Advertisement

ஸ்வரன் கூறியதில் அவளுக்கே லேசாய் சிரிப்பு வந்தது. அவளைக் கண்ட அவனுக்கும் தான். பின் இருவரும் பிரகாரத்தைச் சுற்றி வந்து அங்கிருக்கும் சிறிய சந்நிதிகளை எல்லாம் தரிசித்துவிட்டு கோவில் மண்டபத்தில் அமர்ந்தனர். 
ஆலயவழிபாடு அகத்தில் இருக்கும் அத்தனை விடைகாண முடியா வினாக்களுக்கும் விடையைத் தேடித்தந்து, அமைதியை நிலவச் செய்தது பல்லவிக்கு. அவளாகவே ஸ்வரனோடு இயல்பாய் பேச முயற்சித்தாள். அவளைப் பேசவிட்டு அவள் பேசுவதை ரசித்துக் கொண்டிருந்தான் அவன்.
“ஆதி..! அங்க பாருங்க” என்றாள் பல்லவி, திடீரென ஒரு திசையை கைக்காட்டி. அவன் அங்கு பார்க்காது
“என்ன சொன்ன??” என்றான் அவள் முகம் பார்த்து.
“அங்க பாருங்கன்னு சொன்னேன்” 
“ப்ச்.. அதில்ல என்னை என்னனு கூப்பிட்ட?”
“ஹான் வௌவால்னு.. அங்க பொங்கலும் புளியோதரையும் குடுக்குறாங்க பாருங்க. எனக்கு வாங்கிட்டு வாங்க” என்றாள் இங்கிருந்தே ஃபோகஸ் செய்தபடி.
அவன் முறைக்க.. 
‘பாருடா.. என்ன முறைப்பு?’ என அவனைப் பார்த்து அவளும் முறைத்து வைத்தாள்.
‘ரொம்ப முறைக்காத பல்லவி. உன்னை இங்கயே விட்டுட்டுப் போயிடப் போறான். அப்பறம் வீட்டுக்கு நடந்து தான் போகணும். வெயில் வேற கொளுத்துது’ என மூளை வேலை செய்ய, உடனே யோசனையைத் தொடர்ந்து முறைப்பைக் கைவிட்டாள்.
என்ன யோசிக்கிறாள்? என அவனும் அவளையே பார்த்திருந்தான். ஏதோ யோசிக்கட்டும், மிஸ்டரில் இருந்து ஆதிக்கு மாறிய அவளது அழைப்பு ஒன்றே போதுமானதாய் இருந்தது.
“ப்ளீஸ்ங்க.. ப்ரசாதம் வாங்கிட்டு வாங்களேன்” என இப்போது கெஞ்சலாய் மாற்றிக்கொண்டாள். 
“வரும்போது தானே மூக்கு முட்ட நல்லா சாப்ட்டுட்டு வந்த அனு” 
“இந்த கண்ணு வைக்குற வேலை எல்லாம் வெச்சுக்காதீங்க. கோவில் பொங்கலையும் புளியோதரையையும் உங்க கேட்டரிங் சர்விஸ் ஆளுகளாளையும் கூட அடிச்சுக்க முடியாது. டேஸ்ட்டுன்னா டேஸ்ட்டு அவ்வளவு டேஸ்ட்டு” என நாக்கை லேசாய் சுழற்றிச் சொல்ல புன்னகைத்தவன்
“நீ சொல்லுறதை பார்த்தா பிரசாதம் கொடுக்குற நேரத்திக்கு சரியா கோவிலுக்கு வந்திடுவ போலையே” என்றான்.
“ஆமா என்னிக்காவது தானே நல்ல சாப்பாடு சாப்பிட முடியும். அது கிடைக்கும்போது அதை மிஸ் பண்ண முடியுமா” என்று இயல்பாய் சொல்லிவிட்டு அவனிடமிருந்து பதில் வராதிருக்க அவனைப் பார்த்தவள் அப்போதுதான் உணர்ந்தாள் தான் கூறியதை.
அரை வயிறு கால் வயிறு நிரம்பிய அவர்களது வாழ்க்கையில், சிவகாமி தன்னால் முடிந்த அளவு அவளுக்கு எதிலும் குறை வைத்ததில்லை. அவர் பட்டினி கிடந்தேனும் பல்லவிக்கு கஞ்சி ஊற்றிவிடுவார். அப்படி வாழ்ந்தவளுக்கு கோவில் பிரசாதம் தேவாமிர்தம். தன் ஏழ்மை நிலையை அவனிடம் சொன்னதில் தன் மீது கழிவிரக்கம் கொண்டு அமர்ந்திருந்தாள்.
அவள் கூறியது புரிந்துதான் இருந்தது ஸ்வரனிற்கும். 
‘நான் இருக்குற வரைக்கும் இனி நீ இப்படி சொல்லுற நிலைமை வராது அனு’ என்று எண்ணியபடி எழுந்துகொண்டவன் அன்னதானக் கூடம் நோக்கி நடைபோட்டான்.
பல்லவியும் வெளியில் எதையும் காண்பிக்காது தன்னை இயல்பிற்கு மாற்றிக் கொண்டாள். கடந்ததை எண்ணி நிகழ்காலத்தின் நிம்மதியை இழக்க விரும்பவில்லை. ஒரு பெருமூச்சை வெளியேற்றியவள் இங்கிருந்தபடியே அன்னதானக் கூடத்தில் இருந்த ஸ்வரனை கூட்டத்தில் தேடிக் கொண்டிருந்தாள்.
அங்கு க்யூ நீண்டிருக்க, அங்கிருந்தபடியே அவளைப் பார்த்து தன் கைக்கடிகாரதைக் காண்பித்து ‘நேரம் ஆச்சு’ என்றான் ஆதீஸ்வரன். 
‘வந்தா பிரசாதத்தோட தான் வரணும்’ என இங்கிருந்தே கண்களை உருட்டினாள் அனுபல்லவி.
“பாஸ்..! அது உங்க வைஃப்பா..?” என அவன் பின்னால் நின்றிருந்த அவன் வயதை ஒத்த ஒருவன் பல்லவியைக் காண்பித்தபடி கேட்கவும், ஆமாம் என்று தலையசைத்தான் ஸ்வரன். 
“அவங்களுக்கு பக்கத்துல செல்ஃபி எடுத்துட்டு இருக்குறது என் வைஃப். ரேசன் கடையில ஆரம்பிச்சு எங்க க்யூ நின்னாலும் நம்மளையே அனுப்பிடுறாங்க இந்த லேடீஸ்” எனப் புலம்ப, புன்னகைத்தபடி நின்றிருந்தான் ஸ்வரன். 
காத்திருந்து ஒருவழியாக பிரசாதம் வாங்கிக்கொண்டு திரும்ப, கேட்டரிங் ஆர்டர் விசயமாய் அவனிடம் அங்கொருவர் விசாரிக்க, அவனும் அவரிடம் பேசிக் கொண்டிருந்தான். இங்கு பல்லவி போவோர் வருவோரை எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். 
ஸ்வரன் இல்லாததைப் பார்த்து உடனே பிரகாரத்தைச் சுற்றிவந்து, பல்லவியின் அருகில் அமர்ந்தார் அப்பெண்மணி. 
அவ்விருவரும் கோவிலுக்குள் நுழைந்தபோதே கண்டுகொண்டவர், அவர்கள் அறியாவண்ணம் பின்தொடர்ந்து கொண்டிருந்தார். இவ்வளவு நேரம் அவளை மறைந்திருந்து பார்த்தவர் இப்போது அவள் அருகில் வந்தபோதும் அவளையே கண் எடுக்காது பார்த்துக் கொண்டிருக்க, பல்லவி அவரைத் திரும்பிப் பார்த்தாள். 
நேர்த்தியாய் கட்டியிருந்த மெல்லிசான ஒரு காட்டன் புடவையில் மதிக்கும் தோற்றத்தில் இருந்தார் அப்பெண். வயது.. அவளுடைய அன்னையின் வயதிருக்கும். முகத்தில் மென்னகை இருந்தாலும் கண்களுக்கு கீழ் இருந்த கருவளையம் அவரது கவலை ரேகைகளை சரியாய் எடுத்துக் காண்பித்து. 
அவளிடம் புன்னகைத்தபடி, “இதை எடுத்துக்கோ மா” என தன்னிடம் இருந்த பிரசாதத்தை அவளுக்கு நீட்டினார்.
“இல்ல ஆண்ட்டி பரவால்லை.. நீங்க சாப்பிடுங்க” என்றாள் பதிலுக்குப் புன்னகைத்து.
“பரவால்லமா நீயும் எடுத்துக்கோ” என அன்பாய் கொடுக்க, அவளுக்கு அதற்குமேல் மறுக்கத் தோன்றாது அதிலிருந்து சிறிதை மட்டும் எடுத்து உண்டாள். அவள் உண்டதும் தான் அவர் முகத்தில் புன்னகை விரிந்தது.
“உன் பேரு என்ன மா” 
“அனுபல்லவி” 
“அருமையான பேர். எப்போ மா கல்யாணம் ஆச்சு” 
‘நம்ம முகத்துல எதாச்சும் வித்தியாசமா தெரியுதா? எப்படி கண்டு பிடிச்சாங்க? ரெட் லைட் மாதிரி அவன் என் நெத்தில குங்குமத்தை இழுக்கும் போதே நெனச்சேன். இதுவரை அக்கா அக்கான்னு சொன்ன பசங்க எல்லாம் இனி ஆண்ட்டின்னு சொல்லப் போறாங்க’ என அவள் மனம் குமுறிக் கொண்டிருக்க.. அவர் தன் பதிலுக்காக காத்திருப்பது கண்டு 
“கல்யாணம்… நேத்துங்க” என்றாள்.
“ரொம்ப சந்தோஷம் மா” என அகம் மகிழ்ந்தவர், “தெரிஞ்சிருந்தா கண்டிப்பா வந்திருப்பேன். அதுக்கும் கொடுத்து வைக்கலை எனக்கு” என்றார் வருத்தத்தோடு. 
விஷயம் தெரிந்திருந்தால் அழையா விருந்தாளி போலாவது வந்திருப்பேன் உங்களது திருமணத்தை கண் குளிரக் கண்டிருப்பேன் என்று சொல்லும்போது அத்தனை வலி அகத்தினில். தனது துர்பாக்கியமான நிலையை எண்ணி துடிதுடித்தது அவர் இதயம். அதை கண்டுகொள்ளத்தான் ஆளில்லை.
அப்பெண்மணி அவளோடு அதிகம் பேச விருப்பப்பட்டவர் போல் தெரிந்தது அவளுக்கு. இயல்பாகவே அதிகம் பேசும் பல்லவி அவரோடு நன்கு பேசிக் கொண்டிருந்தாள். 
‘யாரு இவங்க? அவனுக்கு நெருங்கிய சொந்தமா? அப்படி இருந்தா கல்யாணத்துக்கு வந்திருப்பாங்களே. ஒருவேள பக்கத்துக்கு வீட்டுக்காரம்மாவா? அவனுக்கும் இவங்களுக்கும் வாய் தகராறு இருக்குமோ.. அதான் கல்யாணத்துக்கு கூப்பிடாம விட்டுட்டானோ?’ என பலவாறான யோசனையோடு அவரிடம் பேசிக் கொண்டிருந்தாள்.
“ஸ்வரன் கிடைக்க நீ குடுத்து வெச்சிருக்கணும்மா” என்றார் அவர்.
‘ஹெலோ ஆண்ட்டி..! அப்போ நாங்க எல்லாம் வொர்த் இல்லையா. நான் கிடைக்க அவன்தான் குடுத்து வெச்சிருக்கணும்’ என மைண்ட்வாய்சில் பல்லவி.
“அவன் வாழ்க்கைல கடைசி வரைக்கும் யாரையும் ஏத்துக்காம போய்டுவானோன்னு ரொம்ப கவலைப்பட்டேன். ஆனா நீ அவன் வாழ்க்கைல வந்திருக்க.. ரொம்ப சந்தோஷம் மா. நூறு வருஷம் நல்லா இருக்கணும் நீங்க” என்றார் மனதார.
‘இது என் சிவகாமிம்மா சொல்ல வேண்டிய டைலாக் இல்ல.. இதை என்ன நீங்க சொல்லுறீங்க? நான் தான் போனா போகுதுன்னு அவனை ஏத்துக்கிட்டு வாழ்க்கை கொடுத்திருக்கேன் ஆண்ட்டி’ 
“ஸ்வரனை நீ தான் நல்லா பார்த்துக்கணும் மா.. பார்த்துப்ப தானே?” என்றார் ஏக்கமாய்.
‘அவன் தான் இனி என்னை நல்லா பார்த்துக்கணும் ஆண்ட்டி. எங்க.. ஒரு பொங்கலும் புளியோதரையும் வாங்கிக் கொடுக்கவே இப்படி யோசிக்குறான்’ 
புளியோதரையை வைத்து புருஷனை எடை போட்டாள் அந்த புண்ணியவதி.
“என்னமா பதில் பேச மாட்டிங்குற? நான் எதாவது தப்பா சொல்லிட்டேனா”
“ஐயோ ஆண்ட்டி அதெல்லாம் இல்லை. நான் பார்த்துக்கறேன்” என்றதும் தான் அவர் முகத்தில் நிம்மதி பரவியது.
“ஸ்வரன் எங்க மா?” என சுற்றிலும் ஒரு பார்வை பார்த்துக் கொண்டே வினவினார். அவன் வருவதற்குள் திரும்பிவிட வேண்டும் என்ற எண்ணத்தில். 
“அவரு ஒரு முக்கியமான வேலையா போயிருக்காரு ஆண்ட்டி. இப்போ வந்திருவாரு” என்றதும், அவன் முன்னிலையில் தன்னை பல்லவியோடு பேச அனுமதிப்பானோ மாட்டானோ என்ற கவலையில்
“உன்ன இங்க சந்திப்பேன்னு நான் எதிர்பார்க்கல மா.. உனக்கு கொடுக்க எதுவும்…” எனத் தேடியவர் தன் கையிலிருந்த தங்க வளையல்களைக் கழற்றி பல்லவிக்கு அணிவிக்கப் போக
“ஆண்ட்டி என்ன பண்ணுறீங்க.. அதெல்லாம் வேண்டாம்” என மறுத்தாள்.
“வேண்டாம்னு சொல்லக் கூடாது மா.. வாங்கிக்க. இது உனக்கு சேர வேண்டியது தான். உன்கிட்ட தான் இருக்கணும்” என அவள் கைப்பிடித்து அணிவித்தார்.
‘எனக்கு சேர வேண்டியதா?’ எனப் புரியாது பார்த்திருந்தவள்,
“நீங்க அவருக்கு என்ன வேணும் ஆண்ட்டி? உங்களுக்கு அவரை எப்படி தெரியும்?” என்று அவரிடம் கேட்டேவிட்டாள்.
தங்களுக்குள் என்ன பந்தம் என்று சொல்ல.. அதைச் சொல்வதற்கு தனக்கு அருகதை உண்டா.. அப்படியே சொன்னாலும் அவன் ஏற்றுக் கொள்வானா.. கண்களில் துளித்த கண்ணீரோடு நிமிர்ந்து பல்லவியின் முகம் கண்ட நேரத்தில்,
“பல்லவி..” என்று கடுமையாய் ஒலித்த குரலில் திடுக்கிட்டு பின்னால் திரும்பினாள். அப்பெண்மணியும் திரும்ப, கண்கள் கனலைக் கக்க ஸ்வரன் நின்றிருந்தான். 
“கிளம்பலாம் பல்லவி” என்றான் அடக்கப்பட்ட கோபத்துடன். அவனது அனு என்ற அழைப்பு பல்லவியாய் மாறியது அறியாது, 
“இந்த ஆண்ட்டி” என அவள் எதோ கூற வாயெடுக்க 
“கிளம்பலாம்ன்னு சொன்னேன்” என்ற அழுத்தத்தில் அமைதியாய் அவன் அருகில் வந்தாள். 
ஸ்வரனோ அவன் கையில் இருந்த உணவை அங்கிருந்த வயதான ஒருவருக்கு கொடுத்துவிட்டு பல்லவியை முறைக்க, ‘பொங்கலும் புளியோதரையும் போச்சே’ எனப் பார்த்திருந்தாள். 
புதிதாய் அவள் கையில் மின்னிக் கொண்டிருந்த தங்க வளையல்களைக் கண்டவன், அதைச் சுட்டிக் காண்பித்து
“என்ன இது?” என்றான் கோபத்தின் உச்சியில்.
அவன் கோபத்திற்கான காரணம் புரியாதவளோ, “அந்த ஆண்ட்டி” எனத் துவங்கும் போதே கைநீட்டி தடுத்தவன்,
“யாருக்கு யாரு ஆண்ட்டி? யார் என்ன கொடுத்தாலும் உடனே கைநீட்டி வாங்கிடுவையா? இதை கொடுக்க அவங்க யாரு உனக்கு? ஒரு தகுதி தராதரம் எல்லாம் பார்க்க மாட்டையா” என்றான் அனல் அடிக்க.
அவன் அப்படிக் கூறியதும் பல்லவிக்கு உள்ளுக்குள் சுருக்கென்றது. அப்பெண்மணிக்கோ அவன் வார்த்தைகள் யாவும் தனக்கானவை என்று புரிய, நெஞ்சைக் கூரிய வாளால் குத்திக் கோடு போட்டதுபோல் இருந்தது.
“உனக்கு எது வேணுனாலும் என்னை கேளு. நான் இருக்கேன் உனக்கு செய்ய. இதை உடனே திருப்பி கொடுத்திட்டு வா” என்றான், பல்லவி வளையல்களைக் கழற்றுவதற்குள் அவள் கையிலிருந்து அவனே அதை வேகமாய் கழற்றியபடி.
‘நானா கேட்டேன்… அவங்க பாட்டுக்கு என் கையைப் பிடிச்சு மாட்டுறாங்க. நீ பாட்டுக்கு என் கையில இருந்து கழட்டுற, நடுவுல என் கையில்ல சிக்கிட்டு படாதபாடு படுது’ என நினைத்தாலும் அவன் கோபத்தின் வேகத்தில் அவளுக்குமே உள்ளுக்குள் உதறல் எடுத்தது உண்மை. 
அப்பெண்மணியிடம் அதைக் கொடுத்துவிட்டு திரும்பியும் பாராது நடைபோட்டாள் பல்லவி. அப்படியும் அவன் விடவில்லை.
“இதுவே கடைசியா இருக்கணும். இனியும் கண்டவங்களோட உக்காந்து பேசிட்டு இருக்குறதைப் பார்த்தா தொலச்சிருவேன். கிளம்பு மொதல்ல” என அவள் கைப்பிடித்து வேகமாய் இழுத்து வந்தான் வெளியே. 
அவன் செய்கையில் அவளுக்குமே அதீத கோபம் வந்தது. இருந்தாலும் அந்நேரத்தில் அதைக் காண்பிக்காது அவனோடு சென்றாள். 
இருவரும் ஒரே நேரத்தில் கோபப்படுவதை தவிர்க்க வேண்டும் என்ற சிவகாமி நடத்திய பாடம் நினைவு வர, முதலில் அவனை அமைதிப் படுத்துவது முக்கியமாய் பட்டதால் தன் கோபத்தை பொறுத்துக் கொண்டாள். 
அவன் அடங்கியதும் தானே அவள் ஆரம்பிக்க முடியும். தனக்கான நேரம் வரும்போது பார்த்துகொள்வோம் என்று விட்டுவிட்டாள்.
வெளியே வந்ததும் அவள் கையை விட்டவன் வண்டியை எடுக்கச் செல்ல,  லேசாய் சிவந்திருந்த தன் கையையே பார்த்திருந்தாள் பல்லவி. அவன் வண்டியைக் கிளப்பியும் அவள் ஏறி அமராது தன் கையை தேய்த்துக் கொண்டிருக்க,
“வலிக்குதா” என்றான் அவள் தேய்ப்பது கண்டு.
“இப்படி பிடிச்சு இழுத்தா வலிக்கத்தான் செய்யும்” 
“சரி சீக்கிரம் வண்டில ஏறு”
அதன்பின் வண்டியில் ஏறி அமர்ந்துகொண்ட பல்லவி அவன் தோளை மெல்லப் பற்றிக்கொள்ள, ஸ்வரன் பக்கவாட்டில் வலப்புறம் திரும்பி அவள் கையைப் பார்த்தான்.
“இல்ல.. ஸ்பீட் ப்ரேக்கர் வரும்ல.. அதான்” என்றாள் அவன் பார்வை அறிந்து.
இத்தனை நேரம் கனத்துப் போயிருந்த மனம் அவளது செய்கையில் லேசாக, லேசான புன்னகையுடன் அவன் அவளோடான பயணத்தைத் துவங்கினான் ஸ்வரன். வாழ்க்கைப் பயணத்தைத் துவங்கவும் தயாராகிவிட்டீர்கள் என வாழ்த்தி அனுப்பியது அதே ஆலைய மணியோசை.
விழியோரம் வழிந்த கண்ணீரைத் துடைத்தபடி, செல்லும் அவர்களையே மனநிறைவுடன் பார்த்திருந்தார் அப்பெண்மணி. 
கீதமாகும்…

Advertisement