Advertisement

ஓம் உமைபாலா போற்றி!!
5
அதிகாலையில் விழிப்பு வந்த ஸ்வரன் மெல்ல கண்விழித்துப் பார்த்தபோது அவனுக்கு வெகு அருகில் இருந்தது பல்லவியின் முகம். 
டெட்டி பியரைக் கட்டிப் பிடித்துத் தூங்குவதுபோல் அவனைப் பிடித்துக் கொண்டிருந்தாள். அவனது அனுவின் செயலால் ஆனந்த அதிர்ச்சி கொண்டவனின் அதரங்கள் அழகாய் விரிய.. அவளிடம் அசைவு தெரிய.. உறங்குவதுபோல் அப்படியே அசையாது படுத்துக் கொண்டான். 
சிறிது நேரத்தில் விழிப்புத் தட்டிய பல்லவி மெல்ல கண்திறந்து பார்த்தாள். அவள் செய்த காரியத்தில் பெரிதாய் அதிர்ந்து போனவள், 
“அங்கதானே படுத்திருந்தேன். எப்படி இங்க வந்தேன்..? உருண்டு வந்துட்டேனோ.. ச்சே.. இனி டோன்ட் டச்ன்னு சொன்னா நீ எதுக்கு என்னை டச் பண்ணுனன்னு இல்லை கேப்பான் இவன். நல்லவேள தூங்கிட்டு தான் இருக்கான் அதுக்குள்ள எஸ்கேப் ஆகிடுவோம்” என புலம்பியபடியே மெல்ல எழுந்தவள் அறையை விட்டுச் செல்லுமுன் ஒருநொடி திரும்பி நின்று அவன் முகம் கண்டாள்.
அவன் முன்னுச்சி முடிகள் எல்லாம் மின்விசிறியின் சுழற்சிக்கு லேசாய் அசைய, நிர்மலமான முகத்தோடு துயில் கொண்டிருந்தான் ஸ்வரன். அவள் புலம்பலைக் கேட்டபின் முகத்தை அப்படி வைத்துக்கொள்ள அவன் பிரம்ம பிரயத்தனப் பட்டுக் கொண்டிருப்பது வேறு விஷயம். 
பல்லவி சில நொடிகள் கடந்தும் விழி விலகாது அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவனைக் கண்ட நாள் அவனைப் பார்த்ததும் பிடிக்கவில்லை. அதன்பின் பார்க்கப் பார்க்கப் பிடிப்பதுபோல் தான் இருந்தது. இப்போதோ பிடித்தே விட்டது. நாளை இன்னும் பிடிக்க வாய்ப்பிருக்கிறது என அவள் மனம் வானிலை அறிக்கை போல் மனநிலை அறிக்கை விட்டது.
இன்னும் பார்த்துக் கொண்டே இரு, அவன் இல்லாமல் உன்னால் ஒரு நாளைக் கூட தனியே கடத்த முடியாத அளவிற்கு உன்னை மாற்றப் போகிறான். அவன் உலகமாய் நீ மாறப் போகிறாய். அப்போது பிடித்தத்தைத் தாண்டி அவன்மீது பைத்தியமாய் மாறப் போகிறாய் என்ற எதிர்காலத்தின் அறிக்கை இப்போது அவளுக்கு எட்ட வாய்ப்பில்லை. அது நிகழும்போது அவளே அறிவாள்.
ஸ்வரனையே பார்த்திருந்தவள் பின் திரும்ப அவன் அருகில் வந்து அவனுக்கு போர்வையை போர்த்திவிட்டு இன்னும் சில நொடிகள் நின்று பார்த்துவிட்டுச் சென்றுவிட்டாள்.
அவள் சென்றதை உறுதி செய்தபின் எழுந்தவன் சிறிது நேரம் அறையில் இருந்துவிட்டு பின்னர் வெளியே வந்து பார்த்தபோது பல்லவி ஓரிடத்தில் நில்லாது சுழன்று கொண்டிருந்தாள். 
“தாத்தா இந்தாங்க காஃபி..” என அவருக்கு அளித்துவிட்டு  
“காலைல சாப்பிட என்ன செய்யட்டும்..?” என்று கேட்டுக் கொண்டிருந்தாள் அவரிடமே. 
அவர் இட்லி போதும் என்றுவிட, மாவு வீட்டில் இருக்கிறது சட்னி மட்டும் அரைத்தால் போதும் என்று யோசித்துக் கொண்டு வெளியே வந்தாள். ஸ்வரனைக் கண்டவள்,
“எழுந்துட்டீங்களா..? இருங்க காஃபி எடுத்துட்டு வரேன்” என கிச்சனை நோக்கிப் புறப்பட
“காஃபி நானே போட்டுக்குறேன் அனு. நீ குளிச்சிட்டு வா முதல்ல” என்று அவளை டேக் டைவேர்சன் செய்து அனுப்பினான். 
குளித்துவிட்டு சுடிதாருக்கு மாறியவள் சமையல் அறையில் வந்து பார்த்தபோது சட்னி தயாராக இருந்தது. ஸ்வரன் இட்லி ஊற்றிக் கொண்டிருந்தான்.
“ஆதி..! நானே வந்து பண்ணிருப்பனே நீங்க ஏன் இதெல்லாம் செஞ்சிட்டு இருக்கீங்க” என்று அவன் அருகில் வந்து அவள் வேலையைத் தொடர
“யாரு செஞ்சா என்ன அனு. இவ்வளவு நாள் நான் தானே செஞ்சிட்டு இருந்தேன் எதோ புதுசா செய்யுற மாதிரி சொல்லுற” என்றான் அவன்.
“இவ்வளவு நாள் செஞ்சீங்க ஓகே. இனி நான் செய்யுறன்” 
“அதானே பயமா இருக்கு”
“என்னது?” என ஒரு கையில் கரண்டியை அவன் முகத்திற்கு நேரே நீட்டிகொண்டு மறுகையை இடுப்பில் வைத்துக் கேட்க,
“இல்லை கையை எதாவது சுட்டுக்கப் போறைன்னு சொன்னேன் அனு. பார்த்து பண்ணு” என்று சமாளித்துக் கொண்டான்.
“அதெல்லாம் நான் பார்த்துக்குறேன். நீங்க கிளம்புங்க” என்றதும் அவன் திரும்பிச் செல்ல 
“ஆதி ஒரு நிமிசம்” என்றழைத்தாள். என்னவென்று பார்த்தவனிடம்
“நம்ம வீட்டுல முளகாப் பொடி டப்பா எங்க இருக்கு..?” என்று கேட்டாள்.
“ஏன் அது எதுக்கு உனக்கு..?” என்றான் சந்தேகப் பார்வையுடன்.
“இல்லை நேத்தே சமையலுக்கு தேவையான எல்லா பொருளும் எங்க இருக்குன்னு பார்த்துட்டு இருந்தேன் இதை மட்டும் காணோம் அதான் கேட்டேன்” என்றாள்.
“அதை நான் தான் எடுத்து வெச்சிருக்கேன். நீ அதை யூஸ் பண்ணும்போது மட்டும் என்னை கூப்பிடு. நான் வந்து அளவு சொல்லுறேன்” 
சமைத்த நீ மறக்கலாம் ஆனால் சாப்பிட்ட நான் மறக்க மாட்டேன் என்னும் பாவனை அவனிடத்தில். பல்லவி பாவமாய் பார்த்திருந்தாள்.
“சாரி ஆதி நீங்க சாப்பிட மாட்டீங்கன்னு தான் நினச்சேன். ஆனா சாப்பிடுவீங்கன்னு எதிர்பார்க்கல” என்றாள் வருத்ததுடன். 
நேற்றய இரவு உணவின்போது அவனும் தாத்தாவும் போட்டி போட்டு அவளை கவனித்ததில் வயிறார சாப்பிட்டாள். அப்போதே குற்ற உணர்வாய் தான் இருந்தது. அவள் முகம் கண்டு, 
“அனு..! நான் சும்மாதான் சொன்னேன். நீ கேட்டது ஷெல்ப்ல தான் இருக்கு பாரு. அந்த பச்சை மூடி போட்ட டப்பா. மிளகா தூள் கடைல வாங்குறது இல்லை. நம்ம வீட்லயே அரைச்சது தான். கலர் கம்மியா தான் இருக்கும்” என்று அதை எடுத்து அவள் கைகளில் வைத்தான். அதை வாங்கிப் பார்த்துவிட்டு அதன் இடத்திலேயே வைத்துவிட்டுத் திரும்பியவள்
“சரி நீங்களும் குளிச்சிட்டு வாங்க எல்லாரும் சேர்ந்து சாப்பிடலாம்” என்றதும் சிறிது நேரத்தில் அவன் குளித்துவிட்டு உல்லாசமாய் விசில் அடித்தபடி அவனறைக்குள் வர, அப்போது அவளும் அங்கு தான் இருந்தாள். 
அவனோ தன் ஈரத் தலையைத் துவட்டியபடி வெற்று மார்போடு உள்ளே வர, அவனைக் கண்டு வேகமாய் எழுந்தவள் எதோ பார்க்கக் கூடாததைப் பார்த்ததுபோல் விரைந்து யூ டர்ன் எடுத்து திரும்பி நின்றாள்.
அவளை ஒருமுறை பார்த்துவிட்டு அவளுக்கு முன்பு வந்து கட்டில் மேல் இருந்த தன் மேல் சட்டையை அவன் கையில் எடுக்க, மீண்டும் ஒரு யூ டர்ன் எடுத்து பழைய பொசிசனில் நின்றாள். 
“என்ன அனு குரங்கு வித்தை எல்லாம் காட்டிட்டு இருக்க” என பின்புறமிருந்து வந்த குரலில்
“என்ன சொன்னீங்க…????” என அவள் குரல் மாற,
“இரு அதை நான் உன் முன்னாடி வந்து சொல்லுறேன்” 
“வேண்டாம் வேண்டாம். நீங்க ஒழுங்கா டிரஸ் பண்ணிட்டு என் முன்னாடி வாங்க” 
“நான் தான் லுங்கி கட்டிருக்கேனே. எதோ ஷேம் ஷேமா நிக்குறமாறி பேசுற”  என தன் சட்டை பட்டனைப் போட்டுக்கொண்டு,
“நான் உன்ன மாறி எல்லாம் இல்லை அனு. கெட் அவ்ட் எல்லாம்  சொல்லமாட்டேன். நீ இங்கயே இருக்கலாம். உனக்கு எல்லா உரிமையும் இருக்கு” என்றபடி அவள் முன்னால் வர, அவளோ 
“ச்சே.. அதுக்குன்னு பனியன் போடாம அரையும் கொறயுமாவா வருவீங்க? முதல்ல போட்டுட்டு வாங்க” என்றாள் கண்திறவாமல்.
‘பாத்ரூம்ல இருந்து வர்றவன் வேற எப்படி வருவான்..? அரையும் கொறயுமாங்கரா இவளை..!!’ 
“அனு..! இப்போ முழுக்கை சட்டையே போட்டிருக்கேன் கண்ணத் திற” என்றான். 
கண் திறந்தவள் அவனைப் பார்க்காது எங்கெங்கோ பார்த்தபடி பார்வையை தவிர்க்க, ‘இதுக்கே இப்படியா’ என தன் நெஞ்சை மெல்ல நீவிக்கொண்டான் ஸ்வரன்.
“நான் போறேன். நீங்க சாப்பிட வாங்க” என்றுவிட்டு வெளியேறிக் கொண்டாள் பல்லவி. 
தாத்தாவிற்கும் ஸ்வரனிற்கும் முதலில் பரிமாறிவிட்டு பின் அவளும் விரைவாய் உண்டு எழுந்துகொண்டாள். சாப்பிட்ட தட்டுகளை எல்லாம் எடுத்துவந்து கழுவி, ரேக்கில் அடிக்கிவிட்டுத் திரும்ப, அங்கு நீட்டிகொண்டிருந்த தகரக் கம்பியில் அவளது தங்க வளையல் மாட்டிக் கொண்டது. 
அதை மெல்ல விடுவிக்கும் போது அவள் சித்தத்தை மெல்ல எட்டியது நேற்று அவன் கூறிய வார்த்தைகள் யாவும்.
அதை அத்தனை எளிதில் அவள் மறக்கவில்லை. அவனிடம் கேட்க சரியான நேரத்தை மட்டுமே எதிர்பார்த்திருந்தாள். ஸ்வரனைத் தேடி மீண்டும் அவர்களது அறைக்குள் செல்ல, அவன் அங்கு இருப்பது கண்டு
“ஆதி..! நான் உங்ககிட்ட ஒன்னு கேட்கணும். கேட்கலாமா” என்று புதிரோடு துவங்கினாள்.
“கேட்கலாமான்னு கேட்டுட்டு கேட்க கூடாது. கேட்காமையே கேட்கலாம்” என்றான் தன் முன்பிருந்த கண்ணாடியில் தலை வாரிக்கொண்டு அதிலேயே அவள் முகம் கண்டபடி. 
‘இப்போ கேட்கலாம்னு சொல்லுறானா இல்லை கேட்கக் கூடாதுன்னு சொல்லுறானா..?’ எனப் புரியாது பார்த்திருந்தவள் கேட்டுவிடுவது என்று முடிவெடுத்து,
“நான் நேத்தே உங்ககிட்ட இதை பத்தி பேசணும்னு இருந்தேன். அஸ் பர் அவர் அக்ரிமென்ட் நம்பர் ஒன், பாட்டி தாத்தா முன்னாடி பேச வேண்டாம்னு விட்டுட்டேன். தென் நேத்து நைட் நம்ம தனியா இருக்கும்போது நான் பேசுற நிலமைலயும் இல்லை அதான் இப்போ கேட்குறேன்” என்று நீட்டித்தாள். 
என்ன சொல்ல வருகிறாள் என்று அப்படியே கண்ணாடியின் வாயிலாக பார்த்திருந்தான் ஸ்வரன்.
“யார் எது கொடுத்தாலும் நான் யோசிக்காம எல்லாம் வாங்கிக்க மாட்டேன் ஆதி. நான் அப்படி ஆசப் படுறவளும் இல்லை” என்றதுமே அவள் நேற்று கோவிலில் நடந்ததைக் கூறுகிறாள் என்று புரிந்துகொண்டான்.
“நான் வேண்டாம்னு சொல்ல சொல்ல அவங்க தான் இது உனக்கு சேர வேண்டியதுன்னு சொல்லி அவங்க கையில இருந்த வளையலை கழட்டி எனக்கு போட்டு விட்டாங்க” என்றாள்.
“அதை விடு அனு” என்றுவிட்டான் ஒரே வார்த்தையில். அதைப் பற்றி பேசுவதில் அவனுக்கு அத்தனை உடன்பாடில்லை.
“இல்லை ஆதி. அப்படி எல்லாம் விட முடியாது” என்றவள் தொடர ஆரம்பிக்க, இப்போது அவள் புறம் திரும்பியவன் கைகளை மார்புக்கு குறுக்கே கட்டிக்கொண்டு சுவரில் சாய்ந்தபடி நின்று அவளையே பார்த்திருந்தான்.
“நேத்து எது வேணுனாலும் உங்ககிட்ட கேட்க சொன்னேங்க இல்ல.. நான் வளையல் வேணும்னு கேட்கவே இல்லையே..? நான் பிரசாதம் வேணும்னு தான் கேட்டேன். அதைக் கொடுத்தீங்களா? நேத்து கோவில்ல நான் என்னவோ அவங்க வளையல் மேல ஆசப் பட்ட மாதிரி சீப்பா பேசுறீங்க. அப்படி நினைச்சிட்டு தானே உடனே எனக்கு தங்க வளையல் வாங்கிட்டு வந்தீங்க?”
“அனு..! என்ன பேசுற நீ”
“நான் சரியா தான் பேசுறேன். நான் கோவில்ல நல்ல சாப்பாடுன்னு சொன்னத எல்லாம் வெச்சு என் குடும்பத்தை சீப்பா தானே நினைச்சீங்க? நீங்க எதுக்கு தகுதி தராதரம்னு எல்லாம் சொல்லுறீங்க? அந்த அம்மாவைப் பார்த்தா தான் பெரிய இடம் மாதிரி தெரியுது அப்போ அவங்கள கம்பேர் பண்ணும்போது எனக்கு தகுதி கம்மின்னு சொன்னீங்களா?” 
இப்போது தான் அவனுக்குப் புரிந்தது நேற்றைய அவனது செய்கையும் வார்த்தையும் அவளை எப்படி நினைக்க வைத்திருக்கிறது என்று.
“ப்ச்.. நம்ம பொறுமையா பேசலாம் அனு. அதைப் பத்தி இப்போ பேசவேண்டாம்” என்றான். அதுவரை இருந்த இலகுத் தன்மை மாறியது அவனிடம். அது தெரியாது அவள் தொடர்ந்தாள்,
“பேசாம எப்படி விடுறது ஆதி.. அவங்க யாருனும் எனக்குத் தெரியாது. அவங்க வந்து என்கிட்ட பேசுனா அதுக்கு நான் என்ன பண்ணுறது. என்மேல எதுக்கு கோபப் படுறீங்க? வெளியிடம்ன்னு கூடப் பார்க்காமா என்கிட்டே அப்படி நடந்துக்குறீங்க. அதுவும் கல்யாணம் ஆன அடுத்த நாளே மரியாதை குறைவா நடத்துறீங்க. அவங்களை உங்களுக்கு பிடிக்கலைன்றது எனக்கு எப்படி தெரியும். நீங்க சொல்லிருக்கணும் தானே” என்றாள் ஒரே மூச்சில்.
பதில் அளிக்கும் நிலையில் இல்லை அவன். ஒரு பெருமூச்சோடு அவளை முறைத்தபடி அங்கிருந்து வெளியேறிவிட, பதிலளிக்காது செல்பவன் மேல் இன்னும் கோபம் தான் அதிகரித்தது பல்லவிக்கு.
‘நான் பாட்டுக்கு பேசிட்டே இருக்கேன் பதில் சொல்லாம போறான் பாரு. என்ன நினச்சிட்டு இருக்கான் அவன் மனசுல.? அப்பறம் எதுக்கு பெரிய இவன் மாதிரி அக்ரிமென்ட் எல்லாம் போட்டான்? ரூல் நம்பர் ஒன் அதையே ஃபாலோ பண்ண மாட்டீறான். பேசி தீர்த்துக்கணுமாம். நான் தான் பேசுறேன்ல அப்பறம் ஏன் தீர்க்காம போறானாம். நேத்து கோவில்ல வெச்சு என்னை அந்த வாங்கு வாங்கும்போதே திருப்பி வாங்கிருக்கணும். இந்த சிவகாமி அம்மாக்காக நானும் நல்ல பொண்ணா பொறுப்பா நடந்துக்க பாக்குறேன் இவன் விடமாட்டான் போலயே’ என மனதில் தாளித்துக் கொண்டிருக்க அந்நேரத்தில் அவளது கைப்பேசி இசைத்து ஸ்வரனைக் அவள் திட்டுகளில் இருந்து காப்பற்றியது. 
திரையில் ரஞ்சிதா என்ற பெயரைக் கண்டு அதை எடுத்து காதிற்குக் கொடுத்தாள்.
“என்னம்மா எப்படி இருக்க? இந்தப்பக்கம் வந்தே ரொம்ப நாள் ஆச்சு” என்று மறுமுனையில் அவர் கேட்கவும் தான் அவளுக்கு நினைவே வந்தது, தனக்குத் திருமணமான விஷயம் அவருக்குத் தெரியாதென்று.
“மேடம்.! உங்க கிட்ட நிறைய விஷயம் பேசணும். நான் சீக்கிரம் உங்களை வந்து சந்திக்கறேன். நேர்ல பேசிக்கலாம்” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தாள்.
தன் நினைவுகளில் மூழ்கியவள் சிறிது நேரம் அப்படியே அமர்ந்துகொண்டாள். பின் சுந்தரேஸ்வரன் அவளோடு சுவாரசியமாய் பேசிக் கொண்டிருந்ததில் நேரம் நகர்ந்திருந்தது.
மதிய உணவை தாத்தாவின் உதவியோடு செய்து முடித்தவள் நாளை முதல் அலுவலகம் செல்ல வேண்டும் என்று நினைத்திருந்தாள். இனி அவள் முடிவெடுத்தால் மட்டும் போதுமா? சிவகாமி நடத்திய வாழ்கைப் பாடம் வேறு தப்பாமல் நினைவுக்கு வந்தது. ஆக வேலைக்குச் செல்வது பற்றி ஸ்வரனிடம் பேசவேண்டும். 
முன்பு பேசியதற்கே அங்கு ஒரு பதிலும் இல்லை. அப்போது விரைத்துக்கொண்டு வெளியே சென்றவன் தான். இன்னும் திரும்பவில்லை. இதுவரை கைப்பேசியிலும் பல்லவிக்கு அழைத்திருக்கவில்லை. வெட்க மானத்தை விட்டு அவள் அழைத்தாலும் அவளது அழைப்பையும் ஏற்கவில்லை. 

Advertisement