Advertisement

மந்திரத்திற்கு உட்பட்டவள் போல் தலையை ஆட்டியபடி நகரச் சென்றவளை கைப்பிடித்து தன்னருகே இழுத்தவன், மெல்ல அவள் காதோரக் கூந்தலை விலக்கி, தன் அதரங்களை அருகில் கொண்டுபோய் 
“நாளைல இருந்து நானே உனக்கு எல்லாம் சொல்லித்தர்றேன் அனும்மா. நீ என் கிட்டேயே கத்துக்கோ சரியா.. யூட்யூப்ல கண்ட கண்ட விடியோஸ் எல்லாம் பார்த்து கெட்டுப் போயிடாத அனு. நீ வேற சின்னப் பொண்ணு, உயிரு ரொம்ப முக்கியம் அனு. ஜாக்கிரதை!!” என்று அவள் கன்னத்தை தட்டிச் சொல்லிச்செல்ல, 
‘இவன்கிட்ட எதை கத்துக்கச் சொல்றான்? யூட்யூப்ல அப்படி என்னத்தப் பார்த்தேன்’ என புரியாது நின்றிருந்தாள்.
“இன்னும் அங்க என்ன பண்ணற? ஸ்வீட் செய்ய தெரியலைனா சக்கரையாச்சும் எடுத்துட்டு வா” என்று குரல் கொடுத்தான்.
“இதோ வரேன்ங்க..” என பதிலுக்கு குரல் கொடுத்தவள் அப்போதும் அங்கிருந்து நகர்ந்தபாடில்லை. சற்றுமுன் தான் நின்றிருந்த கோலத்தை எண்ணி வியந்தபடியே சமயலறைக்குச் சென்றவள் சக்கரை டப்பாவை தேடி எடுத்துக் கொண்டு அவனிடம் சென்றாள்.
அப்படியே நேரம் நில்லாது நகர்ந்திருக்க.. மதியம் மெல்லக் கடந்து மாலை வந்ததும் பல்லவியின் முகம் மெல்ல மெல்ல வாட்டம் கொண்டது. 
அது வாடகை வீடானாலும் தான் இதுவரை வாழ்ந்த வீட்டைப் பிரிவதை எண்ணி வருத்தம் என்றால், வழித்துணையாய் தன்னோடு இதுவரை வந்தவரைப் பிரிவது, நினைத்தும் பார்க்க முடியாத அளவில் வலித்தது.
சிவகாமி அம்மாவின் முன்பு அழக்கூடாது என எத்தனை முறை மனதிற்கு சொல்லிக்கொண்டாலும் அவள் சொல்வதைக் கேட்டு அதனால் நடிக்க முடியவில்லை. கண்களும் அவள் சொல் கேட்காது மடையைத் திறந்து விட்டிருந்தது. அவரை இறுக அணைத்துக் கொண்டு அழுது தீர்த்தாள். 
இது பல்லவியின் மற்றொரு முகம். அன்பிற்கு ஏங்கும் சிறு குழந்தை போல் ஸ்வரனின் கண்முன்பிருந்தாள் இப்போது. அவளை அணைத்து ஆறுதல் படுத்தவேண்டும் என்று துடித்த கரங்களை கட்டுப் படுத்திக் கொண்டு அவன் நின்றிருக்க, சுந்தரேஸ்வரனிற்கு சிவகாமி அழுவதைக் காண முடியவில்லை. 
அவருக்கு சிறு பிள்ளைபோல் தெரிந்தார் சிவகாமி. ஒருவேளை தனக்கொரு பேத்தி இருந்து அவளை கண்ணுக்குக் கண்ணாய் வளர்த்து அவளைப் பிரிய நேர்ந்தால் தானும் சிவகாமி போல் தான் இருந்திருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டார்.
“பாட்டி நீங்களும் எங்களோடவே இருங்களேன்” என்றான் ஸ்வரன் பல்லவி அழுவதைப் பார்க்க முடியாது.
“ஆமா சிவகாமி நீங்களும் பல்லவியோடயே வந்திருங்களேன்” என்றார் சுந்தரேஸ்வரன்.
“இல்லைங்க அது சரிப்பட்டு வராது. நான் என்ன வெளியூருலையா இருக்கேன். பக்கத்துல தானே இருக்கேன். எனக்கும் பல்லவிய விட்டா வேற யாரு இருக்கா? அவளை அடிக்கடி வந்து பார்த்துக்குறேன். நீங்க இப்போ அழச்சிட்டு கிளம்புங்க நேரம் ஆச்சு” என்றார் கண்களைத் துடைத்துக் கொண்டு.
“பல்லவி மட்டும் இல்ல பாட்டி, உங்களுக்கு நாங்களும் தான் இருக்கோம். நீங்க இங்கயே இருங்க ஆனா நான் வந்து கூப்பிடும் போது மறுக்காம நம்ம வீட்டுக்கு வரணும். அதுவும் நம்ம வீட்டுல தங்குறமாறி வரணும்” என்றான் ஸ்வரன்.
பல நேரங்களில் நம்மால் உதிர்க்கப்படும் வார்த்தைகள் தான் நம் உள்ளத்தையும் வெளியுலகிற்கு வெளிக்காண்பிக்கும். ஸ்வரனின் உள்ளம் பளிங்கென்று பல்லவிக்கு பலவிசயங்கள் உணர்த்தியது. ‘நம்ம வீடு’ என்று அவன் சொன்னதிலேயே சிவகாமிக்கு மனம் நிறைந்திருக்க, அவன் கூறியதற்கு எல்லாம் ஒப்புக்கொண்டார். 
“முதல்ல அப்பாவை வீட்டுல விட்டுட்டு அப்பறம் உன்ன அழச்சிட்டு போறேன் அனு” என்றான் ஸ்வரன். அவள் அதற்குள் பாட்டியோடு உரையாடட்டும் என்று. அவளும் தலையசைக்க, தன் தாத்தாவை அழைத்துக்கொண்டு வண்டியைக் கிளப்பினான்.
“நான் சொன்னதெல்லாம் நியாபகம் வெச்சு பொறுப்பா நடந்துக்கோ மா” என சிவகாமி மீண்டும் பாடம் எடுக்க, அவளும் தலையசைத்தாள். 
“பல்லவி நான் இங்க தானே இருக்கேன் அதெல்லாம் நம்ம பாட்டியை நான் பார்த்துக்குறேன். நீ கவலைப் படாம இரு. போன் பேசணும்னா எனக்கு கூப்பிட்டு பாட்டியோட பேசு. இதுக்கெல்லாம் அழுதுட்டு இருப்பாங்களா? சிங்கம் அழுறது எவ்வளவு பெரிய அசிங்கம்” என்று பேசி அவளை சிரிக்க வைத்தாள் சுரேகா.
‘நீ சிங்கம் சிங்கம்னு உசுப்பேத்தி விட்டு தான்டி அவன் என்ன வெச்சு சர்க்கஸ் நடத்திட்டு இருக்கான்’ என நினைத்தவள் சிரித்து மட்டும் வைத்தாள். 
சிறிது நேரத்தில் ஸ்வரன் திரும்பவும்,
“அண்ணா..! நான் என் சிங்கத்தையே உங்ககிட்ட ஒப்படைக்குறேன் அதை வெச்சு நீங்க வித்தை காட்டுவீங்களோ இல்ல வீடு பெருக்க விடுவீங்களோ ஆனா என் சிங்கத்து கண்ணுல இருந்து ஒரு சொட்டு தண்ணி கூட வரக்கூடாது” என சுரேகா ஸ்வரனிடம் கூறி, பல்லவியிடம் பல அடிகளைப் பெற்றுக் கொண்டாள். 
பிரியும் நேரத்தில் இரு தோழிகளும் இறுக அணைத்துக் கொள்ள, இருவருமே கண்ணீர் விடாதிருக்க உள்ளுக்குள் பெரிதாய் போராடினர். பின் ஸ்வரனோடு பல்லவியை வழியனுப்பி வைத்தனர் சுரேகாவும் சிவகாமியும். அவர்கள் மறையும் வரை வாசலில் நின்று அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தார் சிவகாமி.
“பாட்டி உள்ள வாங்க. ரெண்டு நாள் நல்ல அலைச்சல் உங்களுக்கு. இனி நல்லா ஓய்வெடுங்க. எந்தக் கவலையும் வேண்டாம். அதெல்லாம் நம்ம பல்லவியை ஸ்வரன் அண்ணா நல்லா பார்த்துப்பாரு” என்று அவரை அழைத்து வந்தாள் சுரேகா. 
தன் பேத்தியைப் பிரிவது ஒன்றே அவருக்கு வருத்தம். மற்றபடி அவள் நன்றாக இருப்பாள் அவளுக்கு ஒரு வாழ்கையை அமைத்துத் தந்தாகிவிட்டது என்ற நிம்மதி தான் அவரிடம் அதிகம் காணப்பட்டது.
வரும் வழியெல்லாம் மௌனமே ஆட்சி செய்ய ஸ்வரன் பல்லவியின் மௌனத்தை கலைக்க விரும்பாது அமைதியாய் வண்டியைச் செலுத்திக் கொண்டிருந்தான்.
இங்கோ ஸ்வரனின் இல்லத்தில் ஆரத்தித் தட்டோடு காத்திருந்தார் சுந்தரேஸ்வரன். அவர்கள் இருவரும் வர கற்பூரத்தைக் கொளுத்தியவர் அவர்களுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்க
“என்ன தாத்தா நீங்க போய் இதெல்லாம்” என்று பல்லவி புன்னகைக்க.. 
“இங்க நம்ம வீட்ல இதெல்லாம் செய்யுறதுக்கு வேற யாரும் இல்லமா. அதுக்காக உன்ன நான் முறையா வரவேற்காம இருக்கறதா” என்று சொல்லி இருவருக்கும் திலகமிட்டு ஆரத்தியை வெளியில் கொட்டி வந்தார்.
ஸ்வரன் சில பொருட்கள் வாங்க கடைக்குச் சென்றிருந்தான். பல்லவி ஹாலில் இருந்த சாமி படத்தின் முன் நின்று வணங்கி தீபம் ஏற்றிவிட்டு தாத்தாவோடு பேசிக் கொண்டிருந்தாள். பின் அவர் ஓய்வெடுக்கச் செல்ல, பல்லவி சுற்றிலும் பார்வையை ஓட்டினாள். 
ஸ்வரனுடயது அளவான வீடுதான். ஆனால் அவள் இருந்த வீட்டைக் காட்டிலும் பெரிது. ஒரு ஹால், இரண்டு படுக்கை அரை, ஒரு கிட்சன் எல்லாம் சிறிய அளவில் இருக்க வெளியில் பாத்ரூம் அதனோடு நிறையவே காலி இடம். ஒரு ஓரத்தில் கருவேப்பிலை, பொதினா, தக்காளி, வெண்டைக்காய், கத்தரிக்காய் என சமையலுக்கு பயன் படும் செடிகொடிகள் மட்டும் இடம்பெற்றிருந்தது. அதை அனைத்தையும் சேர்த்ததுபோல் கம்பவுண்ட் சுவர். 
மேலே இதேபோல் மற்றுமொரு போர்ஷன். அது வாடகைக்கு குடியமர்த்த. தற்போது காலியாகத் தான் இருந்தது. அதை எல்லாம் வேடிக்கை பார்த்து நேரத்தைக் கடத்தினாள். ஸ்வரன் திரும்பியதும் அவனோடமர்ந்து இயல்பாய் பேசிக் கொண்டிருந்தாள்.
இரவு உணவை சமைக்க பல்லவிக்கு பலத்த தடை போடப் பட்டிருந்தது. ஸ்வரனும் அவன் தாத்தாவும் கிச்சனுக்குள் புகுந்து நளபாகத்தில் இறங்கினர். அவர்களுக்காக ஹாலில் காத்திருந்தாள் பல்லவி.
“பல்லவி..! இந்தாமா இது நான் சமைச்சது எப்படி இருக்குன்னு சொல்லு” என்று குழிப்பணியாரத்தையும் வெங்காயச் சட்னியையும் அவள் முன் வைத்தார் சுந்தரேஸ்வரன்.
வாசனையே மூக்கைத் துளைத்தது. அடுத்து ஸ்வரனோ,
“அனு..! இதை டேஸ்ட் பண்ணிப் பாரு” என்று பலதானிய அடை தோசையையும் தேங்காய் சட்னியையும் முன்வைத்தான்.
பார்க்கவே நாக்கில் எச்சில் ஊறியது. இரண்டையும் எடுத்துப் போட்டுக் கொண்டு ஒரு பிடி பிடித்தாள். 
“தாத்தா.. சூப்பர் தாத்தா. நாளைக்கு எனக்கும் இதை  எப்படி சமைக்குறதுன்னு சொல்லித்தாங்க” என்று ருசித்து சாப்பிட்டவள் அவளையே பார்த்துக் கொண்டிருக்கும் ஸ்வரனைக் கண்டு
“நீங்க சுமார் தாங்க. தாத்தா அளவுக்கு வரலை” என்றாள்.
சுந்தரேஸ்வரன் பெருமையாய் பேரனைப் பார்த்துவிட்டு அவரும் உடன் அமர்ந்து உணவருந்துவிட்டு உறங்கச் சென்றார். அதுவரை அமைதியாய் இருந்த ஸ்வரன் அவளை விழுங்குவதுபோல் பார்க்க.. அவனைக் குறுகுறுவென பார்த்தவள் பின் அமைதியாய் தன் தட்டைத் தூக்கிக் கொண்டு கிச்சனுக்குள் சென்றாள். 
அவளைப் பின்தொடர்ந்தவன், 
“நான் ஹெல்ப் பண்ணட்டுமா அனு” என்றான் அவளை ஒட்டி நின்று கொண்டு. வேகமாய் திரும்பியவள் அவன் நெஞ்சத்தில் கைவைத்து லேசாய் பின்னால் தள்ளிவிட்டு 
“ஷூர் ஆதி.. நீங்களே பாத்திரம் எல்லாம் கழுவி வெச்சிடுங்க” என்று புன்னகைத்துவிட்டு நகர்ந்துகொண்டாள்.
‘இவ கிட்ட தப்பான நேரத்துல சரியா உதவி வேணுமான்னு கேட்டுட்டேன். சரி இத்தனை நாள் நம்ம கழுவாத பாத்திரமா’ என நினைத்துகொண்டு அதையும் கழுவினான் அவளவன்.
பல்லவி வெளியில் சிறிது நேரம் உலாத்திக் கொண்டிருந்தாள். அவளுக்காக காத்திருந்தா ஸ்வரனோ நேரத்தைப் பார்க்க பின் கதவைப் பார்க்கவுமாய் இருந்தான்.
‘எவ்வளவு நேரம் ஆனாலும் கடைசியா நீ உள்ள வந்து தான் ஆகணும் அனு’ என அவன் பார்த்திருக்க, வெளியில் கதவைச் சாற்றித் தாளிடும் சத்தம் கேட்டதும் உடனே உறங்குவதுபோல் படுத்துகொண்டான்.
பல்லவி மெல்ல அவர்களது அறைக் கதவைத் திறந்துகொண்டு வந்தாள். சுற்றிலும் ஒருமுறை பார்த்தாள்.
“ச்சே.. கீழ பாய் போட்டு தூங்குற அளவுக்கு கூட இடம் இல்லை இந்த ரூம்ல. இப்போ நான் எங்க தூங்குறது” என அவள் மெல்ல முனங்குவது நன்றாகவே கேட்டது அவனுக்கு.
இரண்டு நிமிடம் அப்படியே நின்றிருந்தாள். கட்டிலில் அவளுக்கான இடத்தை விட்டு அவன் தூங்குவதையே பார்த்திருந்தவள் மெல்ல விளக்கை அணைத்துவிட்டு அவனுக்கு மறுபுறம் சென்று திரும்பிப் படுத்துக் கொண்டாள்.
உறக்கம் மட்டும் வரவில்லை அவளுக்கு. நேற்றைய இரவில் கூட உறங்கிவிட்டாள். ஆனால் இன்று இடம் புதிதால் என்னவோ உறக்கம் வரவில்லை. கடந்துவந்த கரடு முரடான பாதை எல்லாம் நினைவில் வந்தது. அதிலெல்லாம் தன்னை விடாது தன் கைப்பிடித்தபடி உடன் வந்த சிவகாமி அம்மாவும் நினைவு வர, கண்கள் கலங்கியது.
முதல் முறை அவரை விட்டுப் பிரிந்திருக்கிறாள். அவள் எப்படியும் சூழ்நிலையை சமாளித்துக் கொள்வாள். ஆனால் அவள் இல்லாமல் அவர் அங்கு என்ன செய்து கொண்டிருக்கிறாரோ என்று எண்ண.. அழுகை அதிகமாக லேசாய் விசும்பினாள். 
அவன் தூக்கம் கலைந்து விடக் கூடாதென்று வாயை கைகளால் மூடிக்கொண்டு அழ, அவள் மேல் விரிந்த போர்வையால் அழுகையைக் கைவிட்டு அதைப் பார்த்தாள்.
ஸ்வரன் தான் அவளுக்கும் போர்வையை சேர்த்துப் போர்த்தியிருந்தான். அவளுக்கும் அவன் தான் என்று தெரியும். விழித்திருக்கிறான் என்றும் தெரியும். ஆனால் திரும்பவில்லை அவன் புறம். கண்களைத் துடைத்துக் கொண்டாள். அப்படியே உறங்காது விழித்தபடி இருந்தாள்.
சில நொடிகளில் அவள் இடையை இறுகத் தழுவிய அவனது கரத்தை உணர்ந்தாள். விலக்கி விடவில்லை. விலக முயற்சிக்க வில்லை. 
அவளை விழாது பிடித்திருப்பவன் போல் அவன் இருக்க, அவன் தன்னை எந்நிலையிலும் விடாது பிடித்திருப்பான் என்று பாதுகாப்பாய் உறக்கம் கொண்டாள் பல்லவி.
கீதமாகும்…

Advertisement