Advertisement

ஓம் ஈசற்கினிய சேயே போற்றி!!
4
ஸ்வர பல்லவியாய் கோவில் சென்று, ஸ்வரம் தப்பியதில் பல்லவி மட்டுமே வீடு வந்தாள். 
“மாப்பிள்ளை எங்கம்மா நீ மட்டும் வர்ற?” 
“ம்மா அவருக்கு எதோ முக்கியமான வேலையாம், அதை முடிச்சிட்டு வரேன்னு போயிருக்காரு” 
அவள் பேச்சில் சிவகாமி உணர்ந்த சொந்தம் அத்தனை இனித்தது அவருக்கு. அதை அவர் முகம் அப்படியே காட்ட, அவளுக்கும் அது இனித்தாலும் அவள் ஸ்வரன் கொஞ்சம் காரம் சேர்த்தான். 
வீடு வரை அவளை அழைத்து வந்தவன் அப்படியே விட்டுச் செல்ல, “உள்ள வராம எங்க போறீங்க..??” என அவள் கேள்வியை முடிப்பதற்குள் அவன் அவள் கண்களில் இருந்து மறைந்தே போயிருந்தான். அத்தனை வேகம் அவனிடம். எங்கு சென்றானோ திரும்ப எப்போ வருவானோ எதுவும் தெரியாது.
பல்லவியும் எதையும் வெளியில் காட்டிக்கொள்ளாது சிவகாமிக்கு தன்னாலான சிறு சிறு உதவிகளை செய்து கொண்டிருந்தாள். தன் பின் சிறு பிள்ளைபோல் சுற்றிக் கொண்டிருக்கும் அவளையே பார்த்திருந்தார் சிவகாமி. விருப்பம் இல்லாத பெண்ணை திருமண பந்தத்தில் தள்ளி விட்டு விட்டோமே என்ற கவலை அவரை நேற்று முழுவதும் அரித்துக் கொண்டிருந்தது. 
அவளுக்கு ஒரு நல்ல வாழ்கையை அமைத்துத் தரவேன்றும் என்ற எண்ணத்தில் செய்தது, அவளது மகிழ்ச்சியை குலைத்துவிட்டதோ என்று தோன்ற, இரவெல்லாம் தூக்கமின்றி தவித்திருந்தார். ஆனால் அதற்கு மாறாக அதிகாலையில் இருந்து அனுபல்லவி ஆனந்தமாய் வலம் வந்து அவர் அகத்தினில் பாலை வார்த்திருந்தாள். 
“பல்லவி மா நீ சந்தோசமா தானே இருக்க?” என்றார் அவள் கைப்பற்றி.
“நீங்க சந்தோசமா இருக்கீங்களா?” என்று பதிலுக்கு பதிலாக அவரிடம் கேள்வியைக் கேட்டாள்.
“நான் இப்போதான் ரொம்ப நிம்மதியா இருக்கேன் மா. ஆனா நீயும் நிம்மதியா இருந்தா தான் என் நிம்மதி நிலைக்கும்” என்றதும் அவளிடம் ஒரு அமைதி.
அவள் அமைதியில் அவர் அமைதி குலைய,
“நான் எது செஞ்சாலும் அது உன் நல்லதுக்காகத்தான் டா. உனக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்கு. அதை நீ சந்தோசமா வாழணும். என் வாழ்க்கையும் உன் அம்மா வாழ்க்கையும் தான் இப்படி திசை மாறிப் போயிடுச்சு. நான் கும்புடுற கடவுள் உனக்கு துணையா இருந்து உன்ன நல்ல படியா வாழ வைப்பாரு. இப்போ உன்னை நம்பி ரெண்டு பேர் இருக்காங்க. இனி நீ தான் உன் குடும்பத்தை பொறுப்பா பார்த்துக்கணும்” என்றார் உன் குடும்பம் என்பதில் சற்று அழுத்தம் கொடுத்து.
“அப்போ நீங்க? உங்களை யாரு பார்த்துப்பா” என்னும் போதே அவள் விழிகள் முத்துதிர்க்க,
“நீதான். நீ என்ன அசலூர்லையா இருக்க. இங்க பக்கத்துல தானே இருக்க. எனக்கு பார்க்கணும்னு தோணுனா நான் வந்து பார்த்துட்டு போறேன். நீயும் வந்துட்டு போ. இதுக்கெல்லாமா அழுறது. கண்ணைத் தொட” என அவள் கண்களைத் துடைத்தவருக்கும் கண்ணீர் வர, கட்டுப்படுத்திக் கொண்டார்.
“அதெல்லாம் என் ரெண்டு வீட்டையும் நானே நல்லா பார்த்துக்கறேன். நீங்க கவலை படாதீங்க” என்று அவரது கையை அழுந்தப் பற்றி புன்னகை சிந்தினாள் பல்லவி.
“பல்லவி இங்க வா மா” என்ற சுந்தரேஸ்வரனின் குரலில்
“இதோ வரேன்ங்க தாத்தா” என வெளியில் சென்றாள்.
என் இரண்டு வீடு என்று அவள் சொன்னதிலேயே சிவகாமிக்கு மனம் நிறைந்தது. இனி அவள் வாழ்கையை அவள் பார்த்துக்கொள்வாள் என்ற நம்பிக்கை பிறந்தது.
பல்லவியை இறக்கிவிட்டுச் சென்ற ஸ்வரன் மதியவேளையில் தான் திரும்பியிருந்தான். அப்போதுதான் அருகிலிருந்த பிள்ளையார் கோவிலுக்கு மெல்ல நடந்து சென்றுவிட்டுத் திரும்பியிருந்தார் சுந்தரேஸ்வரன். உள்ளே நுழைந்த இருவரது கண்களும் மூலை முடுக்கெல்லாம் சென்று தேடியது அவர்களை.
“யாரப்பா தேடுற சிவகாமியையா?” என்றார் தாத்தா பேரனிடம்.
“இல்ல ப்பா.. பல்லவியை தேடுறேன். நீங்க யார தேடுறீங்கப்பா பல்லவியையா?” என 
“இல்லப்பா சிவகாமியை” என்றார்.
இருவரும் தேடிக் கொண்டிருந்தவர்கள் பின்வாசலில் இருந்து தரிசனம் அளித்தார்கள்.
“வந்துட்டீங்களா..! ரெண்டு பேரும் வாங்க சாப்பிடலாம்” என சிவகாமி உணவருந்த அழைக்க.. 
“இந்தாங்க சிவகாமி” என்று விபூதியையும் ஒரு தைலத்தையும் அவரிடம் அளித்தார் சுந்தரேஸ்வரன்.
விபூதியை எடுத்து நெற்றி நிறையப் பூசிகொண்டவர் தைலத்தைக் கண்டு இது எதற்கு என்று புரியாது பார்த்திருக்க..
“காலைல கால்ல இடிச்சுகிட்டீங்களே, இதை தடவுங்க வீக்கம் குறையும்” என்றார். சிவகாமியும் அதை மறுக்காது வாங்கிக்கொண்டார். 
எதிர்பாராமல் வந்த எதிர்பார்ப்பில்லா அன்பில் அவர் அகம் சற்றே நெகிழத்தான் செய்தது.
ஸ்வரன் அவன் கையிலிருந்த கவரை பல்லவியிடம் அளிக்க, அவள் புரியாது அதை வாங்கிப் பார்த்தாள். உள்ளே இருந்த பெட்டியைத் திறக்க, அதில் இரண்டு தங்க வளையல்கள் மின்னிக் கொண்டிருந்தன. 
கொஞ்சம் ஆச்சர்யமும் கொஞ்சம் அதிர்ச்சியுமாய் அவள் விழி விரித்து ஸ்வரனைப் பார்க்க, அவன் லேசாய் புன்னகைத்தான். அவர்களைக் கண்ட சிவகாமிக்கும் சுந்தரேஸ்வரனிற்கும் அப்படி ஓர் ஆனந்தம் அகத்தினில். 
“நீங்களே போட்டு விடுங்க தம்பி” என சிவகாமி கூற,
“இல்லை நானே போட்டுக்குறேன்” என்றாள் பல்லவி.
பெரியவர்கள் மட்டும் உடன் இல்லாது இருந்திருந்தால் வளையலை வேண்டாம் என்று தான் சொல்லியிருப்பாள். அவனும் அதை அறிந்துதான் அவர்கள் முன்னிலையில் அளித்திருந்தான். அப்போதும் அனுபல்லவி அசராது நிற்க,
“அக்ரிமென்ட் நம்பர் டூ” என்றான் மெல்ல. 
உடனே சிவகாமியை ஓரக்கண்ணால் பார்த்தவள் பின் அவனிடம் கையை நீட்டிவிட, இரண்டு வளையல்களைப் போட ஒன்றும் அத்தனை நேரம் எடுத்திருக்காது. ஆனாலும் அவன் எடுத்துக் கொண்டான். 
“இன்னுமாப்பா வளையல் போடுற.. சீக்கிரம் சாப்பிட வா” என்ற சுந்தரேஸ்வரனின் குரலில் 
“இதோ வரேன் ப்பா” என பல்லவியை ஒரு இடி இடித்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தான் ஸ்வரன். 
“இடிச்சிட்டா போற..? போ போ உனக்கு நான் ஒரு இடிய ரெடியா வெச்சிருக்கேன். அப்போ தெரியும் இந்த பல்லவி யாருன்னு” என்று வசனம் பேசிக் கொண்டிருந்தவளை 
“பல்லவி வந்து பரிமாறு மா” என்ற சிவகாமியின் குரல் சத்தமின்றி சமயலறைக்கு அழைத்துச் சென்றது. 
அனைத்து வகையான உணவுகளையும் எடுத்து வந்து கீழே வைத்துக் கொண்டிருந்தாள் பல்லவி.  நால்வரும் வட்டமாய் அருகருகே அமர்ந்துகொள்ள, அப்படியே ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டனர் உணவையும் பார்வையையும்.
“பல்லவி நீ ஆசையா சமைச்சயே அதை மாப்பிள்ளைக்கு எடுத்து வெய்” என சிவகாமி கூறவும் அவள் சமைத்த பெயரிடப் படாத உணவை முதலில் அவன் பார்வைக்கு வைத்தவள், அடுத்து அவன் தட்டிலும் வைத்தாள்.
“நீயே சமைச்சயா அனு?” என்றான் ஆவலுடன். 
அவள் ஆமாம் என்று ஆனந்தமாய் தலையை ஆட்டிக் கொண்டிருக்க,
“எங்களுக்கு ருசி பார்க்கக் கூட கொடுக்கலைங்க தம்பி. நீங்கதான் முதல்ல சாப்பிட்டுப் பார்த்து சொல்லணுமாம்” என்றார் சிவகாமி.
எங்கேயோ பெரிதாய் இடித்தது ஸ்வரனிற்கு, இருந்தும் சிவகாமியிடம் புன்னகையுடன் ஒரு தலையசைப்பை அளித்துவிட்டு உணவை ருசி பார்க்கத் துவங்கினான். 
முதல் வாய் உள்ளே சென்ற வேகத்தில் குடல் குண்டாமணி எல்லாம் வெளியே வருபதுபோல் இருந்தது. வாயை பொத்திக்கொண்டு இரும ஆரம்பிக்க,
“பல்லவி, மாப்பிள்ளைக்கு தண்ணியைக் கொடு மா” என சிவகாமியும்
“தலையை நல்லா தட்டி விடு மா” என சுந்தரேஸ்வரனும் சொல்ல
தண்ணீரை அவனுக்கு அளித்தவள் இது தான் சாக்கென தட்டோ தட்டென தட்டிவிட்டாள் அவன் தலையை. வாய் திறந்து பேசக் கூட முடியாத நிலையில் இருந்தவன், போதும் போதும் என சைகை தான் செய்தான் அவளிடம். 
“நீங்க நல்லா சாப்பிடுங்க” என அவள் நகர்ந்துகொள்ள, உண்டு முடிக்கும் வரை குனிந்த தலை நிமிரவில்லை ஸ்வரன். 
அவனையே பார்த்திருந்தனர் அம்மூவரும். மூவரில் முக்கியமாய் பல்லவி. கடைசி பருக்கையை உள்ளே தள்ளியபின் ஒரு சொம்பு தண்ணீரைக் குடித்துவிட்டு நிமிர்ந்தவனிடம் 
“எப்படிங்க இருந்துச்சு” என்றாள் பாரபட்சம் பார்க்காது.
அவன் சொல்லவும் வேண்டுமா என்பதாய் பார்க்க, 
“அக்ரிமென்ட்..” என்றாள் இதழசைத்து.  
பெரியவர்களை ஒரு பார்வை பார்த்துக் கொண்டே இடது கையால் சூப்பர் என்று மட்டும் காண்பித்தான் வலுக்கட்டாயமாக வரவழைத்த புன்னகையுடன்.
“என்னங்க நீங்க.. எங்க யாருக்கும் மிச்சம் வைக்காம எல்லார்த்தையும் நீங்களே சாப்டுட்டீங்க.. நாங்க இன்னும் டேஸ்ட் கூட பார்க்கலைங்க” என்று அவள் கூற, ஸ்வரன் நிமிர்ந்து அவளைப் பார்க்க, இதழ் கடித்து சிரிப்பை அடக்கிக் கொண்டிருந்தாள் பல்லவி.
“அதனால என்ன பல்லவி மா எங்களுக்கு நாளைக்கு கூட சமைச்சுக் கொடு. ஸ்வரன் தம்பி வயிறார சாப்பிட்டாலே போதும்” என்றார் சிவகாமி.
‘வயிறார சாப்பிடலை பாட்டி, வயிறு எரிய எரிய சாப்பிட்டேன். கொஞ்ச நஞ்ச முளகாப் பொடியையா போட்டிருக்கா உங்க பேத்தி. உள்ள நெருப்பு பத்துன மாறி இல்ல இருக்கு. பிரசாதத்தை சாப்பிட விடலைன்னு நல்லா பழி வாங்கிட்டா’ என்று எண்ணியவன் அதற்குமேல் அங்கிருக்காது கை கழுவ எழுந்துகொள்ள, அவன் பின்னோடு வால் போல் ஒட்டிக்கொண்டு சென்றாள் பல்லவி.
அவர்கள் இருவரும் அங்கிருந்து சென்றதும்,
“பல்லவிக்கு சரியா சமைக்க வராதுங்க. இன்னைக்கும் அவ நல்லா சமைக்கல போல. பாவம் ஸ்வரன் தம்பி அவ மனசு வருந்தக் கூடாதுன்னு கஷ்டப்பட்டு சாப்பிட்டாரு” என்றார் சிவகாமி வருத்தமாய். 
“அதை பார்த்ததுமே கண்டு பிடிச்சுட்டேன் சிவகாமி. காரம் கொஞ்சம் அதிகம் சேர்த்துட்டா அதான் அவன் அப்படி திணறிருக்கான்” என்று சொல்லிச் சிரித்தவர்,
“அதெல்லாம் அவனே நல்லா சமைப்பான். பல்லவிக்கு சொல்லிக் கொடுத்திருவான் கவலை படாதீங்க” என்றதும் சிவகாமியும் லேசான புன்னகையோடு தலையசைத்தார்.
வெளியே வந்த ஸ்வரன் குளிர்ந்த நீரால் தன் முகத்தை நன்கு கழுவிக் கொண்டான். கண்கள் கோவப்பழம் போல் சிவந்திருக்க, நொடிக்கொருமுறை வாய்வழியாக காற்றை உள்ளிழுத்து பின் வெளியேற்றி கொண்டிருந்தவனைப் பார்க்க அவளுக்கே பாவமாய் இருந்தது.
“அதை எதுக்கு அவ்ளோ கஷ்டப்பட்டு சாப்பிட்டீங்க? வேண்டாம்னு வெச்சிருக்கலாமே” என்றாள்.
“நீ முதல் தடவ எனக்காக சமைச்சிருக்க, அதை எப்படி வேண்டாம்னு சொல்லுறது” என்றபடி ஸ்வரன் மீண்டும் தண்ணீரை முகத்தில் அடித்துக் கொள்ள, பல்லவியிடம் பலத்த மௌனம். 
அவள் மனதில் தற்போது என்ன ஓடுகிறது என்று அவளால் சொல்ல முடியவில்லை. ஆனால் எதோ ஒன்று தறிகெட்டு தாறுமாறாக ஓடுகிறது. அந்த ஓட்டத்தில் அவள் அறியாமலே அவன் முகம் துடைக்க அவள் புடவையின் முந்தானையை நீட்டியிருந்தாள் அவன் புறம்.
அவளை ஒருமுறை பார்த்தவன் அதரங்களில் அரும்பிய புன்னகையுடன் அதில் முகம் துடைத்துவிட்டு, 
“அது மட்டுமே காரணம் இல்லை அனு. நீ சமைச்ச டிஷ்ஷை தாத்தா பாட்டி சாப்பிட ட்ரை பண்ணிருந்தா ரொம்ப கஷ்டம். அதான் நமக்கு வந்த சோதனை நம்மோடவே போகட்டும்னு நானே சாப்டுட்டேன்” என்றான் அவளோடு வம்பிழுக்க. ஆனால் அவளோ வருத்தத்தில் இருக்க,
“இந்த டிஸ்ஷை யார்கிட்ட கத்துகிட்ட அனு..?” என்று பேச்சை மாற்றினான் ஸ்வரன்.
“யூட்யூப் தான் ஆதி. டேஸ்டி சமையல்ன்னு ஒரு சேனல்ல பார்த்து சும்மா ட்ரை பண்ணுனேன்” 
‘மொதல்ல அந்த சேனல்லை ரிப்போர்ட் பண்ணி இழுத்து மூடவைக்கணும். சமயலுங்கற பேருல இருக்குறவனை எல்லாம் சாவடிக்க சொல்லித்தறாங்க’ என நினைத்துக் கொண்டான்.
“நான் முதல்ல டேஸ்ட் பார்க்கும் போது எல்லாம் நல்லா தான் இருந்துது. பட் நான்தான் நாலு ஸ்பூன் வர மிளகாத்தூள் எக்ஸ்ட்ராவா சேர்த்தேன்” என்றுவிட்டு திருதிருவென அவனைப் பார்க்க
ஏன்? எனக் கேட்டது அவன் பார்வை.
“உங்களுக்கு கோபம் அதிகம் வருதில்ல அதான்” என்றாள்.
“சோ இன்னும் கோபம் வரணும்னு சேர்த்தயா..?”
“இல்ல இனி கோபமே வரக்கூடாதுன்னு சேர்த்தேன்” என்றாளே பார்க்கலாம், அப்படியே ஆடிப்போய்விட்டான் ஆதீஸ்வரன்.
“யார்மேல வரக்கூடாது?” என கேட்டுகொண்டே அவன் இரண்டு அடி முன்னால் எடுத்து வைக்க,
“என்மேல தான்” என்றபடி அவன் வருவதைக் கண்டு அவள் ஓட ஆரம்பிக்க, இரண்டே எட்டில் அவளை எட்டிப் பிடித்தவன் தனக்கு வெகு அருகில் நிறுத்திக் கொண்டு
“எங்க ஓடற..? காயம் பண்ணுன நீதான் அதுக்கு மருந்தும் போடணும்” என்று அவள் இதழ்களைப் பார்த்தபடி கூற, தன் முட்டைக் கண்ணை விரித்துப் பார்த்தவள் அவன் தன் முகம் நோக்கி குனிவது கண்டு மெல்ல கண்களை மூடிக்கொண்டாள். 
காரம் இங்கு காயம் ஆக.. மருந்தளித்து மாயம் செய்வாளா மங்கை? 
சில நொடி விட்டு அவள் மெல்ல கண்திறந்து பார்க்க, இருவருக்கும் இடையில் இடைவெளி விட்டு நின்றவனோ
“போய் ஏதாவது ஸ்வீட் செஞ்சு எடுத்துட்டு வா” என்றான் அவளை முழிப்பதைக் கண்டு உள்ளுக்குள் புன்னகைத்தவாறே. 

Advertisement