என்று முடிவெடுத்தவள் அவனை அழைக்க கைப்பேசியை எடுக்க, டவர் சுத்தமாய் இல்லை அவ்விடத்தில். மைதானத்தை தாண்டி முன்பக்கம் வந்து அழைக்கச் செல்ல, அதற்குள் சுரேகாவிடம் இருந்து அழைப்பு வந்தது அவளுக்கு. 
அதை ஏற்று காதிற்கு கொடுக்க,
“பல்லவி.. எங்க இருக்க?” என்ற சுரேகாவிடம் அத்தனை வேகம். 
“ஒரு முக்கியமான வேலையா வெளிய வந்தேன் ரேகா”
“என்னை இன்னிக்கு சாய்ந்தரம் மீட் பண்ணுறதா சொல்லிட்டு நீ வெளிய என்ன பண்ணுற?” என அவள் கேட்டதும் தான் அவளை சந்திப்பதாய் கூறியதே நினைவில் வந்தது. 
சில நாட்கள் முன்பு தான் சுரேகாவிடம் பணத்தேவை இருப்பதாய் கூறி குறிப்பிட்ட தொகையை கைமாத்தலாய் கேட்டிருந்தாள். இன்று மாலை சந்திப்பதாகவும் கூறியிருந்தாள். ஆனால் இன்றைய நாள் அனைத்தையும் மறக்கச் செய்திருந்தது பல்லவிக்கு.
“நீ என்கிட்ட கேஷ் அரேன்ஜ் பண்ண சொன்னது ஸ்வரன் அண்ணாவுக்கு தெரியுமா..?” 
“இல்ல ரேகா. ஏன் என்னாச்சு” எனக் கேட்கும்போதே ஏதோ நடந்திருக்கிறது என்று புரிந்தது.
“என்னடி நீ.. இதை என்கிட்ட முதல்லையே சொல்லியிருக்க வேண்டாமா? நீ அர்ஜென்ட்டா வேணும்னு கேட்டதும் நான் உடனே பணத்தை ரெடி பண்ணிட்டேன். உனக்காக எவ்வளவு நேரம் தான் வெயிட் பண்ணுறது. உன் போனும் நாட் ரீச்சபிள். இப்போதான் லைன் கிடச்சுது” 
“என்னாச்சுன்னு சொல்லு முதல்ல”
“உன்னை பார்க்க நேரா உன் வீட்டுக்கு வந்தேன் பல்லவி. ஸ்வரன் அண்ணா தான் இருந்தாரு. அவரு கிட்ட தான் கேஷை கொடுத்தேன். அவரு வேண்டாம்னு சொல்லி திருப்பி கொடுத்திட்டாரு. எனக்கும் ஒரு மாதிரி ஆகிடுச்சு அவருக்கும் ஒரு மாதிரி ஆகிடுச்சு” என்றதும் தலை சுற்றியது பல்லவிக்கு.
“என்ன ரேகா நீ?”
“என்ன நொன்ன ரேகா.. நீ சொல்லியிருக்கணும் முதல்லையே”  அவளும் பதிலுக்கு காய..
“சரி விடு நான் பார்த்துக்குறேன்” என அழைப்பை துண்டித்தவளுக்கு என்ன செய்வதென்று ஒன்றும் புரியவில்லை. 
ரஞ்சிதா மீண்டும் அவ்விடம் வந்து பார்க்கும்போது, பல்லவி அங்கில்லை. மாறாக சரண் தான் இருந்தான். அதுவும் என்றுமில்லாமல் இன்று அத்தனை மகிழ்ச்சியுடன் காணப்பட்டான். காரணம் என்னவென்று அவனுக்கே தெரியவில்லை.
இத்தனை நாள் தேர்வுகளால் கையில் எடுக்காத கிரிக்கெட்டை இன்று ஆசை தீர விளையாடியதால் மட்டுமே உண்டான மகிழ்ச்சியல்ல என்பதை அறிவான். ஆனால் இதுவரை அவன் அறியாத ஒன்று அவனுக்காகக் காத்திருப்பதை அறிவானா? 
ரஞ்சிதா மூலம் தான் அவன் அறியப்பட வேண்டுமென்று விதி இருந்தால் அதை மாற்ற பல்லவி யார்? 
சரணின் அருகே வந்த ரஞ்சிதா அவன் தலையை ஆசையாய் வருடி,
“அக்கா எங்க கண்ணா?” என்று வினவ, அவன் சற்றுமுன் அங்கிருந்த பல்லவியை தான் கேட்கிறார் என்று அறிந்து 
“அக்கா.. முன்னாடி என்ட்ரன்ஸ் தான் வந்தாங்க மேடம்” என்றான்.
அது ஒன்றே போதுமானதாய் இருந்தது அவருக்கு. அவனது பதிலில் அகம் நிறைந்து போனவர், 
“இப்போ சந்தோசமா இருக்கியா கண்ணா” என்று கேட்டு அவன் முகம் காண,
“ரொம்பவே சந்தோசமா இருக்கேன் மேடம்” என்றான் புன்னகையுடன். தேர்வுகள் முடிந்து இப்போது தான் பதற்றமின்றி நிம்மதியாய் இருப்பதை எண்ணி அவன் அப்படிக் கூறினான். அது புரியாத ரஞ்சிதாவோ,
“உனக்குன்னு யாருமில்லைன்னு வருத்தப்படுவையே கண்ணா.. உனக்குன்னு இருக்குற உறவை கடவுள் உன்னோட சேர்த்து வெச்சிட்டாரா” என்றதும் சரண் உடனே அவர் முகம் காண,
“இனி உன் அக்கா பல்லவியோடையும் உன் குடும்பத்தோடயும் நீ சந்தோசமா இருக்கணும் கண்ணா” என்று மனதாரக் கூறினார்.
‘என் அக்கா.. என் குடும்பமா?’ என சரண் அதிர்ச்சியுடன் பார்த்திருக்க, ரஞ்சிதாவிற்கு அழைப்பு வந்திருப்பதாய் மீண்டும் செக்ரட்ரி அழைக்க, 
“உன் அக்காவை கொஞ்ச நேரம் வெயிட் பண்ண சொல்லுப்பா நான் வந்திடறேன்” என்றுவிட்டு விரைந்து அங்கிருந்து உள்ளே சென்றுகொள்ள, சரண் முற்றிலும் தளர்ந்துபோய் அப்படியே நிலத்தில் மண்டியிட்டான்.
நேற்றுவரை அவனுக்கென்று யாருமில்லாமல் இருக்க.. இன்று உனக்கு ஒரு குடும்பம் இருக்கிறதென்று அவனை இத்தனை நாள் பாதுகாத்தவறே கூறும்போது.. அதை ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை ஏற்றுக் கொள்ளாது இருக்கவும் முடியவில்லை. 
பல்லவியை பலமுறை இங்கு கண்டிருக்கிறான். இன்று தற்செயலாய் பேசியதுபோல் அரிதாய் ஓரிரு வார்த்தை தான் பேசியிருப்பான் அவளோடு. ஆனால் அவளைக் காணும் போதெல்லாம் தனக்கும் இப்படி ஒரு சகோதரி இருந்திருக்கலாம் என்று தோன்றாமலில்லை. அவள் தன் சகோதரி தான் என்று தெரிய வரும்போது எப்படி உணர்கிறான் என்று அந்த பதினேழு வயதுடயவனால் சரியாய் வெளிப்படுத்த முடியவில்லை.
மகிழ்ச்சியா..? மகிழ்ச்சி தான் அணைத்து வகையான உணர்வுகளுக்கும் முன்னாள் வந்திருக்க வேண்டும். ஆனால் அது வரவில்லை. 
மாறாக..?
பண விஷயம் தெரிந்ததும் ஸ்வரன் தன் மீது கோபத்தில் இருப்பானோ என்று தோன்ற, அவனிடம் இருந்து இதுவரை வராத அழைப்பே அதை உறுதிப்படுத்தியது பல்லவிக்கு. 
வீட்டிற்கு சென்று பார்த்துக் கொள்ளலாம் என மீண்டும் மைதானத்திற்கே செல்ல, அங்கோ பேரதிர்ச்சி காத்திருந்தது.
சரண் தரையில் மண்டியிட்டிருந்த நிலையே எதையோ உணர்த்த, விரைந்து அவனிடம் வந்தவள் 
“எ.. என்னாச்சு சரண்” என்று வினவியபடி அவனருகில் மண்டியிட்டாள்.
பதிலுக்கு அவன் முன்வைத்த கேள்வியில் பல்லவிக்கு நெஞ்சை அடைத்தது.
“நீங்க யாரு?”
“சரண்…” என அவள் அதிர்ந்துபோய் பார்க்க, 
“சொல்லுங்க நீங்க யாரு?” என்று கத்தியே விட்டிருந்தான்.
“சரண்.. அது வந்து..”
“நீங்க என் அக்காவா??” 
பதிலில்லை.. பார்வையில் பரிதவிப்புகள் பாவையிடத்தில்.
“சொல்லுங்க நீங்க என் அக்காவா??” 
அவள் ஆமாம் என்று தலையசைக்க.. சரண் அவளைப் பார்த்த பார்வையில் அத்தனை வலி. அது அவனிடமிருந்து அவளுக்கு இடம்பெயர,
“சரண்.. நான் சொல்லுறதை…” 
அவள் முடித்திருக்கக்கூட இல்லை எழுந்து வேகமாய் ஓடியிருந்தான். 
எது நடக்கக் கூடாது என்றிருந்தாளோ அதுவே நடந்திருந்தது. இன்னும் எத்தனை அடிகளை அவளுக்காக வைத்திருக்கிறதோ இந்நாள்.
“சரண் எங்க இவ்வளவு வேகமா போறான்?” என்றபடி அவளருகில் ரஞ்சிதா வர, கண்களை துடைத்துக் கொண்டு எழுந்தவள் நடந்ததைக் கூற, அனைத்தையும் கேட்டவர்
“நான் தான் பல்லவி சரண் கிட்ட உன்னைப் பத்தி சொன்னேன்” என்றதில் அவரை நிமிர்ந்து பார்த்தவள்,
“ஏன் மேடம்..? நான் தான் சொல்லுறேன்னு சொன்னேனே அதுக்குள்ள நீங்க ஏன்..?”
“இல்ல மா.. நீ கடைசியா என்கிட்ட பேசும்போது அவன் பரிச்சை முடிஞ்சதும் அவனை அழச்சிட்டு போறதா சொல்லி இருந்தயே. மதியம் கூட அதை பத்தி கேட்க தான் உனக்கு கூப்பிட்டேன். நீ இங்க வர்றாதா சொன்னதும் அவனை அழச்சிட்டு போகத்தான் வந்திருக்கைன்னு நினச்சேன்”
அவளும் அந்த முடிவில் தான் இருந்தாள். ஸ்வரனிடம் தெரிவித்து விடுவதென்று. அவர்களுக்குள் ஏற்பட்ட சிறிய மனக்கசப்பில் இதை சொல்ல முடியாது போக, சரணின் தேர்வுகள் முடியும் நாளை அவளால் நினைவு கொள்ள முடியவில்லை. 
அவள் பேச்சற்று நின்றிருப்பது கண்டு
“நான் தான் தப்பா நினச்சுட்டேன்.. சாரி பல்லவி” 
“மேடம்.! என்கிட்ட போய் மன்னிபெல்லாம்.. விடுங்க.. எப்போவா இருந்தாலும் அவனுக்கு தெரிஞ்சுதான் ஆகணும். உங்க மூலமா இன்னிக்கே தெரியனும்னு இருந்தா அதை மாத்த நான் யாரு?” என்று விரக்தியாய் கூறியவள்
“நான் சொல்லுறதை கேட்கக் கூட தயாரா இல்லை அவன்” என்று அவன் சென்ற திக்கிலேயே நோக்க..
“பக்குவமா எடுத்து சொன்னா அவன் நிச்சயம் புரிஞ்சுக்குவான் பல்லவி. உடனே உன்னோட கிளம்பியும் வந்திருவான். நீ என்கூட வா” என அவள் கைப்பற்றி அழைத்துச்சென்றார். 
அவன் அத்தனை எளிதில் தன்னை புரிந்துகொண்டு தன்னுடன் வருவான் என்று தோன்றவில்லை பல்லவிக்கு. இருந்தும் புரிய வைக்கவேண்டிய கடமை அவளுடையது.. அதற்காக மீண்டும் அவன்மும் போய் நின்றாள் ரஞ்சிதாவோடு.
சுவரை வெறித்தபடி அமர்ந்திருந்தான் சரண். பல்லவி அவன் அருகில் சென்று அமர, அவளை நிமிர்ந்து பார்த்தவன் உடனே எழுந்து யன்னலின் அருகே சென்று நின்றுகொண்டான்.
“சரண்..” என்று அவன் பின்னோடு சென்றவள் மெல்ல அழைக்க
“அப்பா அம்மா இருக்காங்களா” என்றான் எங்கோ பார்த்தபடி. 
“நமக்கு யாரும் இல்லை சரண். பாட்டி மட்டும் தான்” 
“ஓஹ்..” என்றவன் அவளைப் பேசவிடாது
“நான் உங்க தம்பின்னு உங்களுக்கு முன்னாடியே தெரியுமா” என்றான்.
அவள் ரஞ்சிதாவை பார்த்துவிட்டு அவனைப் பார்க்க.. அவள் பதிலுக்காக விழி விலகாது அவன் காத்திருக்க.. கண்களை மூடிக்கொண்டு ஆமாம் என்று தலையசைத்தாள்.
“ஏன் எனக்குன்னு இந்த உலகத்துல ஒருத்தர் கூட இல்லைன்னு நான் நினைக்காத நாளில்ல.. ஆனா நீங்க எனக்குன்னு இருந்தும் என்னை தனியா தானே விட்டிருக்கீங்க” என்றான் வலியோடு
“அப்படி இல்லை சரண்”
“இப்போவும் ரஞ்சிதா மேடம் உண்மையை சொல்லாம இருந்திருந்தா என்னை இப்படியே தனியா தானே விட்டிருப்பீங்க” என்றதற்கு அவள் பதிலளிக்கும் முன்னரே,
“ப்ளீஸ் இங்க இருந்து போய்டுங்க. எனக்கு இனிமேலும் யாரும் வேண்டாம். என்ன பார்க்கவும் இனி வராதீங்க. இத்தனை நாள் யாருமில்லாம இருந்த மாதிரியே இனியும் இருக்கட்டும்” என்று வேகமாய் அங்கிருந்து சென்றுவிட்டான்.
“சரண் இருப்பா..” என ரஞ்சிதா அவனை அழைக்கச் செல்ல தடுத்தவள்,
“இப்போ எதுவும் பேச வேண்டாம் மேடம். அவனை பார்த்துக்கங்க” என்றுவிட்டு கிளம்பிக் கொண்டாள் அங்கிருந்து. 
அதற்குமேல் அங்கிருந்தால் அழ நேரிடும். அங்கு அவர்முன் அழ விரும்பவில்லை அவள். அவளவனின் தோள்களில் ஆறுதல் தேடவேண்டி இருந்தது. 
தன்னவன் தன்னைப் புரிந்து கொள்வானா..? 
கால்கள் தளர்ந்துபோய் நடக்க மறுத்தது. கலையிலும் சரியாய் உணவருந்தவில்லை. மதியம் உணவே அருந்தவில்லை ஒருபுறம் மயக்கம்.. மறுபுறம் கலக்கம்.. அத்தனை போராட்டங்களையும் தாண்டி ஒருவழியாக பேருந்தில் ஏறி அமர்ந்தாள் பல்லவி.
“ஸ்வரன்..! என்னப்பா பல்லவியை இன்னும் காணோம்..?” என நேரம் ஆவதை உணர்ந்து சுந்தரேஸ்வரன் ஸ்வரனிடம் விசாரித்தார்.
“வந்திருவா ப்பா. வேலை அதிகமா இருந்திருக்கும்” என்றான். இன்றும் அவனிடம் தெரிவிக்காமல் வெளியே சென்றதில் அவள்மீது கோபத்தில் தான் இருந்தான். அதோடு பண விசயமும் சேர்ந்துகொண்டது. 
“எதுக்கும் நீ போய் பார்த்து கூட்டிட்டு வாப்பா.. காலைல இருந்து ஏனோ சோர்ந்தே இருந்துது பல்லவி. சரியா சாப்பிடக் கூட இல்ல” என தாத்தா வருத்தப்பட,
“கவலைப் படாதீங்க ப்பா. அவளே வந்திருவா” என்று கூறினாலும் வாசலைத் தான் அவன் கண்களும் பார்த்திருந்தது.
“இங்க பாருப்பா, உங்களுக்குள்ள ஆயிரம் பிரச்சனை இருக்கலாம். அதுக்காக அவளுக்குன்னு ஒரு பிரச்சனை வரைல உங்க பிரச்சனையை அங்க முன்வைக்கக் கூடாது. அந்த நேரத்துல நீ தான் அவளுக்கு துணையா இருக்கணும். உன்கிட்ட கேட்க சங்கடப் பட்டுட்டு பல்லவி  சுரேகா கிட்ட பணத்தை கேட்டிருக்கலாம். வந்ததும் என்னனு பொறுமையா விசாரி முதல்ல. அதை விட்டுட்டு இப்படி கோபப்பட்டு பேசாம எல்லாம் இருக்காதப்பா. நம்மள நம்பி நம்ம வீட்டுக்கு வந்த பொண்ணு, அது வருத்தப்பட்டு முகம் சோர்ந்து இருந்தா பார்க்க நல்லாவா இருக்கு. அது சந்தோசமா இருந்தா தானே நம்மளும் நல்லா இருக்க முடியும்” 
“ப்பா அதெல்லாம் ஒன்னும் இல்லை. எங்களுக்குள்ள என்ன பிரச்சனை இருக்கப் போகுது” என்றவனை ஆழமாய் பார்த்தவர்,
“நான் தூக்கி வளர்த்துனவன் நீ. என்னதான் என்கிட்டயே மறச்சாலும் உன் முகத்தை வெச்சே நான் கண்டுபிடிச்சிருவேன்ப்பா. கொஞ்ச நாளாவே உன்னையும் பல்லவியையும் கவனிச்சுட்டு தான் இருக்கேன். உங்களுக்குள்ள எதோ சரியில்ல. பல்லவி அதை சரிசெய்ய முயற்சிக்குறா.. அப்போ அவகிட்ட பிரச்சனை இல்லை. உங்கிட்ட தான் எதோ இருக்கு” என்று தெளிவாய் அவர் கூற, அதிர்ந்துதான் போனான் ஸ்வரன்.
“உனக்கு தனிப்பட்ட முறைல என்ன பிரச்சனை இருந்தாலும் அதை உங்களுக்கு இடையில கொண்டு வரக் கூடாதுப்பா. எல்லார்த்தையும் விட்டுட்டு உன்ன மட்டுமே நம்பி வந்த பொண்ணு, அதை கண்கலங்காம வெச்சுக்க வேண்டியது உன் பொறுப்பு. உன்னவிட வயசுல சின்னப் பொண்ணு அதுவே தப்பு பண்ணி இருந்தாலும் நீதான் பார்த்து பக்குவமா பார்த்து நடந்துக்கணும்” என்றார்.
ஒரு குடும்பத்தில் பெரியவர்களின் பொறுப்பு எதுவோ அதை செய்திருந்தார் சுந்தரேஸ்வரன். அதற்கு மேலும் அவரிடம் மறைக்கத் தோன்றாது,
“எனக்கும் அனுக்கும் பெரிய பிரச்சனை எதுவும் இல்லைப்பா. இன்னும் ஒரு போன் பண்ணாம இருக்காளேன்னு தான் கோபம். அது அவளைப் பார்த்ததுமே போய்டும். ஆனா என் மன உளைச்சலுக்கு காரணம்..” என்ற ஸ்வரன் ஒரு நொடி இடைவெளி விட்டு   
“வேற யாரா இருக்க முடியும்? உங்களுக்கே தெரியும் ப்பா” என்றபடி அவரைப் பார்த்தான். 
அவன் பார்த்த பார்வையிலேயே சுந்தரேஸ்வரனுக்கு புரிந்து போனது.
 “அம்பிகாவா??”
அவர் உறுதி படுத்திக் கொள்ள ஒருமுறை கேட்க, ஆமாம் என்று மெல்லத் தலையசைத்தான்.
கீதமாகும்….. 

Advertisement