Advertisement

ஸ்வரன் கூறியது போல தன் சாகசக்காரி காஸ்ட்யூமை கழற்றிவிட்டு, தான் சமைத்ததை எடுத்துக் கொண்டு வெளியே வந்த பல்லவி சுந்தரேஸ்வரனைப் பார்க்க, அவரும் பிரமாதமாய் எதையோ சமைத்து எடுத்து வந்திருக்கிறாள் என நினைத்து மூடி வைத்திருந்த ஹாட்கேசையே பார்த்திருந்தார்.
“டன் டடைன்..” என வாயில் மியூசிக் போட்டபடி மூடியிருந்த தட்டை பல்லவி விலக்க, அதைக் கண்டு சுந்தரேஸ்வரன் தான் வாயடைத்துப் போய்விட்டார். 
மயில் மார்க் சம்பாரவை அனுபல்லவியின் பதத்தில் பரிமாறப் பட்டது. 
“எப்படி இருக்குங்க தாத்தா?” அவள் ஆர்வமாய் வினவ,
“ரொம்ப நல்லா இருக்கு மா.. நீ ஸ்வரனுக்கு பரிமாறு மா எனக்கு நான் போட்டுக்குறேன்” என்று புன்னகைக்க முயன்றார்.
ஸ்வரன் தாத்தாவின் முகபாவனையில் சிரித்தே விட்டான். அவருக்கு அது சுத்தமாய் பிடிக்காது என்று தெரியும். எப்படியோ அவர்களோடு அமர்ந்து கஷ்டப்பட்டு ஒருவழியாக சாப்பிட்டுவிட்டு நகர்ந்தார் சுந்தரேஸ்வரன். அவரையே உற்றுப் பார்த்திருந்த பல்லவி அவர் சென்றதும்,
“ஏன் தாத்தா ஒருமாதிரி சோகமா போறாரு” என ஸ்வரனிடம் கேட்டுவைக்க
“அவருக்கு ரவை பிடிக்காது அனு” என்றான்.
“அவருக்கு பிடிக்காதுன்னு முதல்லையே சொல்லுறது இல்லையா நீங்க? ச்சே.. பாவம் தாத்தா. நாம வேற எதாவது செஞ்சிருக்கலாம்”
“வாய்க்கு ருசி பார்த்து சாப்பிடக்கூடாது அனு. உடம்புக்கு எது நல்லதுன்னு பார்த்து தான் சாப்பிடணும்”
“பரவால்ல நாளைக்கு மூணு வேளையும் தாத்தாக்கு பிடிச்சது மட்டும் தான் சமைக்கணும்”
“யாரு சமைக்கப் போறா..? நீயா..?” என அவளை நிமிர்ந்து ஒரு பார்வை பார்க்க
“ச்சே ச்சே நீங்க தான்” என்று கூறிய மறுநொடி, அவன் வேகமாய் எழுவது கண்டு பல்லவி அங்கிருந்து தப்பித்து சமையல் கட்டை நோக்கி தன் ஒலிம்பிக் ஓட்டத்தை ஆரம்பிக்க, இறுதியில் என்னவோ அவன் கைச்சிறைக்குள் தான் சிக்கியிருந்தாள்.  
இப்படியே சின்ன சீண்டல்களும் செல்ல சண்டைகளுமாய் வந்த நாட்கள் எல்லாம் வசந்த மழை பொழிய, மாலைப் பொழுதானால் கலகலப்பும் கலவரமுமாய் அவர்களது சமையல் லீலைகள் தொடர, பல்லவி அவ்வளவு அழகாய் அச்சிறு கூட்டிற்குள் தன்னைப் பொருத்திக் கொண்டாள். 
இருவருக்கும் இருந்த இடைவெளி குறைந்து கொண்டே வர, அவள் இதயக் கூட்டில் தனக்கான இடத்தை ஆழப்படுத்திக் கொண்டே சென்றான் ஸ்வரன்.
வழமையாய் என்றும்போல் அதிகாலையில் எழுந்து வாசல் பெருக்கி, தனக்குத் தெரிந்த வாக்கில் கோலமிட்டு, பின் சுந்தரேஸ்வரனிற்கு தேநீர் கலந்து கொடுத்து தானும் சென்று குளித்து முடித்து வந்த பல்லவி, அடுத்து ஸ்வரனை எழுப்பிவிட்டு அவனுக்கு தேநீர் கலந்து கொடுத்துவிட்டு சமையலை கவனிக்க ஆரம்பித்தாள்.
இட்லியை மட்டும் ஊற்றியவள் சுந்தரேஸ்வரனிடம் கேட்டு வல்லாரை சட்னியை அரைத்து எடுத்து வைத்துவிட்டு அவள் அறைக்குள் செல்ல, ஸ்வரனும் குளித்து முடித்து தன் ஈரத்தலையை துவட்டியபடி வர, அவனையே கண் எடுக்காது பார்த்திருந்தாள்.
“என்ன மேடம் தைரியமா உள்ள இருக்கீங்க..?” என்றான் அவள் பார்வை அறிந்து.
“ஏன் எனக்கென்ன பயம்?”
“அதானே உனக்கு என்ன பயம். அதுவும் நான் இருக்கும்போது” என்றதும் அவளிடம் அழகிய புன்னகை.
“இருந்தாலும் நான் சட்டை போடலையே அனு” என தன் ஈரக் கேசத்தைக் கோதியபடி அவள் முன் வர, அதிலிருந்து சில நீர் திவலைகள் அவள் மேல் வந்து விழ, அதைத் துடைத்தபடி
“பனியன் கூடத்தான் போடல” என்றாள் அவளும்.
“இது அனு தானே???” 
“உங்க அனுவே தான்” என்று சொல்லி அவனை உச்சி குளிரச் செய்தவள் அடுத்து 
“உங்க ஆர்ம்ஸ் சூப்பர்ங்க” என்றாள். 
‘இவ்வளவு நாள் இது உன் கண்ணுக்குத் தெரியலையா’ என்று நினைத்தவனுக்கு
‘டேய் இப்போவாச்சும் பார்க்கிறாளேன்னு சந்தோசப் பட்டுக்கோ’ என்ற மனதின் குரல் கேட்க, இத்தனை நாட்களில் நல்ல முன்னேற்றம் தான் என மனையாளைப் பார்த்திருந்தவன், 
“தேங்க்ஸ் அனு” என்றான் ஆண்கள் வெக்கப்படும் தருணத்தில் நின்றபடி.
“நான் தொட்டு பார்க்கவாங்க..?”
“வா வா இதுக்கெல்லாம் கேட்டுட்டா இருப்பாங்க” என்றதும் ஆட்டோவில் ஹாரன் அமுக்குவதுபோல் அவன் ஆர்ம்ஸை அழுத்திப் பார்த்தாள்.
“எப்படி ஸ்ட்ராங்கா..??” என்றான் அவளிடம் புருவம் உயர்த்தி.
“எல்லாருக்கும் இப்படி தான் இருக்கும். இதுல நீங்க மட்டும் என்ன ஸ்ட்ராங்?” 
“நீ எத்தனை பேரோட ஆர்ம்ஸ இப்படி அழுத்திப் பார்த்த..?” என்று கேட்டு, அவள் முறைப்பில் அமைதியானவன் 
“உனக்கு ப்ரூவ் பண்ணிக் காட்டவா” என்றதும் அவன் செய்யப் போவது தெரியாது உற்சாகமாய் தலையை ஆட்டினாள். உடனே அவளை அப்படியே தூக்கிச் சுற்ற, 
“ஐயோ ஆதி விடுங்க” என கலகலவென சிரித்தபடி அவன் கழுத்தில் மாலைபோல் கைக்கோர்த்துக்கொண்டு அவனைப் பார்த்தாள். மெல்ல அவளை கீழே இறக்கியவன்
“இப்போ நம்புறையா” என்றான்.
“நான் ஒன்னும் அவ்வளவு கணம் இல்லை. என்னை தூக்கி சுத்திட்டா இவரு ஸ்ட்ராங்காமா.. வாங்க சாப்பிடலாம்” என்று அழைக்க,
“நம்பு அனு நீ அரிசி மூட்டை மாதிரி தான் இருந்த” என்று சொல்லவும் தலையனையை அவன் மீது வீசிச் சென்றிருந்தாள்.
தாலி மட்டுமே திருமணப் பிணைப்பை தீர்மானித்து விடுவதில்லை. தினம் தினம் நிகழும் அன்புப் பரிமாற்றங்கள் தான் ஆயுள் முழுதும் பிணைப்புடன் இருக்கச் செய்கிறது. அப்படியான பிணைப்பு நாளுக்கு நாள் அவர்களுக்குள்ளும் அதிகரித்துக் கொண்டிருந்தது.
இரு இதயம் இணைந்து இருந்தும் இல்லறத்தின் முக்கிய அத்தியாயமானது மட்டும் இதுவரையில் இருவராலும் துவங்கப் படாதிருக்க, துவங்க ஏதோ ஒன்று இருவருக்கு இடையிலும் தடையாய் இருக்க, இனிய இல்லறத்தை முழுமை பெற்ற நல்லறமாய் மாற்றியமைக்க காலம் கையிலெடுத்தது..?? 
ஸ்வரபல்லவியின் கருப்புப் பக்கங்கள்.. 
விதியாடும் விளையாட்டில் அனைவரும் ஆட்டுவிக்கப்படுகிற பொம்மைகளே. அவர்கள் மறக்க நினைத்த கருப்புப் பக்கங்களைக் கடந்து புதுக்காவியம் படைப்பார்கள் என்ற நம்பிக்கையில் காலம் மெல்லக் கனிந்தது.
அன்றைய நாள் அலுவலகம் முடிந்ததும் பல்லவி சென்று நின்ற இடம்..
அன்பு அறக்கட்டளை..
‘அன்பு அறக்கட்டளை’ என்ற அறிவிப்புப் பலகை தாங்கி நின்ற பெரிய கட்டிடம் அது. இயற்கைக்கு பஞ்சமில்லாத வகையில் சுற்றிலும் தாழ்வாரங்கள் தாங்கி நிற்க, சில நல்லுள்ளங்களின் ஆதரவால் ஆதரவற்றோரைத் தாங்கி நிற்கிறது அக்கட்டிடம். அங்குதான் வந்திருந்தாள் பல்லவி. 
“வா பல்லவி” 
பல்லவியைப் பார்த்து புன்னகைத்தார் ரஞ்சிதா. 
ரஞ்சிதா சீதாராமன்..! அன்பு அறக்கட்டளையின் தலைமை நிர்வாகி. 
பதிலுக்குப் புன்னகைத்த பல்லவியிடம் தெரிந்த வித்தியாசத்தை ஆராய்ந்தவர்,
“வாழ்த்துகள் மா” என்று தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்த
“தேங்க்ஸ் மேடம். சடென் மேரேஜ், என் சிச்சுவேஷன் அப்படி.. அதான் யாரையும் கூப்பிட முடியல..” என்று தயக்கத்தோடு தன் புறத்தை விளக்கினாள்.
“அதனால என்ன பல்லவி, இதை தான் நேர்ல சொல்லணும்ன்னு இருந்தயா? இந்த நல்ல விசயத்தை நீ அன்னைக்கே சொல்லி இருக்கலாம் மா.. என்னை கூப்பிடலைன்னா பரவால்ல ஆனா நாளபின்ன அவனுக்கு விஷயம் தெரிய வரும்போது இதுக்கும் சேர்த்து நீதான் பதில் சொல்லவேண்டி வரும். அப்போ என் உதவிய எதிர்ப்பார்த்துடாத” என்று புன்னகைக்க, ஒரு கசந்த முறுவல் அவளிடம்.
“அவனை நான் இப்போ பார்க்கலாமா மேடம்?”
“ஒரு நிமிஷம் இரு பல்லவி” என்ற ரஞ்சிதா டெலிபோனில் ஒரு எண்ணை அழுத்தி காதில் வைக்க அவரையே பார்த்திருந்தாள் பல்லவி.
“சரண்..” 
ரஞ்சிதாவின் அழைப்பில் பல்லவிக்கும் அப்பெயரைச் சொல்லி அழைக்க வேண்டும் போல் இருந்தது. அலைபேசியை அவரிடமிருந்து வாங்கிப் பேசவேண்டும் போல் இருந்தது. அந்த நாள் வெகுதொலைவில் இல்லை. ஆனால் யாரந்த தூரத்தைக் குறைப்பது?? காலம் மட்டுமே தன் கடமையை ஆற்றவேண்டும்.
அலைபேசியை வைத்த ரஞ்சிதா,
“சாரி பல்லவி இப்போ பார்க்க முடியாது” என்றுவிட, அதில் வருத்தம் இருந்தாலும்  
“பரவாயில்ல மேடம். நான் இன்னொருநாள் வந்து பார்த்துக்குறேன்” என்று இருக்கையில் இருந்து எழுந்து கொள்ள,
“அந்த நாள் அவன் உன்னோட வர்ற நாளா இருந்தா எனக்கு சந்தோசம்” என்ற ரஞ்சிதாவின் குரலில் அவரை நிமிர்ந்து பார்த்தாள். 
“அப்போ நான் கிளம்புறேன் மேடம். டைம் ஆச்சு” என்று அவரிடம் இருந்து விடைபெற்று அங்கிருந்து கிளம்பிக் கொண்டாள் பல்லவி.  
இனியும் ரகசியங்கள் ரகசியங்களாகவே இருப்பது சரியல்ல, அதை மறைப்பதும் முறையல்ல என அவள் மனதில் ஆயிரம் ஆயிரம் எண்ணங்கள் எழ, அதிலேயே தலை வலி வின்வின்னென்று பிய்த்து எடுத்தது.
வானம் மெல்ல இருட்டத் துவங்கியது. நேரமும் மெல்ல ஏழை நெருங்கி இருந்தது. பல்லவிக்காக காத்திருந்த ஸ்வரன் நேரம் செல்வதை உணர்ந்து சுந்தரேஸ்வரனிடம் சொல்லிக்கொண்டு வண்டியை கிளப்பிக்கொண்டு கிளம்பினான். 
கைப்பேசியில் பல்லவிக்கு அழைத்து அழைத்து ஓய்ந்துவிட்டான். அவளுக்கு அழைப்பே செல்லவில்லை. நேராக அவளது அலுவலகத்திற்கே சென்று விட்டான். அவள் அப்போதே கிளம்பி விட்டதாய் தகவல் வர, எங்கு சென்றிருப்பாள் என்ற யோசனையோடு அங்கிருந்து கிளம்பினான்.
இப்போது நேரம் எட்டை எட்டியிருந்தது. மேலும் நேரம் செல்லச் செல்ல ஸ்வரனிற்கு லேசான பயம் பரவத் துவங்கியது. தெரிந்த இடத்திலெல்லாம் தேடியும் விட்டான். அவள் தென்படவில்லை. 
மீண்டும் அவளுக்கு முயற்சி செய்ய, இம்முறை ரிங் போக, அவள் குரலைக் கேட்க அவன் படபடத்த இதயத்தோடு காத்திருக்க.. அழைப்பு பாதியில் துண்டிக்கப் பட்டிருந்தது. மீண்டும் முயற்சித்து இவன், 
“ஹலோ அனு” என,
மறுமுனையில், 
“நீங்கள் தொடர்புகொள்ளும் எண் தற்போது சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது” என்று கம்ப்யூட்டர் வாய்சில் வந்தது. 
கைப்பேசியைப் பார்த்தபடியே நின்றிருந்தான் ஸ்வரன்.
கீதமாகும்….

Advertisement