Advertisement

ஓம் எழில் குமரனே போற்றி!!
7
பரபரப்பான காலை வேளை..
பல்லவிக்கு அல்ல, ஸ்வரனிற்கு. காலை டிஃபன், மதியத்திற்கான லன்ச் என அனைத்தையும் முடித்து அவளை அலுவலகம் கிளப்பி வைப்பதற்காக அவனைத் தொற்றிக் கொண்ட பரபரப்பு அது.
அலுவலகத்திற்கு தயாராகி வந்தவளிடம் தட்டை நீட்டி, அவளை சாப்பிட அமர்த்தியவன், லன்ச்சை பாக்ஸில் உணவை அடைத்து விட்டு, தண்ணீரையும் பாட்டிலில் நிரப்பி நிமிர.. மென் கர்வம் வந்து நின்று கொண்டது பல்லவியின் விழிகளில்.
காதல் கொடுத்த கணவனல்லவே அவன்..! கல்யாணம் கொடுத்த கனிவான கணவன்.
இந்த விஷயம் என்றில்லை, எல்லா விஷயத்திலும் தனக்கென்ன செய்வானோ அதையே தான் தன்னவளுக்கும் செய்கிறான். சில நேரங்களில் அவனுக்குச் செய்வதைத் தாண்டியும் அவளுக்குச் செய்கிறான். 
அவனைப் பற்றிய சிந்தனையில் அமர்ந்திருந்தவளின் காதில் காற்றை ஊதி கலைத்தான் அவள் சிந்தனையின் செல்வன்.
“ம்ம்..?” 
“ம்ம்..?” என்றான் அவனும்.
“ம்ஹூம்..” என அவள் சொல்ல..
“ம்ம்..” என்றான் சுவரில் கடிகாரத்தைக் கண்காட்டி. உடனே அவள் பார்வையும் அங்கு படிய, அதில் நேரத்தைக் கண்டவள் 
“ச்சே.! எல்லாம் உங்களால தான். பஸ்ஸை விடப் போறேன் நான்” என்றபடியே அவசரமாய் ஆப்பத்தை அள்ளிப் போட்டுக் கொள்ள..
“ஹேய்..! மெதுவா.. மெதுவா.. நான் டிராப் பண்றேன்” என்றிருந்தான்.
“வேணாம்.. வேணாம்.. வேணும்னா ஈவ்னிங் வாங்க..” என்று நகர, புன்னகையுடன் பல்லவியையே பார்த்து நின்றான் ஸ்வரன். 
தன் அலுவலகம் வந்த பல்லவிக்கு நாலா புறத்தில் இருந்தும் ஆனந்தமும் அதிர்ச்சியும் ஆச்சர்யமுமாய் வந்த ஒரே கேள்வி,
“உனக்கு கல்யாணம் ஆகிடுச்சா?” என்பதாய் தான் இருந்தது.
ஒரே ஒருவாரம் விடுப்பில் சென்றவள் திடீரென்று கல்யாணத்தை முடித்துக் கொண்டு வந்து நின்றால் யாராகினும் அப்படித்தான் கேள்வி எழுப்புவார்கள். அவளுக்கு யாரையும் அழைக்கத் தோன்றவில்லை. அவளுக்கே முதலில் இந்தக் கல்யாணம் நடக்குமா நடக்காதா என்று உறுதியாய் தெரியாத நிலை வேறு. அப்படி இருக்க அனைவரையும் அழைத்து அதிக செலவுகளையும் கவனித்துக் கொள்ள முடியாது இருந்தது அவளது குடும்பச் சூழலில்.
“சாரி ப்பா.. சடென் மேரேஜ் நானும் எக்ச்பெக்ட் பண்ணல அதான் இன்வைட் பண்ண முடியல” என்றாள் பல்லவி அவர்களது கேள்விக்கு.
“ந்யூவ்லி மேரீட் கபில்ஸ் இன்னும் ஒருவாரம் நல்லா சொந்தக்காரங்க வீட்டுல எல்லாம் விருந்த முடிச்சிட்டு பார்க் பீச் சினிமான்னு சுத்திட்டு வராம உடனேவா ஆபிஸ் வருவாங்க..?” என்பதை வித விதமாய் வித்தியாசமாய் சொல்லிச் செல்ல, சிரித்து மட்டும் வைத்தாள்.
சொந்தம் என்று சொல்லிக்கொள்ள இரு பக்கமும் ஆளில்லை. பிறகு எங்கிருந்து தலை வாழை விருந்து எல்லாம் கிடைக்கப் போகிறது. கல்யாணம் முடிந்த அடுத்த நாள் கோவில் சென்று வந்தனர். அங்கேயே ஒரு பஞ்சாயத்து ஆரம்பம். அதற்கு மறுநாள் சிவகாமியைப் பிரியும் கவலையிலேயே கழிய, மாலையே ஸ்வரனின் வீட்டிற்கும் வந்துவிட்டாள். அடுத்த நாளே ஹாஸ்பிட்டல் விசிட். அதோடு ஐந்து நாட்கள் கழிய, இதற்குமேல் நோயாளிபோல் வீட்டில் இருக்க முடியாதென்று அலுவலகம் செல்வது என்று அவள் எடுத்த முடிவுதான். ஸ்வரன் மறுக்கவில்லை. பல்லவி கிளம்பி வந்தும் விட்டாள்.  
தன்னை யரோ உற்றுப் பார்ப்பதுபோல் இருக்க மெல்லத் திரும்பி தன் இடப்புறம் நோக்கினாள். பக்கத்துக்கு கேபின் பாமா தான் அது.
‘ஹயோ இவளா..!’ என நினைத்து முடிக்கவில்லை, பல்லவியின் முதுகில் பாம் ப்ளாஸ்ட் செய்திருந்தாள் பாமா.
“ச்சே.. ஏண்டி வந்ததும் வராததுமா அடிக்குற. நானே நொந்துபோய் வந்திருக்கேன்”
“கல்யாண சாப்பாடு போடாத உன்ன மடில உக்கார வெச்சு கொஞ்சணுமா..?”
“சோறு தானே.. வா மதியம் வாங்கித்தறேன்”
“என்ன கொழுப்பா.. என்கிட்ட கூட சொல்லாம திடீர்னு கல்யாணம் பண்ணிட்டு வந்து நிக்குற”
“நிக்கலயே.. நான் உட்காந்துட்டு தானே இருக்கேன்”
“பல்லவீஈஈ..” என்று கத்திய பாமாவின் வாயில் பால்கோவாவை வைத்து அடைத்தாள் பல்லவி.
“திடீர் கல்யாணம்ன்னு நீயே சொல்லற அப்பறம் அதை எப்படி சொல்லிட்டு பண்ண முடியும் பாமா” என்ற பல்லவியை இப்போது அவள் கண்டுகொள்ளவில்லை. மாறாக பால்கோவாவில் மெய்மறந்திருந்தாள்.
“வாவ் எந்த கடைல வாங்குன? செம டேஸ்ட்”
“கடைல எல்லாம் வாங்கல. இது என் கணவரின் கைப்பக்குவத்தில் செய்தது” என்றதும் ஸ்வரனைப் பற்றியும் அவள் அவசரத் திருமணம் குறித்தும் விசாரித்துவிட்டு
“குடுத்துவெச்ச வாழ்க்கை பல்லவி. உனக்கும் சரியா சமைக்கத் தெரியாது. சாப்பாட்டுக்கு என்னிக்கும் பிரச்சனை வராது பாரு. கடைசி வரைக்கும் உன்ன உட்கார வெச்சு சோறு போடுவாங்க” என்றாள் பாமா, கோடிஸ்வரனின் வீட்டில் வாக்குப் பட்டிருந்தாலும் இதுபோல் வசதி இருக்காது என்பதாய்.
அவள் கூறியதில் கொஞ்சம் கோபம் எட்டிப் பார்க்க,
“உக்காந்து சாப்பிட்டுட்டே இருக்குற மாதிரி இருந்தா நான் ஏன் வேலைக்கு வரப் போறேன். போய் வேலையைப் பாரு பாமா” என அவளை அங்கிருந்து அனுப்பி வைத்துவிட்டு தன் வேலையைப் பார்க்கலானாள் பல்லவி.
நேரம் கடந்திருக்க.. இடைவெளியின் போது வேதாளம் போல் வந்து மீண்டும் தொற்றிக்கொண்டாள் பாமா. பல்லவி இருவருக்கும் காஃபி பிடித்துக் கொண்டு வர, 
“என்னாச்சு ஏன் ஒருமாறி நடக்குற..?” என அவள் நடையை ஆராய்ந்தபடி கேட்க,
“நான் தான் ஹிப் ஸ்ப்ரைன்னு சொல்லி லீவ் எக்ஸ்டண்ட் பண்ணிருந்தேனே.. மெயில் செக் பண்ணலையா நீ..?” என பல்லவி முறைப்பை முன்வைக்க.
“ஓஹோ..! இதுக்கு எதுக்கு ஹிப் ஸ்ப்ரைன்னு பொய் சொல்லிட்டு, உண்மையவே சொல்லு நான் ஒன்னும் தப்பா நினைச்சுக்க மாட்டேன்” என்று அவள் பல்லவியை மேலும் கீழும் பார்த்துவிட்டு அவள் தோளில் லேசாய் தட்டி சிரித்துக்கொண்டு நகர, 
“ஏய் நீ நினைக்கற மாறி எல்லாம் இல்லை” என்றாள் வேகமாய், பாமா இதை ஒரு ஹாட் டாப்பிக்காய் மாற்றி ஆபிசில் கொளுத்திப் போட்டுவிடுவாள் என்ற பயத்தில்.
“நான் எதுவும் நினைக்கல மா” என்றுவிட்டு திரும்பி பல்லவியைப் பார்த்து கண்ணடித்துச் சென்றாள். அதுவே அவளது திருவிளையாடலை உறுதிப்படுத்தியது. 
‘என்ன காத்துக்கிட்டு இருக்கோ’ என நினைத்தபடி அவளது இடத்திற்கு வந்தமர்ந்து வேலையைத் தொடர்ந்தாள் பல்லவி. 
மதியத்தின் போது தான் ரஞ்சிதாவின் நினைவே வந்தது பல்லவிக்கு. அவரை சந்திப்பதாய்க் கூறியிருந்தாளே..! அதற்குள் கீழே விழுந்து எழுந்து அவரை சந்திக்க முடியாது போய்விட, அவருக்கு கைப்பேசியில் அழைத்தாள்.
“மேடம் நேர்ல வர்றதா சொல்லியிருந்தேன் முடியாம போய்டுச்சு.. சாரி” என்று எடுத்ததுமே மன்னிப்பை யாசிக்க,
“அதனால என்ன மா உன்னப் பத்தி தெரியாதா எனக்கு” என்றுவிட
“இல்ல மேடம் உங்ககிட்ட நான் ஒரு முக்கியமான விஷயம் பேசணும். அதை இப்போ சொன்னா சரி வராது நான் நேர்லையே வந்து சொல்றேன்”
“சரி மா நீ இன்னொரு நாள் வா.. நேர்லையே வந்து சொல்லு”
“மேடம்..! இந்த மாசத்துக்கான அமௌன்ட் எவ்வளவு?” என்று தாமதிக்காமல் விசயத்திற்கு வந்தாள் பல்லவி.
ரஞ்சிதா ஒரு தொகையை சொல்லவும் யோசனையோடு,
“ஓகே மேடம் நான் ட்ரான்ஸ்பர் பண்ணிடுறேன்” என்றாள்.
“நானே பார்த்துக்கறேன்னு சொல்லுறேன் நீ தான் பிடிவாதமா இருக்க” என அன்பாய் கடிந்துகொள்ள,
“இல்ல மேடம் இது என்னோட கடமை. நீங்க இவ்வளவு நாள் செஞ்ச உதவிக்கே நான் எப்படி கைமாறு பண்ணப் போறேன்னு தெரியலை. இதுக்கு மேலும் என்ன கடனாளி ஆக்காதீங்க ப்ளீஸ்” என்றாள். 
“சரி மா இதுக்கு மேல நான் எதுவும் பேசல. நீயே பார்த்துக்கோ. போதுமா” என்றுவிட அவளும் ஓரிரு வார்த்தை பேசிவிட்டு அழைப்பை துண்டித்துக்கொண்டாள்.
மாலை அலுவலகம் முடியும் நேரம் வர, தனது வேலைகளை முடித்த பல்லவி தனது கைப்பையை எடுத்துக்கொண்டு கேபினில் இருந்து வெளியே வந்தாள். பாமா கொளுத்திப் போட்ட பாமால் அவர்களது ப்ளாக்கில் உள்ள அனைவரையும் எட்டி இருந்தது பல்லவியின் ஹிப் ஸ்ப்ரைன் செய்தி.  
“என்ன பல்லவி மேடம்..! சேதாரம் அதிகமோ?” என்று விசாரித்த பலபேரின் தொனியில் அக்கறையைத் தவிர அனைத்தும் இருந்தது.
‘டேய்..! அவங்கவங்க விசயத்தை கவனிங்கடா அடுத்தவன் விசயத்துல ஆஜர் ஆகுறதுனா ஒட்டுமொத்த ஆபிஸும் கிளம்பி வர்றது’ என கடுப்படைந்தவள்,
“சத்தியமா நான் வாசல்ல தான் வழுக்கி விழுந்தேன். நம்புங்கயா” என்று சொல்ல,
“நம்பிட்டோம் நம்பிட்டோம்” என்று ஆளாளுக்கு புன்னகைத்து நகர, பாமாவை புரட்டி எடுக்கும் வெறி பல்லவிக்கு. ஆனால் அவளோ சிக்காது சிறகடித்து விட்டாள் சிறிது நேரத்திற்கு முன்பே.
பல்லவியைப் பிக் அப் செய்ய வந்த ஸ்வரனைப் பார்த்ததும் அவர்கள் இன்னுமாய் ஓட்ட.. ஓடி ஒளிந்து கொண்டாள் அவளைக் கொண்டவன் பின்பு.
“என்னாச்சு அனு..?”
“முதல்ல வண்டியை எடுங்க..” என அவனை துரிதப்படுத்த,
“ம்ஹூம்.. நீயே சொல்லுறயா இல்ல அவங்க கிட்ட கேட்கட்டுமா..?” என நேரம் காலம் தெரியாமல் அவன் வேறு வம்பு வளர்க்க.. 
“நான் பஸ்லயே போறேன் போங்க..” என்று நகர, சட்டென அனுபல்லவியிடம் சரண்டர் ஆகியிருந்தான் ஆதீஸ்வரன்.
வீடு வந்தும் அவன் பார்வை விடாமல் அவளைத் தொடர, அதற்கு மேலும் தாள முடியவில்லை அவளால். அலுவலகத்தில் நடந்ததை எல்லாம் ஸ்வரனிடம் தெரிவித்து புலம்ப, அவன் விழுந்து விழுந்து சிரித்து அவளை மேலும் வெறுப்பேற்றினான்.
அவள் முறைப்பதைக் கண்ட மறுநொடி,
“சரி விடு அனு. இதுக்கெல்லாம் ஃபீல் பண்ணலாமா..?” என சமாதானத்தை கையில் எடுத்துக் கொண்டான்.
“எனக்கு சமைக்கத் தெரியாதுன்னு சொன்னதைக் கூட நான் பெருசா எடுத்துக்கலைங்க.. ஆனா கடைசி வரைக்கும் உக்காந்து சாப்பிடலாம்னு சொன்னா பாருங்க.. அதை.. அதை தான் என்னால இப்போ வரைக்கும் ஏத்துக்க முடியல..” எனப் புலம்ப,
“சரி நீ இன்னைக்கு சமையல் கத்துக்கறையா என்கிட்ட?” என்றதும் கண்கள் மின்ன 
“ஓஹ் ஸ்யூர்.. இருங்க ஆதி டூ மினிட்ஸ்ல வந்துறேன்” என்றுவிட்டு உள்ளே சென்றாள்.
உள்ளே சென்றவள் பத்து நிமிடங்கள் ஆகியும் வராதது கண்டு அவன் சென்று எட்டிப் பார்க்க, முடியைத் தூக்கி கொண்டை போட்டுக்கொண்டு, கழுத்தில் கண்டதை எல்லாம் மாட்டிக்கொண்டு, க்ளவ்சை தேடி எடுத்து கையில் மாட்டிக்கொண்டு திரும்பியவள், அவளைக் கண்டு வாயடைத்து நின்றவனிடம் ‘எப்படி’ என்று புருவத்தை வேறு உயர்த்திக் கேட்டாள்.
“நீ சண்டைக்கு போறயா..? இல்ல சமைக்கப் போறயா..?” 
“எத்தனை தலை உருளுதுன்னு மட்டும் பாருங்க” என்று வீரவசனமிட்டு கிச்சனுக்குள் நுழைந்தாள். 
சோறு வைப்பதற்கு முன் அதற்கு பேரு வைப்பது முக்கியமாகப் பட்டதால், 
“சொல்லுங்க ஆதி இன்னிக்கு நம்ம பண்ணப் போற டிஷ் பேரு என்ன?” என கரண்டியை கையில் எடுத்து அவனைப் பேட்டி எடுத்தாள். 
“நம்ம இல்ல மா.. நீதான் பண்ணப் போற” என்று தேவையானவற்றை எடுத்து அவளருகில் வைத்து இன்ஸ்ட்ரக்ஷன் கொடுக்க அவளும் ஆர்வமாய் செய்து முடித்தாள். அந்த ஒன்றை செய்து முடித்ததற்கே பல்லவியிடம் அத்தனை சந்தோசம். 
“இனி பாருங்க ஆதி உங்களை உட்காரவெச்சு நான் சாப்பாடு போடுறேன்” என்றவளைக் கண்டு சிரிப்பை அடக்க வெகுவாய் போராடினான் ஸ்வரன். 
“அனு..! தயவு செஞ்சு இந்த வேசத்தை கலைச்சிட்டு வெளிய வா. கோமாளி மாறி இருக்க” என்று சொல்லிய மறுநொடி அங்கிருந்து வெளியே வந்துகொண்டான். மேலும் நின்றிருந்தால் அவள் நிச்சயம் கிள்ளியிருப்பாள் என்று அறிந்ததினால்.

Advertisement