Advertisement

ஓம் ஏறு மயிலூர்ந்தாய் போற்றி!!
8
எண்ணங்கள் எல்லாம் எங்கோ இருக்க.. பல்லவிக்கு ஸ்வரனின் நினைவெல்லாம் இல்லவே இல்லை.
அவளுக்காக காத்திருக்கும் கணவனின் நினைவு கூட தன் நெஞ்சில் நிலவிய கனத்தினால் வரவில்லை. அவளை சுமந்து வந்த பேருந்தில் அகத்தினில் கூடிய சுமையோடு தான் அவளது பயணம் தொடர்ந்தது.
அப்பேருந்தின் ஓட்டுனரோ தன்னருகில் நின்றிருந்த பெண்ணை நொடிக்கு ஒருமுறை காண்பதும் கண்ணடிப்பதுமாய் இருக்க, அவன் செய்துகொண்டிருந்த மாட்டமான வேலையை எதேர்ச்சியாய் கவனித்த பல்லவிக்கு உள்ளுக்குள் பற்றிக் கொண்டு வந்தது. 
“உங்க வயசென்ன நீங்க பண்ணுற காரியம் என்ன? உங்க பொண்ணு வயசு இருக்கும் அதுகிட்ட போய் இப்படி நடந்துக்குறீங்க” என குரல் கொடுக்க
“நானும் அப்போல இருந்து பார்த்துட்டு இருக்கேன் இந்தாளு ரோட்டை பார்த்தே ஒழுங்கா வண்டி ஓட்ட மாட்டிங்குறான்” 
“அங்கயும் இங்கயும் புள்ளைகள சைட் அடிச்சிட்டு பஸ்ஸ கொண்டுபோய் எங்காவது புளியமரத்துல விட்டுறாதய்யா” 
“இதுமாதிரி ஆளுகள மேலிடத்துல புகார் கொடுத்து வேலைய விட்டு தூக்கணும்” 
என பேருந்தில் இருந்த மகளிர் அணி ஒன்றுகூட, அதன்பின் ஓட்டுனர் சாலையில் இருந்து பார்வையை எடுக்கவே இல்லை.
நிகழ்காலம் வந்த பல்லவிக்கு ஸ்வரனது நினைவுகளும் வர.. அலைபேசியை எடுத்தாள் அவனுக்கு அழைத்துவிடும் எண்ணம் கொண்டு..!
அது அணைந்து போய் கிடக்க.. அவளுடைய நிறுத்தமும் அருகினில் வந்துவிட.. வீடு போய் விடுவோமே என எளிதாய் விட்டுவிட்டாள்.
அவள் இருந்த பேருந்து ஊர்ந்து ஊர் வந்து சேர, இறங்குவதற்காக எழுந்தவள் எட்டாத கம்பியை எட்டிப் பிடித்துக்கொண்டு நின்றிருக்க, அவள் கைப்பேசி இசைத்ததிலும் ஹாரன் சத்தத்திலும் டிரைவர் அடித்த சடன் ப்ரேக்கிலும் கைநழுவி போனை கீழே தவற விட்டிருந்தாள். 
பதறிப்போய் போனை கையில் எடுத்தவள் டிஸ்ப்ளேயில் விரிசல் விழுந்திருப்பது கண்டு எரிச்சலில், 
“யோவ் சொட்ட சொல்லிட்டு ப்ரேக் அடிக்க மாட்ட” என அவனிடம் பாய,
கொஞ்சம் விட்டிருந்தால் தாய்மார்களிடம் தர்ம அடி வாங்கித் தந்திருப்பாள் என்ற எரிச்சலில் இருந்த அவனோ, 
“ஆமா உங்கிட்ட சொல்லிட்டு ப்ரேக் அடிக்க உங்கொப்பன் வீட்டு பஸ் பாரு.. இறங்கித்தொல முதல்ல” என்று அவளுக்குமேல் பாய்ந்தான். 
பல்லவியும் பதிலுக்கு அவனைப் பொறிந்துகொண்டே கீழே இறங்கினாள். இறங்கிய பின்னரும் கூட பேருந்து நகரும்வரை நின்று ட்ரைவரை முறைத்துவிட்டுத் திரும்ப, அங்கு அவளை முறைத்துக் கொண்டிருந்தான் ஸ்வரன். 
அவளோடு எதுவும் பேசாது வண்டியை உதைத்துக் கிளப்பி உறுமவிட, 
‘இவரு ஏன் இந்த உறுமு உறுமுறாரு..?’ என அவனை உற்றுப் பார்த்துக்கொண்டே அருகில் வந்தவள் 
“என்னை கூட்டிட்டு போகவா வந்தீங்க?” என,
அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு இல்லை என்று தலையசைத்தவன், அவளுக்கும் பின்னால் வந்துகொண்டிருக்கும் பாட்டியை கண்களால் காண்பித்து
“அவங்களை” என்றான்.
“ஓஹ்..!” என்றுவிட்டு பல்லவி முன்னால் நடக்க, வண்டியை அவள் அருகே ஓட்டி வந்தவன், 
“வண்டில ஏறு அனு” என்றான் ஆக்சலரேட்டரை முறுக்கிக்கொண்டே. 
அவளுக்குமே சோர்வாய் இருக்க, அவனோடு வம்பு வளர்க்காது அமைதியாய் சென்று வண்டியில் ஏறிக்கொண்டாள். சிறிது நேர மௌனத்திற்கு பின், 
“ஏன் இவ்வளவு லேட்..?” என்று சைட் மிரரில் அவளைப் பார்த்துக் கொண்டே ஸ்வரன் கேட்க,
“அது.. ஆபிஸ்ல கொஞ்சம் வொர்க் அதிகமா இருந்துது..” என்றாள் தயங்கியவாறே.
அவன் அலுவலகத்தில் சென்று பார்த்துவிட்டுத் திரும்புவது அறியாமல் பொய் உரைத்தாள். இல்லை இல்லை உண்மையை மறைத்தாள் என்பது சரி. 
“உனக்கு மட்டுமா??” என்ற அவனது குரலில், உடனே அவனைப் பார்த்தாள். முகத்தில் என்ன பாவனை என்று பின்னாலிருந்து ஒன்றும் தெரியவில்லை. பல்லவி பதிலளிக்காது அமைதியாய் வர,
“வர லேட் ஆகும்னு ஒரு இன்பர்மேசன் கூட கொடுக்க முடியாத அளவுக்கு அவ்வளவு முக்கியமான வேலையா..?” என ஸ்வரன் அடுத்த கேள்வியை முன்வைத்தான்.
ஏனோ அப்போதிருந்த மனநிலையிலும், உடல் சோர்விலும், சரணை பார்க்க முடியாத வருத்தத்திலும், டிரைவரிடம் வாங்கிக் கட்டியதாலும் பல்லவியால் அவன் கேள்விக்கெல்லாம் பொறுமையாய் பதிலளிக்க முடியவில்லை. பதிலுக்கு பதிலாக அவனிடம் குரலை உயர்த்தினாள்.
“ச்சே.. என்ன பிரச்சனை உங்களுக்கு? அதான் இப்போ வந்துட்டேன்ல…” என்றவள் அதோடு நிறுத்தி இருக்கலாம்
“நான் என்ன ஓடியா போய்டேன்..?” என்றிருந்தாள் ஒரு வேகத்தில்.
அவளது வார்த்தைப் பிரயோகத்தில் அவன் உடல் இறுகிப் போய் பிரேக்கை அழுத்திப் பிடித்திருந்தான்.
அதில் அவன் மேல் வந்து மோதியவள் அவனைப் பார்த்துக் கொண்டே நிமிர்ந்து அமர, அதன்பின் வண்டியைக் கிளப்பியவனின் அதீத வேகமே அவன் மனநிலையை எடுத்துக்காட்டியது. 
கொட்டிய வார்த்தைகளை அள்ள முடியாதென்று அறிந்திருந்தும் ஒரு வேகத்தில் அவளறியாமலே அதைக் கூறிவிட்டிருந்தாள். அவளுக்கு அது வெறும் வார்த்தை ஆனால் அவனுக்கு..? 
அவன் வண்டியை செலுத்திய வேகத்தில், வீடு வரும்வரை வாய்திறக்கவில்லை பல்லவி.
“நேரம் ஆகிடுச்சா பல்லவி மா..?” என்றபடி வெளியில் நின்றிருந்த சுந்தரேஸ்வரன் கேட்கவும் தான்
“ஆமாங்க தாத்தா. இன்னைக்கு மட்டும் தான், இனிமேல் எப்போவும் போல வந்திடுவேன்” என பதிலளித்தவள் அவரையும் அழைத்துக்கொண்டு உள்ளே வந்தாள். 
ஸ்வரனின் முகமாற்றத்தை கவனித்து தான் இருந்தார் அவரும். இருவருக்குள்ளும் எதோ நடந்திருக்கிறது என்பதை ஊகிக்க முடிந்தது அந்த அனுபவசாலியால்.
சிறிது நேரத்தில் ரெப்ரெஷ் செய்துகொண்டு வந்த பல்லவி அமைதியாய் அவள் வேலையைப் பார்க்க.. ஸ்வரனும் அமைதியாய் இருக்க.. சுந்தரேஸ்வரன் இருவரையும் உன்னிப்பாய் கவனித்துக் கொண்டிருந்தார். எதேர்ச்சியாய் தாத்தாவை கவனித்த இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
அக்ரிமென்ட் நினைவு வர, பின் நேரத்தைப் பார்த்த பல்லவி சமையலை கையில் எடுக்க முடிவு செய்ய.. தாத்தாவின் கண்கள் இப்போது  பல்லவியிடமே.
“பல்லவி மா..” என்று ஆரம்பித்து “நான் சமைக்குறேன்” என்று முடிக்க
“அதெல்லாம் வேண்டாம்.  நீங்க பேசாம இருங்க. இன்னைக்கு நான் தான் தனியா சமைப்பேன்” என்றுவிட்டு உள்ளே சென்றுகொண்டாள்.
இவர்களை வெளியே காக்க வைத்துவிட்டு உள்ளே சென்றவள் வெகுநேரம் ஆகியும் வெளியில் வந்த பாடில்லை. இன்றும் சம்பா ரவை தான் என்று சுந்தரேஸ்வரன் நினைத்திருக்க, ஆனால் அவர் நினைத்ததிற்கு மாறாய் சப்பாத்தி செய்து எடுத்து வந்து அசத்தியிருந்தாள் பல்லவி. 
அவளது சரிபாதியுடனான சின்ன சண்டைக்கு சமாதானமாய் சப்பாத்தியையும் சால்னாவையும் முன்வைத்திருந்தாள். அவளைப் பொறுத்தவரை அது சிறிய விஷயம். ஆனால் அவனுக்கு..???
அதை அறியாது அவனுக்காக பார்த்துப் பார்த்து சமைத்திருக்க, அவன் ஒரு பதிலும் இன்றி கல்லை விழுங்குவதுபோல் இறுக்கமாய் அமர்ந்திருந்தான்.
“பல்லவி அருமையா இருக்கு மா..” என்று வெகுவாய் பாராட்டினார் சுந்தரேஸ்வரன்.
அவள் புன்சிரிப்பை உதிர்த்துவிட்டு ஸ்வரனையே பார்க்க, அவன் கையும் வாயும் அதன் வேலையை சரிவர பார்த்துக் கொண்டிருந்தது அங்கு. பல்லவியின் பார்வை அறிந்த சுந்தரேஸ்வரன்,
“என்னப்பா நீ எதுவும் சொல்ல மாட்டிங்குற” என்று கேட்கவும் தான்
“நல்லா இருக்கு ப்பா. ரொம்ப நல்லா சமைச்சிருக்கா” என்றுவிட்டு அவளைப் பார்க்க, அதை ஏன் இப்படி முகத்தை வைத்துக் கொண்டு சொல்கிறான் எனப் பார்த்திருந்தாள்.
ஸ்வரன் சரியாக உண்ணாததுபோல் தான் பட்டது பல்லவிக்கு. பிறகு பேசிக்கொள்வோம் என்று அமைதியாய் இருந்தவள், முதலில் அவர்களுக்கு பரிமாறிவிட்டு அவளும் உண்டுவிட்டு சமையல் மேடையை சுத்தம் செய்துவிட்டு அவள் அறைக்குள் நுழைந்தாள். 
அங்கு அவள் கண்ட காட்சியில் உள்ளுக்குள் பெரிதாய் அதிர்ந்துபோனாள். 
இருவருக்கும் இடையில் ஒன்றல்ல.. இரண்டல்ல.. மொத்தம் மூன்று தலையணைகள் இந்தியா பாகிஸ்தான் பார்டரை வகுத்திருந்தது. இத்தனை நாள் அவள் தான் வகுத்திருந்தாள் ஆனால் இம்முறை பார்டரை ஸ்வரன் வகுத்திருந்தது தான் அவள் அதிர்ச்சிக்குக் காரணம்.
ஆக தன் மீது இன்னும் கோபத்தில் தான் இருக்கிறான். தாத்தாவிற்காக தான் அவர் முன்னிலையில் எதையும் வெளிக்காண்பிக்காது பேசியிருக்கிறான் என்று அறிந்தவள் அறையின் விளக்கை அணைத்துவிட்டு வந்து அவன் புறம் பாராது திரும்பிப் படுத்துக் கொண்டாள். 
அவனாக பேசட்டும் என அவனும், அவளாக பேசட்டும் என அவனும் காத்திருந்து காத்திருந்து கடைசியில் நித்ரா தேவி அவர்களை பேசவிடாது செய்ததில் இருவரும் தூங்கிப் போயிருந்தனர். 
இது அன்றோடு முடியும் என்று நினைத்தால் வந்த நாட்களும் தொடர்ந்தது அந்தப் பனிப்போர். சுந்தரேஸ்வரனின் முன்னிலையில் மட்டும் ஓரிரு வார்த்தை பேசிக்கொள்வது மற்ற நேரத்தில் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே பேசாது மௌனம் காப்பது என்றாகிப்போனது. 
‘அப்படி என்ன தவறு செய்தோம்’ என்று நினைத்த பல்லவி அதை அவனிடம் கேட்கவேயில்லை. 
கேட்டிருந்தால் அவன் மனதை அவளிடம் கொட்டியிருப்பானோ என்னவோ..?
ஈகோ முடியும் இடத்தில் தான் இனிய இல்லறத்திற்கான துவக்கம் இருக்கும் என்று அவர்களுக்குத் தெரிவிக்க காலமும் நேரமும் கைக்கோர்த்து கண்சிமிட்டிக் காத்திருந்தது.
அந்த வாரம் முழுதும் பல்லவிக்கு அவள் அலுவலகத்தில் அதிக வேலை.. கால நேரமின்றி வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். 
அதற்கு அடுத்த வாரத்திலோ பெரிய காண்ட்ராக்ட் ஒன்றை கையில் எடுத்திருந்தான் ஸ்வரன். முக்கியப் புள்ளியான அரசியல்வாதி ஒருவரின் நிகழ்ச்சிக்கானது அது. அதை சரியாக செய்து முடிக்கும் வேலையில் அவன் தீவிரமாய் ஈடுபட்டிருந்தான். இருவருக்கும் மாற்றி மாற்றி வேலைப்பளு இருந்தமையால் சரிவர பேசிக்கொள்ளவும் முடியாமல் போனது. 
ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்காமல் கடமைக்கு பேசி காலத்தை கடக்கும் போது, உடைந்த கண்ணாடி போல் ஆனது பல்லவியின் உள்ளம். ஸ்வரனிற்கு எப்படியோ ஆனால் பல்லவியால் இப்படியே நாட்களை நீட்டிக்க முடியவில்லை. அதை அவளும் விரும்பவில்லை. 
முன்பிருந்தே அளவோடு பேசிப் பழகியிருந்தால் ஸ்வரனது இந்தப் பாராமுகம் பெரிதாய் தோன்றியிருக்காது. ஆனால் ஒரு நொடி கூட அவளை தனித்து விடாது மௌனம் என்னும் அணிகலனையே அவள் அணியவிடாது இருந்தவன் இப்போது அவனும் அணிந்துகொண்டு அவளுக்கும் அதை அணிவித்ததைத் தான் அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
இதற்கிடையில் விரதம் என்னும் பெயரில் சாப்பிடாது இருந்து அவனிடம் சமாதானத்தை எதிர்பார்த்தாள். அவன் கவனிக்கவில்லை என்றதும் உடனே அதை சுந்தரேஸ்வரனின் கவனத்தில் வைத்து அவர்மூலம் அவன் கவனத்திற்கு கொண்டு செல்ல, அப்போது அவனோ
“விடுங்க ப்பா.. பசிச்சா அவளே சாப்பிடுவா” என்றுவிட்டுச் செல்லவும் பல்லவிக்கு அது பேரதிர்ச்சியாய் இருந்தது. அன்றே தனக்குப் பயனளிக்காத தன் உண்ணா நோன்பை முடித்துக் கொண்டாள். 
நன்றாய் சென்றுகொண்டிருந்த தன் வாழ்வில் குறுக்கே வந்த மணல் லாரியை வலை வீசித் தேடிக் கொண்டிருந்தாள். அது அவளே அவளுக்கு வைத்துக் கொண்ட சூனியம் என்பதை யார் சொல்ல அவளிடம்? 
இந்த வார விடுமுறையில் இருவருக்கும் இடையில் ஓடிக்கொண்டிருக்கும் பனிப்போருக்கு ஒரு முடிவு கட்டக் காத்திருந்தாள் அனுபலல்வி. 
அவள் எதிர்பார்த்துக் காத்திருந்த நாளும் வந்தே வந்தது. அன்று வார விடுமுறை என்பதால் அன்றைய நாள் தாமதமாய் எழுந்தவள் ஸ்வரனைத் தேட, அவனோ அவளுக்கு முன்னரே எழுந்து சென்றிருந்தான். 
ரெப்ரெஷ் செய்துவிட்டு சமையலறைக்குள் நுழைய காஃபியின் மணம் நாசியை நிரப்பியது. 
கண்கள் ஸ்வரனைத் தேட, வெளியே யாருடனோ பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது. அடுத்து அவள் கண்களில் பட்டது அவன் பாதி குடித்து வைத்திருந்த காஃபி கப். மெல்ல அடிவைத்து அருகில் சென்றவள் காஃபி கப்பை கையில் எடுத்துக்கொண்டாள்.
முன்பொருநாள் அவள் பருகியதை அவன் வாங்கியது நினைவு வர, லேசாய் புன்னகைத்துக் கொண்டாள். 
காஃபியை ஒவ்வொரு சிப்பாய் ரசித்துப் பருகியவள் அப்படியே மெல்லத் திரும்ப, சுவரில் கைகட்டிக் கொண்டு அவளையே பார்த்தபடி நின்றிருந்தான் ஸ்வரன்.
கடைசி சிப்பில் புரை ஏற வேகமாய் மறுபுறம் திரும்பிக் கொண்டாள். 
சில நொடி மௌனம். அதற்கு முன்னும் மௌனம் தான். முன்னும் பின்னும் இருந்த மௌனத்தை உடைக்க பல்லவியே முயன்றாள். 

Advertisement