Advertisement

“ஆதி..! நான் எதாவது தப்பு பண்ணிருந்தா அயம் சாரி. எதுவா இருந்தாலும் என்கிட்டே டைரெக்டா சொல்லிருக்கலாம் தானே. அதுக்கு ஏன் சரியா பேசாம இருக்கீங்க? எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. எப்போவும் போல பேசுங்க ஆதி” எனத் திரும்ப லேசாய் அதிர்ந்தாள்.
அவன் எப்போது அங்கிருந்து சென்றான் எனத் தெரியவில்லை. தற்போது அவன் அங்கு இல்லை. அவள் கூறியதை கேட்டானா..? அதற்கு வாய்ப்பில்லாதது போல் தான் பட்டது பல்லவிக்கு.
பின் குளித்துவிட்டு உணவருந்தி வந்தவள் அடுத்து கோவில் சென்று வரலாம் என்று முடிவெடுத்து பிஸ்தா நிறத்தில் ஷர்ட்டும் சந்தன நிறத்தில் பேண்ட்டும் அவனுக்கு எடுத்து வைத்துவிட்டு தனக்கும் தேர்வு செய்து கொண்டிருந்தாள்.
மயில் கழுத்து நிறத்தில் இருந்த புடவையை கையில் எடுக்க, அதற்கு பின் இருக்கும் நினைவுகளை மெல்ல நினைத்துப் பார்த்தாள்.
அன்றொருநாள் ஸ்வரனிடம் கிச்சடி செய்யக் கற்றுக்கொண்ட பல்லவி, இரவு உணவை முடித்துக்கொண்டு சமையல் மேடையை சுத்தம் செய்துவிட்டு தங்களது அறைக்குள் வர, அவளிடம் ஒரு கவரை நீட்டினான் ஸ்வரன்.
அதை வங்கிப் பார்த்தவள் அதிலிருந்த மயில் கழுத்து நிறப் புடவையை ஆசையாய் வருடியபடி நிமிர, மற்றுமொரு கவரை நீட்டினான். அதில் இருந்த சல்வார்களைக் கண்டு கண்கள் விரிய
“இது எல்லாம் எனக்காங்க..?” என,
“இல்ல பக்கத்துக்கு வீட்டுக்காரம்மாக்கு” என்றதில் அவள் கண்களைச் சுருக்க,
“உனக்கு வாங்காம நான் யாருக்கு வாங்குவேன்”என்றதில், அழகாய் [புன்னகைத்தவள்,
“ஆனா இப்போ எதுக்கு இது? தேவையில்லாத செலவு தானே..” என தயக்கமாய் சொல்ல..
“உனக்கு செய்யுறது எல்லாம் என் செலவுக் கணக்குல வராது அனு. சேமிப்புல தான் சேரும்” என்று சொல்லி அவளிடத்திலான அன்பையும் காதலையும் தன் இதயக் கூட்டில் அழகாய் சேமித்தான். அவளுக்கும் சேமிக்கக் கற்றுக் கொடுத்தான். 
இன்றும் அதை நினைத்துப் பார்த்திருக்க, அறைக்குள் ஸ்வரன் நுழைய சிந்தனை கலைந்தவள்
“ஆதி இன்னிக்கு உங்களுக்கு ஏதாவது முக்கியமான வேலை இருக்கா..?” என்றாள்.
‘உன்ன விட முக்கியமா எதுவும் இல்லை’ அப்படி அவன் சொல்லுவான் என எதிர்பார்த்து இருக்க
‘இது உனக்கே கொஞ்சம் அதிகம். உன் ஆத்துக்கார் அப்ஸ்கான்ட் ஆகுறதுக்குள்ள சீக்கிரம் மேட்டருக்கு வா’ என்ற மனசாட்சியை மதித்து
“இல்ல ரொம்ப நாள் ஆச்சில்ல நம்ம வெளிய போய். இன்னிக்கு கோவில் போய்ட்டு வரலாமா” என்று ஆசையாய் வினவ
“நீயும் தாத்தாவும் போய்ட்டு வாங்க எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு” என்றுவிட்டான்.
இதற்குமேலும் அவனை விடுவதாய் இல்லை பல்லவி. அவள் எடுத்து வைத்திருந்த புடவையை அணிந்துகொண்டு கிளம்பித் தயாராகி நேராகப் போய் நின்றாள் சுந்தரேஸ்வரனிடம். 
“என்னம்மா கோவிலுக்கு போறேன்னு சொன்னீங்க இன்னும் கிளம்பலையா..?” என்றார் அவள் முகம் கண்டே அகம் படித்தபடி. 
“இல்லைங்க தாத்தா. அவருக்கு எதோ முக்கியமான வேலையாமா அதனால வரலையாமா..” 
“அப்படியா சொல்லுறான் இரு நான் பேசுறேன்” என ஸ்வரனை அழைக்க அவன் அவரிடமும் அப்படியே கூற,
“வர வர பெரியவங்க சொல்லுக்கு மரியாதையே இல்லமா போய்டுச்சு” என அவர் ஆரம்பிக்க, பல்லவியை பார்த்துக்கொண்டு உள்ளே சென்றவன் அவள் எடுத்து வைத்திருந்த சட்டையையே அணிந்துகொண்டு வந்து வண்டியைக் கிளப்பினான்.
எதோ ஒன்று நடந்து.. அதற்கு இரண்டும் முட்டிக் கொண்டு இருக்கிறது என்பதை அறிந்த சுந்தரேஸ்வரன் அவர்களுக்கிடையில் செல்லக் கூடாதென்று இதுவரை ஒதுங்கியே இருக்கிறார். அவர் இருக்கும் வரை பிரச்சனை பெரிதாக விட மாட்டார். இருந்தும் பல்லவியே பார்த்துக்கொள்வாள் என்ற நம்பிக்கையில் அனைத்தையும் கண்டும் காணாததுபோல் இருக்கிறார் அந்த அனுபவசாலி. 
பல்லவிக்கு ஸ்வரன் தன்னை அழைக்கும் வரை வெளியே செல்லக் கூடாதென்ற எண்ணம். அவள் தாத்தாவோடு உள்ளேயே இருக்க
“அனு சீக்கிரம் வா” என வெளியிலிருந்து குரல் வரவும் தாத்தாவிடம் சொல்லிக்கொண்டு சிட்டாய் பறந்தாள்.
“பல்லவி மா பார்த்து மெதுவா போ” என்ற அவர் குரலைக் கேட்க அவள் அங்கு இல்லை. 
வண்டியில் ஏறியவள், 
“இப்போவும் ஸ்பீட் ப்ரேக்கர் வரும்” என அவன் கேட்காத தகவலை அவனுக்கு அளித்துவிட்டு அவன் தோளை கெட்டியாய் பிடித்துக் கொண்டாள்.
கோவிலும் வந்திருக்க,
“என்னங்க பூ வாங்கிக் குடுங்க” என்று அவனை நகர விடாது பிடித்துக்கொள்ள, மல்லிச் சரத்தை வாங்கியவன்
“வாங்கிக் கொடுத்தா மட்டும் போதுமா இல்ல வெச்சும் விடணுமா” என வழமைக்கு மெல்லத் திரும்ப
‘கோவிலுக்கு வந்ததும் தான் இதுநாள் வரைக்கும் இவரை பிடிச்சிருந்த பேய் பிசாசெல்லாம் விட்டுட்டு ஓடுது போல. இது தெரிஞ்சிருந்தா முன்னாடியே அழச்சிட்டு வந்திருக்கலாம்’ என அவள் எண்ணிக் கொண்டிருக்க,
“ஓய்..! அனு” என அவள் தோளைப் பற்றி அசைத்தான். 
“இட்ஸ் ஓகே நானே வெச்சுக்குறேங்க. உங்களுக்கு ஏன் அந்தக் கஷ்டம். நான் தான் உங்களுக்கு கஷ்டமே கொடுத்தாத வைஃப் ஆச்சே” 
“யாரு நீ? சீக்கிரம் வெச்சுட்டு வா போலாம்” 
மல்லிச் சரத்தை சூடிக்கொண்டவள் அவன் கரத்துடன் தன் கரத்தைக் கோர்க்க, அவனும் அவள் கரத்தை அழுந்தப் பிடித்தபடி உடன் நடக்க, ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவில்லை எனினும் இருவரது இதழ்களும் அழகாய் நெளிந்து விரிந்தது.
‘ச்சே.. இவருக்கு எதோ பிரச்சனை இருக்கு. அது என்னன்னு தான் ஒன்னும் புரியல. என்கிட்டயும் சொல்ல மாட்டிங்குறாரு. அதை முதல்ல சரி பண்ணுனா தான் இவரு ஃப்ரீ ஆவாரு. அதை சரி பண்ணி பழைய ஆதியை நான் பார்க்க எனக்கு உதவி செய்யுங்க காட்’ என இறைவனிடம் வேண்டினாள் பல்லவி.
இறைவனிடத்தில் மனதை செலுத்தி நின்றிருந்தவள் இன்றும் ஆலயமணியின் ஓசையில் கண்திறக்க, அவளது ஆதீஸ்வரனின் கைகள் அவளுக்கு குங்குமம் வைத்துவிடும் வேலையை சரியாகச் செய்தது. 
இதழ்களில் விரிந்த புன்னகையுடன் மீண்டும் அவன் கைக்கோர்த்துக் கொண்டு வந்து பிரகாரத்தில் அமர்ந்தாள்.
மனதில் ஆயிரம் எண்ணங்கள் இருந்தும் பிரசாதம் வழங்கும் இடத்தில் பல்லவியின் பார்வை தவறாது படிய, அதைக் கண்டவன் புன்னகையுடன் எழுந்து அவ்விடம் சென்றான்.
‘பாருடா நம்ம சொல்லாமையே போறாரு. நல்ல இம்ப்ரூவ்மெண்ட் தான்’ என நினைத்தபடி அவள் இருக்க, ஸ்வரன் சென்ற சிறிது நேரத்திலேயே அவளுக்குக் காட்சி கொடுத்தார் அப்பெண்மணி. 
அதே பெண்மணி. திருமணமான அன்று கோவிலில் அவள் சந்தித்த அதே பெண்மணி.
தன்னருகில் ஆள் அரவம் உணர்ந்து பல்லவி நிமிர்ந்து பார்க்க.. அவரைக் கண்டு எழுந்து நின்றாள். அவளை கண்களில் நிரப்பிக் கொண்டவர் 
“நீ ஒருநாள் ஆச்சும் இங்க வர மாட்டியான்னு நான் ஒவ்வொரு நாளும் இங்க வந்து காத்திருக்கேன்” என, பல்லவிக்கு விவரிக்க முடியா ஒரு உணர்வு உள்ளுக்குள் ஓங்கியது. 
சிறிது நேரத்தில் அவ்விடம் திரும்பிய ஸ்வரன், அங்கு பல்லவி இல்லாதது கண்டு பார்வையை சுழற்றியபடி அவளைத் தேடிக்கொண்டு வந்தான். 
அப்பெண்மணி மேலும் பேச ஆரம்பிக்கும் போது,
“என்கிட்ட பேச முயற்சிக்காதீங்க ப்ளீஸ்” என்ற பல்லவியின் குரலில் அவரது முகம் சட்டென மாறியது.
“உங்களோட நான் பேசுறதை அவர் விரும்பல. அவருக்கு விருப்பம் இல்லாததை செய்ய எனக்கும் விருப்பம் இல்லை” என்றதும் இப்போது அவர் கண்களில் சொல்ல முடியாத வலி. 
அவர் கண்களும் லேசாய் கலங்கியிருக்க பல்லவியும் அங்கிருந்து செல்லத் திரும்பியபோது இருவரையும் பார்த்தபடி நின்றிருந்தான் ஆதீஸ்வரன்.
“போலாம் அனு” என்று அவள் கைப்பிடித்து அழைத்துக்கொண்டு அங்கிருந்தவரை ஒரு பார்வை பார்த்துச் சென்றான்.
அவன் பார்வை எதை உணர்த்தியதோ கூனிக் குறுகிப்போய் நின்றிருந்தார் அப்பெண்மணி.
அவன் வண்டியைக் கிளப்பிக்கொண்டு அமைதியாய் வர
“ஆதி.! அது வந்து.. நான் பேசல.. அவங்க..” என்று பல்லவி எதையோ விளக்க முற்பட, வண்டியை ஓரமாய் நிறுத்தியவன் சைட் மிரரில் அவள் முகம் பார்த்தான். கொஞ்சம் படபடப்பாய் தான் இருந்தாள்.
“அனு கொஞ்சம் கீழ இறங்கு” என்றான்.
கோபத்தில் நடு ரோடென்றும் பாராமல் தன்னை விட்டுச் செல்லைப் போகிறான் என்று எண்ணியவள் விரைந்து குதித்து இறங்கி அவன் பக்கம் வந்து நின்று அவனைக் காண
“ஏன் இப்படி பயப்படுற அனு..?” என்றான்.
“இல்லை நீங்க எப்போ எப்படி இருகீங்கன்னே தெரிய மாட்டிது. மேரேஜ் அன்னிக்கும் கோவில்ல என்மேல ரொம்ப கோவமா இருந்தீங்க. அதுக்கப்பறம் நல்லா தான் இருந்தீங்க. நடுவுல உங்களுக்கு ஏதோ ஆயிருச்சு. இன்னிக்கும் ஒருமாறி இருக்கீங்க. என்னையும் பிடிச்சு இழுத்திட்டு வந்துட்டீங்க. நீங்க இழுத்ததுல எனக்கு கையே வலிக்குது. நான் என்ன பண்ணுனேன்? எதுக்கு என்மேல கோபமா இருக்கீங்க..? இதுவே முதல்ல மாறி இருந்திருந்தா கோபத்துல நானும் வேற மாதிரி நடந்திருப்பேன். ஆனா இப்போ எல்லாம் எனக்கு கோபமே வர மாட்டிது. நீங்க பேசாம இருக்குறது ரொம்ப கஷ்டமா இருக்கு ஆதி. நான் தெரியாம எதாவது பண்ணிருந்தாலும் அம் சாரி ஃபார் தட்” என்றாள் கையை நீவியபடி. 
அவ்வளவு வலிக்கவில்லை தான். சொல்லப்போனால் வலிக்கவே இல்லை தான். வேறெதுவும் பேசிப் பெரிதாகும்முன் இதை பெரிதாக்கி விடுவோம் என்று கையை நீவிக் கொண்டிருந்தாள். 
உடனே அவள் கையைப் பிடித்து ஆராய்ந்தான். அப்படி ஒன்றும் தெரியவில்லை. இருந்தால் தானே தெரிவதற்கு.! எங்கு கண்டுபிடித்துவிடப் போகிறானோ என்ற பயத்தில்
“ஐயோ அம்மா கைய விடுங்க எனக்கு வலிக்குது” என்று உருவிக் கொண்டாள்.
“சாரி அனு”  என்றான் அனைத்திற்கும். 
அது அனைத்திற்கும் என்று அவளுக்கும் தெரியும். இருந்தும் தன் கைவலி நாடகத்தைத் தொடர, அவன் அவள் கையை எடுத்து தன் அதரத்திக்கு அருகே வைத்து மெல்ல ஊத, அவன் ஒவ்வொரு முறை ஊதும்போதும் காற்றின் ஓசையோடு சத்தமில்லாத முத்தமும் அவன் மீசையின் குறுகுறுப்பும் அவளை நெளியச் செய்ய,
‘இந்த அன்பை எல்லாம் இத்தனை நாள் எங்கதான் ஒளிச்சு வெச்சிருந்தீங்க மிஸ்டர். புருஷ்’ எனப் பார்த்திருந்தாள்.
“சரி சரி மன்னிச்சுட்டேன். டோன்ட் டச்” என்று மெல்ல கையை விலக்கிக்கொள்ள, அவன் புன்னகைத்தபடியே வண்டியைக் கிளப்ப, அவளும் பின்னால் ஏறிக்கொண்டாள்.
“ஆதி.! நமக்குள்ள என்ன ப்ராப்லெம்னாலும் அதைய காரணம் காட்டி ரெண்று பேரும் பேசாம இருக்கக் கூடாதுன்னு அக்ரிமெண்ட்ல ஒரு லைன் சேர்த்துக்கலாமா” என்றாள் மெல்ல.
கொஞ்சம் அல்ல அதிகமாகவே அவளை பாதித்திருக்கிறது அவனது மௌனம். அதை அறிந்தவன்
“கிராண்டட்” என்றதும் அழகிய புன்னகை அவள் இதழ்களில் வந்து ஒட்டிக் கொண்டது.
இத்தனை நாட்களில் சிலநேரம் பட்டும் படாமல் பேசியும், பலநேரம் பேசாமலும் இருந்து, இருவரும் ஒருவரை ஒருவர் தண்டித்துக் கொண்டு நிம்மதியை இழந்ததே போதும், இனி இப்படி ஒரு சூழல் உருவாகாது பார்த்துக்கொள்ள வேண்டும் என இருவருமே நினைத்தனர்.
பகிர விரும்பாத அவளது புத்தகத்தின் பக்கங்களை எல்லாம் ஸ்வரனிடம் பகிர நினைத்தாள் பல்லவி. 
புரட்ட விரும்பாத அவனது புத்தகத்தின் பக்கங்களை எல்லாம் பல்லவிக்கு புரட்டிக் காண்பிக்க நினைத்தான் ஸ்வரன். 
மேலிருப்பவனோ அனைத்திற்கும் மாறாக நினைக்கும் பட்சத்தில்.. நாம் நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்..?? 
 
கீதமாகும்….

Advertisement