Advertisement

மீதமிருந்த நேரத்தை ஏகக் கடுப்பில் கடத்திக் கொண்டிருந்தாள் பல்லவி. அவன் வந்ததும் ஒரு பெரிய பஞ்சாயத்தை துவங்குவதற்காகக் காத்திருந்தாள். 
அவன் மதிய உணவிற்கும் வீட்டிற்கு வராதுபோக பல்லவிக்கு மெல்ல மெல்ல பயம் சூழ்ந்தது. சுந்தரேஸ்வரன் கூட இரண்டு முறை ஸ்வரன் பற்றி விசாரித்துவிட்டார் அவளிடம்.
“எதோ முக்கியமான வேலைன்னு கிளம்பிப் போனாருங்க தாத்தா. வந்திருவாரு” என்று சொல்லியே சமாளித்து வந்தாள்.
மாலை மூன்று மணியளவில் தான் வீட்டிற்கு திரும்பியிருந்தான் ஸ்வரன். 
அவன் வண்டியின் சத்தம் கேட்கவும் உள்ளிருந்து வெளியே விரைந்து வந்தாள் பல்லவி. அவளை ஒரு பார்வை பார்த்தவன் பின் சுந்தரேஸ்வரனிடம் பேசிக் கொண்டிருந்தான்.
“சாப்ட்டீங்களா ப்பா”
“ஆச்சுப்பா.. என்கிட்ட கூட சொல்லாம நீ எங்கப்பா போய்ட்ட..? மதியம் சாப்பிடக் கூட வீட்டுக்கு வரல” என்றார் வருத்தமாய். 
இதுவரை அவரிடம் தெரிவிக்காமல் எங்கும் மாயமனாதில்லை அவன். தன்னிடம் சொல்லிக்கொண்டு தான் சென்றான் என்று பல்லவி கூறியதையும் ஏனோ ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை அவரால்.
“இன்னைக்கு ஒரு சின்ன ஆர்டர் இருந்துச்சு ப்பா.. முடிச்சிட்டு வர லேட் ஆகிடுச்சு. பல்லவி கிட்ட சொல்லிட்டு தான் போயிருந்தேன். அவ உங்ககிட்ட சொல்லலையா..?” என்று பல்லவியைப் பார்த்தான், ஆமாம் என்று சொல் என்பதுபோல்.
‘ஓஹ்..! ஆக்ரிமெண்ட்டா? இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல. அதெல்லாம் நானே தாத்தா கிட்ட சொல்லிட்டேன்’ என அவளும் அவனைத் தான் பார்த்திருந்தாள்.
“அதெல்லாம் மருமக சொன்னாப்பா.. பாவம் அவ தான் மதியத்துல இருந்து உனக்காக சாப்பிடாம காத்திருக்கா. நான் சொல்லி கேட்க மாட்டேனுட்டா நீ சொல்லு” என்றார் சுந்தரேஸ்வரன்
“அனு சாப்பாடு எடுத்து வெய்” என்றுவிட்டு அவன் முகம் கழுவிவரச் சென்றுவிட, உள்ளே வந்தவள் அனைத்தையும் எடுத்து வைத்தாள். 
“நீங்க ஏன் சாப்பிடல..?” என்றாள், கோபம் அது பாட்டிற்கு ஒரு ஓரத்தில் இருந்தாலும் அவன் தட்டில் சாதத்தை பார்த்து நிரப்பியபடி. 
“நீ ஏன் சாப்பிடல..?” என்றான் பதிலுக்கு.
“பசிக்கல” என்றுவிட்டு திரும்பிக் கொண்டாள். 
“சரி உக்காரு அனு. நீயும் சாப்பிடு” 
“இல்லை நிஜமாவே பசிக்கல நீங்க சாப்பிடுங்க” 
அவன் சாப்பிடாது பாதியில் எழுந்து செல்ல, உடனே முகம் சுருங்கிப் போனது பல்லவிக்கு. 
சில நொடிகளில் அவளுக்கும் ஒரு தட்டை எடுத்து வந்தவன் சாதத்தை அதில் இட்டு அவள்முன் நீட்டி உண் என்று கண்களால் கூற, சற்றுமுன் சுருங்கிய முகம் இப்போது விரிந்து மலர்ந்தது.
அதன்பின் உண்டு முடிக்கும் வரை இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. பின் கைகழுவி வந்ததும் ஸ்வரன் அவன் அறைக்குள் சென்றுகொள்ள, அவன் பின்னோடு சென்ற பல்லவி அவன் இன்றைய சமையல் பற்றி எதாவது கூறுவான் எனக் காத்திருந்து காத்திருந்து பொறுமை இழந்து 
“நான் தான் சமைச்சேன்” என்றாள் ஒருவழியாய்.
“வாய்ல வைக்கும்போதே தெரிஞ்சுது” என்றான். 
கிண்டல் செய்கிறானா..? என அவன் முகம் காண, அதில் அப்படி ஒன்றும் தெரியவில்லை.
“ஏன் நல்லா இல்லையா” என்றாள் 
“நீயும் தானே சாப்ட்ட எப்படி இருந்துதுன்னு உனக்கு தெரியாதா” என்றதும் அமைதியாகிக் கொண்டாள். 
மோசமென்று சொல்லும் அளவில் எல்லாம் இல்லை. நன்றாகத்தான் சமைத்திருந்தாள் தாத்தாவின் உதவியோடு. அதற்குமேல் என்ன பேசுவதென்று தெரியாது பல்லவி அங்கிருந்து வெளியே செல்ல நினைத்தபோது,
“அனு.! இதை பத்திரமா வெய்” என்று அவன் ஒரு கவரை நீட்ட வாங்கியவள்.. ‘என்ன இது’ என புரியாது பார்க்க, 
“பிரிச்சுப் பாரு” என்றதும் அதை திறந்து பார்க்க.. அதனுள் கலர் கலராய் கட்டுக் கட்டாய் காந்தி தாத்தா இருப்பது கண்டு அவனைப் பார்க்க, அவளிடம் பீரோ சாவியை அளித்தவன்
“இனி உன் பொறுப்பு இதெல்லாம்” என்று ஒப்படைத்தான்.
ஒரு புன்னகையுடன் பெற்றுகொண்டவள் அதை பத்திரமாய் எடுத்து வைத்துவிட்டு வந்து
“ஏதுங்க இவ்வளவு பணம்” என்று கேட்க
“கொள்ளை அடிச்சிட்டு வரேன்” என்றதில் அவள் முறைப்பை முன்வைக்க.. அவன் சரியான பதிலை கையில் எடுத்துக் கொண்டான்.
“இன்னைக்கு ஒரு ஆர்டர் இருந்துது அனு. அதை அவங்களுக்கு திருப்தியா செய்து கொடுத்ததுக்கான ஊதியம் இது” என்றான்.
“ஒரு நாளைக்கு இவ்வளவு வருமா ஆதி” என்றாள் சற்று வியப்புடன்.
“அது வர்ற ஆர்டரையும் ஆளுகளையும் பொறுத்து அனு. சில நேரம் இதை விட அதிகமாவே வரும். விசேஷம் இல்லாத நாள்ல நமக்கு பெருசா ஒன்னும் வராது. அப்போ எல்லாம் இதை வெச்சு தான் சமாளிக்கணும். இதையும் வீட்ல வெச்சிருக்க முடியாது நாளைக்கு பேங்க்ல டெபொசிட் பண்ணனும்” என்று பேசிக்கொண்டிருந்தான்.
“காலைல என்கிட்ட சொல்லிட்டு போயிருக்கலாம் தானே.. நான் உங்களுக்கு போன் பண்ணுனேன் நீங்க அதையும் எடுக்கல. தாத்தா வேற கேட்டுட்டே இருந்தாரு” என்றாள் மெல்ல.
“காலைல இதை பத்தி சொல்றதுக்குள்ள நீ வேற டாபிக் எடுத்து டைவர்ட் பண்ணிட்ட அனு. அதுக்கப்பறம் பேசுற நிலைல நான் இல்லை. வேலையும் அதிகம் அதான் போன் அட்டென்ட் பண்ணல. மதியம் வீட்டுக்கு வந்திடலாம்னு தான் நினச்சேன் செட்டில்மெண்ட் முடிய நேரம் ஆகிடுச்சு” என்றான்.
“ஓஹ்” என்பதோடு அவள் முடித்துக்கொண்டு எழச்செல்ல,
“இரு அனு நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும். இங்க வந்து உட்காரு” என்றதும் மெல்ல அவன் அருகில் வந்து அமர்ந்தாள்.
“உன்னை எதாவது சொன்னா அது என்னை சொன்ன மாதிரி அனு” என்றான் அவள் கையை எடுத்து தன் கைகளுக்குள் வைத்துக்கொண்டு.
அவள் புரியாது பார்க்க,
“என் வைஃப் நீ. அப்படி இருக்கும்போது எப்படி நானே உன்ன மரியாதை குறைவா நடத்த முடியும்? மரியாதை குறைவா பேசமுடியும்? அப்படி செஞ்சா அது என்னை நானே அவமதிக்குற மாதிரி” என்றான். 
இது காலையில் நடந்த பஞ்சாயத்தின் தொடர்ச்சி என மூளை அவளிடம் எடுத்துரைக்க, அவன் சொன்ன வார்த்தைகளில் அவள் முட்டைக்கண் விரித்துப் பார்க்க
“இப்படி முழிக்காத ஆந்த” என்றவன்,
“உன் சிவகாமி அம்மா இதுவரைக்கும் உன்மேல கோபப்பட்டு திட்டுனது இல்லையா? அதெல்லாம் சேட்டை பண்ணி அவங்க கிட்ட நல்லா வாங்கிருப்பையே” என்றான் சின்ன சிரிப்புடன் அவள் முகம் பார்த்து. 
அவள் முறைக்க,
“கோபத்தை காட்டுறது வேற அனு. அதை என் வைஃப் அனு மேல காண்பிக்க எனக்கு முழு உரிமை இருக்கு. அப்படித்தான் உனக்கும் இருக்கு. அதே போல இனி உன்னோட எல்லா விசயத்தையும் நீ என்கிட்ட தானே பகிர்ந்துக்க முடியும். நானும் உன்கிட்ட தானே சொல்ல முடியும். அப்படித்தான் உன்னோட இளமை காலத்தையும் நீ என்கிட்ட உன்ன அறியாம ஷேர் பண்ணிகிட்ட. அத நினச்சு எனக்கு சந்தோஷம் தான். நேத்து நீ தெரியாம ஷேர் பண்ணுனதை இனி தெரிஞ்சே பண்ணனும். சரியா?” என, 
தலையை ஆட்டிவைத்தாள் பல்லவி. 
“பட் அதுக்கு ஏன் நீ இவ்வளவு ஃபீல் பண்ணுற? நம்ம ரெண்டு பேர்த்தோட குடும்பமுமே சாதாரண வாழ்கையை தான் வாழுறோம். இதுல சீப்பா நினைக்க என்ன இருக்கு? சொல்லப் போனா உன்ன நினச்சு பெருமையா தான் இருக்கு. அவ்வளவு கஷ்டத்திலயும் படிச்சு இந்த நிலைக்கு முன்னுக்கு வந்திருக்க. நான் அப்படி சீப்பா நினைப்பேன்னு நீ எப்படி நினைக்கலாம்.? அதுவும் என் அனுவை அப்படி எல்லாம் என்னால நினைக்க முடியுமா?” என்றான் அவளிடம்.
‘தப்பு தான் தப்பு தான் தெரியாம சொல்லிட்டேன் சாமி’ எனப் பார்த்திருந்தாள்.
“நான் தகுதி தராதரம்னு சொன்னது அவங்களுக்கு அனு. உன்னோட தகுதிக்கு நீ அவங்களோட எல்லாம் பேசுறதை நான் விரும்பல. நீ தகுதின்னு எதை நினைக்குற? பணத்தையா? இல்ல அனு. நம்ம வாழுற முறை. ஒழுக்கம். நம்ம குணம். இதெல்லாம் தான் நம்ம தகுதியை தீர்மானிக்கும். அதுல அவங்க எல்லாம் உன்கிட்டக் கூட வரமுடியாது” என்றான் அவள் வளையல்களை மெல்ல வருடியபடி.
பல்லவி அமைதியாய் அவன் கைக்குள் இருக்கும் தன் கையையே பார்த்திருந்தாள். 
“நீ வளையல் வேணும்னு கேட்கலை தான். கேட்கவும் மாட்டன்னு தெரியும். இது நானாதான் உனக்காக வாங்கினது. இப்போ இல்ல நம்ம கல்யாணத்துக்கு முன்னாடியே நான் வாங்கியிருந்தேன். நீ இங்க வந்ததும் கொடுக்கலாம்னு இருந்தேன். அதுக்குள்ள கோவில்ல அவங்க அப்படி நடந்துகிட்டதும் உடனே அதை உன் கையில பார்க்கணும்னு நம்ம வீட்டுக்கு வந்து எடுத்துட்டு வந்துட்டேன். ஏன் அனு உனக்கு பிடிக்கலையா?” என்று கேட்க, அதுவரை அவள் வளையல்களை பார்த்துக் கொண்டிருந்தவள் அவனை நிமிர்ந்து பார்த்து 
“ரொம்ப நல்லா இருக்கு ஆதி” என்றாள் லேசான புன்னகையுடன். அவள் புன்னகை அவனிடமும் மாயம் செய்ய, அவளையே பார்த்திருந்தான்.
‘ச்சே.. இது தெரியாம என் புருசன நானே மரியாதை இல்லாம அவனே இவனேன்னு எல்லாம் திட்டிட்டேனே. இனிமேல் திட்டும் போது கூட மரியாதையா தான் திட்டணும்’ என அவசரமாய் உறுதிமொழி எடுத்துக்கொண்டு
“சாரி ஆதி” என அவளாகவே முன்வந்து ஸ்வரனிடம்  மன்னிப்பை யாசித்தாள். 
“இனி இப்படி பண்ணக் கூடாது அனு” என்றான் அவள் விழிகளில் தன் விழிகளைப் பாய்ச்சி.
“எப்படி ஆதி..??” என்றாள். ஒன்றா இரண்டா எதை சொல்கிறான் என்ற சந்தேகம் அவளுக்கு. 
“நமக்குள்ள என்ன வருத்தம் இருந்தாலும் அதுக்காக சாப்பிடாம இருக்கக் கூடாது” என, 
“ஹ்ம்ம்..” என்று புன்னகைத்தாள். 
பசிக்கலை பசிக்கலை என்று அவள் வாய் மட்டும் தான் கூறியது. வயிறோ சீக்கிரம் எதாவதை உள்ளே அனுப்பு பல்லவி என்று அவளிடம் கெஞ்சியதை கண்டுகொண்டானோ? அப்படித்தான் தோன்றியது அவளுக்கு.
“நான் சமைச்சது நல்லா இருந்துதா?” என்றாள் மீண்டும். அவன் வாயால் ஒருமுறை கேட்டே ஆகவேண்டும் போல் இருந்தது.
“நைட் சொல்லுறேன்” என்றான் அவளை ஆழமாய் பார்த்தபடி. அந்தப் பார்வையை எதிர்கொள்ளும் திறன் சத்தியமாய் அவளிடம் இல்லாதுபோக 
“தாத்தாக்கு டீ கொடுக்கணும் ஆதி. நான் போறேன்” என்று எஸ்கேப் ஆகிக்கொண்டாள். 
தன்னிடமிருந்து தப்பித்தோடும் அவளையே புன்னகையுடன் பார்த்திருந்தவன் பின் அவன் டைரியை எடுத்துவந்து அன்றைய கணக்கு வழக்குகளை சரி பார்க்கத் துவங்கினான்.
மணி ஆறை எட்டிவிட, பல்லவி வெளியே வேலை செய்துகொண்டிருப்பது கண்டு அவளுக்கு உதவ சுந்தரேஸ்வரன் வெளியே வந்தார்.
“தாத்தா பேசாம உக்காருங்க” என்றதில் மீண்டும் உள்ளே வந்து சேரையே சரணடைந்தார்.
இதுநாள் வரையில் ஸ்வரன் தான் எல்லா வேலைகளையும் செய்வான். அவனும் சுந்தரேஸ்வரனை எந்த வேலையும் செய்யக் கூடாதென்று கண்டிப்பாய் தெரிவிப்பான். இப்போது பல்லவியும் அதையே செய்ய அமைதியாய் அமர்ந்துகொண்டார்.
நேரத்தைப் பார்த்த ஸ்வரன் கணக்கு வழக்கு டைரியை எடுத்து பீரோவில் வைத்துவிட்டு வெளியே வர, காம்பௌண்டின் ஒரு ஓரத்தில் பல்லவி நின்றிருப்பதைக் கண்டான். உள்ளுக்குள் அதிர்ந்தவன் உடனே 
“அனு..! அங்கேயே இரு” என்று குரல் கொடுக்க, சுந்தரேஸ்வரனும் அப்போது தான் கவனித்தார். கவனித்த உடனே
“அங்கேயே இரு பல்லவி மா” என அவரும் குரல் கொடுக்க, 
அவளோ அவ்விருவரையும் புரியாது பார்த்தபடி முன்னால் ஒரு எட்டு வைக்க.. மறுநொடி அவளது அலறல் சத்தத்தில் அவர்கள் தடுக்க நினைத்த ஒன்று அங்கு நிகழ்ந்தேறிவிட்டதை அறிந்து அவளிடம் விரைந்தனர்.
கீதமாகும்…

Advertisement